தண்ணீர் தந்த பாடம்

ஒரு நாள் ஆசிரியர் ஒருவர் தன் மாணவர்கள் சிலரோடு வேறு ஊருக்குச் சென்றுகொண்டிருந்தார். வழியில் எல்லாரும் ஓர் ஓடையின் அருகில் ஓய்வெடுத்தார்கள். ஆசிரியர் சொன்னார்: “எனக்கு தாகமாக இருக்கிறது. யாராவது போய்க் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவருகிறீர்களா?”

ஒரு மாணவர் ஓடைக்குச் சென்றார். அப்போது சிலர் துணிதுவைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு மாட்டு வண்டி ஓடையைக் கடந்து சென்றது. மாடுகளின் குளம்புகள் பட்டு ஓடைநீர் சேறாக மாறியது.

“இந்த நீரையா ஆசிரியருக்குத் தருவது?” என்று எண்ணிய மாணவர், ஆசிரியரிடம் சென்று, “ஐயா, நீர் கலங்கலாகவும் சேறாகவும் இருக்கிறது. நீங்கள் குடிக்கத் தகுதியானதாக இல்லை” என்றார்.

ஏறத்தாழ அரை மணிநேரம் ஓய்வு எடுத்தபிறகு அனைவரும் கிளம்பத் தயாரானார்கள். ஆசிரியர் மீண்டும், “எனக்கு தாகமாக இருக்கிறது. யாராவது கொஞ்சம் தண்ணீர் கொடுக்கிறீர்களா?” என்று கேட்டார்.

முன்புசென்ற அதே மாணவர் மறுபடியும் ஓடைப்பக்கம் சென்றார். என்ன ஆச்சரியம்! இப்போது ஓடையருகில் யாரும் இல்லை. நீர் மிகவும் தெளிந்து குடிப்பதற்கு ஏற்றதாக இருந்தது. அதைக் கொண்டுசென்று ஆசிரியரிடம் கொடுத்தார்.

ஆசிரியர் மாணவரைக் கூர்ந்து நோக்கினார். “பார்த்தாயா, இப்போது நீர் தெளிவாக இருக்கிறது. என்ன செய்தாய்?”

“ஒன்றும் செய்யவில்லை. முன்பிருந்த நீரைப் பார்த்தேன் அல்லவா?  அதை அப்படியே விட்டுவிட்டு வந்துவிட்டேன். அவ்வளவுதான். சேறு தானாகவே படிந்து, நீர் தெளிந்துவிட்டிருக்கிறது.”

“உன் மனமும் அப்படித்தான் என்றார் ஆசிரியர். எப்போது மனம் குழம்பியும் தெளிவற்றும் கவலையில் மூழ்கியும் இருக்கிறதோ, அப்போது அதைச் சற்று நேரம் விட்டுவிடு. வேறு செயல்களில் ஈடுபடு. பிறகு விஷயங்கள் தானாகவே விலகி, குழப்பங்கள் நீங்கி, மனம் தெளிவாகிவிடும்”.

தினம்-ஒரு-செய்தி