ஆதிக்கக் கலாச்சாரம்-பகுதி 3

ஆதிக்கக் கலாச்சாரம்-பகுதி 3

(இந்தக் கட்டுரையின் முதல், இரண்டாம் பகுதிகள் சில நாட்களுக்குமுன் வெளியிடப்பட்டன. இது மூன்றாவது பகுதி. திரைப்படங்கள் முதல், ஆதிக்கக் கலாச்சாரத்தின் பொருளாதாரக் கூறுகள் வரை இதில் இடம்பெறுகின்றன. நான்காம் இறுதிப்பகுதி மாற்றுக் கலாச்சாரம் பற்றியது.)

திரைப்படங்கள்
—————
வெகுஜனச் சாதனங்கள், குறிப்பாகத் திரைப்படம், தொலைக்காட்சி இரண்டும்-போலியான தேவைகளை உருவாக்குகின்றன. ஒற்றைப் பரிமாணச் சிந்தனையை உருவாக்குகின்றன. மக்களை இயல்பாகத் தங்கள் பணிகளிலும் சமூக உறவுகளிலும் ஈடுபடமுடியாதவாறு செய்கின்றன. இன்றைய சமூகம், மனிதத்தன்மையை அற்றுப் போகச் செய்து, மனிதர்களை அந்நியப்படுத்துகின்றன. நவீன தொடர்புச் சாதனங்கள் மக்கள் வாழ்க்கையிலுள்ள குறைகளை மறைக்க அல்லது தங்களையே மறந்துபோக உதவி செய்கின்றன.
-ஹெர்பர்ட் மார்க்யூஸ், ஒற்றைப் பரிமாண மனிதன்.
————————————
திரைப்படம் போன்ற வெகுஜனச் சாதனங்கள், நமது யதார்த்த வாழ்வைவிட நாடகப் பாங்கானவையாகவும், உள்ளக்கிளர்ச்சி தருபவையாகவும் உள்ளன. மக்களை ஹீரோ அல்லது முக்கியப் பாத்திரத்துடன் எளிதில் ஒன்றிவிடச் செய்கின்றன. நமது சமூகத்தில் சினிமாவில் காட்டப்படுவது போன்ற கடற்கரையில், பூங்காக்களில் ஆடிப் பாடும் காதல், தீயவர்களை அடித்து நொறுக்கும் அடிதடிச்சண்டைகள் போன்றவை இல்லாதவை. திரைப்படங்களில் இவற்றை கனவாகக் கண்டு மக்கள் தங்களை மறக் கின்றனர். பெண்ணின் உடல் ஆணுக்கு அந்நியப்படுத்தப்பட்ட இந்தச் சமூகத்தில், திரைப்படங்களில் வரும் நெருக்கமான காதல்காட்சிகள் ஆட்டக் காட்சிகள் போன்றவை இரசிகர்களால் விரும்பப்படுவதில் ஆச்சரியமில்லை. பெண்ணின் தோழமை மறுக்கப்பட்டு, நுகர்பொருளாக்கப்பட்ட சமூகத்தில், பெண்மையத் திரைப்பட வியாபாரம் செழிப்பதில் வியப்பேது?
திரைப்படங்களின் அபாயம், அவை தரும் படிமங்களை மக்கள் உண்மை என நம்ப வைப்பதில் உள்ளது. எனவேதான் தி¬ப்படம் சார்ந்த எல்லாருமே தங்கள் இமேஜ் பற்றிக் கவலைப்படுகிறார்கள். (அந்த இமேஜைப் பின்னர் அரசியலிலும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்). திரைப்படங்கள் நமது புலனுணர்வுகளை உண்மையிலிருந்து பொய்யைப் பிரித்துக்காண முடியாத விதத்தில் குழப்பிவிடுகின்றன. நமது அரசியலை இத்தகைய பொய்ம்மை தீர்மானிப்பதில் பெரும்பங்கு கொள்கிறது. நம் திரைப்படங் கள் யதார்த்தம் என்ற பெயரில் மீயதார்த்தத்தை, கனவை வியாபாரமாக்குகின்றன. மற்றப்படி விளம்பரங்களுக்குச் சொன்ன அனைத்தும் திரைப்படங்களுக்கும் பொருந்தக்கூடியவையே. ஒளிந்திருந்து அல்லது மறைவிலிருந்து பார்க்கும் காட்சி-gaze என்ற முறையில் இதனை விரிவாக நோக்கவேண்டும். திரைப்படத்தைப் பற்றி இன்னும் விரிவாக, தனியாக வேறிடத்தில் பேசுவோம்.

போஸ்டர் கலாச்சாரம்

திரைப்பட, அரசியல் துறைகளோடு தொடர்புடைய, நம் கலாச்சாரச் சீரழிவை எடுத்துக்காட்டும் இன்னும் இரு சாதனங்கள் வீடியோக் காட்சிகளும் போஸ்டர்களும். போஸ்டர் கலாச்சாரம் உலகிலேயே, இந்தியாவிலேயே, தமிழகத்துக்குத்தான் அதிகம் உரியது. இங்குதான் அரசியல்வாதிகள் குழந்தைகளுக்குப் பெயர் வைப்பது முதற் கொண்டு திரைப்பட விளம்பரம் வரை போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. பூப்படைந்தால் போஸ்டர், செத்துப்போனாலும் போஸ்டர், வெளிநாடு சென்றால் போஸ்டர், எல்லாவற்றிற்கும் போஸ்டர். பலவண்ண, ஆளுயர போஸ்டர்கள் அடித்து ஒட்டப்படுகின்றன. இவற்றின் ‘முன்னேற்றம்’தான் கட்அவுட்டுகள் வைப்பது, அலங்கார வளைவுகள் வைப்பது முதலியவை. இவை பொதுமக்களுக்குத் தரும் இடைஞ்சலுக்கு அளவே இல்லை என்றாலும் சுரணையிருப்போரும் நமக்கெதற்கு வம்பு என்று ரௌடியிசத்திற்கு பயந்து சகித்துக்கொண்டு போகவேண்டியிருக்கிறது. இவர்களால் நாசமாகும் சாலைகளுக்கு அளவே இல்லை. போக்குவரத்து நெரிசல்களுக்குக் குறைவே இல்லை.

