எனது மொழிபெயர்ப்பு அனுபவங்கள்

எனது மொழிபெயர்ப்பு அனுபவங்கள்

நான் இதுவரை முப்பத்திரண்டு நூல்களுக்கும் மேல் மொழிபெயர்த்திருக் கிறேன். அதனால்தான்  என் மொழிபெயர்ப்பு அனுபவங்கள் என்ற இந்தத் தலைப்பினைத் தேர்ந்தெடுத்தேன். என் அனுபவங்கள் எதிர்கால மொழிபெயர்ப்பாளர் களாகிய உங்களுக்கும் பயன்படும் அல்லவா? ஆயினும், இங்கே முதன்மையாக வந்திருப்பவர்கள் இளங்கலை, இளமறிவியல் அளவிலான மாணவர்கள் என்று எனக்கு சொல்லப்பட்டதால் நான் ஆழமான மொழிபெயர்ப்புப் பிரச்சினைகளுக்குள் செல்வதைத் தவிர்க்கிறேன்.

இன்றைக்கு மொழிபெயர்ப்பின் தேவையையும் இன்றியமையாமையையும் யாரும் எடுத்துச் சொல்லத் தேவையில்லை. செய்தித்தாள்கள், தொலைக்காட்சி முதலாகப் பாடப்புத்தகங்கள் வரை நமக்குக் கிடைக்கும் தகவல்களில் பெரும் பகுதி மொழிபெயர்ப்பின் வாயிலாகத்தான் கிடைக்கின்றன. ஓவியம் போன்ற பார்வைக் கலைகளாக இருப்பினும் திரைப்படமாக இருப்பினும் எல்லாவற்றிலும் மொழி பெயர்ப்புக்கு முக்கிய இடம் இருக்கிறது. வாராவாரம் ஹாலிவுட் திரைப்படங்களையும் பிற இந்திய மொழித் திரைப்படங்களையும் ‘டப்பிங்’ வாயிலாகத் தமிழில் கண்டு இரசிக்காதவர் யார்?

முதலில், ஒரு நல்ல மொழிபெயர்ப்பாளனாக இருக்க, பலவேறு அறிவுத் துறைகளிலும், பலவேறு மொழிகளிலும் பயிற்சி வேண்டும். இங்கே எனது வாழ்க்கை யின் உதாரணத்திலிருந்து தொடங்குவதே நல்லது. நான் அடிப்படையில் ஓர் அறிவியல் மாணவன். பி.எஸ்சி இயற்பியல் படிப்பினை மிகச் சிறந்த மதிப்பெண் ணோடு முடித்தவன். அக்காலத்தில் பியூசி என்று சொல்லப்பட்ட பன்னிரண்டாம் வகுப்பில் கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்ணோடு கணிதப்பாடத்தை எடுப்பேன் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இயற்பியல்-குறிப்பாகக் கோட்பாட்டு இயற்பியல்-தியரடிகல் ஃபிஸிக்ஸ் மேலுள்ள ஆர்வத்தினால், அதைப் படித்தால், கணிதத்திலும் இயற்பியலிலும் என இரு துறைகளிலுமே வல்லவனாக முடியும் என்பதால் பௌதிகத்தைப் பாடமாக எடுத்தேன். இயற்பியலுக்கு இன்னொரு துணைப்பாடம் வேதியியல். எனவே அடிப்படையில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய துறைகளில் அறிவு பெற்றிருந்தேன்.

அக்காலத்தில் இப்போதைய முறை போல் கிடையாது. அறிவியல் படித்தாலும் கூடவே சில கலைப்பாடங்கள் படிக்க வேண்டும். எனவே தர்க்கம் (லாஜிக்) படிப்பிலும் நான் ஈடுபட்டேன்.
கல்லூரியில் இம்மாதிரிப் படிப்பில் ஈடுபட்டாலும், அதில் நான் அபரிமிதமான வெற்றிபெறக் காரணமாக அமைந்தவர்கள் என் பள்ளி ஆசிரியர்கள்தான். நான் படித்தது சாதாரண அரசு உயர்நிலைப் பள்ளிதான். (அக்காலத்தில் மாவட்டக் கழகங்களால்-போர்டுகளால்-நடத்தப்பட்டதால், அவற்றிற்கு போர்டு உயர்நிலைப் பள்ளிகள் என்றே பெயர். நாங்கள் படித்த காலத்தில் முதல் படிவம், இரண்டாம் படிவம் என்றே வகுப்புகளைச் சொல்வார்கள். எங்கள் காலத்தில்தான் அவை ஆறாம் வகுப்பு ஏழாம் வகுப்பு போன்ற பெயர்கள் இடப்பட்டன. அக்கால அரசுப் பள்ளி ஆசிரியர்களே மிகச் சிறப்பான முறையில் பாடம் நடத்துபவர்களாக இருந்தார்கள். அதாவது அவர்கள் ‘டீச்சிங்’ செய்பவர்களாக இருந்தார்கள், ‘கோச்சிங்’ செய்பவர்களாக இல்லை. அவர்கள் இட்ட அடித்தளம்தான் எனக்குப் பலவேறு துறைகளிலும் ஆர்வத்தையும் அறிவையும் உண்டாக்கியது.

கல்லூரியிலும், குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டும் இக்காலப் படிப்பு போல அக்காலத்தில் கிடையாது. அறிவியல் படித்தாலும் எங்கள் கால மாணவர்களில் பெரும்பாலோர்க்குத் தமிழிலும் ஆங்கிலத்திலும் நாவல்களை வாசிக்கும் பழக்கம் இருந்தது. தமிழில் அக்காலத்தில் கல்கி, நா. பார்த்தசாரதி, மு. வரதராசனார் ஆகியோரால் கவரப்படாதவர்கள் கிடையாது. ஆங்கிலத்தில் எங்களுக்குப் பிடித்த ஆசிரியர்கள் சார்லஸ் டிக்கன்ஸ், தாமஸ் ஹார்டி, டி.எச். லாரன்ஸ் போன்றவர்கள். பட்டப்படிப்பின் முதலிரு ஆண்டுகளில் தமிழ் ஆங்கிலப் படிப்புகளை முடித்துவிட்டு இறுதியாண்டில் வெறும் அறிவியல் பாடங்களை மட்டுமே படிக்க நேர்ந்தாலும், இம்மாதிரி ஆசிரியர்களின் நாவல்களை நாங்கள் படித்தவாறே இருப்போம். ஆங்கிலச் செய்தித்தாள்களை வாசிக்கும் வழக்கமும் பலபேருக்கு இருந்தது. அக்காலத்தில் செமஸ்டர், டிரைமெஸ்டர் முறையெல்லாம் கிடையாது. ஆகவே எங்களுக்குப் பிடித்தமான நூல்களைப் படிக்க நிறைய அவகாசம் இருந்தது.

இக்காலக் கல்விமுறை செமஸ்டர் முறையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த முறை மிகவும் குறைபாடு உடையது. இது அறிவு வளர்ச்சிக்கு உகந்த ஒன்று அல்ல. முக்கியமாக இரண்டு குறைகளை நான் காண்கிறேன். ஒன்று, குறுகிய கால அவகாசத்தில் படிக்கும் அவ்வத்துறை சார்ந்த விஷயங்களில், தாள்களில் மட்டுமே கவனம் செலுத்தி அதில் நல்ல மதிப்பெண் பெறவேண்டும் என்ற நிலை இருப்பதால், அகலமான, பரந்த அறிவுக்கு அவகாசமே இருப்பதில்லை. அக்காலத்தில் அறிவியல் படிப்பவனுக்கும் பொருளாதாரத்திலோ இந்திய வரலாற்றிலோ தர்க்கத்திலோ ஒழுக்கவியலிலோ போதிய பரிச்சயம் இருக்கும்-நிச்சயம் அடிப்படை அறிவாவது இருக்கும். இக்காலத்தில் அப்படிக் கிடையாது.

குதிரைக்குப் பட்டையிட்டுக் கண்ணை மறைப்பதுபோல இக்காலக் கல்வி மாணவரின் பார்வையைக் குறுக்கிவிடுகிறது. இதனால் மாணவர்களுக்கு முக்கியமாகத் தேவையான சமூக அக்கறை இல்லாமல் போய்விடுகிறது.
இரண்டாவது குறை, இப்போதெல்லாம் கேள்விகள் ‘அப்ஜெக்டிவ் டைப்’ முறையில், அதாவது புறவய முறையில் அமைக்கப்படுகின்றன. இம்மாதிரிப் புறவய முறையில் பதிலளிப்பதனால், மொழியறிவு இல்லாமல் போய்விடுகிறது. இதில் அந்தந்தக் கேள்விக்கு சரி-தவறு என்றோ, நான்கு விடைகளில் ஒன்றைத் தேர்வு செய்தோ, இம்மாதிரி விடையளிக்க வேண்டியிருக்கிறது. அல்லது ஒற்றை வார்த்தை யில், ஒற்றை வரியில். விரிவான விடைக்கு அவசியமில்லை. நாங்கள் படித்த காலத்தில் கட்டுரை வடிவில் பெரும்பாலான கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டி யிருக்கும். கட்டுரை வடிவில் பதிலளிப்பது என்றால், அறிவியல் பாடங்களாக இருந்தாலும்கூட, பாடவிஷயங்களை முறையாக வடிவமைத்து-’ஆர்கனைஸ்’ செய்து-எதை முதலில் கூறவேண்டும், எதை இறுதியாகக் கூற வேண்டும், எவற்றை இடையில் ‘பாயிண்டு-பாயிண்டாக’, தகவல்களாகச் சொல்ல வேண்டும் என்ற விதமாக விடை யைத் தயார்செய்ய வேண்டியிருக்கும். இப்போது அப்படி இல்லை.

குறிப்பாக இதனை மொழிப்பாடங்களுக்குச் சொல்கிறேன். மொழிப்பாடங்களுக்கு ஓரிரு வார்த்தையில் விடையளித்துப் பயனில்லை. வாக்கிய அமைப்பே மாணவர்க்குப் பிடிபடாது. நான் தமிழ் இலக்கியம் அன்றி, ஆங்கில இலக்கியமும் படித்தவன். ஆங்கில இலக்கியம் படித்த காலத்தில் எங்களுக்கு ‘எஸ்ஸே’ (கட்டுரை) என்று ஒரு தாள் உண்டு. மூன்று மணி நேரத்திற்குத் தேர்வில் ஒரே ஒரு கட்டுரை மட்டுமே எழுத வேண்டும். அப்படியானால் எவ்வளவு விஷய கனம், அமைப்பாக்கம் செய்யும் திறன் போன்றவையெல்லாம் தேவைப்படும் என்பதை யோசித்துப் பாருங்கள். ஆகவே பலவேறு துறை அறிவுகளைப் பெறுவதற்கும்-அகலமாகப் படிப்பதற்கும், ஆழமாகப் படிப்பதற்கும் என்னைப் பொறுத்தமட்டில் பழைய காலக் கட்டுரை வடிவ விடையளிப்பு முறையே மிகச் சரியானது என்று படுகிறது.

