என் இளமைக் காலம்-1

நான் ஆர்க்காடு நகரத்தின் ஒரு பகுதியான முப்பது வெட்டியில் பிறந்தேன். ஆண்டு 1949. சித்ராபவுர்ணமி முடிகின்ற விடியற்காலை. அதனால்  எனக்கு நிறைமதி என்று பெயர் வைத்தார் என் தந்தையார். என் தந்தை பெயர் கு.ப. கணேசன். (குத்தனூர் பழனிப்பிள்ளை கணேசன்.)  அம்மா சக்குபாய். அப்பாவின் தந்தை-தாயான, தாத்தாவும் பாட்டியும் எங்களுடனே இருந்தனர். என் தந்தைவழிப் பாட்டனார் பழனிப்பிள்ளை. தந்தைவழிப் பாட்டி தைலம்மாள்.

என் தாத்தாவுக்குப் பாட்டி மூன்றாம் தாரம். வயது வித்தியாசம் கொஞ்சம் அதிகம்தான். முதல் இரண்டு தாரங்கள் அடுத்தடுத்து இறந்துவிட்டனராம். மூன்றாம் தாரமாகிய தைலம்மாளின் பிள்ளைதான் என் தந்தை. என் தாத்தா  குத்தனூரில் கணக்குப் பிள்ளையாக இருந்தாராம். அவர் தந்தை  பெயர் ஆறுமுகம் பிள்ளை. பாரம்பரியமாக (இசும்பாக என்பார்கள்) கணக்கு வேலை என் தாத்தாவுக்கு வந்தது. ஏறத்தாழ நாற்பது வயதிலேயே நரம்பு இழுப்பு வந்து கைகள் உதறத் தொடங்கிவிட்டன. எனவே அவரால் கணக்கு எழுத முடியவில்லை. கணக்கு வேலையை விட்டுவிட்டார். வேறு வேலையும் கிடையாது.  இவையும் இவைபோன்ற பிற குடும்பச் செய்திகளும் பின்னால் நான் தெரிந்துகொண்டவை.

ஏறத்தாழப் பதினோராம் வகுப்பு– 14 வயதில் (1963இல்) முடித்தவரை துண்டுதுண்டான ஞாபகங்கள்தான் இருக்கின்றன.

மூன்று நான்கு வயதளவில் இராணிப்பேட்டை பிஞ்சியில் இருந்தோம் என்ற ஞாபகம் இருக்கிறது. பாலாற்றின் வடக்கில் இராணிப்பேட்டை; தெற்கில் ஆர்க்காடு. (காவிரிக் கரையில் திருவரங்கமும் திருச்சி நகரமும் போல).

ஒரு தலைமையாசிரியர் என் பெயரை பூரணச்சந்திரன் என்று மாற்றியதைப் பற்றி ‘நானும் என் தமிழும்’ கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன். (அக்காலத்தில் அது ‘பூர்ணசந்தர்’. பாலச்சந்தர் என்பதுபோல.) அவர்தான் என்னைப் பள்ளியில் சேர்க்கவும் காரணமாக இருந்தவர். நான் மிகவும் அக்காலத்தில் சூட்டிகையாக இருந்திருப்பேன் போலும். ஐந்தாம் வயதிலேயே (ஆயுதபூசை சமயத்தில்) என்னை ‘டபுள் புரமோஷனாக’ இரண்டாம் வகுப்பில் போட்டு விட்டார். முதல் வகுப்பில் நான் சேரவேயில்லை. அதுபோலவே ஐந்தாம் வகுப்பும் படிக்கவில்லை. மறுபடியும் ஒரு டபுள் புரமோஷன். நேராக ஆறாம் வகுப்பில் சேர்ந்துவிட்டேன். இதனால் இரண்டாண்டுகள் மிச்சம்தானே என்று நினைக்கிறீர்களா? இதன் பலனைப் பின்னால் அனுபவித்தேன்.

ஐந்தாம் வயதில் இரண்டாம் கிளாஸ், ஆறாம் வயதில் மூன்றாம் கிளாஸ், ஏழாம் வயதில் நான்காம் கிளாஸ், ஐந்தாம் வகுப்பு படிக்காததால், எட்டாம் வயதில் ஆறாம் கிளாஸ் (உயர்நிலைப் பள்ளிக்கு) வந்துவிட்டேன்.

