இலக்கிய இயக்கங்கள்

இலக்கிய இயக்கங்கள்
குறிப்பிட்ட ஒரு காலப்பகுதியில் குறிப்பிட்ட அளவு இலக்கியம் ஒரு மொழியில் தோன்றுவதற்கு ஒரே மாதிரியான ஓர் இலக்கியப் போக்கு காரணமாக இருந்தால் அதனை ஓர் இலக்கிய இயக்கம் எனலாம். ஓர் இலக்கிய இயக்கம் ஆதிக்கம் செலுத்தும் காலப்பகுதியில் ஏறத்தாழ ஒரே மாதிரியான இலக்கிய வடிவம், அமைப்பு, இலக்கியக் கருப்பொருள்கள் ஆகியவை இலக்கியங்களில் பயில்கின்றன.
பிறகு காலம் மாறுகிறது. கால மாறுதலுக்கேற்ப மக்களின் வாழ்நிலைகளும் மாறுகின்றன. மக்களின் வாழ்நிலைகள் மாறும்போது அவர்களது கருத்தியல்களும் மாறுகின்றன. அதாவது வாழ்க்கை பற்றியும் பிறவற்றைப் பற்றியும் மக்கள் கொண்டிருக்கும் எண்ணங்களும் மாறுகின்றன. அதனால் இலக்கியப் போக்குகளும் மாறுகின்றன. அதனால் ஒரு மொழியின் இலக்கிய இயக்கங்களும் காலப்போக்கில் மாறுகின்றன. இலக்கியத்தில் எந்த இயக்கமும் நிரந்தரம் இல்லை. சாசுவதமாக நிலைத்துவிட்டால் இயக்கமும் இல்லை.
இலக்கிய இயக்கங்களைப் பொதுவாக அக இயக்கம், புற இயக்கம் என்று பிரித்துக் காண்பார்கள். சமுதாயத்தின் தாக்கம் அதிகமின்றி மொழியின் ஊடாக ஏற்படும் மாற்றங்களினால் ஏற்படும் இயக்கங்களை அக இயக்கங்கள் எனலாம். சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களினால், புறத்தாக்குதலினால், மொழிக்குள் ஏற்படும் இயக்கங்களைப் புற இயக்கங்கள் எனலாம். செவ்வியல் இயக்கம், குறியீட்டு இயக்கம், ரொமாண்டிக் இயக்கம் போன்றவற்றை அக இயக்கங்கள் எனலாம். தேசிய இயக்கம், பெரியாரியம், மார்க்சியம் போன்ற சமூக இயக்கங்கள் காரணமாக மொழிக்குள் ஏற்படும் இலக்கிய விளைவு களைப் புற இயக்கங்கள் எனலாம்.
தமிழில் பலவித இலக்கிய இயக்கங்கள் மாறிமாறி எழுந்துள்ளன என்பது மேலோட்டமாக நோக்குவோர்க்கும் புரியும். மேலும் இரண்டாயிரம் ஆண்டு களுக்கும் மேலாக வரலாறு உடைய ஒரு மொழி மாறாமல் அப்படியே இருக்குமா? சங்ககாலப் பகுதியைப் பொதுவாக மதுரையில் அமைந்த தமிழ்ச்சங்கம் என்ற ஒரு இலக்கிய நிறுவனத்தை வைத்துச் சங்க இலக்கியம் என்று கூறுவது மரபாக உள்ளது. அதனை ஓர் இயக்கமாகக் காண்பதே முறை. சங்க இலக்கியத்திற்கு உருக்கொடுத்த பல நூற்றுக் கணக்கான புலவர்களும் தொண்டை நாடு முதல் குமரிமுனை வரை பலவேறிடங்களில் வசித்தவர்கள். இவர்கள் மிகுதியாகப் பயணம் செய்பவர்களாகவும் இருந்தனர். சான்றாக, தென்கோடி இரணிய முட்டத்தைச் சேர்ந்த பெருங்கௌசிகனார், தமிழகத்தின் வடபகுதியிலுள்ள செங்கண்மாவுக்குப் (இப்போதுள்ள செங்கம்) பயணம் செய்து நன்னன்சேய் நன்னனைப் பாடியுள்ளார் (மலைபடு கடாம்). எனவே இவர்கள் அனைவரும் தமிழ்ச்சங்கத்தில் பங்கேற்ற புலவர்களாக இருந்திருத்தல் இயலாது. இவர்கள் தமிழகத்தின் பலவேறு பகுதிகளை, பல வேறு நூற்றாண்டுகளைச் சேர்ந்தவர்கள். (ஏறத்தாழ கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுவரை.) இவர்கள் எல்லாரும் ஒரே மரபினைப் பின்பற்றிப் பாடியுள்ளனர்.