வீடியோக்களும் ஒலிபெருக்கிகளும்
வீடியோக்களுடன் சேர்ந்து பார்ககவேண்டியது ஒலிபெருக்கி. நமது கிராமங்களின் திருவிழாக்களிலும் இவை இரண்டுமே இப்போது நிரந்தர இடத்தைப் பிடித்துவிட்டன. ஒரு காலத்தில், சமூக உறவுக்கு அடிப்படையாகத் திருவிழாக்கள் இருந்தன. திருவிழாக் களைப் பொறுத்தவரை, ஏறத்தாழ பதினைந்து இருபதாண்டுகளுக்கு முன்புவரை, உயர்சாதியினர், மத்தியதரத்தினர், ஒடுக்கப்பட்ட வகுப்பினர் என்று அனைத்து வகுப்பி னரின் பங்கேற்பும் திருவிழாவில் இருந்தது. திருவிழா நடக்கும் இரவுகளில் தெருக்கூத்து அல்லது நாட்டுப்புறக் கலைகள் இடம்பெறுவதும் இயல்பாக இருந்தது. இன்றோ திருவிழாக்களின் முந்திய நாட்களிலிருந்து முடிந்த மறுநாள் வரை ஓயாமல் ஒலிபெருக்கிகள் ஆபாசமான பாட்டுகளை அலறிக்கொண்டே இருக்கின்றன. இவற்றுடன் இரவுகளில் தெருக்கூத்து போன்ற கலைகளுக்கு பதிலாக ஆபாச நடனங் கள் வேறு.
இந்த ஒலிபெருக்கிகள் ஏதோ ஓரிடத்தில் இருந்தால் பரவாயில்லை. அனைவர் காதையும் மனத்தையும் கெடுத்துக்கொண்டு, திருவிழா நடக்கும் கோயிலிலிருந்து வரிசையாகத் தெருவுக்குத் தெரு எனப்பல தெருக்களில் கோடிவரை தொடர்ச்சியாகக் கட்டப்பட்டிருக்கும். இவற்றின் ஒலித்தொல்லையிலிருந்து எவரும் மீளமுடியாது. இம் மாதிரித் தொல்லைகளால் திருவிழாக்களில் அநேகமாக மேல்சாதியினர் பங்கேற்பு அறவே இல்லை என்று சொல்லும் அளவுக்குக் குறைந்துபோய்விட்டது. படித்தவர்கள் இம்மாதிரித் திருவிழாக்களைப் பொருட்படுத்துவதே இல்லை. முழு அளவுக்கு (சாதியி லும் பொருளாதாரத்திலும்) தாழ்ந்த மக்களுக்கெனவே என ஆகிவிட்ட இத்திருவிழாக் களின் முக்கிய அம்சம், ஆபாச நடனங்கள், திரைப்படப் பாடல்களின் மறு நிகழ்வுகள், தெருக்கள்தோறும் வீடியோக்காட்சிகள். ஒவ்வொரு நாளும் இரவு முழுவதும் இரண்டு மூன்று படங்கள். மக்களின் பொதுப் பங்கேற்பைக் குறைத்து, கனவுத்தன்மையை வளர்ப்பனவாகவே இவையும் அமைகின்றன. வீடியோக்காட்சிகளின் ஒலிவடிவமும் ஒலிபெருக்கியில் இணைக்கப்பட்டு அது எல்லார் து£க்கத்தையும் கெடுத்துக்கொண்டு ஊர்முழுவதும் அலறவேண்டும்.
நகரங்கள் கிராமங்கள் என்ற வேறுபாடின்றி மத்தியதரவர்க்கத்தினரை வீடியோ பாதிக் கிறது. இவை வாயிலாக விடுமுறை நாட்களில் மூன்று நான்குக்குக் குறையாமல் திரைப்படங்கள். (மற்றக் குடும்பங்களிடம் கட்டணம் வசூலித்துக்கொண்டு அவர்களை யும் அனுமதிப்பதும் நடக்கிறது). இவை விற்கும் கனவுகளைப் பற்றிய கவலைகள் ஒரு புறம் இருக்க, அடியோடு மானிட உறவுகள் அற்றுப்போக இவை வகைசெய்கின்றன.
திரைப்படங்கள் மடடுமன்றி, கால்பந்து, கிரிக்கெட், டென்னிஸ் போன்றவற்றின் போட்டிகளும் இடையறாது நமது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுகின்றன. இப் போட்டிகளிலும், திரைப்படங்களிலும் காணக்கூடிய அதே அளவு சுவை, போராட்டம், ஒன்றுதல் ஆகியவை உள்ளன. ஒரு மசாலாத்தனமான திரைப்படம் தரும் ஒன்றுதலை விட ஒரு கிரிக்கெட் ஆட்டம் தரும் ஒன்றுதல் எவ்விதத்திலும் குறைவானதல்ல. செயலற்ற இரசிகர் கூட்டமொன்றை இவை உருவாக்கிவிடுகின்றன. ஒரு கிரிக்கெட் போட்டியின்போதோ ஞாயிற்றுக்கிழமை திரைப்படத்தின்போதோ வீடியோ காட்சிக ளின்போதோ ஒலியும் ஒளியும் நடைபெறும்போதோ விருந்தினர் வந்துவிட்டால் அவ்வளவுதான். தமிழர்களின் விருந்தோம்பல் பண்பாடெல்லாம் பறந்துபோய் ஒலியும் ஒளியும் பண்பாடு நிலைத்துவிட்டது.

