குழந்தைப் பாடல்கள்

குழந்தைப் பாடல்கள் (Nursery Rhymes)
நர்சரி ரைம்கள் அல்லது குழந்தைப் பாடல்கள் என்பவை தமிழுக்குப் புதியவை அல்ல. பழங்காலத்திலும் தமிழில் குழந்தைப் பாடல்கள் இருந்தன. அவற்றை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று எழுதப்பட்ட பாக்கள். மற்றது, வாய்மொழி மரபில் வந்த பாடல்கள்.
நாம் இங்கு குழந்தைப் பாடல்கள் என்று கொள்வது ஏறத்தாழ ஒன்றரை வயது முதல் நான்கு வயதுவரை. அதாவது நடக்கத் தொடங்கிய பருவம் முதலாக (toddler) பள்ளிக்குச் செல்லும் பருவம் வரையில் உரியது எனலாம்.
எழுதப்பட்ட பாக்கள், பெரும்பாலும் அறநெறியை மையமாகக் கொண்டவை. ஆத்திசூடி, கொன்றைவேந்தன், உலகநீதி போன்றவை அவை. அறஞ் செய விரும்பு, ஆறுவது சினம், இயல்வது கரவேல் என்று இராகமிட்டுக் குழந்தைகள் பாடுவதை எந்தச் சிறார்ப் பள்ளியிலும் கேட்க முடியும். அதேபோல,
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்,
ஒருவரையும் பொல்லாங்கு சொல்லவேண்டாம்,
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்,
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்
எனத் தொடர்ச்சியாக வரும்போது இருக்கவேண்டாம், சொல்லவேண்டாம், மறக்க வேண்டாம் போன்ற தொடர்கள் ஓர் இசையோடு தொடர்ந்து நம் குழந்தைகள் மனத்தில் பதிந்தன. இம்மாதிரி அறநெறி இலக்கியங்கள் தமிழில் மிகுதியாக உள்ளன. அவை இப்போது போற்றப்படுவதோ படிக்கப்படுவதோ இல்லை. அகர வரிசையில் அமைந்து கருத்துகளைச் சொல்லுவதால் ஔவையார் இயற்றிய ஆத்திசூடி மட்டுமே கொஞ்சம் வழக்கில் உள்ளது.
வாய்மொழி மரபில் வந்த குழந்தைப் பாடல்கள் தமிழுக்கே உரிய முறையில் சிறப்பாக அமைந்துள்ளன.
நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடிவா
மலைமேலே ஏறிவா
மல்லிகைப்பூ கொண்டுவா
நடுவீட்டில் வையே
நல்லதுதி செய்யே
இதைவிடவா அழகான குழந்தைப்பாட்டு வேண்டும்? இது போல ஏராளமான தமிழ்க் குழந்தைப் பாடல்கள் வாய்மொழி மரபில் உள்ளன.
ஆனை ஆனை அழகர் ஆனை
அழகரும் சொக்கரும் ஏறும் ஆனை
குட்டியானைக்குக் கொம்பு முளைச்சுது
பட்டணமெல்லாம் பறந்தோடிப் போச்சுது
என்பது மற்றொரு பாடல்.
சங்கு சக்கர சாமி வந்து சிங்கு சிங்குன்னு ஆடுச்சாம் என்று தொடங்குவது மற்றொரு பாடல்.
கைவீசம்மா கைவீசு கடைக்குப் போகலாம் கைவீசு மிட்டாய் வாங்கலாம் கைவீசு மெதுவாய்த் தின்னலாம் கைவீசு என்பது மற்றொரு பழைய மரபுப் பாடல்.
காக்கா காக்கா கண்ணுக்கு மை கொண்டுவா
காடை குருவி கொண்டைக்குப் பூக் கொண்டுவா
என்பது மற்றொரு பாடல்.
இவைபோலவே மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம், சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு, சாயுங்கிளியே சாய்ந்தாடு…போன்ற பாடல்களும் எங்கும் காதில் ஒலிப்பவையே.
