தமிழில் திறனாய்வு, மேற்கத்தியத் திறனாய்வு

தமிழில் திறனாய்வு, மேற்கத்தியத் திறனாய்வு

தமிழ் இலக்கிய மாணவர்களிடம் கடந்த சில ஆண்டுகளுக்குள் இலக்கியம் பற்றிய பழமையான பார்வை மாறியிருக்கிறது. பழைய கால இலக்கிய நோக்கு, இலக்கண அடிப்படையிலான நோக்கு ஆகியவை இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலி ருந்தே கொஞ்சம் கொஞ்சமாக மாறிவந்துள்ளன. பழங்காலத்தில், இந்திய மொழிகளில், நூல்களை உருவாக்கியவர்கள் ஞானிகள் என்ற கருத்து இருந்தது. ஆகவே ‘முனைவன் கண்ட முதல் நூலை’ விமரிசிக்கக்கூடாது என்னும் கருத்தும் நிலவியது.

ஒரே நூலுக்கு வெவ்வேறு அர்த்தங்களை-வெவ்வேறு வாசிப்பு களை உரையாசிரியர்கள் கொண்டபோதும், அது இயல்பெனக் கருதவில்லை. இன்னொரு உரையாசிரியரின் உரையைத் ‘தவறான புரிந்து கொள்ளல்’ என்று ஓர் உரையாசிரியர் கருது வாரே ஒழிய மூலநூலாசிரியன்மீது குறைகாண மாட்டார்.

பழங்காலத்தில் நமது இலக்கியங்கள் யாவுமே உதாரணங்களோடு இனிமையாக அறிவுறுத்துபவை ((teach and delight) என்றும் அறம்பொருள் இன்பம் வீடு அடைய அவை பயன்படவேண்டும் என்றும் கருதப்பட்டது. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் முதலாக, அண்மைக்காலத்தில் எழுதப்பட்ட ஆத்திசூடிகள் வரை அறநூல்கள் என்றும் ஒழுக்க நூல்கள் என்றும் சொல்கிறோம். ஆங்கிலத்திலும் ‘டைடாக்டிக்’ (didactic) என ஒரு பிரிவு நூல்கள் உண்டு. ஆனால் அவர்களுடைய வரையறை சற்றே வித்தியாசமானது. அற வொழுக்கத்தை வலியுறுத்தும் நூல்களே அன்றி, சமய, தத்துவ நூல்களையும் இச்சொல் குறிக்கும். அதனால் ஆங்கில இலக்கிய வரலாற்றில் மத்திய கால இலக்கியம் முழுவதுமே அற நூல் களைக் கொண்டது எனக்குறிப்பர். சமய, தத்துவ நூல்களையும் ‘டைடாக்டிக்’ என்னும் சொல் குறிப்பதாகக் கொண்டால், நமது அற இலக்கியத்தில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களே அன்றி, சைவ வைணவ இலக்கியங்கள், சைவசித்தாந்த நூல்கள், பிற சமயத் தைச் சேர்ந்த சமய நூல்களேஅன்றி, போதனை நூல்கள், சமய விவாதங்கள் போன்றவை யாவும் அடங்கும்.

இலக்கியத்தின் பணி இனிமையாக அறிவுறுத்தல் என்னும் கருத்து தமிழ் மனத்தில் ஆழப் பதிந்திருக்கிறது. ஆகவே மாணவர் கள் பழங்கால இலக்கியங்கள் இக்கால நாவல்கள், சிறுகதைகள் எல்லாவற்றிலும் (அறநோக்கில், அல்லது சமூக நோக்கில், அல்லது தனிமனித முன்னேற்றத்திற்கு உதவுவது என்ற நோக்கில்-இப்படிப் பல வகையான நோக்குகளில் எல்லாம்) ஆசிரியர் என்ன கூறியிருக்கிறார் என்று பார்ப்பதையே இலக்கியத் திறனாய்வு என்று கொண்டுவிடுகின்றனர். இலக்கியத்தை அறநோக்கில் அல்லது ஒழுக்கநோக்கில் மட்டுமே பார்க்க வேண்டும் என்னும் பார்வை தற்காலத்தில் மாறியிருக்கிறது. இருப்பினும் இலக்கியம் ஏதேனும் சமூகக் கருத்துகளைக் கண்டிப்பாக வழங்க வேண்டும் என எதிர்பார்க்கும் வாசகர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்.

பழங்கால இந்தியமொழிகளில்-தமிழ் உள்பட, மூலநூலாசிரிய னைக் குறைகூறும் போக்குதான் இ,ல்லையே தவிர, இரசனை முறைத் திறனாய்வு என்பது நன்றாகவே வளர்ந்திருந்தது. சமஸ்கிருதத்தில் காணப்படும் இலக்கியக் கோட்பாடுகள்-ரஸம், பாவம், அலங்காரம், த்வனி, ரீதி, ஒளசித்தியம், வக்ரோக்தி போன்றவை இதனைத் தெளிவுபடுத்தும். பொதுவாகப் பழங்கால இலக்கியக் கொள்கையை ‘சஹ்ருதயக் கொள்கை’ எனச் சுருக்கமாகச்சொல்லலாம். சஹ்ருதயத்தன்மை என்பது ஒத்து ணர்வு. ஒருபொருளோடு நாம் முழு அளவில் ஐக்கியமாகி, அதன் இருப்பிலும் அனுபவத்திலும் பங்குகொள்ளும் தன்மை. இது பரிவுணர்வு (Sympathy) என்பதோடு எதிர்நிலையில் வைத்து நோக்கப்படுகிறது. ஒரு நாடகத்தில் அல்லது திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தின் உணர்வுகளையும் மனநிலையையும் நாம் உணர்ந்துகொள்ளும் தன்மையைப் பரிவுணர்வு என்போம்.

இலக்கியத் துறையில் எந்த ஒரு கொள்கையும் வானிலிருந்து திடீரென்று தோன்றி விடுவதில்லை. எல்லாக் கொள்கைகளுக்கும் முன்னோடிகள் உண்டு. மேற்கு நாடுகளில் இலக்கிய விமரிசன வளர்ச்சியும் கொள்கை வளர்ச்சியும் படிப்படியாக இவற்றை உள்வாங்கி வளர்ந்து வந்துள்ளன. அதனால் அவை சரியான முறையில் செறிவாகப் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலும் ஆங்கில அறிவைப் புறக்கணிக்கின்ற தமிழ்இலக்கிய மாணவர்கள் (எழுத்தாளர்களும்கூட) தமிழில் மட்டுமே எழுதப் படுகின்ற கொள்கை அல்லது செயல்முறை விமரிசன நூல்களைப் பயிலும்போது அரைகுறையான புரிந்துகொள்ளலோடு அல்லது சில விஷயங்களில் தவறான புரிந்துகொள்ளலோடு விமரிசனத் தில் ஈடுபட்டுவிடும் அபாயம் இருக்கிறது. மேலும் தேர்வு நோக்கில் ‘பாயிண்டு பாயிண்டாக’ப் படிக்கின்ற மாணவர்கள், “இலக்கியத் திறனாய்வில் எட்டுவகைகள் இருக்கின்றன – அவை யாவன” என்று என்பதுபோல அரைகுறையான, மேம்போக்கான அல்லது தவறான பகுப்புகளில் ஈடுபட்டு மனப்பாடம் செய்யத் தொடங்கிவிடுகின்றனர் என்பது வருந்தத்தக்கது. இம்மாதிரிக் குறைகள் எற்பட முக்கியக் காரணம் அல்லவாறு எளிமைப்படுத்திப் பாடத்திட்டம் வகுக்கும் அல்லது வினாக்கள் கேட்கும் பேராசிரியர்களே. அடிப்படையான கருத்துகளைப் புரிந்துகொள்ளும் நோக்கமின்றி இம்மாதிரி மேலோட்டமான தன்மைகளில் கவனம் செலுத்துவது எந்தத் துறையிலுமே ஆபத்தானது.

ஆனால் நல்லவேளையாக இந்த நிலை மாறிவருகிறது. மேலும் 1990கள் முதலாகத் தமிழின் படைப்புப் போக்கும் பெரிதும் மாறிவந்துள்ளது. அண்மைக்காலத்தில் படைப்புலகங்கள், இலக் கியத் தடங்கள், விமரிசனப் பார்வைகள், என்றெல்லாம் எழுத்தா ளர்களைப் பற்றி தனித்தனியே நூல்கள் வெளிவருவது ஆரோக்கியமான ஒரு நிலை. இதற்குமேல் இலக்கியச் சிற்றிதழ் கள் இப்போது இணைய இதழ்களாகவும் இயங்குகின்றன, அல்லது வெளியிட்டு வருகின்றன. பெரும்பத்திரிகைகளே இலக்கிய இணைப்புகளை வெளியிட்டுவந்த காலம் போய், இலக்கியப் பத்திரிகைகளையே இப்போது தனியாக நடத்தத் தொடங்கி விட்டன. சற்றே மந்தமான ஒரு காலப்பகுதிக்குப் பின்னர் இப்போது அதிக அளவில் இலக்கியச் சிற்றிதழ்கள் வெளி வருகின்றன. இவையாவும் அண்மைக்காலத்தில் தமிழிலக்கிய மாணவர்களின் பார்வை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியிருக் கின்றன. ஆனால் ஒரு எச்சரிக்கை-இவற்றில் வெளிவருவன மனப்பதிவு சார்ந்த விமரிசனங்களாகவே இருக்கின்றன. ஒரு திறனாய்வாளன் ஒருநூலைப் பற்றியோ அல்லது சமூகச் சூழல்கள்-நிகழ்வுகள் பற்றியோ சொல்லுகின்ற விஷயங்கள் பெருமளவு அவனது விமரிசன அணுகுமுறையைப் பொறுத் துள்ளன. இம்மாதிரி அணுகுமுறைகளால் ஓர் இலக்கிய மாணவன் அறிந்தோ அறியாமலோ ஈர்க்கப்பட்டுவிடும் நிலை சர்வசாதாரணம்.

இலக்கிய விமரிசனம் அல்லது திறனாய்வு என்பது மரபாக ஓர் இலக்கியப் படைப்பின் அல்லது படைப்புகளின் பகுப்பாய்வு, விளக்கம், மதிப்பிடல் என்பதாகக் கருதப்பட்டு வருகிறது. குறைகாண்பது நிச்சயமாக விமரிசனம் அல்ல. ஒரு கல்விச் செயல்பாடு என்னும் முறையில் இலக்கியத்திறனாய்வு என்பது ஒரு பிரதியில் என்ன நிகழ்கிறது என்பது பற்றிய உணர்வை வெளிக்காட்டுகிறது.