——————–
மக்களின் பங்கேற்பினை ஊக்குவிக்கின்ற, மகிழ்ச்சியையும் நேச உணர்ச்சியையும் வளர்க்கின்ற உள்நாட்டு விளையாட்டுகளை வளர்க்கவேண்டும். அதேசமயத்தில் மனித மதிப்புகளை முற்றாகப் புறக்கணித்து, போட்டியை மட்டுமே வலியுறுத்துகின்ற, வெற்றி கரமான விளையாட்டு வீரர்களை மட்டும் புகழுச்சியிலே வைக்கின்ற, தலைமை வழிபாட்டை வளர்க்கின்ற நவீன விளையாட்டுப் பந்தயங்களுக்கு ஊக்கம் தரக்கூடாது.
——————————————-

மந்தைச் சிந்தனை
வீடியோ, திரைப்படக் கலாச்சாரத்தோடு சம்பந்தப்பட்ட மற்றொரு விஷயம், இரசிகர் சங்கங்கள். வேலையற்றுத் திரியும் படிக்காத கிராமத்து இளைஞர்களும், நகரங்களில் படித்தும் படிக்காமலும் வேலையற்றிருக்கும் இளைஞர்களும் இச்சங்கங்களின் ஆணி வேர்கள். ஆனால் இவற்றின் தலைவர்கள் நடிகர்களால் ஏவப்படும் சுயநலமிகள். பெரிய பெரிய கட்அவுட்டுகள் வைப்பது, மோசமான திரைப்படங்களையும் பாராட் டிப் போஸ்டர்கள் ஒட்டுவது, முதல் காட்சியைப் பார்ப்பது, விநியோகஸ்தரிடமிருந்தே பலத்த ஆரவாரத்தோடு படப்பெட்டியைக் கொண்டுவந்து பூசைபோடுவது, படம் நடக் கும்போது இஷ்ட தெய்வமான கதாநாயகனுக்குச் சூடம் சாம்பிராணி கொளுத்துவது, படம் கொஞ்சம் நன்றாக இருந்துவிட்டால் பட்டாசுகள் வெடித்து வெற்றிவிழா கொண்டாடுவது போன்றவை இவர்களது முக்கியச் செயல்கள். எந்தவிதமான ‘டீசன்சி’க்கும் அப்பாற்பட்ட விதத்தில் இவர்களது நடத்தை அமைகிறது. தங்கள் இஷ்ட தெய்வ நாயகனுக்காக எதிர்நாயகன்கள் போஸ்டர்கள்மேல் சாணி எறிவதிலிருந்து அந்த ரசிகர்களோடு சண்டையில் ஈடுபடுவதுவரை இவர்களது வீரச்செயல்கள் தொட ரும். இந்த ரசிகர் மன்றங்களே கட்சி அரசியலுக்கும் அடிப்படை. ஹீரோ ஒர்ஷிப் எனப்படும் நாயக வழிபாட்டின் பச்சையான வெளிப்பாடு இது. இம்மாதிரித் தனிநபர் வீரவழிபாடு, ஜனநாயகத்துக்கு வெகுமுரணானது. மந்தைச் சிந்தனையைத் து£ண்டக் கூடியது. ஒற்றைப் பரிமாணச் சிந்தனை என்று ஹெர்பர்ட் மார்க்யூஸ் குறிப்பிடுவது இத்தகைய வீரவழிபாட்டு முறையினைத்தான். ஆனால் இதற்கு அடிப்படைக் காரணங் கள் நமது பாடப்புத்தகங்களும் பிற சாதனங்களுமே. சான்றாக, அவை “காந்தியடிகள் இந்தியாவுக்கு விடுதலை வாங்கித்தந்தார்” என்பதுபோன்ற விஷயங்களால் தனிநபர் வழிபாட்டையே வளர்க்கின்றன.

தனிநபர்களுக்காகக் கட்சி, தனிநபர்களுக்காகவே இரசிகர் மன்றங்கள், தனிநபர்களுக் காகவே அரசியல். நம் ஜனங்களைக் கேட்டாலே இந்த உண்மை புரியும். எந்தக் கட்சி எந்தக் கொள்கையைச் சொல்லுகிறது என்று பார்த்து ஓட்டுப்போடுவது கிடையாது. மாறாக, எம்.ஜி.ஆருக்கு ஓட்டுப்போட்டேன், கலைஞருக்குப் போட்டேன் போன்ற குரல் களைத்தான் கேட்க முடியும். ஆதிக்கக் கலாச்சாரத்தின் இன்னொரு அடிப்படை இது. ஒற்றைப் பரிமாணச் சிந்தனை அல்லது மந்தைச் சிந்தனையை உருவாக்கி, தங்கள் பலத்தை வளர்த்துக் கொள்வது.
அரசியல் கட்சிகள் கும்பல்தனமான வாழ்க்கையை ஊக்குவிக்கின்றன. இப்போதெல் ல்£ம் கட்சிகளின் ஊர்வலங்கள் மறியல்கள் பேரணிகள் போன்றவற்றிற்கு ஆள் திரட்டுவதற்கென்றே கண்காணிகள் இருக்கிறார்கள். இவற்றில்வந்து கூச்சல்போட்டு விட்டு, லாரிகளில ஊர்வலம் போவோருக்குக் காசு, பிரியாணி கிடைக்கிறது. அதை யும் மீறி தங்கள் இதய தெய்வத்திற்கு, தலைவனுக்கு, தங்களால் ஆனதைச் செய்து விட்டோம் என்ற ஆத்மதிருப்தியும் கிடைத்துவிடுகிறது. மனிதனுக்கு வேறென்ன வேண்டும்?

