சாதனை தந்த வேதனை

கருப்புப் பண ஒழிப்பு
இம்மாதம் எட்டாம் தேதி இரவு ஒன்பது மணிக்கு திடீரென்று 12 மணி முதல் 500ரூபாய், 1000ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைப் பிரதமர் வெளியிட்டார். உடனே வாட்ஸப்பிலும் முகநூலிலும் அதை வரவேற்றுப் பல அறிவிப்புகளையும் பார்த்தேன். ஆனால் அடுத்த நாளே அதன் யோக்கியதை என்ன என்பது வெட்டவெளிச்சமாகிவிட்டது.
இந்த அறிவிப்பு சாதாரண மக்களை நடுத்தெருவிற்குக் கொண்டுவந்துவிட்டது. இதோ, இன்று முதல் ஏடிஎம்கள் செயல்படும் என்று சொன்னாலும் 10 மணி வரை எந்த ஏடிஎம்மும் சென்னையிலும் புதுவையிலும் திறக்கப்படவில்லை என்றே செய்தி. நமது அதிகாரிகள் வர்க்கம் எவ்வளவு வேகமாகச் செயல்படும் என்று மோடிக்குத் தெரியாதா? கோயம்பேடு மார்க்கெட் போன்றவைகளே ஸ்தம்பித்தன. மூன்று நாட்களாகக் கையில் காசின்றிப் பரிதவித்துச் சாப்பாடு இல்லாமல் அவதிப்பட்டவர்களையும், கடைகளை மூடிவிட்டுப்போன சிறு கடைக்காரர்களையும் இன்னும் இதுபோன்றவர்களின் அவதிகளையும் எங்கே சொல்ல? இவர்களா கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்தவர்கள்?
அம்பானி, அதானி வகையறாக்களை விட்டுவிடுங்கள், குறைந்தபட்சம் நத்தம் விஸ்வநாதன் வகையறாக்களின் கருப்புப்பணத்தைப் பறிக்க மோடியால் முடியுமா? பெரும்பணக்காரர்களும் கருப்புப் பண முதலைகளும் கார்ப்பரேட் முதலாளிகளும் 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகளை வைத்தா வியாபாரம் செய்கிறார்கள்? கார்ப்பரேட் முதலாளிகளிடமிருந்து வாராக்கடன் மட்டும் ஏழரை லட்சம் கோடி ரூபாய் இருக்கிறது. அதைத் திரும்பவும் பிடுங்க இந்த அரசுக்கு முடியுமா?
எல்லாப் பணமும் வங்கிக்கு வந்தால் கருப்புப் பணம் போய்விடுமாம். யாரிடம் இந்த ஏமாற்று? ஆதார் கார்டையும் பான் கார்டையும் வைத்துக் கண்காணிப்பு நடத்தவும், வங்கியில் வரும் பணத்தை அம்பானி மித்தல் போன்ற பெரிய முதலாளிகளுக்கு மானியமாகவும் கடனாகவும் வேறு வழிகளிலும் தாரைவார்க்கவும்தான் இந்த சூழ்ச்சி. இதனால் பாவம், பெண்கள் தங்கள் குடும்ப, அவசரத் தேவைகளுக்கு வைத்திருந்த பணம்தான் பலியாயிற்று. இதுதான் கருப்புப் பணமா? இதுவரை மோடி எந்த ஏழைபாழைகளைப் பற்றிச் சிந்தித்தார்? அவருடைய கவனம் எல்லாம் இராணுவம் உள்பட எப்படி வெளிநாட்டு உள்நாட்டு முதலாளிகளுக்கு விற்கலாம் என்பதுதானே?
ஆமாம், தான் ஆட்சிக்கு வந்தவுடன் கருப்புப் பணத்தை ஒழித்து நாட்டு மக்கள் எல்லாருக்கும் வங்கியில் ஒன்றரை லட்சம் ரூபாய் போடுவேன் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தாரே மோடி, அது என்ன ஆயிற்று? ஒரு வேளை இப்போது கருப்புப் பணமெல்லாம் கிடைத்து டிசம்பர் 31ஆம் தேதி புதுவருட போனஸாக எல்லாருக்கும் தரப்போகிறாரா?

தினம்-ஒரு-செய்தி