ஆதிக்கக் கலாச்சாரம்-பகுதி 4

ஆதிக்கக் கலாச்சாரம்-பகுதி 4

(இந்தக் கட்டுரையின் முதல், இரண்டாம் மூன்றாம் பகுதிகள் சில நாட்களுக்குமுன் வெளியிடப்பட்டன. இது இறுதிப்பகுதி.)

மாற்றுக் கலாச்சாரம்

எந்தக் கலாச்சாரமும் பொருளாதாரத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது. மனிதன் சுதந்திரமாக வாழ இயலாத ஒரு சமூகத்தில், அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவு செய்துகொள்ள முடியாத ஒரு சமூகத்தில், என்ன விதமான கலாச்சாரம் மலரமுடியும்? ஆகவே இன்றைய ஆதிக்கக் கலாச்சாரம், மக்களின் சமத்துவத்தை அங்கீகரிக்காத கலாச்சாரம், பலரை ஏழைகளாகவும் அடிமைகளாகவும் மூடர்களாகவும் வைத்திருக்க முனையும் ஒரு கலாச்சாரம் – சிறுபான்மையினருக்கே எல்லாச் செல்வமும் என்று சேகரிக்கும் கலாச்சாரம் – பணத்தின் பெயரால் மனிதனைப் பேயன் ஆக்கும் கலாச்சாரம் நமக்குத் தேவையில்லை. நமக்கு இன்று தேவை ஒரு மாற்றுக் கலாச்சாரம்.

இன்றைய ஆளும் கலாச்சாரத்திலுள்ள, அதாவது வணிகக் கலாச்சாரத்திலுள்ள குறைகளையெல்லாம் போக்கி, யாவருக்கும் சம வாழ்வும் சந்தோஷமும் அளிப்பதற்கான அடிப்படை கொண்டதாக அது இருக்கவேண்டும். இப்படிப்பட்ட ஒரு மாற்றுக் கலாச்சாரம் ஒரு சில நாட்களில், ஆண்டுகளில்கூட உருவாகிவிட முடியாது. பல ஆண்டுகளாகச் சேர்த்த தீமைகளை ஒருசில நாட்களில் அழித்துவிட முடியாது. மனித மனங்கள் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மாற்றம் அடையும்.

ஒரு மாற்றுக் கலாச்சாரத்தை உருவாக்க வேண்டுமானால், அதாவது இப்போதுள்ள மதிப்புகள் அடியோடு மாறவேண்டுமானால், முதல் உலக, இரண்டாம் உலக நாடுகளின் இருவித பாதிப்புகளிலிருந்து நாம் விடுபடவேண்டும். ஒன்று, அவற்றின் பொருளாதார பாதிப்புகள். இரண்டு, அவற்றின் கலாச்சார மதிப்புகள். மேற்கத்திய கலாச்சார மதிப்புகளுக்குப் பதிலாக நமது சொந்தமான கலாச்சார மதிப்புகளில் பயன் உள்ளவற்றை நாம் மீட்டெடுத்துக் கொள்ளவேண்டும். இதற்கான கல்வி ஆயத்தம், மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தல், இரு தளங்களில் செயல்பட வேண்டும். பெரும்பாலான மக்கள் கல்வியறிவும் சிந்தனா சக்தியும் பெறும்போது அவர்களை ஏமாற்ற, ஒடுக்க எவராலும் இயலாது. அதனால் பொதுமக்களுக்கு விழிப்புணர்ச்சி நல்கும் முயற்சிகள் பெருமளவில், குறிப்பாகக் கிராமப்புறங்களில் நடைபெற்று வர வேண்டும்.