——————————–
வாரத்தில் ஒன்றிரண்டு வெளியூர்க் கூட்டம்
வரப்பார்க்கும் மணியார்டர் மாலை துண்டு
காரத்தில் பேசத் துப்பாக்கிச் சூடு
கல்பிறந்த காலத்தில் பிறந்தோர் தம்மை
நேரத்தில் களிப்பூட்ட அகநானு£று
நெய்யாற்றில் பாலாற்றில் பேசிப்பார்த்த
தீரத்தில் தேர்ந்தெடுத்த நகைத்துணுக்கு
தமிழர்க்கு வேறென்ன கொடுக்க வேண்டும்?
-பரிசில் வாழ்க்கை, ஞானக்கூத்தன் கவிதைகள்
———————————–
நிறுவனமயமாக்கப்பட்ட சமயங்கள், கல்வி, சாதி இவை ஆதிக்கக் கலாச்சாரத்திற்கு உறுதுணையாகவே இருந்து வருகின்றன. ஏற்கெனவே வெளிவந்துள்ள அன்னம் ஏடுகள் இவை பற்றி விரிவாகப் பேசியுள்ளன. எனவே சுருக்கமாக நிறுவனமயமாகி யுள்ள சமயங்கள், கல்வி, சாதி இவற்றிலுள்ள ஆதிக்கக் கலாச்சாரக் கூறுகளைக் காண்போம்.

சமயம்
இந்திய சமய நம்பிக்கை உடையவர்களை முழு அளவில் பெற்ற நாடு. சமய நம்பிக்கை அற்றவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். சமயம் சமூக அமைப்பின் மீது பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துகிறது. கர்மவினை, விதி, மறுபிறப்பு, மோட்சம், இறைவன் செயல் என்றெல்லாம் கூறி அடிமைப்பட்டுக் கிடக்கும் மனிதனை அதேநிலையில் வைத்திருக்க சமயம் உதவுகிறது. விடுதலைக் கூறுகள் சிலவற்றைக் கொண்டிருந்தாலும் இன்று மதம் கொள்கைகள், கோட்பாடுகள் அடிப்படையில் மக்களால் ஏற்கப்பட்ட ஒன்றல்ல. வெறும் உணர்ச்சிபூர்வ நிலையிலேயே மக்களால் மதம் கைக்கொள்ளப்படுகிறது.
ஐயப்பன், ஆதிபராசக்தி, வேளாங்கண்ணி, பரிசுத்த ஆவி போன்ற குழுவழிபாட்டு இயக்கங்கள் பெருகிவருகின்றன. ஒன்றாகச் சேர்ந்து வழிபடுதல், ஒரே கோஷம், ஒரே மாதிரி உடைகள் போன்ற கூட்டுச்செயல்பாடுகள் காணப்பட்டாலும், உணர்ச்சி வயப் பட்ட இயக்கங்களாகவே இவை உள்ளன. குழுவழிபாடு என்ற முறையில் மக்களை நெருங்கிவரச் செய்கின்றன. ஆனால் சிந்தனையைப் புறயதார்த்தங்களிலிருந்து திசை திருப்பி, தற்காலிகமான நிறைவுக்கு அல்லது போலிநிறைவுக்கு வழிசெய்வனவே இத்த கைய இயக்கங்கள். சிந்தனையைத் து£ண்டுபவையாகவோ, அதன்மூலம் மாற்றத்திற் கான செயல்பாட்டிற்கு ஊக்குவிப்பவையாகவோ இவை இல்லை. தப்பிப்பை ஊக்கு விப்பனவாக உள்ளன. தங்கள் சொந்தப் பிரச்சினையை மறக்கவும் அல்லது அவை ஏதோ ஒரு அற்புத நிகழ்ச்சியால் நிறைவேறிவிடும் என்று எதிர்பார்க்கவும் து£ண்டப் படுகின்றன. குழுச்செயல்பாடு என்னும் மாற்றுக் கலாச்சாரக் கூறு மத அமைப்புக ளால் ஆதிக்கக் கலாச்சாரத்திற்கு உறுதுணையாக்கப்பட்டுள்ளது.