அறிவியல் துறைப் படிப்பு முடித்தபிறகு எனக்கு மொழித்துறையில் ஆர்வம் இருந்ததால், தமிழ் ஆங்கிலம் ஆகியவற்றில் முதுகலைப் படிப்பை முடித்தேன். பிறகு தமிழில் பிஎச்.டி எனப்படும் முனைவர் பட்டத்திற்கும் ஆய்வு செய்து முடித்தேன். முறையாக நான் எழுதத் தொடங்கியது ஏறத்தாழ எண்பதாம் ஆண்டு தொடங்கி என்று சொல்லலாம். முறையாக என்று சொல்வதற்குக் காரணம், அவை அப்போது தான் பலவேறு கருத்தரங்களிலும், பத்திரிகைகளிலும் வெளிவரத் தொடங்கின. அதற்கு முன்னரே, ஏறத்தாழ 1968 முதலாகவே நான் எழுதி வந்திருக்கிறேன்.

எழுத்தை இங்கே குறிப்பிடுவதற்குக் காரணம், ஒரு மொழிபெயர்ப்பாளன், நல்ல எழுத்தாளனாகவும் இருக்கவேண்டும். மொழிபெயர்ப்பு என்பதும் ஓர் எழுத்துவகை தானே? 1968 அளவில் என் நண்பர்களும் நானும் ஆர்க்காட்டில் தலைமைத் தமிழ்ச் சங்கம் என்ற ஓர் அமைப்பை உருவாக்கியிருந்தோம். அதன் சார்பாக மாதமொரு மேடை என்று முழுநிலா நாளில் கவியரங்கமும், அதைத் தொடர்ந்து சங்கப் பலகை என்ற பெயரில் அக்கவிதைகள் பற்றிய விவாதங்களும் நடைபெறும். கவிதை, திறனாய்வு முதலிய துறைகளில் எழுதும் பயிற்சிபெற அந்த அரங்குகள் எனக்கு உதவியாக இருந்தன.

1975இல்தான் திருச்சி பிஷப் ஹீபர் கல்லு£ரியில் தமிழ்த்துறையில் பயிற்றுநர் எனப்படும் ட்யூடர் பணிக்கு வந்து சேர்ந்தேன். வந்து ஓரிரு ஆண்டுகள் சற்றே சிரமமானவை. கல்லூரிப்பாட முறைக்கும் கற்பிக்கும் முறைக்கும் ஆயத்தப்படுத்திக் கொள்வது, பிறகு திருமணம், குடும்பப் பிரச்சினைகள் எனப் பல வேலைகள் இருந்தன. ஏயூடி எனப்படும் கல்லு£ரி ஆசிரியர் சங்கத்தில் சேர்ந்து பயிற்றுநர் வேலையை ஒழித்து விரிவுரையாளர் அல்லது துணைப்பேராசிரியர் வேலைக்கு மாறவும், யூஜீசி ஊதியம் பெறவும் போராட வேண்டிய நிலையும் இருந்தது. ஆயினும் 1978இல் ஜமால் முகமது கல்லு£ரியின் ஆங்கிலப் பேராசிரியரான திரு. ஆல்பர்ட் அவர்களைச் சந்தித்ததில் என் வாழ்க்கையில் பெரிய திருப்பம் ஏற்பட்டது. அவர் வாசகர் அரங்கம் (ரீடர்ஸ் ஃபோரம்), திருச்சி நாடகச் சங்கம், திரைப்படச் சங்கம் (சினி ஃபோரம்) என்ற அமைப்புகளில் முன்னணி வகித்து அவற்றை நடத்துபவராக இருந்தார். ரீடர்ஸ் ஃபோரம் என்பது இலக்கிய வாசிப்பு, விசாரத்திற்கான அமைப்பு. சினிஃபோரம் என்பது கலைப்படங்களைப் பார்ப்பதற்கான அமைப்பு. நாடக சங்கம் என்பதற்கு விளக்கம் தேவையில்லை.

இவற்றில் நான் வாசிப்பு, விசாரணை அல்லது திறனாய்வு, நாடகத் துறை, கலைத் திரைப்படத் துறை ஆகியவற்றில் ஈடுபடலானேன். மொழிபெயர்ப்பைப் பொறுத்தவரை இவை என் பல துறை அறிவினைப் பெருக்கிக்கொள்ள உதவின. குறிப்பாக, கலைத் திரைப்படங்களைப் பார்ப்பது மொழிபெயர்ப்பில் ஈடுபட நல்ல பயிற்சி. காரணம், கலைப்படங்கள், ஜெர்மனி, ஹங்கேரி, ஸ்வீடன், போலந்து, ஜப்பான், சீனா எனப் பல்வேறு நாடுகளிலிருந்தும், இந்தியாவின் பலவேறு பிரதேசங்களிலிருந்தும் அந்தந்த மொழிகளில் வந்தாலும், அவை பெரும்பாலும் ஆங்கிலத் துணைத்தலைப்புகளோடும் வசனங்களோடும் வரும். காட்சிகளைப் பார்த்தவாறே, துணைத் தலைப்புகளையும் படித்து, அந்தந்த வசனங்களைப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதே மொழிபெயர்ப்புக்கு ஒரு நல்ல பயிற்சி அல்லவா? அவற்றைப் புரிந்துகொண்டு நாங்கள் ஒவ்வொரு திரைப்படத்தைப் பார்த்தபிறகும் ஓர் அரைமணிநேரம், முக்கால்மணி நேரம் அதைப்பற்றி விவாதிக்கவும் செய்வோம். இதனால் என் மொழிபெயர்ப்புத் திறன் மேம்படலாயிற்று.

பெரும்பாலும் கல்லூரியில் நான் நவீன கொள்கைகள், திறனாய்வு, இலக்கியம் பற்றிய பாடங்களை நடத்துபவனாக இருந்ததனால், வகுப்பறையிலேயே சில சமயங் களில் ஆங்கிலப் புத்தகங்களை வைத்து அவற்றைப் பார்த்தபடியே தமிழில் அக்கருத்துகளை உரையாற்றும் பழக்கமும் எனக்கு இருந்தது. பெரும்பாலான தமிழாசிரியர்கள் வகுப்பறைகளைப் பட்டிமன்றத்துக்கும் பிற மேடைப் பேச்சுவகை களுக்கும் பயிற்சிக்களமாகப் பயன்படுத்துவது வழக்கம். என்னை அறியாமலே நான் விரைந்து மொழிபெயர்ப்புச் செய்ய ஓரளவு வகுப்பறைகள் காரணமாக அமைந்தன என்று சொல்லலாம்.

இவையன்றி, இருவகைகளில் எனக்கு மொழிபெயர்ப்பில் பயிற்சி மேம்பட்டது எனலாம். ஒன்று, நான் படிக்கும் சங்கக் கவிதைகள் அல்லது பிற பழைய கவிதைகளை வகுப்பறைகளில் இக்கால நடையில் கவிதைகளாக மாற்றிச் சொல்லும் வழக்கம் எனக்கு இருந்தது. ஒரே மொழியில் பெயர்ப்பதும் மொழிபெயர்ப்பின் ஒரு வகைதான். அதாவது ஒரு சங்கக் கவிதையை-குறுந்தொகை அல்லது அகநானூற்றுக் கவிதையை, அல்லது நந்திக்கலம்பகக் கவிதையை, குற்றாலக் குறவஞ்சிக் கவிதையை இக்காலத் தமிழ்நடையில் பெயர்ப்பதும் மொழிபெயர்ப்பதுதான். இந்தப் பழக்கம் எனக்குக் கல்லூரி நாட்கள் முதலாகவே இருந்தது.

இன்னொன்று, 1982 முதலாகவே நான் லிடரரி தியரி எனப்படும் இலக்கியக் கோட்பாட்டுப்படிப்பில் அக்கறை காட்டி, அதைப் பற்றி எழுதி வந்திருக்கிறேன். அதற்கு மொழிபெயர்ப்பு பலவகையிலும் உதவியிருக்கிறது. அக்காலத்தில்தான் புதுக் கவிதை பெருவரவேற்புப் பெறத் தொடங்கியிருந்தது. அதைச் சார்ந்து படிமம், குறியீடு போன்றவை பற்றிய விவாதங்களும், சர்ரியலிசம் போன்ற கோட்பாட்டு அறிமுகங் களும் தேவையாக இருந்தன. எண்பதுகளின் தொடக்கத்தில் எக்சிஸ்டென்ஷியலிசம் தமிழகத்தின் சிறுபத்திரிகை வட்டாரங்களில் வரவேற்புப் பெற்றிருந்தது. அதன் காரண மாக சார்த்தர், காம்யூ போன்ற பிரெஞ்சு எழுத்தாளர்களின் எழுத்துகள் பழக்கமாயின. எங்கள் வட்டத்தைச் சேர்ந்த நண்பர்கள், காம்யூவின் அந்நியன், காலிகூலா போன்ற படைப்புகளை மொழிபெயர்த்தார்கள். சார்த்தரின் ‘இருப்பும் இன்மையும்’ (பீயிங் அண் நதிங்னஸ்), நாசியா போன்ற படைப்புகளில் ஈடுபட்டோம். ‘பீயிங் அண் நதிங்னஸ்’ படித்தது, பின்னர் பலவித தத்துவ விசாரங்களில் ஈடுபடவும் உதவியாக இருந்தது. மேலும் இருத்தலியல் பற்றிய ஆர்வத்தினால் தாஸ்தாயேவ்ஸ்கியின் நாவல்களில் பெருமளவு ஈடுபாடு எங்களுக்கு ஏற்பட்டது. வழக்கமாகப் படிக்கப்படும் குற்றமும் தண்டனையும், காரமசோவ் சகோதரர்கள் போன்றவற்றை அல்லாமல், தி இடியட் போன்ற படைப்புகளையும் தேடிப் படித்தோம்.
எனக்கு கிரேக்கச் செவ்வியல் இலக்கியங்கள் மிகவும் பிடிக்கும் என்பதால் நான் ‘ஈடிபஸ் அரசன்’ முதலான மொழிபெயர்ப்புகளைச் செய்தேன். எங்கள் வாசகர் வட்டக் குழுவைச் சேர்ந்த கோ. ராஜாராம் என்ற நண்பர், வங்காளத்தில் பணிக்குச் சென்றதால், பாதல் சர்க்காரின் நாடகங்கள் பலவற்றையும் மொழிபெயர்த்தார். அவருடைய ‘ஏவம் இந்திரஜித்’ நாடகத்தை நாங்கள் ‘பிறகொரு இந்திரஜித்’ என்ற பெயரில் திருச்சி நாடகச் சங்கத்தில் அரங்கேற்றினோம்.

