ஈடிபஸ் அரசன் நாடகம் – காட்சி 5 (இறுதிக்காட்சி)

ஈடிபஸ் அரசன் நாடகம்காட்சி 5 (இறுதிக்காட்சி)

புதிய தூதன்: தீப்ஸ் நாட்டு முதியவர்களே, நாட்டின் பெருமை வாய்ந்தவர்களே! எத்தனை பயங்கரமானவற்றை இப்போது பார்த்தீர்கள்… கேட்டீர்கள்… கால மெல்லாம் நாம் எத்தனை விசனப்படவேண்டி வந்துவிட்டது. தீப்ஸ் நாட்டு எல்லைக் கோட்டையும் புனிதமாகக் கருதும் பெரியோர்களே, இந்த நாட்டில் ஓடும் நதிகள்கூட இந்தப் பாவத்தை இனி கழுவ முடியாது….தெரியாமல் செய்த பாவங்கள் போனால் போகட்டும்! வீம்பாய்ச் செய்த பாவங்கள் இப்போது வீதிக்கு வருகின்றன….மிகப் பெரிய துயரங்கள் எவை என்றால், நமக்கு நாமே ஏற்படுத்திக்கொள்ளும் துயரங்கள்தான்….

பா.கு.தலைவன்: நிச்சயம், நண்பரே, நிச்சயம். நாம் இதுவரை பட்ட துயரங்கள் போதும். நீ இப்போது எந்தத் துயர் பற்றிப் பேசுகிறாய்?

தூதன்: அரசியார் இறந்துவிட்டார்.

பா.கு.தலைவன்: பரிதாபத்துக்குரிய அரசி! யார் கொன்றார்கள் அவளை?

தூதன்:  தன்னைத்தானே கொன்றுகொண்டார். நடந்தது ஒன்றும் உனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு? நேரில் பார்த்த எனக்கு எப்படியிருக்கும்? எங்களைவிட் டுச் சென்றபோது துக்கம் தாளாத மனத்துடன் கூந்தலைத் தன் கைகளால் இறுகப் பற்றியவாறு அமைதியாக அறைக்குள் ஓடினார்… தாளிட்டுக்கொண்டார் அறையை…. அது ஈடிபஸ் பிறந்த அறை… தன் தந்தையைக் கொலைசெய்யப் பிறந்த குழந்தை இருந்த அறை…. லேயஸ் இறந்தபின்னும் அரசி கதறியழுத அறை… தன் கணவனால் ஒரு கணவன் கொடுக்கப்பட்ட அறை… ஈடிபஸ் அழுது கதறியவண்ணம் எங்களுடனே இருந்தார்… திடீரென்று அரசியின் அறையிலிருந்து சத்தம்…. எங்களில் ஒருவருடைய கத்தியைப் பிடுங்கிக்கொண்டு ஓடினார் அரசியின் அறையை நோக்கி… மனைவி! அவருடைய குழந்தைகளையும் அவரையும் வயிற்றில் தாங்கியிருந்த மனைவி. அங்கு இதயத்தைப் பிளக்கும் குரல் கேட்டது. கதவின் தாள்கள் முறிபட்டன. அறையில் அரசி தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார். கயிற்றின் முடிச்சைத் தளர்த்தி பூமியில் இறக்கியபோது மாபெரும் விம்மல் வெடித்தது அவரிடம்.

அடுத்து நடந்தவற்றை நான் மறந்துபோக முடியுமானால் நான் பேறுபெற்றவன். அரசியின் அங்கியிலிருந்து இரண்டு தங்க ஊசிகளைச் சரக்கென்று பிடுங்கித் தன் கண்களில் பாய்ச்சிக்கொண்டார் ஈடிபஸ்.