ஆகவே, ஒரே மாதிரியாக அகம் புறம் என்ற அடிப்படையில் அமைந்த, ஒரே மாதிரியான யாப்பு, வடிவம் ஆகியவற்றைக் கொண்ட ஓர் தமிழ்ச் செய்யுள் இயக்கம் அக்காலத்தில் பரவலாக இருந்திருந்தால் மட்டுமே இம்மாதிரி ஒரு தமிழ்இலக்கியத் தொகுதி நமக்குக் கிடைத்திருக்க இயலும். இந்த இயக்கத்தின் பொதுவான விதிகளைத்தான் தொல்காப்பியத்தின் பொருளதி காரம் நமக்கு எடுத்துரைக்கிறது. இதுதான் தமிழ் இலக்கியத்தின் முதல் இயக்கம். செவ்வியல் இயக்கம் என்று இதனைக் கூறலாம். இவ்வியக்கத்தின் விளைவுகள்தான் எட்டுத்தொகை பத்துப்பாட்டு ஆகிய இரு தொகுதிகளாக நமக்குக் கிடைத்துள்ளன. இந்தியாவிலேயே மதச்சார்பற்ற ஓர் இயக்கமாகவும் பழந்தமிழின் செவ்வியல் இயக்கம் இருந்தது. இதற்கு மாறாக, சமஸ்கிருதம் ஒரு மத இயக்கமாகவே, வேதகாலம் முதலாகக் கால்கொண்டது.
தமிழ்நாட்டில் வைதிகத்தைவிட ஜைனம், பௌத்தம் போன்ற மதங்களே முதலில் பரவின என்று தோன்றுகிறது. ஜைன, பௌத்த மத இயக்கங்களே, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், ஐம்பெரும் காப்பியங்கள் ஆகியவற்றின் தோற்றத்திற்குக் காரணமாக அமைந்தன. ஐம்பெரும் காப்பியங்களில் சமண பௌத்தக் காப்பியங்கள் மட்டுமே இருப்பதைக் காணலாம். சிலப்பதிகாரம், சமணம், மணிமேகலை பௌத்தம், சிந்தாமணி சமணம், குண்டலகேசி பௌத்தம், வளையாபதி சமணம். ஐஞ்சிறு காப்பியங்களிலும் சமண பௌத்த நூல்களே உள்ளன. இவற்றில் சேர்க்கப்படாத பெருங்கதை சூளாமணி போன்ற காப்பியங்களும் சமயக் காப்பியங்களாகவே உள்ளன.
மூன்றாவதாகத் தமிழில் தோன்றிய இயக்கம் பக்தி இயக்கம். காரைக்காலம் மையார், கண்ணப்ப நாயனார் போன்ற சைவ நாயன்மார்கள் காலம், முதலாழ் வார்கள் காலம் இவற்றை வைத்துப் பார்க்கும்போது ஏறத்தாழ கி.பி. ஐந்தாம் நூற்றாண்டினை இதன் தொடக்கம் எனலாம். அவ்வாறாயின், கி.பி. இரண்டாம் நூற்றாண்டு முதலாக ஐந்தாம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியை நாம் இடைப்பட்ட ஜைன, பௌத்த மத இயக்கக் காலமாகக் கருதமுடியும். இதுதான் கீழ்க்கணக்கும், முதற்காப்பியங்களும் எழுந்த காலம்.