இம்மாதிரிப் பாடல்களைக் கேட்டுவளராத பழங்காலக் குழந்தைகள் இருக்க மாட்டார்கள். எல்கேஜி யுகேஜி முதலாக ஆங்கிலக்கல்வி வந்த நாள் முதலாக இந்த மரபு மாறிவிட்டது. எல்லா வீடுகளிலும் ஆங்கிலக் குரல்களே கேட்கின்றன. “மழையே மழையே வா வா வானப் புனலே வா வா” போன்ற பாக்கள் சென்று முடங்க, “ரெய்ன் ரெய்ன் கோ அவே, கம் அகெய்ன் அனதர் டே, லிட்டில் ஜானி வாண்ட்ஸ் டு ப்ளே”, என்ற ஆங்கிலக் குரல்கள் ஒலிக்கின்றன. இதில் பெரியதொரு கலாச்சார இழப்பும் மாற்றமும் அடங்கியிருக்கின்றன. யாவரின் நன்மைக்குமாக மழையை வரவேற்கும் தன்மை மாறி, ஒரு குழந்தை விளையாடுவதற்காக ஓடிவிடு மழையே என்று ஒலிக்கும் குரல்!
ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்
ஹவ் ஐ வொண்டர் வாட் யூ ஆர் என்ற குரல்களும்
பாபா பிளேக் ஷீப் ஹேவ் யூ எனி வுல்?
எஸ் சார் எஸ் சார் த்ரீ பேக்ஸ் ஃபுல் என்ற குரல்களும்
ஓல்ட் மெக்டொனால்ட் ஹேட் எ ஃபாம், ஈயா ஈயா ஓ என்ற குரல்களும் நகர்ப்புறங்களில் சிறுகுழந்தைகள் இருக்கும் வீடுகளில் இடைவிடாது ஒலிக்கின்றன.
ஆனால் எந்த மொழிக் குழந்தைப்பாடல் ஆகட்டும், குழந்தைப் பாடல்களின் அடிப்படை ஒன்றுதான்.
முதலில், பாடலடிகளில் பாடுவதற்கு இசைவாக நல்ல எதுகை மோனை அமைந்திருக்க வேண்டும். ‘சங்கு சக்கர’ என்றால் ‘சிங்கு சிங்குனு’ என்று எதுகை வரவேண்டும். அப்போதுதான் குழந்தைகள் கையைக் காலை ஆட்டி குதிக்க முடியும். ஒரே மாதிரியான அசைகள் கால முறைப்படி திரும்பத் திரும்ப வரவேண்டும்.
இரண்டாவதாக, பாடற்பொருள் குழந்தைகளுக்கு இசைவாக இருக்க வேண்டும். தர்க்கரீதியான பொருளே இல்லாமல் இருந்தாலும் நல்லதுதான். “காக்கா கண்ணுக்கு மை கொண்டுவா” என்பதில் என்ன பெரிய தர்க்கம் இருக்கிறது? கருப்பு நிறம் என்ற இசைவுப்பொருள் (அசோசியேஷன்) இருக்கிறது என்று கூறலாம். அப்படித்தான் இருக்கவும் வேண்டும்.
மூன்றாவதாக, அறம் உரைத்தல், போதித்தல், நாட்டுப்பற்றை அல்லது மொழிப் பற்றை வளர்த்தல் போன்ற கருத்துகள் கண்டிப்பாக இருக்கலாகாது. குழந்தைகளுக்கான எளிய சொற்கள் இடம் பெற்றிருத்தல் வேண்டும். அறக்கருத்துகள், நாட்டுப்பற்றுக் கருத்துகள் இருந்தாலும் அவை இசைவிணக் கமாக (அசோசியேடிவ் ஆக) வரவேண்டுமே தவிர, வெளிப்படையாக இருக்க லாகாது. அதற்கு இன்னும் வயதாக வேண்டும். அவர்கள் குழந்தைப் பருவத்தைத் தாண்டி ஐந்து வயதுக்குமேல் சென்றால் “பட்டொளி வீசிப் பறக்குது பாரீர்” போன்ற கருத்துகள் எடுபடும்.