“சுற்றியிருக்கும் துயரங்களை நீ பார்த்தது போதும். என் செயலால் விளைந்த கொடுமைகள் இவை. நீ பார்க்கக்கூடாத முகங்களைப் பல நாட்களாகப் பார்த்துக் கொண்டிருந்தாய். தேடிக் கண்டுபிடிக்கவேண்டிய முகங்களைப் பாராமல் குருடனாய் இருந்தாய். இந்த நேரத்திலிருந்து நீ இருண்டுபோ……” என்று சொல்லிக்கொண்டே ஒரு முறை அல்ல, பல முறை தன் கண்களில் குத்திக்கொண்டார். முகத்தில் ரத்தம் வழிந்து சொட்டியது. சிவப்பு ஊற்றாகக் கண்களிலிருந்து ரத்தம் பீறிட்டுக்கொண்டி ருந்தது.

இருவரின் சோகத்திலிருந்தும் ஆண்பெண் இருபாலார் மேலும் சாபம் படர்ந்துவிட்டது. தீமை எழுந்தது. லாப்டகோஸ் வம்ச அரண்மனையில் எப்போதுமே ஆனந்தம் கூத்தாடும்…. இன்று அந்த ஆனந்தம் எங்கே போய்விட்டது? இன்று அழுகை, புலம்பல், அழிவு, அவமானம், துயரம், மரணம்…. மனித குலத்தின் துயரங்கள் அத்தனையும் மொத்தமாக அவர்கள் சொத்தாகிவிட்டது…

பா.கு.தலைவன்: இன்னும் அரசரின் துயரத்துக்கு விடிவில்லையா? துயரத்தோடுதான் இருக்கிறாரா?

தூதன்: காவலாளியைக் கூப்பிட்டுக் கதவுகளை முழுதாகத் திறந்துவைக்குமாறு சொன்னார். தன்னுடைய தந்தையைக் கொலைசெய்தவனை – தாயை… இல்லை, இல்லை – என்னால் அதைச் சொல்லமுடியாது – எல்லாரும் பார்க்கும்படி இருக்கட்டும் என்றார். தீப்ஸை விட்டே செல்லப்போகிறார்.
தன் வீட்டைச் சுற்றியிருக்கும் சாபம் விலகட்டும் என்று தானே விதித்துக்கொண்ட தண்டனை இது.
பலவீனமாக இருக்கிறார். அவரை அழைத்துச் செல்லவும் ஒருவருமில்லை. துயரக் கடலில் மூழ்கித் தத்தளித்துக்கொண்டு…

அதோ பார்… கதவுகள் திறக்கின்றன… சில நொடிகளில் கல்லையும் உருக்கும் காட்சியைக் காண்பாய்…
(நடுக்கதவு திறக்கிறது. ஈடிபஸ் குருடனாக வருகிறான்)

பா.கு.தலைவன்: கடவுளே, மனிதர்கள் பார்க்கவே பயங்கரமான காட்சி… இதைப் போன்ற காட்சியை என் கண்கள் கண்டதே இல்லை…ஈடிபஸ், உனக்கு என்ன பைத்தியம் பிடித்துவிட்டதா?

மனிதன் சுமக்கவே முடியாத துயரங்களை உன் தலையில் எந்த வேதாளம் ஏற்றி வைத்தது? நீயே உன்னைப் பார்த்துக்கொள், அழிந்துபோய் நிற்கிறாய் நீ. என்னால் முடியுமானால்… பேச, கேள்வி கேட்க. சிந்திக்க… முடியும். ஆனால் உன்னைப் பார்க்க எல்லையில்லா நடுக்கம்தான் உண்டாகிறது.

ஈடிபஸ்: கடவுளே, கடவுளே…இதைவிடக் கொடிய சோகம் இருக்கிறதா? நான் எங்கு போய்ப் புகலிடம் தேடுவேன்? என் குரல் எங்கேயோ எட்டாத இடத்தில் சென்று தேய்கிறது… கடவுள் ஏன் என்னை இப்படிச் செய்துவிட்டான்?

பா.கு.தலைவன்: சிந்தித்துப் பார்க்கவும் முடியாத துயரம்.