ஓர் இலக்கியப் பிரதியைப் பற்றிப் பரந்த நோக்கில் பார்க்க வேண்டுமானாலும், அந்தப் பிரதி எதைப் பற்றியது, எந்தப்படியான அனுபவம் அதில் சொல்லப்படுகிறது, எந்த வகையான உணர்ச்சி அல்லது பிரச்சினை அதில் வருணிக்கப்படுகிறது என்பவற்றை யெல்லாம் நோக்கியாக வேண்டும்.

பிறகு அந்தப் பிரதி எப்படி இலக்கிய விஷயத்திற்கு உயிர்கொடுத் திருக்கிறது என்பதையும் பார்க்கவேண்டும். இப்படி ஆராயும் போதே அப்பிரதி பற்றிய நமது பார்வை இன்னும் ஆழமாகிறது.

பிரதி பற்றிய நுணுக்கமான பார்வையைக் குவிக்கும்போதே ஆசிரியர் என்னென்ன கூறுகளில் எந்தவிதமான தேர்வுகளைக் கையாண்டுள்ளார்-உதாரணமாக, எந்தவிதமான சம்பவங்கள் தரப் படுகின்றன, எவ்விதமான வார்த்தைகள் கையாளப்படுகின்றன, இவையெல்லர்ம் பிரதியின் மையப்பிரச்சினை என்பதை நாம் உணர்வதற்கு எவ்விதம் அரண் செய்வதாக இருக்கின்றன என்பனவற்றையெல்லாம் நாம் ஆராயவேண்டும். ஒரு பிரதி குறிப்பிட்ட வகையில் எப்படி வளர்கிறது என்று நாம் சொல்ல ஆரம்பிக்கும்போதே அது சாதாரணச் ‘சுருக்கம்’ என்ற நிலையைத் தாண்டத் தொடங்குகிறது.

ஒரு பிரதி எதைப்பற்றியது என்பதைச் சரியாகக் கண்டுபிடிக்க வழி உண்டா? நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இந்தத் தன்மை இலக்கியப் படிப்பைக் கடினமாகவும் அதேசமயம் ஆர்வமூட்டுவதாகவும் ஆக்குகிறது. எந்த இலக்கியப்பிரதியும் எண்ணற்ற பார்வைகள், விவாதங்கள் இவற்றின் களம். சாதாரண மாக மாணவர்கள் இலக்கியம் பயிலத் தொடங்கும்போது, எம்.ஏ. படிப்புக்கான திட்டக்கட்டுரை, அல்லது எம்.பில் படிப்புக்கான ஆய்வுக்கட்டுரை இவற்றை உருவாக்க ஆசிரியர்கள் சில திட்ட வட்டமான வரையறைகளைத் தருகின்றனர். இப்படிப் புரிந்து கொள்ளலாம் என ஒரு வழிகாட்டியாக இருக்கின்றனர். ஆனாலும் இது ஒரு குறிப்பிட்ட மனிதருடைய பார்வைதான். இன்னொரு வாசகர் அதே இலக்கியப் பிரதியைப் பற்றி வேறுவிதமான பார்வைகளைக் கொள்ளக்கூடும். வேறு விதமான ஆய்வுமுறை களைக் கையாண்டு வேறுவித முடிவுகளுக்கு வரக்கூடும்.

அதனால் இலக்கியத் திறனாய்வு என்பதே ஒரு அகவயமான சமாச்சாரம் என்று தோன்றலாம். அப்படியில்லை. ஒரு வாசகன் ஒரு நூலைப் படிக்கும்போது தனது சமூக கலாச்சாரச் சூழல் களாலும் கட்டுப்படுத்தப்படுகிறான். ஆகவே ஒரு குறிப்பிட்ட அளவு பொதுநோக்கு என்பது சமூக கலாச்சார அடிப்படை யிலேயே வந்துவிடுகிறது.

இலக்கியத்தை ஓர் ஆவணமாகவும் பயன்படுத்த இயலும். பல பேருக்கு அதுதான் இயலக்கூடிய எளிய பணியாகவும் இருக்கிறது. பிரதி என்று சொல்லும் போதே ஓரளவு ஆவணநோக்கும் அங்கே வந்துவிடுகிறது. இலக்கியத்தை இலக்கியமாகப் பார்த்து இரசிப்பது தான் கடினம். அதற்கான வழித்தடத்தைப் பயன்படுத்தி ஆராய்வது கடினம். ஒருவர் இலக்கியம் என்ன சொல்கிறது என்று காண முற்படும்போது அதனை ஆவணமாகவே பயன்படுத்துகிறார். இது உள்ளடக்கத்தை மட்டுமே கொண்டு செய்யும் ஆராய்ச்சி. இம் மாதிரிப் பார்வையில் தவறு ஏதுமில்லை என்றாலும் இலக்கியக் கலையின் முதற்பயனை இந்த நோக்கு புறக்கணித்து விடுகிறது.

அப்படியானால், விமரிசனத்திற்கு அடிப்படை வழித்தடங்கள்தான் என்ன? விமரிசனம் என்பது ஒரு வாசகனின் எதிர்வினையில் தொடங்குவதால், ஒரு பதிவுநவிற்சி (அதாவது ஒரு படைப்பி னைப் பற்றிய மனப்பதிவுகளை (impressions) நவிலுதல்) விமரிசனத்தை எவரும் எளிதாகவே எழுதிவிடலாம். அதாவது, ஒரு கவிதையைப் பற்றி, அது எவ்வளவு நன்றாக உணர்வை வெளிப்படுத்தியிருக்கிறது, அது வாசித்த நபரிடம் என்ன உணர்ச்சி விளைவை உண்டாக்கியிருக்கிறது (எப்படி அவரை பாதித்தது), அவரது வாழ்க்கை அனுபவத்தோடு அது எப்படி ஒட்டியிருக்கிறது என்பதை யெல்லாம் எழுதுவதுதான் பதிவுநவிற்சி விமரிசனம் (Impressionistic Criticism).

கவிதை தமக்கு என்ன உணர்ச்சி விளைவை உண்டாக்கி யது-எப்படி பாதித்தது என்பதை மட்டுமே இரசனைக்கான அளவு கோலாகக் கொண்டு இரசிகமணி டி.கே.சி. போன்றவர்கள் செய்துவந்தனர். இம்மாதிரி செய்வதில் பெருந்தவறுகள் ஏற்பட்டு விடக்கூடும். இதற்கு நல்லஉதாரணம், டி.கே.சி.யின் கம்ப ராமாயணப் பதிப்பு. தமக்கு ஒருவித ‘பாவத்தை’-உணர்ச்சி விளைவைத் தரக்கூடிய சற்றேறக் குறைய ஆயிரம் பாடல்களை மட்டும் தொகுத்து அவை மட்டுமே கம்பர் எழுதியவை, பிற யாவும் இடைச்செருகல்கள் அல்லது பிற்சேர்க்கைகள் என்று தவறாகக் கருதிப் பதிப்பித்துவிட்டார் அவர்.

1949 வாக்கில் விம்சட்டும் பியர்ட்ஸ்லியும் சேர்ந்து எழுதிய கட்டுரை ஒன்றில் இலக்கியத்தை நாம் தவறாக அணுகுகின்ற சில வழிமுறைகளை எடுத்துக்காட்டுகின்றனர். இவற்றை அவர் கள் ‘போலி நியாயங்கள்’ என்கின்றனர். இம்மாதிரித் தவறுகளில் ஒன்று உள்நோக்கப் போலிநியாயம் (Intentional Fallacy). ஆசிரியனின் உள்நோக்கம் என்ன என்பதை யூகித்து அதன் வழியாக ஒரு பிரதியை விளக்க முற்படுவது இது. அதேபோல் இலக்கியப்பிரதி வாசகன்மீது ஏற்படுத்தும் விளைவை அடிப்படையாக வைத்து அதனை மதிப்பிடுவது உணர்ச்சி விளைவுப் போலிநியாயம் (Affective fallacy). டி.கே.சி. செய்தது இம்மாதிரியான தவறுதான்.

திறனாய்வு இம்மாதிரி மனப்பதிவுகளைவிட, படைப்பினை நன்றாகப் பகுப்பாய்வு செய்வதாக அமையவேண்டும். அடிப்படை யில் விமரிசனம் என்பது படைப்பின் மையக் கருப்பொருள்களை அறிவது முதலாகத் தொடங்கி, அக்கருப்பொருள்களை எப்படி உருவாக்கி வளர்த்து ஒரு பிரதி முன்வைக்கிறது என்பதை விரிவாக அலசுவது என்றுசொல்லலாம். இதனை அலசல் விமரிசனம் (Analytical criticism) என சி.சு. செல்லப்பா குறிப்பிட்டார். இம்மாதிரி விமரிசனத்தை வளர்க்கவேண்டும் என்பதற்காக ‘எழுத்து’ பத்திரிகையையும் அவர் நடத்தியது நாமறிந்த விஷயம்.

இன்றும் இலக்கியம் சிறந்ததொரு அனுபவத்தை (profound experience) அளிக்கவேண்டும் எனக் கருதுபவர்கள் இருக்கிறார்கள். இரசனை நோக்குடன் வாழ்க்கை அனுபவங்களையும் இலக்கியத் தில் பொருத்திப் பார்க்கும்போது சற்றே வித்தியாசமானதொரு இரசனைமுறைத் திறனாய்வு தோன்றுகிறது. இம்மாதிரித் திறனாய்வைக் க.நா. சுப்ரமணியம், வெங்கட் சாமிநாதன் போன்ற வர்கள் செய்துள்ளனர்.

