இந்தியாவில் கல்வியின் வி(நி)லை

indhiyaavil-kalviyin-nilai1
இந்தியாவில், தமிழகத்திலும் கல்வி எப்படி இருக்கிறது என்பது எல்லாருக்கும் தெரியும். குறிப்பாக மாதம் ரூ.100 கொடுக்கமுடியாமல் துன்பப்படும் கிராமத்து ஏழைக்கும், மறுநாள் காலை விண்ணப்பம் வாங்க, நள்ளிரவுக்கு முன்னிருந்தே தான் நல்ல நிறுவனம் என்று நம்பும் ஒன்றில் குழந்தையைச் சேர்க்கப் பள்ளி வாசலில் காத்துக்கிடக்கும் சென்னை மத்தியதர வகுப்பினனுக்கும் தெரியும்.

ஆனால் நமது கல்வியாளர்கள், அரசியல்வாதிகள், பொருளாதார நிபுணர்கள் ஆகியோர் இந்தியாவின் மக்கள் தொகை ஈவைப் பற்றிப் பெருமைப்படுகிறார்கள். அதாவது இந்தியாவில் வேறுவித வளங்கள் இல்லாவிட்டாலும் உழைத்து ஆதாயம் தேடிக் கொடுக்கக்கூடிய மக்கள்தொகை இருக்கிறது என்கிறார்கள். ஆனால், நாம் இப்போது வைத்திருக்கும் உயர்கல்வி முறைப்படி, இந்த ஆதாயம், விரைவில் ஒரு சாபமாக மாறிவிடும். இந்தியாவில் உயர்கல்வி எப்படிப் பணமயமாக்கப்படுகிறது என்பதை விரைவில் அரசாங்கம் நன்கு கவனித்து நடவடிக்கை எடுக்கவேண்டிய நேரம் இது. இப்போது விட்டுவிட்டால் பின்னால் பிடிக்கமுடியாது.

thaniyaar-palligal5
இந்தப் பணத்தில் பெரும்பகுதி அரசியல்வாதிகளுக்கும் அதிகாரவர்க்கத்தினருக்கும்தான் செல்கிறது. அவர்கள்தானே எல்லா நிறுவனங்களையும் கையில் வைத்திருக்கிறார்கள்?

எங்கள் காலத்தில் கல்வி என்பது மேன்மையான நற்றொழிலாக (புரொஃபெஷன்) இருந்தது. ஒரு பள்ளியையோ கல்லூரியையோ ஏற்படுத்துவது ஒரு புனிதச் செயலாகக் கருதப்பட்டது. அப்போதெல்லாம் தலைக்கூலிக் கட்டணமோ (கேபிடேஷன் ஃபீ) கட்டாய அன்பளிப்புகளோ (டொனேஷன்கள்) முதுகெலும்பை முறிக்கும் மிகுதியான கட்டணங்களோ கிடையாது. தனிப்பட்ட டியூஷன்களுக்குச் செல்லும் மாணவர்களுக்கு போதித்த ஆசிரியர்கள் தோல்வியடைந்தவர்களாக கருதப்பட்டார்கள்.

இன்று கல்வி ஒரு பெரிய பெருவணிகமாக மாறிவிட்டது.

குழந்தை விளையாட்டுநிலை-ப்ரிகேஜி-ரூ.36,000 முதல் 60,000 வரை

கேஜி வகுப்புகள்-ரூ.30,000 முதல் 5 லட்சம் வரை டொனேஷன், ரூ.2000-10000 மாதக்கட்டணம்

11ஆம் வகுப்பு-ரூ.2 முதல் 5 லட்சம் வரை அன்பளிப்பு, கட்டணம் வேறு

மருத்துவம்-ரூ.30-60 லட்சம் டொனேஷன்

மருத்துவம்-பிஏஎம்ஸ் முதலிய பிற-ரூ.3-8 லட்சம் அன்பளிப்பு

பொறியியல்-ரூ.2-6 லட்சம் அன்பளிப்பு

நிர்வாகம் (எம்பிஏ)-ரூ.2-10 லட்சம்

மருத்துவம்-உயர்கல்வி (பிஜி)-ரூ.1-4 கோடி

நிர்வாகம் (பிஜி-உயர்கல்வி)-ரூ.10-20 லட்சம் அன்பளிப்பு

இப்படிக் கல்வி இன்று விற்கப்படுகிறது. விலைகொடுக்க முடிந்தவர்கள் இவற்றில் கல்வி பெறலாம். இல்லையென்றால் எப்படியோ போங்கள், உங்களைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை என்று அரசாங்கம் சொல்கிறது. இம்மாதிரிக் கல்வி விற்கப்படுவதால் சமூகத்திற்கு எவ்வளவு செலவாகிறது என்பதை சுமாராகக் கணக்கிட்டுப் பார்க்கலாம்.