ஈடிபஸ்: இரவு மேகங்களே! எங்கேயும் போய்விடாதீர்கள்… இரவு வருகிறது… அதை எப்படி நான் காணமுடியும்… சல்லாத்துணிபோல் மெல்ல வருகிறது… தென்றல் என்னை இங்கே கொண்டுவந்து சேர்த்தது. கண்கள் இருந்த இடத்தில் ஊசிகள் பாய்ந்த வலி. வெள்ளமாய்ப் பாயும் நினைவுகள் தரும் வேதனை.

பா.கு.தலைவன்: இது அதிசயமல்ல. இரட்டிப்பாக அனுபவிக்கிறாய் நீ. வலியினால் துன்பமும், துன்பத்தினால் வலியும்.

ஈடிபஸ்:  நண்பரே, இன்னும் என்னிடம் நீராவது நன்றியுடன் இருக்கிறீர்… என்னருகில்தானே நின்றுகொண்டிருக்கிறீர்… இந்தக் குருடன்மேல் இரக்கம் வைத்துப் பொறுமையாய் இங்கே இருப்பீரா?

குருடன்! என்னுடன் யார் இருக்கிறார்கள் என்பதைக் குரலால் மட்டுமே அறியக்கூடிய குருடன். எனக்கு வந்த புதிய இருட்டு என் நண்பரை மறைத்தாலும் அறியக்கூடிய குருடன்.

பா.கு.தலைவன்: கொடிய காரியம்! என்றைக்குமே இரவாகப் போகும்படி இதை உன்னைச் செய்யும்படி தூண்டியது எந்தக் கடவுள்?

ஈடிபஸ்: அப்போலோ! அப்போலோ! குழந்தைகளே, அந்தக் கடவுள் அப்போலோ. வியாதிபிடித்த விதியை என்மீது ஏவினான். ஆனால் என் கண்களைக் குருடாக்கிக் கொண்டது என்னமோ என் கைதான். கண்கள் முன்னால் எல்லாமே பயங்கரமாக இருக்கும்போது நான் எப்படிப் பார்த்துக்கொண்டிருக்க முடியும்?

பா.கு.தலைவன்: எல்ல இடங்களிலுமே பயங்கரம்… உண்மைதான்.

ஈடிபஸ்: இப்போது எஞ்சியிருப்பது என்ன? நிழல்கள்? அன்பு? புலன்களுக்கு இனிக்கும் வாழ்த்துகள்? இன்னும் ஏதாவது இருக்கிறதா? ஆ!… இல்லை, நண்பரே… என்னைக் கூட்டிச் செல்லுங்கள். தீப்ஸிலிருந்து என்னைக் கூட்டிச் செல்லுங்கள். கடவுளே கண்டு வெறுக்கும் அழிவையும் அவலத்தையும் தாங்கிநிற்கும் ஈடிபஸை இங்கிருந்து கூட்டிச் செல்லுங்கள்.

பா.கு.தலைவன்: உனது துயரம் மகத்தானது. உண்மையை நீ அறியவே இயலாதவாறு கடவுள் செய்திருந்தால்…

ஈடிபஸ்: மலைப்பாறையில் என்னைக் காப்பாற்றி எனக்கு உயிர் கொடுத்தவன் மாண்டு போகட்டும்! என்ன வாழ்க்கை! நான் அன்றே இறந்திருந்தால்… இந்தப் பெரு நாசத்தின் சுமை என்னையும் என் கண்மணிகளையும் வீழ்த்தியிருக்காது…

பா.கு.தலைவன்: அப்படியே நடந்திருந்தால் நல்லது.

ஈடிபஸ்: என் தந்தையின் ரத்தம் பூசிய கைகளோடு இங்கே வந்து என் தாய்க்கே கணவனாகி… ஐயோ, சபிக்கப்பட்டவனே! தீமையின் குழந்தையே! நீயும் அந்தக் கட்டிலுக்குப் போனதுதான் கொடிய பாவம்… அதுதான் என்மேல் வீழ்ந்தது.

