ஈடிபஸ் அரசன் நாடகம் – காட்சி 4

ஈடிபஸ் அரசன்  நாடகம் – காட்சி 4

(ஜொகாஸ்டா வருகிறாள்)

ஜொகாஸ்டா: தீப்ஸ் மக்களே, ஆலிவ் கிளைகளைக் கைகளில் ஏந்தி நறுமணப் பொருள்களோடு கடவுளை வணங்கிவரலாம் என்று நினைக்கிறேன்.
(தனக்குள்)
இப்போது அரசர் அவராக இல்லை. அவர் மனம் விபரீத கற்பனைகளால் இருண்டு போயிருக்கிறது. பழைய ஜோசியங்களுக்குப் புதிய விளக்கங்களைத் தேடி நிற்கிறார். கொடுமையை உரைக்கும் வார்த்தைகளில் நம்பிக்கை வைக்கிறார். நான் சொல்லும் அறிவுரைகளை அவர் கேட்பதே இல்லை.

(கடவுள் முன்னால்)
அப்போலோ தேவனே! என் கைகளுக்கருகில் நிற்பவன் நீ. இந்தக் காணிக்கைகளை ஏற்றுக்கொண்டு, கலங்கிப்போய் நிற்கும் எங்கள் மன்னனுக்கு விமோசனம் தா. குழம்பிப்போன கப்பல்தலைவனைக் கவலையுடன் பார்க்கும் பிரயாணிகளாய் நாங்கள் இருக்கிறோம்.

(தூதுவன் ஒருவன் வருகிறான்)
தூதுவன்: (பாடற்குழுவினரைப் பார்த்து) நண்பர்களே, யாராவது ஈடிபஸ் அரசனது அரண்மனைக்கு வழிகாட்டுங்கள். மன்னரை நான் எங்கு காணமுடியும்?

பா.கு.தலைவன்: இதே இடம்தான் புதியவரே! அரசர் உள்ளே இருககிறார். இவள் அரசருடைய மனைவி. அவருடைய குழந்தைகளுக்கு அன்னை.

தூதுவன்: இந்த இல்லத்தில் இன்பம் பொங்குமாக! வணக்கம் அரசி!

ஜொகாஸ்டா: நானும் அதையேதான் விரும்புகிறேன். நீ யார்? வந்திருக்கும் காரணம்?

தூதுவன்: நல்ல செய்திதான் அரசி, உங்கள் இல்லத்திற்கும், உங்கள் அனைவருக்கும்.

ஜொகாஸ்டா: என்ன செய்தி? யார் உன்னை அனுப்பியது?

தூதுவன்: நான் காரிந்த் நகரிலிருந்து வருகிறேன். என் செய்தி உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். அதேசமயம் அதில் துயரமும் இருக்கிறது.

ஜொகாஸ்டா: என்ன புதிர் இது? சந்தோஷமான செய்தி, ஆனால் துன்பம் கலந்தது?

தூதுவன்: காரிந்து நாட்டு மக்களுக்கும் இன்றிலிருந்து ஈடிபஸ் அரசராகிறார்.

ஜொகாஸ்டா: அங்கே ஆண்டுகொண்டிருந்த மன்னர் பாலிபஸ் என்ன ஆனார்?

தூதுவன்: மரணம் அவரைக் கல்லறையில் உறங்கவைத்துவிட்டது.

ஜொகாஸ்டா: என்ன சொல்கிறாய்? பாலிபஸ் இறந்துவிட்டாரா?

தூதுவன்: ஆம், உண்மை. இல்லையெனில் என்னைத் தண்டிக்கலாம் நீங்கள்.

ஜொகாஸ்டா: (சேவகனிடம்) போ, உடனே இதை மன்னரிடம் சொல்.
(தனக்குள்) கடவுள் சித்தத்தை அறியாது புதிர் போடுபவர்களே, இப்போது எங்கே போனீர்கள் நீங்கள்?
நீண்ட நாட்களுக்கு முன்னர் மன்னர் ஈடிபஸ் இன்று இறந்துபோனவருக்காக, எங்கே அவரைக் கொன்றுவிடுவோமோ என்று பயந்து இங்கே ஓடிவந்தார். இன்று அது பொய்யாகிவிட்டது.