என்னை ஒரு எழுத்தாளன், மொழிபெயர்ப்பாளன் என்பதற்கு மேலாகப் படிப்பாளி என்றே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அல்லது என் துறை முன்னோர்கள்-சீனியர்கள் சொல்லியதுபோலப், புத்தகப் புழு என்றும் சொல்லலாம். தத்துவத்தில் எனக்கு அக்கறை இருந்தது. அதற்குக் காரணம், மார்க்சியத்தில் எனக்கு ஏற்பட்ட ஈடுபாடு. பொதுவாக அக்காலக் கவிஞர்கள், அறிவுஜீவிகள் பெரும்பாலோர் மார்க்சியத்தை அறிந்து கொள்ளவேனும் செய்வார்கள். நானும் அவ்வகையில் மார்க்சியத்தில் ஈடுபட்டேன்.
மார்க்சியத்தை நன்கறிந்து கொள்ளவும் மொழிபெயர்ப்பு நூல்களே காரண மாக இருந்தன. அக்காலத்தில் என்சிபிஎச் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்) விற்பனையகங்களில் ரஷ்ய மார்க்சிய நூல்கள் மட்டுமே பெரும்பாலும் படிக்கக் கிடைக்கும். அவ்வகையில் கார்ல் மார்க்சின் பொதுவுடைமைக் கட்சியின் அறிக்கை, பொருளாதார, தத்துவக் கையெழுத்துப்படிகள் போன்ற நூல்களை ஆர்வமுடன் படித்தேன். (தாஸ் கேபிடல் நூலின் மூன்று பாகங்களையும் வாங்கி வைத்ததோடு சரி. முதல் பாகத்தில் சில பகுதிகளைப் படித்திருக்கிறேன். முதல் பாகத்தின் பிற பகுதிகளையும், பிற பாகங்களையும் இனிமேல் படிக்கப்போவது கிடையாது. படிக்க இயலாதவாறு கண்ணும் கெட்டுப் போய்விட்டது.) மார்க்சியத்தின் அடிப்படை அறிவின்றி, அக்காலத்தில் பிரான்சு நாட்டில் பேசப்பட்ட கொள்கைகளைப் புரிந்துகொள்வது கடினம். மேலும் மார்க்சியத்தில் சாதாரணமாகப் பேசப்படும் விஷயங்களைப் புரிந்து கொள்ளவும் தத்துவ அறிவு தேவை.

உதாரணமாக, மார்க்ஸ், ஹெகலைத் தலைகீழாக்கினார் என்று சர்வசாதாரணமாகச் சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். இந்தக் கூற்றைப் புரிந்துகொள்ள, ஹெகலின் இயங்கியல் (டயலெக்டிக்ஸ்) பற்றிய அறிவு, அது எவ்விதம் கருத்துமுதல்வாதத்திற்கு அனுசரணையாகப் பயன்பட்டது, அதை மார்க்ஸ் எவ்வாறு பொருள்முதல்வாதத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைத்தார்-அதாவது தலைகீழாக்கினார் போன்ற விஷயங்களை அறிய வேண்டும். ஹெகலைச் சற்றே ஆழமாக அறிய வேண்டுமானால், காண்ட்டின் தத்துவ அறிமுகம் வேண்டும். க்ரிடீக் ஆஃப் தி ப்யூர் ரீஸன், க்ரிடீக் ஆஃப் தி ப்ராக்டிகல் ரீஸன் போன்றவற்றின் பரிச்சயம் வேண்டும். அவருடைய காலாதீதக் கொள்கைகள் பற்றிய அறிவு வேண்டும். இவற்றைப் பற்றி நன்கறிய வேண்டுமானால் நீங்கள் டே கார்ட்டேவுக்குப் போகவேண்டும். டே கார்ட்டேவுக்குப் போகவேண்டு மானால், அரிஸ்டாடிலின் தத்துவத்திற்குப் போக வேண்டும். ஆக மொத்தம், ஐரோப்பியத் தத்துவஞானத்தில் அடிப்படையான அறிவு வேண்டும் என்று சுருக்கமாகச் சொல்லிவிடலாம்.

மார்க்சியம் மட்டுமல்ல, ஃப்ராய்டின் கனவுகளின் விளக்கம், நகைச்சுவைத் துணுக்குகளும் நனவிலிக்கு அவற்றின் தொடர்பும், குலக்குறியும் இனத்தடையும் போன்ற நூல்களும் அப்போது படித்தவைதான். அன்றைய புதுக்கவிதைகளை-குறிப்பாக எழுத்து பத்திரிகையில் வெளிவந்த புதுக்கவிதைகளைப் பற்றி விவாதிக்க ஃப்ராய்டியம் மிகவும் பயன்பட்டது. மேலும் மார்க்சியத்திலும் ஃப்ராய்டியத்திலும் கையாளப்பட்ட சொற்களே புதுமையானவை. அவை மொழிபெயர்ப்பில் ஆர்வத்தை ஏற்படுத்தின.
மேலும், சமூகத்தை நோக்குவதில் மார்க்ஸ§ம் ஃப்ராய்டும் முற்றிலும் எதிர் எதிரானவர்கள் என்றாலும், அவர்கள் இருவரிடமுமே அமைப்புவாதக் கூறுகள் இருந்தன. 1982இல் தமிழவன் எழுதிய ஸ்ட்ரக்சுரலிசம் என்ற புத்தகம் தமிழில் வெளி வந்தது. அது ஒரு திருப்பத்தைத் தமிழில் உண்டாக்கியது. சிறுபத்திரிகை சார்ந்த எழுத்தாளர்கள், வாசகர்கள் பலரும் அமைப்பியத்தில் ஆர்வம் காட்டலானார்கள். அது ஒரு மோஸ்தராகவே அப்போது ஆகிவிட்டது.

ஆங்கில இலக்கியம் படித்தவன் என்ற முறையில், எனக்கு மொழியியலில், குறிப்பாக அமெரிக்க முறையிலான ப்ளூம்ஃபீல்டு போன்றோரின் அமைப்பு மொழி யியலில் பரிச்சயம் இருந்தது. ஆனால் லெவி ஸ்டிராஸ் போன்றோரின் அமைப்பிய மும், பிரெஞ்சுச் சிந்தனைகளும் அப்போது பழக்கமில்லை. எனவே பிரெஞ்சு நூல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகளைத் தேடித்தேடிப் படிக்கத் தொடங்கினேன். குறிப் பாக என்னைக் கவர்ந்தவர் ரோலண்ட் பார்த். (அடுத்தபடி, ரோமன் யாகப்சன். ஆனால் இவர் பிரெஞ்சுத் தத்துவப் புலத்தைச் சேர்ந்தவர் அல்ல.)

அமைப்புவாதம், பின்னமைப்புவாதம் (ஸ்ட்ரக்சுரலிசம், போஸ்ட் ஸ்ட்ரக்சுர லிசம்) பற்றிய எனது புத்தகம் 1990 தொடக்கத்தில் வெளிவந்தது. அந்தப் புத்தகத்தை எழுதும்போது நிறைய வார்த்தைகளை நானே உருவாக்க வேண்டியிருந்தது. உதாரணத்திற்குப் ‘பிரணவமையவாதம்’, ‘லிங்கமையவாதம்’ போன்ற எத்தனையோ சொற்கள். ‘லோகோசென்ட்ரிசிஸம்’ என்ற சொல்லைப் பலபேர் ‘மொழிமைய வாதம்’ என்று எளிதாகச் சொல்லிவிட்டுப் போய்விடக்கூடும். ஆனால் லோகாஸ் என்பதற் கான முழு அர்த்தத்தையும் அது கொண்டுவராது. ஆகவே பிரணவம் என்ற சொல்லுக்குப்போகவேண்டி நேர்கிறது. ‘ஃபாலோசெண்ட்ரிசிசம்’ என்பதை ‘லிங்க மையவாதம்’ என மொழிபெயர்த்தேன். ‘பிராப்ளமேடிக்’ என்ற விமரிசனச் சொல்லை சிக்கல் என்று வெறுமனே பெயர்க்க முடியாது. ‘தத்துவக்கட்டு’ என்று மொழிபெயர்க்க வேண்டும். இவையெல்லாம் கோட்பாடு சார்ந்த பிரச்சினைகள். ‘அபோரியா’ என்பதைக் கடக்கமுடியா ஐயம் என்றோ கடக்கவியலாச் சந்தேகம் என்றோ மொழிபெயர்க்கலாம். சொற்களின் மொழிபெயர்ப்பில் ஆர்வத்தை ஏற்படுத்தக் கூடியது தத்துவம்.

இன்றும், நமது நாட்டுத் தத்துவத்தை மட்டுமல்ல, மேற்கத்தியத் தத்துவத்தையும் நன்கு விளக்க நம் சைவசித்தாந்த நூல்களைப் படிக்கும் பயிற்சியும், நீலகேசி உரை போன்ற நூல்களைப் படிப்பதும் சிறப்பாக உதவும். இதனை நன்கறிந்தும் நான் சைவ சித்தாந்தத்திலோ, சமண-பௌத்த விவாதங்களிலோ மிகுதியாக ஆர்வம் காட்ட வில்லை. தமிழ் ஆசிரியர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது இதுதான்-மணிமேகலையின் பெரும்பகுதி தத்துவ விசாரம் என்று அதனைப் படிக்காமல் விட்டுவிடுகிறார் கள். அதேபோல நீலகேசி நூலையும் உரையையும் படிப்பதில்லை. சிவஞான முனிவரது நூல்களையும் பயிலுவதில்லை. இவற்றையெல்லாம் தமிழாசிரியர்கள் பயின்றால் ஆழங்காற்பட்ட தமிழறிவு கிடைப்பதோடு பல புதிய சொற்களும் இன்றைக்கு ஏற்றவாறு பயன்படுத்தக் கிடைக்கும். அவர்கள் பட்டிமன்றத்திலும் நகைச்சுவைப் பேச்சிலும் காட்டும் ஆர்வத்தை அன்புகூர்ந்து நல்ல நூல்களைப் பயிலுவதிலும் பரப்புவதிலும் காட்டவேண்டும்.