பக்தி இயக்கம் முதலில் வைதிக மரபுக்கு எதிரான இயக்கமாகத் தோன்றி, பிறகு காலப்போக்கில் அதற்கு அனுசரணையான இயக்கமாக மாறியது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பக்தி இயக்கம் முதன்முதலில் தோன்றி யது என்பதில் நமக்கு நியாயமான பெருமை உண்டு. “யாகக் கிரியைகள் வேண்டாம், மந்திரங்கள் வேண்டாம், சாதி வேறுபாடு காணத் தேவை யில்லை, பக்தி மட்டுமே இருந்தால் போதும் இறைவனை அடையலாம்” என்ற கொள்கைகளோடு தோன்றிய இயக்கம் இது. எத்தனையோ நாயன்மார்களின் ஆழ்வார்களின் வரலாறுகள் சாதி வேறுபாட்டினை பக்தி இயக்கம் ஏற்கவில்லை என்பதைக் காட்டுகின்றன.
“சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து தரணியொடு வானாளத் தருவரேனும்/ மங்குவார் அவர் செல்வம் மதிப்போமல்லோம் மாதேவர்க்கே காந்தர் அல்லராகில்/ அங்கமெலாம் குறைந்தழுகு தொழுநோயராய் ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்/ கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்பராகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே” (திருநாவுக்கரசர்)
என்பது போன்ற பாக்கள் பக்தி இலக்கியம் குறிப்பிடத்தக்க அளவு எதிர்ப்புத் தன்மையைக் கொண்டிருந்தது என்பதை விளக்கும். நாயன்மார்கள் தலங்கள் தோறும் சென்று ஆங்காங்குள்ள இறைவனைப் பாடினர். பின்னர் அவர்கள் பாடல்கள் நம்பியாண்டார் நம்பியால் தொகுக்கப் பெற்றன. அதுபோலவே பன்னிரு ஆழ்வார்களின் பாக்களும் நாலாயிரப் பிரபந்தம் என்ற பெயரில் தொகுக்கப்பட்டன.
வைணவத்தின் மிக முக்கியமான ஆழ்வாரான நம்மாழ்வாரே பிராமணர் அல்ல. ஆனால் பக்தி இயக்கத்தின் இறுதிக் காலமான பன்னிரண்டாம் நூற்றாண்டு அளவில் அது வைதிக மதத்தின் கொள்கைகளையும் சாதியையும் முற்றிலுமாக ஏற்றுக் கொண்டுவிட்டது. திருநாளைப் போவார் புராணம் இதைக் காட்டும். பக்தி இயக்கத்தினால் தமிழில் சைவத் திருமுறைகள், வைணவ நாலாயிரப் பிரபந்தம், கம்பராமாயணம், திருத்தொண்டர் புராணம் போன்ற எத்தனையோ சிறந்த இலக்கியங்கள் கிடைத்தன. பிற்காலத்திலும் ஈடு உரை போன்ற சிறந்த உரைகள் தோன்ற இவ்வியக்கம் காரணமாக இருந்தது.
இதற்குப் பின் (நான்காவதாகத்) தோன்றியது சிற்றிலக்கிய இயக்கம். முத்தொள்ளாயிரம், நந்திக் கலம்பகம் போன்ற பழைய இலக்கியங்களிலேயே சிற்றிலக்கியத் தோற்றத் திற்கான அடிப்படைகள் காணப்படுகின்றன. என்றாலும் பேரரசுச் சோழர்களின் பிற்காலம், பிற்பாண்டியப் பேரரசுக்காலம் தொடங்கியே சிற்றிலக்கியங்கள் மிகுதியாகத் தோன்றலாயின. ஏறத்தாழ பன்னிரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒட்டக்கூத்தர் புகழேந்தி காலம் முதலாகத் தொடங்கி, பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை இந்த இயக்கம் நீடித்தது. நூற்றெட்டுவகைப் பிரபந்தங்கள்-அதாவது சிற்றிலக்கியங்கள் இருப்பதாகக் கூறுவது மரபு. எனினும் சிலவகைச் சிற்றிலக்கியங்கள் மட்டுமே போற்றப்படுகின்றன. அவற்றிலும் சிலவற்றுக்கு ஒவ்வொரு நூல் தலைமை சான்றதாக அமைந்துள்ளது. பரணிக்குக் கலிங்கத்துப் பரணி, தூதுக்குத் தமிழ்விடு தூது, குறவஞ்சிக்குக் குற்றாலக் குறவஞ்சி, உலாவுக்குத் திருக்கயிலாய ஞானவுலா, பள்ளுவுக்கு முக்கூடற்பள்ளு என்பதுபோலச் சொல்லிக் கொண்டே போகலாம்.