சமூகத்திற்கு ஆகும் செலவு:

பெரிய நகரங்களில் அன்பளிப்பு அதிகம். கான்வெண்டுகள், ஆங்கிலவழிக் கல்வி நிறுவனங்கள், நல்ல தரமான கல்வியளிக்கும் நிறுவனங்களில் சேர்க்க எல்லாரும் ஆசைப்படுகிறார்கள். ஆனால் இம்மாதிரி நிறுவனங்கள் குறைவு, அதனால் பணத்தோடு அதிகாரமும் அரசியல் தொடர்பும் இணைந்தவர்கள் இவற்றைப் பெறுகிறார்கள். இது சமூகத்தில் ஒரு வளைந்த போக்கை (skew) ஏற்படுத்துகிறது.

இந்தியாவில் இப்போது 125 கோடி மக்கள்தொகை. 2013இல் 1000 பேருக்கு 2.5 குழந்தைகள் பிறக்கின்றன என்று அரசு அறிக்கை சொல்கிறது. அதாவது ஆண்டுக்கு இரண்டரைக் கோடி கூடுதலாக மக்கள் தொகையில் சேர்கிறது.

125 கோடிப்பேரில், 30% நகர்ப்புற வாசிகள். அதாவது 37.5 கோடிப்பேர் இந்தியாவில் நகரங்களில் வசிக்கிறார்கள்.

ஓராண்டில், 1000 பேருக்கு 2,5 குழந்தைகள் வீதம் பிறக்கின்றன என்றால் நகர்ப்புறங்களில் பிறக்கின்ற 75 லட்சம் குழந்தைகளுக்கு கல்வி வசதி தேவை. இவர்களில் 80% கீழ்மத்தியதர, ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் முனிசிபல், அரசு பள்ளிகளுக்குச் செல்கிறார்கள். அங்கு இந்த அன்பளிப்பு, தலைக்கூலி கொடுமையெல்லாம் இல்லை.

மேற்கூறிய குழந்தைகளில் 20% பேர்-15 லட்சம் பேரின் பெற்றோர்தான் டொனேஷன் தரத் தயாராக இருப்பவர்கள். சென்னையில் ரூ.30,000 முதல் 5 லட்சம் வரை அன்பளிப்புத் தரத்தயாராக இருக்கிறார்கள். அதுவும் ஆங்கிலக்கல்வி மட்டுமே தேவை, தமிழ் வேண்டாம் என்று கூறி. சராசரி ஒரு பிள்ளைக்கு ரூ.1 லட்சம் என்று வைத்துக்கொண்டால், ஆண்டுக்கு ரூ.15000 கோடி கல்விநிறுவனங்களை நடத்தும் முதலாளிகளிடம் சேர்கிறது. நாம் கொடுக்கும் பணம் நல்ல பணம்தான், ஆனால் அது முதலாளியிடம் சென்றவுடனே கருப்புப் பணமாகிவிடுகிறது. ஏனென்றால் யாரும் எந்தத் தொகைக்கும் கணக்குக் காட்டப் போவதில்லை.

2. 11ஆம் வகுப்பு அடுத்தநிலை. நல்ல கல்லூரியைத் (பிறமாநிலங்களில் தனிக் கல்லூரிகளில்தான் 11-12ஆம் வகுப்புகள் உள்ளன. தமிழகத்தில் என்றால் ஹையர் செகண்டரி பள்ளிகள். இவற்றில் நல்ல நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால், குறைந்தது ரூ.2-5 லட்சம் தேவை.