அமைப்புமையவாதம் நூலைத் தொடர்ந்து, செய்தித் தொடர்பியல் கொள்கை கள், பத்திரிகை-தலையங்கம்-கருத்துரை போன்ற நூல்கள் வெளியாயின. கோட்பாடு சாராத சொற்கள் பலவற்றையும் நான் உருவாக்கியிருக்கிறேன், இப்போது அவை பொதுப்பயன்பாட்டிலும் இருக்கின்றன. தனிநாயகம் இதழியல் கல்லூரி என்ற அமைப்பு எண்பதுகளின் இறுதியில் திருச்சியில் அருட்தந்தை அமுதனடிகள் முயற்சியால் உருவாயிற்று. அதில் தொடர்பியல்-குறிப்பாக வெகு மக்கள் தொடர் பியல் பற்றிய பகுதிநேர விரிவுரையாளனாக நான் இருந்தேன். அப்போதுதான் மேற்கண்ட நூல்களை எழுதினேன். செய்தித்தொடர்பியல் என்பது அப்போது புதிய துறை. (கோட்பாட்டு நிலையில் அது பேசப்பட்டதில்லை.) சான்றாக, ‘ஃபீட்பேக்’ என்பதற்கு முதன்முதலாகப் ‘பின்னூட்டம்’ என்னும் சொல்லை அந்தப் புத்தகத்தில் வழங்கியிருக்கிறேன். இச்சொல் இப்போது பரவலாகத் தொலைக்காட்சி முதலிய ஊடகங்களில் பயன்படுத்தப்படுகிறது. ‘ஒபீனியன் ரைட்டிங்’ என்பதற்குக் ‘கருத்துரை வரைதல்’ என்ற சொல்லைப் பயன்படுத்தினேன். இப்படி எத்தனை எத்தனையோ சொற்கள், தமிழில் என்னால் உருவாகியிருக்கின்றன என்று நான் சற்றே பெருமைப் படலாம்.

ஏறத்தாழ 1995 அளவிலேயே, ஒரு தன்னார்வக்குழுவின் பயன்பாட்டிற்கெனக் ‘குழந்தையின் வாழ்க்கையில் முதல் 365 நாட்கள்’ என்ற நூலை மொழிபெயர்த்து அளித்தேன். ‘தி ஃபர்ஸ்ட் 365 டேஸ் இன் எ பேபீஸ் லைஃப்’ என்பது அக்காலத்தில் பொதுமக்கள் வாசிக்கும் வகையில் ஆங்கிலத்தில் பிரபலமாக இருந்த நூல். அதைத் தான் நான் மொழிபெயர்த்தது. மொழிபெயர்ப்புக் கையெழுத்துப் படி என்னிடம் இருக்கிறது. ஆனால், அச்சுப்படி என்னிடம் இல்லை. என் அச்சுப்படிகளெல்லாம் வெகுவிரைவில் நண்பர்களிடம் போய்விடுவது வழக்கம். இதுதான் நான் மொழிபெயர்த்த முதல் நூல். அறிவியல், மருத்துவத்துறை சார்ந்த நூல்.

அதற்குப் பிறகும் நான் அய்க்கஃப் முதலிய இயக்கங்களோடு தொடர்பு கொண்டிருந்த காரணத்தினால் மனித உரிமை சம்பந்தமான நூல்கள் சிலவற்றை மொழிபெயர்த்திருக்கிறேன். குறிப்பாக, ஐ.நா. சபையின் மனித உரிமைகள் சாசனம், ஐ.நா. சபையின் சிறார் உரிமைகள் சாசனம் ஆகியவற்றை நான் மொழி பெயர்த்து அளித்திருக்கிறேன். இவையும் கையெழுத்துப்படிகளாகவே இப்போது என்னிடம் இருக்கின்றன.

பெரும்பாலும் என் மொழிபெயர்ப்பு வாழ்க்கை நான் பணிநிறைவு பெற்ற நாள் முதலாகத்தான்-2007 அளவில்தான்-தொடங்குகிறது. இதற்காக நான் முதலில் நன்றி கூற வேண்டியது புத்தாநத்தம் என்ற ஊரிலுள்ள, அடையாளம் என்ற பதிப்பகத்தின் உரிமையாளரான திரு. சாதிக் அவர்களுக்கு. அவர் ஆக்ஸ்ஃபோர்டு பதிப்பகம் வெளியிட்ட ‘வெரி ஷார்ட் இண்ட்ரொடக்ஷன்’ என்ற வரிசையில் வந்த நூல்கள் சிலவற்றிற்கான தமிழ்ப் பதிப்புரிமையைப் பெற்றிருந்தார். அவற்றை மொழிபெயர்ப்பதில் பலபேருடைய உதவியை நாடினார். அவர்களில் நானும் ஒருவன். ‘வெரி ஷார்ட் இண்ட்ரொடக்ஷன்’ (மிகச் சிறிய அறிமுகம்) என்ற வரிசையில் நான் ஆறு நூல்களை மொழிபெயர்த்திருக்கிறேன். அவை,

1. உலகமயமாக்கல், 2. பயங்கரவாதம், 3. இறையியல், 4. சமூகவியல், 5. இசை, 6, நீட்சே ஆகியவை.

இவற்றில் நீட்சே என்பது மட்டும் இலக்கியம்-தத்துவம் சார்ந்த மொழி பெயர்ப்பு. நீட்சே என்பவர், ஜெர்மானியத் தத்துவவாதி. எந்த மரபிலும் வராத, தனித்துவமிக்க தத்துவஞானி. நம் காலப் போலியான அறவியல், ஒழுக்கவியல் மரபு களை முற்றிலுமாக எதிர்த்தவர். ‘கடவுள் செத்துப்போனார்’ என்ற அவரது வாசகம் பிரபலமானது. அதேசமயம், “இலக்கணம் இருக்கும்வரை கடவுளும் இருப்பார்” என்ற அவரது கூற்றும் பிரபலமானது. காண்ட் போன்றவர்கள் சுதந்திர விருப்புறுதி (ஃப்ரீ வில்) என்பதை வலியுறுத்த, நீட்சே அதனை முற்றிலுமாக மறுத்தவர். அதிகாரத்திற்கான விருப்புறுதி, மீமனிதன் போன்ற அவரது கோட்பாடுகள் பிரபலமானவை.

மிகச் சுருக்கமான அறிமுகம் என்று சொல்லப்பட்டாலும், அந்த நூலை வரைந்த ஆசிரியர் மட்டும் நீட்சே பற்றிய மிக விரிவான விமரிசனமாக அந்த நூலை அமைத்திருந்தார். நீட்சேயின் எல்லா நூல்களையும் பற்றிய அறிமுகமாக அந்த நூல் அமையாமல், அவற்றைப் பற்றிய ஆழமான விமரிசனமாக இருந்தது. ஏற்கெனவே கூறியதுபோல, மேற்கத்தியத் தத்துவத்தை நான் ஓரளவு படித்திருந்தமை, நீட்சேவை மொழிபெயர்க்க மிகவும் உதவியாக இருந்தது.

மொழிபெயர்ப்பின்போது தொடரமைப்பில் முதலில் கவனம் வைக்கவேண்டும். உதாரணமாக, Thus spake Zarathushtra என்பது நீட்சேயின் ஒரு நூலின் பெயர். தமிழில் இந்த நூலைப் பெயர்த்தவர் ஒருவர், ‘ஜாரதுஷ்டிரன் இவ்வாறு கூறினான்’ என்று பெயர்த்துள்ளார். கூடியவரை முதல்நூலின் வாக்கிய அல்லது தொடர் அமைப்பை அப்படியே கையாள முயல வேண்டும். குறிப்பாகக் கவிதைகளில், கவிதைநடை பெற்ற நூல்களில் இது முக்கியமானது.  Zarathushtra spake thus என்று நீட்சேவுக்குப் பெயர்வைக்கத் தெரியாதா? எனவே இதனை மொழிபெயர்த்தவர், “இவ்வாறுரைத்தான் ஜாரதுஷ்டிரன்” என்று தலைப்பிட்டிருக்க வேண்டும்.

நான் மொழிபெயர்த்தவற்றில் ஒவ்வொரு நூலும் ஒவ்வொரு வகை, ஒவ்வொன்றும் ஒவ்வொரு துறையைச் சேர்ந்தவை. உலக மயமாக்கல் என்பது குளோபலைசேஷன் என்று சொல்லப்படும் உலக நிகழ்வினால் பல்வேறு நாடுகளிலும் பல்வேறு துறைகளிலும் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றி விவரிக்கும் நூல். அதன் முதற்பகுதி பெருமளவு பொருளாதாரக் கொள்கைகள் அடங்கியது, பிற்பகுதி உலகின் கலாச்சார ஈடுபாடு பற்றியது.

பயங்கரவாதம் என்ற நூல், இந்தியா உட்பட உலகின் பலபகுதிகளிலும் நிகழும் டெரரிஸ்டு நிகழ்வுகள் பற்றிய சமூகவியல், தத்துவ அடிப்படையிலான ஆய்வு.

இறையியல் என்பது கிறித்துவத்தின் திரித்துவ, தத்துவக் கொள்கைகள் பற்றி விரிவாகப் பேசுகின்ற நூல்.

சமூகவியல், சோஷியாலஜி துறை பற்றிய வித்தியாசமான, அறிவார்ந்ததோர் அறிமுக நூல்.

இசை என்பது எனக்குப் பிடித்தமான நூல். அது மேற்கத்திய இசை பற்றிப் பின்நவீனத்துவ நோக்கில் அமைந்த விமரிசன நூல். எனக்குக் கர்நாடக இசையின் அடிப்படைகள் அன்றியும், மேற்கத்திய இசையிலும் ஈடுபாடு உண்டு. பீத்தோவன், பாஹ், மோசார்ட் போன்ற இசை மேதைகளின் செவ்வியல் இசையேயன்றி, ப்ளூஸ், ராக், ஜாஸ் போன்ற பாப் இசைகளையும் இரசிப்பது எனக்கு வழக்கமாக இருந்தது. அந்த அனுபவம் இந்த நூலை மொழிபெயர்ப்பதில் எனக்குக் கைகொடுத்து உதவியது.

இவையன்றி, அடையாளம் பதிப்பகத்திற்கென நான் மருத்துவ நூல்கள் சிலவற்றையும் அறிவியல் சார்ந்த நூல்கள் சிலவற்றையும் மொழிபெயர்த்தேன். மருத்துவ நூல்களில் மிக முக்கியமானவை, ‘டாக்டர் இல்லாத இடத்தில் பெண்கள் (பெண்கள் உடல்நலத்திற்கு ஓரு சமயோசித வழிகாட்டி)’ என்ற நூலும், ‘பேற்றுச் செவிலியர் கையேடு என்ற நூலும்’.  டாக்டர் இல்லாத இடத்தில் பெண்கள் என்ற நூல், எண்பதுகளின் இறுதியில், ‘டாக்டர் இல்லாத இடத்தில்’ என்று க்ரியா பதிப்பகம் வெளியிட்ட நூலின் தொடர்ச்சி எனலாம்.