(ஈடிபஸ் வருகிறான்)

ஈடிபஸ்: என்னருமை ஜொகாஸ்டா, எதற்காக என்னைக் கூப்பிட்டனுப்பினாய்?

ஜொகாஸ்டா: இந்தத் து£துவன் என்ன சொல்கிறான் என்பதைக் கேள். பிறகு புனிதமான ஜோசியர்களின் கதி என்ன என்று சொல்.

ஈடிபஸ்: யார் இவன்? எனக்கு என்ன செய்தி கொண்டுவந்திருக்கிறான்?

ஜொகாஸ்டா: காரிந்திலிருந்து உன் தந்தையின் மரணச் செய்தி.

ஈடிபஸ்: இது மெய்தானா து£துவனே? எங்கே, உன் வாயால் சொல்.

தூதுவன்: இன்னும் தெளிவாக எப்படிச் சொல்வது? மன்னர் பாலிபஸ் இறந்து விட்டார்.

ஈடிபஸ்: எப்படி இறந்தார்? சதியா, உடல்நலக் குறைவா, ………

தூதுவன்: முதுமை அடைந்தோ இறப்பது எளிது.

ஈடிபஸ்: அப்படியானால், உடல்நலமில்லாமல் இருந்தாரா?

தூதுவன்: ஆம், பல வருடங்களாக.

ஈடிபஸ்: ஆ, டெல்ஃபியை இனி ஏன் மதிக்கவேண்டும்? இனி ஜோசியப் பறவைகளை யாரும் நம்பத்தேவையில்லை. நான் பாலிபஸைக் கொல்வேன் என்று ஜோசியம் சொல்லிற்று. என் விரல்கூட அவர்மேல் பட்டதில்லை. என் பிரிவுத் துயர் தாங்காது அவர் இறந்திருந்தால் ஒருவேளை என்னால் அவர் இறந்தார் என்று சொல்லலாம். அதுவும்கூட இல்லை. பாலிபஸின் மரணம் அசரீரி வாக்கைப் பொய்யாக்கிவிட்டது.

ஜொகாஸ்டா: நான் சொன்னேன், பார்த்தாயா?

ஈடிபஸ்: ஆமாம், நீ சொன்னாய். ஆனால் என் பலவீனமான இதயம் என்னைக் கைவிட்டுவிட்டது.

ஜொகாஸ்டா: இனிமேல் ஒருபோதும் அவற்றை நினைத்தும் பார்க்கவேண்டாம்.

ஈடிபஸ்: இன்னும் அந்த ஜோசியம் பாக்கியிருக்கிறதே! என் அன்னையின் படுக்கை யறை என்னை பயமுறுத்துகிறதே!

ஜொகாஸ்டா: விதிப்படி யாவும் நடக்கும்போது இந்த உலகில் ஒருவர் ஏன் பயப்பட வேண்டும்? ஒவ்வொருவனும் அன்றைய நாளை வாழ்ந்தால் போதும். உன் அன்னையின் பள்ளியறை பற்றி பயம் வேண்டாம். எத்தனை மனிதர்கள் கனவில் தம் அன்னையரோடு கட்டிலில் கிடக்கிறார்கள்? விவேகம் உள்ளவர்கள் அதற்காகக் கலங்கிவிடப் போவதில்லை.

ஈடிபஸ்: உண்மைதான். ஆனால் இன்னும் அன்னை உயிரோடு இருக்கிறாரே! பயப்படாமல் இருக்கமுடியவில்லையே.

ஜொகாஸ்டா: உன் தந்தையின் மரணச்செய்தி ஆச்சரியமான விஷயம்தான்.

ஈடிபஸ்: ஆனால் உயிருடன் இருக்கும் அவளைக் கண்டல்லவா பயப்படுகிறேன்.

