இலக்கிய வெளியும் இலக்கியம் அற்ற வெளியும்

kappiya-sitrilakkiya-1
மொழிபெயர்ப்பில் சாதாரணமாக நிலவும் நிலையை எடுத்துச் சொன்னதற்கு ஒரு நண்பர் கட்டுரையில் சாடல் அதிகமாக இருக்கிறது என்று எதிர்வினை புரிந்திருந்தார். யாரையும் நான் சாடவில்லை. இன்று இந்தியாவில் தமிழ் இரண்டாந்தர நிலையைத்தான் பெற்றிருக்கிறது என்பதை அரசியல் அறிவோ இலக்கிய  அறிவோ இல்லாதவர்கூடப் புரிந்துகொள்ளமுடியும். உண்மையைச் சொன்னால் இலங்கைத் தமிழர்களை அழித்த பெருமக்கள், அதேபோல ஏதாவது செய்து தமிழகத் தமிழர்களையும் அழிக்கப் பார்க்கிறார்களோ என்ற அச்சம்தான் நம் முன்னால் எழுகிறது.
தமிழகத்தின் முன்னால் எத்தனை எத்தனை பிரச்சினைகள்? காவிரியில் சொட்டுத் தண்ணீர்கூடத் தரமுடியாது என்று கர்நாடகா சொல்கிறது. முல்லைப் பெரியாறு அணையை உடைத்தே தீருவேன் என்கிறது கேரளம். இவர்கள் யாருக்கும் உச்சநீதி மன்றம் அதன் தீர்ப்புகள் இவை பற்றிய கவலைகள் சற்றும் இல்லை.  நடுநடுவில் பாலாற்றில் அணை கட்டுவதாக ஆந்திரம் குண்டுபோட்டுக் கொண்டிருக்கிறது. தமிழகம் சற்றே தவறினால் மட்டும் கதறுகிறார்கள், இங்கிருக் கும் அரசியல்வாதிகள். கூடங்குளத்தின் மக்கள்  போராட்டத்தை அரசு  பயங்கரவாதம் என்று கூறி ஒடுக்குகிறது. எல்லா இடங்களிலும் தமிழன் பின்னுக்குத் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறான். தமிழக மீனவர் பிரச்சினை எத்தனை எத்தனை ஆண்டுகளாக நீடிக்கிறது? அதுபற்றி எந்த அரசாவது கவலைப்பட்டுத் தீர்க்க முயன்றதுண்டா? சிங்களத்திற்குத் தரும் ஆதரவின் அளவு கூட இந்திய அரசாங்கம் தமிழக மீனவர்களைக் காப்பாற்றத் தருவதில்லை என்பதைக் கண் கூடாகத் தான் கண்டுவருகிறோம். இந்த நிலையில் நாம் எதைச் சொன்னாலும் சாடல்தான்!

வடநாட்டு மதவாதக் கட்சிகள் தமிழ் சமஸ்கிருதத்திலிருந்து கிளைத்த மொழி என்று இன்னும் பொய்சொல்லி வருகிறார்கள். அது அப்படியல்ல என்பதை பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, கால்டுவெல் காலம் முதலாக நாம் திருப்பிச் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் அவர்கள் அதை நம்பத் தயாராக இல்லை. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கொடுத்த முறை மிகக் கேவலமானது. ஆயிரம் ஆண்டு பழமையான மொழி என்று சொல்லிக் கொடுத்தார்கள். ஆயிரம் ஆண்டுப் பழமை என்றால் தெலுங்கும் கன்னடமும் கூடச் செம்மொழிகள்தான். ஆனால் தமிழோடு நேரடியாகத் தொடர்பற்ற மத்திய திராவிட மொழியான தெலுங்கே குறைந்தபட்சம் தமிழைவிட ஆயிரம் ஆண்டு பிற்பட்டது என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை. இலக்கியங்களையும் கல்வெட்டுகளையும் பார்ப்பவர்கள் இதை நன்றாகப் புரிந்துகொள்ளமுடியும்.