ஏறத்தாழ மூன்று-நான்கு வயதில் என் பாட்டியிடம் கதை கேட்ட சம்பவங்கள் ஏதோ நினைவில் மங்கலாக இருக்கிறது. எனக்கு நான்கு வயது முடிந்த சமயத்தில் இராணிப் பேட்டை வக்கீல் தெருவில் ‘பாயம்மா’ எனப்பட்ட ஒருவர் வீட்டில் வாடகைக்கு இருந்தோம். மார்கழி மாதப் பின்னிலவுக் காலத்தில் ஐந்து மணிக்கெல்லாம் என் தாயார் வீட்டுக்கு வெளியில் நீர்தெளித்துக் கோலமிட்ட காட்சிகள் நிழலாடுகின்றன. காலைக் கடன் முடிக்க வக்கீல் தெருவின் மேற்புறத்தில் மணல்வெளியில் வெகுதூரம் செல்வது வழக்கம். அப்போதே எனக்கு மலச்சிக்கலும் தொடங்கிவிட்டது.

மற்றொரு காட்சி. இது பாயம்மாள் வீடு அல்ல. வேறொரு வீடு. அதே வக்கீல் தெருவில். வீட்டின் முன்புறம் கிணறு. மரங்கள். நிழலில் அண்ணாந்து படுத்தவாறு (முற்பகல், ஏறத்தாழ பத்து-பதினொரு மணி) நீல வானம்-அதில் மிதந்து வேகமாகச் செல்லும் வெண்பஞ்சுப் பொதிகள்- மறைந்து மறைந்து ஒளிவீசும் சூரியன். பின்நிலவுக் காலம் ஆனதால் நிலவின் கீற்றும் இருந்தது. ஏனோ தெரியவில்லை, அக்காலம் முதல் இன்று வரையிலும்கூட- வானத்தில் வெண்மேகங்களையும் சூரியனையும் நிலவையும் பார்த்தவாறு இருப்பது  எனக்கு மிகவும் பிடித்த விஷயம்.

வக்கீல்தெருவின் வடமேற்குக் கோடியில் இராணிப்பேட்டை பஸ் நிலையம். நாங்கள் சற்றுத் தென்புறம் தள்ளிக் குடியிருந்தோம். பஸ்நிலையம் நோக்கிச் சென்றால், ஒரு பத்து வீடுகள் தள்ளி, ஒரு பெரிய வீட்டில்-ஒரே ஒரு வீட்டில்தான்- அந்தக் காலத்தில் ரேடியோ ஒலிக்கும். எனக்கு அது மிகவும் ஆச்சரியமாக இருக்கும். ஒரு பெரிய பீரோ சைஸில் உள்ள ரேடியோ. அதில் பல சிவப்புக் கோடுகள் இருக்கும். அதில் நகர்கின்ற ஒரு முள். இலங்கை வானொலிதான் அதிகமாக வந்தது என்று பின்னால் தெரிந்து கொண்டேன்.

பிறகு பக்கத்திலேயே வேலுமுதலித் தெருவுக்குக் குடிபெயர்ந்தோம். இராணிப் பேட்டை பஸ்நிலையத்திற்கு மிக அருகில். அதே தெருவில் கிழக்கே போய் இடப்புறம் திரும்பினால் உள்ள தெருவில்தான் நான் படித்த தொடக்கப் பள்ளி. இரண்டாம் வகுப்பு மூன்றாம் வகுப்புகள் படிக்கும்போதெல்லாம் பகலில் பள்ளியிலேயே தூங்கிவிடுவது வழக்கம். மாலையில் அம்மாவோ பாட்டியோ யாரோ வந்து அழைத்துக் கொண்டோ   தூக்கிக் கொண்டோ போவார்கள். எலிமெண்டரி பள்ளி வாத்திமார்கள் எவரும் என் நினைவில் இல்லை. இரண்டு டீச்சர்கள்- ஒருவர் பெயர் திருமதி ஜாய், மற்றொருவர் லூர்து மேரி– என் பள்ளி போட்டோவில் இருந்தது ஞாபகம் இருக்கிறது. ஆறாம் வகுப்பில் டீச்சராக இருந்தவர்கள்.