இன்னொரு தளத்தில் ஆள்வோருக்கு அறிவு புகட்டலையும் அவர்களது ஆதிக்க முயற்சிகளுக்கு எதிர்ப்பையும் மேற்கொண்டு வருதல் வேண்டும். ஆள்வோரும் மக்களே. அவர்களது மனமாற்றமும் இன்றியமையாதது. உதாரணமாக இன்று சர்வதேச அரங்கில் போரின்றி இருத்தல், சிறுபான்மை இனங்களை மதித்தல் போன்ற வற்றைச் செய்ய மக்களின் விழிப்புணர்ச்சி மட்டும் போதாது. இந்திய மக்கள் எவ்வளவுதான் இராணுவச் செலவைப் பற்றி வருந்தினாலும், ஆட்சியிலுள்ளவர்கள், பாகிஸ்தான் படை பலத்தைப் பெருக்குகிறது, சீனா பெருக்குகிறது என்பது போன்ற காரணங்களைக் காட்டித் தங்கள் படைபலத்தைப் பெருக்கவே செய்வர். அமெரிக்கா போன்ற ஆயுதவளர்ச்சி நாடுகள் இம்மாதிரிப் போக்கை ஒவ்வொரு நாட்டிலும் தூண்டிவிடத் தான் செய்யும். ஆகவே இதற்கு சர்வதேச அரங்கில், அனைத்து ஆள்வோருக்கும், குறிப்பாக முதல் உலக ஆள்வோருக்கும் விழிப்புணர்ச்சி இன்றியமையாதது. அனைவருமாகச் சேர்ந்துதான் படைக்கலங்களும் இராணுவமும் தேவையில்லை என்ற முடிவுக்கு வரமுடியும். இப்படி ஆள்வோர் தாமாக முடிவெடுக்கும்போது அவர்களுக்குச் சொந்த நலனைவிட நாட்டுநலன் முக்கியம் என்னும் விழிப்புணர்ச்சி அவசியமானது. இதற்கு மாற்றுக் கலாச்சாரச் சாதனங்கள், வெகுஜனச் சாதனங்கள் மிக முக்கிய மானவை. வெகுஜனச் சாதனங்களை மாற்றுக் கலாச்சாரத்தினர் கைப்பற்றினாலொழிய இன்று தேவைப்படும் மாற்றங்கள் நிறைவேறுவதற்கு வழியில்லை.

அழிந்துவரும் கலைகள்

ஒரு வணிக, மேற்சாதிக் கலாச்சாரக் கும்பல் மக்களை ஏமாற்றுவதைக் காண்கிறோம். இதனால் ஏற்பட்ட சீரழிவு, வாழ்க்கையின் அத்தனை துறைகளையும் பாதித்திருக்கிறது. மரபுரீதியாக வந்த பழக்க வழக்கங்கள், கலைகள், விளையாட்டுகள், பொழுதுபோக்கு கள், மருந்துகள், நம்பிக்கைகள் போன்ற அனைத்தும் இன்றைய வணிகக் கலாச்சாரத் தின் கீழ் நொறுங்கிவிட்டன. மாற்றாக நமக்கு எதிரில் முன்வைக்கப்படுவன அமெரிக்க முன்மாதிரிகள் அல்லது ரஷ்ய முன்மாதிரிகள். நமக்கென ஒன்றும் இல்லாமல் எல்லாவற்றையும் இழந்து விட்டதான ஒரு தோற்றம் ஏற்பட்டுள்ளது. இவை அனைத்தையும் காப்பாற்றியிருக்கவேண்டியது காலனி யாதிக்கத்திலிருந்து நம்மை விடுபடத் து£ண்டிய தலைமை. ஆனால் இவர்கள் வெளிநாட்டு முன்மாதிரிகையே சார்ந்து விட்டார்கள். நமது பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகள் அநேகமாக அழிந்துவிட்டன. நாட்டுப்பாடல்களைத் தேடி கிராமம் கிராமமாக அலைந்தாலும் கிடைப்பது அரிதாக உள்ளது. தாலாட்டுப்பாடித் தங்கள் குழந்தைகளைத் தூங்கவைத்த தாய்மார்வம்சம் இன்று டேப்ரிகார்டரில் சினிமாப்பாட்டுகளைப் போட்டுக் குழந்தைகள் அழுகையை அடக்கும் காலமாக மாறிவிட்டது.