நான்காவதாக, குழந்தைகளே பாடும் விதத்தில் அமைந்திருந்தால் ஒழிய தாலாட்டுப் பாடல்கள் குழந்தைப் பாடல்கள் அல்ல. “மாமன் அடிச்சாரோ மல்லிகைப் பூச் செண்டாலே” போன்ற கருத்துகளெல்லாம், தாய்க்கு உரியவையே அன்றிக் குழந்தைக்கு அல்ல.
ஐந்தாவதாக, பொருளற்ற ஒலிகளும் ஒலித்தொடர்களும் (ஈயா ஈயா ஓ என்பது போல) குழந்தைப் பாடல்களில் சுவை கூட்டுவனவாக அமையும். உதாரணமாக, “ஓல்ட் மெக்டொனால்ட்” என்ற மெட்டில் ஒரு பாட்டை முயன்று பார்ப்போம்.
ஓல்ட் மெக்டொனால்ட்/ ஹேட் ய ஃபாம்/ ஈயா ஈயா ஹோ
பத்து மாம்பழம்/ பையன் தின்னான்/ போடா போடா போ
பத்து மாம்பழத்தைப் பையன் தின்பானா என்ற தர்க்கத்திற்கோ, எதற்கு போடா போடா போ என்று வரவேண்டும் என்பதற்கோ இங்கே இடமில்லை. பெரியவர்களின் தர்க்கங்கள், அற நோக்கங்கள் போன்றவற்றை எல்லாம் மூட்டை கட்டிவைத்துவிட்டுக் குழந்தைகளின் வண்ண வண்ண விளையாட்டுலகிற்குள் நுழைய வேண்டும்.
ஆறாவதாக, கூடியவரை எதிர்மறைக் கருத்துகள், திருட்டு, சாவு, கொலை போன்ற நிகழ்வுகள் பற்றிய சொற்கள் இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும். அதற்காக உடனே ‘பாசிடிவ் திங்கிங்’ என்றெல்லாம் போய்விட வேண்டாம். குழந்தைப் பாடல்கள் குழந்தைகள் ‘ஜாலி’யாக இருப்பதற்கான, மகிழ்ச்சியோடு பாடி துள்ளிக்குதித்து ஆடுவதற்கான பாடல்கள். புதிதாக எழுதுபவர்கள் இவற்றையெல்லாம் மனத்தில் கொண்டுதான் எழுத வேண்டும்.
குழந்தைப் பாடலாசிரியர்களுக்கு நல்ல உதாரணம் அழ. வள்ளியப்பா. மிகச் சிறப்பாக எதுகை மோனை தர்க்கமின்மை குழந்தை மனப்பான்மை ஆகியவற்றைப் பாடல்களில் சிறப்பாகப் பயன்படுத்தியவர் அவர். உதாரண மாக, அவர் எழுதிய பாட்டு ஒன்று: வட்டமான தட்டு, தட்டு நிறைய லட்டு, லட்டு மொத்தம் எட்டு, எட்டில் பாதி பிட்டு, எடுத்தாள் சின்னப் பட்டு, என்று பாடல் செல்வதைப் பார்க்கலாம். வட்டம், தட்டு, எட்டு, லட்டு, பிட்டு என்று அழகாக எதுகைகள் செல்கின்றன. ஒரே மாதிரி சந்தம் பயன்படுத்தப் பட்டுள்ளது. தாளம் போட்டுக் காலை ஆட்ட வைக்கும் சொற்கள்… அவ்வளவுதான்.
