காப்பியும் குவளையும்

பழைய மாணவர்களின் கூட்டம் ஒன்று கல்லூரியில் நடந்துகொண்டிருந்தது. அதற்குப் பொறுப்பேற்றிருந்த பேராசிரியர் மாணவர்களுக்குக் காப்பி கொடுக்குமாறு பணியாளர்களுக்குக் கூறினார். அவர் ஏற்பாட்டின்படி, ஒரு பெரிய குழாய்வைத்த டிரம்மில் காப்பி கொண்டுவரப்பட்டது. குவளைகள்தான் வெவ்வேறு மாதிரிகளில் இருந்தன. போர்சிலைன், பிளாஸ்டிக், கண்ணாடி, பளிங்கு, காகிதம் இப்படிப் பலவேறு பொருள்களால் செய்யப்பட்டவை. சில அழகாக இருந்தன, சில அலங்காரம் எதுவுமின்றி.
“நீங்களே காப்பி எடுத்துக்கொள்ளுங்கள்” என்றார் பேராசிரியர்.
இப்போது எல்லார் கையிலும் குவளைகளில் காப்பி இருந்தது. பேராசிரியர் சொன்னார்:
“பார்த்தீர்களா! அழகாக இருந்த விலை உயர்ந்த கப்புகள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டீர்கள். பிளெயினான, மலிவான குவளைகளை விட்டுவிட்டீர்கள். அவரவர்க்குத் தேவையான மிகச் சிறந்தததை எடுத்துக் கொண்டீர்கள், ஆனால் அங்கேதான் ஒரு சிறிய பிரச்சினை.
காப்பி எல்லாருக்கும் ஒன்றுதான், ஒரே தரத்தில், ஒரே சுவையில்தான் இருக்கிறது. குவளைகளால் காப்பியின் தரம் மாறிவிடப் போவதில்லை.
நீங்கள் எல்லாரும் விரும்பியது காப்பிதானே! குவளை இல்லையே! குடித்ததும் அதை வைத்துவிடப்போகிறீர்கள் அல்லது குப்பைக்கூடையில் போடப் போகிறீர்கள். ஆனால் பிரக்ஞைபூர்வமாக எல்லாரும் அழகான, நல்ல, விலைஉயர்ந்த குவளையையே தேர்ந்தெடுத்தீர்கள்.
உங்கள் வாழ்க்கைதான் காப்பி. உங்கள் வேலை, பணம், சமூகத்தில் உங்கள் அந்தஸ்து இவையெல்லாம் குவளைகள். வாழ்க்கையை வைத்திருக்கக்கூடிய பாத்திரங்கள் அவை. அவை நாம் வாழும் வாழ்க்கையை வரையறுக்கவோ, நமது வாழ்க்கையின் தரத்தினை மாற்றவோ போவதில்லை. சில சமயங்களில் குவளையிலேயே கவனத்தைச் செலுத்தி காப்பியின் சுவையை மறந்துபோய்விடுகிறார்கள் சிலர். அதுபோல ஆகிப்போய்விடலாகாது.”

தினம்-ஒரு-செய்தி