பா.கு.தலைவன்: உனக்கு என்ன சொல்லுவது என்று தெரியவில்லை… இப்படிக் குருட னாக உயிருடன் திரிவதைவிட மாண்டுபோயிருக்கலாம் நீ…

ஈடிபஸ்: அறிவுரை போதும். நானே எனக்குக் கொடுத்துக்கொண்ட இந்தத் தண்டனை நியாயமானதே. எனக்குக் கண்கள் இருந்தால் இறந்தவர் உலகில் தோன்றும் என் தந்தையையோ தாயையோ எப்படிப் பார்ப்பேன்? இருவர்க்கும் பழிசெய்தவன் நான். இறந்துவிடடால் சுலபமாகப் போய்விடும் என்பதால்தான் நான் தற்கொலை செய்து கொள்ளவில்லை.

பிறந்தபோது இருந்ததுபோல் என் குழந்தைகள் இப்போது என் கண்களுக்கு இனிமை யாகக் காட்சி தருவார்களா? உயர்ந்த மதில் சூழ்ந்த நகரமும் கடவுளர் சிலைகளும் முன்போல் அழகாகத் தோன்றுமா?

ஈடிபஸ்… காட்மோஸின் நகரில் பெருமை வாய்ந்த மனிதருள் முதன்மையாக இருந்தவன்… இன்று அவனது தீவினையால், லேயஸ் வீட்டின் பாவச்சின்னம் என்று முததிரையிடப்பட்டு அதல பாதாளத்தில் கிடக்கிறான். நான் புரிந்த குற்றங்களை நானே வெளிக்கொண்டு வந்தபின் என்னால் மனிதர்களை எப்படி நேருக்குநேர் பார்க்கமுடியும்?

என் கேட்கும் சக்தியையும் இழந்துவிடமுடியுமானால், துயரின் உருவமான இந்த உடலை ஒளியும் ஒலியும் பாதிக்காத கருவாய்ச் சுருட்டி வைத்துவிடுவேன். அப்போது என் மனம் தீயவைகளைத் தேடிப்போகாது. மனம் அமைதியாக இருக்கும்…

ஆ! கீதெய்ரான் மலையே! நீ ஏன் என்னைக் காப்பாற்றினாய்? உன்மீது என்னைக் கிடத்தியபோது ஏன் நான் இறந்துபோகவில்லை? இறந்திருந்தால் இந்தப் பாழாய்ப் போன ஜென்மம் இந்த உலகிற்குள் வந்திருக்காதே? ஆ! பாலிபஸ்! காரிந்த் என் மூதா தையர் நகரம் என்று நம்பியிருந்தேன். நான் உங்கள் குழந்தை என இருந்தேன். அங்கேயே தீமை புற்றாக எனக்குள் வளர்ந்துவந்திருக்கிறது…
நான் வியாதியுள்ளவன்… எனது இருப்பில்… எனது பிறப்பில்… ஆரம்பத்திலேயே வியாதியுள்ளவன்.

அந்த மூன்று சாலைகள்! முச்சந்தி! அடர்ந்த காடுகள்! சமவெளி! என் தந்தையின் ரத்தத்தைக் குடித்த இடங்கள். பேசக்கூடாத செயல்களைச் செய்த இடம். அங்கிருந்து ஆரம்பித்து நான் மற்ற காரியங்கள்! ஐயோ, திருமணம்… திருமணம்… என்னைக் குழந்தையாய் உருவாக்கிய செயல்… மகன் அதே படுக்கையிலே செய்த அந்தக் காரியம்… முறை தவறிய உறவு பின்னிய வலை…
தந்தையர், சகோதரர், மகன்களை அன்னையர், மனைவிகள், சகோதரியரோடு கூட்டிவிடும் இடம்…
மனிதர் அறிந்ததிலேயே மிகப் பாவமான செயல். நாவால் இவ்வளவு கொடியதென விளக்கமுடியாத செயல்.