சென்னையில் ஒரு லட்சம் சீட்டுகள் இருப்பதாக வைத்துக்கொள்ளலாம். பெரும்பாலும் நல்ல மதிப்பெண் வாங்கியவர்கள் பட்டியலில் இருப்பவர்கள் அன்பளிப்பு இன்றிச் சேர்ந்துவிடுவார்கள். பிறருக்கு மேனேஜ்மெண்ட் கோட்டா. இது இருக்கும் இடங்களில் 15% என்றால், 15000 சீட்டுகள். ரூ.2 லட்சம் சராசரி அன்பளிப்பு என்றால், 300 கோடி கருப்புப் பணம். இந்தியா முழுவதும் பம்பாய் தில்லி போன்ற பெருநகரங்கள் உள்படக் கணக்கிட்டால், இந்தத் தொகை ரூ.10,000 கோடி வரும் என்கிறார்கள்.

3. கல்லூரிகள்:

indhiyaavil-kalviyin-nilai3
மருத்துவத்திற்கு மட்டும் இந்தியாவில் 50000 இடங்கள் உள்ளன. நுழைவுத்தேர்வுகள் மூலம் 60% நிரப்பப்படுகிறது. மீதியிருக்கும் 40%, மேனேஜ்மெண்ட் இடங்கள், என்ஆர்ஐ இடங்கள். சராசரியாக ஒரு சீட்டுக்கு 40 லட்சம் அன்பளிப்பு என்று வைத்துக் கொள்வோம். 50000 மாணவர்களில் 40% இருபதாயிரம் பேர். ஓராண்டுக்கு 8000 கோடி இவர்களால் சேரும் பணம். இது எம்பிபிஎஸ் படிப்புக்கு மட்டுமே.

BDS, MDS, BHMS, BAMS, BPT, MPT, D Pharm, B Pharm, M Pharm, B.Sc, PBC, GNM, M.Sc (Nursing)போன்ற பிற படிப்புகளுக்கு ரூ.3-8 லட்சம் வரை வாங்கப்படுவதாகச் சொல்கிறார்கள். இது இங்கே கணக்கில் சேர்க்கப்படவில்லை.

பொறியியல் கல்விக்கு இந்தியா முழுவதும் ஏறத்தாழ 15 லட்சம் இடங்கள். 3350 பொறியியல் கல்லூரிகள். தமிழகத்தில் மட்டும் 2.36 லட்சம் இடங்கள். ஆந்திராவில்தான் பொறியியல் கல்லூரிகளும் இடங்களும் மிக அதிகம்-3.40 லட்சம் இடங்கள்.

இவர்களில் 20% பேர் நிச்சயமாக மேனேஜ்மெண்ட் கோட்டாவில் சேர்பவர்கள்-சுமார் 3 லட்சம் இடங்கள். ஓர் இடத்திற்கு ரூ.3 லட்சம் சராசரி என்றால், ரூ.90000 கோடி.

நிர்வாகத்துறை, பிபிஏ, பிஎம்எஸ்-மொத்தம் 1,50,000 இடங்கள். நல்ல நிறுவனங்களைப் பற்றி மட்டுமே இங்குப் பேசுகிறோம். 20% மேனேஜ்மெண்ட் கோட்டா. ஒரு சீட்டுக்கு ரூ. 2 லட்சம். மொத்தம் ரூ.600 கோடி,

மேற்பட்டப்படிப்பு-எம்டி, எம்எஸ்-இவற்றிற்கு 11000 இடங்கள் உள்ளன, 300க்கு மேற்பட்ட கல்லூரிகள் இவற்றை நடத்துகின்றன.

இவற்றில் சேர்பவர்களில் 50 விழுக்காடு அகிலஇந்தியக் கோட்டா, 25 விழுக்காடு மாநிலக் கோட்டா. மீதமுள்ள 25% 2800 இடங்கள். சராசரி 1 கோடி ஒரு சீட்டுக்கு விலை வைத்தாலும் 2800 கோடி. மாநில, மத்திய கோட்டாக்களும் அரசியல் வாதிகளால் விற்கப்படுகின்றன என்பது யாவரும் அறிந்தது. அதைப் பற்றியும் இங்கே பேசவில்லை.

நிர்வாகம்-எம்பிஏ-2 லட்சம் இடங்கள். எம்பிஏ படிப்பில் 80% இடங்கள் அவ்வளவாகப் பிரபலமாகாத கல்லூரிகளில் இருக்கின்றன. என்றாலும் இவற்றிலும் குறைந்தது இரண்டுலட்சரூபாய் கட்டணம் வசூலிக்கவேபடுகிறது.

