ஜோசப் ஹெல்லரின் கேட்ச்-22

Catch22

ஜோசப் ஹெல்லரின் கேட்ச்-22

இது ஒரு அமெரிக்க நாவல். ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் இருக்கும். என் நண்பர் ராஜன் குறை ஒரு நாள் இந்தப் புத்தகத்தை என்னிடம் கொடுத்தார். படித்துப்பாருங்கள், ரொம்ப நல்ல புத்தகம் என்றார். ஆனால் அப்போது ஏதோ வேலைகள். ஏறத்தாழப் பத்துநாட்கள் கழித்து அவரிடம் படிக்காமலே திரும்பக் கொடுத்தபோது என்னை மிகவும் கேவலமாகப் பார்த்தார். சரி, சமயம் வாய்க்கும்போது படித்துவிடவேண்டும் என்று நினைத்தேன். சில ஆண்டுகள் கழித்துத்தான் படிக்கமுடிந்தது.
மிகச் சிறப்பான சமூக அங்கதம், நையாண்டி, கேலி. கதையின் சூழல்கள் மிகவும் அபத்தமான நிலைகளுக்கும் மிகமோசமான துன்பியல் நிலைகளுக்கும் இடையில் ஊடாடுகின்றன. கதையைச் சொல்பவன், யோசேரியன் என்ற விமானப்படைக் கேப்டன்.
கேட்ச்-22ஐத் தமிழில் தர்மசங்கடம் என்று சொல்லலாம். ஒன்றைச் செய்தாக வேண்டும் என்று சிலசமயம் நமக்குத் தோன்றும், ஆனால் அதைச் செய்யவே முடியாதவாறு அந்த அபத்தமான சூழல் அமைந்திருக்கும். இப்படிப்பட்ட நிலையை கேட்ச்-22 எனலாம். உதாரணமாக, நான் அடிக்கடி என் கண்ணாடியைத் தொலைத்துவிடுவேன். அதைக் கண்டுபிடித்தாக வேண்டும். அப்போது தான் அடுத்தவரி படிக்கவோ எழுதவோ முடியும். ஆனால் அதைத் தேடுவதற்கே கண்ணாடி இருந்தால்தான் முடியும். இல்லாவிட்டால் தேடுவதற்குக் கண் தெரியாது. என்ன செய்வது? இது ஒரு கேட்ச்-22 சூழல் எனலாமா?
இந்த நாவலின் அபத்தமும் அப்படித்தான். அந்த படைத் தளபதி, தன் வீரர்களை மேலும் மேலும் மோசமான போர்ச்சூழல் பறத்தல்களில் ஈடுபடுத்துகிறார். தப்பிப்பதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. தான் ஒரு பைத்தியம் என்று நம்பவைத்துவிட்டால் இராணுவத்திலிருந்து விடுவித்துவிடுவார்கள். ஆனால் ஒரு பைத்தியம் என்று ஒருவன் விண்ணப்பிக்கும் செயலே அவன் பைத்தியம் அல்ல என்பதைக் காட்டிவிடுகிறது. ஆகவே அவன் விடுவிக்கப்பட மாட்டான். மாறாக மேலும் மேலும் போரில் ஈடுபடுத்தப்படுவான்.
ஏறத்தாழ காஃப்காவின் கதைத் தன்மைகளைக் கொண்ட நாவல். நம் காலத்தின் அதிகாரஆட்சியின் மிகமோசமான குணங்களை இந்த நாவல்போல் எதுவும் விமரிசனம் செய்ததே இல்லை என்று சொல்லலாம். இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த ஆங்கில நாவல்களில் ஒன்றாகக் கருதப்படும் இதைத் தயவுசெய்து படித்துப்பாருங்களேன். இம்மாதிரி தீர்க்கமாகச் சமகால விஷயங்களை விமரிசனம் செய்கின்ற நாவல் எதுவும் தமிழில் வெளிவரவில்லையே என்பது என் மனக்குறை.

நூல்-பரிந்துரை