நமது பாரம்பரிய விளையாட்டுக்கலைகள்-சிலம்பம், வர்மக்கலை போன்றவை அழிந்து வருகின்றன. அதற்கு பதிலாக கராத்தேவையும் குங்ஃபூவையும் இரவல் வாங்கி அலைகிறோம். அவையும் திரைப்படங்களில் கவர்ச்சியோடு புகுத்தப்பட்டதனால். நம் கிராமங்களில் உடலுழைப்புக்கேற்ற கூழ் களி போன்ற சத்துள்ள உணவு வகைகள், நீராகாரம் உண்ணுதல் போன்ற பழக்கங்கள், ஒரு தலைமுறைக்குமுன் இருந்தவை இன்று கேவலமாகக் கருதப்படுகின்றன. எவையெல்லாம் நம் உடல் வளத்துக்கு இசைய நல்ல பண்புகளாக இருந்தனவோ அவறைறயெல்லாம் இழந்துவிட்டு, காப்பி, டீ, புகையிலை, சிகரெட், குடி போன்ற பழக்கங்களைக் கைக்கொண்டு அலைகிறோம். மேகி, ரஸ்னா கலாச்சாரம் நம் குழந்தைகளுக்கு வந்துவிட்டது. நம் இளைஞர்கள் போதை மருந்துகளைத் தேடிச் செல்கிறார்கள்.

————————————
மேற்குப் பண்பாட்டின் ஆதிக்கமானது மூன்றாம் உலக மக்கள், தங்கள் சொந்தப் பண்பாடிலிருந்தும் மரபுகளிலிருந்தும் முகம் திருப்பிக்கொள்ளுமாறு செய்திருக்கிறது. மேற்கு நாட்டுச் செல்வாக்குள்ள புத்தகங்களும் பத்திரிகைகளும் சந்தையில் குவிந்துள் ளன. ஒரு வலுவான பண்பாட்டு மரபின் இடத்தை ஒரே முகம் கொண்ட, நுகர்வை யே நோக்கமாகக் கொண்ட ஒரு பண்பாடு பிடித்துள்ளது.
———————–

