ஓசையிலே வரும் நாசம்!

ஓசையிலே வரும் நாசம்!

(இக்கட்டுரை, Noise Pollution – ஒலிச் சூழல் சீர்கேடு  என்ற துறை பற்றியது. ஒருவேளை தமிழில் இது பற்றி வெளிவந்த முதல் அறிவியல் கட்டுரை இதுவாகவே இருந்திருக்கலாம். இது 1986 டிசம்பர் ‘இனி’ இதழில் (ஆசிரியர் எஸ்.வி. ராஜதுரை) வெளியானது. தமிழ்நாட்டின் இரைச்சலைப் பொறுத்தமட்டில், ஏறத்தாழ முப்பதாண்டுகளுக்கு முன்னால் இருந்த அன்றைக்கும் இன்றைக்கும் ஒரு பெரிய வேறுபாட்டை நான் காணவில்லை.)

தமிழனின் செவிப்பறை ஏதேனும் ஓர் உலோகத் தகட்டில் செய்யப்பட்டிருக்கிறதோ என்னமோ? ஏனெனில் அன்றாட வாழ்வில் இத்தனை இரைச்சல்களுக்கு ஈடுகொடுப்பவன் தமிழனைத் தவிர உலகில் வேறு யாரும் இருக்க முடியாது. எத்தனை சப்தங்கள்! காதணி விழாவிலிருந்து திருமண நிகழ்ச்சி வரை, கோயில் திருவிழாக்களிலிருந்து அரசியல் கூட்டங்கள் வரை, ஒலிபெருக்கி, ஒலிபெருக்கி, பெருக்கி, பெருக்கி… போதாதற்குப் பேருந்துகளில், ஆட்டோ ரிக்‌ஷாக்களில் டேப் ரிகார்டர் இசை. உணவு விடுதிகளில் வானொலி இரைச்சல் (இப்போது சிடி இரைச்சல் என்று மாற்றிக்கொள்ளலாம்). அண்டைவீடுகளில் ஸ்டீரியோ ஓசை. கண்காட்சிகளில் விளம்பரக் கூச்சல்கள்…

இந்த இரைச்சல்கள் நமது உடலையும் மனத்தையும் எப்படி பாதிக்கின்றன என்பதைப் பற்றி நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. இவை வெறும் நியூசன்ஸ் மட்டுமல்ல. நம் மனத்தையும் உடலையும் கடுமையாக பாதிப்பவை. ஆயுளைக் குறைப்பவை. இவற்றைப் பற்றி நாம் தெரிந்து கொள்வது உடனடித் தேவையாகும்.

ஒலியலைகள் பற்றி…

ஒலி அலைகளாகப் பரவுகிறது. காற்று மூலம்தான் என்றில்லை. எந்த ஊடகமாக இருந்தாலும் பரவும். வெற்றிடத்தில் மட்டும்தான் ஒலி பரவ முடியாது. உண்மையில், நம் நாட்டுப் படைவீரர்களிடமிருந்துதான் அமெரிக்கர்கள், தூரத்தில் வருகின்ற ஒரு குதிரைப்படையின் ஓசையைத் தரையில் காதுகொடுத்துக் கேட்டுக் கண்டுபிடிக்கும் முறையை அறிந்தனர். தரை, கம்பம், மரம், இரும்பு, காற்று, தண்ணீர் – எதுவாக இருந்தாலும் ஒலியைக் கடத்தும். ஆனால் மனிதர்களைப் பொறுத்தவரை, காதுகளுக்கு ஒலி பெரும்பாலும் காற்றுமூலம்தான் வந்து சேர்கிறது.

சாதாரணமாக ஒலி, ஒரு நொடிக்கு 344 மீ. அல்லது மணிக்கு 760 மைல் வேகத்தில் பரவுகிறது. ஒலியின் இந்த வேகத்தை ஒரு மாக் என்கிறார்கள். இந்த ஒரு மாக் வேகத்திற்கும் அதிகமாக, இன்னும் அதிக வேகத்தில் செல்லும் விமானங்கள்தான் சூபர்சானிக் ஜெட்டுகள் என்று அழைக்கப் படுகின்றன. சுமார் 600 மைல் முதல் 800 மைல் (960 கி.மீ. முதல் 1280 கி.மீ.) வரையுள்ள வேகம் ஒலிச்சுவர் (சவுண்ட் பாரியர்) எனப்படுகிறது. சாதாரண விமானங்கள் ஒலிச்சுவரைக் கடந்தால் அவை வேகமான காற்று மூலக்கூறுகளால் மோதப்பட்டு நொறுங்கிப்போகும். ஒலிச்சுவரைத் தாண்டிச் செல்லத் தனி அமைப்புகள் விமானங்களில் உள்ளன.