ஏதோ ஒரு வகையில் தமிழும் இசையும் என் வீட்டில் கலந்திருந்தன.  எனக்கும் என் தங்கையர்க்கும் என் தந்தையார் இட்ட பெயர்களே அதற்கு நல்ல சான்று. பொதுவாகவே எங்கள் வீட்டில் திருப்புகழ், தேவாரம், தாயுமானவர், வள்ளலார் போன்றவர்களின் பாக்கள் ஆகியவை பாடப்படும். என் தாயாருக்கு நல்ல இசைஞானம் உண்டு. கேள்வி ஞானம்தான். முறையாகக் கற்றுக்கொள்ள அக்காலத்தில் வக்கேது? அக்காலத்தில் திரைப்படங்களில் வந்த பாரதியார், பாரதிதாசனார் பாடல்களை  எல்லாம் அதேபோல நன்றாகப் பாடுவார். ‘எப்படிப் பாடினரோ’, ‘பராத்பரா  பரமேஸ்வரா’ போன்ற பாக்களை எல்லாம் பாடுவதோடு, திரைப்படங்களில் வந்த ‘மாடுகள் மேய்த்திடும் கண்ணன்’ ‘தலைவாரிப் பூச்சூடி உன்னை’ ‘துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ’ போன்ற பாடல்களைப் பாடுவார். அதனால் பொதுவாக எனக்கு இசையில் நல்ல ஈடுபாடு இருந்தது. அக்காலத் திரைப்படப் பாடல்களை எல்லாம் நானும் பாடுவேன். அநேகமாக எனக்கு ஐந்துவயதான சமயத்தில்தான் ‘கணவனே கண்கண்ட தெய்வம்’ படம் வந்ததாக ஞாபகம். பள்ளிக்கூடத்தில் பாடச் சொன்னதால், ‘எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ’, ‘முள்ளில் மலர்ந்த என் ரோஜா’ போன்ற பாடல்களைப் பாடியது நினைவிருக்கிறது.

வேலுமுதலித் தெரு பஸ்நிலையத்திலிருந்து மேற்கிலிருந்து கிழக்கே செல்லும் தெரு. நாங்கள் இருந்த தெற்கேபார்த்த வீட்டில் நடுவில் ஒரு கூடம். அதன் மூன்று புறமும் மூன்று குடும்பங்கள். நான்காம் பக்கம் கொல்லைப் புறம் செல்லும்  வழி. மூன்று குடும்பங்களில் எங்களுடையது நடுவில். தெற்குப் புறமாக (வாசல் பக்கம்) ஒரு முதலியார் வீடு. வடக்குப் புறம் எங்களைப் போன்றே ஒரு பிள்ளைமார் வீடு. வீடு என்றால், ஒரு சிறிய அறை, ஒரு சமையலறை -அவ்வளவுதான். வெளியில் வந்தால் கூடம்தான். தெற்குப் புறவீட்டருகிலேயே தெருவுக்குச் செல்லும் நடை.  தெருவை ஒட்டிய தெற்குப் புற வீட்டில் ஒரு கிழவர் இருந்தார். வெளியே இருந்த சிறிய திண்ணையில் பெரும்பாலும் உட்கார்ந்திருப்பார். என்னிடம் காலணா அல்லது அரையணா கொடுத்து பஸ்நிலையத்துக்கு பக்கத்திலிருந்த கடையில் ‘கவாப்பு’ வாங்கிவரச் சொல்வார் (அது ஏதோ மாமிச உணவு போலும்.) நான் வாங்கி வந்து தருவேன். இதை அறிந்து என் அம்மா கடுமையாகக் கண்டித்தார். அந்தக் கிழவரையும் திட்டினார். (நாங்கள் வள்ளலார் வழிவந்த சுத்த சைவக் குடும்பம்!).