நம் நாடு உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகள் பலவற்றில், டாக்டர்களே இல்லாத கிராமங்கள் ஏராளம். அதிலும் அப்படிப்பட்ட இடங்களில் பெண்கள் தங்களுக்கே உரிய தனித்த உடலியல்பினால் அடையும் தொல்லைகள் மிகுதி. டாக்டர் இல்லாத இடங்களிலும் பெண்கள் தங்களுக்கே உரிய தனித்தன்மை வாய்ந்த நோய்களை எவ்விதம் போக்கிக் கொள்ளலாம், எவ்விதம் குழந்தைப்பேறு, குழந்தை வளர்ப்பு ஆகியவற்றில் ஈடுபடலாம் என்பதைப் பற்றியது ‘டாக்டர் இல்லாத இடத்தில் பெண்கள்’ என்ற நூல். பேற்றுச் செவிலி என்பது ஆங்கிலத்தில் மிட்ஒய்ஃப் என்ற சொல்லுக்கு எங்கள் மொழிபெயர்ப்பு. ‘பேற்றுச் செவிலியர் கையேடு’ என்பது, டாக்டர் இல்லாத இடத்தில் அவர்களுக்கு மாற்றாக, அல்லது டாக்டர்கள் இருந்தால் அவர்களுக்குத் துணையாக, குழந்தைப் பேற்றினை கவனிக்கக்கூடிய செவிலியர்கள் அல்லது தாதிமார்கள் பணியினை விளக்கப்படுத்தும் நூல்-அவர்களுக்கான கையேடு.

இவையன்றி, மேயோ கிளினிக் என்ற அமெரிக்க மருத்துவ அமைப்பு ஒன்றின் மருத்துவ நூல்கள் சிலவற்றை மொழிபெயர்த்தேன். அறிவியல் சார்நத நூல்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பற்றியது நான் மொழிபெயர்த்த ‘இயற்கை ஞானம்’ என்ற நூல். சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பற்றிய இன்னொரு முக்கியமான நூல் ‘உலகம் வெப்பமாதல்’ என்னும் நூல். உலகம் வெப்பமடைவதால் ஏற்படும் பிரச்சினைகள், பாதிப்புகள் பற்றியது இந்த நூல். இவையன்றி, ஜெனடிகலி மாடிஃபைடு ஃபுட் எனப்படும் ‘மரபணு மாற்ற உணவுவகை’ பற்றிய நூல் ஒன்றும் முக்கியமானது.

நான் மொழிபெயர்த்த நூல்களில், டாக்டர் மவுலான அபுல் கலாம் ஆசாத் பற்றிய நூல், மூன்றாம் சரபோஜி பற்றிய நூல் ஆகியவை வரலாற்றுத் தொடர் பானவை. கீழைத் தத்துவம் பற்றிய நூல் ஒன்றையும், பின்நவீனத்துவம் பற்றிய நூல் ஒன்றையும் பின்னர் மொழிபெயர்த்தேன்.

தனிநாயகம் அடிகள், தமிழ்த்துறையினால் நன்கறியப்பட்ட அறிஞர் என்று நினைக்கிறேன். உலகம் முழுவதும் தமிழின் பெருமையைப் பரப்பியவர், உலகத் தமிழ் மாநாடுகள் நடக்கக் காரணமானவர். முதல் உலகத் தமிழ்மாநாட்டைக் கோலாலம்பூரில் நடத்தியவர். மதிப்பிற்குரிய அருட்தந்தை அமுதனடிகள், தனிநாயகம் அடிகளுடைய நூற்றாண்டு விழாவினைச் சென்ற ஆண்டு நடத்தியதன் ஒரு பகுதியாக, தனிநாயகம் அடிகள் ஆங்கிலத்தில் எழுதிய ‘லேண்ட்ஸ்கேப் அண்ட் பொயட்ரி’ என்ற நூலைத் தமிழில் என்னை மொழிபெயர்க்குமாறு கூறினார். அதன் விளைவு ‘நிலத்தோற்றமும் கவிதையும்’ என்ற தமிழ் நூல். அது பூம்புகார் பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. தொல்காப்பியம், சங்கக் கவிதைகள் பற்றி ஆங்கிலத்தில், ஹியூமன் ஜியாக்ரஃபி என்னும் துறை சார்ந்து எழுதப்பட்ட நூல் அது.

மொழிபெயர்ப்புத் துறையில் நான் நன்றி செலுத்தவேண்டியவர்கள் மேலும் இருவர் இருக்கிறார்கள். ஒருவர், பொள்ளாச்சி எதிர் பதிப்பகத்தைச் சேர்ந்த அனுஷ் கான். அவருக்கென சில நல்ல இலக்கிய மொழிபெயர்ப்புகளை நான் செய்தேன். ஆந்திரக் கவிஞரும் விமரிசகரும் பத்திரிகையாளருமான வரவர ராவ் ஆங்கிலத்தில் இயற்றிய நூல் ‘சிறைப்பட்ட கற்பனை’. அவர் ஓர் ஆங்கிலப் பேராசிரியர் என்பதோடு, தெலுங்கு மொழியில் மாவோயிசக் கவிஞர், நக்சலியப் போராளி. தம் வாழ்க்கையில் பதினைந்தாண்டுகள் சிறையில் கழித்தவர். தம் சிறையனுபவங்களை உரைநடையிலும் கவிதையிலும் வடித்த நூல்தான் ‘கேப்டிவ் இமாஜினேஷன்’ என்பது. அந்த நூலை மொழிபெயர்த்தற்கு (சிறைப்பட்ட கற்பனை) 2011ஆம் ஆண்டிற்கான சிறந்த மொழிபெயர்ப்பாளன் என்ற விருதை ஆனந்த விகடன் பத்திரிகை எனக்கு வழங்கியது.

மான்புக்கர் பரிசுபெற்ற பம்பாயைச் சேர்ந்த பத்திரிகையாளர் மனு ஜோசப் எழுதிய ‘சீரியஸ் மென்’ என்ற ஆங்கில நாவலின் மொழிபெயர்ப்பு, ‘பொறுப்புமிக்க மனிதர்கள்’ என்ற நூல். அடியோட்டமாக இழையும் ஆற்றல் மிக்க நகைச்சுவை கொண்ட நூல். எவ்விதம் இந்திய அறிவியல் நிறுவனங்களையும் சாதியமும் தன்முனைப்பும் இவற்றினால் விளையும் ஊழலும் பாதித்துள்ளன என்பதை நல்லதொரு கற்பனைக் கதையின் வாயிலாக விளக்கும் நூல் அது. நீங்கள் யாவரும் படிக்க வேண்டிய நல்ல நாவல்.

அடுத்து, எதிர் பதிப்பகத்திற்காகவே பிரபல இந்திய நாவலாசிரியர் சல்மான் ருஷ்தீ எழுதிய ‘மிட்நைட்ஸ் சில்ட்ரன்’ நூலைத் தமிழாக்கம் செய்தேன். ‘நள்ளிரவின் குழந்தைகள்’ என்று பெயரிடப்பட்ட அந்த நாவல், தமிழில் ஏறத்தாழ எண்ணு£று பக்கங்கள் அளவினதாகும். ஆங்கிலத்திலோ தமிழிலோ நீங்கள் படிக்கவேண்டிய நூல் அது. இந்த மொழிபெயர்ப்பிற்கு நாமக்கல்லைச் சேர்ந்த எழுத்தாளர் திரு. சின்னப்ப பாரதி அவர்களின் இலக்கிய அமைப்பிலிருந்து இந்த ஆண்டிற்கான சிறந்த மொழிபெயர்ப்பு என்ற விருதும் பத்தாயிரம் ரூபாய் பரிசும் எனக்கு அளிக்கப்பபட்டிருக்கிறது. உண்மையைச் சொன்னால், சாகித்திய அகாதெமி பரிசளித்திருக்க வேண்டிய நூல் இது. இது ஒரு பின்நவீனத்துவ நாவல் என்பது சிலர் கணிப்பு. நான், ஒன் ஹண்ட்ரட் யீயர்ஸ் அவ் சாலிட்யூட் என்ற நாவலின் பாணியில் எழுதப்பட்ட, ஜாலயதார்த்த நாவல் (மேஜிகல் ரியலிசம் என்ற வகையைச் சேர்ந்தது) என்றே கணிக்கிறேன். மொழிபெயர்ப்பாளர்களுக்கு இத்தகைய புதிய பாணிக் கதைகளைப் பெயர்ப் பது எவ்வளவு கடினம் என்பது தெரியும்.

கடைசியாக எதிர் பதிப்பகத்திற்காக மொழிபெயர்த்த நூல், காந்தியைக் கொன்றவர்கள் என்பது. தி பெண்ட் இன் தி கேஞ்சஸ் போன்ற நாவல்களை எழுதிய ஆங்கில எழுத்தாளராக அறியப்படும் மனோகர் மல்கோங்கர் வரலாற்றுப்பூர்வமாக ஆராய்ந்து எழுதிய நூல் ‘தி மென்  ஹூ கில்டு காந்தி’ என்பது. எந்த வரலாற்றுச் சூழலின் பின்னணியில் காந்தியின் கொலை நிகழ்ந்தது என்பது பற்றிய நூல்.
நான் நன்றி சொல்லவேண்டிய இன்னொரு பதிப்பாளர், காலச்சுவடு பதிப்பகத்தின் கண்ணன். அவருக்காக, தில்லியைச் சேர்ந்த பத்திரிகையாளரான பஷரத் பீர் என்பவர் எழுதிய  Curfewed Night என்ற நூலினை ‘ஊரடங்கு இரவு’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்தேன். காஷ்மீரில் எவ்விதம் தீவிரவாத இயக்கம் தோன்றி வளரலானது என்பது பற்றிய வரலாறும் பஷரத் பீரின் சொந்த அனுபவங்களும் இணைந்த நூல் அது.
அவருக்காக மொழிபெயர்த்த இன்னொரு நூல், ‘நொறுங்கிய குடியரசு’ என்பது. அருந்ததி ராய் எழுதிய ‘தி ப்ரோகன் ரிபப்ளிக்’ என்னும் நூலின் பெயர்ப்பு அது. சுரங்கத் தொழிலில் பெருமுதலாளிகள் ஈடுபட்டுக் காடுகளை அழித்து, அங்குள்ள பழங்குடி மக்களை விரட்டி அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் சூழலில், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கட், ஒரிசா மாநிலங்களில் காட்டுப்பகுதி மக்கள் எவ்விதம் சுரண்டப்படுகிறார்கள், அவர்கள் எவ்விதம் அரசாங்கத்தின் தாக்குதல் ஒருபுறமும், முதலாளிகளின் தாக்குதல் மறுபுறமும் நிகழ, நக்சலைட்டுகளாக மாறுகிறார்கள் என்பது பற்றி விவரிக்கும் நூல் அது. அருந்ததி ராய் அந்த இடங்களுக்குச் சென்று அந்த மக்களோடு வாழ்ந்து பெற்ற அனுபவங்களை இந்த நூலில் வரைந்துள்ளார்.