ஐஐஎம்(IIMs-Indian Institute of Managements)களில். 20000 இடங்கள் உள்ளன. இவற்றில் டொனேஷன் கிடையாது, கட்டணம் பிறவற்றை விட அதிகம். பிற 20000 இடங்கள், இவற்றுக்கு நிகரான நிறுவனங்களில் உள்ளன. 8-20 லட்சம் ரூபாய்க்கு ஓர் இடம் வீதம் விற்கப்படுகின்றன. சராசரி 10 லட்சம் ஒரு சீட்டுக்கு அன்பளிப்பு என்றாலும் 2000கோடி.

இப்போது மொத்தத்தைக் கூட்டிப் பார்ப்போம்.

ஜூனியர் கேஜி-15000 கோடி

பதினொன்றாம் வகுப்பு-10000 கோடி

எம்பிபிஎஸ்-9000 கோடி

பிஇ/பிடெக்-9000 கோடி

நிர்வாகம்-2600 கோடி

மருத்துவம்-2800 கோடி

ஆக மொத்தம் 48400 கோடி

இது இந்திய ஜிடிபியின் அளவில் 0.8%.

இது மனிதவள மேம்பாட்டுத் துறைக்குச் சென்ற ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியில் 73,5% (2013-14) சென்ற ஆண்டு மனித வள மேம்பாட்டுத் துறைக்கு ஒதுக்கிய நிதி ரூ. 65867 கோடி.

மேலும் பல படிப்புகளிலும் அன்பளிப்பும் தலைக்கூலியும் உண்டு. அவற்றை இங்கே நாம் சேர்க்கவில்லை.

சரி, இந்தப் பணமெல்லாம் எங்கே போகிறது?

அதிகாரபூர்வமாக கல்வி நிறுவனங்கள் வாங்கும் அன்பளிப்புகளுக்கோ தலைக்கூலிப் பணத்துக்கோ கணக்குக் கிடையாது (இது முற்றிலும் கருப்புப்பணம்). ஆகவே அரசாங்கத்தின் வருமானத்திலோ கணக்கிலோ அதிகாரபூர்வமாக இந்தப்பணம் என்பதே கிடையாது.

கல்வித்துறையில் மட்டும் உருவாகும் கருப்புப் பணம் இது.

நமது கல்வித்துறை எப்படி வளர்ச்சியடைகிறது என்பதை இதுவரை எந்த அரசாங்கமும் கண்காணிக்காமல் விட்டது, நம் இந்திய சமூகத்தின் பெரும்பகுதிக்கு எப்படித் தீங்கிழைக்கிறது என்பதைக் காணலாம்.

இந்தப்போக்கு இந்திய சமூகத்தில் தாறுமாறான விலகல்களை, ஏறுமாறுகளை, ஏற்றத்தாழ்வுகளை உருவாக்குகிறது, இதனால் இந்தியப் பொருளாதாரத்திற்குத் தீங்கும் ஏற்படுகிறது. முக்கியமான ஏறுமாறுகள் சிலவற்றைக் காண்போம்.

1. வரி ஏய்ப்பு-இந்தப் பெரும் பணத்திற்கு இந்திய அரசாங்கத்திற்கு வரி செலுத்தப்படுவதில்லை. இந்தியப் பொருளாதாரம் முழுவதுமே கருப்புப் பணம் நிறைந்ததுதான். ஆனால் இந்தக் கல்வித்துறை அன்பளிப்புகள், எதிர்காலத் தலைமுறையின்மீது மிகுந்த சீர்கேடுகளை ஏற்படுத்தக்கூடிய கருப்புப் பணம் உருவாக்கும் எந்திரம்.

