என் வாழ்க்கையில் ஓர் அலை

இன்று சிவாஜிகணேசன் நடித்த ‘தங்கை’ என்ற படத்தைப் பார்த்தேன். அதை நான் முதல் முறை பார்த்தது அநேகமாக 1966ஆம் ஆண்டு இறுதியாக இருக்கலாம். பிஎஸ்.சி. இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்ததாக ஞாபகம். ஒரு காரணத்தினால் அந்தப் படம் கொஞ்சம் என்னை மிகவும் பாதித்தது. வேறொன்றுமில்லை. அதில் வரும் கதாநாயகனுக்குக் காசநோயால் அவதிப்படும் ஒரு தங்கை இருப்பாள். அதேபோல எனக்கும் ஒரு தங்கை இருந்தாள்.
எனக்கு மூன்று வயது இளையவள். என் அப்பா ஆசையாக அறச்செல்வி என்று பெயரிட்டிருந்தார். எனக்குச் சிலகாலம் உயிராக இருந்தாள். ஆனால் காசநோய் அவளுக்கு.
காசநோய் மருத்துவ மனையில் சேர்க்கவேண்டும் என்ற அறிவுகூட என் தந்தை-தாய்க்கோ எனக்கோ இல்லை. தினமும் இருமி இருமி இரத்தம் உமிழ்ந்து அவள் படும் பாடு எவர் நெஞ்சையும் உருக்கும். பிறகு பெரிய இளைப்பு வந்து சோர்ந்து படுத்துக் கொள்வாள். சிறிய வயதிலிருந்தே அந்த நோய் தொற்றிக்கொண்டதால் அவள் வளர்ச்சியே குன்றியிருந்தது. படத்தில் வந்த தங்கை பிழைத்துக் கொண்டாள். கதாநாயகனின் காதலியாக இருந்த டாக்டர் அவளைக் காப்பாற்றிவிட்டாள். எனக்கு அப்படி யாரும் இல்லை. என் தங்கை இறந்துபோனாள்.
1968 மேயில் பட்டப்படிப்பை முடித்தேன். அநேகமாக ஜூன்மாதம் ரிசல்ட் வந்திருக்கலாம். 1968 ஆகஸ்டு 29ஆம் நாள் அணைக்கட்டு உயர்நிலைப் பள்ளியில் பயிற்சிபெறாத ஆசிரியனாகச் சேர்ந்த பிறகாவது அவளை நான் ஆஸ்பத்திரியில் சேர்த்து கவனிக்க ஏற்பாடு செய்திருக்கவேண்டும். செய்யவில்லை. விட்டுவிட்டேன்-எப்படியோ. அடுத்த ஆண்டு வல்லம் ஆரணி உயர்நிலைப் பள்ளிக்கு மாறினேன். (எல்லாம் தற்காலிகப் பதவிகள், ஜூன் முதல் ஏப்ரல்வரைதான் போஸ்டிங்). எழுபதாம் ஆண்டு ஜனவரியாக இருக்கலாம்-இப்போது நாள் மறந்துவிட்டது-அவள் துடிதுடித்து இறந்து போனாள். ஓரளவு சம்பாதித்தும், காப்பாற்ற முடியாத ஒரு மடத்தனமான அண்ணனாக இருந்தது பின்னர்தான் எனக்கு உறைத்தது.
அதற்குப் பிறகுதான் வேலூரை அடுத்த அடுக்கம்பாறையில் அரசாங்கக் காசநோய் மருத்துவ மனை தொடங்கினார்கள் என்று நினைக்கிறேன். முன்னாலேயே இருந்திருந்தால் ஒருவேளை அவள் அங்குச் சேர்க்கப் பட்டிருக்கக்கூடும். நிச்சயமாகத் தனியார் மருத்துவ மனையில் சேர்க்கும் அளவுக்கு எங்களிடம் காசு இல்லை. அதைவிடப் பெரியது எங்கள் மடத்தனம், அறியாமை. என் பெற்றோர் மட்டுமல்ல, நானும்கூட கிராமத்தின் கள்ளமற்ற தன்மையோடு இருந்துவிட்டோம்.
அந்தக் காலத்தில் கந்துவட்டிக்குப் பணம் கடன் வாங்கியாவது என்னை என் பெற்றோர் படிக்க வைத்தார்கள். பட்டப்படிப்பை மிகவும் முதல்தரமாக (பௌதிகத்தில் டி= வாங்கி) பத்தொன்பதாம் வயதின் தொடக்கத்திலேயே முடித்திருந்தும் வழிகாட்ட ஒருவரும் இல்லை. என் கல்லூரி பௌதிகத் துறைத் தலைவர் நினைத்திருந்தால் வழிகாட்டி யிருக்கலாம். ஆனால் அந்த சுந்தரராஜ ஐயங்கார், பார்ப்பனச் சாதியினருக்கு மட்டும்தான் வழிகாட்டினார். எங்களைச் சீயென்று விரட்டிவிட்டார், ஏமாற்றினார் என்றுகூடச் சொல்லலாம். அன்று எனக்குத் தெரிந்த ஒரே வேலை ஆசிரியர் வேலைதான். மேற்கொண்டு வேறு என்ன படிக்கலாம், என்ன வேலை செய்யலாம்-எதுவும் தெரியாது.

பதினேழு வயதில் இறந்துபோன என் தங்கையை இன்று நினைத்துக் கொள்கிறேன். 49 ஆண்டுகள் ஆயிற்று. அவள் முகம் என்னைக் குற்றம் சாட்டுகிறது. ஆனால் என்னசெய்ய?
சரி, இன்னொரு நாள் இன்னொரு அலையைக் காணலாம்.

மொழிபெயர்த்த_கட்டுரைகள்