பொதுவாக மொழிபெயர்ப்பாளன் என்ற முறையில் சொற்கள் என்னை மிகவும் நெருடுகின்றன, கவலைக்குள்ளாக்குகின்றன. சில சமயங்களில் அவஸ்தைப் படுத்தவும் செய்கின்றன, சான்றாக, ‘தி ப்ரோகன் ரிபப்ளிக்’ என்ற நூலை முதலில் நான் ‘நொறுங்கிய ஜனநாயகம்’ என்றே மொழிபெயர்த்தேன். ‘நொறுங்கிய குடியரசு’ என அருந்ததி ராயின் செம்மையாளர்கள் அதன் பெயரை மாற்றினார்கள். ‘ரிபப்ளிக்’ என்ற சொல்லை ‘ஜனநாயகம்’ என்றும், ‘குடியரசு’ என்றும் இருவிதமாக மொழி பெயர்க்கலாம். பல சமயங்களில் வடமொழிச் சொல் ஒன்றும், தமிழ்ச் சொல் ஒன்றுமாக இருந்தாலும், அவை நேருக்குநேர் மொழிபெயர்ப்பாக அமைவதில்லை என்பதற்கு இச்சொற்கள் சான்று. ‘ஜனநாயகம்’ என்பதற்கு நேர்த் தமிழ்ச்சொல் அல்ல ‘குடியரசு’ என்பது. உதாரணமாக, குடியரசுத் தலைவர் என்று சொல்லலாம், ஜனநாயகத் தலைவர் என்று சொல்லமுடியாது. ஜனநாயகம் என்பது மக்களின் பிரக்ஞையில் நிலவும் ஓர் அமைப்பு. குடியரசு என்பது அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு நிலவும் அரசியல் அமைப்பு, அரசியல் நிறுவனம். ஜனநாயகம் என்பதற்கு நேர்த் தமிழ்ச் சொல்லாக மக்களாட்சி என்பதைச் சொல்லலாம். நொறுங்கிய ஜனநாயகம் என்றால், அடிப்படையாக மக்கள் மனத்தில் நிலவுகின்ற, நாம் கனவு கண்ட அடிப்படையே நொறுங்கிவிட்டது என்று அர்த்தம். நொறுங்கிய குடியரசு என்றால் அரசாங்கம் சார்ந்த ஓர் அமைப்பு நொறுங்கிவிட்டது என்று அர்த்தமாகும்.
இன்னொரு உதாரணமும் சொல்கிறேன். ‘டிகன்ஸ்ட்ரக்ஷன்’ என்பது டெரிடாவினால் பிரபலமாக்கப்பட்ட சொல். அவர் பழைய தத்துவங்களை ‘டிகன்ஸ்ட்ரக்ட்’ செய்தவர். டிகன்ஸ்ட்ரக்ஷனைத் தமிழில் முதலில் கட்டவிழ்ப்பு என்றார்கள், பிறகு கட்டுடைப்பு என்றார்கள். பேராசிரியர் மருதநாயகம் இதற்குச் சிதைவாக்கம் என்றார். சிதைவு என்பது தானாக நிகழ்வது. ஆக்கமும் தானாக நிகழ்வதே.  தகர்ப்பு என்பது தானாக நிகழ்வதல்ல. அமைப்பு என்பதும் தானாக அமைவதல்ல. செய்வினைக்கும் செயப்பாட்டுவினைக்கும் வேறுபாடு தெரியாததனால் ஏற்பட்ட குற்றம் இது. மொழி பெயர்ப்பாளர்களுக்கு இலக்கணமும் கட்டாயம் தெரிய வேண்டும்தானே?

கட்டியதை உடைத்தல் அல்ல டிகன்ஸ்ட்ரக்ஷன். ஒன்றை ஆக்காமல் அதற்கு முந்தியிருந்ததை உடைக்க முடியாது. எவ்விதம் ஒரு கட்டடத்தைப் புதிதாகக் கட்டுபவன், முதலில் இருந்ததை அழிக்க வேண்டியிருக்கிறதோ அதுபோல. டி-கன்ஸ்ட்ரக்ஷன், என்பது ஒன்றைத் தகர்த்து மாற்றாக இன்னொன்றை அந்த இடத்தில் வைப்பது. எனவே தகர்ப்பமைப்பு என்ற சொல் அதற்குப் பொருத்தமான தமிழ்ச்சொல். இதனை எனக்கு அளித்தவர் எனது நண்பரும் பாரதிதாசன் பல்கலைக்கழக ஆங்கிலத் துறைத் தலைவராக இருந்தவருமான டாக்டர் நோயல் இருதயராஜ். இந்தச் சொல்லையே நான் பயன்படுத்திவருகிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு சாகித்திய அகாதெமியின் வெளியீட்டுக்கென கோபிசந்த் நாரங் எழுதிய நூலைத் தமிழில் அமைப்புமையவாதம், பின்அமைப்பியல், மற்றும் கீழைக்காவிய வியல் என மொழிபெயர்த்த திரு. பாலசுப்பிரமணியனும் என் சொற்களையே பெரிதும் பயன்படுத்தியுள்ளார் என்பதில் நிறைவு. ஆனால் அவரும்கூட, கீழைக் காவிய இயல் என்பதைக் கீழைக் கவிதையியல் என்று பெயர்த்திருக்க வேண்டும். (காவியம் என்பதற்குக் கவிதை என்றே இங்குப் பொருள்.) தமிழில் காவியம் என்றால் இராமாயணம், சிலப்பதிகாரம் போன்றவற்றைக் குறிக்கும். சாதாரணக் கவிதைகளைக் குறிக்காது. எனவே கீழைக் காவிய இயல் என்பது உரிய பொருளைத் தரவில்லை.

பெரும்பாலும் நான் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குத்தான் மொழிபெயர்த்தேன். தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு அல்ல. காரணம், தமிழில் நான் எழுத முனைகின்ற விஷயங்களை (இலக்கியக் கொள்கைகள், திறனாய்வுக் கோட்பாடுகள் போன்றவற்றை) ஆங்கிலத்தில் எழுத ஆயிரமாயிரம் பேர் இருக்கிறார்கள். தமிழில் எழுதத்தான் ஆட்கள் குறைவு. ஆனால், தமது வாழ்க்கை பற்றியும் நூல்கள் பற்றியும் கோவை ஞானி ஒரு பிரசுரத்தை எழுதச் சொன்னபோது அதனை நான் ஆங்கிலத்தில் ஆக்கிக் கொடுத்தேன்.

பஷரத் பீரின் நூல், மவுலானா ஆசாத் பற்றிய நூல், சல்மான் ருஷ்தீயின் நூல் ஆகியவற்றை மொழிபெயர்க்கும்போது எனக்குத் தெரிந்த இந்தி சமஸ்கிருதம் போன்றவை நன்கு பயன்பட்டன. இந்தி அல்லது உருது கலந்த இந்தியின் அறிவின்றி இவற்றை மொழிபெயர்த்திருக்க இயலாது. நான் கல்லூரி சேரும் முன்பே இந்தியை நன்கு படித்திருந்தேன். பின்னர் பிராகிருதம், சமஸ்கிருதம் ஆகியவற்றில் ஓரளவு அறிவை வளர்த்துக்கொண்டேன். உதாரணமாக, சல்மான் ருஷ்தீ, தனது கதாநாயகனை புத்தன் என்று ஓர் இயலில் வருணிக்க முனைவார். அந்த அளவுக்கு அவன் ஆசையை விட்டுவிட்டு ஜடமாகிவிட்டான். அந்தச் சொல்லில் புட்டா என்ற சிலேடை அடங்கி யிருக்கிறது. அவன் கிழவனாகவும் மாறிவிட்டான். (புட்டா என்றால் கிழவன், இந்தியில்). இரண்டையுமே ஆங்கிலத்தில் budha என்றுதான் எழுதுவார்கள். தி புத்தா/புட்டா என்று இருவகையாகவும் படிக்கும்வகையில் தலைப்பிடப்பட்டிருந்த அந்த இயலை நான் புத்தக் கிழவன் என்று மொழிபெயர்த்தேன்.

இந்த உதாரணத்தில் வேறு விஷயங்களும் இருக்கின்றன. சமஸ்கிருத இலக் கியக் கொள்கையில் வாசகனுக்குப் பொதுவாக சஹ்ருதயத் தன்மை வேண்டும் என்பார்கள். ஆங்கிலத்தில் எம்பதி என்போம். ஒத்துணர்வு என்று தமிழில் சொல்ல லாம். (பரிவுணர்ச்சி என்று சிலர் சொல்வார்கள், ஆனால் பரிவுணர்ச்சி என்பது ‘சிம்பதி’யைத்தான் குறிக்கும்.) வாசகரைவிட, மொழிபெயர்ப்பாளருக்குப் பரிவுணர்ச்சி மிகவும் கூடுதலாகத் தேவை. பரிவுணர்ச்சி இல்லாவிட்டால் ஆசிரியரைப் புரிந்து கொண்டு மொழிபெயர்க்க இயலாது.

சொற்பயன்பாட்டிலும் கவனம் தேவை. உதாரணமாகப் புரிந்துகொள்ளல் என்று மேலே பயன்படுத்திய சொல். இதைப் புரிதல் என்றே பலரும் இன்று பயன் படுத்துகிறார்கள். புரிதல் என்றால் செய்தல், ஆற்றுதல், இயற்றுதல். உதாரணமாக ஒருவன் நன்மை புரியலாம். இறைவனை நாம் அருள் புரிவாய் கருணைக் கடலே என்று வேண்டுவோம். புரிந்துகொள்ளல் என்று ‘கொள்ளலைச்’ சேர்த்தால்தான் to understand என்ற அர்த்தம் வரும். (விதிவிலக்கு, உனக்குப் புரிந்ததா, எனக்குப் புரியவில்லை போன்ற இடங்கள். இவற்றில் நாம் கொள்ளுதலைச் சேர்ப்பதில்லை.)