(பாடற்குழுவினரை நோக்கி) இல்லை, என்னை தீப்ஸ் மக்கள் கண்களில் தோன்றாமல் எங்காவது மறைத்துவைத்து விடுங்கள். இல்லாவிட்டால் என்னைக் கொன்றுவிடுங் கள். இல்லாவிட்டால் என்னைக் கடலில் உருட்டித் தள்ளிவிடுங்கள். வாருங்கள். என்னைக் கூட்டிச் செல்லுங்கள்… என்னைத் தொடுவதற்கு பயப்படவேண்டாம். இவ்வளவு குற்றங்களையும் தாங்கும் மனிதன் நான் ஒருவன்தான்.

(கிரியோன் வருகிறான்)

பா.கு.தலைவன்: கிரியோன் வந்துவிட்டார். நீ அவரிடம் சொன்னால், என்ன செய்வதோ அவர் பொறுப்பு… உன் இடத்தில் இருந்து இந்த நகரத்தைக் காப்பாற்ற அவர் ஒருவரே எஞ்சியிருக்கிறார்…

ஈடிபஸ்: நான் அவனிடம் எப்படிப் பேசுவேன்? பெரிய கொடுமையை அவனுக்குச் செய்துவிட்டு அவனிடம் மரியாதையை எதிர்பார்க்க என்ன யோக்கியதை இருக்கிறது?

கிரியோன்: உன்னை கேலிசெய்யவோ வசைமாரி பொழியவோ வரவில்லை ஈடிபஸ்! (சேவகரிடம்) மனித கௌரவத்தின்மேல் உங்களுக்குச் சற்று மதிப்பிருந்தால்-
சூரியனின் கிரணங்களை நீங்கள் தூய்மையாக்கிவிட விரும்பினால்-
இந்தப் பாவக்கடலை இந்த உலகிற்குக் காட்டாதீர்கள். மிக நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இவன் துயரத்தைப் பார்ப்பதே சரி.

ஈடிபஸ்: எதிர்பார்த்தற்குமேல் என்மீது கருணை காட்டிவிட்டாய் கிரியோன். கடவுள் பெயரால் ஒன்று கேட்கிறேன். எனக்காக அல்ல, உனக்காக. நான் கேட்பதைக் கொடு.

கிரியோன்: எதற்காக என்னிடம் பிச்சை கேட்கிறாய்? நீ கேட்பது என்ன?

ஈடிபஸ்: மனிதர்கள் குரலே கேட்காத ஓரிடத்திற்கு என்னை அனுப்பிவிடு, சீக்கிரம்.

கிரியோன்: நீ கேட்பதற்கு முன்னரே நான் இதைச் செய்திருக்கவேண்டும். உம்.., கடவுளின் சித்தம் எனக்கு முழுமையாகப் புலப்படவில்லை.

ஈடிபஸ்: இப்போது கடவுளின் உத்தரவு தெளிவாக இருக்கிறது. பெற்றவர்களுக்குப் பழி செய்தவன் அழிக்கப்படவேண்டும், கிரியோன்.

கிரியோன்: தெளிவான விஷயந்தான். ஆனால் என்ன செய்யவேண்டும் என்பதை நான் யோசித்துத்தான் முடிவுசெய்யவேண்டும்.

ஈடிபஸ்: என்போன்ற மனிதனைப் பற்றி இன்னும் என்ன தெரியவேண்டும்?

கிரியோன்: நீ இப்போது கடவுள் சித்தப்படி நடக்கத் தயாராகிவிட்டாய்…

ஈடிபஸ்: ஆம். ஆனால் உன் உதவியோடுதான் அது நடைபெற வேண்டும். இதோ…. உள்ளே கிடக்கிறாளே…அந்தப் பெண்மணியைத் தக்கபடி அடக்கம் செய். அவள் உன் சகோதரி. என்னைப் போகவிடு கிரியோன். என் தந்தையின் நாடான தீப்ஸ் மக்களுக்கு நான் இழைதத பாவங்களைக் கழுவும் வகையில் நான் போகிறேன். என்னால் பெயர்பெற்றுவிட்ட கீதெய்ரான் மலைக்குப் போகிறேன். என் தாய் தந்தை எனக்காகத் தேர்ந்தெடுத்த அந்தக் கல்லறையில் உயிர்விடுகிறேன்.