ஒலி பரவும்போது, ஊடகத்திலுள்ள மூலக்கூறுகளை அதிரச்செய்துதான் பரவுகிறது. ஒரு அதிர்வு, ஒரு சைக்கிள் எனப்படுகிறது. ஒலி காற்றின் மூலமாகச் செல்கிறதானால், ஒரு நொடிக்குக் காற்றின் அணுக்கள் எத்தனை முறை அதிர்கின்றனவோ, அந்த எண், அதிர்வெண் எனப்படும். அதிர்வெண்ணை ஒரு நொடிக்கு 256 அதிர்வுகள்  (256 சைக்கிள்/நொடி) என்பதுபோலக் குறிப்பிடுவர்.

பழுதற்ற ஒரு மனிதக் காதினால் அதிகபட்சம் ஒரு நொடிக்கு 20000 அதிர்வுகளைக் கேட்கமுடியும். அதற்குமேல் முடியாது. அதற்குமேல் அதிர்வெண் கொண்ட ஒலி அல்ட்ராசானிக் எனப்படுகிறது. குறைந்த பட்சமாக மனிதக்காது நொடிக்கு 15 அதிர்வுகளைக் கேட்கலாம். அதற்குக் கீழ் குறைந்தாலும் கேட்க இயலாது. இது இன்ஃப்ரா சானிக் ஒலி எனப்படுகிறது. இவ்விரண்டையும் கேளா ஒலிகள் எனலாம்.

அதிர்வெண்ணைத் தவிர, உரப்பு அல்லது ஓசையின் வலிமை (இண்டென்சிடி அல்லது லவுட்னஸ் என்று ஆங்கிலத்தில் சொல்லுவர்) என்பதும் முக்கியமானது. ஒலி அலைகள் எவ்வளவு அழுத்தத்துடன் செவிப் பறையைத் தாக்குகின்றன என்பதைப் பொறுத்தது இது. ரொம்பத் தொலைவிலுள்ள ஒலிகள் சரிவரக் கேட்பதில்லை. கிட்டத்திலிருந்து வரும் ஒலிகள் அதிக உரப்புடன் கேட்கின்றன. உண்மையில் நம் காதுகளைத் தாக்கும் ஒலியின் சக்தி என்பது மிகக் குறைவுதான். மிக உரத்த சத்தம் என்று நாம் நினைப்பதன் சக்தி 0.01 வாட் தான் இருக்கும். இதுவே காதைச்  செவிடாக்கிவிடும். (ஒப்பீட்டுக்கு-நாம் 40 அல்லது 60 வாட் பல்பினை வெளிச்சத்துக்குப் பயன்படுத்துகிறோம்.) காற்றில் வரும்போது ஒலியலைகள் காற்று அணுக்களால் தங்கள் சக்தியை இழந்துவிடுகின்றன. ஒளி அப்படி இழப்பதில்லை.

ஒலியின் உரப்பு அல்லது வலிமை என்பது டெசிபெல் என்ற வீதத்தால் அளக்கப்படுகிறது. ஒரு டெசிபெல் என்பது ஒரு சதுரசென்டிமீட்டர் பரப்பின் மேல் 0.000204 டன் அழுத்தம் ஏற்படுவதற்குச் சமம். டெசிபெல் என்பது மடக்கை வீதத்தில் (லாகரித்மிக் ஸ்கேல்) உள்ள ஓர் அளவு. டெசி என்றால் பத்தில் ஒரு பங்கு. பெல் என்பதுதான் முக்கிய அளவு, ஆனால் மிகப் பெரிய அளவு! ஒரு பெல் என்பது 10 டெசிபெல், ஆனால் இரண்டு டெசிபெல் என்பது 20 டெசிபெல் அல்ல – 100 டெசிபெல் (பத்தின் இரு மடங்கு). இதேபோல் இரண்டு ஒலிக்கருவிகளிலிருந்து வரும் ஒலிகள் அப்படியே கூடுவதில்லை. சற்றேதான் கூடும். உதாரணமாக ஒரு கருவியிலிருந்து 60 டெசிபெல் ஓசையும், மற்றொன்றிலிருந்தும் 60 டெசிபெல் ஓசையும் வந்தால் நமக்கு 120 டெசிபெல் ஓசை கேட்காது, 63 டெசிபெல் அளவுதான் கேட்கும். ஒலியை அளக்க சவுண்ட் லெவல்  மீட்டர்கள் உள்ளன. ஒரு சிறு காமிராபோல் கழுத்தில் இவற்றை மாட்டிக் கொண்டு சென்று ஓரிடத்திலுள்ள ஓசையின் உரப்பை அளக்கமுடியும்.