ஆங்கில இலக்கிய விமரிசனப் பிதாமகர்களான எஃப்.ஆர். லீவிஸ் (F.R. Leavis) முதலியோர் செய்த திறனாய்வு இன்னும் சற்றே வித்தியாசமானது. லீவிஸ் இரசனை-அனுபவ அணுகுமுறையைக் கையாண்டபோதிலும், ஆழமான வாசிப்பையும் வலியுறுத்தினார். புறச்சான்றுகளை ஏற்காமல் கவிதையின் அல்லது படைப்பின் சொற்களை மட்டுமே ஆழ்ந்து நோக்கவேண்டும் என்பது அவரது முடிவு. இலக்கியப் படைப்பின் மையமாக ஓர் உயர் ஒழுக்க நெறி (high moral seriousness) காணப்பட வேண்டும் என்றும் அவர் கருதி னார். ஒர சிறந்த படைப்பு, வாழ்க்கை அனுபவங்களின் சிக்கலான அறவியல்புகளை ஒளியூட்டிக்காட்டுகிறது. இங்கு அறம் என்னும் சொல் மனிதனுக்கு விதிக்கப்படும் ஒழுக்கக் கட்டுப்பாடுகளைக் குறிப்பதன்று. மனிதன் தனது சூழலில் பிறருடன் கொள்ளக்கூடிய தொடர்புகள் – உறவுகளின் கடப்பாட்டுத்தன்மை, பொறுப்புகள், உணர்வுகள் ஆகியவற்றை இச்சொல் குறிக்கிறது.

இம்மாதிரி அளவுகோல்களை வைத்து ஆங்கிலத்தின் தலைசிறந்த நாவலாசிரியர்களான ஜேன் ஆஸ்டின், ஜார்ஜ் எலியட், கான்ராட், ஹென்றி ஜேம்ஸ், டி.எச். லாரன்ஸ் ஆகியோரை The Great Tradition என்ற தம் நூலில் லீவிஸ் நிறுவியிருக்கிறார்.
ஓர் இலக்கியப் பிரதியை விவாதப்படுத்தி ஆராயும்போதே விரைந்து வாழ்க்கை அனுபவத்துடன்அதன் செய்தியைப் பொருத்திப் பார்க்கச் சென்று விடுவது பிரிட்டிஷ் ஆங்கில இலக்கிய விமரிசனத்தின் பொதுத்தன்மை என்று சொல்லலாம். இதனைப் பன்மை அணுகுமுறை (Pluralistic approach) என்று சொல் வது வழக்கம். ஓர் இலக்கியப் படைப்பினைத் திறந்த மனத்தோடு அணுகி, குறித்த எவ்விதக் கருத்தியல் நிலைப்பாடும் எடுக்காமல் எந்த நோக்கிலிருந்தும் விமர்சிக்கும் முறை இது. ஆனால் மார்க்சிய, அமைப்புவாதத் திறனாய்வாளர்களால் இந்த நோக்கு பொதுப்புத்தி அணுகுமுறை (Common sense approach) என்றும் தாராளவாத மனிதநேய அணுகுமுறை (Liberal humanist approach) என்றும் கேலிசெய்யப்பட்டது.

ஆங்கிலவழிப்பட்ட மரபுத்திறனாய்வு, வடிவம், கற்பனை போன்ற வை பற்றிய கோட்பாடுகளை விரிவாக ஆராய்வது. உதாரணமாக, ஆங்கிலக்கவிஞர் கோல்ரிட்ஜ், தமது பயக்ராபியா லிடரேரியா என்னும் நூலில் கற்பனையையும் (Imagination) புனைவையும் (Fancy-இதனை வெறுங்கற்பனை என்பார் மு.வ.) பிரித்துக் காட்டு கிறார். புனைவு என்பது எளிய, தீவிரமற்ற கவிதை சார்ந்தது. தீவிரமான எந்தக் கவிதையும் கற்பனையையே அடித்தளமாகக் கொள்ளும். ஒழுங்கற்ற தாறுமாறான அனுபவக் கூறுகளிலும் ஒழுங்கைக்காணும் இயல்பு கற்பனைக்குண்டு. கோல்ரிட்ஜ், வேர்ட்ஸ்வொர்த், கீட்ஸ் போன்ற ஆங்கிலக் கவிஞர்களும் நம் நாட்டில் தாகூர், பாரதி போன்றவர்களும் மனத்துக்குள்ளிருக்கும் ஒழுங்கினை-முழுமையைக், கற்பனையாற்றல் வாயிலாகத் தேடி யவர்களே. எனினும் இத்தேடல் அடிக்கடி இயலாமையிற் கொண்டுவிடுகிறது. இதனால் ரொமாண்டிக் கவிதைகளில் ஒழுங்கின் இலட்சியத்திற்கும், கற்பனையின் தோல்விக்குமிடை யில் ஓர் இழுவிசை இருந்துகொண்டேஇருப்பதைக் காணலாம்.

உதாரணமாக பாரதி, “நல்லதோர் வீணை செய்தே அதை நலங் கெடப் புழுதியில் எறிவதுண்டோ” எனக் கேட்கும்போது அவரது சாதனையின் தோல்விக்கும் இலட்சியத்தின் எதிர்பார்ப்பிற்கு மான போராட்டத்தை முன்வைத்தேபாடுகிறார்.

வடிவம்-உள்ளடக்கம் இரண்டிற்குமிடையில் காணப்படும் முரண் பாட்டினை நாம் அறிவோம். இலக்கியம் ஓர் உயிரி போன்றது என்று கருதும் கொள்கைப்படி (Organic theory) எப்படி ஓர் உயிரியின் வடிவமும் ஆளுமையும் பணிகளும் தனித்தனி திசைகளில் இயங்காமல் ஒருமைப்பாட்டோடு இயங்குகின்றனவோ, அதே போன்றதொரு பிரிக்கமுடியாத ஒருமையோடுதான் இலக்கியத் தின் கூறுகள் இயங்குகின்றன. ஆகவே வடிவத்தையும் பொருளை யும் தனித்தனியே கூறுபோட்டு ஆராய்வதில் பயனில்லை.

ஒருவிதத்தில் உள்ளடக்கம் என்பது ஒரு மாயை. எந்த இலக்கி யத்தையும் பொழிப்புரைத்தாலோ சாராம்சப்படுத்தினாலோ அது இலக்கியமாகவே இருப்பதில்லை. சான்றாக, கம்பராமாயணத் தையே வாசிக்கும்பொழுதுதான் அது இலக்கியம். அதன் சாராம் சம், பொழிப்புரை, சுருக்கம் எதுவுமே கம்பராமாயணத்தின் தன் மைகளைக் கொண்டிராது. தான் சொல்லும் முறையினால்தானே அது இலக்கியமாக இருக்கிறது? எந்த நூலையும் சாராம்சப்படுத்த இயலும். அப்படி சாராம்சப்படுத்துவது, திறனாய்வுக்கு ஒரு தொடக்கப்புள்ளியாக அமையலாம். ஏனெனில் இந்த சாராம்சத்தை வேறொரு இலக்கியவடிவில் தராமல் இந்த வடிவத்தில் படைப்பாளி ஏன் தந்திருக்கிறார் என்று ஆராய்வதே ஆரம்பத்தில் ஒரு நல்ல நோக்காக அமையும்.

என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதற்கும் அது எப்படிச் சொல்லப் பட்டுள்ளது என்பதற்குமான தொடர்பினை நோக்குவது செயல் முறைத் திறனாய்வு, விமரிசன ரீதியான இரசனை என்றெல்லாம் சொல்லப்படுகிறது. இதன் அறிவியல்ரீதியான பொதுமைப்பட்ட செயல்பாடு, வடிவவியல் திறனாய்வு (Formalistic criticism). இது அழ கியல் திறனாய்வு (Aesthetic criticism) என்றும் சொல்லப்படும். அமெ ரிக்காவில் புதுத்திறனாய்வு என்னும் பெயரிலும், ரஷ்யாவில் உருவவாதம் என்ற பெயரிலும் இது இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வளர்ச்சியடைந்தது. பின்னால் அமைப்புவாதம், பின்னமைப்புவாதம் போன்ற போக்குகள் வளர்ச்சிடைய அழகியல் திறனாய்வே அடிப்படை. எந்தப் பயனும் கருதாமல் இலக்கி யத்தைத் தனித்துறையாக நோக்கவேண்டும் என்பதும், அதன் அழகியல் தன்மைகளை மட்டுமே ஆராய வேண்டும் என்பதும் வடிவவியல் நோக்கு. எனவே இது (பிரிட்டிஷ்காரர்களின் பன்மை அணுகுமுறைக்கு மாறான) ஒற்றை அணுகுமுறை (Monistic approach) என்றும் சொல்லப்படுகிறது. மிகநுணுக்கமான படிப்பை, ஆழ்ந்த வாசிப்பை இது வலியுறுத்துகிறது. இப்படி ஆழ்ந்து ஆராய்ந்து தனிப்படைப்புகளின் திறனை வெளிப்படுத்துவது அமெரிக்கப் புதுத்திறனாய்வின் நோக்காக அமைந்தது. ரஷ்ய வடிவவாதமோ இலக்கியங்களுக்கெல்லாம் பொதுவாக அமைந்தி ருக்கும் இலக்கியத் தன்மையைக் காணவேண்டும் என்று கருதியது.

ரஷ்ய வடிவவியலாளர்கள் 1917 புரட்சியின்போது வாழ்ந்த ஒரு இலக்கியக் குழுவினர். இலக்கிய மொழிநடை பற்றி மொழியியல் ரீதியாகச் சிந்திப்பதிலிருந்து அவர்கள் இயக்கம் உருவாகியது. நடை, யாப்பு, ஒலியமைப்பு போன்றவை பற்றி அவர்கள் கூறிய கருத்துகள் மிகுந்த தொழில்நுட்பச் சிக்கலுடையவை. அவற்றை இங்கு விவாதிக்க இயலாது. ஆயினும் பொதுவாக அவர்கள் கூறிய சில கருத்துகளை இங்குக் காணலாம்.

