என்ன செய்யலாம்?

என் மனத்தில ஏறத்தாழ 2011 முதல் அரித்துவரும் விஷயம் இது. அப்போது நான் சென்னை-கிண்டியில் ரயில் நிலையத்துக்கு அருகில் இருந்தேன். காலையில் சுமார் ஏழுஏழரை மணிபோல ஏறத்தாழ ஆயிரம் பேர் பத்துப்பேர் இருபது பேராகச் செல்வார்கள். கையில் சாப்பாட்டு டப்பா. அநேகமாகக் கருப்பு உடை. அழுக்கு. வேலைக்குப் போகிறார்கள் என்பது வெளிப்படை. எந்தத் தொழிலகத்தில் அல்லது கட்டுமானப் பணியில் என்று தெரியாது. தமிழ் தெரியாது. சிலபேர் நல்ல இந்தி, பலபேர் உடைந்த இந்தி பேசுவார்கள். உத்தராஞ்சல் முதல் ஒரிசா, சத்தீஸ்கட் வரை பல மாநிலங்களிலிருந்து வந்தவர்களாக இருக்கும்.

காலப்போக்கில் இவர்கள் எண்ணிக்கை கூடிக் கொண்டுவருகிறது. இப்போது மேடவாக்கம் முதல்  இன்னும் தெற்குப்பகுதி வரை இவர்கள் நிறையப்பேர் வேலைசெய்வதைக் காணமுடிகிறது.   எனக்குத் தெரிந்த ஒரு (தமிழரின்) பெரிய கட்டுமானக் குழுமத்தில் தமிழன் ஒருவன்கூட வேலையில் இல்லை. இம்மாதிரி வேற்று மாநிலத்தவர்கள் தான்.

பெரும்பாலோர் தமிழ்நாட்டிலிருந்து திரும்பிச்செல்வதும் இல்லை. ஆங்காங்குள்ள ஏழ்மையான, சேரிப் பகுதிகளில் இணைந்து கொள்கிறார்கள். அடுத்த தலைமுறையில் இவர்கள் நல்ல தமிழ்பேசக்கூடும், கவுன்சிலர்கூட ஆகலாம், அதற்கடுத்த தலைமுறையில் ஒரு எம்.எல்.ஏ, எம்.பி.யாகக்கூட ஆகலாம்.

ஏற்கெனவே தமிழகத்தில் தெலுங்கர்களும், கன்னடர்களும், அடுத்த நிலையில் அடகுக்கடை வைத்திருக்கும் சேட்டு முதலான வடநாட்டவர்களும் ஏராளமாக இருக்கிறார்கள் என்ற பிரச்சினை இருக்கிறது. வடக்குச் சென்னையில் சில பகுதிகளில், பல தெருக்களில் நடந்துபோகக்கூட எனக்கு பயமாக இருக்கிறது. அந்த அளவுக்கு வேற்று மாநிலத்தவர் கள் நிரம்பி வழிகிறார்கள். தமிழகத்தில் தமிழன் ஆட்சி பல காலமாக இல்லை என்பது பிரச்சினையாகி உள்ளது.

இந்தக் கூலிக்காரர்கள் பிரச்சினையை எப்படி எதிர்கொள்வது? இவர்களுக்கு நியாயமான கூலி, வாழ்க்கை வசதி கிடைக்கிறதா என்பதெல்லாம் சந்தேகம்தான். இன்னும் மாநிலத்தின் உள்பகுதிகளில் சென்று வேலை செய்பவர்களும் அதிகம். போனவருஷம் இராணிப்பேட்டை அருகில் தோல் தொழிற்சாலைக் கழிவுகளில் மாண்ட பத்துப்பேர் இப்படிப்பட்டவர்களே. பெரிய கட்டுமானப் பணிகளில் இறப்பவர்களும் உண்டு.

தங்கள் மாநிலங்களில் இங்கு கிடைக்கும் வசதிகூட இல்லாததனால்தான் இங்கே வருகிறார்கள். பெரும்பாலோர் தலித்துகள் என்பதும் வெளிப்படை. நம் தொழிலாளர்கள், நமது சந்ததியினர் வாழ்க்கையைப் பறிக்கும் வந்தேறிகள் என்று இவர்களைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளமுடியுமா? அல்லது எல்லாரும் இந்தியர்கள், பிழைத்துப் போகட்டும் என்று விட்டுவிட முடியுமா? இம்மாதிரி ஒரு மாநிலத்தில் பிற மாநிலத்தவர்கள், வேற்றுமொழியினர் தொகை அதிகரித்துக் கொண்டே செல்வது நல்லதா? இதைச் சமாளிப்பது யார் கையில் இருக்கிறது?

எனக்குத் தெரிந்தவரை தமிழக அரசு இதுபற்றியெல்லாம் கவலைப்பட்டதே இல்லை.

அண்மையில் அஞ்சல்துறையில் வேண்டுமென்றே பல வட இந்தியர்கள் தமிழில் அதிக மதிப்பெண் போட்டுச் சேர்க்கப்பட்டார்கள் என்பதும் பத்திரி கைகளில் வந்தது. எல்லாருக்கும் நம்பமுடியாத வகையில் 99, 98 என்று மார்க்குகள்.  ஆனால் உண்மையில் ஒருவனுக்கும் தமிழ் தெரியாது.

இந்தியர்கள் என்று இல்லை, தமிழகம் முழுவதும் நேபாளிகளும் இலட்சக்கணக்கில் வாழ்கிறார்கள். ஒரு குடியிருப்பு ஏற்பட்டால் சில நாட்களில் அங்கு ஒரு கூர்க்கா வந்து குடியேறிவிடுவான். தமிழ்கூடத் தெரியாது. “கியா சாப், குச் ருப்யே இஸ் பேட் கேலியே தேனா சாப்” என்று கையேந்துவான். ஆனால் அடுத்த தலைமுறையில் அவன் மகன் இட ஒதுக்கீட்டு வசதியோடு இங்கே கம்ப்யூட்டர் அறிவியல் படிப்பான். என் கல்லூரியில் பணிசெய்த கூர்க்காக்கள் தங்கள் பிள்ளைகளை வசதியாக எங்கள் கல்லூரியிலேயே படிக்க வைத்தார்கள்.

நான் யாரையும் குற்றம் கூறவில்லை, பழிக்கவில்லை. “தமிழர்கள், வட இந்தியாவுக்குப் போகாவிட்டாலும் வெளிநாட் டுக்குச் சென்று சம்பாதிக்க வில்லையா” என்று சிலர் கேட்பார்கள்.இது மோசமான ஒப்பீடு. முதலில் எண்ணிக்கைப் பிரச்சினை. வெளிநாடு செல்லும் தமிழர்கள் சில ஆயிரம் பேர் என்றால் இம்மாதிரி வருபவர்கள் எண்ணிக்கை பல லட்சம். அடுத்ததாக வெளிநாட்டுக்குச் செல்பவர்களால் அந்நாட்டுப் பணம் தமிழ்நாட்டுக்கு வருகிறது, இவர்களால் தமிழ்நாட்டுப் பணம் வடக்கிற்குச் செல்கிறது.

இதில் நம்மைப் போன்ற தமிழர்கள் நிலைப்பாடு என்ன? தமிழ்நாட்டு அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? சமூகவியலாளர்கள் இதுபற்றி என்ன சொல்கிறார்கள்? நாம் என்ன தான் செய்யவேண்டும் அல்லது செய்யக்கூடாது? தெரிந்தவர்கள் யாராவது விளக்கினால் நன்றாக இருக்கும்.

சமூகம்