மொழிபெயர்ப்பாளர்களுக்கு சொற்பெயர்ப்பும் ஓரளவேனும் தெரிந்திருக்க வேண்டும். பலசமயங்களில் சரியான சொற்பெயர்ப்பு எனக்குத் தெரிந்தாலும் நான் அதைப் பயன்படுத்துவதில்லை. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு அல்லவா? அதனால்தான். உதாரணமாக, Advani என்ற சொல்லை ஆட்வாணி என்றே வடக்கில் உச்சரிப்பார்கள். ஆனால் தமிழகத்தில் அத்வானி என்று வழங்குவது வழக்கமாகி விட்டது. ஆனால் சத்தீஸ்கட்டை சத்தீஸ்கர் என்றும் மைதான் கடியை மைதான் கார்ஹி என்றும் படிப்பவர்களைப் பார்த்தால் சற்றே சிரிப்புதான் வருகிறது. வடநாட்டவர் t, d, th, dh, r, rh போன்றவற்றைக் கையாளும் முறை வேறு, தமிழ் நாட்டவர்கள் கையாளும் முறை வேறு. கடி என்ற சொல்லுக்கு தில்லிக்காரர்களின் ஆங்கில எழுத்துமுறை, garhi என்பது. ட வுக்கு அவர்கள் rh பயன்படுத்துவார்கள். garh என்று எழுதினால் கட் என்று படிக்க வேண்டும்.

முதலில், நேருக்குநேர் மொழிபெயர்ப்பது உதவாது. உதாரணமாக, பச்சை என்ற தமிழ்ச்சொல்லுக்கு நிறைய அர்த்தங்கள் இருக்கின்றன. பச்சைத் தண்ணீர் என்பதை யாரும் green water என்று மொழிபெயர்க்க முடியாது. அல்லது பச்சைக் குழந்தை என்பதை green child என்று பெயர்க்க முடியாது. பச்சைக் காய்கறி என்றால்கூட, fresh vegetables என்று பெயர்ப்பதுதான் சரியானதாகும். இடமறிந்து மொழிபெயர்க்க வேண்டும். பச்சையாகச் சாப்பிட்டான் (சமைக்காமல்) என்றால், He ate raw என்பதுதான் சரியானது.

ஒருமுறை நேருக்குநேர் மொழிபெயர்ப்பினால் ஒரு தமிழ்ப்பத்திரிகையில் (ஐம்பதுகளில்) ஏற்பட்ட குழப்பம் எனக்கு நினைவிருக்கிறது. பத்திரிகையாசிரியருக்கு (அந்தக் காலத்தில்) டெலிபிரிண்டரில் ஆங்கிலத்தில் வந்த செய்தி, Thirty sleepers were washed away in the flood என்பது. அந்தப் பத்திரிகையின் உதவியாசிரியர்களில் ஒருவர் இதைத் “தூங்கியவர்கள் முப்பதுபேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்கள்” என்று மொழிபெயர்த்து வெளியிட்டும் விட்டார். ஆனால் உண்மையில் அடித்துச் செல்லப்பட்டவர்கள் அல்ல, அடித்துச் செல்லப்பட்டவை, தண்டவாளத்தின் முப்பது குறுக்குக் கட்டைகள்தான். அவற்றை ஆங்கிலத்தில் ஸ்லீப்பர் என்று சொல்வார்கள்.

பல மொழிகளை நோக்கும்போது தமிழ் ஒருவித தர்க்கத்தில் அமைக்கப்பட்ட மொழிதான். இதனால்தான் சங்கம் என்ற கருத்தாக்கம் தோன்றியதோ என்றும் எண்ணத்தோன்றுகிறது. பொதுவாக மொழிகளில் லாஜிக் இல்லை என்ற சொல்லப்பட்டாலும், தமிழில் உயிரெழுத்து, மெய்யெழுத்து, வல்லினம், இடையினம், மெல்லினம் என்றெல்லாம் பெயரிடப் பட்டிருப்பதையும் பாகுபடுத்தப் பட்டிருப்ப தையும் தர்க்கமற்றவை என்று எவரும் சொல்லமுடியாது. இந்தோ ஐரோப்பிய மொழிகளில் ஆ-பா-சா-டா (ஏபிசீடி) என்ற வரிசைமுறையில் என்ன தர்க்கம் இருக்கிறது? தமிழில் பெயரெச்சம், வினையெச்சம், வினையாலணையும் பெயர் என்ற வகையில் வருவன எல்லாம் தர்க்க அமைப்பில் உள்ளவை மட்டுமல்ல, மொழி பெயர்ப்புக்கும் மிகச் சிறப்பாக உதவுபவை.

நீளமாக ஆங்கில வாக்கியத்தில் சொல்லு வதையும் தமிழில் மிகச் சுருக்கமாக இவற்றின் உதவியால் சொல்ல இயலும். உதாரணமாக, The men who killed Gandhi என்ற தொடரை நான் காந்தியைக் கொன்றவர்கள் என்று சுருக்கமாக முடித்து விட்டேன். The men who killed என்ற நீண்ட தொடருக்கு, தமிழில் ஒரே ஒரு வினையாலணையும் பெயர்-கொன்றவர்கள் என்பது போதுமானதாகி விடுகிறது. யார் காந்தியைக் கொன்றார்களோ அவர்கள் என்று மொழிபெயர்ப்பவருக்கு ஆங்கிலமும் தெரியாது, தமிழும் தெரியாது என்று உறுதி யாகச் சொல்லலாம். காந்தியைக் கொன்ற மனிதர்கள் என்று பெயர்ப்பவர், மிகைபடக்கூறல் என்னும் தவற்றைச் செய்கிறார். கொன்றவர் என்றாலே மனிதர்தான், நிச்சயம் விலங்கோ பொருளோ அல்ல, காரணம்-அது உயர்திணைப் பெயர்.

The man who came yesterday என்பதை நேற்று வந்தவர் என்று இரண்டே சொற்களில் அடக்கலாம். பெயரெச்சம், வினையெச்சம், வினையாலணையும் பெயர் என்ற மூன்றும் தமிழில் மிகச் சுருக்கமாகச் செய்திகளைச் சொல்ல வல்லவை. She ran and fell down என்பதை ஓடி விழுந்தாள் என்று சொல்லலாம். ஓடி என்பது வினையெச்சம். ஆங்கிலத்தில் ‘ரிலடிவ் க்ளாஸ்’ எனப்படுவனவற்றைத் தமிழில் மிகச் சுருக்கமாக மொழிபெயர்க்க இம்மூன்றும் உதவுகின்றன. இவை மூன்றையும் சரிவரக் கையாளத் தெரியாதவர்கள்தான் ஆங்கிலத்தில் சுருக்கமாகச் சொல்லமுடிகிறது, தமிழில் சொன்னால் அது நீளமாகிறது, அதிகரிக்கிறது என்பார்கள்.

தமிழ் இடத்தை அதிகமாகக் கொள்வதற்கு ஒரு காரணம், அதன் ஒட்டு மொழித் தன்மைதான். ஆங்கிலம் போன்ற மொழிகளில் ‘முயன்றுகொண்டிருக்கிறான்’ என்பதுபோன்ற நீண்ட தொடர்களைக் காண்பது கடினம். அங்கு தனிச் சொற்கள் ஆளப்படுவதால் இடம் குறைவாகப் பிடிக்கிறது என்று சொல்வார்கள் சிலர்.
இந்தியும் சிலசமயங்களில் ஆங்கிலம்போலவே தனிமொழித் தன்மையைக் கையாள்கிறது, பலசமயங்களில்-வேற்றுமைத் தொடர் போன்றவற்றில் தமிழின் ஒட்டு மொழித் தன்மையைக் கையாள்கிறது. “வோ ஆ ரஹா ஹை” என்னும்போது தனிமொழித்தன்மை காணப்படுகிறது. “உஸ்கோ நஹீம் மிலா” என்னும்போது ஒட்டுமொழித் தன்மை இருக்கிறது. தமிழில் வினையாலணையும் பெயரைக் கையாளுமிடங்களில் இந்தியில் அநேக இடங்களில் -வாலா சேர்த்து எளிதாகச் சொல்லிவிடுகிறார்கள். உதாரணமாக,
படிப்பவன் பாட்டைக் கெடுத்தான்
பட்னேவாலா பத்யகோ கராப் கியா

தமிழில் புணர்ச்சி (குறிப்பாக வல்லினம் மிகுதல், மிகாமை) மிகவும் முக்கிய மானது. வல்லினம் மிகும் இடங்களில் அதைப் பயன்படுத்தாமை தவறு, அதைவிட மோசமான தவறு, வல்லினம் மிகக்கூடாத இடங்களில் அதைப் பயன்படுத்துவது. சான்றாக, பெயரெச்சங்கள், குறிப்புப் பெயரெச்சங்கள் (இவற்றைப் பெயரடைகள் என்று இன்று சொல்கிறோம்) இவற்றின் பின்னர் வல்லினம் மிகாது. நல்ல பையன் என்று சொல்லவேண்டுமே தவிர நல்லப்பையன் என்பது கற்றறிந்த காதுக்கு நாராசமாக இருக்கும். இந்த ஒரே ஒரு விதியை-பெயரெச்சங்களுக்குப் பிறகும் பெயரடைகளுக்குப் பிறகும் வல்லினம் மிகாது என்பதை-நினைவில் வைத்துக்கொண்டாலே தமிழில் பாதிக்குமேல் சந்திப்பிழைகள் குறையும். உருபொலியனியல் என்ற மொழி யமைப்பின் ஒரு பகுதியான புணர்ச்சி என்பது தமிழுக்கே உரியதோர் உறுப்பு. ஆனால் இக்காலத்தினர் பெரும்பாலும் அந்த உறுப்பை முடமாக்கிவிட்டார்கள். வட மொழியிலும் சந்தி உண்டு, ஆனால் அதன் தன்மை வேறு.

தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தாலும், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தாலும் தமிழ் மொழியின் அமைப்பு (இலக்கணம்) மொழிபெயர்ப்பாளருக்கு நன்கு அத்துபடியாகியிருக்க வேண்டும். இதை நான் சொல்வதற்குக் காரணம், நம் சிந்தனை என்பதே மொழியினால்தான் நிர்வகிக்கப்படுகிறது. மொழியினால்தான் சிந்தனை நிகழ்கிறது. நம் சூழலுக்கும் கலாச்சாரத்திற்கும் ஏற்ப நம் மொழியமைப்பு இருக்கிறது. தாய்மொழியின் அமைப்பைத்தான் நாம் நிறைவாக அறிந்துகொள்ள முடியும்.

ஆனால், மொழிகளின் ஊடாகப் பொதுவான விஷயங்களும் இருக்கின்றன. ஒரு மொழியை-குறிப்பாகத் தாய்மொழியின் அமைப்பை நன்றாக அறிந்தவன், பிற மொழிகளைப் பயிலுவது மிகவும் எளிது. இதை அறியாமல்தான் இன்று எல்லாரும் தொடக்கத்திலேயே ஆங்கிலக் கல்வி அளிக்க முற்பட்டு எந்த மொழியும் சரிவரத் தெரியாத நிலைக்குக் குழந்தைகளை ஆளாக்கிவிடுகிறார்கள். ஒரு சிறிய உதாரணத்தைப் பார்க்கலாம்.