இலக்கியமொழி என்பது ஒரு தனித்தவகையான மொழி என்பது அவர்கள் கருத்து. இலக்கியம் இந்த உலகத்தைப் பற்றிய ஒரு சித்திரத்தை வாசகனுக்கு அளிப்பதைவிட, அது நாம் காணும் உலகை நமக்கு விசித்திரப்படுத்துகிறது அல்லது பரிச்சயநீக்கம் (Defamiliarization) செய்கிறது என்றார் ரஷ்ய உருவவியலாளர் விக்டர் ஷ்க்ளாவ்ஸ்கி. பரிச்சயநீக்கம் என்பது நாம் காணாத ஒரு புதுத் தன்மையில் நமது அனுபவங்களை மொழிவாயிலாக மாற்றித் தருவதாகும். ஆகவே வாசகன் இலக்கியத்தில் காண்பது நடப்புத்தன்மையை அல்லது யதார்த்தத்தை அல்ல. படைப்பு மொழியின் விசித்திரத்தையே அவன் காண்கிறான். ஆகவே இலக்கியம் என்பது சுய பிரக்ஞையுள்ள ஓர் ஊடகம். இப்படிப் பரிச்சயநீக்கம் செய்வதற்கு முக்கியமாக முன்னணிப்படுத்தல் (Foregrounding) என்னும் செயல் உதவுகிறது. அதாவது இலக்கியத் தில் செயல்படும் பலகூறுகளில் ஒன்றை முன்னணிப்படுத்தி அல்லது முக்கியப்படுத்திக் காட்டுதல். ரஷ்ய வடிவவியலாளர்கள் உருவாக்கிய முக்கியமான கருத்து, ஓர் இலக்கியப் பிரதி என்பது ஒரு மொழிக்கட்டுமானம் (Linguistic Construct) தவிர வேறொன்று மில்லை என்பது.

நவீன இலக்கிய விமரிசனம் முழுவதுமே இவர்களது பார்வையிலிருந்துதான் உருவாகிறது என்று சொல்வதில் தவறொன்றுமில்லை. எனினும் உள்ளடக்கத்தைப் பற்றி அறவே கவலைப்படாத இவர்களது தன்மை மார்க்சியக் குழுவினரால் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டது. இதனால் ஸ்டாலின் காலத்து ரஷ்யாவிலிருந்து இவர்கள் பலவேறு நாடுகளுக்குப் பெயர்ந்தனர். ஆயினும் அவர்களது தத்துவ அடிப்படை சிறப்பானது. காரணம், இலக்கியத்தின் செம்மையான வடிவத்தை, அதன் அயன்மைத் தன்மை போன்றவற்றை நோக்குவது என்பதே இறுதியில் அப் பிரதியின் கருத்தியல் பற்றிய ஆய்வாக மாறிவிடுகிறது. அப்படி மாறும்போது அது அமைப்பிய விமரிசனம், பெண்ணிய விமரிசனம், தகர்ப்பமைப்பு (Deconstruction), நவவரலாற்றியம் (Neo Historicism) எனப்பல பெயர்கள் பெறுகிறது.

அமெரிக்கப் புதுவிமரிசனம் இதிலிருந்து முற்றிலும் வேறான தொரு பாதையில் சென்றது. தனிப்பிரதிகளை ஆய்வுசெய்து அவற்றில் காணப்படும் உத்திகளைத் தனிமைப்படுத்துவதாக அவர்களதுமுறை அமைந்தது. 1940 முதல் 1960 வ்ரை அது பல்கலைக் கழகங்களை ஆட்சிசெய்தது என்றே கூறலாம். கிளெந்த் புறூக்ஸ், ஆர்.பி. பிளாக்மர், ஆலன்டேட், ஜான் குரோ ரேன்சம் முதலானோர் இவ்வியக்கத்தின் தலைமக்கள். பிரதியை ஆராய்வது பற்றி ஐ.ஏ. ரிச்சட்ஸ் கூறிய கருத்துகளையும், இலக்கியம் பற்றி டி.எஸ். எலியட் கருத்துகளையும் உள்வாங்கி, இவ்வியக்கம் வளர்ந்தது. எந்த இலக்கியப் பிரதியையும் ஒரு தனித்த, தன்னிச்சையான அமைப்பாகக் கருதி ஆராய வேண்டும் என்பது இவ்வணுகுமுறை.
புதுத்திறனாய்வாளர்கள் சிக்கலான தன்னுணர்ச்சிக்கவிதைகளை எடுத்து விமரிசன ஆய்வு செய்தனர். கீட்ஸ், ஜான் டன் போன்றோர் எழுதிய கவிதைகளை அவர்கள் ஆய்வு செய்த முறை வியப்பூட்டும். கவிதைப் பிரதியிலுள்ள சொற்களை மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளவேண்டுமே தவிர, ஆசிரியனின் வாழ்க்கை வரலாற்றுச் செய்திகள், ஆசிரியனின் நோக்கம், வரலாற்றுச்சூழல் போன்ற விஷயங்களுக்குச் செல்லவேகூடாது என்பது இவர்களது கருத்து. கவிதையை ஆராயும்போது முன் யூகங்கள், பதிவுகள் ஆகியவற்றை அறவே விட்டுவிட்டுக் கவிதையில் மட்டுமே கவனம்செலுத்தவேண்டும்.

இது ஒரு பொதுமை நோக்காகத்தான் பார்வைக்குத் தென்படுகி றது. ஆனால் உண்மையில் புதுத்திறனாய்வாளர்கள் பொதுமை நோக்காளர்களாக இல்லை என்பது வேடிக்கையானது. அவர்கள் தாங்கள் விரும்பக்கூடிய இலக்கிய குணங்களைக் கொண்ட இலக்கியப் படைப்புகளை மட்டுமே விமரிசனத்திற்குத் தேர்ந்தெ டுத்தார்கள். ஜான் டன் போன்ற மீமெய்யியல் கவிஞர்களின் அறிவார்த்தச் சிக்கல் தன்மையையும் ரொமாண்டிக் கவிஞர்களின் உணர்ச்சிச் சிக்கல்தன்மையையும் அவர்கள் பாராட்டினார்கள். இலக்கியத்தில் அவர்கள் பாராட்டிய குணங்களாக முரண்தன்மை, குறிப்புமுரண், பல்பொருள் தன்மை, இழுவிசை போன்ற பலவற்றைச் சொல்ல லாம்.

இக்குணங்களின் எதிர்முனைகள் தமக்குள் கொள்ளும் சமனப் படுத்தலில் கவிதையின் தனித்தன்மை இருப்பதாகக் கருதி னார்கள். ஒருவகையில் அவர்கள் கூறுவதைத் தொகுத்து, “இலக்கியம் என்பது வாழ்க்கையின் முரண்பாடுகளைச் சிக்கலான முறையில் உணர்த்துவது, ஆனால் அது ஒன்றுக்கொன்று இசைவமைதியற்ற முரண்கூறுகளைச் சமனப்படுத்துகிறது” என நாம் வரையறுக்கலாம். இலக்கியத்தின் சிக்கலான, முரண்பா டான, குழப்பமான தன்மைகளை அவர்கள் ஆதரித்தனர். அதேசமயம் இறுதியாக அதில் ஓர் ஒழுங்கும் இசைவமைதியும் சீர்மையும் பொருளும் உண்டு எனவும் கருதினர்.

இதற்குப் பிறகு தோன்றிய அமெரிக்கத்திறனாய்வு புதுத்திறனாய் வுக்கு எதிராக மாறியது. முக்கியமாக இலக்கியஆசிரியன் ஒரு படைப்பை ஒழுங்குபடுத்தி அமைக்கமுடியும் என்னும் கருத்து கடும் எதிர்ப்புக்குள் ளாயிற்று.

இக்கட்டுரையில் இலக்கியப் படைப்பு, பிரதி (text) என்றே பலமுறையும் ஆளப்பட்டுள்ளது. ஆகவே இச்சொல் பற்றி ஒரு சில வார்த்தைகள். அண்மைக்கால இலக்கியத் திறனாய்வில் ‘இலக்கியப் படைப்பு’ ‘நூல்’ போன்ற சொற்களைப் புறக்கணித்து, பிரதி (பனுவல்) என்னும் சொல்லையே ஆள்கின்றனர். சசூரின் மொழியியல் கருத்துகளும், ரஷ்ய வடிவவியலாளர் கருத்துகளும் தோன்றியபோதே பிரதி என்ற சொல் திறனாய்வில் புகுந்துவிட் டது. காரணம், ‘படைப்பு’ என்னும் சொல், பல முன்சிந்தனைகளைத் தன்னுள் அடக்கியிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட ஆசிரியனின் நோக்கு, ஆசிரியக்கட்டுப்பாடு, அவனது நோக்கிலான அழகியல் முழுமை போன்ற பல கருத்துக்கள் இச்சொல்லில் தொக்கி நிற்கின்றன. நவீன இலக்கியக் கொள்கை ஆசிரியனைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. வாசகனுடைய நோக்கில் என்ன நிகழ்கி றது என்பதே முக்கியம்.

இரண்டாவதாக, இலக்கியம் என்பதைப் பிற பிரதிகளிலிருந்து வேறுபடுத்தி, முன்னுரிமைப்படுத்தி, அதற்குத் தனித்தன்மை இருப்பதுபோலக் காட்டுகிறது ‘படைப்பு’ என்னும் சொல். ஆனால் இக்கால நோக்கில் பிரதி என்பது பலவகையான எழுத்து அல்லது உருக்களையும் குறிக்கிறது. திரைப்படம், நிழற்படங்கள், ஆவணங்கள், பதிவுகள், விளம்பரங்கள்…எல்லாமே பிரதிகள்தான். நாம் ‘வாசிக்கக்கூடிய’ எதுவும் பிரதியாகிறது. உலகமே ஒரு பிரதிதான். ஆகவே நாம் எந்தப்பொருளுக்கும் பிரதித்துவத் தை(Textuality)-அதாவது ‘வாசிக்கும் தன்மையை’ வலியுறுத்த முடி யும். நாம் ‘ஊடுபிரதித்துவம்’ (Intertextuality) என்பதை வலியுறுத் தும்போது பிரதி என்னும் கருத்து இன்னும் கூடுதல் பரிமாணத் தைப் பெறுகிறது.

இலக்கியம் தன்னளவில் நிறைவுபெற்ற, ஒரு தனித்தன்மை வாய்ந்த பொருள் என்பதை இன்னும் பலரால் ஏற்க முடிவ தில்லை. ஆகவே இக்கருத்து அழகியல் சார்ந்த அணுகுமுறை எனக் கருதப்பட்டதோடு, பிற அணுகுமுறை சார்ந்தவர்களால் எதிர்க்கவும் பட்டது. இலக்கியத்தை ஆவணமாகப் பார்த்தவர்கள், “இலக்கியம் சமுதாயத்திற்காகவே” என்னும் கருத்தை முன்வைத் தனர். இப்படி ஏற்பட்ட மோதல்தான் “கலை கலைக்காகவே” “கலை வாழ்க்கைக்காகவே” என்று வருணிக்கப்படுகிறது. ஒரு பொருளைச் செம்மையாக, அழகாகச் செய்வதே அதை நன்கு பயன்படுத்தத் தானே? ஆகவே இவ்விருநோக்குகளுக்கும் இடையே பெரிய முரண் எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை.