தமிழில் உள்ள இலக்கிய ஆக்கங்கள் காலந்தோறும் திட்டமிட்டே அழிக்கப்பட்டன என்பதை வரலாற்றைப் பார்ப்பவர்கள் உணரமுடியும். ஆற்றங்கரைப்பகுதியில் இருந்தால் ஆடிப்பெருக்கில் ஓலைச்சுவடிகளைப் போட்டுவிடுவார்கள். ஆற்றங் கரைப் பகுதி அல்ல என்றால் மார்கழி மாதக் கடைசிநாள் போகியன்று பழைய ஓலைகளைக் கொளுத்தவேண்டும் என்று கொளுத்திவிடுவார்கள். இப்படி அனலுக்கும் புனலுக்கும் சாதாரண மக்கள் வாரி வழங்கியவை போக, ஆட்சியாளர்களான அயலக மக்கள் தமிழக ஆட்சியைக் கைப்பற்றி, தமிழுக்கு வாழ்வே தராமல் அழித்த முறையை நாடறியும். சரி, இதுவரை அழிந்தவை போக மீதமிருக்கும் தமிழ் இலக்கியப் படைப்புகளே வியப்பளிக்கும் வகையிலான விரிவும் பண்பும் கொண்டவை என்பதை விளக்கினால், வடநாட்டவரிடமிருந்து எந்த பதிலையும் பெற முடியாது. ஓரளவேனும் படித்தால், படித்து அந்தக் கருத்துகளை உள் வாங்கினால் அல்லவா தெரிந்துகொள்ள முடியும்? இதற்கு நம் அரசியல் அமைப்பு இடம் தரவில்லை என்றால் சாடுகிறேன் என்கிறார்கள்.

நாம்தான் இந்திய மொழிகள் அனைத்திலிருந்தும் மொழிபெயர்த்து விழுந்து விழுந்து படித்துக்கொண்டிருக்கிறோம். வடக்கில், உதாரணமாக இந்தியில், வங்காளியில், மராட்டியில் அப்படிச் செய்வதில்லை. அவர்களுக்குத் தமிழ் போன்ற மொழிகள் பற்றிக் கவலையே இல்லை. தமிழ் படித்தால் அவர்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது? வேலை கிடைக்கப் போகிறதா? பணம் கிடைக்கப் போகிறதா? இல்லை, வேறுவிதமான மதிப்பு ஏதாவது கிடைக்கப்போகிறதா? தாய்க்குச் சோறுபோடுவதற்கே காசு எதிர்பார்க்கும் உலகத்தில் தமிழ் போன்றதொரு மொழியைப் படி என்பதற்கு என்ன காரணம் சொல்ல முடியும்?

தமிழின் நவீன வளம் பிற இந்திய மொழிகளோடு போட்டியிடும் அளவுக்கு இல்லை. ஆகவே அவர்களுக்கு நவீன வளத்திற்காகக்கூட தமிழைப் படிக்கவேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் ஐரோப்பிய ஆங்கில இலக்கியங் களைத் தேவையான அளவு படித்துக்கொள்கிறார்கள். பிறகு தங்கள் இலக்கியங் களை அவற்றிற்கு இணையாக உருவாக்க முயற்சி மேற்கொள்கிறார்கள். ஒரு வகையில் சொன்னால், அவர்கள் நவீன, நவீனத்துவ, பின்நவீனத்துவ இலக்கியம் தொடங்கி, பின்னால் செல்கிறார்கள். நம்மைப்போல சங்க காலத்தில் தொடங்கி இன்றுவரை வருவதில்லை. தமிழில் நவீன சிந்தனை முறை இல்லை, தமிழ்நாட்டில் நவீன வாழ்வியல் இல்லை என்பது வடநாட்டவரின் பொதுக்கருத்தாக இருக்கிறது. இப்படிப்பட்ட மண்ணிலிருந்து எப்படிப்பட்ட செவ்வியல் இலக்கியங் கள் தோன்றியிருக்கமுடியும் என்பது அவர்கள் வாதம்.

இன்னொன்றும் புத்தியில் படுகிறது. ஒருவர் கேட்டிருந்தார், ஜாதி இன்றி நம்மை எப்படி அடையாளப்படுத்திக்கொள்வது என்று. ஜாதி, மதம் எல்லாவற் றையும் மீறியதுதான் மொழி. செட்டியாருக்கும் முதலியாருக்கும் பிள்ளைமாருக் கும் தேவேந்திரகுல வேளாளருக்கும் பறையருக்கும் புலையருக்கும் எல்லாருக்கு மான மொழி தமிழ்தான். நாம் யாவரும் ஊறி வளர்ந்த மொழி அதுதான். முஸ்லிமாக இருந்தாலும் கத்தோலிக்கக் கிறித்துவராக இருந்தாலும் பௌத்தராக ஜைனராக இருந்தாலும் பேசும் மொழி தமிழ்தான். இதை மனத்தில் கொண்டால் தான் நாளைக்குத் தமிழ் இருக்கும். இல்லையென்றால் ஜாதி இருக்கும், மதம் இருக்கும், தமிழ் இருக்காது.