நமது சொந்தமான இசை மரபுகள், நாட்டியம், கூத்து ஆகியவையும் வறண்டு விட்டன. கர்நாடக இசை ஒரு சிறு மேற்குழுவிடம் சேர்ந்ததன் காரணமாகத் தெலுங்கு இசையாக மாறிவிட்டது. இதனால் அது பரவலாகக் கூடிய அரிய வாய்ப்பை இழந்து விட்டது. தெலுங்குப் பாடல்களை அர்த்தமற்றுப் பாடும் வித்வான்களிடம் தன் ஜீவனை வெறும் தொழிலாகிவிட்டது. இதற்கும் மேலாக வாய்பாடுகள் போல ஸ்வரக் கோவைகளை உதிர்த்தல், குரல் வளமின்மை போன்ற கோளாறுகள் காரணமாகவும், சமூகச் சார்பின்மை காரணமாகவும் தேய்ந்து வருகின்றன. மாற்றுநிலையில், நமது மக்கள் திரைப்படப் பாடல்களுக்கு ஒரேமூச்சாக அடிமைப்பட்டுவிட்டனர். நாட்டார் பாடல்களோ கேவலம் எனக் கருதப்பட்டு வெகுஜனச்சாதனங்களில் இடம் பெறுவது அரிதாகிவிட்டது. நாட்டியம் இசையின்றி இயங்கமுடியாத துறையாக இருப்பதால், இசையை அடிமை கொண்டவர்களுக்கே தானும் அடிமையாகிவிட்டது. இன்று பரத நாட்டியம் வெறும் உடற்பயிற்சிபோல அர்த்தமற்று நிகழ்த்தப் படுகிறது. மேலும் கடவுளைப்பாடுதல், காமத்தை அபிநயித்தல் என்ற துறைகள் தவிர (பாரம்பரியத்தைப் பொறுத்தவரை இரண்டும் ஒன்றே) வேறு பரதநாட்டியத் துறைகள் அறவே இல்லை. ஆகவே பரதநாட்டியம் இன்று வெறும் காம அங்க அசைவுகளை மட்டுமே கொண்ட ஒரு செயற்கையான பயிற்சியாகிவிட்டது.
இந்தக் கலைகளின் நலிவைப் பற்றிய பிரக்ஞைகூட இல்லாமல் ஏதோ உன்னதம் போல செயற்கையாக வானொலி, தொலைக்காட்சி, (ஜனரஞ்சகமான முறையில்) திரைப்படம் ஆகியவற்றில் இடம் பெற்று வருகின்றன. இவற்றைப் பற்றிய கவலையையும் முதலாளித்துவ நச்சுவளையம் கவர்ந்துகொண்டு விட்டது.
இலக்கியமும் இன்றைய கலாச்சார நலிவிலிருந்து தப்பிக்கவில்லை. வெகுஜனச் சாதனங்களின் ஆதிக்கம் கவியரங்குகள், பட்டிமன்றங்கள் என்று மக்களைக் கவரும் விஷயங்களாக மாறிவிட்டது. வயிற்றுப் பிழைப்பே பிரதானம் என்றும், பணமே முக்கியம் என்றும் கருதும் வணிகக் ‘கவிஞர்கள்’ பலர்-மேத்தா, வைரமுத்து என்று உருவாகி விட்டனர். மரபின் அழிவுக்கு எதிராகக் கொடிபிடித்த புதுக்கவிதை வெறும் அலங்காரச் சொற்குவியலாக, துதிபாடுவதாகத் தேய்ந்துவிட்டது. இதை எதிர்க் கும் வன்மை மிகச் சிறுபான்மையாக உள்ள கலாச்சார விழிப்புக் கொண்டோரிடம் இல்லை. இன்றைய மாணவர்களோ நாவல்கள் என்றால் ராஜேஷ்குமார் முதல் அனுராதா ரமணன் வரை பல பெயர்களைச சொல்கிறார்கள், தப்பித் தவறிக்கூடி நல்ல நாவலாசிரியர்கள் பெயர்கள் அவர்கள் கண்ணிலும் காதிலும் படுவதில்லை. நாடகமோ சபாக்காரர்களிடம் தஞ்சமடைந்து வெறும் துணுக்குத் தோரணங்கள் ஆகி விட்டது.

மாற்றுக் கலாச்சாரக் கூறுகள்

சுயநலம், பொருளாசை, சிந்தனையை மழுங்கடிப்பது, மற்றவர்களை அடிமைப்படுத்துவது-இவை ஆதிக்கக் கலாச்சாரத்தின் பண்புகள். இவற்றுக்கு எதிரானவை மாற்றுக் கலாச்சாரக் கூ.றுகள். அடித்தட்டு மக்களின் கலாச்சாரத்தில் மாற்றுக் கலாச்சாரப் பண்புகளை அதிகம் காணமுடியும். எனவே மாற்றுக் கலாச்சாரம் என்பதை அடித்தட்டு மக்களின் கலாச்சாரத்திலிருந்து தொடங்கவேண்டும். இந்தக் கலாச்சாரக் கூறுகளும் அழிந்து கொண்டிருந்தாலும், ஒரு சில இடங்களிலேனும் இவற்றை இன்னும் காணமுடிகிறது.