தகவலியல் நோக்கில் மார்ஷல் மெக்லூகன் இதை அழகாக ஒரு தொடரில் வெளிப்படுத்தியிருக்கிறார்: Medium is the Message. அதாவது வடிவம் வேறு பொருள் வேறு அல்ல. இரண்டுமே ஒன்றுதான். வடிவத்தை மாற்றும்போது, அதன் செய்தியும்-அதாவது உள்ளடக் கமும் மாறிப்போகிறது.

ஒரு ஆசிரியன் அல்லது படைப்பாளி, ஏதேனும் ஆழமான விஷயங்களை-அனுபவங்களை வெளிப்படுத்தவேண்டும் என்ற நோக்கினை அண்மைக்கால இலக்கிய விமரிசனம் புறக்கணிக் கிறது. அமைப்புவாதம் வந்த பிறகு ஒரு பிரதிக்கு ஆசிரியரே மூல காரணம் என்ற நோக்கும் மாறிவிட்டது. (இதைச் சில விமரிசகர்கள் “ஆசிரியனின் மரணம்” என்று குறிப்பிடுகிறார்கள். மேலும் இப்போது விமரிசனம், Critique என்பதாக மாறிவிட்டது. Critique என்பது, ஓர் இலக்கியப் பிரதி என்ன உணர்த்துகிறது என்னும் பகுப்பாய்வு மட்டுமல்ல, அப்பிரதியை உருவாக்க உதவிய அரசியல், சமூக, உளவியல் காரணங்கள் யாவை எனவும் ஆராய்வதாகும். அது மட்டுமல்ல, சில பிரதிகள் மட்டும் ஏன் விமரிசனத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றன, பிரதிக ளில் விமரிசனம் தான் விரும்பும் அர்த்தத்தினை எப்படிக் கண்டுபிடிக்க முனைகிறது என்பனவற்றையும் இது ஆராய்கிறது. இவையெல் லாம் சிக்கலான பிரச்சினைகள்.

நவீன இலக்கிய விமரிசனம் பலவகைகளில் பழைய விமரிசன முறைகளிலிருந்து மாறியிருக்கிறது. இதுவரை ஆசிரியர் என்ன கூறுகிறார் எனக் காண்பதே விமரிசனத்தின் முக்கியப் பார்வை யாக இருந்தது. (மாணவர்களுக்குத் தேர்வில்கூட, இக்கவிதையில் ஆசிரியர் என்ன கூறுகிறார் என்தே வழக்கமான கேள்வி). அழகியல் திறனாய்வு, புதுத்திறனாய்வு முறைகள் வந்தபோது, இந்த கவனம் பிரதியின்மீது குவிக்கப்பட்டது. (அதாவது இந்த நூல் என்ன சொல்கிறது, எதை உணர்த்துகிறது, எந்த உத்திகளைக் கையாள்கிறது, இதுபோல). ஆனால் நவீன விமரிசன முறைகள் வாசகன் எப்படிப் பிரதியில் தனது கருத்தைக் காண்கிறான் என்பதைப் பற்றியதாக அமைகிறது. அது மட்டுமல்ல, பிரதியின் அர்த்தமுண்டாக்கும் வழிகள் யாவும் கேள்விக்குள்ளாக்கப் படுகின் றன.

தமிழில் இன்னும் இப்போக்கு வேர்பிடிக்கவில்லை. எனினும் ஒருசிலரேனும் பிரதிகளில் காணப்படும் நிச்சயமின்மைகளையும் முரண்பாடுகளையும் ஆராய்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இன்னும் ஒருபடி மேலேசென்று விமரிசனத்தின் முரண்பாடுக ளையும் நிச்சயமின்மைகளையும் ஆராய்கிறார்கள். இதற்குத் திறனாய்வுக் கொள்கைகளின் வளர்ச்சி உதவுகிறது.

தமிழில் மிகவும் வேர்பிடித்த நோக்கு என மார்க்சிய விமரிசனத் தைச் சொல்லலாம். சாதாரணமாக, ஒரு விமரிசகன் ஒரு பிரதியைப் பற்றி என்ன கூறுகிறான் என்பது அவன் என்ன அடிப்படை எண்ணங்களோடு பிரதிக்குள் நுழைகிறான் என்பதைப் பொறுத்திருக்கிறது. பல சமயங்களில் இந்த அடிப்படைகள், வெளிப்படச் சொல்லப் படாதவையாகவும், உறுதிப்பாடற்றவை யாகவும்கூட இருக்கின்றன. ஆனால் மார்க்சிய நிலைப்பாடு மிகவும் தெளிவானது. மார்க்சியத் தத்துவ அடிப்படையில் – மார்க் சிய வரலாற்று நோக்கில் பிரதி ஆராயப்படவேண்டும். வர்க்கப ்போராட்டம் என்னும் அடிப்படையை ஏற்கவேண்டும். நூலுக்கும் நூல் எழுந்த சமுதாயத்தின பொருளாதார அமைப்புக்குமான தொடர்பு நன்கு விளக்கப்படவேண்டும்.

அடிப்படைகள் இப்படித் தெளிவாக இருந்தாலும், எந்தநூலும் மார்க்சியத் திறனாய்வாளர்களிடையே ஒரேமாதிரி விமரிசன எதிர்வினையை உருவாக்கவில்லை. மார்க்சியம் என்ற அரசியல் செயல்முறை இன்று அழிந்துவிட்டதாக முதலாளித்துவநாடுகள் பிரச்சாரம் செய்தாலும் மார்க்சிய இலக்கியவிமரிசனம் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

ஒரு பண்படாத மார்க்சிய விமரிசகன், இலக்கியம் சார்ந்த கலைகள் அனைத்தையுமே புறக்கணிக்கக்கூடும். நடுத்தரவர்க்க எழுத்தாளர்கள், நடுத்தரவர்க்கத்தின் பிரச்சினைகளையும் மனோ பாவங்களையும் வெளிப்படுத்தும் இந்த எழுத்துகள் சமூகத்திற்கு என்ன பயன் விளைவிக்கும் என்று கருதக்கூடும். ஆயினும் இப்படிப்பட்ட விமரிசனங்கள் 1930களுக்குப் பின்னர் வெளிப் படுத்தப் பட்டதில்லை. உண்மையில் மார்க்சிய விமரிசகர்களுக்குக் கலையின் மீது அளவற்ற மரியாதை இருப்பதைக் கண்டிருக்கி றோம். எழுத்தாளன் விலகிநின்று தன் சமூகத்தை நோக்கி, அதில் காணப்படும் குறைபாடுகளை எடுத்துணர்த்தக் கலையைப் பயன்படுத்த மார்க்சியம் வ்ழியமைத்துத் தந்திருக்கிறது.

பெரும்பாலும் பழங்கால மார்க்சியத்திறனாய்வுகள், வரலாற்றுச் சான்றுகள் வாயிலாக இலக்கியம் எழுந்த காலத்தை மீட்டுரு வாக்கி, அக்கால இலக்கியம் எந்த அளவுக்கு அந்தச் சமூக யதார்த்தத்தின் புரிந்துகொள்ளலாகவும், வெளிப்பாடாகவும் அமைந் திருக்கிறது என்பதைக் காண்பதாக அமைந்தன. மார்க்சியத்திற்கு மிகப்பிடித்தமான கொள்கையாக யதார்த்தவாதமும் பிடித்த இலக்கிய வகையாக நாவலும இருந்துவந்துள்ளன. ஜார்ஜ் லூகாச் முதல் கைலாசபதி வரை இந்த மனப்பாங்கினைக் காண இயலும். ஏனெனில் நாவல் சமூகத்தின் ஒரு முழுமையான சித்திரத்தை அளிக்கவல்லது என்பது கருத்து. ரேமண்ட் வில்லியம்ஸின் டிக்கன்ஸ் முதல் லாரன்ஸ் வரை ஆங்கில நாவல் (1970) என்னும் படைப்பு இம்மாதிரியான விமரிசனங்களில் குறிப்பிடத் தக்கது.

மார்க்சிய விமரிசனத்தின் உடனடி அக்கறை லோகாயதமான பொருளியல் நிலை என்றாலும், சமூகத்தில் கலையின் பணி பற்றியும் பிரதிகளின் கருத்தியல் பற்றியும் மார்க்சியர்கள் காட்டிய அக்கறை பிரதானமானது. அமைப்பியம் வந்த பிறகு அது இந்தக் கேள்விகளை இன்னும் ஆழமாக எழுப்பியது. மரபுசார்ந்த மார்க்சிய இலக்கிய விமரிசனம், பிரதிகளின் முழுமை, அழகியல் சீர்மை இவற்றை வலியுறுத்தியே வந்தது. அமைப்பியம் வந்தபிறகு பிரதியின் செயற்கைத்தன்மை, கட்டமைக்கப்பட்ட தன்மை என்பது வலியுறுத்தப்பட்டது. ஒரு பிரதியின் இயல்பு, பணி பற்றிய கேள்விகளை அமைப்பியம் எழுப்பியதால் அண்மைக்கால மார்க்சியம் அவற்றை ஜீரணித்துக்கொண்டு முன்னேற வேண்டியதாயிற்று.

லூயி அல்தூசரும் பியர் மாஷரியும் மிகமுக்கியமான இருபதாம் நூற்றாண்டு மார்க்சிய அமைப்பிய விமரிசகர்கள். மாஷரி, ஒரு பிரதியிலுள்ள இடைவெளிகளைக் கண்டு, அவற்றின் வாயிலாக வாசகனிடமிருந்தும், தனக்குத் தானேயும் பிரதி என்னென்ன வற்றை மறைக்க முயலுகிறது என்பதைக் கண்டறியவேண்டும் என்று வலியுறுத்தினார். அல்தூசர், பிரதிகளை முழுமையற்றவை, அவற்றின் கருத்துருவங்கள் முரண்பாடுகளுக்குள் சிக்கிக் கொள்வதால் சுய முரண்பாடுள்ளவை என்று காண்கிறார்.

