கற்றதுதமிழ்

என்னிடம் முதுகலை பயின்ற மாணவி திருமதி. அகதா, முகநூலில் ஒரு குழுமத்தில் நிர்வாகியாக இருப்பதாகவும், அதற்காக என்னைப் பற்றிய ஒரு சிறு அறிமுகத்தினைக் கற்றது தமிழ் என்ற தலைப்பில் தரவேண்டும் என்றும் கேட்டார். இவ்விதமே முன்னரும் சில அறிஞர்களின் அறிமுகங்களை வெளியிட்டிருப்பதாகக் கூறினார். அதற்காக நான் அளித்த சொற்றொகுதி இது.

–க. பூரணச்சந்திரன்

 

நான் என் வாழ்க்கைக் குறிப்புகளில் சிலவற்றை ‘நானும் என் தமிழும்’ (திரு. கோவை ஞானி வெளியிட்ட சிறு புத்தகம்), என் இணைய தளம் poornachandran.com ஆகியவற்றில் வெளியிட்டிருக்கிறேன். போதாதற்கு, விக்கிபீடியாவில் என் பெயரிலுள்ள பக்கத்திலும் ஓரளவு அவை சொல்லப் பட்டிருக்கின்றன.

பிறந்தது, வடஆர்க்காடு மாவட்டம் ஆர்க்காடு என்ற ஊரில், 1949இல். குடும்பம், சைவத்தையும் தமிழையும் போற்றுகின்ற ஒன்று. எனவே பிறப்பு முதலாகவே தேவார திருவாசகப் பனுவல்கள் முதலாக பாரதி, பாரதிதாசனார் பாடல்கள் வரை கேட்டு வளரும் வாய்ப்பிருந்தது. என் தாயாரும் இவற்றை எல்லாம் நன்றாகப் பாடக்கூடியவர்.

பொதுவாக, பள்ளிமுதல் கல்லூரி வரை முதல்மாணவனாகப் படித்தவன். கல்லூரியில் படித்தது பி.எஸ்சி இயற்பியல். பிறகு சென்னை ஆசிரியர் கல்லூரியில் பி.டி. சில ஆண்டுகள் பள்ளி ஆசிரிய வாழ்க்கை. தனிப்பட்ட முறையில் எம்.ஏ. தமிழ் பயின்று, பல்கலைக் கழக முதல்மாணவனாக கலைஞர் கையால் பட்டம் பெற்றேன். பிறகு பிஷப் ஹீபர் கல்லூரியில் பணி. 2007இல் ஓய்வு. சிலகாலம் புதுவை மையப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியப் பணியும் ஆராய்ச்சிப் பணியும்.

பி.எஸ்சி படிக்கும்போதே குறுந்தொகை, கலித்தொகை முதலிய சங்க இலக்கியங்களை நோட்டுப்புத்தகத்தில் எழுதி வைத்துப் பயின்றவன். மு.வ. புத்தகங்கள் பல, தமிழ் பயிலுவதற்கு வேகம் அளித்தன. பிஎஸ்.சிக்காலப் படிப்புகளில் மிக முக்கியமானது, ஆர்.கே.சண்முகம் செட்டியார் எழுதிய சிலப்பதிகார புகார்க்காண்ட உரை. அதற்கு இணை  கிடையாது.

தமிழ் ஆர்வம் தொடர்ந்ததால் முதுகலைப் படிப்பு தமிழாக அமைந்தது. எனினும் பிறகு எம்.ஏ. ஆங்கிலமும் பயின்றேன். அதற்குப் பிறகு பயின்றவற்றுக்குக் கணக்குக் கிடையாது. மார்க்சியமும், அமைப்புவாதமும், பிற பல கோட்பாட்டுத் துறைகளும் பலதுறை வாசிப்பினை வேண்டுபவை.