குழுச்செயல்பாடு

மக்கள்-குறிப்பாக அடித்தட்டு மக்கள்-தனித்தனி குடும்பமாக வாழ்ந்தாலும் தாங்கள் வாழும் கிராமத்தில் அல்லது பகுதியில் ஒரு குழுவாகவே செயல்படுகின்றனர். ஒரு வீட்டில் திருமணம் என்றால் சுற்றியிருப்பவர்கள் தங்கள்வீட்டுத் திருமணமாக அதை நினைத்து உதவுகின்றனர். திருமண வீட்டை அலங்கரிப்பது, உணவு தயாரிப்பது, பரிமாறுவது, திருமணத்திற்கு வருபவர்கள் தங்கவும் உணவுகொள்ளவும் தங்கள் வீடுக ளை ஒதுக்கித் தருவது எனப் பலவகைகளில் தங்களையும் அவர்களோடு இணைத்துக் கொள்கின்றனர்.
சாவுபோன்ற துக்கக் காரியங்களில் சுற்றி உள்ளவர்கள் அந்த இழப்பைப் பகிர்ந்து கொள்கின்றனர். தகவல் கொடுப்பது, இறுதிச் சடங்கு ஏற்பாடு, சாவு நிகழ்ந்த வீட்டில் வந்தவர்களுக்கு உணவு தயாரித்துவந்து கொடுப்பது இவ்வாறு துக்கத்தில் உள்ளவர்க ளுக்கு ஆறுதல் அளிக்கின்றனர். ஆலய விழாக்களை ஊரே கூடி ஊர்த்திருவிழாவா கக் கொண்டாடுகின்றனர். திருவிழாவுக்கான செலவுகளையும் வரிசெலுத்திப் பகிர்ந்து கொள்கின்றனர். திருவிழா அன்று ஒரே இடத்தில் ஊர்முழுவதற்கும் சமையல் செய்து சமபந்தியாக அனைவரும் உண்கின்றனர். (உதாரணம், முத்தழகுப்பட்டி செபஸ்தியார் திருவிழா).

இராமநாதபுரம் மாவட்டத்தில் சில கிராமங்களில் பதிலாள்முறை பின்பற்றப்படுகிறது. ஒருவருடைய வயலில் நாற்றுநடுதல் அல்லது அறுவடை போன்ற வேலைகள் இருக்கும்போது மற்றவர்கள் அவர் வயலில் வேலைசெய்வார்கள். இதுபோன்று ஒவ்வொருவருக்கும் வயல்வேலைகள் இருக்கும்போது மற்றவர்போய் அங்கு வேலை செய்வது வழக்கமாக உள்ளது. இம்மாதிரியான குழுச் செயல்பாடுகளில் பொதுநலம் காணப்படுகிறது. மற்றவர்களை மனிதனாக மதிக்கும் சமத்துவநோக்கும், ஜனநாயகப் பண்பும் அதிகம் இடம்பெறுகின்றன. சாதி சமய பொருளாதார வேறுபாடுகள் பின்தள்ளப்படுகின்றன. மக்கள் சக்தியின் பலம் வெளிப்படுகிறது.

கலைகள்
அடித்தட்டு மக்களின் கலைகள் எளியவை, அனைவரும் பங்கேற்கக்கூடியவை. இதற்கு உயர்கலைகள் போல் வருடக்கணக்கான தனிப்பயிற்சி தேவையில்லை. மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும்படி யதார்த்தமாகவும் உள்ளன. கும்மி, ஒயிலாட்டம் போன்றவை எல்லா மக்களும் கலந்துகொள்ளும் எளிய வடிவங்கள். திருமணச் சடங் கின்போது பாடப்படும் பாடல்கள், ஒப்பாரி, வயல்களில் வேலைசெய்யும்போது பாடும் பாடல்கள் போன்றவை குழுவாக அனைவரும் சேர்ந்து பாடுகின்றவை. தங்களது சுகதுக்கங்களைப் பகிர்ந்துகொள்ளும் முறையிலும் உள்ளன. மக்களுக்குத் தீங்கு செய்பவர்களையும் ஆதிக்க சக்திகளையும் ஒழிக்கவேணடும் என்ற கருத்துடைய மதுரைவீரன் கதை அண்ணன்மார் கதை போன்றவை கூத்தாகவும் நாடகமாகவும் நடத்தப்படுகின்றன.