கருத்தியல் என்பது “நமது சிந்தனைகளைக் கட்டமைக்கும்-நாம் உலகைப் புரிந்துகொள்ளவும் விளக்கவும் பயன்படுத்தும் – நம்பிக் கைகள், சிந்தனைமுறைகள், கருத்துகள் ஆகியவற்றைக் குறிக்கும் ஒருசொல்” எனலாம். ஓர் அரசியல்/பொருளாதார ஒழுங்கமைவின் நம்பிக்கைகள் மற்றும் சிந்தனைகளின் கட்டமைவு என்றும் சொல்லலாம். மார்க்சிய நோக்கின்படி எந்த ஒரு காலத்திலும், மனிதனுடைய புரிந்துகொள்ளல்-அவனது அறிவு என்பது அவன் காலத்துக் கருத்தியலால் கட்டமைக்கப்படுகிறது. உதாரணமாக இடைக்காலத்தில் சமயநம்பிக்கைகள், விதிக்கொள்கை, மறுபிறப்பு போன்ற கொள்கைகள் அடங்கிய கருத்துருவம் மேலோங்கியிருந் ததால் அவற்றின் வழியே நமது முன்னோர்களின் சிந்தனை கட்டமைக்கப்பட்டது. இன்றைக்கு இந்திய மக்களின் சிந்தனை அமெரிக்க வழிப்பட்ட முதலாளித்துவ, வணிகச் சிந்தனையாக மாறியிருக்கிறது. பொருளாதாரம் அடிக்கட்டுமானம் என்றும் கருத்தியல் மேற்கட்டுமானம் என்றும் பகுப்பது மார்க்சிய வழக்கம். அதாவது நாம் எந்தப் பொருளாதாரச் சூழலில் எந்த வர்க்கத்தில் பிறந்திருக்கிறோமோ அதன் ஒரு சிக்கலான வெளிப்பாடாகவே நமது சிந்தனைகள், நம்பிக்கைகள், மதிப்புகள் ஆகியவை அமைகின்றன என்பது கருத்து.

ஆனால் சமூகத்தில் பொதுவாக நிலவும் கருத்தியல், அதாவது ஆதிக்கக் கருத்தியல் சமூக நிலைமைகளை வெளிப்படுத்துவதாக அமையாமல், உண்மையான உறவுகளையும் ஆதிக்கத் தன்மைக ளையும் மறைக்கவே பயன்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால், கருத்தியல் ஆதிக்க வகுப்பினருக்குச் சாதகமாக இயங்குகிறது. ஆதிக்க வகுப்பினருக்குச் சார்பானவற்றையே எண்ணும் எண்ண மாக ஒடுக்கப்பட்டவர்களை ஆக்குகிறது. இருக்கும் சமூக உறவுகள் நல்லவை, நேர்மையானவை, பாகுபாடற்றவை என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதன் மூலம் அதனை எதிர்த்துப் போராடாமல் இருக்க ஏழை எளியவர்களை மூளைச்சலவை செய்கிறது. இதன் வாயிலாக ஒடுக்கப்பட்டவர்களின் ஒத்துழைப் புடனே அவர்களை ஆதிக்கத் திற்கு அடிமையாக்குகிறது.

அல்தூசர், கருத்துருவம் என்பது நமது சிந்தனைகளைக் கட்ட மைக்கும் சிந்தனைத் தொகுப்பு மட்டுமன்று, நமது பொதுப் புத்தியே அதுதான் என்கிறார். நாம் மொழியைக் கற்கும் இளங் குழந்தை நிலையிலேயே ‘சப்ஜெக்ட்’ (இச்சொல்லுக்கு ஒரு செயலைச் செய்யும் கர்த்தா, எழுவாய், குடிமகன், அடிமை எனப் பலபொருள்கள் உண்டு – அனைத்தையும் குறிப்பதாகவே அமைப் பிய விமரிசனம் இச்சொல்லை ஆள்கிறது.) ஆக்கப்பட்டு விடுகி றோம். கருத்தியல்தான் மொழி. அதுதான் நம்மை உருவாக்கி, நாம் தனித்த அடையாளம் கொண்ட மனிதர்கள் என நம்மை உணரவைக்கிறது. ஒருவகையில் சொன்னால் நாம் நமது கருத்தி யலைத் தேர்ந்தெடுப்பதில்லை. நமது கருத்தியல்தான் நம்மைத் தேர்ந்தெடுக்கிறது. (நமது பொருளாதார நிலையையோ, சமுதாயத் தையோ, பேசும் மொழியையோ தேர்ந்தெடுக்கும் உரிமை பிறப்பதற்கு முன் நமக்கு வழங்கப்படவில்லையே). மேலும் கருத்தியல் ஒரு சிந்தனைக்கட்டாக மட்டும் நிற்பதில்லை. அரசுக் கருவிகள் எனப்படும் சமூக நிறுவனங்கள், (குடும்பம், பள்ளி, சமூக அமைப்புகள், சட்டம்…) வாயிலாக அதற்கு ஒரு பருமையான இருப்பும் இருக்கிறது. மனித சப்ஜெக்டை (அடிமைக் குடிமகனாகிய தனிமனித கர்த்தாவை) உருவாக்குவதில் எல்லாச் சமூக நிறுவனங்களுக்கும் பங்கிருக்கிறது.

இலக்கியங்களில் கூறப்படும் சமூக நிறுவனங்களை ஆய்வதற்கு அல்தூசரின் கருத்துக்கள் மிகவும் உதவும். உதாரணமாக ஒரு நாவலில் திருமணம் என்னும் சமூக நிறுவனம் எப்படிச் சொல்லப்படுகிறது என ஆராயலாம். கலாச்சாரப் படிப்புக்கும் ஆய்வுக்கும் அல்தூசரின் கொடை மிகப்பெரியது.
பிரதிகளின் கருத்துருவம் முரண்பாடுகளுக்கும் இடர்ப்பாடுகளுக் கும் இடையில் சிக்கிக் கொள்வதால் ஆசிரியன் என்ற கருத்தை வைத்து அவற்றைத் தீர்க்கமுடியாது என்று சொல்கிறார் அல்தூசர். பூர்ஷ்வா கலாச்சாரத்தில் அடங்கியுள்ள முரண்பாடுகள், பிரச்சினைகள் இவற்றை நன்கு ஆராயந்து பார்ப்பதன் வாயிலாக, பிரதிகளில் காணப்படும் கருத்தியல் மதிப்புகள் எவ்விதம் முழுமையற்றவை, அல்லது போதாதவை, அல்லது சுயசிதைப்புச் செய்யக்கூடியவை என்பதையெல்லாம் உணரமுடியும். இலக்கியத் தை எதிர்மறையாகப் பார்க்கும் நோக்கு இது என்று தோன்றினா லும, இலக்கியத்தையும் வரலாற்றையும் துருவிநோக்கி, பிரதிக் கும் வெளியுலகிற்குமான தொடர்பை நிறுவவதில் மிகப் பயனுள்ளதாக இருக்கிறது.

இம்மாதிரித் திறனாய்வின் முக்கியப் பயன், இலக்கியப் பிரதிகள் வாழ்க்கையைப் பற்றியும் மனித இயல்பைப் பற்றியும் காலத்திற்கு அப்பாற்பட்ட என்றும் மாறா உண்மைகளை உணர்த்துபவை என்னும் எண்ணத்தைத் தகர்க்கிறது. ஒரு பிரதி ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு எப்படி உரியதாகிறது என்றும், அக்கால மனிதர்கள் எப்படித் தங்களைச் சுற்றியுள்ள உலகத்தை உணர்ந்துகொண்டார் கள் என்றும் காட்டுகிறது மார்க்சிய விமரிசனம்.

நேரிய மார்க்சிய ஈடுபாடுள்ள டெரி ஈகிள்டன், ஃபிரடெரிக் ஜேம்சன் போன்றவர்களின் விமரிசனங்கள் எப்போதும் ஒரு தீவிர அரசியல் மாற்றத்தைக் குறித்தே இயங்குகின்றன.

அதேசமயம், மார்க்சியர் அல்லாத பலர் இலக்கியப் பிரதிகளையும் சமூகத்தில் அவற்றின் பணியினையும் மறுவாசிப்பு செய்து மறுபரிசீலனைக்குட்படுத்துபவர்கள் இருக்கிறார்கள். இம்மாதிரிச் செய்யும்போது ஏறத்தாழப் பெண்ணியத்தின் நோக்கங்க்ளை ஒத்த நோக்கம் கொண்டதாக மார்க்சியப் பார்வை இயங்குகிறது. அமைப்பியவாதிகளும் தகர்ப்பமைப்புக்காரர்களும் சமூக, அரசி யல் பிரச்சினைகளில் ஈடுபட மறுக்கின்ற அதேசமயம், நவமார்க்சி யர்கள், பெண்ணிய வாதிகள், நவவரலாற்றியலாளர் ஆகியோர் ஓர் இலக்கியப் பிரதியில் உணர்த்தப்படும் ஒழுங்குணர்ச்சியின் விளைவாக ஏற்படும் அரசியல் பிரச்சினை களை எழுப்புகிறார்கள். மேலும் சமூகத்தைப் பொறுத்துத் தனிமனிதர்களின் நிலையை ஆராய்கிறார்கள்.
இதுவரை பார்த்தவற்றிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் திறனாய்வுப்போக்கு அடிப்படையில் இரு பிரிவுகளாகப் பிரிந்திருப் பதாகத் தெரிகிறது. ஒன்று, பிரதிகளை வரலாற்றிலிருந்து விலக்கி, தனியே நிறுத்திப்பார்க்கவேண்டும் என்ற ஆய்வு. வடிவவியல் ஆய்வுகள் யாவும் இந்த நிலைப்பாட்டை எடுக்கின் றன. இன்னொன்று, இலக்கியப் பிரதிகளை வரலாற்றுப் பின்புலத் திலே வைத்தே பார்க்கவேண்டும் என்ற ஆய்வு. இதைத்தான் மார்க்சியர்கள், நவவரலாற்றியலாளர்கள் யாவரும் பின்பற்றுகின் றனர்.