1990இல் எனது முதல் புத்தகம், ‘அமைப்பு மைய வாதமும் பின்னமைப்பு வாதமும்’ வெளிவந்தது. தொடர்ந்து தமிழ் இலக்கிய விமரிசகன், இலக்கியக் கோட்பாட்டாளன் என்னும் வரவேற்பு கிடைத்தது. இன்றுவரை சொந்தமாகப் பத்தொன்பது புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். இவற்றுள், ‘கவிதையியல்’, ‘கதையியல்’, போன்றவை நன்கு பாராட்டப் படுகின்றன. இதுவரை 42 புத்தகங்களை மொழிபெயர்த்திருக்கிறேன். மொத்தம் 61 நூல்கள். இன்னும் எழுதுவேன், எழுதிக் கொண்டே இருப்பேன்.

2011இல் ‘வரவர ராவின் சிறைக் குறிப்பு’களை மொழிபெயர்த்தமைக்கு ஆனந்தவிகடன் விருது கிடைத்தது. பிறகு 2014இல் நாமக்கல் சின்னப்ப பாரதி அமைப்பின் சார்பாகச் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது. 2016இல் ‘இந்துக்கள் மாற்று வரலாறு’ நூலுக்காக மீண்டும் ஆனந்தவிகடன் விருது. ‘பொறுப்புமிக்க மனிதர்கள்’ என்ற நாவல் மொழிபெயர்ப்புக்காக அதே ஆண்டு சாகித்திய அகாதெமி விருது. பிறகு 2017இல் கலைஇலக்கியப் பெருமன்றத்தின் பாராட்டு. அந்த ஆண்டின் இறுதியில் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை, ‘திறனாய்வுச் செம்மல்’ என்ற பட்டமும் விருதும் வழங்கியது. சென்ற ஆண்டு கோவை திசைஎட்டும் மொழிபெயர்ப்பு அமைப்பு சிறந்த மொழிபெயர்ப்பாளராகத் தேர்வு செய்தது.

கடைசியாக மொழிபெயர்த்து, இந்த ஆண்டு புத்தகச் சந்தையில் வெளிவந்தவை, பேராசிரியர் லாஸ்கியின் ‘அரசியல் இலக்கணம்’, ‘வரலாற்றில் பிராமண நீக்கம்’ ஆகிய நூல்கள். வரக் காத்துக் கொண்டிருப்பவை ‘லெனின் சந்தித்த நெருக்கடிகள்’ போன்ற சில. இறுதியாக இந்த ஆண்டு வெளிவந்த என் சொந்தப் புத்தகம், ‘சான்றோர் தமிழ்’. இப்போது மொழிபெயர்த்துக் கொண்டிருப்பது, அல்தூசரின் ‘மார்க்ஸுக்காக’ என்ற தத்துவ நூல்.

எழுத்திலும் எழுத்துக்கான பாராட்டுப் பெறுவதிலும் ஓரளவு நிறைவான வாழ்க்கைதான் இல்லையா? ஆனால் மனத்தில் வெறுமைதான் மிஞ்சியிருக்கிறது. இன்றைய தமிழ்நாட்டின் மிக மோசமான நிலைதான் முக்கியக் காரணம். பெளதிக, புவியியல் அமைப்பிலும், மனங்களிலும் பாலைவனமாகி வரும் தமிழகம். அதைச் சரிசெய்ய நேரடியாகப் போராட்டங்களில் பங்கேற்க உடல்நலம் இடம் தரவில்லையே என்ற எண்ணம். கால் முறிவு. ஒரு கண் பார்வை முற்றிலும் இன்மை. மறுகண்ணும் அரைகுறைப் பார்வையே. எல்லாவற்றுக்கும் மேலாகத் தமிழர்களின் உணர்வற்ற, மானமற்ற, அநீதிகள் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு வாழும் இன்றைய வாழ்க்கை. ஏன் தமிழனாகப் பிறந்தோம் என்ற சலிப்புதான் எஞ்சுகிறது.

தினம்-ஒரு-செய்தி