கல்வி
இன்றைய கலாச்சாரப் பரப்பலின் அடித்தளமாக இருப்பது கல்வி. கல்வி என்ற பெயரால் முதலாளித்துவ மதிப்புகள் மட்டுமே நாட்டில் பரப்பப் படுகின்றன. சிந்த னையைச் சற்றும் வளர்க்காத மனப்பாடக் கல்விமுறை, தனிநபர் வழிபாட்டை உருவாக்குகின்ற கல்விமுறை. அண்மைக்காலத்தில் ஆங்கிலவழிக் கல்விமீது மக்களுக்கு ஆசை பொங்கிப் பெருகுவதைப் பார்க்கிறோம். பெருந்தொகைகளை சன்மானமாகக் கொடுத்து, ஆங்கிலவழிப் பள்ளிகளில் எல்கேஜியில் பிள்ளைகளைச் சேர்க்க அலையும் பெற்றோர்கள்தான் எங்கும் நிறைந்துள்ளனர்.
ஆங்கில வழிக்கல்வி சிந்தனையற்ற மூளைகளை உருவாக்குகிறது. ஆடம்பரமோகம், ஒரு தனிஉயர்வகுப்பினராக மாறும் அபாயம் நிறைந்த, பயனற்ற கல்விமுறை இது. கழுத்தில் இறுக்கமான டை, காலில் இறுக்கமான சாக்ஸ், ஷ¨க்கள், முதுகில் மூட்டை புத்தகங்கள், வீட்டில் வந்தாலும் மம்மி டாடி என்று அந்நிய பாஷையில் அழைக்கின்ற தன்மை-இவ்வாறு உருவாகும் இந்தக் குழுவினருக்குக் கிரிக்கெட் ஆடத் தெரியும், நுனிப்புல் விவரங்களை மனப்பாடம் செய்து குவிஸ் போட்டிகளில் பங்கேற்கத் தெரியும், மிக நவீன உடை உடுத்திக் கொள்ளத் தெரியும், இந்தியாவில் இருந்தாலும் பிற பொதுமக்களோடு தொடர்பின்றி இங்கிலாந்தில் பிறந்தவர்கள் போல உளறிக் கொள்ளத் தெரியும், பெரிய நிறுவனங்களில் காசு பண்ணும் கலாச்சாரம் இது. ஆனால் கண்ணெதிரில் நம் விவசாயிகள் எப்படி வாழ்கிறார்கள், உழைப்பாளி மக்கள் எவ்வித அவஸ்தைகளுக்கு ஆளாகித் தங்கள் வாழ்க்கைகளை இம்மாதிரிப் பெரிய மக்களுக்காக விட்டுக்கொடுத்து வாழ்கிறார்கள் என்பன எல்லாம் தெரியாது. நாட்டிலுள்ள பிரச்சினைகளைப் பற்றி இவர்களுக்குக் கவலை இல்லை. இவர்களு டைய பார்வை எல்லாம் அமெரிக்கா ஆஸ்திரேலியா மீதுதான். ஆனால் மற்றவர் வரிப்பணத்தில் சொகுசான கல்வி மட்டும் இங்கே வேண்டும். மற்ற மனிதர்கள் மத்தி யில் தன்னை மட்டும் உயர்ந்தவனாக பாவித்துக்கொள்ளும் தற்பெருமையையும், மமதையையும் அளிக்கும் கல்விமுறை இது. இவ்வாறு தன்மகனும் நடந்துகொள்ள வேண்டும் என்று கனவுகண்டுதான் குழந்தைகளின் பெற்றோர்களும் இப்படிப்பட்ட கல்விநிறுவனங்களில் சேர்க்கிறார்கள். பாவம், இம்மாதிரிக் கல்வி அளிப்பதில் கிறித்துவ நிறுவனங்களே முன்நிற்கின்றன.

சாதி
நம் கலாச்சாரம் பொருளாதாரத்துடன் பிணைந்துள்ளது. இந்தியச் சூழலில் என்றைக் குமே சாதிக்கும் வர்க்கத்திற்கும் இடையே ஒரு பிரிக்கமுடியாத உறவு இருந்துவருவ தைக் காணஇயலும். இங்கு உயர்சாதிக்காரர்களே உடைமை வர்க்கத்தினராகவும் பெரு முதலாளிகளாகவும் இருப்பதைக் காணமுடியும். தாழ்ந்த சாதிக்காரர்கள் உழைப்பாளி களாகவே இருக்கிறார்கள். சங்க காலத்திலேயே உடல் உழைப்பில் ஈடுபட்ட மக்களைக் கடையர் (சமூகத்தில் கடைசி நிலையில் உள்ளவர்கள்) என்று சொல்லியிருப்பதைக் காண்கிறோம். இடைக்காலத்தில் பிராமணர்களை எதிர்த்துப் போராட்டம் நடத்தினால் இருபதாயிரம் காசுகள் தண்டம் என்று குலோத்துங்க சோழன் அபராதமே விதித்திருப் பதைக் காண்கிறோம். பெயரளவில் இன்று மக்கள் ஆட்சி என்று சொல்லப்பட்டாலும் உண்மையில் சட்டம் மற்றும் நிர்வாக எந்திரங்கள் யாவும் உயர்சாதியினருக்கே உதவு கின்றன. இதற்குக் கீழ்வெண்மணிச் சம்பவம் ஒன்றே போதிய சான்றாகும். 44 தலித் மக்களைக் கொளுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட நிலவுடைமைச் சாதியினர் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். சாதிக்கும் இன்றைய அரசியலுக்கும் உள்ள பிணைப்பைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. அவ்வப்போது சாதிக்கலவரங்கள் ஏற்பட்டு ஒடுக்கப்பட்டவர்கள் மடிவதையும் காணமுடிகிறது. இதற்கும் அரசியல் து£ண்டலே முதன்மையான காரணமாக நிற்கிறது.

ஒழுக்கம்
சமயமும் கல்வியும் ஒழுக்கத்தை போதிக்கின்றன. ஆனால் ஒழுக்கமின்மையே பரவலா கக் காணப்படுகிறது. உண்மையில் ஆதிக்கக் கலாச்சாரத்தின் கூறுகளைக் கொண்ட சமயமும் கல்வியும் ஒழுக்கக் கேட்டையே ஏற்படுத்திவருகின்றன.