தமிழில் பன்மைக்கு, -கள் விகுதி சேர்ப்பது வழக்கம். மரம்-மரங்கள், காசு-காசுகள் எனச் சொல்லிக் கொண்டே போகலாம். இந்தியில் சொல்லின் விகுதியை ஒட்டிப் பன்மைக்கு ஏகாரம் சேர்க்கிறோம், அல்லது ஒலியை நீட்டுகிறோம். குத்தா-குத்தே, பௌதா-பௌதே என்பதுபோல. ஆங்கிலத்தில் பன்மைக்கு -s சேர்க்கிறோம். பாய்-பாய்ஸ், கேர்ல்-கேர்ல்ஸ் என்பதுபோல. (இவை எல்லாவற்றிலுமே விதிவிலக்குகள் இருக்கின்றன என்பது வேறு.) ஆனால், பன்மை என்பது சொல்லின் விகுதியில் சிறிய மாற்றம் செய்யப்படுவது என்ற பொது அமைப்பில் மாற்றமில்லை. ஆகவே ஒரு மொழியை மிக நன்றாகப் பயன்படுத்தத் தெரிந்தவன், நான்கைந்து மொழிகள் என்றாலும் எளிதாகக் கற்றுவிடுவான் என்பதில் ஐயமில்லை. முறையான கல்வி கற்காத பல பேர், பல இந்திய மொழிகளை (தமிழ், உருது, தெலுங்கு, கன்னடம், இந்தி என)க் கையாளுவதை நாம் பார்க்கிறோம் அல்லவா?

பொதுவாக, ஆங்கிலம் வலப்புறம் அதிகரித்துச் செல்வது; தமிழ் இடப்புறம் அதிகரித்துச் செல்வது என்பார்கள். இந்தி போன்ற இந்திய மொழிகளும் இடப்புறம் அதிகரித்துச் செல்பவைதான்.
The boy
The boy with blue trousers
The boy with blue trousers who came yelling
The boy with blue trousers who came yelling yesterday
பையன்
நீலக்கால்சட்டை அணிந்த பையன்
கூச்சலிட்டுக்கொண்டு வந்த நீலக்கால்சட்டை அணிந்த பையன்
நேற்றுக் கூச்சலிட்டுக்கொண்டுவந்த நீலக்கால்சட்டை அணிந்த பையன்

மொழிபெயர்ப்பவர்களுக்கு இந்த உணர்வு கட்டாயம் இருக்கவேண்டும். நீளமான கிளவிகள் கொண்ட வாக்கியம் வரும்போது, எவற்றை எங்கே எப்படி இட வேண்டும் என்பது மிக முக்கியமானது.
எல்லாவற்றையும்விட, நாம் மொழிபெயர்க்கும் நூலின் கலாச்சாரப் பின்னணி மிகமிக முக்கியமானது. சரியான கலாச்சாரப் பின்னணி தெரியாமல், அல்லது அதை அறிந்துகொள்ளாமல் சரிவர மொழிபெயர்க்க முடியாது. உதாரணமாக ஒரு சிறிய செய்தி. பொறுப்புமிக்க மனிதர்கள் என்ற எனது மொழிபெயர்ப்பு நாவலில் தொடக்கத்திலேயே ‘சாள்’ என்ற சொல் வரும். மும்பை போனவர்களுக்குச் ‘சாள்’ என்ற சொல் ஒருவேளை தெரிந்திருக்கலாம், பழக்கமாகியிருக்கலாம். மும்பையில் ஒரே கூரையின்கீழ் வரிசைவரிசையாகப் பிரிக்கப்பட்டிருக்கும் வீடுகளின் தொகுப்பை அந்தச் சொல் குறிக்கும். இந்தச் சொல்லும் அது குறிக்கும் வீடுகளின் தொகுதியும் அந்த நாவலில் மிக முக்கியமானவை.

இம்மாதிரிக் கலாச்சாரச் சொல் இடம் பெறும்போது அதன் குறிப்பை அடைப்புக் குறிகளுக்குள் அந்த இடத்திலேயே தந்து விடலாம், அல்லது அடிக்குறிப்பாகத் தரலாம். மிகுதியாக இம்மாதிரிச் சொற்கள் இருந்தால், அவற்றை ஒரு பின்னிணைப்பாகவே சேர்த்துவிடலாம்.

சிலசமயங்களில் அந்தந்தப் பிரதேசத்திற்கான சொற்கள் நமக்குப் புரிவதில்லை. மொழிபெயர்ப்பாளனின் கஷ்டம் இது. உதாரணமாக, வரவர ராவிடம் சின்னி என்ற பெண், ‘சுபபூல்’ என்ற செடியைத் தருகிறாள். ‘சுபபூல்’ என்பது என்ன செடி என்பது எவ்வளவு தேடியும் எனக்கு விளங்கவே இல்லை. சுபம் என்றாலும் தெரியும், பூல் (பூ) என்றாலும் தெரியும். ஆனால் ஹைதராபாதில் சுபபூல் என்று வழங்கப்படுவது என்ன செடி என்பது தெரியவில்லை. ஆகவே அதை சுபபூல் என்று அப்படியே தந்து விட் டேன்.

பொதுவாக, வரவர ராவின் உரைநடையிலும் கவிதைகளிலும் மிகுதியான மேற்சுட்டுகள் (அல்யூஷன்கள்) காணப்படும். படிப்பவரின் அறிவில் அவர் மிகுதியான ந்மபிக்கை வைக்கிறார். உதாரணமாக, தாவரங்கள்மீது தனக்குள்ள காதலைப் பற்றி எழுதும்போது, “ஓ ஹென்றியின் கதையில், நோய்ப்படுக்கையில் இருப்பவள், தன் ஜன்னலுக்கு வெளியே இருந்த இலையின்மீது வைத்த பாசம் போன்றது தாவரங்கள் மீது எனக்குள்ள உணர்ச்சி” என்கிறார். இதைப் படிப்பவர்களுக்கு ஓ ஹென்றி என்பவர் ஒரு சிறுகதையாசிரியர் என்று தெரியவேண்டும், குறிப்பாக அவருடைய ‘தி லீஃப்’ என்ற கதை தெரிய வேண்டும். இதேபோல, சிறையிலிருந்த புறாக்களைப் பார்க்கும்போது, “பாவஸ்திரானி, ஜனனாந்தர சௌஹ்ரிதானி” என்னும் பா நினைவுக்கு வருகிறது என்பார். இது அபிக்ஞான சாகுந்தலம் (காளிதாசன் இயற்றிய காவியம்) நூலில் ஹம்சபத்ரிகா என்பதில் வருகிறது. இதற்கு ஆசிரியர் குறிப்பு எதுவும் இல்லை. நானாக இதனை, “நிலைத்த இருப்புடையவை, பிறப்பு முதல் இறுதி வரை சுகமான (நல்ல) இருதயமுடையவை” என்று மொழிபெயர்த்தேன்.

முதல் இயலிலேயே ஒரு மேற்சுட்டு. இரண்டு திரைப்படப் பாடல்கள். இவை சிறையில் அவர் வானொலியில் கேட்டவை. திருமணமாகி மனைவியுடன் முதன்முதலில் நிலா இரவில் நடந்துவரும்போது கேட்டவை. முதலில் ஒரு இந்திப் பாட்டு. “ஆதா ஹை சந்த்ரமா ராத் ஆ தீ……(.ரஹ் ந ஜாயே தேரிமேரி பாத் ஆ தீ)” இதைச் சொல்லிவிட்டு எழுதுகிறார்: “இதைக் கேட்டபோது சற்றே நிலை தடுமாறிவிட்டது. ஒரு நிமிடம் நான் எங்கிருக்கிறேன், இரவா பகலா என்பது தெரியா மல் மயங்கிவிட்டது.” இந்தப் பாட்டை நானும் அனுபவித்துக் கேட்டிருக்கிறேன் என்பதால் எளிதாக நினைவுகூர்ந்ததோடு அதன் பொருளுணர்ந்து இரசிக்கவும் முடிந்தது. இப்படி மொழி பெயர்ப்பாளர் பலவகை, பலமொழி அறிவைக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது.

நான் இதுவரை எனது அனுபவங்கள் சிலவற்றைப் பற்றித்தான் கூறினேன். எந்தக் கொள்கையாளரையும் போல, மொழிபெயர்ப்பு என்றால் இது இருக்க வேண்டும், அது இருக்கவேண்டும், அப்படியிருக்க வேண்டும் என்றெல்லாம் அறிவுரை கூறவில்லை. ஏனென்றால், “நீச்சல் அடிப்பது எப்படி” என்று ஆயிரம் பக்கம் எழுதுவதைவிட, ஐந்து மணி நேரம் உரையாற்றுவதைவிட, “நீயே பழகிக்கொள்” என்று தண்ணீரில் பிடித்துத் தள்ளிவிடுவதுதான் உத்தமமானது. அதுபோலத்தான் எழுதுவதும், மொழிபெயர்ப்பதும் எல்லாம். ‘இப்படிச் செய்’, ‘அப்படிச் செய்’ என்பதை விட “நீயே மொழிபெயர்” என்று ஒரு கட்டுரையையோ கவிதையையோ கொடுத்து எப்படிச் செய்ய முனைகிறார்கள் என்பதைப் பார்த்து, தவறுகள் இருப்பின் எடுத்துக் காட்டுவதுதான் சரியான முறை. எனவே மொழிபெயர்ப்புக்கு நிறையப் பணிமனைகள் (ஒர்க்ஷாப்ஸ்) நடத்தப்பட வேண்டும். தாங்களாகவே மாணவர்கள் செய்து பயிற்சி பெறவேண்டும்.

இந்த அரங்கு உங்களுக்கு மொழிபெயர்ப்பில் ஆர்வமூட்டவும், அதைச் செய்வ தற்கு வழிகாட்டவும்தான் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே நீங்களாக மொழி பெயர்ப்பில் ஈடுபாடு கொண்டு அதைச் செய்து பலன் பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். இருப்பினும் ஏதாவது அறிவுரை சொல்லியே ஆகவேண்டும் என்றால், இதுதான்:

1. இருமொழிகளில் ஏறத்தாழச் சமமான புலமை பெறுங்கள்;

2. நல்ல எழுத்துப் பயிற்சி செய்யுங்கள்;

3. மொழி பெயர்ப்பில் ஈடுபடுங்கள்.

அவ்வளவுதான்.

மொழிபெயர்த்த_கட்டுரைகள்