அந்தக் காலத்தில்தான் – ஏறத்தாழ 1956ஆக இருக்கலாம்- ஜவகர்லால் நேரு- இந்தியப் பிரதமர்- இராணிப்பேட்டைக்கு வந்தார். உடன் குருஷ்சேவ், புல்கானின் இருவரும் வந்ததாக ஞாபகம். இராணிப் பேட்டையில் ‘ஐவிபிஎம்’ எனப்படும் கால்நடை மருந்துத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கிவைத்தார் நேரு. ஒருவாரம் ஒரே கோலாகலமாக, திருவிழாப் போல இருந்தது. எங்களை எல்லாம் நேருவைப் பார்க்க (அல்லது நேரு எங்களைப் பார்க்க) வரிசையாக முத்துக்கடையிலிருந்து மேற்கு நோக்கிச் செல்லுகின்ற  நெடுஞ்சாலை ஓரங்களில் காரை என்ற ஊருக்குப் பிரிகின்ற சாலைவரை நிற்க வைத்திருந்தார்கள். அதன் எதிர்ப்புறம் ஒரு சீர்திருத்தப் பள்ளி. (ஜெயில் ஸ்கூல் என்று  சொல்லுவார்கள்.) அதிலிருந்து வாராவாரம் பிள்ளைகள் யூனிபாரம் அணிந்து பேண்டு வாசித்துக் கொண்டு ஊர்வலமாக வருவார்கள். காசு வாங்கிக் கொண்டு போவார்கள்.

நான் அப்போதெல்லாம் முத்துக்கடைப் பக்கம் சுற்றி வருவேன். அது சென்னை-சித்தூர்-பம்பாய் செல்லும் நெடுஞ்சாலையில் இருந்த முக்கியமான நிறுத்தம். பல ஊர் லாரிகளும் அங்கே நிற்கும். குறிப்பாக வடக்கே ஆந்திராவில் சிகந்தராபாத், கர்னூல், மெகபூப் நகர் என்றெல்லாம். அந்த டிரைவர்கள் கொண்டுவரும் தீப்பெட்டிகளில் அந்த ஊர்ப் பெயர்கள் இருக்கும். அத்தீப்பெட்டிகளில் என்னை மிகவும் கவர்ந்தது, சீட்டா பைட் என்று பெயரிட்ட, ஒரு ஆடவன் அரிவாளுடன் சிறுத்தையுடன் சண்டையிடும் படத்தைக் கொண்ட தீப்பெட்டி.

ஐந்துவயதில் மலேரியா காய்ச்சல் வந்து ஏறத்தாழ செத்துப் பிழைத்தேன். இராணிப் பேட்டையில் அப்போது புகழ்பெற்றிருந்த ‘ஸ்கடர்’ ஆஸ்பத்திரியில்தான் சேர்த்திருந்தார்கள். அப்போதெல்லாம் ஸ்கடர் ஆஸ்பத்திரிக்கு அருகில் உள்ள ‘நேரோகேஜ்’ ரயில்பாதையில் வாலாஜாரோட்டிலிருந்து இராணிப்பேட்டைக்கு இரயில் வரும். ஈ.ஐ.டி. பாரி கம்பெனி இராணிப் பேட்டையில் இருந்ததால்  அரசாங்கம் செய்த ஏற்பாடு அது.

அக்கால வேலுமுதலித் தெருவில் ஒவ்வொரு வீட்டிலும் வாசற்படி தாண்டி வீடு முடியும் இடத்தில் கக்கூஸின் வெளிப்புறம்  ஒரு தகட்டில் மூடப்பட்டிருக்கும். யாரோ ஒருவர் காலை 6-7 மணி வாக்கில் கையில் ஒரு மலவாளியுடனும் மறுகையில் தகரத்துடனும் வருவார். தகட்டைத் திறந்து, தகரத்தால் மலத்தை வழித்து வாளியில் போட்டுக் கொண்டு மெதுவாக நடந்து அடுத்த வீட்டுக்குப் போவார். அக்கால நகர்ப்புறங்களில் மலம் எடுக்கும் நடைமுறை இதுதான். பின்னாட்களில் இதைப் பற்றி நினைத்தபோது, இவர்கள் எல்லாம் சேக்கிழார் பாடினாரே “ஓடும் செம்பொனும் ஒக்க நோக்குவார்” என்று, அதையும் தாண்டிய முதிர்ச்சி பெற்ற முனிவர்களாக, சித்தர்களாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றும். அவர்கள் வாழ்க்கை நிலையையும் சேரிகளுக்குச் சென்று கவனித்திருக்கிறேன். முடிந்தால் அது பற்றிப் பின்னால்.