தூதுவன்: நீங்கள் யாரைக் கண்டு பயப்படுகிறீர்கள்?

ஈடிபஸ்: மெரோபே. மன்னர் பாலிபஸின் மனைவி. என் தாய். அவளைக் கண்டு.

தூதுவன்: அவர்களைக் கண்டு நீங்கள் ஏன் பயப்படவேண்டும்?

ஈடிபஸ்: கடவுளின் அசரீரி. பயங்கரமான செய்தி.

தூதுவன்: சொல்லக்கூடியதென்றால், கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள் அரசே.

ஈடிபஸ்: சொல்கிறேன். அப்போலோ தெய்வத்தின் அசரீரி சொல்லியது-நான் என் தந்தையை அழிப்பேன், என் தாயை மணப்பேன்-என்று. இதற்காக பயந்து காரிந்த்தை விட்டு ஓடிவந்தேன். பெற்றோர்களைக் காண மனம் துடித்தது, இருந்தும்.

தூதுவன் : இந்த பயத்தாலா இங்கே வந்து இருந்தீர்கள்?

ஈடிபஸ்: நான் அங்கிருந்தால்…. என் தந்தை என்னால் மரணமுற நேர்ந்தால்?

தூதுவன்: உங்கள் பயம் வீணானது.

ஈடிபஸ்: வீணானதா? எப்படி என்று நிரூபித்தால் பரிசளிப்பேன்.

தூதுவன்: பாலிபஸ் உங்கள் தந்தை அல்ல. மெரோபெ உங்கள் தாயும் அல்ல.

ஈடிபஸ்: அவர்கள் என்னை அன்போடு மகனே என்றுதானே அழைத்தார்கள்.

தூதுவன்: நீண்ட நாட்களாக அவர்களுக்கு குழந்தை இல்லை. என்னிடம் குழந்தையாக இருந்த உங்களை அவர் பரிசாகப் பெற்றுச் சென்றார்.

ஈடிபஸ்: ஈடு இணையற்று என்னை நேசித்தாரே?

தூதுவன்: இருக்கலாம். குழந்தைகள் இல்லாதவர். அதனால் உங்கள்மேல் அன்புமழை பொழிந்திருக்கலாம்.

ஈடிபஸ்: அப்படியானால் நீ யார்? என்னை எங்கு பெற்றாய்? விலைக்கு வாங்கினாயா? கண்டெடுத்தாயா?

தூதுவன்: கீதெய்ரான் காட்டில் கண்டெடுத்தேன். ஆடுமேய்ப்பவன் நான்.

ஈடிபஸ்: ஆடு மேய்ப்பவனா?

தூதுவன்: ஆம், ஆடு மேய்ப்பவன்தான். ஆனால் அன்று உங்களைக் காப்பாற்றியவன்.

ஈடிபஸ்: எதிலிருந்து காப்பாற்றினாய்?

தூதுவன்: உங்கள் கணுக்கால் சொல்லும் அதை.

ஈடிபஸ்: தூதுவனே, குழந்தைப் பருவ வலியை இப்போது ஏன் கிளறுகிறாய்?

தூதுவன்: உங்கள் இரு கணுக்கால்களையும் இணைத்திருந்த கூரம்பைப் பிடுங்கி உங்களைச் சாவிலிருந்து காத்தேன்.

ஈடிபஸ்: ஆம். என் கணுக்கால்களில் அத் தழும்புகள் இன்னமும் இருக்கின்றன.

தூதுவன்: குழந்தையாக இருந்த உங்களுக்குப் பெயரே அதனால்தானே வைத்தேன்? ஈடிபஸ் என்ற பெயருக்கு அதுதான் அர்த்தம்.

ஈடிபஸ்: கடவுளே, என் தாய் தந்தையர் ஏன் அப்படிச் செய்தார்கள் என்னை?

தூதுவன்: அது எனக்குத் தெரியாது. உங்களை என்னிடம் கொடுத்தவன் ஒருவன்ந. அவனுக்கு ஒருவேளை அது தெரிந்திருக்கும்.