சிற்றிலக்கிய இயக்கத்தின் காலப்பகுதியோடு இன்னும் மூன்று இயக்கங்களின் காலப்பகுதிகள் பெரும்பாலும் ஒன்றுபடுகின்றன. ஒன்று, புராண இலக்கிய இயக்கம். இதில் தலபுராணங்களும் அடங்கும். மற்றொன்று தனிப்பாடல்கள் இயக்கம். மற்றொன்று சித்தர் இயக்கம். இவை சிற்றிலக்கிய இயக்கங்கள் தோன்றத் தொடங்கி ஓரிரு நூற்றாண்டுகள் பிற்பட்டு நிகழத் தொடங்கிப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை நீடித்தன.
சித்தர் இயக்கம் வெறும் சடங்குகளில் மூழ்கிப்போன பக்தி இயக்கத்துக்கு எதிராக எழுந்தது. திருமூலர் காலம் தொடங்கி தாயுமானவர், மஸ்தான் சாகிபு, வள்ளலார் வரை நீடித்த இயக்கம் இது. இராமலிங்க வள்ளலார் பாக்கள் சித்தர் மரபில் வந்தாலும் அவற்றில் சமூக நோக்கும் இடம்பெற்றிருந் தது. தமது வழியினைச் சுத்த சமரச சன்மார்க்கம் என்று அவர் அழைத்தார்.
புராண இயக்கம், பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற் புராணத்தில் தொடங்குகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் புராண நூல்களோடு நிறைவு பெறுகிறது எனலாம். மதம் சார்ந்த சிற்றிலக்கியங்களும் புராணங்களும் தல புராணங்களும் பெரிதும் வளர்வதற்கு மடங்கள் காரணமாக இருந்தன. தமிழ் நாட்டின் மத, பக்தி இயக்கங்கள் இறுதியாக மடங்களில் வந்து முடிந்தன எனலாம். ஏறத்தாழ 13ஆம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தர் சத்திமுற்றத் திருமடம், திருவிடை மருதூர் மாளிகை மடம், திருவானைக்கா ஆண்டார் எம்பிரானார் மடம், திருவாரூர் ஆசாரமழகியான் திருமடம் போன்றவை இருந்தன என்று தெரிகிறது. சாத்திர நூல்களை இயற்றிய சிவாசாரியார்களும் பல இடங்களில் மடங்களை நிறுவினார்கள். திருவாவடுதுறை, தருமபுரம், சூரியனார் கோயில், குன்றக்குடி போன்ற மடங்கள் தமிழ்சைவசாத்திரக் கல்விக்கு முதன்மை அளித்தன. தருமபுர ஆதீனத்தைச் சேர்ந்த குமரகுருபரர், மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் போன்ற நூல்களை எழுதியதோடு, காசி வரை சென்று அங்கும் தமிழ் மடங்களை அமைத்தார்.
தனிப்பாடல் இயக்கம் என்பதைத் தனியொரு இயக்கமாகக் கொள்ள முடியுமா என்பது ஓர் ஐயம். எனினும் காளமேகப் புலவர் காலம் தொடங்கி, பத்தொன்ப தாம் நூற்றாண்டின் வேதநாயகம் பிள்ளைவரை இதன் தாக்கம் நீடித்தது. எத்தனை எத்தனையோ கவிஞர்கள் (சிற்றிளம் பருவ பாரதியார் உள்படச்) சிறந்த தனிப்பாடல்களை இயற்றியுள்ளனர். புராண இயக்கம், தனிப்பாடல் இயக்கம் ஆகியவை விஜயநகரப் பேரரசுக் காலமுதலாக ஆங்கிலேயர் கால இறுதிவரை இருந்தவை.
பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் வணிகத்துக்கென இந்தியாவிற்குள் வந்தனர். இவர்களில் போர்ச்சுகீசியர், டச்சுக்காரர்கள், ஃபிரெஞ்சுக்காரர்கள், கடைசியாக ஆங்கிலேயர்கள்–நம் நாட்டைக் காலனிப்படுத்தவும் முனைந்தனர். இதன் விளைவாக ஏற்பட்டதுதான் தேசிய இயக்கம். இதனை இரு பிரிவுகளாகக் காணவேண்டும்.
முதற்காலப் பகுதியில் மருது சகோதரர்கள் சுதந்திரப் போராட்டத்திற்கான அறிக்கையை 1801 ஆம் ஆண்டு திருச்சி மலைவாசலில் ஒட்டினார்கள். அப்போதிருந்து தொடர்ச்சியாகத் தமிழகத்தில் சுதந்திரப் பேராட்டம் நடக்கலாயிற்று. முதலில் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றிய செய்திகள் நாட்டார் பாடல்களாகவே உருப்பெற்றன. கலியுகப் பெருங்காவியம், கட்ட பொம்மன் சண்டைக்கும்மி, பாஞ்சைக் கோவை, கட்டபொம்மன் கதைப்பாடல் போன்ற பல கதைப்பாடல்கள் இயற்றப்பட்டதாகத் தெரிகிறது.
ஆங்கிலேயரின் முறையான ஆட்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து சில மாற்றங்கள் நிகழ்ந்தன. பழைய நூல்கள் அச்சேறின. பத்திரிகைகள் பிறந்தன. உரைநடை வளர்ச்சி தொடங்கியது. நாவல் சிறுகதை போன்ற புதிய வடிவங்கள் பிறந்தன. மொழி ஆராய்ச்சி தோன்றியது. தொல்லியல் ஆய்வும் அகழ்வாய்வும் தொடங்கின. தமிழ் மொழிச் சிறப்பையும் பண்பாட்டுச் சிறப்பையும் உணர்ந்த பெரியோர் – வ. உ. சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா, வ. வே. சு. ஐயர், பாரதியார், வரதராஜுலு நாயுடு, திரு.வி.க. போன்றவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் இறங்கினர். இம்மாற்றங்களை யெல்லாம் ஒட்டுமொத்தமாகத் தமிழ் மறுமலர்ச்சி இயக்கம் என்ற பெயரால் குறிக்கலாம். இதனுடன் தேசிய இயக்கத்தின் இரண்டாம் பகுதி இணைகிறது.
பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை தமிழ் இலக்கியம், இறைவனைப் பாடுதல், அரசர்கள்-குறுநில மன்னர்கள், ஜமீன்தார்கள் உள்ளிட்ட மேன்மக்களைப் புகழ்ந்து பாடுதல் எனப் பாடாண் திணையாகவே இருந்தது. இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட மிக முக்கிய மாற்றம், தமிழ் ஓர் நவீன மொழியாக, நவீன இலக்கிய மொழியாக உருப்பெற்ற நிலை. இலக்கியம் ஒரு சிறு குழுவினர் அல்லது புலவர்கள் உருவாக்குவது, வாசிப்பது என்ற நிலை மாறியது. புலவர்கள் பிழைப்புக்காகப் புரவலர்களை அண்டி வாழுகின்ற நிலையும் மாறியது. பழங்காலப் புலவர்கள், இன்றைய எழுத்தாளர்கள் அல்லது படைப்பாளர்கள் ஆயினர். முற்காலப் புரவலர்களுக்கும் அரசர்களுக்கும் பதிலாக ஊடகங்களின் ஆதரவு இன்றைய படைப்புகளுக்குத் தேவையாயிற்று. தமிழ் இலக்கியத்தின் வாய்மொழிப் பாரம்பரியத்தில் புலவர்கள் பாடி அரங்கேற்ற, அதைக் கேட்பவர்கள் இருந்தனர். அவர்களுக்கு பதிலாக இப்போது வாசகர் கூட்டம் தோன்றி விட்டது. இவற்றால் இலக்கியத்தின் நோக்கம், பணி பற்றிய கொள்கைகளும் மாறின. இதற்குமுன், சமகால மனிதர்களைப் பற்றிக் கவலைப்படுவதாக இலக்கியம் இருக்க வேண்டும், சமகாலப் பிரச்சினைகளைக் கையாள வேண்டும் என்ற நோக்கு தமிழில் இருந்ததில்லை. இலக்கியம் சமகாலச் சமூகத்தைப் பற்றி, மக்களைப் பற்றி வருணிப்பதாகவும் கவலைகொள்வதாகவும் மாறியது இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட ஓர் அடிப்படை மாற்றம்.