ஒரு தலைமுறைக்கு முன்பிருந்ததுபோன்ற வாழ்க்கை இன்று இல்லை. முற்றிலும் மாறி விட்டது. விடியற்காலையில் எழுந்து து£ய பழக்கங்களுடனே தங்கள் தங்கள் வேலை களில் அன்று யாவரும் ஈடுபட முடிந்தது. இன்று காலை திரைப்படப் பாடல்கள் துயி லெழுப்ப, பெட் காபி வரும்வரை படுக்கையில் கிடந்து பிறகு அவசரஅவசரமாகக் கடமைகளை முடித்துவிட்டு யாவரும் எது எதையோ நோக்கி ஓடுகிறார்கள். கீழ்த்தட்டு மக்களோ நாள்முழுவதும் உழைத்துச் சம்பாதித்ததைக் கள்ளச் சாராயக் கடைகளில் செலவிட்டு மயங்கிக் கிடக்கிறார்கள். மத்திய தர மக்களுக்கு உடலுழைப்பு முற்றிலும் அருகிப்போயிற்று. நல்ல உணவு, நல்ல குடிநீர், ஏன் நல்ல காற்றுகூடக் கிடைக்காமல் இருக்கும்போது நோய்கள் பெருகுகின்றன. இப்படிப்பட்ட சூழலில் ஒழுக்கத்தைப் பற்றிப் பேச என்ன இருக்கிறது?

உழைக்காமலே வளமாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் பெருகிவிட்டதால், லஞ்சம் ஊழல் போன்ற சமூக நோய்களும் பெருகிவிட்டன. ஒரு தலைமுறைக்கு முன்னர்கூட, லஞ்சம் வாங்குதல் மிகக் கீழான ஒழுக்கமாகக் கருதப்பட்டது. லஞ்சம் வாங்குபவன் கூனிக்குறுகி மேசைக்குக் கீழ் வாங்கினான். இப்போது லஞ்சமும் ஊழலும் வாழ்க்கை முறைகளாகவே மாறிவிட்டன. இதைப் பெருமையாகக் கருதத் தொடங்கிவிட்டார்கள்.
இதனோடு தொடர்புடையது சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள பேதம். மேடையில் ஏறினால் சங்கப் பண்பாடு, தமிழரின் உயரிய ஒழுக்கம் என்றெல்லாம் உளறுவதைக் கேட்க முடிகிறது. வாழ்க்கை முழுவதிலுமோ சொல்லமுடியாத ஒழுக்கக் கேடுகள். தர்ம சங்கடங்கள். பேச்சில் சங்ககாலத் தன்மானம், சுயமரியாதை. கணைக்காலிரும் பொறை தண்ணீரும் குடிக்காமல் உயிர்விட்டதைப் பாராட்டுவார்கள். ஆனால் உண் மையில், பணத்துக்காக எவன் முனனாலும் கைகட்டிப் பல்லிளிக்கும் கேவலம். சாக்கடையில் விழுந்து புரளும் பன்றிகள் போன்ற வாழ்க்கை. கேட்டால் இதுதான் பிழைக்கும் வழி என்பார்கள். பத்திரிகைகள் முதல் பட்டிமன்றங்கள் வரை தமிழ்க் கற்பு பேசப்படுகிறது. ஆனால் விபசாரம் இல்லாத இடமில்லை. ரெட்லைட் ஏரியா இல்லாத நகரமில்லை.

ஆதிக்கக் கலாச்சாரம்
மேற்கண்ட கலாச்சாரச் சீரழிவுகள் அனைத்திற்கும் பின்னாலிருப்பது ஆதிக்கக் கலாச்சாரம். ஆதிக்கக் கலாச்சாரம் என்பது செல்வத்தையும் அந்தஸ்தையும் அபகரித்துக்கொண்ட ஒரு சிறுபான்மைக் குழுவினர், பெரும்பான்மை மக்களுக்கு எதிராகத் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள உருவாக்கிய ஒன்று. பெரும்பான்மையினர் தாங்கள் செய்யும் ஏமாற்றுகளை நியாயப்படுத்திக்கொள்ள உருவாக்கிய ஒன்றுதான் ஆதிக்கக் கலாச்சாரம். இதற்குத் துணையாக மதக்கொள்கைகள், புராணங்கள் தொடங்கி எதையும் ஆயுதமாகப் பயன்படுத்துவார்கள்.
விதி போன்ற கொள்கைகள் என்றென்றைக்கும் ஆண்டான் ஆண்டானாவும் அடிமை அடிமையாகவும் இருப்பதற்காகவே-இருக்கும் அமைப்பை அப்படியே கேள்விகேட்கா மல் நிலைநிறுத்துவதற்காகவே உருவாக்கப்பட்டவை. நீ ஏழையாக இருக்கிறாயா, அது உன் விதி. கீழ்ச்சாதியில் பிறந்து அவமானப்படுகிறாயா, அது உன் தலைவிதி. நடுத்தர வர்க்கத்தில் பிறந்து நாளெல்லாம் உழைத்து ஓடாகத் தேய்ந்து போகிறாயா, அது உன் விதி. இப்படிப்பட்ட சிந்தனைகளுக்கு ஆட்பட்டவர்களை எந்தவித எதிர்ப்புக்கும், எந்தப் புரட்சிக்கும் து£ண்ட முடியாது. முதலாளி சரிவரக் கூலி கொடுக்கவில்லையா, அதற்கு எதிராகப் போராட முடியாது. ஏமாற்றுவது அவன் விதி, ஏமாறுவது நம் விதி.