ஈடிபஸ்: யார் அவன்? சொல்லுங்கள், யார் அவன்?

தூதுவன்: லேயஸ் மன்னரின் ஆட்களில் ஒருவன் அவன்.

ஈடிபஸ்: நீண்ட நாட்களுக்கு முன் இந்த ஊரை ஆட்சி செய்துவந்த லேயஸ் மன்னரா?

தூதுவன்: ஆமாம். மன்னரின் ஆட்டுமந்தையை மேய்க்கும் ஒருவன்தான் அவன்.

ஈடிபஸ்: அவர் இப்போது உயிரோடு இருக்கிறாரா? அவரைப் பார்க்க முடியுமா?

தூதுவன்: அது இங்குள்ளவர்களுக்குத்தான் தெரியும்.

ஈடிபஸ் (பாடற்குழுவினரை நோக்கி) இவர் இப்போது சொன்ன இடையன் பற்றி இங்குள்ளவர்களில் எவருக்காவது தெரியுமா? தெரிந்திருந்தால் சொல்லுங்கள். விஷயங்கள் வெளிப்படும் நேரம் வந்துவிட்டது.

பா.கு.தலைவன்: நீ முன்பே பார்க்கவேண்டும் என்று சொன்ன அதே இடையன்தான் ஈடிபஸ்! ஜொகாஸ்டாவுக்கு ஒருவேளை அவனது இருப்பிடம் தெரியும்.

ஈடிபஸ்: (ஜொகாஸ்டாவிடம்) பெண்ணே, உனக்கு அவனைப் பற்றித் தெரியுமா? நாம் கூப்பிட்டு அனுப்பச் சொன்ன ஆள் அவன்தானா? இந்தத் தூதுவன் சொல்லுவது அவனைத்தானா?

ஜொகாஸ்டா: நீ அவனைப் பற்றி நினைக்கவேண்டாம் ஈடிபஸ். அந்த இடையன் விஷயத்தை மறந்துவிடு. இந்தத் தூதுவன் சொன்னவற்றையும் மறந்துவிடு. இந்தப் பேச்சுகளால் நேரம்தான் வீணாகிப் போகும்.

ஈடிபஸ்: அவ்வாறு எவ்விதம் நீ சொல்லமுடியும்? ஒரே ஒரு துப்புக் கிடைத்தாலும் உண்மை வெளியாகலாம்.

ஜொகாஸ்டா: கடவுளே, கேள்விகள் போதும். தெரிந்த உண்மைகளும் போதும். உன் வாழ்க்கை உனக்குப் பெரிதில்லையா ஈடிபஸ்? நான் ஏற்கெனவே தாங்கிநிற்கும் வேதனைகளே என்னைக் கொல்லுகின்றன.

ஈடிபஸ்: கவலைப்படாதே. நான் யாரோ ஒரு அரண்மனை அடிமையாயிருக்கலாம் என்றுதானே கவலைப்படுகிறாய். நான் ஓர் அடிமையின் மகன் என்று தெரியவருவதால் உனக்கு ஒன்றும் குறைந்துவிடாது.

ஜொகாஸ்டா: நான் சொல்வதைக் கேள், ஈடிபஸ். மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். இந்த வேலையை இதோடு விட்டுவிடு.

ஈடிபஸ்: கேட்கமாட்டேன். உண்மை எனக்குத் தெரிந்தாக வேண்டும்.

ஜொகாஸ்டா: உன் நன்மைக்காகத்தான் சொல்கிறேன்.

ஈடிபஸ்: என் நல்லது! என் பொறுமையைச் சோதிக்கிறது.

ஜொகாஸ்டா: நீ நினைப்பது முற்றிலும் தப்பு. நீ யார் என்று உனக்குத் தெரியாமல் போவதே நல்லது.

ஈடிபஸ்: எங்கே… யாராவது ஒருவர் சென்று அந்த இடையனை அழைத்து வா. அரச வம்சத்தைப் பற்றித் தற்பெருமைத் தம்பட்டமடித்துக்கொண்டு இவள் தனியே இருக்கட்டும்.