சுப்பிரமணிய பாரதியார் 1882இல் பிறந்தார். சுதந்திரப் போராட்டமே தம்மை ஒரு தேசிய கவியாக மாற்றியது என்பதை அவர் உணர்ந்திருந்தார். முதன்முதல் தேசபக்திப் பாடல்களை இயற்றியவர் அவரே. 1908இல் வந்தே மாதரம், சுதந்திர தாகம், சுதந்திரப் பள்ளு போன்ற பாக்களை இயற்றினார். பாஞ்சாலி சபதம் சுதந்திரப் போராட்டத்தை மகாபாரதக் கதையின் வாயிலாகக் கூறிய ஒரு குறுங்காவியம். சுப்பிரமணிய சிவா, ஞானபாநு என்னும் இதழை நடத்தினார். ஏறத்தாழ இக்காலமுதல் சுதந்திரம் பெற்ற 1947வரை தொடர்ச்சியாகச் சுதந்திரப் போராட்டத்திற்கான இலக்கியங்கள் எழுதப்பட்டன. வ.வே.சு ஐயர் தேசபக்தன், பாலபாரதி போன்ற சஞ்சிகைகள் வாயிலாக எழுதி வந்தார். சுதந்திரப் போராட்ட காலம்தான் பத்திரிகைத் தமிழ் மிகுதியாக வளர்ந்த காலம்.
நாற்பதுகளின் இறுதியில் கல்கி கிருஷ்ணமூர்த்தி தேசிய இயக்கம் சார்ந்த நாவல்களை எழுதினார். அவற்றில் குறிப்பிடத்தக்கவை தியாக பூமி, அலை ஓசை. சுத்தானந்த பாரதியாரும் தேசியக் கவிதைகள் இயற்றியவர்களில் குறிப்பிடத் தக்கவர். காந்திகாலத்தின் கவிஞராகக் கருதப்பெற்றவர் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை. மிகுதியான சுதந்திரப் பாக்களையும், மலைக்கள்ளன் போன்ற நாவல்களையும், என் கதை என்னும் சுயசரிதையையும் அவர் எழுதியுள்ளார். பண்டிதை அசலாம்பிகை அம்மையார் காந்திபுராணம் என்னும் காவியத்தை வரைந்தார். கா.சி. வேங்கடரமணி, தேசபக்தன் கந்தன் போன்ற நாவல்களை எழுதினார். இவ்வாறு தமிழ் வளர்ச்சியில் தேசிய இயக்கம் ஒரு முக்கியப் பங்காற்றியுள்ளது.
ஏறத்தாழ 1940களில் தமிழ் நாடகங்களும், தமிழ்த் திரைப்படங்களும் புத்துயிர் பெற்றன. தமிழ்நாடகக் கலைக்கு தெ. பொ. கிருஷ்ணசாமிப் பாவலர், சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார் போன்றோர் புத்துயிரூட்டினர். அவர்கள் காலத்தில் நாடகங்கள் சுதந்திரப் போராட்ட விஷயத்தைத் தழுவியவையாக இருந்தன. கலைவாணர் என்.எஸ். கிருஷ் ணன், கிந்தனார் சரித்திரம் இயற்றினார். பின்வந்த திராவிடஇயக்கத்தினர் நாடகங்களின் பொருளைப் பெரிதும் சமூகவயப்பட்டதாக மாற்றினர்.
