என் இளமைக் காலம்-3

திமிரியில் ஒன்பது வயதில் அங்கிருந்த போர்டு ஸ்கூலில் ஏழாம் வகுப்பு சேர்ந்தேன்.

நான் மிகவும் நோஞ்சான். சேர்ந்தவுடன் ஸ்போர்ட்ஸ் வாத்தியார் எடை பார்த்தார். அப்போது நான் ஏதோ 23 பவுண்டு இருந்தேன். (ஏறத்தாழ 10-11 கிலோதான்). ஒரு விளையாட்டிலும், ஸ்போர்ட்ஸிலும் நான் சோபித்ததில்லை. புல்லப் எடுக்கச் சொல்வார். என்னால் ஒன்றுகூட எடுக்க முடியாது. ஹைஜம்ப் தாண்டச் சொல்வார். மிகக் குறைந்த உயரத்திற்கு வைக்கும் கட்டையையும் தாண்ட முடியாமல் விழுந்துவிடுவேன். இப்படித்தான் விளையாட்டுகளில் எனது பெர்ஃபார்மன்ஸ். ஆனால் படிப்பில் எப்போதும் முதல் ரேங்க்தான்.

அக்காலப் பள்ளி வளாகம் மிகுந்த அழகாக இருக்கும். ஆரணி செல்லும் சாலையில் பெரிய வாயிற்கதவு. முன்புறம் மட்டும் காம்பவுண்டு சுவர். பள்ளியின் அகல-நீளம் மிக அதிகம். இரண்டு வரிசைகளாக வகுப்பறைகள் இருந்தன. வாயிலிலிருந்து நுழைந்தவுடனே கொஞ்சம் தள்ளிச் சில படிக்கட்டுகள் ஏறி உயரமாக உள்ள மேடைப்பகுதிக்குச் சென்றால், இடப்புறம் தலைமையாசிரியர் அறை. வலப்புறம் ஆசிரியர்கள் அறை. அவற்றுக்கு வெளியில் அன்றைய செய்திகள், பொன்மொழிகள் எழுதுவதற்கான கரும்பலகைகள். தொடர்ந்து உள்ளே சென்றால் நீண்ட, நல்ல வழவழப்பான சிமெண்டு போட்ட தாழ்வாரம். அதில்தான் தளமிட்ட, ஒன்பது-பத்து-பதினொன்றாம் வகுப்புகள். லைப்ரரி. அந்த உயர்ந்த தாழ்வாரத்தை ஒட்டி அழகான செம்பருத்திச் செடிகளின் வரிசை.

அந்த மேடைப் பகுதியிலிருந்து கீழே இறங்கினால் பெரிய செவ்வக மைதானம். அதில்தான் காலை அசெம்ப்ளி நடக்கும். அதைச் சுற்றி வலப்புறம் கிராஃப்ட் (கைத்தொழில்) ஆசிரியர் அறை-வகுப்பறை. அதற்கு அடுத்து ஸ்போர்ட்ஸ் அறை. உயர்தாழ்வார வகுப்புகளுக்கு நேர் எதிரில், இணையாக,  ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள, ஓடுவேய்ந்த பகுதியிலிருந்த வகுப்புகள். இடப்புறம் கிரவுண்டுக்குச் செல்லும் பெரிய வாயில். எல்லா வகுப்பறைகளுக்கும் வெளியே அழகான பூச்செடிகள்.

அதிக வகுப்புகள் கிடையாது. எல்லாவற்றிலும் இரண்டிரண்டு செக்-ஷன்தான்.

இந்தச் செவ்வக வகுப்பறை அமைப்புக்கு வெளியே பெரிய மைதானம். அதன் கால்பகுதியை கால்பந்து விளையாட்டிடம் அடைத்துக் கொண்டிருந்தது. மிச்சம் பகுதியில் தடிப்பந்து மைதானம், கைப்பந்து கிரவுண்டு, நீளத்தாண்டுதல், உயரத்தாண்டுதல் போன்றவற்றிற்கான இடங்கள், இவையெல்லாம் போக, ஆறாம் வகுப்புமுதல் எட்டாம் வகுப்புவரை இருந்த பகுதிக்குப் பின்புறம் ஒரு கிச்சன்-கார்டனும்  (பள்ளிக் காய்கறித் தோட்டம்) இருந்தது.

