ஒரு குட்டிக்கதை

கிராமத்தில் ஒரு சிறு வணிகராக இருந்த தந்தை. அவருக்கு ஒரு மகன். அவனுக்கும் இருபது வயதாயிற்று. இந்தக் காலத்திலுள்ள எல்லா இளைஞர்களையும் போலவே அவனும் எதையும் செய்யாமல் ஊர்சுற்றிக் கொண்டிருந்தான். தந்தைக்குத் தன் மகன் என்ன ஆகப் போகிறான் என்பது பற்றிக் கவலை. இதற்கு ஒரு சோதனை வைத்துப் பார்க்கவேண்டும் என்று நினைத்தார்.

படிப்பு, படுக்கை இத்யாதிகளுக்கு அவனுக்கு வீட்டில் ஒரு சிறிய அறை இருந்தது. அவன் அறைக்குள் நுழைந்த தந்தை அவன் தலைமாட்டில் ஒரு பகவத்கீதை, ஒரு பத்துரூபாய் நாணயம், (அவர் தகுதிக்குமீறி அவனுக்காக அவர் எடுத்த) சற்றே விலையுயர்ந்த உடை, பைக் சாவி ஒன்று ஆகியவற்றை வைத்தார்.

“வந்தவுடன் எதை எடுக்கிறான் பார்ப்போம். பகவத்கீதையை எடுத்தால் ஒரு சாமியாராகப் போவான் என்று நினைக்கிறேன். பத்து ரூபாய் நாணயத்தை எடுத்தால் ஏதாவதொரு வியாபாரத்தில் ஈடுபடும் மனப்பான்மை அவனுக்கு இருக்கிறது. உடையை எடுத்தால் ஆடம்பர சொகுசு வாழ்க்கை நடத்துவதற்கு மனம் இருக்கிறது. பைக் சாவியை எடுத்தால் ஊர்சுற்றும் வேலை எதற்கேனும் போகக்கூடும்” என்று தனக்குள் கூறிக்கொண்டார்.

அவன் வரும் நேரத்தில் கதவுக்குப் பின்னால் ஒளிந்திருந்தார். பையன் வந்தான். பகவத்கீதையை ஒரு கையால் எடுத்துக் கக்கத்தில் வைத்துக் கொண்டு மற்றொருகையில் காசையும் பைக் சாவியையும் எடுத்துப் பாக்கெட்டில் போட்டுக் கொண்டான். பிறகு உடையை எடுத்துவைத்துச் சற்றே அழகுபார்த்துவிட்டுப் போட்டுக் கொள்ளத் தொடங்கினான்.

“அடடே, இவன் கண்டிப்பாக நம் பாரதத்தின் அடுத்த பிரதமர் ஆகி விடுவான்” என்று மகிழ்ச்சி கொண்டார் தந்தை.

சமூகம்