1943இல் டில்யார்டு என்னும் விமரிசகர், The Elizabethan World Picture என்னும் நூலில் இராணி எலிசபெத் காலத்தில் இலக்கியங்களில் சித்திரிக்கப்பட்ட உலகத்தைப் பற்றிய ஆய்வில் ஈடுபடுகிறார். அதில் அக்காலஉலகின் மனித நிறுவனங்களை மட்டுமல்லாமல். இயற்கை நிகழ்வுகளையும் ஒரு பிரபஞ்ச உலகஒழுங்கு நிர்வ கிக்கிறது என்னும் முடிவுக்கு வருகிறார். டில்யார்டு எங்கெல்லாம் பிரபஞ்ச ஒழுங்கினைக் கண்டாரோ அங்கெல்லாம் ஒழுங்கின்மை யைக் காணக்கூடியவர்கள்தான் நவவரலாற்றியலாளர்கள். பெண் கள், குழந்தைகள், குடியுரிமை அற்றவர்கள், வாக்குரிமை அற்ற வர்கள், ஏழைகள் போன்றவர்களின் கருத்துலகைப் பற்றி டில்யார்டின் நூல் எதுவுமே சொல்லவில்லை. ஒரு சில பெருமக் களுக்கே உரியதாகவே டில்யார்டு காட்டும் ஒழுங்கு அமைந் திருந்தது. அதைச் சுற்றிப் பிற மனிதர் இருக்குமிடங்களெல்லாம் ஒழுங்கின்மையே சூழ்ந்திருந்தது. ஆக, நவவரலாற்றியம் இலக்கி யத்தையும் வரலாற்றையும் மறுவாசிப்புக்கு உட்படுத்தி, ஒருசீர்மைத்தான உலகப் பார்வையைச் சீர்மையற்ற, விவாதக் களமாகப் பார்க்கிறது.

நவவரலாற்றியம் என்றால் என்ன? இந்தச் சொல் அமெரிக்கத் திறனாய்வாளர் ஸ்டீபன் கிரீன்பிளாட் என்பவரால் உருவாக்கப் பட்டது. 1980களின் தொடக்க்ததிலிருந்தே அமெரிக்கத் திறனாய் வாளர்கள் சிலர் இலக்கியப் படைப்புகளை அவற்றின் வரலாற்று, அரசியல் சூழல்களில் வைத்துப் பார்த்து, அவற்றை மறுபரிசீ லனை செய்ய வேண்டுமென்ற ஆவல் கொண்டார்கள். இதனைத்தான் நவவரலாற்றியம் என்று குறிப்பிட்டார் கிரீன்பிளாட்.

பிரிட்டிஷ் மார்க்சிய விமரிசகரான ரேமண்ட் வில்லியம்ஸ், இதனைப் போன்றதொரு அணுகுமுறையைப் பெருமளவு உருவாக்கினார். அதற்கு அவர் கலாச்சாரப் பொருள்முதல் வாதம் எனப் பெயர்கொடுத்தார். ஒரு பிரதிக்குள் அமையும் சொல்லாடல்கள் எப்படித் தங்களுக்குள் முரண்பட்ட கருத்தியல் நிலைப்பாடு களை உணர்த்துகின்றன என்று ஆராய்வது இது. வரலாற்றிலும் கொள்கை முறையிலும் அரசியல் முறையிலும் இலக்கியப் பிரதிகளைப் பொருத்திப் பார்த்து, அவற்றின் உட்குறிப்புகள் என்ன என்று ஆராய்வது, கலாச்சார உற்பத்திக்கான நிறுவனங்களோடு இலக்கியப் பிரதிக்கான உறவு என்ன என்று ஆராய்வது ஆகியவற்றை ஆராய்வது இம்முறை என்று சொல்லலாம். கலாச்சாரப் பொருள்முதல் வாதம் மார்க்சியக் கோட்பாட்டை அடிப்படையில் நம்புகிறது. இதேபோன்ற வரலாற்று அணுகு முறையை நவவரலாற்றியம் பின்பற்றினாலும் மார்க்சியப் பார்வையை அது கொள்வதில்லை. இதுதான் வேறுபாடு. மேலும் இந்த அணுகுமுறை ஆதிக்கத்திற்கு எதிர்ப்பு என்ற நிலைப் பாட்டை வெளிப்படையாகக் கொள்கிறது. நவவரலாற்றியம் ஆதிக்க எதிர்ப்பு என்பதைவிட, பிரதிகள் எப்படி அந்தந்தக் காலத்திற்கேற்ற பழமைத்தனமான கருத்தியல் நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தன என்பதை முதன்மைப்படுத்துகிறது.

நாம் செய்யும் வரலாற்று இடைவெளிகள் பற்றிய ஆய்வு அகவயப்பட்டது, புறவயப்பட்டதல்ல, அது இக்கால நிகழ்வுகள் அடிப்படையில் பழங்கால வரலாற்றில் நாம் கொள்ளும் ஆர்வத் தினால் கட்டியெழுப்பப்படுகிறது என்பது நவவரலாற்றியத்தின் அடிப்படை நிலைப்பாடு. டெரிடாவின் தகர்ப்பமைப்பு தத்துவ அருவப்படுத்தலுக்கு இட்டுச் செல்கிறது என்று கவலைப்பட்டவர் களுக்கு நவவரலாற்றியம் ஒரு திறப்பாக அமைந்தது. நவ வரலாற்றியர்களில் பிரதானமானவரான ஃபூக்கோ, மேற்குச் சமூகத்தில் சுயம் பற்றிய கருத்து எப்படிக் காலப்போக்கில் பரிணமித்து உருவாகி வந்திருக்கிறது என்பதை முக்கியமாக ஆராய்கிறார். மேற்குறிப்பிட்ட தாராளமனிதநேயவாதிகள் எப்போ துமே சுயத்தை நம்பக்கூடிய முழுமையான பருமையான யதார்த்தமாகவே பார்த்தனர். ஆனால் மனநோய், தண்டனை, பாலியல் தன்மை பற்றிய தமது நூல்களில் ஃபூக்கோ அறிவின் சிறப்பான பரப்புகளில் அல்லது சொல்லாடல் களங்களுக்குள் சுயம் எப்படிப் பலியாடாகியிருக்கிறது என்பதைக் கண்டிருக்கிறார். அதாவது வரலாற்றை மறுவாசிப்புச் செய்து, சுயத்தைப் பற்றிய ஓர் உறுதியற்ற எண்ணத்தையும், சமூகத்தில் நிலவும் ஆதிக்க உறவுகள் பற்றிய தொந்தரவு படுத்தும் நிலைப்பாட்டையும், உருவாக்கியிருக்கிறார் எனலாம்.

இதுவரை வரலாறு, ஒரு வசதியான, மனித இனம் முன்னேறு கிறது என்னும்அடிப்படை எண்ணம் கொண்ட, மனித சுயங்கள் வரலாற்றில் தன்னிச்சையாக ஈடுபடுகின்றன என்னும் நிலைப் பாடு கொண்ட சொற்கோவைகளை உருவாக்கின. ஃபூக்கோவின் வாசிப்பு இவை யாவற்றையும் மறுக்கிறது.

ஆகவே நவவரலாற்றியர்களுக்கு வரலாறு என்பது தேதிகள் குறித்த, போர்கள், சம்பவங்கள் குறித்த விஷயம் அல்ல. அரசியல் ஆதிக்கம், கருத்தியல், அவற்றை உடைத்தல் போன்றவை பற்றிய ஒன்று. பாதல் சர்க்காரின் மீதி சரித்திரம் என்னும் நாடகநூலில் இந்த நிலைப்பாடு தெளிவாக விளக்கப்படுவதைக் காணலாம்.

மேலே சொல்லாடல், சொற்கோவை என்னும் சொற்கள் ஆளப்பட்டன. ஓர் எடுத்துரைப்பில் (Narrative-அதாவது கதை, நாவல், சிறுகதை, கட்டுரை போன்ற எதுவும்) சொற்கோவை அல்லது சொல்லாடல் என்பது அதில் ஆளப்பட்டுள்ள மொழி யமைதி, இழைவமைதி ஆகியவற்றைக் குறிக்கிறது. அதாவது ஒரு பிரதி எப்படி எழுதப்பட்டுள்ளது என்ற முறையை-அதன் உள்ளடக்கத்தை அல்ல-இச்சொல் குறிக்கிறது.) ஆனால் அடிப் படையில் சொல்லாடல் என்பது மொழி எப்படி ஒழுங்குபடுத்தப் படுகிறது வகைபாடு செய்கிறது என்பதைப் பற்றியது. ஆகவே ஃபூக்கோ தனித்தனித் துறைகளில் (மருத்துவம், பொறியியல், உளவியல் போன்றவை) மொழி செயல்படும் விதத்தை இச் சொல் வாயிலாகக் குறிக்கிறார். உதாரணமாக, மருத்துவம், உளமருத்துவம், சட்டம் போன்ற துறைகளில் மனித சப்ஜெக்டைக் கட்டுப்படுத்தும் விதமான அவர்களை பயமுறுத்தி ஆதிக்கத்திற்கு அடங்கச் செய்யக்கூடிய சொற்கோவைகள் குறிப்பிட்ட நோக்கங்களுக்காகக் கையாளப்படுகின்றன. அதாவது, சமூக நிறுவனங்களுக்கேற்ற வகையில் மொழி குறிப்பிட்ட சில வகைகளில் மனிதர்களை இயங்கச் செய்யப் பயன் படுத்தப்படுகிறது.

ஆனால் சொற்கோவை அல்லது சொல்லாடல் என்பது ஆதிக்கக்களத்தில் ஆதிக்க வாதிகளுக்குச் சார்பாக மட்டுமே இயங்குகிறது என்று சொல்லமுடியாது. ஆதிக்கத்திற்கு எதிரான சொல்லாடலும் உண்டு. சுருக்கமாகச் சொன்னால் சொல்லாடல் என்பது இருப்பதை அப்படியே ஒப்புக்கொள்வதாக இருக்க முடியாது. வெளிப்படையாக ஆதிக்கம் சார்பான சொல்லாடலிலும் அதற்கெதிரான கருத்தியலை உடைய சொல்லாடல் உட் பொதிந்திருக்கிறது.