இந்த தடிப்பந்து  (அதற்குப் பெயர் பேஸ்-பால்) பற்றிக் குறிப்பிட வேண்டும். அப்போதெல்லாம் கிரிக்கெட் புகழ்பெற்ற விளையாட்டு இல்லை. அதன் அமெரிக்க வெர்ஷன் போல இருந்தது தடிப்பந்து. ஒரு குண்டாந்தடி போல மட்டை இருக்கும். அதைவைத்துப் பந்தை அடித்தால் கிரிக்கெட்போலத்தான், பிடிக்க வேண்டும். ஆனால் ரன் ஓடுவது ஒரு சதுரத்தின் நான்கு பக்கங்களாக அமைந்திருக்கும். ஒருவர் பந்தை அடித்துவிட்டால் அவர் அடித்த இடத்திலிருந்து (சதுரத்தின் ஒரு மூலை அது) கிடைப்பக்கமாக ஓடவேண்டும். அடுத்து மற்றொரு பையன் அடிப்பான். அப்போது முதல் பையன், சதுரத்தின் அடுத்த பக்கத்தில் (எதிர்க்குத்தாக) ஓட வேண்டும். இப்படி நான்கு பக்கங்களும் ஓடிமுடிந்தால்தான் ஒரு ரன். கிரிக்கெட்டை விட மிக நல்ல உடலுக்குப் பயிற்சிதரும் விளையாட்டு. ஏனோ அது பிற்காலத்தில் இல்லாமல் போயிற்று.

திமிரியில் நெசவுத்தொழில் அக்காலத்தில் மிகுதி. செங்குந்த முதலியார்கள் பெரும்பகுதியினர். எனவே கைத்தொழில் வகுப்பிலும் எங்களுக்கு நெசவே பயிற்சி அளிக்கப்பட்டது. என் தந்தை டிராயிங் மாஸ்டர். அவர் எட்டாம் வகுப்புதான் படித்தவர் என்பதை முன்னாலே சொல்லியிருக்கிறேன். கணக்குப் பிள்ளை வேலையை விட்டுவிட்டு,  நன்றாகப் படம் போட வந்ததால், தனிப்பட்ட முறையில் டிராயிங் பரீட்சைகளில் தேர்வு பெற்று டிராயிங் மாஸ்டரானார். நான் இராணிப் பேட்டையில் ஆறாம் வகுப்பு சேர்வதற்கு இரண்டு ஆண்டுகள் முன்னால்தான் அந்தப் பணியில் சேர்ந்தார். அதற்கு முன்? சோற்றுக்குத் தாளம்தான்.

அவர் இராணிப்பேட்டையிலிருந்து திமிரிக்கு மாற்றப்பட்டதால்தான் குடும்பமும் திமிரிக்குக் குடிபெயரவேண்டி வந்தது. இராணிப்பேட்டையில் மூன்றாண்டுகள், திமிரியில் ஏழாண்டுகள்,  திமிரிக்குப் பின் விரிஞ்சிபுரம்-அங்கு ஆறாண்டுகள், அதன்பின் இலாலாப் பேட்டையில் நான்காண்டுகள். அத்துடன் அவர் சர்வீஸ் முடிவு பெற்று விட்டது.  ஓரளவு அவர் தொழிலுக்கு அப்போது நல்ல மதிப்பிருந்தது. சிலசமயங்களில் குடிமைப் பயிற்சி ஆசிரியராகவும், ஸ்கவுட் (சாரணர்) ஆசிரியராகவும் கூடப் பணியாற்றினார்.