ஒலிச்சூழல் சீர்கேடு

ஒலியின் உரப்பளவு (சத்த அளவு) ஒரு குறிப்பிட்ட எல்லையை தாண்டிவிடுமானால் அதை ஒலிச்சூழல் சீர்கேடு எனலாம். எந்த வயதுள்ளவரானாலும், ஒருவருடைய கேட்கும் திறன் ஒலிச்சூழல் சீர்கேட்டினால் பாதிக்கப்படுகிறது.

காது ஓர் அற்புதமான நுண்ணுணர்ச்சி வாய்ந்த சாதனம். மிக பலவீனமான சக்தி கொண்ட ஒலியைக்கூட கிரகித்து அந்த ஒலியலைகளை உயிர்மின் துடிப்புகளாக மாற்றி மூளைக்கு அனுப்புகிறது. அதனால்தான் ஒலியை உணர்வது சாத்தியமாகிறது. ஒரு நல்ல காது, சுமார் 75 ஆண்டுகளுக்காவது கேட்கும் சக்தியை நன்றாக வைத்திருக்க முடியும். ஆனால் பல ஆண்டுகளாக எந்திர ஓசைகள், கும்பல் ஓசைகள், ஒலிபெருக்கி ஓசைகள் போன்றவற்றைக் கேட்கும் காதுகள், மிக விரைவாகக் கேட்கும் தன்மையை இழந்துவிடுகின்றன.

ஒலி குறித்து ஆராய்ச்சி செய்த ஓர் அமெரிக்க ஆய்வாளர்-டாக்டர் ரோஸன் என்பவர் சொன்னார்: “ஆப்பிரிக்க ஆதிவாசிகளான மாபான்களிடையே நான் சோதனை செய்தபோது வியந்தேன். அவர்கள் ஆடுமாடு கத்துவது போன்ற இயற்கை ஒலிகளைத் தவிர செயற்கை ஒலிகள் எதற்கும் பழக்கப்படாதவர்கள். ஓர் எண்பது வயதான ஆதிவாசி, ஒரு இருபத்தைந்து வயது அமெரிக்க வாலிபனுக்கு இணையான கேட்கும் சக்தியைப் பெற்றிருக்கிறான்”.

உரத்த ஒலிக்கு ஆட்பட்டாலும், காதுகள் தாமாகவே கேட்கும் சக்திக்கு மீளக்கூடிய தன்மையைப் பெற்றிருக்கின்றன. எனினும் சிலசமயங்களில் மிக உரப்பான ஒலிகளை நீண்டநேரம் கேட்கும்போது காதுகள் தங்கள் நிலைஇயல்புக்கு மீள முடிவதில்லை. நீண்ட நேரம் என்பது நமது பஸ்கள், லாரிகளிலுள்ள மின் ஹாரன் ஒலிகளின் உரப்புக்கு சுமார் மூன்று நிமிட நேரம்தான். மூன்றுநிமிட ஒலியே ஒருவனைச் செவிடாக்கிவிடக் கூடும். காதின் நத்தை எலும்பை பாதிக்கக்கூடும். துப்பாக்கி, பீரங்கி அல்லது வெடிகுண்டு  ஓசைகள், செவிப்பறையையே கிழியச் செய்யலாம். தீபாவளி சமயத்தில் கேட்கும் பட்டாசு ஓசைகள் நமக்குப் பழக்கமானவை. இவைகளும் செவிப்பறையை மிகவும் பாதிக்கக்கூடியவை. அதிலும் குழந்தைகள் எளிதில் பாதிக்கப்படுவர்.