2. ஒழுங்கான இடைவெளிகளில் (ஆண்டுதோறும்…) தனிமனிதர்களிடமிருந்து வாங்கப்படும் பணம் சிலரது கைகளில் குவிகிறது. தங்கள் குழந்தைகளுக்குச் சிறந்த கல்வி அளிக்கவேண்டுமென்பது மத்தியதர வகுப்பினரின் கவலை. எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் தங்கள் எதிர்காலச் சேமிப்பிலிருந்து அன்பளிப்பாகக் கொடுத்து, பலவேறு கல்விநிறுவனங்களில் இடம்பெறத் தயாராக இருக்கிறார்கள்,

3. இந்தப் பணம் ரியல் எஸ்டேட்டில் குவிக்கப்படுகிறது. தேர்தல்களுக்குச் செலவிடப்படுகிறது. அல்லது வெளிநாட்டு வங்கிகளில் சேமிக்கப்படுகிறது. ரியல் எஸ்டேட் ஓர் ஆக்கமற்ற துறை. வளர்ச்சியற்ற துறை. (வாங்கிப்போட்டால் அவ்வளவுதான். தொழிற்சாலைகள் போல ஆக்கம், விளைவு, உற்பத்தி போன்றவை கிடையாது.) இது மட்டுமல்ல, செயற்கையாக இது நிலங்களின் விலைகளை ஏற்றி அங்கும் விலைவாசி உயர்வையும் செயற்கையாக ஏற்படுத்தி, பணவீக்கம், பணவிலகல் உருவாகும் நிலையை ஏற்படுத்துகிறது.

வெளிநாடுகளுக்கு இந்தப் பணம் சென்றாலோ, இந்தியப் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு மாறாக, அந்தந்த வளர்ந்த நாடுகளின் பொருளாதாரத்திற்கு இது உதவிசெய்கிறது. இந்தியா ஏழைநாடாக இருக்கும்போது, நாம் ஸ்விட்சர்லாந்துக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் வளர்ச்சிக்கு உதவிசெய்ய வேண்டுமா?

5. படிப்புக்குச் செலவிடும் பணத்தை மாணவர்கள் ஒரு முதலீடாக நினைக்கிறார்கள். இதுதான் மிகப் பெரிய பாதிப்பு. இந்த முதலீட்டை எப்படியாவது உடனடியாக (பெரும்பாலும் திருமணத்திற்கு முன்பே) எடுத்துவிடவேண்டுமென்று நினைக்கிறார்கள். இது ஒவ்வொரு துறையிலும் ஒழுக்கமற்ற செயல்களை உருவாக்குகிறது. எப்படியாவது போட்ட பணத்தை எடுத்துவிடவேண்டுமென்று, உதாரணமாக ஒரு கட்டடக்கலைப் பொறியாளர் என்றால், அதிகக் கட்டணம் வசூலித்தல், லஞ்சம் வாங்குதல் போன்றவை நிகழ்கின்றன. (இதன் விளைவை இப்போதுகூட நாம் சென்னையில் இடிந்து விழுந்த இரண்டு பலமாடிக் கட்டடக் குடியிருப்புகளில் கண்டோம்.)

இன்று மருத்துவத்துறை முற்றிலும் இப்படித்தான் இயங்குகிறது. கட்டுப்பாடற்ற, கட்டுப்பாட்டுக்கு உட்படுத்த முடியாத மாஃபியா கும்பல்.

6. பணத்தைக் கொடுத்துவிட்டால் மாணவன், பட்டம் என்பது தனக்குக் கட்டாயம் கிடைக்கவேண்டிய ஒன்று, தான் படித்துவாங்கவேண்டியது என்று நினைப்பதில்லை. பணம் கட்டியாயிற்று, ஆகவே மூன்றாண்டுகளோ, நான்காண்டுகளோ போனால் நமக்கு வேலை கிடைத்துவிடும் என்றும் நம்பிக்கை. அதனால் ஆசிரியர்களும் ஒழுங்காகச் சொல்லித்தருவதில்லை, மாணவர்களோ படிப்பதேயில்லை. இப்படிப்பட்ட நிலையில் கல்வித் தரம் எங்கிருக்கும்? கல்வி கேள்விக்குறியாகிறது.