சுதந்திரப் போராட்டக் காலத்திலேயே நீதிக்கட்சி தோன்றியது, தொடர்ந்து திராவிட இயக்கமும் வளர்ச்சி பெற்றது. இவற்றின் விளைவாக ஏற்பட்ட தமிழ்இயக்கங்களில், தமிழிசை இயக்கம், தூயதமிழ் இயக்கம், பகுத்தறிவு இயக்கம் அல்லது சுயமரியாதை இயக்கம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
ஆபிரகாம் பண்டிதர், தமிழிசை முன்னோடிகளில் முதல்வர். அவர் கருணாமிர்த சாகரம் என்னும் இசை நூலைப் படைத்தார். ஆபிரகாம் பண்டிதர் காலம் முதல் 1950 வரை தமிழிசை பற்றிய உணர்வு மிகுதியாக வெளிப்பட்டது. விபுலானந்தரும் யாழ்நூல் இயற்றினார். தமிழ்வழிக் கல்வியும் தமிழ்க் கலைச் சொற்களும் தேவை என்ற ஞானம் தோன்றியது. இவை யாவும் சேர்ந்து தமிழ் இயக்கம் என்ற ஒன்றை ஏற்படுத்தின என்று கொள்ளலாம். தமிழிசைச் சங்கம் இவற்றின் முக்கியச் சாதனைகளில் ஒன்று.
தூயதமிழ் இயக்கமும் பகுத்தறிவு இயக்கமும் சேர்ந்து ஒரு கவிஞர் பரம்பரை யைத் தமிழில் உருவாக்கியது. பாரதிதாசன் இதன் முன்னோடியாவார். தமிழுக்கும் அமுதென்று பேர் என்ற உணர்ச்சிமயமான பார்வையை முன் வைத்தவர் பாரதிதாசன். அவரைப் பின்பற்றி வாணிதாசன், முடியரசன் போன்றோர் எழுதினர். இம்மரபு பொன்னடியான் வரை நீடித்துவந்தது. புலவர் குழந்தை இராவண காவியம் எழுதினார். தூயதமிழ் இயக்கத்தின் முன்னோடியாகக் கருதத் தக்கவர் பரிதிமாற் கலைஞர். பிறகு மறைமலை அடிகளால் வளர்ந்த இவ்வியக்கம், பெருஞ்சித்திரனார் போன்ற கவிஞர்கள் வரை தொடர்ந்தது.
தமிழ் இலக்கியத்தில் மார்க்சியத்தின் தாக்கம் விரிவானது. கவிதை, கட்டுரைகள், நாவல், சிறுகதை, நாடகம், விமரிசனம் எனப் பல்வேறு தளங்களிலும் மாற்றங்களை ஏற்படுத்தியது மார்க்சிய இயக்கம். தமிழில் மார்க்சிய இயக்கத்தின் தாக்கம் பற்றிப் பல நூல்கள் எழுத இடமுண்டு.
இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல்வேறு கலை/இலக்கிய இயக்கங்களும் தத்துவக் கொள்கைகளும் தமிழ் இலக்கியப் பரப்பில் புகுந்து பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. சான்றாக, ஃப்ராய்டியம், நவமார்க்சியம், இருத்தலியம், அமைப்பியம், பின்னமைப்பியம், நவீனத்துவம், பின்நவீனத்துவம், பிற்காலனியம் போன்ற மேற்கத்தியத் தத்துவ, இலக்கியக் கொள்கைகள் தமிழில் இடம்பெற்று மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. இவையன்றி வேறுபல அழகியல்/மெய்யியல் கொள்கைகளும் புகுந்துள்ளன. இலத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்து மாந்திரிக யதார்த்தம் என்ற சித்திரிப்பு முறை புகுந்துள்ளது. இம்மாற்றங்களின் காரணமாக, ஒரு புதிய இலக்கிய விமரிசன மரபும் தமிழில் உருவாகத் தொடங்கியுள்ளது.
இன்று தமிழ் இலக்கியப் பரப்பு ஏராளமான மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது. எத்தனை எத்தனையோ கொள்கைகள் இதில் தாக்கம் செலுத்துகின்றன. மேற்கின் அல்லது அயல்நாடுகளின் கொள்கைகளை நமக்கென ஏற்பதில் நாம் மிக எச்சரிக்கையாக விவேகத்துடனும் விழிப்புடனும் இருக்க வேண்டி யுள்ளது.

இலக்கியம்