இயந்திர ஓசைகளும், வாகன ஓசைகளும்தான் காதைக் கெடுக்கக் கூடியவை என்பதல்ல. எந்த இசையுமே – அது நல்ல சாஸ்திரீய சங்கீதமாக இருந்தாலும் கூட – ஒரப்பு அளவுக்குமேல் சென்றால் காதைக்  கெடுக்கத்தான் செய்யும். சிலர், ஜாஸ் போன்ற நவீன இசைகள்தான் காதைக் கெடுக்கும், சாஸ்திரீய சங்கீதம் கெடுக்காது என்று நம்புகிறார்கள். இந்த நம்பிக்கை பொய். எந்த இசையானாலும் நமக்குத் தேவையான ஒலி அளவில்தான் கேட்கவேண்டுமே தவிர, ஸ்பீக்கர் மூலம் கேட்டால் காது ‘போய்விடும்’. குறிப்பாக ‘பாஸ்’ சத்தம் மிக ஆபத்தானது.

ஒலிச்சூழல் சீர்கேடும் மனநலமும்

காது செவிடாவதை விடவும் ஒலிச்சூழல் சீர்கேட்டின் மிக மோசமான விளைவு, நமது மனநிலை பாதிக்கப்படுவதுதான். உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரைக் குழுவிலுள்ள டாக்டர் ஆலன் பெல் கூறுகிறார்: “நமக்குத் தொல்லை கொடுக்கும் எந்தச் சந்தடியையும் ஓசை எனலாம். கார்களின் ஓசை அவற்றை ஓட்டுபவர்களுக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால் பாதையோரம் வசிப்பவர்களுக்கு அது நரகம். தொல்லையைத் தருவதற்கு ஓசையின் உரப்பு மட்டுமே காரணமும் அல்ல. நமக்குத் தேவையற்ற எந்த ஓசையும் நமது தனிமையை பாதித்து, நமது மனநிலையைக் கெடுக்கலாம். தொடர்ந்து மனநிலையை பாதித்து ஒருவனைப் பைத்தியமாகவும் ஆக்கலாம்”. ஓசைகளால் தொல்லைப் படுத்தப்பட்டு, மனநிலை பாதித்ததால், கொலைகளைச் செய்தவர்களும் நிறைய உண்டு.

ஓசைகள், நமது செயல்பாடுகளில் குறுக்கிட்டு, நரம்புகளையும் உணர்ச்சிக ளையும் நடத்தையையும் மிக எளிதாக பாதிக்கின்றன. நாம் இவற்றை அறியாமலே இருக்கிறோம். நமது செய்தித் தொடர்புமுறையில் குறுக்கீடு, நமது தூக்கத்தில் குறுக்கீடு, பயத்தைத் தூண்டுவது ஆகியவை எந்தச் செய்தித் தொடர்பையும் பாழ்படுத்தக்கூடும். தொலைபேசியில் இவ்விதக் குறுக்கீடுகள் தொடர்புகொள்வதைப் பாழ்படுத்துவதை நாம் அறிவோம். இரண்டாம் உலகப் போரின்போது இந்த உத்திதான் கையாளப்பட்டது. எதிரிகளின் செய்தித் தொடர்பைத் துண்டிப்பதைவிட, மனிதக்குரலின் அதிர்வெண்ணிலேயே அர்த்தமற்ற ஓசைகளை உண்டாக்கிச் செய்திகளைக் குழப்புவது மிக எளிது. இதற்கு மாஸ்கிங் என்று பெயர்.