ஜொகாஸ்டா: ஐயோ, மாளாத் துயரம்… மாளாத் துயரம் வந்ததே! இதைவிடச் சொல்வதற்கு எனக்கு இனி ஒன்றுமில்லை.
(போகிறாள்)

பா.கு.தலைவன்: அவள் ஏன் நம்மைவிட்டுப் போகிறாள் ஈடிபஸ்? அவள் எல்லை யில்லா வருத்தப்படுவதற்கு என்ன நேர்ந்தது? அவளது இந்தத் துன்பம் எனக்கு அச்சத்தை ஊட்டுகிறது. ஏதோ பயங்கரமான ஒன்று நடக்கப்போகிறது.

ஈடிபஸ்: நடக்கட்டும். எத்தனை இழிந்த பிறப்பென்றாலும் நான் யார் என்பதைத் தெரிந்துகொண்டே ஆகவேண்டும்.
அரசியும் ஒரு பெண்தானே…. நான் அடிமைக் குலத்தைச் சேர்ந்தவன் என்றால் அவள் அளவிட முடியாத துன்பம் அடைவாள்.
ஆனால் நான் அதிர்ஷ்டத்தின் செல்லப்பிள்ளை… எந்த அவமானமும் எனக்கு நேராது. அதிர்ஷ்டம்தான் என் தாய்! ஏழ்மையும் செல்வமும் என் வாழ்க் கையில் மாறி மாறி வந்திருக்கின்றன…. இப்படியும் ஒரு சேதி வந்துவிட்டுப் போகிறது… நான் ஏன் கவலைப்படவேண்டும்?

கோ1- ஈடிபஸைக் கண்டெடுத்த கீதெய்ரான் மலையில் கூத்தும் கும்மாளமும!

கோ2- காக்கும் கடவுள் அப்போலோ-நம்மை அம்மலைக்குக் கூட்டிச்செல்லட்டும்.

கோ3- கடவுளால் விதிக்கப்பட்ட அற்புதக் குழந்தையே!

கோ4- கீதெய்ரான் மலையில் கண்டெடுக்கப்பட்ட அரசனே! ஈடிபஸ் குழந்தையே!

கோ5- டயனீசியஸ் தேவனோ உன்னைக் கண்டெடுத்தான், அன்று?

கோ6- நீ விதியைப் பார்த்துச் சிரிப்பதற்காக உன்னைத் தன் கரங்களில் ஏந்தினானா?

ஈடிபஸ்: (பாடற்குழுவினரைப் பார்த்து) ஐயா, இதோ வருகிறான் அந்த இடையன். இவன்தானே நான் தேடும் அந்த ஆள்? எனக்கு இவனைத் தெரியாது. இருந்தாலும் இவன்தான் என்று நினைக்கிறேன். காரிந்த்தின் து£தன் போலவே இவனும் மூத்துத் தளர்ந்திருக்கிறான். நீங்கள் இவனை முன்னால் பார்த்திருந்தால் சொல்லுங்கள்.

(இடையனைச் சேவகர்கள் அழைத்துவருகின்றனர்)

பா.கு.தலைவன்: தெரியும் இவனை. லேயஸின் ஆள்தான்… நீங்கள் நம்பலாம் இவனை.

ஈடிபஸ்: காரிந்த்திலிருந்து வந்திருக்கும் து£துவரே, நாம் பேசிக்கொண்டிருந்தது இவனைப் பற்றித்தானா?

தூதுவன்: இவனே, இதே ஆள்தான்.

ஈடிபஸ்: (இடையனிடம்) இங்கே வா… இல்லை… என்னைப் பார். நான் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லவேண்டும். நீ லேயஸின் ஆள்தானே?

இடையன்: ஆம். அவருடைய அடிமையாகப் பிறந்தது அவர் வீட்டிலேயே வளர்ந்தவன்.

ஈடிபஸ்: அவர் வீட்டில் என்ன வேலை செய்துகொண்டிருந்தாய்?

