தண்ணீர், தண்ணீர் !

மார்ச் 22 அன்று உலக தண்ணீர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான உலக நீர்வளர்ச்சி அறிக்கை நம்மை மிகவும் அழுத்திக்கொண்டிருக்கும் தண்ணீர் நெருக்கடிக்கு விடைகளைக் கண்டுபிடிக்க முடியும் என்பதைத் தெளிவாக்கியிருக்கிறது. நீடித்த வளர்ச்சிக்கான 2030 செயல்திட்டத்திற்கான கொள்கைகளும் நோக்கங்களும் மேற்கண்ட அறிக்கையோடு பொருந்தி வருகின்றன. தண்ணீர் நெருக்கடியை போகிற போக்கில் சமாளித்துவிட முடியாது என்பதும் தெளிவாகியிருக்கிறது. நீடித்த உணவு தானிய உற்பத்தி, குடிநீர் விநியோகத்தையும் பொது சுகாதாரத்தையும் அனைவருக்கும் கிடைக்கச் செய்வது, தண்ணீர் சம்பந்தமான விபத்துகள் நேரும் அபாயத்தைக் குறைப்பது, பருவநிலை மாற்றம் விளைவிக்கும் மாற்றங்களுக்கு நம்மைத் தகவமைத்துக் கொள்வது போன்ற துறைகளில் பெரும் நம்பிக்கை தரும் இயற்கை அடிப்படையிலான தீர்வுகள் நிச்சயம் உண்டு.

2050-க்குள் ஏற்படப் போகும் உலக மக்கள் தொகை வளர்ச்சியில் பாதிக்கும் மேற்பட்ட வளர்ச்சி ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும்தான் இருக்கப்போகிறது. எனவே, நீர் நெருக்கடியை அதிகம் சந்திக்கப் போகிறவர்கள் வளரும் நாடுகளில் உள்ள மக்களே. இந்திய நகரங்களில் உள்ள நீர்நிலைகள் மிக அதிகமாக மாசுபட்டிருப்பதால், கடும் நீர் பற்றாக்குறையைச் சந்திக்க வேண்டிய நிலையில் இந்தியா இருக்கிறது. வளரும் நாடுகளில் தொழிற்சாலைகள் மற்றும் நகராட்சிகளின் கழிவுநீரில் 80 சதம் எவ்வித சுத்திகரிப்பும் இல்லாமல்தான் வெளியேறுகிறது. மாநிலங்களுக்கிடையே ஓடும் நதிகளில் ஏறத்தாழ பாதிக்கும் மேற்பட்டவை மாசடைந்தவை என இந்திய மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் குறிப்பிடுகிறது. நாட்டில் மாநிலங்களுக்கிடையே ஓடும் 40 ஆறுகளில் 16 ஆறுகள் முற்றிலும் மாசுபட்டுப் போனதற்கு சாக்கடைக் கழிவுகளும் தொழிற்சாலைக் கழிவுகளுமே காரணம் என வாரியம் கண்டறிந்திருக்கிறது.

பயிர் செய்தலின் தேவைக்கு ஏற்ப உழவின் வகை / உழவு முறை மாறுபடும். ஆழமான உழவு, அடிமண் உழவு மற்றும் வருடாந்திர உழவு போன்றவற்றைப் பயன்படுத்துவது பாதுகாப்பு உழவு (conservation tillage) எனப்படுகிறது. அதோடு, பல்வகைப் பயிர்களைப் பயிரிடுதல், பருப்புவகைகளை அதிகமாகப் பயிரிடுதல், உயிரியல் முறைகள் மூலம் பூச்சிகளைக் கட்டுப்படுத்தல் போன்ற சுற்றுச்சூழலுக்கிசைந்த இயற்கையோடு ஒட்டிய வேளாண் முறைகளை மேலும் மேலும் பயன்பாட்டிற்குக் கொணர வேண்டியது இங்கே அவசியமாகிறது.

கழிவுநீரைச் சுத்திகரிக்க ஈரநிலங்களை (wetlands) உருவாக்குவது செலவைக் குறைக்க உதவும். பயிரிட நிலம், ஆற்றல் தயாரிப்பு போன்ற கூடுதல் நன்மைகளும் இதனால் கிடைக்கும். உலகின் பல பகுதிகளில் இம்மாதிரி வழிமுறைகள் புழக்கத்தில் இருக்கின்றன. இயற்கையான அல்லது உருவாக்கப்பட்ட ஈரநிலங்கள் கழிவுகளை மக்கச் செய்கின்றன அல்லது செயல்பட விடாமல் தடுக்கின்றன.

நீர்ப்பிடிப்பு மேலாண்மை (watershed management) தண்ணீர் நெருக்கடியைத் தீர்க்க உதவும் மிக முக்கியமான இயற்கையோடு ஒட்டிய தீர்வு. விண்ணிலிருந்து மண்ணில் விழும் ஒவ்வொரு துளி நீரையும் நீர்நிலைகளிலும் நிலத்தடியிலும் சேமிப்பதுதான் நீர்ப்பிடிப்பு மேலாண்மை. பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த, வேலைவாய்ப்பை உருவாக்க, உயிரியல் பன்மையைப் பாதுகாக்க, பருவநிலை மாற்றங்களைத் தாக்குப் பிடிக்க என வேறு கூடுதல் நன்மைகளையும் அதன் மூலம் பெறலாம்.

ஒரு மாநகரம் வளர்ச்சி பெறும்போது வரும் சவால்களைச் சந்திப்பதில் இயற்கை எவ்வாறு புறக்கணிக்கப்படுகிறது என்பதற்கு உதாரணமாக சென்னையை எடுத்துக் கொள்ளலாம். முன்பெல்லாம் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்யும்போது ஏரிகள், குளங்கள், குட்டைகள், ஆறுகள், வடிகால் அமைப்புகள் எல்லாம் நிலத்தடி நீரைப் புதுப்பித்துக் கொண்டு கூடுதல் நீரை கடலுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்க உதவும். ஆனால் மாநகர வளர்ச்சி என்ற பெயரில் பல ஏரிகளும் குளங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டடங்களும் தொழிற்சாலைகளும் எழுப்பப்பட்டுவிட்டன. கூடுதல் நீரை வங்காள விரிகுடாவுக்கு அனுப்பிக் கொண்டிருந்த கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் போன்ற நீர்நிலைகள் இன்று திறந்தவெளி சாக்கடைகளாக மாறிவிட்டன. கூடுதல் மழைநீரை உறிஞ்சிப் பாதுகாத்துக் கொண்டிருந்த பள்ளிக்கரணை சதுப்புநிலம் இன்று அந்தப் பணியைச் செய்ய முடியாததாக ஆகிவிட்டது.

இயற்கை அடிப்படையிலான தீர்வுகளை நோக்கி நாம் செல்வோமானால் நீர் மேலாண்மையை மேம்படுத்த முடியும், நீர்ப்பாதுகாப்பையும் பெற முடியும். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.

சமூகம்