விதியை நம்பாதோரும் தங்கள் தங்கள் வாழ்க்கைப் போராட்டங்களிலேயே அமிழ்ந்து கிடந்து எந்தச் சமூக அக்கறையுமற்று சிந்தனையற்று வாழவேண்டும் என்றே ஆதிக்கக் கலாச்சாரம் திட்டமிட்டுச் செயல்படுகிறது. எட்டு மணி நேர உழைப்பு போதாது, பத்து மணி நேரம், பன்னிரண்டு மணி நேரம் உழைக்க வேண்டும் என்று வற்புறுத்துவது, உற்பத்தியைப் பெருக்குவதற்காக மட்டுமல்ல. நாடு முன்னேறவேண்டும் என்பதற்காக அல்லவே அல்ல. ஓய்வு கிடைத்தால்தானே அறிவைப் பெருக்கிக் கொள்ளவோ, சிந்திக்கவோ முடியும்? அதுவே இல்லாமல் செய்து விட்டால்? யாருக்கும் எந்தச் சமூக அமைப்பையும் கட்ட முடியாது, சிந்திக்க நேரம் இருக்காது, எந்தச் சமூக இயக்கத் திலும் பங்குகொள்ள முடியாது. வீட்டுக்கு வந்தோமா, படுத்துத் து£ங்கினோமா, காலையில் மறுபடி வேலைக்கு அவசரஅவசரமாக ஒருவாய் அள்ளிப்போட்டுக் கொண்டு கிளம்பினோமா, மறுபடி திரும்பினோமா….ஓய்வற்ற எந்திர வாழ்க்கை. சிலபேர் தாங்கள் சொகுசாக இருப்பதற்காக பலப்பல கோடிப்பேரை எந்திரங்களாக்கி அவர்கள் வாழ்க்கையை அர்த்தமற்றதாகச் செய்கிறது ஆதிக்கக் கலாச்சாரம்.

ஆகவே கலாச்சாரம் என்பது, நம் வாழ்க்கை என்பது அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றுடன் பின்னிப் பிணைந்தது. கலாச்சாரம் பற்றிய எந்தப் பார்வையும் அரசியல், பொருளாதாரச் சார்பின்றி நிகழ்த்தப்பட முடியாது. பொருளாதாரம்-அரசியல்-சமூகம்-சமயம் ஆகிய அனைத்தும் பின்னிப்பிணைந்திருக்கின்றன.
மூலகாரணங்கள்

பணம் ஒன்றே இன்று எதற்கும் அடிப்படை அளவுகோலாக ஆட்சிசெலுத்துகிறது. இப்படிப்பட்ட மதிப்பீட்டை உருவாக்கியது ஆதிக்கக் கலாச்சாரம். இன்று ஆதிக்கக் கலாச்சாரத்திற்குப் பின்னால் இருப்போர் பெரிய வணிக சக்திகள். பெருமுதலாளி கள். பழங்கால அரசர்களைப் போல. ஆதிக்க சக்திகள் எப்போதும் தனித்திருப்பது கிடையாது. அரசியல் செய்பவர்களுக்குத் தங்களை நியாயப்படுத்த மதம் சார்ந்த, ஒரு கற்றறிந்த குழுவினர் வேண்டும், மதக்குழுவினர்க்குத் தாங்கள் சுகமாக வாழ அரசிய லின் துணை வேண்டும். கி.மு.விலேயே சந்திரகுப்தனும் சாணக்கியனும் சேர்ந்தது ஆதிக்கக் கலாச்சாரத்தின் அடிப்படையைத் தெளிவாக உணர்த்தக்கூடியது. ஆதிக்கம்-குயுக்தியான அறிவு இவற்றின் சேர்க்கை.

ஆதிக்கக் கலாச்சாரம் எப்போதும் தனித்திருப்பது கிடையாது. அவர்கள் மற்றவர்க ளைத்தான் இனம், மொழி, சாதி, வர்ணம், நாடு, மதம் போன்ற எந்த அடிப்படையிலா வது பிரித்துவைப்பார்கள். அப்போதுதான் அவர்கள் கேள்வியின்றி வாழமுடியும். தங்களைப் பிறர் எதிர்க்காதவாறு சுயநலசக்திகள் எப்போதும் ஒன்றுசேர்ந்து கொள்ளும். இங்குள்ள பஜாஜ் அல்லது டாட்டா ஒரு அமெரிக்க முதலாளியோடு, அல்லது ஜப்பானிய முதலாளியோடு எளிதாகக் கூட்டுவைத்துக் கொள்ளமுடியும், அர சியலையே ஆட்டிப்படைக்கவும் முடியும்.
இன்றிருக்கும் அரசாங்கமும் இவர்கள் சார்பாகவே இருக்கிறது. காங்கிரஸ் அரசாயினும், ஜனதா தள அரசாயினும், அல்லது உள்ளூர்க் கட்சிகளுடைய அரசாயி னும் எதுவும் அந்நிய மூலதனச் சார்புடைய அரசாகவே உள்ளது.