ஆனால் எந்த வியாதியினாலும் நான் மடியமாட்டேன். எனக்கு இயற்கையான மரணம் கூட இல்லை. என்னை ஏதோ நினைக்கமுடியாத ஒன்றுக்காக விதி காப்பாற்றி நிற்கிறது.

என் மகன்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அவர்கள் ஆண்கள். எப்படியோ பிழைத்துக்கொள்வார்கள்.
ஆனால் பாவம் என் புதல்விகள். என்னுடன் சேர்ந்து வருந்தவேண்டும். என்னை விட்டுப் பிரிந்து அறியாதவர்கள். அவர்களைக் காப்பாற்று, கிரியோன். நான் அவர்களைக் கையால் தொடவிடு. கடைசி தரம். எங்களைச் சேர்ந்து அழ அனுமதிப்பாயா?
இரக்கமாயிரு மன்னனே! கருணை காட்டு.

நான் அவர்களைத் தொட்டுவிட்டால் என் கண்களிருந்தபோது இருந்தாற்போல உணர்வேன் நான்.
(ஆண்டிகனி, இஸ்மீன் வருகின்றனர், சேவகர் சூழ)

கடவுளே, நான் கேட்பது என் அருமைக் குழந்தைகளின் அழுகையையா? கிரியோன் இரக்கப்பட்டு என் குழந்தைகளை என்னிடம் அனுப்பிவிட்டானா?

கிரியோன்: ஆமாம் ஈடிபஸ். அறிந்த நாள் முதல் அவர்கள் உன் செல்வக் குழந்தைகள். இன்னும் அவர்கள் உன் கண்மணிகள்தான்.

ஈடிபஸ்: (கிரியோனிடம்) கடவுள் இதற்காக உன்னை ஆசீர்வதிப்பார்… என்னைவிட இவர்களிடம் நேசமாயிரு… குழந்தைகளே! எங்கே இருக்கிறீர்கள் நீங்கள்…. சீக்கிரம் என் கைக்கு வாருங்கள். இந்தக் கைகள் உங்கள் சகோதரனின் கைகள்… உங்கள் தந்தையின் கண்களைப் பழுதாக்கிவிட்ட கைகள்.

என் பிரியங்களே, எனக்கு அப்போது அறிவுமில்லை, பார்வையுமில்லை. அதனால் உங்கள் அன்னையின் குழந்தையாயிருந்தவன் அவளுக்கே கணவன் ஆனேன். உங்களைப் பார்க்கும் சக்தி இயலாதவனாக, உங்களைப் பார்ப்பவர் இழிவாக உங்களைப் பேசுவார்களே என்பதை நினைத்து அழுகிறேன். எந்த விழாவுக்கும் நீங்கள் சென்றால் அழுகையின்றித் திரும்பமுடியுமா? உங்களுக்குத் திருமண வயது வரும்போது எந்த ஆடவன் மணம் முடிப்பான்? இன்னும் என்ன தீவினை பாக்கி யிருக்கிறது?

உங்கள் தந்தை அவனுடைய தந்தையைக் கொன்றவன்; தன்னைப் பெற்ற வயிற்றுக்கே கருவைக் கொடுத்தவன்; தான் உதித்த ஊற்றிலேயே உங்களை உதிக்கச் செய்தவன்… இப்படியெல்லாம் உங்களைப் பழிப்பார்களே, பிறகு யாரை நீங்கள் திருமணம் செய்ய முடியும்? வாழ்நாள் முழுவதும் சாய்ந்து கனவுகண்டே உதிர்ந்துபோக வேண்டியது தானா?