திமிரியில் இருந்தபோது சுயமாகவே படித்து பன்னிரண்டாம் வகுப்பும், பிறகு இடைநிலை ஆசிரியப் பயிற்சித் தேர்வும் பாஸ் செய்தார். ஆனால் இடைநிலை ஆசிரியராக அவருக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. அவர் கடைசியாக வரைந்தது அரசினர் உயர்நிலைப் பள்ளி இலாலாப்பேட்டை என்ற போர்டுதான்.

அக்காலத்தில் ஒன்பதாம் வகுப்பு முடிந்தபிறகு மாணவர்களுக்கு செலக்-ஷன் என்று ஒரு ஏற்பாடு இருந்தது. மோசமாகப் படிப்பவர்களை எல்லாம் ஒன்பதாம் வகுப்பிலேயே நிறுத்திவிட்டு பொதுத்தேர்வில் (எஸ்எஸ்எல்சி) தேறக்கூடியவர்களை மட்டும் பத்தாம் வகுப்புக்கு அனுப்புவார்கள். பதினோராம் வகுப்பில் கணக்கு இரண்டாகப் பிரியும். பொதுக்கணக்கு (ஜெனரல் மேத்ஸ்) கூட்டுக்கணக்கு (காம்போசிட் மேத்ஸ்) என்று. காம்போசிட் மேத்ஸ் எடுத்தால் அல்ஜிப்ரா, ஜியோமெட்ரி, திரிகோணமிதி போன்ற கணக்குகள் இடம்பெறும். ஜெனரல் மேத்ஸில் அப்படி அல்ல. வெறும் கடைக்கணக்குகள், சராசரி,சதவீதம் போன்றவைதான். நான் காம்போசிட் மேத்ஸ் எடுத்தேன்.

வகுப்புகள் குறைவாக இருந்ததால் பி.டி. ஆசிரியர்களும் குறைவுதான். தலைமையாசிரியர் தவிர, எங்களுக்கு ஜெகதீசன், வெங்கடேசன் என்று இரண்டுபேர் சோஷியல் பிடி, சயன்ஸ் பிடி ஆசிரியர்கள். பி.வி. சண்முகம் என்று ஒரு கணித ஆசிரியர். அவ்வளவுதான். இது தவிர ஒரு மேல்நிலைத் தமிழாசிரியர் உண்டு.  தலைமையாசிரியர் ஆங்கிலம் மட்டும் நடத்துவார். எங்கள் கணித ஆசிரியர் மிகச் சிறந்த ஆசிரியர். அக்காலத்திலே நான் கற்றுக் கொண்ட தேற்றங்கள், அவற்றுக்கான தீர்வுகள், அல்ஜிப்ரா அடிப்படைகள், ரிடக்-ஷியோ ஆட் அப்சர்டம் போன்ற முறைகள் எல்லாம் இன்றும் நன்றாக ஞாபகத்தில் இருக்கின்றன. இது மேல்வகுப்புகளுக்கு. இதேபோல் கீழ்வகுப்புகளுக்கும் இடைநிலை ஆசிரியர்கள், தமிழாசிரியர் இருந்தனர்.

ஏழாம் வகுப்பில் முதல் மாணவனாகத் தேறியதற்கு ‘உலகம் சுற்றும் தமிழன்’ என்ற புத்தகத்தைப் பரிசாக அளித்தார்கள். சுவையான புத்தகம் அது. அந்த ஆண்டு முடிந்தபிறகு ஒருநாள் அதை எழுதிய ஆசிரியரே-ஏ.கே. செட்டியார் அவர்களே-ஏதோ காரணத்திற்காக எங்கள் பள்ளிக்கு வந்திருந்தார். அவரைச் சந்தித்ததில்  எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவரைப் பற்றி அப்போது மிகுதியாகத் தெரியவிட்டாலும், பிறகு நிறையத் தெரிந்துகொண்டேன். காந்தி இருந்த காலத்திலேயே, அவரை வைத்து,  இந்திய மொழிகளில் முதன்முதலாகத் தமிழில் டாக்குமெண்டரி எடுத்த மனிதர்.  குமரி மலர் என்ற பத்திரிகையை நடத்தியவர்.

