காப்பாற்றியது யார், எது?

ஒருவர் மிகுந்த கடனில் மூழ்கி என்ன செய்வது என்று தவித்துக் கொண்டிருந்தார். நாலுபக்கமும் கடன்காரர்கள் வருத்தினர். வீட்டில் தொலைபேசி இடைவிடாமல் அடித்துக் கடனை நினைவூட்டியவாறே இருந்தது. தற்கொலை செய்து கொள்ளலாம், இல்லையென்றால் திவால் என அறிவித்து ஓடிப்போகலாம் என்று முடிவு செய்தார். வெளியிலே செல்லும் வழியில் ஒரு பெஞ்ச். அதன்மீது உட்கார்ந்தார். பக்கத்தில் அமர்ந்திருந்த கிழவர் ஒருவர், “என்ன ரொம்ப சோகமாக  இருக்கிறீர்களே” என்று அன்போடு கேட்டார். இவருக்குக் கண்ணில் நீரே வந்துவிட்டது. தன் நிலைமையை விவரித்தார். “நான் உங்களுக்கு உதவுகிறேன்” என்றார் கிழவர். ஒரு செக்புத்தகத்தை எடுத்தார். ஏதோ எழுதிக் கையெழுத்துப் போட்டு, “இதை வைத்துக் கொள்ளுங்கள், அடுத்த ஆண்டு இதே நாளில் இதே  நேரத்தில் இங்கே வாருங்கள்” என்று சொல்லிப் போய் விட்டார்.

கடனாளி கையிலிருந்த செக்கைப் பார்த்தார். 10 லட்சம் ரூபாய் என்று எழுதி, டி. ராக்ஃபெல்லர் என்று கையெழுத்துப் போட்டிருந்தது. எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் போனார். ‘இப்போது எளிதாக இந்தச் செக்கை மாற்றி என் கடனைத் தீர்த்து விட முடியுமே’ என்று நினைத்தார். ஆனால் செக்கை மாற்ற மனம் வரவில்லை. ‘நானே எப்படியாவது சமாளித்து விடுவேன், சமாளிக்க முடியாவிட்டால் இருக்கவே இருக்கிறது செக்’ என்று மனத்தைத் தேற்றிக் கொண்டார். தன் அணுகுமுறைகளை மாற்றிக் கொண்டு மிகுதியாக உழைக்கலானார்.  கொஞ்சம் கொஞ்சமாகக் கடன் அடைந்தது. ஏறத்தாழ பதினொரு மாதம் முடியும் நிலையில் எல்லாக் கடனும் தீர்ந்துவிட்டது.

ஓராண்டு கழித்து, அதே நாள், அதே நேரத்துக்கு அந்த இடத்துக்குப் போனார். செக் கொடுத்த முதியவரும் மிகச் சரியாக வந்து சேர்ந்தார். அவரிடம் கடன் தீர்ந்துவிட்டதைச் சொல்லி, செக்கைத் திரும்பத் தரப் போகும் நேரத்தில் ஒரு நர்ஸ் பெண்மணி ஓடிவந்து அவரைப் பிடித்துக் கொண்டாள். இவரிடம் திரும்பிச் சொன்னாள்: “உங்களுக்கு ஏதாவது தொல்லை கொடுத்து விட்டாரா? பக்கத்தில்தான் பைத்தியக்கார ஆஸ்பத்திரி இருக்கிறது. அங்கிருந்து ஓடிவந்து விடுகிறார், இந்த ஆள்! தன்னை ராக்ஃபெல்லர் என்று கற்பனை செய்து கொண்டு எல்லார் உயிரையும் வாங்கிவிடுவார்!”

இவரைக் காப்பாற்றியது யார்/எது?

தினம்-ஒரு-செய்தி