இடையன்: அவருடைய ஆடுகளை மேய்பபவன் நான்.

ஈடிபஸ்: ஆடுகளை வழக்கமாக எங்கே கொண்டு மேய்ப்பாய்?

இடையன்: வழக்கமாக கீதெய்ரான் மலைக்கு. சிலசமயம் பக்கத்திலுள்ள குன்றுகள்.

ஈடிபஸ்: இதோ இங்கே நிற்கும் இந்த மனிதரைப் பார்த்திருக்கிறாயா?

இடையன்: இவனா? இவன் இங்கே என்ன செய்கிறான்?

ஈடிபஸ்: இவரேதான். உன் எதிரில் நிற்பவர். முன்னால் இவரைப் பார்த்திருக்கிறாயா?

இடையன்: இல்லை… ஞாபகமில்லை.

தூதுவன்: ஆச்சரியமில்லை. பல வருஷங்கள் ஆகிவிட்டன அல்லவா? ஆனாலும் நினைவிருக்க வேண்டுமே? ஒவ்வொரு வருடமும் ஒன்பது மாதங்கள் நாங்கள் ஒன்றாக ஆடுமேய்த்தோம். இவனிடம் இரண்டு கிடைகள். என்னிடம் ஒன்றே ஒன்று தான் இருந்தது. இலையுதிர் காலத்தில் நான் என் வீட்டுக்குத் திரும்புவேன். இவன் லேயஸ் அரண்மனைக்குத் திரும்புவான்.

ஏன் ஐயா, நான் இப்போது சொன்னதெல்லாம் உண்மைதானா? ஞாபகத்துக்கு வருகிறதா?

இடையன்: ஆமாம், இதெல்லாம் ரொம்ப வருடங்களுக்கு முன்னால்.

தூதுவன்: அப்படியானால், இது ஞாபகமிருக்கிறதா? ஒரு குழந்தையை ஒருநாள் என்னிடம் நீ வளர்க்கக் கொடுத்தாயே?

இடையன்: கொடுத்திருக்கலாம். அதற்கென்ன இப்போது?

தூதுவன்: அரசர் ஈடிபஸ்தான் அந்தக் குழந்தை.

இடையன்: நீ பாழாய்ப்போக. நாக்கை அடக்கிப் பேசு.

ஈடிபஸ்: போதும், போதும். நீதான் நாக்கை அடக்கிப் பேசவேண்டும்.

இடையன்: மகாராஜா, நான் என்ன தப்புப் பண்ணினேன்?

ஈடிபஸ்: குழந்தையைப் பற்றி அவன் கேட்ட கேள்விக்கு இன்னும் நீ பதில்சொல்லவில்லை.

இடையன்: இவனுக்கு ஒன்றும் தெரியாது. என்னைத் தொந்தரவில் மாட்டிவிடுகிறான். எனக்கு ஒன்றும் தெரியாது.

ஈடிபஸ்: மறைக்காமல் சொல். இல்லாவிட்டால் நீ கஷ்டப்படுவாய்.

இடையன்: கடவுள்மீது ஆணையா…என்னை ஒன்றும் துன்புறுத்தாதீர்கள். இந்தக் கிழவன்மீது பரிதாபப் படுங்கள்.

ஈடிபஸ்: யாரங்கே… இந்தக் கிழவன் கைகளைப் பின்னால் சேர்த்துக் கட்டுங்கள்.

இடையன்: ஏற்கெனவே அவஸ்தைப் பட்டுக்கொண்டிருக்கும் ராஜாவே, இன்னும் ஏன் மனத்தை வாட்டிக்கொள்ள முற்படுகிறாய்?

ஈடிபஸ்: நீ இவனுக்கு… இந்த ஆளுக்கு ஒரு குழந்தையைக் கொடுத்தது உண்மையா?

இடையன்: கொடுத்தேன்… நான் அன்னிக்கே செத்துப்போயிருந்தா நல்லாயிருக்கும்.