7. இந்தக் கருப்புப் பணத்தில் ஓரளவு பங்குவர்த்தகத்திலும் (ஷேர் மார்க்கெட்), சந்தைப்பொருள் வர்த்தகத்திலும் (கமாடிட்டி மார்க்கெட்) முதலீடு செய்யப்படுகிறது. நம் நாட்டின் சந்தைப்பொருள் வர்த்தகம்தான் முக்கியமாக உணவுப்பொருள்களின் விலையேற்றத்துக்குக் காரணமானது. உணவுப்பொருள்களைச் சட்டத்துக்குப் புறம்பாகக் குவித்துவைப்பதற்கும் இது உதவுகிறது. இதனால் உணவுப்பொருள்களில் திடீர் திடீரென்று விலைவாசி உயர்வு ஏற்படுகிறது. நாம் வெங்காயம் இந்த மாதம் ரூ.100 கிலோ விற்கிறதே என்று கவலைப்படுகிறோம், சிலமாதங்களில் ரூ.20க்கும் வந்துவிடுகிறது. இவையாவும் மிக நுணுக்கமான அரசியல் ஆதரவுடனே செய்யப்படுகின்றன.

8. இந்தப் பணம், இந்திய அரசாங்கத்தின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு ஒதுக்கப்படும் பணத்தில் ஏறத்தாழ 73.5 என்று முன்பே சொன்னோம். இந்தப் பணத்தை ஒரே ஒரு ஆண்டுக்கு மட்டும் அடிப்படைக் கல்வித்துறையில் (பிரைமரி அல்லது பேசிக் கல்வி) செலவிட்டால், இந்தியாவின் எல்லா கிராமங்களிலும் நல்ல வசதியுள்ள அடிப்படைக் கல்வி நிறுவனங்களைத் திறந்து நடத்த முடியும்.

அரசாங்கத்தின் கடமைகள்:

indhiyaavil-kalviyin-nilai5
1. மனிதவள மேம்பாட்டுத்துறை-இந்தக் கொள்ளையை எப்படி நிறுத்துவது என்பதை இந்தத் துறைதான் யோசிக்கவேண்டும். கல்வியை முன்னேற்றவும், தரமான போதனையை அளிக்கவும் கல்வித்தரத்தை உயர்த்தவும் எப்படி கொள்கைகளை உருவாக்கி ஆற்றலை நெறிப்படுத்துவது என்பது பற்றி இவர்கள் சிந்தித்தால் நல்லது. குறிப்பாக முற்றிலும் தனியார் மயமாகிவிட்ட கல்வியைச் சற்றேயாவது சரிப்படுத்தியே ஆக வேண்டும். இப்போதே நம் கல்வி வெறும் மனப்பாடக் கல்வியாகி, ஆக்கபூர்வமான சிந்தனையை உருவாக்காமல் சந்தி சிரிக்கிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் ஐந்தாம் வகுப்புக் குழந்தைகளுக்கு இருக்கும் சிந்தனையறிவுகூட இங்கே பட்டம் வாங்கியவர்களுக்கு இருப்பதில்லை.

2. உடல்நல அமைச்சகம்-வெகுமக்களுக்கு நல்லமருத்துவத்தை அளிக்கும் விதமாக டாக்டர்களின் கொள்ளை மாஃபியாவை எப்படித் தடுப்பது, சுற்றுச்சூழலை எப்படி மேம்படுத்துவது என்பதுபற்றி இவர்கள் சிந்திக்கவேண்டும்.

3. நிதி அமைச்சகம்-மனிதவள அமைச்சகம், உடல்நல அமைச்சகம் இவற்றால் எதுவும் செய்ய இயலாவிட்டால் குறைந்தபட்சம் நிதி அமைச்சகம் இந்தக் கொள்ளையை அதிகாரபூர்வமாக்கி அதன்மீது வரியை விதிக்கவாவது செய்யட்டும். 33% கார்ப்பரேட் வரி என்றால், வருடத்துக்கு ரூ.16,000 கோடி வரி கிடைக்கும். இதனைக் கல்வித் துறை மேம்பாட்டுக்குப் பயன்படுத்தலாம்.

4. பிரதமர் அமைச்சரகம்-நரேந்திர மோடியோ அல்லது வேறு எவரோ, யார் பிரதமராக இருந்தாலும் அவருக்கு இந்தநிலை தலைவலிதான். இந்த ஒன்றை மட்டும் கட்டுப்படுத்தினாலே (எப்படி என்று தம் ஐஏஎஸ் அதிகாரிகளையெல்லாம் வைத்து மண்டையை உடைத்துக்கொள்ளட்டும்) சமூகத்திலும் பொருளாதாரத்திலும் பல ஏற்றத்தாழ்வுகளையும் சீரின்மைகளையும் கட்டுப்படுத்தலாம்.

சமூகம்