அடித்தட்டு மக்களின் கலைவடிவங்களுக்கு அதிக பொருட்செலவும் நீண்ட பயிற்சியும் தேவையில்லை எனவே எல்லா மக்களும் இக்க¬ல் வடிவங்களில் பங்கேற்கவும் இவற்றைச் சொந்தமாகக் கொள்ளவும் முடிகிறது. வட்டமாக நின்று பலசமயங்களில் நிகழ்த்தப்படுவதால் இவற்றில் யாருக்கும் கூடுதல் மதிப்பு கிடையாது, சம மதிப்புதான் உண்டு. மக்கள் அனைவரும் கூடிப் பார்வையாளர்களாக இருந்தாலும் அவர்கள் பங்கேற்கவும் முடியும். தனிமனிதவாதம் இவற்றில் இல்லை. கலைகளில் உள்ளடக்கம் யதார்த்தமாக இருப்பதால் மூளையை மழுங்கடிப்பதில்லை. மக்களின் வாழ்க்கையைப் பற்றிய சிந்தனையை எழுப்புகின்றன. நடத்துவோரும் பார்வையாளரும் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள இடமளிக்கும் இக்கலைகள் ஜனநாயக வடிவங்களாக உள்ளதைக் காணமுடிகிறது.

நகர்ப்புற நடுத்தர வர்க்கச் சிந்தனையாளர்கள் சிலரால் அடித்தட்டு மக்களின் கலை வடிவங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டு, கூத்தாகவும், பூமிநாடகமாகவும் விழிப்புணர்வுப் பாடல்களாகவும் மறுவடிவம் கொடுக்கப்பட்டு வருகின்றன. அடித்தட்டு மக்களன் கலாச்சாரத்தில் அடிமைத்தனக் கூறுகளும் சில உள்ளன. அவற்றை நீக்கிவிட்டு சமத்து வமன சமுதாயத்தை உருவாக்குவதற்கான கலாச்சார அம்சங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

மாற்றுக் கலாச்சாரத்தை வலியுறுத்தக்கூடிய, அதற்குத் தேவையான கருத்துகளை அளிக்கக்கூடிய திரைப்படச் சங்கங்கள் தோன்றி வருகின்றன. சோதனை முயற்சியாக நாடகங்கள், திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றை ஊக்குவிக்க வேண்டும். சமபங்கீடு இல்லாததால் காணப்படும் ஏற்றத்தாழ்வான, அநீதியான சமூக அமைப் பைக் கட்டிக்காக்கும் கலாசசாரக் கூறுகளான மதம், கல்வி, கலை, இலக்கியங்கள் ஏற் றத்தாழ்வற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்கும்படி மாற்றப்பட வேண்டும்.

சமய இயக்கங்கள்

பொதுவாக மதங்கள், பௌத்தம், கிறித்துவம், இஸ்லாம், சித்தர் வழிமரபு, தமிழ்ச் சைவம், தமிழ் வைணவம், வீரசைவம், காஷ்மீர சைவம், அய்யாவழி போன்றவை-அன்றன்றைக்கு இருந்த ஆதிக்க சக்திகளுக்கு எதிராகத் தோன்றியவையே. இவற்றை உண்மையில் மக்கள் இயக்கங்களின் தொடக்கம் என்று கூறலாம். நாளடைவில் இந்த இயக்கங்கள் ஆதிக்க அமைப்புகளால் சிறைப்பிடிக்கப்பட்டு, சாரம் அற்றுப் போயின. ஆனால் முழுமையாக மழுங்கடிக்கப்பட்டன என்று சொல்லமுடியாது. சான்றாக ஒரு சில மதங்களின் தோற்றங்களைக் காணலாம்.