ஆனால் இப்படிப்பட்ட மனப்பான்மையை ஆதியிலிருந்து வளர்த்துவிட் டார்கள். சைவர்கள் என்றால் திருவாசகம், தேவாரம் படிப்பார்கள். ஆனால் தாயுமானவரை, வள்ளலாரைக்கூடப் படிக்கமாட்டார்கள். இந்த மனப்பான்மை காரணமாகத்தான் ஆறுமுக நாவலர் காழ்ப்புணர்ச்சியோடு அருட்பா அல்ல மருட்பா என்று வாதிட்டார். அதுபோல ஸ்ரீரங்கம் ஜீயமடம் என்றால் தப்பித் தவறி நாலாயிரம் படிப்பார்கள், தேவாரத்தைக் கண்ணாலும் பார்க்கமாட்டார் கள். கிறித்துவக் கல்லூரி என்றால் தமிழுக்குக் கிறித்துவக் கொடை என்று கருத்தரங்கம் நடத்துவார்கள். முஸ்லிம் கல்லூரி என்றால் முஸ்லிம்களின் கொடை. நல்லவேளை, இன்னும் முதலியார்களின் தமிழ்க்கொடை. செட்டியார்களின்  தமிழ்க்கொடை, பள்ளர்களின் தமிழ்க்கொடை என்றெல்லாம் ஆரம்பிக்கவில்லை. ஆனால் பார்ப்பனர்களின் தமிழ்க்கொடை பற்றி மட்டும் இடைவிடாமல் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். பாரதி இல்லையென்றால் தமிழ் ஏது? உ.வே. சா. இல்லையென்றால் சங்க இலக்கியம் ஏது என்று ஆர்ப்பரிக்கிறார்கள். ஆனால் இந்த எச்சசொச்சங்கள் தவிர, பிராமணருக்கு இன்றும் அனைத்தும் வேதத்தின் கிளைகள்தான், சமஸ்கிருதத்தின் எச்சங்கள்தான். தமிழர்கள் போய் விபூதி வாங்கி கண்ணில் தூவிக்கொள்ளட்டும்.

எவ்வளவு நுட்பமாக ஊடகங்கள் பிராமணத்துவத்தை தமிழுக்குள் கொண்டுவருகின்றன என்பது பற்றி எவருக்கும் கவலையில்லை. நான்கைந்து ஊடகங்கள் வடநாட்டு சீரியல்களை மட்டுமே ஒளிபரப்புகின்றன. தமிழில் தொலைக்காட்சித்தொடர்கள் எடுக்கக்கூட வக்கற்றவர்களுக்கு ஊடகம் எதற்கு? அந்த வடநாட்டுத் தொடர்களில் பார்த்தால் வடநாட்டு மங்கையர் நிறைய நகைகளைப் பூட்டிக்கொண்டு அடிமைகளாக. ஆண்கள் ஷெர்வானி அணிந்து ஜமீன்தார்களாக, முக்காடு போட்டவண்ணம் சிலர் இன்னும் அதிகாரம் செய்துகொண்டு வலம் வருகிறார்கள். எவ்வளவு பிற்போக்கான கருத்துகளை அவை பரப்புகின்றன? ஏன் இவற்றிற்கு எதிர்ப்பு சற்றும் இல்லை? தமிழகத்தில் இவையெல்லாம் போய் எத்தனை காலம் ஆயிற்று? எதற்கு இவை இப்போது, இங்கே? எல்லா ஊடகங்களிலும் ஜயலட்சுமி (லட்சுமிகூட கிடையாது, லஷ்மிதான்!) எந்திரம், அனுமான் எந்திரம், பஜ்ரங்பலி மந்திரம், எல்லாம் விலைக்கு. பத்தாயிரம் ரூபாய்செலவு செய்து இவற்றை வாங்கினால் பத்துகோடி சம்பாதித்துவிடலாம் என்று பிரச்சாரம்.