பின்னரும் ஒவ்வோராண்டும் எனக்கு ஆண்டிறுதியில் பரிசுகள் தொடர்ந்தன. இது, 1968இல் நான் பி.எஸ்சி முடிக்கும் வரை நீடித்தது.

பொதுவாக, எனது பள்ளியாண்டுகள், திமிரியில் வாழ்ந்த ஆண்டுகள் எனது பொற்காலம். ஏழாம் வகுப்பு முதலாகவே நான் படித்த பாடங்கள் இன்றும் நன்றாக ஞாபகம் இருக்கின்றன. கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் அந்த மாதிரி. டெடிகேடட். ஏழாம் வகுப்பில் என்னுடன் ஒரே ஒரு முஸ்லிம் மாணவன்-அப்துல் மாலிக்- படித்தான். வகுப்பிலேயே மிகச் சிறியவன் (9) நான் என்றால், மிகப் பெரியவன் (16) வயது அவன். காரணம், முஸ்லிம் மதர்ஸாவில் படித்துவிட்டு வந்தவன். அவனும் செலக்-ஷனில் தோற்றுப்போய், நின்றுவிட்டான்.

அக்காலத்தில் இந்தி ஆசிரியர்களும் இருந்தார்கள். முதலில் இந்தி ஆசிரியராக இருந்தவர் ஒரு பிராமணர். திமிரிக்குப் பக்கத்தில் இராமப் பாளையத்தில் அவர் வீடு. பள்ளியில் இந்தி சரிவரச் சொல்லித்தரப் படுவதில்லை. எனவே அவரிடம் தனியாகச் சென்று பிராத்மிக் படிக்கத் தொடங்கினேன். அவரிடம் ராஷ்டிரபாஷா வரை தொடர்ந்தது. பிறகு அவர் வேறு ஊருக்கு மாறிவிட்டார். அப்துல் கவுஸ் என்று இன்னொருவர் வந்தார். அவர் வீட்டுக்குச் சென்று ப்ரவேசிகா படிப்பைத் தொடர்ந்திருக்க வேண்டும். ஆனால் அவர்வீட்டில் எங்கும் கோழிகள் திரிந்துகொண்டிருக்கும், எங்கும் கோழிக்கழிவுகள், முட்டைகள். எனவே செல்லுவதற்குப் பிடிக்காமல் தொடரவில்லை.

இடைநிலை ஆசிரியர்களில் சிலர் நன்றாக ஞாபகம் இருக்கிறார்கள். தமிழாசிரியர் ஜீவரத்தினம். நான் பிடி ஆசிரியனாகி தனிப்பட்ட முறையில் எம்.ஏ. தேர்வு எழுதச் சென்றபோது அவரும் என்னுடன் எம். ஏ. தேர்வுக்கு வந்தார் (ஆனால் ஃபெயில் ஆகிவிட்டார். அதே ஆண்டில்தான் நா.பார்த்தசாரதி (தீபம்)யும் என்னுடன் தேர்வு எழுதி, தோற்றுப்போனார்.)

மற்றொரு இடைநிலை ஆசிரியர் நடராஜ பிள்ளை. தன் பிள்ளைக்கு நக்கீரன், பெண்ணுக்கு நல்லினி என்று அழகான தமிழ்ப் பெயர்கள் வைத்திருந்தார். ஆங்கிலம் கற்பிப்பதில் வல்லுநர். அவர் பையன் என் நண்பன், வகுப்புத் தோழன்.

இன்னொரு ஆசிரியர் பெயர் நினைவில்லை. ஆனால் பெரிய தொந்தி. குண்டாக இருப்பார். தலைமுதல் இடுப்புவரை முக்கோணம் போல. அவருக்கு நாங்கள் வைத்திருந்த  பெயர் போண்டா வாத்தியார். இன்னொரு ஆங்கில ஆசிரியர் பெயர் நடேசன். நன்றாக ஆங்கிலம் கற்பிப்பார்.

தினம்-ஒரு-செய்தி