தெருவின் ஒருபுறம் சாக்கடை இருக்கும். மறுபுறம் இருக்காது. இருந்தாலும் வேறுபாடின்றி சிறியவர் பெரியவர் எல்லாம் சிறுநீர் கழிக்க தெரு ஓரங்களைப் பயன்படுத்துவார்கள்.

எனக்குப் பின் இரண்டாண்டுகள் கழித்து என்வீட்டில் ஒரு தங்கை பிறந்தாள். அவளைத் தங்க (தங்கை)ப் பாப்பா என்று திரும்பத் திரும்ப எனக்குச் சொல்லப்போய், தங்கம் என்று நானே அவளுக்குப் பெயர்வைத்ததாக எடுத்துக் கொண்டார்கள். ஆனால் அவள் நீண்டநாள் இருக்கவில்லை. ஒன்றரை வயதிலேயே எக்காரணத்தினாலோ அக்குழந்தை இறந்து போயிற்று. அந்த துக்கம் ஆறாமல் அந்தக் காலத்திலேயே மனத்தில் இருந்தது கனவுபோல் இருக்கிறது.  அடுத்து எனக்கு மூன்றரை வயதானபோது  மற்றொரு பெண் குழந்தை எங்கள் வீட்டில் பிறந்தாள். என் தந்தையார் அவளுக்கு அழகாக அறச்செல்வி என்று பெயரிட்டிருந்தார். ஆனால் அவளுக்கும் பிறந்தது முதலே ஆஸ்துமா, காசநோய் இரண்டுமே இருந்தன என்று நினைக்கிறேன். அவளுக்கு வளர்ச்சி இல்லை. கால்கள் மெலிந்து நோஞ்சானாக இருக்கும். என் அப்பா, அம்மா, நான் மூவரும் அவளைத் தூக்கிக் கொண்டு பாலாற்றுக்குச் சென்று வருவோம். ஆற்றுமத்தியில்  மணலில் கால்களைப் புதைத்து வைத்தால் அவை வலுப் பெறும் என்று சொன்னார்கள். நான் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்த போதுதான் அவள் நடக்க ஆரம்பித்தாள். ஆறாம் வகுப்பு படிக்கும் வரைதான் நான் இராணிப்பேட்டையில் இருந்தேன். அப்போது என் தந்தையாரை திமிரி போர்டு உயர்நிலைப் பள்ளிக்கு மாற்றிவிட்டார்கள். திமிரியில் என் வாழ்க்கை ஒன்பதாம் வயது முதலாகத் தொடர்ந்தது.

இராணிப்பேட்டை அரசு (அக்காலத்தில் மாவட்ட போர்டு)  உயர்நிலைப் பள்ளியில் நான் கடைசியாக ஆறாம் வகுப்பு படித்தேன். அக்காலப் பாடத்திட்டம் மிக நன்றாக இருந்தது. ஆறாம் வகுப்பில்தான் ஆங்கிலம் ஆரம்பம். தமிழில் பொதுத்தமிழ், சிறப்புத் தமிழ் என்று இரண்டு பிரிவுகள் இருந்தன. சிறப்புத்தமிழில் ஆறாம் வகுப்பிலேயே எங்களுக்குச் சிலப்பதிகாரக் கதை நான்-டிடெயிலாக இடம் பெற்றிருந்தது. பிறகு கணக்கு, அறிவியல், சமூகப் பாடம். இவை அல்லாமல் குடிமை வகுப்பு என்று ஒன்று இருந்தது. பாரதியார் பாடல்கள் போன்ற தேச(பக்தி)ப் பாக்கள் முதலாகப் பயனுள்ள பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்தார்கள். கடைசியாக ‘ட்ரில்’ வகுப்பு. கட்டாயம் மூன்றரை மணிமுதல் நாலரை மணிவரை ட்ரில் பீரியடு இருக்கும். உடற்கட்டு உள்ள பையன்களுக்கு வாய்ப்பாக உயரத்தாண்டுதல், நீளத்தாண்டுதல் முதலிய ஸ்போர்ட்ஸ்களிலிருந்து கால்பந்து, கைப்பந்து, தடிப்பந்து வரை விளையாட்டுகளும் கற்பிக்கப் பட்டன.

(தொடரும்)

 

 

 

 

 

 

 

வாழ்க்கை வரலாறு