ஈடிபஸ்: உண்மையைச் சொல்லாவிட்டால் நீ இன்னிக்கே செத்துப்போவாய்… உண்மையைச் சொல்.

இடையன்: உண்மையைச் சொன்னா, சாவதைவிட மோசமான நிலைக்கு நான் ஆளாயிடுவேன்.

ஈடிபஸ்: (சேவகனிடம்) எதுவும் சொல்லாமல் தப்பித்துக்கொள்ளப் பார்க்கிறான்.

இடையன்: அந்தக் குழந்தையைக் கொடுத்ததைத்தான் சொல்லிவிட்டேனே.

ஈடிபஸ்: அது எங்கே கிடைத்தது? யார் வீட்டில் எடுத்தாய்?

இடையன்: ஒரு மனிதன்தான் கொடுத்தான்.

ஈடிபஸ்: அந்த மனிதர் இங்கிருககிறாரா? அவர் எந்த வீட்டைச் சேர்ந்தவர்?

இடையன்: கருணை காட்டுங்க மகாராஜா. இதுக்குமேல என்னை எதுவும் கேக்காதீங்க.

ஈடிபஸ்: சொல், அந்தக் குழந்தையை எங்கிருந்து கொண்டுவந்தாய்? இதற்குமேல் நீ எதுவும் சொல்லவேண்டாம்.

இடையன்: அந்தக் குழந்தையை லேயஸ் அரண்மனையிலிருந்துதான் கொண்டு வந்தாங்க.

ஈடிபஸ்: அது யாருடைய குழந்தை? அடிமைகளுடைய குழந்தையா?

இடையன்: அது பயங்கரமான ரகசியம் மகாராஜா. நான் எப்படிச் சொல்வேன்?

ஈடிபஸ்: எவ்வளவு பயங்கரமாயிருந்தாலும் நான் கேட்கத் தயார். சொல்.

இடையன்: ஐயோ, சொல்லித்தான் ஆகணுமா? சரி… அது லேயஸ் மகாராஜாவோட குழந்தைன்னுதான் சொன்னாங்க…. ராணி அம்மாவைக் கூப்பிட்டுக் கேளுங்க…. அவங்க எல்லாத்தையும் உங்களுக்குச் சொல்லுவாங்க.

ஈடிபஸ்: என் மனைவி… அவளா அந்தக் குழந்தையை உன்னிடம் கொடுத்தாள்?

இடையன்: ஆமாம் மகாராஜா… அவங்கதான் கொடுத்தாங்க.

ஈடிபஸ்: ஏன்னு உனக்குத் தெரியுமா?

இடையன்: குழந்தையை எப்படியாவது கொன்னுடச் சொன்னாங்க.

ஈடிபஸ்: கடுகளவும் கருணையற்ற இதயம்….

இடையன்: ஜோசியர்கள் சொன்னதுக்கு பயந்துபோய்….

ஈடிபஸ்: சொல், உனக்குத் தெரிந்ததை எல்லாம் சொல்.

இடையன்: இந்தக் குழந்தை அவங்க அப்பாவைக் கொன்னுடும்ன்னு ஜோசியம்.

ஈடிபஸ்: பிறகு ஏன் அந்தக் குழந்தையை இவரிடம் கொடுத்தாய்?

இடையன்: குழந்தையைப் பாத்து… அந்தப் பச்சை மண்ணைப் பார்த்து மனசு இளகிடுச்சு மகாராஜா…. கொல்ல மனசு வரல்லே… இந்த ஆள்கிட்ட கொடுத்தேன், அவன் காட்டுக்கு எடுத்துப்போய் வளப்பான்னு நெனைச்சி….காப்பாத்தினான்….ஆனா விதி எப்படி விளையாடியிருக்கு….இவன் சொல்லும் அந்தக் குழந்தை நீங்கதான்னா, ஈடிபஸைவிட மோசமானவன் இநத உலகத்திலேயே கிடையாது….

