கல்வி-கேள்விகள். கேள்வி 8

(8) இப்போதையப் பாடத்திட்டம் நமது மரபு சார்ந்த பெருமைகளைத் தெரியப்படுத்தாமல் அந்நிய வரலாறுகளை அதிகம் வெளிச்சம் போடுவது ஏன்?
நாம் இன்னும் அடிமைகளாக இருப்பதுதான் காரணம். வாஸ்கோட காமா வந்து இந்தியாவைக் “கண்டுபிடித்தார்” என்றுதானே கற்பிக்கிறோம்? அப்படியானால் அதற்கு முன்பு இந்தியா இல்லையா? மூவாயிரம் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து சிந்துசமவெளிக் காலத்திலிருந்து இங்கு வாழ்ந்துவந்த நம் மக்கள் என்ன ஆனார்கள்? அவர்களின் கல்வியும் பெருமையும் கலாச்சாரமும் என்ன ஆயிற்று? அஜந்தா எல்லோராக்களும் ராஜராஜன் கோயில்களும் நமது கட்டடக்
கலையை உலகிற்கு அறிவிக்க வில்லையா?

சுருக்கமாகச் சொன்னால், முதலில் வடநாட்டினர் ஆங்கிலேயரின் பெருமையைத் தலையில் சுமப்பவர்களாக ஆனார்கள். இதற்கு நல்ல உதாரணம் ராஜாராம் மோகன் ராய். தெற்கிலுள்ள நாம் வடநாட்டினரின் பெருமையையும் சேர்த்துச் சுமப்பவர்களாக ஆக்கப்பட்டோம். ஆனால் சற்றே (இந்திய) மன்னர்களின் ஆட்சிப் படங்களைக் கூர்ந்து பாருங்கள். அசோகனின் பேரரசு, குப்தர் பேரரசு என்று எந்த வடநாட்டுப் பேரரசாவது தமிழ்நாட்டை உள்ளடக்கி இருக்கிறதா என்று? முதன்முதலில் தமிழ்நாட்டைத் தந்திரமாகக் கைப்பற்றியவரும் தென்னகம் என்ற கற்பனை ஒருமையின் பகுதியாக ஆக்கியவரும் தெலுங்கர்களே. பிறகு ஆங்கிலேயர்கள்.

1310ஆம் ஆண்டு மாலிக்காபூரின் படையெடுப்பு நிகழ்ந்ததிலிருந்து நாம் அடிமைப் பட்டுவிட்டோம். எழுநூறு ஆண்டுகள் அடிமை வாழ்வு நம்மை அடிமை மனப்பான்மையில் ஆழத் தள்ளிவிட்டது. இன்றும் உண்மையான ஜனநாயகம் நம்மிடையில் இல்லை, நிலப்பிரபுத்துவ மேன்மைகளே உள்ளன. வெகுமக்கள் அடிமைகளாகத்தான் வாழ்கிறார்கள். கல்விதான் இவர்களை உண்மையில் அடிமைத் தளையிலிருந்து மீட்டிருக்க வேண்டும்.

நம்மை அடிமைகளாக்கிய கிளைவ் பிரபு இப்படிச் செய்தார், மெக்காலே பிரபு இன்னதைச் செய்தார் என்று வரலாறு எழுதும் நாம், அக்பர் தீன் இலாஹி உருவாக்கினார், ஔரங்கசீப் செருப்புத் தைத்தார் என்று முஸ்லிம்களையும் பாராட்டும் நாம், நமது சொந்த மன்னர்களையே கரிகாலன் கல்லணை கட்டினான் இராசராசன் தஞ்சையில் பெருவுடையார் கோயிலை அமைத்தான் என்றெல்லாம் ஒருமையில் கேவலப்படுத்தி எழுதுகிறோம்.

நம் அரசியல் தலைவர்களை மலர் கிரீடம், வாள் தந்து போற்றுவதும், அரியணை ஏறிவிட்டார், கோட்டையைப் பிடித்துவிட்டார் என்பதும், நம் பணத்தில் கோடிக்கணக்காகச் சம்பாதிக்கும் நடிகர்கள் கட்அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்வதும், நீதிபதிகளையும் நீதி ‘அரசர்கள்’ என்பதும், மேடையில் ஏறிவிட்டால் எவனையும் இவனைப் போல உண்டா என்று புகழ்வதும் நம்மை அறியாமல் நமக்குள் குடி கொண்டுள்ள நிலவுடைமைக்கால அடிமை மனப்பான்மையைத்தான் காட்டுகின்றன.

உண்மையில் வரலாற்றுப்பாடம், படிநிலையில் அமைய வேண்டும். நமது வட்டார வரலாறு சிறுவயதிலும், தமிழக வரலாறு அடுத்த நிலையிலும், இந்திய வரலாறு அதற்கும் அடுத்த நிலையிலும், உலக வரலாறு, அந்நிய வரலாறுகள் இறுதி நிலையிலும் கற்பிக்கப்பட வேண்டும். (புவியியலும் அதுபோலத்தான். முதலில் நம் வட்டாரப் புவியியல், பிறகு தமிழகப் புவியியல், பிறகு அடுத்த மாநிலங்களின் புவியியல், இறுதியாக இந்திய, உலகப் புவியியல்.)

அடிமை மனப்பான்மையிலிருந்து விடுபடுங்கள். சங்க இலக்கியத்தையும் திருக்குறளையும்விட எந்த நூலும் உலக அறிவையும் நடத்தை முறையையும் புகட்டிவிடவில்லை. சங்க காலத்தில் இருந்த பெண் புலவர்களின் எண்ணிக்கையை அன்புகூர்ந்து அக்காலத்தில் பிறமொழிகளில் இருந்த பெண் புலவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டுப் பாருங்கள், கல்வியில் நாம் எவ்வளவு உயர்வு பெற்றிருந்தோம் என்பது தெரியும். “உண்டால் அம்ம இவ்வுலகம், இந்திரர்…” என்ற புறப்பாடலைப் படித்துப் பாருங்கள், எவ்விதப் பண்பாட்டில் நாம் வாழ்ந்தோம் என்பது தெரியும்.

நமது அடிமை மனப்பான்மையாலும் மூட நம்பிக்கையாலும் நமது பல்துறை நூல்களையும் தழலுக்கும் நீருக்கும் கொடுத்தோம். நமது பழங்காலப் பண்பாட்டையும் கலைகளையும் நோக்கும் எவரும் வியப்படையாமல் இருக்க மாட்டார்கள். அப்படியிருக்க, அடிமை நோக்குடன் பாடப்புத்தகங்களை உருவாக்குவது எதற்காக?

கேள்வி பதில்