பௌத்தம்: வேதகாலத்தில் சாதியும் யாகச்சடங்குகளும் பெரிய அமைப்புகளாக உருவெடுத்தன. சாதி அமைப்பிற்கும் சடங்கு வழிபாட்டு முறைக்கும் எதிராகத் தோன் றியது பௌத்தம். சமூகக் கொடுமையான சாதியை எதிர்த்து சகோதர உணர்வை வலி யுறுத்தியது. பௌத்த இயக்கத்தில் வழிபாடோ குருக்களோ இல்லை. அன்பு முதன்மை யாக்கப்பட்டது.
ஆனால் வேதங்களுக்கு எதிராக எழுந்த பௌத்த இயக்கம் பிற்காலத்தில் உபநிடதங்க ளால் உள்வாங்கப்பட்டது. பொருளாதார அமைப்பு நிலவுடைமை சார்ந்ததாக மாறிய தால் வணிகரின் சமயமான இது மழுங்கிப்போயிற்று. புத்தர் கடவுளாக்கப்பட்டு விஷ்ணுவின் அவதாரம் ஆனார்.

இஸ்லாம்: மெக்கா வியாபார மையமாகியது. அங்கிருந்த மக்கள் ஆதிக்க சக்திகளால் பயன்படுத்தப்பட்டனர். ஏழை பணக்காரன் வேறுபாடு கூர்மையாகியது. இந்தக் காலத் தில் தோன்றிய நபி, ஏற்றத்தாழ்வைக் கடவுள் எதிர்க்கிறார் என்றும், இருப்பவர்கள் இல்லாதவர்களோடு பகிர்ந்து கொள்ளவேண்டும் என்றும் கூறுகிறார். சகோதரத்து வத்தை முக்கியமாக அவர் வலியுறுத்தினார். பின்னர் வந்தோர் இதை நிறுவனச் சமய மாக மாற்றியதோடு தீவிரவாதத் தன்மையை இணைத்துவிட்டனர்.

கிறித்துவம்: மதத்தலைவர்கள், சட்ட வல்லுநர்கள் போன்றவர்களால் இரட்டை ஒடுக்கு முறை நிலவி வந்த காலத்தில் இயேசு தோன்றினார். இந்த இரு ஒடுக்கு முறைகளை யும் எடுத்தெறிந்து சமத்துவ சமுதாயத்தை (இதை இறையரசு என்றார்) உருவாக்க முயற்சி செய்தார். இயேசுவுக்குப் பின்னும் அவரது இயக்கம் ஏழைகளின் இயக்கமாக வே இருந்தது. ரோமில் அடிமைகளின் இயக்கமாகவும் இருந்தது. நான்காம் நு£ற்றாண் டில் கான்ஸ்டான்டின் பேரரசன் கிறித்துவனாகியபோது கிறித்துவமும் ஆதிக்க மதம் ஆகியது.
இன்று இந்திய அளவிலும் தமிழக அளவிலும் நாம் காணும் கலாச்சாரங்கள் நம் மீது திணிக்கப்பட்டவையே. ஆரியர், பிராமணர், கிரேக்கர், ரோமானியர், அராபியர், இஸ்லாமியர், ஐரோப்பியர் ஆகியோரது பண்பாட்டுப் படையெடுப்புகள் நமது பண்பாட்டைச் சீரழித்து ஆதிக்க சக்திகளுக்கு உதவியாக மாற்றியுள்ளன. நாம் இழந்த மாற்றுக் கலாச்சாரக் கூறுகளைத் தமிழ்ப்பண்பாட்டிலிருந்தே தேடி எடுத்துப் பெற்று சமத்துவ சகோதரத்துவ சமுதாயத்தை உருவாக்குவோம், மக்கள் கலாச்சாரத்தைக் காப்போம்.

சமூகம்