கல்வி-கேள்விகள். கேள்வி 7

(7) எல்லைகளற்ற கல்வி வெறும் பொருளீட்டும் கருவியாக, கடைச் சரக்காகக் குறுகிப் போனது எவ்விதம்?

“கல்வி கரையில, கற்பவர் நாள் சில”, “ஆர்ட் ஈஸ் லாங், லைஃப் ஈஸ் ஷார்ட்” என்று பல மொழிகளிலும் பழமொழிகள் உள்ளன. அதன் எல்லையற்ற தன்மையே அது ஏதோ ஒரு துறைக்கு மட்டும் உரியதல்ல என்பதைக் காட்டுகிறது. அதாவது இலக்கியக் கல்வி மட்டுமோ, வேதக் கல்வி மட்டுமோ, வணிகக் கல்வி மட்டுமோ கல்வி அல்ல. இன்று இப்படிக் குறுக்கி நோக்கும் பார்வை ஏற்பட்டுள்ளது. நன்கு விவசாயம் தெரிந்தவனின் பயிர்வளர்க்கும் கல்வியை (உண்மையில் அதுதான் நமக்கு உணவளிக்கிறது) எவரும் பாராட்டுவதில்லை, மாறாகப் படிக்காதவன் என்று ஏளனம் செய்கிறோம்.

அதாவது வெறும் எழுத்தறிவை, மனப்பாடத்தை மட்டுமே கல்வி என்று குறுக்கிவிட்டோம். ஒவ்வொரு தொழிலும் ஒரு துறைக் கல்விதான்.
சமையலைக் கலை என்று பாராட்டும் நாம் அக்கலையைக் கற்ற பெண்களைக் கற்றவர்களாக நோக்கியிருக்கிறோமா? அதற்கும் கேடரிங் டெக்னாலஜி படித்து தலையில் முழநீளம் தொப்பியை வைத்துக் கொண்டுவந்தால் வியப்பு ஏற்படும். கேட்ட தொகையைத் தருவோம். அதையே நம் ஊர் திருமணச் சமையல்காரர் வாசனையிலேயே அறிந்து “ஒரு பிடி உப்புப் போடு” என்று சொல்லும்போது அதைப் பாராட்டுவதில்லை. இந்தப் பார்வைதான் எல்லைகளற்ற கல்வியை வெறும் பொருளீட்டும் கருவியாக்கிவிட்டது. அர்த்தமின்றி நாலு எழுத்துகளைப் படித்துவிட்டு கோட்டும் சூட்டும் அணிந்து வருபவன் படித்தவன், அவனுக்கே உணவளிக்கும், தக்க பொருள்களை அளிக்கும் தொழிலாளி படிக்காதவன்.
அதிகார வர்க்கமும்- கலெக்டர், தாசில்தார், டிஐஜி… என வரும் அரசு அலுவலர்களும் வீணான பந்தா காட்டி, தாங்கள் மக்களின் சேவகர்கள் என்பதை மறந்து, இந்தப் பார்வையை ஆழமாக வேரூன்றச் செய்துவிட்டனர். தாசில்தார் பின்னால் போகும் ஒரு டவாலி காட்டும் பந்தா எவ்வளவு?

அடிப்படை எழுத்தறிவு யாவருக்கும் தேவைதான். அதுவே முழுத்தேவை அல்ல. ஓரளவு செய்தித்தாள் படிக்கும் அறிவு பெற்றதும் ஒரு பையன் “நான் பாத்திரம் செய்யும் கல்வியைக் கற்கிறேன்” என்றால் விடுவோமா? அதற்கு பதிலாக நீ பி.காம் படி, பி.எஸ்சி படி என்று வற்புறுத்துவோம். படித்துவிட்டு அவன் வேலையின்றித் திரிந்து சமூகத்துக்குப் பயனற்றவனாகவும் பிறகு எதிரியாகவும் கூட மாறலாம். மனநிலை சிதைந்து வாழ்க்கை கெடலாம். அதைப் பற்றி நாம் கவலைப்படுவதில்லை.

கல்வி பரந்துபட்டது, தொழிற் கல்வியும் கல்விதான், எதைக் கற்றாலும், எத்தொழிலைச் செய்தாலும் வாழ்க்கையை நன்னெறியில் நடத்துவது ஒன்றே குறிக்கோள் என்பதை மறந்து விட்டோம். இளமையில் செருப்புத் தைத்த ஒருவர் அமெரிக்க ஜனாதிபதி ஆனார் என்றால் பாராட்டும் நாம், அந்தக் கதையைப் பிள்ளைகளுக்குச் சொல்லித் தரும் நாம், செருப்புச் செய்யும் தொழிலில் நம் பிள்ளைகளை இறக்கி விடுவோமா? அதற்கு சாதி, குலத்தொழில், தொழிலில் உயர்வுதாழ்வு நோக்குதல், என எத்தனையோ குறுக்கீடுகள். சக்கிலியன்தானே செருப்புத் தைக்கவேண்டும், நம் பையனா தைப்பது என்று சாதி பார்ப்போம்.
காந்தியின் அடிப்படைக் கல்வி, தாகூரின் கல்விமுறை, ராஜாஜியின் தொழிற் கல்வி எல்லாம் சிறந்தவையே. ஆனால் ஒரு தொழிலுக்கு ஒரு குலம்/சாதி என்று குலக்கல்வியாகச் சுருக்கிவிட்டதுதான் ராஜாஜிக்கு எதிர்ப்பை ஏற்படுத்தியது. மேலும் கழிவுகளை அகற்ற, சுமக்க ஒரு சாதி, கடைத்தெருவுக்கு ஒரு சாதி என்று சாதிகளை வகுத்தமை நம்மை எல்லைக்குட்படுத்திவிட்டது.

இவற்றை எல்லாம் மீறி சாதிவேறுபாடு நோக்காத ஒரு சமூகம் அமையும்போது தான் கல்வியின் உண்மையான பெருமையும் தரமும் நமக்குத் தெரியும். வெறும் மந்திரங்களை ஒப்புவிப்பதோ, பிஏ பிஎஸ்சி பிஇ எம்பிபிஎஸ் என்று பட்டம் வாங்குவதோ மட்டும் கல்வியல்ல என்பது புரியும். உண்மையில் இன்றுள்ள மருத்துவர்களையே கேட்டுப்பாருங்கள், அவர்களது பாட்டிகளுக்குத் தெரிந்த கைவைத்தியம் எத்தனையோ நோய்களை எளிதாகக் குணமாக்கியிருக்கிறது என்று அவர்களே சொல்வார்கள். ஆனால் அப்படிப்பட்ட ஒரு சிறுநோயை குணப்படுத்த அவர்களே ஆயிரக்கணக்கில் கட்டணம் வாங்குவார்கள்.
அப்படியானால் எங்கிருக்கிறது கல்வி என்று மனத்தைக் கேட்டுக் கொள்ளுங்கள். சாதி வேறுபாடு பார்க்காதீர்கள். நம் குழந்தைகளுக்கு எந்தத் தொழிலில் ஆர்வம் இருக்கிறதோ அந்தக் கல்வியை அளிப்பது நமது கடமை. அதன் வழியாகத்தான் அவர்கள் தங்கள் ஆளுமைகளை அவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். தங்கள் முழுமையை அவர்கள் அடைய வேண்டும்.

கேள்வி பதில்