பிறநாட்டு முதலாளிகள் நம் நாட்டில் வந்து தொழில் தொடங்குவதற்கு என்ன அக்கறை? வளர்ந்த நாடுகளிலுள்ள பெரும் முதலாளித்துவ நிறுவனங்கள்தான் நம் நாட்டில் தொழில்களைத் தொடங்குகின்றன. இவற்றிற்குத் தேவையான மூலப் பொருள்கள் இங்கே மலிவாகக் கிடைக்கின்றன. மிக மலிவான உழைப்பாளிகள் கிடைக்கிறார்கள். நம் நாட்டையே அவர்களுக்குச் சோதனைக் கூடங்களாகவும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
————————————
பூமியின் வறட்சியான பகுதிகளில் இருந்தும் வருகின்ற தண்ணீர், ஏற்கெனவே நீர் நிறைந்துள்ள கடலைநோக்கித்தான் ஓடுகிறது. அதேபோலத்தான், ஏழை மக்களிடமும் உள்ள செல்வமும், ஏற்கெனவே பணம் நிறையப் பெற்றுள்ள நாடுகளிடமும், பணக் காரர்களிடமும் செல்லுகிறது. -ஜூலியஸ் நைரேரே.
————————————–
பன்னாட்டு முதலாளித்துவத்தின் அடிப்படையான நவீன தொழில் நுட்பம், மனித உயிருக்கு எவ்வளவு அபாயம் விளைவித்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு நம் நாட்டில் யூனியன் கார்பைடு போபாலில் விளைவித்த நாசமே நல்ல சான்றாகும். இது அமெரிக்க முதலாளி ஒருவனின் தொழிற்சாலை. இதில் ஏற்பட்ட விஷவாயுக் கசிவு (1984) அபாயததினால் ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்தனர், பலநு£ற்றுக்கணக்கான பேர் குருடாயினர் என்பது ஒருபுறம் இருக்க, இன்னும் இதன் பாதிப்புகள் தொடர்ந்து நீடித்து வருகின்றன. நமது அரசாங்கத்தினால் இந்த முதலாளியை ஒன்றும் செய்ய முடியவில்லை. குற்றக்கூண்டிலும் நிறுத்த முடியவில்லை. இழப்பீடும் வாங்க முடிய வில்லை. ஆனால் இன்றுவரை யூனியன் கார்பைடின் எவரெடி செல்கள்தான் எங்கும் விற்பனையாகின்றன. அரசாங்கத்தினாலும் அசைக்கமுடியாதது அந்நிய முதலாளித் துவம்.
—————-
இந்தியாவில் மனித உறுப்புகள் மாமிசத்தைப் போல விலைபேசப்படுகின்றன. உயிருள் ளவர்களின் சிறுநீரகம் ரூ. 30,000. உயிருள்ளவர்களின் கண், ரூ. 80,000. இறந்தவரின் உடல் ரூ. 6,000. சிறுநீரக வியாபாரம் இன்று வருடத்திற்கு ரூ. 40 கோடிக்கு நடக்கிறது. ஒரு ஏழையின் ஆரோக்கியத்தைப் பறித்து ஒரு பணக்காரனுக்குக் கொடுக்கும் சூறையா டல் இது. -டாக்டர் கொலாபாலா, இந்தியா டுடே, 31-07-90
——————–

இந்த நிலையில் இந்தியாவில கூடங்குளங்கள் பெருகிவருகின்றன. முதுலாளித்துவம் மலிவாக, இன்னும் மலிவாக இன்பங்கள் வேண்டும் என்ற எண்ணத்தில் மூல வளங்க ளைச் சுரண்டுகிறது. இந்த வளங்கள் அனைத்தும் வளர்ந்த நாடுகளில் வாழும் ஒரு சிலருக்கே கிடைக்கின்றன. அதேசமயம், உலகில வறுமை பெருகிவருகிறது.
———————
தெற்காசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் கொடிய வறுமை நிலவுகிறது. இலத்தீன் அமெரிக்காவின் சிறுபான்மை இனத்தவரிடையேயும் இந்தியாவின் தாழ்த்தப்பட்ட மக்களிடையேயும் வறுமை மிகுதியாகக் காணப்படுகிறது.
-1990ஆம் ஆண்டுக்கான உலக மேம்பாட்டு அறிக்கை, உலகவங்கி வெளியீடு, இந்து நாளிதழ், 16-07-90
—————————–
முதலாளித்துவம் மூல வளங்களைச் சுரண்டித்தான் பிழைக்க முடியும் என்பதால் சுற்றுச்சூழல் பற்றிய கவலையின்றி அவை சுரண்டுகின்றன. உலகின் வளப்பகுதிகள் யாவும் மேற்கு நாடுகளுக்காக அழிக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக மழை குறைதல், தேவையற்ற வெள்ளப்பெருக்கு, நிலத்தடி நீர் கிடைக்காமை, உலக முழுவதும் பாலைவனப் பகுதிகள் விரிவடைந்து வருகின்றன. இந்தியருக்கோ, பருவ மழையும் கிடைக்காமல், நிலத்தடி நீரும் வறண்டுபோய் விவசாயத்துக்கும் குடிநீருக்கும் திண்டாட்டம்.
சரியான பொருளாதாரக் கொள்கை இன்மையால், மூன்றாம் உலக நாடுகளில் நகர்ப்புறம் நோக்கி ஏழைகள் கிராமங்களிலிருந்து இடம் பெயர்தல் தொடர்ந்து நடை பெற்று வருகிறது. நகரப்புறங்களும் நகரைச் சார்ந்த சேரிகளும் விரைந்து வளர் கின்றன. உலகிலேயே மிகப் பெரிய சேரிப்பகுதி பம்பாய் நகரத்தில் இருக்கும் தாராவிப் பகுதி என்று சொல்லப்படுகிறது. நகர்மயமாதல், பொருளாதார ஏற்றத் தாழ்வை இன்னும் அதிகமாக்குகிறது. நகரங்களின் மேம்பாட்டிற்கெனப் பொருளாதா ரத்தின் கணிசமான பகுதி செலவழிக்கப்படுகிறது. கிராமப்புறங்களுக்கும் விவசாயத்துக்கும் போகவேண்டிய பணம் நகரங்களுக்குப் போய்விடுகிறது. நகரங்கள், இன்று மனிதத்தன்மையற்ற வெறும் கான்கிரீட் காடுகளாக மாறிவிட்டன. அவை சுற்றுச்சூழலையும் நாசமாக்குகின்றன. ஏராளமான குற்றங்கள், ஒழுக்கக் கேடுகள் ஆகியவை நகரங்களினாலேயே வளர்கின்றன. (தொடரும்)

சமூகம்