ஆகவே தமிழில் பழங்கால முதலாகவே நல்ல இசையோடுகூடிய குழந்தைப் பாடல்கள் வாய்மொழி மரபில் இருந்து வருகின்றன. இன்றும் கிராமப் புறங்களில் இருப்பவர்கள் அவற்றைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் ஆங்கில ரைம்ஸ் அச்சிலும் பாட்டிலும் யூ-ட்யூப் போன்ற ஊடகங்கள் வாயிலாகப் பரவிவிட்டதைப் போல அவை பரவவில்லை. மாறாக செயற்கையாக எழுதி மெட்டமைக்கப்பட்ட பாடல்கள் சுவையின்றி அவற்றில் பவனி வருகின்றன. இது மிகவும் வருந்தத்தக்க நிலை ஆகும். யூ-ட்யூபில் மட்டுமல்ல, எழுதப்பட்ட நூல்களிலும் இவ்வாறான நிலைதான் காணப் படுகிறது.
மேற்குறிப்பிட்ட பாடல்கள் போன்றவை அன்றி, நாட்டார் வழக்கிலிருந்து வேறுவிதப் பாக்களும் மிகுதியாகத் திரட்டப்பட்டுள்ளன. விடுகதைப் பாட்டு ஒருவகை. இதற்குக் குழந்தைக்குச் சற்றே வயது கூட இருக்கவேண்டும். கி.வா. ஜகந்நாதன், அன்னகாமு, மா. வரதராசன் போன்றவர்கள் முதன்முதலில் நாட்டார் பாடல்களைத் திரட்டியவர்கள். கி.வா.ஜ. சிறுவர் உலகம் என்ற தலைப்பிலும், அன்னகாமு குழந்தைகளின் விளையாட்டு என்ற தலைப்பிலும், வரதராசன் குழந்தைப் பாடல்கள் என்ற தலைப்பிலும் தாங்கள் திரட்டியவற்றைத் தொகுத்துள்ளார்கள்.
இக்காலத்தில் திரைப்படங்கள் வாயிலாகவும் சில நல்ல குழந்தைப் பாடல்கள் வந்துள்ளன. உதாரணமாக,
பாப்பா பாப்பா கதை கேளு
காக்கா நரியின் கதை கேளு
தாத்தா பாட்டி சொன்ன கதை
அம்மா அப்பா கேட்ட கதை
என்பது ஒரு நல்ல திரைப்படப் பாடல். அதேபோல,
குவா குவா பாப்பா இவ குடிக்கக் காப்பி கேப்பா .
இங்கும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். மேலிரண்டும் நல்ல குழந்தைப் பாடல்களாகும். ஆனால் பூப்பூவா பறந்துபோகும் பட்டுப்பூச்சி அக்கா என்பது குழந்தைப்பாடல் அல்ல. குறைந்தது எட்டு-பத்து வயது ஆன சிறார்க்கானது. இங்கு அனுபவக்களம், உருவகம், மனிதஆக்கம் முதலியவற்றைக் கையாளல் போன்ற பலவும் கருத்தில் கொள்ளப்படுகின்றன.
இன்றைய மரபிலான குழந்தைப் பாடல்களை முதன்முதலில் இயற்றியவர்களில் மகாகவி பாரதியாரும் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையும் அடங்குவர். பாரதியாரின் சில குழந்தைப்பாடல்கள் சிறப்பானவை.
ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
போன்றவற்றை உதாரணமாகச் சொல்லலாம். கவிமணியின் நூல்கள் மலரும் மாலையும், குழந்தைச் செல்வம் ஆகியவை. மலரும் மாலையும் தொகுதியில் 25 குழந்தைப்பாட்டுகள், 7 கதைப்பாட்டுகள் அடங்கியுள்ளன. கவிமணியின் பாடல்களில் மிகவும் புகழ் பெற்றது, தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு – அங்கே
துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி
நாவால் நக்குது வெள்ளைப் பசு – பாலை
நன்றாய்க் குடிக்குது கன்றுக்குட்டி என்பதாகும்.
சிறுவர் பாடப் புத்தகங்களில் கா. நமச்சிவாய முதலியார் மகிழ்ச்சிதரத்தக்க பாடல்களைச் சேர்த்தார். தொடர்ந்து மயிலை சிவ.முத்து, மணி. திருநாவுக்கரசு போன்றோர் பாடப்புத்தகங்களில் பாடல்களைச் சேர்த்தனர்.