நமது தூக்கத்தில் மிக முக்கியமான பகுதி ஆர்இஎம் (REM) எனப்படுவ தாகும். தூங்கும்போது கண்விழிகள் மிக வேகமாக அசைவதால் இப் பெயர் (ரேபிட் ஐ மூவ்மெண்ட்) வந்தது. இந்த ரெம் தூக்கம், மிகச் சிறிய ஓசைகளாலும் பாதிக்கப்படும். தூக்கம் பாதித்தால், நல்ல மனைநிலை கொண்டவர்களுக்கே எரிச்சல் உண்டாகிறது. பலருக்கும், மனநிலை கட்டுப்பாடின்மை ஏற்படும். விழித்துக் கொண்டே கனவு காணுதல், கற்பனைக் காட்சிகள், கட்டுப்பாடற்ற நடத்தை, தற்காலிகமான மனநோய்கள் ஆகியவை ஏற்படலாம். போலீசும் இராணுவமும் ஒருவனைக் குற்றம் செய்ததாக ஒப்புக் கொள்ளச்செய்ய மிக எளிய வழியாக ஓசையையும் இரைச்சலையும் பயன்படுத்துகிறார்கள். தூக்கமின்றிச் செய்து, மணிக்கணக்காக ஒரேவித ஓசைக்கு ஆட்படுத்தும் போது, குற்றம் புரியாதவனும்கூட, மனத்தளர்ச்சியினால் வேறுவழியின்றிக் குற்றத்தை ஒப்புக் கொள்ளும் நிலை ஏற்படும். ஓசை, மனிதனின் அச்ச உணர்ச்சியைத் தொடுகிறது. பெரிய ஓசைகளைக் கேட்கக் குழந்தைகள்தான் என்றில்லை, பெரியவர்களே பலரும் பயப்படுவதைக் காணலாம்.

ஓசை, தொல்லைப்படுத்துகிறது, பயப்படுத்துகிறது, நம் வேலைசெய்யும் திறனைக் குறைக்கிறது, தூக்கத்தின் இருண்ட மூலைகளிலும் குறுக்கிட்டு பயம் உண்டாக்குகிறது, பேச்சில் குறுக்கிடுகிறது, இசையைக் கேட்க விடாமல் தடுக்கிறது, நமது இரகசியத்தை-தனிமையைக் குலைக்கிறது. அப்படியும் நாம் ஒலிபெருக்கிகள் வைத்து, நம்மையும் தொல்லைப் படுத்திக் கொண்டு, மற்றவர்களையும் தொல்லைக்குள்ளாக்குவதைத் தான் செய்து கொண்டிருக்கிறோம்.

டாக்டர் மாகெரி என்பவர், இத்தாலியில் பல்கலைக்கழக பல்கலைக்கழக மாணவர்களை வைத்து ஒரு சோதனை நடத்தினார். மிகச் சிறந்த மாணவர்கள் எண்பதுபேரைத் தேர்ந்தெடுத்து ஒரு தொழிற்சாலையின் சந்தடி மிக்க சூழலில் வினாக்களுக்கு விடையளிக்கச் செய்தார். எக்ஸ்ட்ராவெர்ட்டான மாணவர்களைவிட இண்ட்ராவெர்ட் மாணவர்கள் சந்தடியைப் பொருட்படுத்தாமல் விடையளித்தனர். ஆனால் அவர்கள் செய்யும் தவறுகள், ஒலியின் உரப்புக்கேற்ப அதிகமாகிக் கொண்டே சென்றன.

ஒலிச்சூழலும் உடல்நலமும்

டாக்டர் பிராட்பெண்ட் என்பவர் செய்த சோதனைகளின்படி, ஒலியின் அதிர்வெண் மிகுதியாக மிகுதியாக வேலையில் தவறு செய்தல் அதிகமாகிறது. வேலைத்திறன் குறைகிறது. டாக்டர் ஜான்சன் என்பவர் லக்சம்பெர்கில் பணிபுரியும் தொழிலாளர்களைப் பலவேறு ஒலிச் சூழல்களில் பணிபுரிய வைத்து ஆராய்ந்தார். ஒலி அதிகமான சூழல்களில் பணிபுரிபவர்கள் கொடுமை நிறைந்தவர்களாகவும், ஆதிக்க மனப்பான்மை கொண்டவர்களாகவும், நம்பத் தகாதவர்களாகவும் பீதியுணர்வு கொண்டவர்களாகவும் மாறுகின்றனர் என்று அவர் கண்டறிந்தார்.