தமிழ் எதிர்காலத்தில் பிழைக்க வேண்டுமென்றால், தமிழ்நாட்டில் இதுவரை தோன்றியிருக்கின்ற தனித்தமிழ் இயக்க மரபு, தமிழ்ச் சீர்திருத்த மரபு, மார்க்சிய மரபு ஆகியவற்றை ஏற்று-இவற்றில் ஒன்றையாவது ஏற்று-தமிழர்கள் உருப்படவேண்டும். இல்லை என்றால் தமிழும் இல்லை, எதிர்காலத்தில் தமிழ் நாடும் இல்லை.
நாம் சங்ககாலத்திலேயே வடமொழி வந்து கலந்துவிட்டதை மறுக்க வில்லை. வடநாட்டு மரபுகள் தெரிந்திருந்ததைப் பற்றியும் மறுக்கவில்லை. அவை யெல்லாம் காலத்தின் கோலம். ஆனால், இன்றும், சமஸ்கிருதத்தை முற்றிலும் புறந்தள்ளி ஒரு மொழி தன் கருத்தை வெளிப்படுத்த முடியும் என்றால் அது தமிழ்தான். கலப்பு என்பது இயல்பு என்று நாம் பேசுகிறோம், ஏற்றுக்கொள்கி றோம். ஆனால் சமஸ்கிருதவாதிகள் இன்றும்கூட, சமஸ்கிருதத்தைத்தான் பிற மொழிகள் ஏற்றுக்கொண்டன, அதில் கலப்பு ஏற்படவேயில்லை என்றுதான் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். அறிவியல் மனப்பான்மை சற்றும் இல்லாமல் அவர்கள் உளறுவதை எல்லாம் இந்திய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறது.

சேரன் செங்குட்டுவன் வடநாட்டுக்குப் படையெடுத்துச் சென்றிருக்க முடியாது, அக்காலத் தமிழருக்கு அவ்வளவு நிலவியல் அறிவும் படைபலமும் கிடையாது என்று ஒரு பார்ப்பன வரலாற்றாசிரியர் வாதிட்டார். ஆனால் வட நாட்டு வேடனான வால்மீகிக்கு மட்டும் இந்தியாவின் தெற்கு எல்லை தாண்டி இலங்கை வரை நிலவியல் அறிவு இருந்ததாம். இராமன் பாலம் கட்டினானாம். இலங்கையை ஒரு நாடு என்றே குறிப்பிடாத, ஒரு நகரம் என்றே குறிப்பிடுகின்ற வால்மீகி எந்த இலங்கையைப் பேசுகிறார் என்ற கேள்வியைக்கூட மூடஜனங்கள் கேட்கத் தயாராக இல்லை. இப்படித்தான் இந்துத்துவம் திணிக்கப்படுகிறது மூளை இல்லாமல் நம்மீது. தமிழ் அரசியலிலும் பண்பாட்டிலும் இந்துத்துவம் கலந்து கேலிக்கூத்தாக்கிவிட்டன.

ஆனால் குறை நாம் முன்பு கூறிய மூன்றுவித மரபுகள்மீதும் இருக்கிறது. (தனித்தமிழ் மரபு, சீர்திருத்த மரபு, மார்க்சிய மரபு). இவை எந்த பாதிப்பை நம் பாமரத் தமிழ் மக்கள்மீது ஏற்படுத்தின? இவற்றின் தாக்கம் ஏன் அவர்கள்மீது கொஞ்சம்கூட இல்லை? ஏன் அவர்கள் வடமொழிப்பெயர்களாகப் பார்த்துப் பார்த்துத் தங்கள் குழந்தைகளுக்கு வைக்கிறார்கள்? (சாதாரணமான, ராமசாமி, கிருஷ்ணன், காமாட்சி போன்ற பெயர்கள்கூட இப்போது இல்லை. அனன்யா, நமீஷா, காமேஷ் என்பதுபோல- நிச்சயமாக ஒரு ஷ இருந்தால்தான் பெயருக்கு இப்போது மதிப்பு). ஏன் அவர்கள் தங்கள் குழந்தைகள் டாடி மம்மி என்று ஒரு சொல் பேசிவிட வேண்டும் என்பதற்காகத் தரமற்ற வணிகப்பள்ளிகளிலும் கொண்டுபோய் லட்சரூபாய் நன்கொடை கொடுத்து ஆங்கிலப் பள்ளிகளில் சேர்க்கிறார்கள்?

ஒரு காலத்தில் சீர்திருத்தம் பேசிய, இங்கர்சாலையும் பெர்னாட் ஷாவை யும், ரஸ்ஸலையும் அறிமுகப்படுத்திய திராவிட இயக்கம் என்ன ஆயிற்று? எங்கே போயிற்று அது? ஏன் மூடநம்பிக்கையில் மூழ்கிக் கொண்டிருக்கிறார்கள் அனைவரும்? வள்ளலாரும், அயோத்திதாசரும் பெரியாரும் காட்டிய மரபுகள் எல்லாம் நசித்துப்போய், இன்று சமூக உணர்வே அற்ற வெகுஜன அரசியலும், எந்த அழகியல் உணர்வும் அற்ற வெகுஜன ஊடக அரசியலும் நிகழ முடிகிறது?