உதாரணமாக, ஷேக்ஸ்பியரின் சூறாவளி நாடகத்தில், பிராஸ்பரோ என்பவன் ஒரு தீவுக்குத் தலைவன்போலவே இருந்துவருகிறான். அவனுக்கு உதவி செய்ய எத்தனையோ ஆவிகள். காலிபன் என்பவனை அடக்கத் தனது மந்திர மொழியைப் பயன்படுத்துகிறான். காலிபனுக்குத் தனது மொழியைப் பேசக்கற்றுக் கொடுப்பவனும் அவன்தான். ஆனால் பேசக் கற்ற காலிபன் பிராஸ்பரோவைத் திட்ட மட்டுமே அதைப் பயன்படுத்துகிறான். ஆகவே பிராஸ்பரோ பயன்படுத்தும் காலனி யாதிக்க மொழியிலேயே அவனை எதிர்க்கும் அம்சமும், தனக்கு எதிரான மற்றது என்பதைப் பற்றிய அச்சமும் பொதிந்திருப்பதைக் காண்கிறோம்.
காலனியச் சொற்கோவைக் கொள்கை என்பது காலனியத்திலும் காலனியாதிக்கத்திலும் ஆளப்படும் சொல்லாடல் பற்றிய ஆய்வு. காலனியாதிக்கத்தின் சொல்லாடல் எவ்வாறு காலனியாதிக்கம் செய்வோருடைய அரசியல் பொருளியல் நிலைப்பாடுகளை மறைக்கிறது என்பதை நன்கு ஆராய்ந்துள்ளனர். காலனிய மொழியிலும் மேற்குறிப்பிட்ட அதே ஈரடித் தன்மை இருக்கிறது. ஏனெனில் அடிமைப்படுத்துவதும், அடிமையானோர் ஏற்றுக்கொள் வதும் ஒரே சொல்லாடலே.

பிற்காலனியவாதம், காலனியாதிக்கத்தினால் அடிமைப்பட்ட நாடுகளுக்குள் ஏற்பட்டுள்ள அரசியல், பொருளாதார, கலாச்சார, மாற்றங்களையும், அவற்றை எப்படி அம்மக்கள் எதிர்கொண் டார்கள் என்பதையும் பற்றியது. பிற்காலனியம் என்பதிலுள்ள பின் என்னும ஒட்டு, காலனியாதிக்கம் முடிவடைந்ததற்குப் பின்னால் என்று பொருள்படாது. மாறாக, காலனியாதிக்கம் தொடங்கிய பின்னால் என்று பொருள்படும். பல கலாச்சார விஷயங்கள் பற்றிப் பிற்காலனியக் கொள்கை கவலைப்படுகிறது. உதாரண மாக, அடிமை நாட்டு மொழிகள் மீது ஆதிக்கமொழிகளின் தாக்கம், தத்துவம் வரலாறு போன்றவற்றின் மீது ஐரோப்பிய/அமெரிக்கப் பெருஞ்சொல்லாடல்களின் ஆதிக்கம், காலனியக் கல்வி முறை யின் விளைவுகள், மேற்கத்திய அறிவுக்கும் ஆதிக்கத்திற்குமுள்ள தொடர்பு-இன்ன பிற. சுருக்கமாகச் சொன்னால், காலனியடிமை களான மக்களின் எதிர்வினைகள் பற்றிய ஆய்வு இது. ஆங்கில அடிமைகளான-மோகிகளான தமிழ் மக்களின்மீது தமிழ்க்கல்வி, தமிழ்ப்பள்ளிகள்கூட வேண்டாம் என்று சொல்லும் தமிழ்ச் சமுதாயத்தின்மீது எவ்வளவு தீவிரமாகக் காலனியம் இன்னும் ஆதிக்கம் செலுத்திவருகிறது என்பது பலகோணங்களில் ஆழமாக ஆராயப்படவேண்டிய ஒன்று.

“மற்றது” (The Other) என்னும் சொல் பின்னமைப்பியத்தில் விரிவும் ஆழமும் கொண்டது. தான் மறுக்கின்ற, தனக்குப் பிடிக்காத, தனக்கு எதிரான, தான் கண்டு பயப்படுகின்ற, தான் விலக்குகின்ற, தனக்கு நிழலாகத் தோற்றமளிக்கின்ற, தான் புரிந்துகொள்ள இயலாத…இதுபோன்ற எதுவும் “மற்றது” எனலாம். உதாரணமாக இனவாதம், கருப்பர்களைத் தங்களுக்கு அச்சம் தருபவர்களாகவும் அந்நியர்களாகவும் -அதாவது மற்றதாகப் பார்க்கிறது. இந்துத்துவ மும் இஸ்லாமிய அடிப்படைவாதமும் ஒருவர்க்கொருவரைத் தங்களை அச்சுறுத்துபவர்களாக-அதாவது “மற்றவர்க”ளாகப் பார்க் கின்றனர். ஆண்கள் பெண்களை “மற்றது” எனக்கருதுவதால்தான் அடிமைப்படுத்த முனைகின்றனர்.
இங்கெல்லாம் மொழி இருமை எதிர்வு முறையில், அதாவது கருப்பர்-வெள்ளையர், ஆண்-பெண், இந்து-முஸ்லிம், என்று செயல்படுவதைக் காணலாம். சொல்லாடல்தான் நம்மைக் கட்டுப்படுத்திப் பிரிக்கிறது, நம்மை இந்த உலகை ஆளவைக்கிறது என்பதை நினைவுபடுத்துகிறார். நாம் யாவரும் சொல்லாடல் களங்களாகவும் கருவிகளாகவும் அமைந்துவிடுகிறோம்.

1990களில் பின்னமைப்புவாதம், நவவரலாற்றியம் பற்றிய அக்கறை தமிழ்ச்சூழலில் சிற்றிலக்கிய உலகிலும் தலித்தியம் பெண்ணியம் போன்றவற்றைப் பேசியோர் இடையிலும் பிரதானமாயிற்று. பின்னமைப்பு என்பதோடு தகர்ப்பமைப்பு சிறிது குழப்பிக் கொள்ளவும் பட்டது. எனினும் தமிழ்ச் சூழலில் டெரிடாவை விட, லக்கானைவிட, ஃபூக்கோவும் லியோடார்டும், அதிகம் பேசப்பட்டுள்ளனர். ஓரளவு பூத்ரியேவின் கருத்துகளும் தகவற்சாதனத் துறையில் வைத்துப் பேசப்பட்டுள்ளன. பிற அமைப்பிய-பின்னமைப்பிய-நவவரலாற்றியர்கள் கருத்துகளைப் பற்றி எவரும் அதிக அக்கறைகாட்ட வில்லை.
இன்று இந்த நிலையில் தமிழ் விமரிசனம் வ்ந்து நிற்கிறது. தமிழ்த்துறைகள் இம்மாதிரிக் கொள்கைகளின் வரவில் அதிக ஆர்வம் காட்டவில்லை. சிற்றிதழ்களும் இப்போது ஆர்வம் குறைந்துள்ளன போல் தோன்றுகிறது. சமூகநோக்குச் சார்ந்த கொள்கைகள், மார்க்சியம் ஆகியவற்றில் தமிழ்த்துறையினருக்கும் மாணவருக்கும் ஆர்வம் ஏற்படுமாறு செய்ததில் வானமாம லைக்கும் அவர் உடனிருந்த குழுவினருக்கும் பங்குண்டு. பிறகு கைலாசபதி, சிவத்தம்பி போன்றோரின் தாக்கமும் ஏற்பட்டது. இந்த வரன்முறையான மார்க்சிய-சமூகவியல் பார்வையைத் தாண்டி நமது பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் தமிழிலக்கியம் பயிலும் ஒரு சில மாணவர்கள் இப்போது தலித்தியம், பெண்ணியம், பிற்காலனியம் போன்ற கொள்கை களிலும் ஆர்வம் காட்டிப் பயின்று வருவது மகிழ்ச்சியளிக்கிறது.

தமிழ்க்கல்வியுலகில் பல விமரிசனவகைகள் கொஞ்சம்கூடப் புகவேயில்லை. உதாரணமாக, நிகழ்விய-இருத்தலிய விமரிசனங் கள், வாசக எதிர்வினை விமரிசனங்கள் போன்றவை. சிலவகை விமரிசனங்கள் ஏற்படுமுன்னரே விபரீதமாக அவற்றுக்கு எதிரான கருத்துகள் பரப்பப்பட்டு விடுகின்றன. சான்றாக, உளப்பகுப்பாய்வு- குறிப்பாக ஃப்ராய்டிய, நவஃப்ராய்டிய விமரிசனங்கள். சிலவகை விமரிசனங்கள் மிகவிளிம்பில் இருக்கின்ற்ன. சான்று, மரபுசார்ந்த விமரிசனங்களில் தொன்ம விமரிசனமும், அண்மைக் கால விமரிசனங்களில் பிற்காலனிய விமரிசனமும்.

அரசியல் நிலைப்பாடு கொள்வோரில் தலித்தியம் பெரும்பாலும் பழைய மார்க்சிய நிலைப்பாடுகளையும் சில சமயங்களில் நவ வரலாற்றிய நிலைப்பாடுகளையும் எடுத்துள்ளது. பெண்ணிய அணுகுமுறை இம்மாதிரிக் கருத்துகளைப் பயன்படுத்திக்கொண்டு சரிவர வளரவில்லை. இனி எத்திசையில் தமிழ் விமரிசனம் செல்லும் என்பது இதுவரை வந்த கொள்கைகளை எவ்வளவு ஆர்வமாக மாணவர்கள் கற்கிறார்கள் என்பதையும், அவற்றை அவர்கள் பயன்படுத்தும் முறையையும் பொறுத்தது.

புதிய கொள்கைகள், அணுகுமுறைகளின் வரவையும் பொறுத்தது. பொதுவாகப் பல மாணவர்கள், இம்மாதிரிக் கொள்கைகளில் பயன்படுத்துகின்ற கலைச்சொற்களையும், மேற்கு நாட்டுத் தத்து வக் கருத்துகளையும் பார்த்து மருட்சியடைகின்றனர். இம்மருட்சி தேவையற்றது. பயிற்சி இவற்றிற்குப் பண்படுத்தும்.

மேற்குநாடுகளில் சுற்றுச்சூழல் அடிப்படையிலான விமரிசனம் வளர்ந்துவருகிறது. ஓரினப் பாலுறவு அடிப்படையிலான (கே, லெஸ்பியன்) விமரிசனங்களும் வளர்ந்துள்ளன. இவை இன்னும் தமிழில் வரவில்லை. இதற்குத் தமிழின் மரபுசார்ந்த மனப் பான்மை பெரிதும் காரணம். கருப்பின விமரிசனமும் ஆய்வும் அமெரிக்காவில் நன்கு வளர்ந்துள்ளன. நம் நாட்டு தலித் மக்கள் தங்களுக்கு ஒத்த இவ்வணுகுமுறையைப் பயன்படுத்திக்கொள்வது சிறப்பாக அமையும்.
—————–

 

திறனாய்வு