கிரியோன், இவர்களுக்கு இனி நீதான் தந்தை. அவர்கள் உன் ரத்தம்…. அவர்களை இரந்துண்ண விட்டுவிடாதே… தனிமையில் வாட விட்டுவிடாதே… என்னுடைய அவலங்கள் அவர்களை நெருங்காமல் பார்த்துக்கொள். அவர்கள் மேல் கருணை காட்டு. உன்னையன்றி யாரும் இப்போது அவர்களுக்கு உறவு இல்லை… எனக்குச் சத்தியம் செய்துகொடு. அரசனே, உன் கையால் எனக்குச் சத்தியம் செய்.

(கிரியோன் சத்தியம் செய்கிறான்)

குழந்தைகளே, என்னால் இதுமட்டும்தான் சொல்லமுடியும். எனக்கு ஒரே ஒரு பிரார்த்தனைதான். எங்கு வாழமுடியுமோ அங்கே வாழுங்கள். உங்களால் முடிந்த மட்டும் சந்தோஷமாக இருங்கள்.

கிரியோன்: போதும், அழுததெல்லாம் போதும். உள்ளே போ.

ஈடிபஸ்: போகத்தான் வேண்டும். ஆனால் துக்கமாக இருக்கிறது.

கிரியோன்: காலம் எல்லாவற்றையும் சரிசெய்துவிடும், ஈடிபஸ்.

ஈடிபஸ்: அப்படியானால், என் மனத்தில் இருக்கும் ஆசையைச் சொல்லவா?

கிரியோன்: என்ன ஆசை அது?

ஈடிபஸ்: தீப்ஸை விட்டு என்னை அனுப்பிவிடு.

கிரியோன்: கடவுள் அந்த வரத்தைத் தருவார்.

ஈடிபஸ்: கடவுள்தான் என்னை வெறுக்கிறாரே!

கிரியோன்: இல்லை, அவர் நிச்சயம் உன் ஆசையை நிறைவேற்றுவார்.

ஈடிபஸ்: சத்தியமாக?

கிரியோன்: எனக்குத் தெரிந்ததை நான் சொல்கிறேன்.

ஈடிபஸ்: அப்படியானால், என்னை உள்ளே அழைத்துப்போங்கள்.

கிரியோன்: குழந்தைகளை விட்டு வா…

ஈடிபஸ்: ஐயோ, முடியாது… என்னை அவர்களிடமிருந்து பிரித்துவிடாதே.

கிரியோன்: இப்போது நீ அரசன் இல்லை, கட்டளையிடுவதற்கு. தெரிந்துகொள். நீ அரசனாக இருந்தபோது ஏற்பட்டுவிட்ட அழிவை எண்ணிப்பார்.

(பாடற்குழுவினரைத் தவிர அனைவரும் உள்ளே செல்கின்றனர். பாடற்குழுத் தலைவன் பார்வையாளருக்கு நேர் நின்று அவர்களைப் பார்த்துப் பேசுகிறான்)

பா.கு.தலைவன்:  தீப்ஸ் நாட்டு மக்களே! ஈடிபஸைப் பாருங்கள்… ஸ்பிங்ஸின் புகழ் வாய்ந்த புதிர்களின் விடைகளைக் கண்டறிந்த மன்னர். பலம் வாய்ந்த மன்னர்களை வெற்றி கண்டவர்… மானிடர்களின் கண்கள் பொறாமையோடுதான் இவரை நோக்கின… இறுதியில் விதி இவரை இப்படி அழித்து வெற்றி கண்டது! ஒவ்வொரு மனிதனும் மனித குலத்தின் பலவீனங்களின்போது தனது கடைசி நாளை எண்ணிப் பார்க்கட்டும்!

செல்வத்தால், அதிர்ஷ்டத்தால், யாரும் இறுமாந்து இருந்துவிட வேண்டாம். மரணத் தறுவாயில், துன்பங்களற்ற ஒரு நினைவுச்சரத்தை ஒருவன் கொள்ளமுடியுமானால், அவன் தன் நல் அதிர்ஷ்டத்தை அப்போது எண்ணிச் சந்தோஷப்படட்டும்!

-திரை-

நாடகம்