இன்றும் மேற்கத்திய தத்துவ, இலக்கிய-எந்த வரலாற்றை எடுத்தாலும் தொடங்குவது சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாடில் தொடங்கித்தான் அத்தனை யையும் பேசுகிறார்கள். நியாயமாக இந்தியாவின் கொடை என்று பேசத்தொடங் கினால் தொல்காப்பியரிலிருந்துதான் தொடங்கவேண்டும். ஆனால் தொல்காப் பியரின் கால்தூசும் பெறாத பாணினியிலிருந்து தொடங்குவார்கள்.

எல்லாவற்றையும் விட இன்று நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குவது அரசு பயங்கரவாதம்தான். அந்தோனியோ கிராம்சி அந்தக் காலத்திலேயே இதைப் பற்றிச் சொன்னாலும் நாம் சற்றும் அதைப்பற்றிக் கவலைப்படாமல்தான் இருந் தோம். தமிழ் இனம் அழிக்கப்பட்ட நிலை, அதை இந்தியா இன்றுவரை ஆதரிப் பது, கூடங்குளப் போராட்டம் போன்ற ஒரு ஜனநாயகப் போராட்டத்தைக்கூட தண்ணீர், உணவுப்பொருள், பிற அத்தியாவசியப் பொருள்கள் இவற்றை யெல்லாம் தடுத்து, தீவிரவாதம் என்ற முத்திரைகுத்தி அரசே பிரச்சாரம் செய்து -இதெல்லாம் எதற்காக? நாட்டு நன்மைக்காக அரசா? தன் மனம்போன போக்கில் இயங்குவதற்காக அரசாங்கமா? இன்றும் கூசாமல், ராஜீவ் காந்தியைக் கொலைசெய்ததற்காக இலங்கைத் தமிழர்களுக்கு இந்த தண்டனை வேண்டியது தான் என்று எழுதுகிறார்கள் நம் தமிழகக் கட்சிக்காரர்கள். இதே ரீதியில் பார்த்தால், ஒரு சீக்கியன் இந்திரா காந்தியைக் கொலைசெய்ததற்காக சீக்கிய இனத்தை அழித்துவிட்டார்களா? ஒரு சீக்கியரான மன்மோகனைத்தானே பிரதமராக்கி வைத்திருக்கிறது?

ஏதோ எழுதத் தொடங்கினால் இன்றைய நிலை எங்கெங்கோ இழுத்துக் கொண்டு செல்கிறது. இன்றைய தமிழின் வாழ்வும் வளமும், வெறும் மொழி சம்பந்தப்பட்டவை அல்ல. தமிழர்-மனிதர் சம்பந்தப்பட்டவை. இன்றைய தமிழ் நாட்டின் மூடத்தனம் மாறவில்லை. சாதிக்கலப்பு மணங்கள் நிகழவேயில்லை. பயப்படவேண்டியிருக்கிறது. கிராமங்களில் தேநீர்க்கடைகளில் இன்னும் தனி டம்ளர்கள். தீண்டாமை. பெண்களை அடிமைகளாகவே தமிழ்த் திரைப்படங்கள் சித்திரித்து, அதுவே தமிழர்களின் பொதுப்புத்தியாக மாறிவிட்டது. இவற்றிற் கெல்லாம் மாற்றுகள் என்ன? இந்தச் சமூகப் பிரச்சினைகள் ஒருபுறம் என்றால், சுற்றுச்சூழல் மாசுபாடு, குடிநீர் கிடைக்காமை, விவசாயம் தோல்வி, விவசாய நிலங்கள் கூறு போட்டு விற்கப்படுதல், என்றெல்லாம் அண்மைக்கால இழிவு களைப் பட்டியல் போட்டுக்கொண்டே போகலாம்.

இந்தக் கட்டுரை இனியும் தொடரும். ஆனால் இதுவரை நான் சொல்ல வருவது, இந்தப் பிரச்சினைகள் எல்லாம் தனித்தனியானவை அல்ல. எல்லாம் ஒன்றுக்கொன்று சங்கிலித்தொடர்களாகப் பின்னியிருப்பவை. நிலம் மொட்டை அடிக்கப்படுவதற்கும், ஆங்கிலப்பள்ளியைத் தமிழன் நாடுவதற்கும், கர்நாடகா தண்ணீர் தர மறுப்பதற்கும், கூடங்குளம் முடக்கப்படுவதற்கும், எல்லாவற்றிற்குமே ஓர்  உள்ளார்ந்த, இடையறாத தொடர்பிருக்கிறது, அதைப்பற்றித் தமிழ்மீது, தமிழ்நாட்டின்மீது அக்கறைகொண்டவர்கள் சிந்திக்கவேண்டும் என்பதுதான் அடிப்படை.

சமூகம்