ஸ்வீடனைச் சேர்ந்த டாக்டர் பெர்ட்டில் யொஹான்சன், கருவில் வளரும் குழந்தைகள் எவ்வாறு ஒலியினால் பாதிப்படைகின்றன என்பதை ஆராய்ந்தார். சுமார் 110 டெசிபெல் ஓசையைத் தாயின் வயிற்றிலுள்ள கருவுக்குச் செலுத்தினால் அது சிசுவுக்கு சுமார் 50 டெசிபெல் அளவில் கேட்கும். இம்மாதிரி கர்ப்ப கால ஓசைகளுக்கு ஆட்பட்ட குழந்தைகள் பின்னால் நரம்புக் கோளாறுகள் கொண்டவர்கள் ஆகின்றனர் என்பது இந்த ஆய்வில் தெரியவந்தது.

இதே டாக்டர், முயல்கள், எலிகளை வைத்து ஓசைநிறைந்த சூழலில் அவற்றை ஆராய்ந்தார். ஏறத்தாழ 120 டெசிபெல் ஓசை அளவை எட்டும்போது அவற்றின் இரத்த நாளங்களில் கொழுப்புப் படிவு ஏற்படுவதையும், ஏறத்தாழ 150 டெசிபெல் ஓசை அளவை எட்டும்போது அவை இறந்துவிடுவதையும் கண்டார். இவை இறப்பதற்கு முன், உடலில் துடிப்புகள், பக்கவாதம், தோல் கழலைகள் முதலியன ஏற்பட்டன. இந்தக் கண்டுபிடிப்பு  மிக முக்கியமானது. நாற்பது வயதுக்குமேல் ஆனவர்கள் அதிக ஒலியளவால் பாதிக்கப்படும்போது அவர்களுக்கு இரத்தக் குழாய்களில் கொழுப்புப் படிவு ஏற்படவும், இரத்தக் குழாய்கள் சுருங்கி இரத்தம் பாய்வது தடுக்கப்படவும், மாரடைப்பு ஏற்படவும் வாய்ப்பு உண்டு என்பதை இச்சோதனைகள் நிரூபித்தன. 150 டெசிபெல் ஓசையில் மனிதரை வைத்துச் சோதனை நிகழ்த்தமுடியாது. 110 டெசிபெல் ஓசையே மனிதனின் காதுக்குப் பெரிய வலியை உண்டாக்கும்.

ஃபிரான்சில், 1966இல் நிகழ்த்தப்பட்ட ஒரு சோதனை, மனிதர்கள் நீண்ட நேரத்திற்கு (10 முதல் 15 நிமிடங்கள்) மிக அதிக ஒலியளவில் வாழ நேரிடும்போது நிறக்குருடாகி விடுகிறார்கள் என்பதை நிரூபித்தது. 15 நிமிட உரத்த ஓசை, ஒரு மணிநேரத்திற்கு நிறக்குருட்டினை ஏற்படுத்தியது.

சுருங்கச் சொன்னால், அதிக ஒலியளவு கொண்ட ஒலிச்சூழல் சீர்கேடானது,  மனிதனின் செவிக்கும், உடலுக்கும், மனத்திற்கும் தீங்கு ஏற்படுத்துகிறது. பல சமயங்களில் மனநோயை உண்டாக்குகிறது. சிலசமயங்களில் சாவு மனப்பான்மையையும் தற்கொலை மனப்பான்மையையும் உண்டாக்குகிறது. அதிக ஒலி, இரத்தக்குழாய்களில் கொழுப்பையும் அடைப்பையும் மிகுதிப் படுத்தும். மிக அதிக உரப்பு, மரணத்தையும் ஏற்படுத்தும்.

அடிப்படைத் தேவைகளை நாடியே நேரம் முழுவதையும் இழந்து போராடி வாழ்ந்து கொண்டிருக்கின்ற நமக்கு, ஒலிச்சூழல் சீர்கேட்டினால் வேறு இத்தனை கேடுகள் வந்து சேர வேண்டுமா?

மார்கழியும் அய்யப்பன் சீசனும் அடுத்தடுத்து வரப்போகின்றன. எல்லா பக்திக்கும் மேலானது, பிறரை நிம்மதியாக வாழவிடுவது என்பதை எந்த பக்தர்களும் உணரப்போவதில்லை. அரசியல்வாதிகளுடன் போட்டிபோட்டுக் கொண்டு நம் செவிப்பறைகளைக் கிழித்து, உடல்-மனநலத்தைத் தொடர்ந்து கெடுத்து வருகிறார்கள்.

சமூகம்