ஈடிபஸ்: கடவுளே, அது உண்மைதான்… எல்லா ஜோசியர்களுமே சொன்ன உண்மை. இப்பொழுது எல்லாம் வெட்ட வெளிச்சம்.
வெளிச்சமே! உன்னை இப்போது கடைசியாகப் பார்த்துக்கொள்கிறேன். ஈடிபஸ்! பிறக்கும்போதே சபிக்கப்பட்டுவிட்ட ஈடிபஸ்!
ஐயோ, ஐயோ! நாசமாய்ப் போன திருமணம்!…. நாசமாய்ப்போன உறவு!….தான் கொன்ற ரத்தத்தில் மிதந்து, சபிக்கப்பட்ட ஈடிபஸ்! ஐயோ,…ஈடிபஸ்!

கோ1- பாவப்பட்ட சந்ததிகள்… வெற்றிடத்தில் குடியேறிவிட்ட பாவப்பட்ட சந்ததிகள்…

கோ2- இருந்தும் இல்லாத பாவப்பட்ட சந்ததிகள்…

கோ3- அவர்களுக்கு நாம் என்ன கொடுக்கமுடியும்?

கோ4- நிழல்களை மாற்றிக்கொண்டு செல்லும் சூரியஒளியைக் கண்டு யார் மகிழ்ச்சி அடைகிறார்கள்?

கோ5- ஓடுகின்ற காலத்தைப் பார்த்து உவகை கொள்ளும் மனிதன் யார்?

கோ6- உன் பெருமை சீரழிந்துவிட்டது ஈடிபஸ்.

கோ1- கோபமும் அழுகையும் பொங்கும் விழிகளோடு ஈடிபஸ்.

கோ2- எல்லாம் மாறிவிட்டது. எல்லாம் அழிந்துபோயிற்று.

கோ3- ஈடிபஸின் உன்னதமான நாட்கள் சிறிதுசிறிதாக மங்கிக் காணாமல் போய் விட்டன.

கோ4- உன் மனம் திடமான வில்லாக இருந்தது அப்போது.

கோ5- அதில் நாணேற்றிப் புகழைக் கைப்பற்றினாய்.

கோ6- சிங்கத்தின் நகங்களோடு கூடிய அந்தக் கன்னியை வெற்றிகொண்டாய்.

கோ1- தீப்ஸ் மக்களின் கவலையைப் போக்கும் காவற்கோட்டை ஆனாய்.

கோ2- ஈடு இணையற்ற புகழோடு விளங்கினாய்.

கோ3- மனிதனின் கதை துயரமானது.

கோ4- அக்கதைகள் எல்லாவற்றிலும் உன்கதை துயரமானது….

கோ5- உன் அதிர்ஷ்டம் அடியோடு மாறிவிட்டது…

கோ6- நாடு கேவலமான அடிமைகளின் இருப்பிடமாய்ப் போனது…

கோ1- திறந்த கதவிலிருந்து உன்னை வெளியேற்றிய அந்த ஒளி…

கோ2- இரவில் கிடைத்த அந்த ஒளி….அது மன்னனை அடைந்தது…

கோ3- தந்தையிடமிருந்து மகனுக்குக் கிடைத்தது….

கோ4- எல்லாம் காலம் தாழ்த்தியபின்னர்தான் தெரியவந்தது….

கோ5- லேயஸ் மன்னன் வெற்றிகொண்டு கைப்பற்றிய அந்த அழகுப் பூந்தோட்டம்…

கோ6- அவள் எப்படி அமைதியாக இருந்தாள், அந்தக் காரியம் நடந்தபோது?

கோ1- காலத்தின் கண்கள் முன்னால்….

கோ2- நம் கண்கள் பழுதாகிவிடுகின்றன.

கோ3- நம் எல்லாச் செயல்களுக்கும்

கோ4- நீதி வழங்கப்பட்டுவிடுகிறது

கோ5- துயரம் அதிகமோ குறைவோ விருப்பம் உண்டோ இல்லையோ

கோ6- உன் சகல கணக்குகளும் புத்தகத்தில் ஏறிவிடுகின்றன.

நாடகம்