கவிமணிக்குப் பின் இந்தத் துறையில் மிகவும் புகழ் எய்தியவர் புதுக்கோட்டையைச் சேர்ந்த அழ. வள்ளியப்பா. குழந்தைக் கவிஞர் என்றே பெயர்பெற்றவர். மலரும் உள்ளம் இவரது மிக முக்கியமான நூல். ஏறத்தாழ 55 குழந்தை நூல்கள் எழுதியுள்ளார்.
அம்மா இங்கே வா வா
ஆசை முத்தம் தா தா
இலையில் சோறுபோட்டு
ஈயை தூர ஓட்டு…
தோசையம்மா தோசை, அம்மாசுட்ட தோசை, அரிசிமாவும் உளுந்த மாவும் கலந்து சுட்ட தோசை…
போன்ற பாடல்கள் புகழ்பெற்றவை.
வேங்கடராமன், செல்ல கணபதி போன்றோரும் சில நல்ல பாடல்களை இயற்றியுள்ளனர். மியாவ் மியாவ் பூனை, டிங் டாங் மணியடிக்குது, சிட்டு சிட்டு சுண்டெலி போன்றவை.
பத்திரிகைகள் சில சிறார்களுக்காகவே கொண்டுவரப்பட்டன. அவற்றில் குழந்தைப் பாடல்களும் அடங்கியிருந்தன. இவற்றில் முக்கியமானது வை கோவிந்தனின் அணில் இதழ். 1970இல் குழந்தைப் பாடல்களின் தொகுப்பு ஒன்று முத்துக்குவியல் என்ற பெயரில் சென்னையில் வெளியிடப்பட்டது. இதில் தமிழகப் பாக்களே அன்றி, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளின் பாக்களும் இடம்பெற்றன.
தம்பி சீனிவாசன் சிவப்புரோஜாப்பூ, ஒரு குறிப்பிடத்தக்க தொகுதியாகும். பின்னர் பூவண்ணன் வாண்டுமாமா போன்றோர் எழுதிவந்தனர். இலங்கைத் தமிழ் சிறுவர் பாடல்கள் விக்கிபீடியாவில் தொகுக்கப்பட்டுள்ளன. நல்ல சிறுகதை எழுத்தாளரான கிருஷ்ணன் நம்பி யானை என்ன யானை என்ற தலைப்பில் குழந்தைப் பாடல்களை வெளியிட்டுள்ளார். சசிதேவன் என்ற பெயரில் கண்ணன் இதழில் இவர் எழுதினார். அண்மைக்காலத்தில் எழுத்தாளர் பாவண்ணனும் குழந்தைக் கவிதைகள் சிலவற்றை எழுதியுள்ளார். (பச்சைக்கிளியே பறந்துவா போன்றவை).
குழந்தைக் கவிதைகள் காலத்திற்கேற்ப அறிவியலின் துணைகொண்டும் வளர்கின்றன. இரா. ரெங்கசாமி என்பவர் கணிப்பொறிக் கவிதைகள் என்ற நூலை எழுதியுள்ளார். முன்னரே கூறியபடி யூ-ட்யூப் போன்றவற்றில் நிறையப் பாடல்கள் வெளிவந்துள்ளன. மலேசியக் கவிஞர் முரசு நெடுமாறன் குறுந்தகடுகளில் பாடிப்பழகுவோம் என்று குறுவட்டுகளை வெளியிட்டுள்ளார். உயிர்ப்புச் சித்திரங்களுடன் (அனிமேஷன்கள்) பாடல்கள் சேர்ந்த குறுவட்டுகள் இப்போது மிகுதியாகப் புழக்கத்தில் உள்ளன. குழந்தைப் பாடல்களுக்கான இணைய தளங்களும் இப்போது மிகுதியாக உள்ளன.

இலக்கியம்