தமிழ்த் திரைப்படப் பாடல்கள்- ஒரு பார்வை

Music-e1339701935618-1024x707
திரைப்படப் பாடல்கள் எல்லாம் கவிதை என்று எத்தனையோ பேர்-கல்லூரிப் பேராசிரியர்கள், நன்கு கற்றவர்கள் உள்பட-நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு அவர்கள்மேல் தப்பில்லை. காலம் காலமாக நாம் இலக்கியத்தை-செய்யுள் வடிவில் எழுதப்பட்டதை எல்லாம் பாடல் என்றே சொல்லி வந்திருக்கிறோம். உதாரணமாக “இந்தச் சங்கப்பாடல் கடினமாக இருக்கிறது” என்போம்.

ஆனால் பாடல் வேறு, கவிதை வேறு. இது காலம்காலமாக-நான் ஏறத் தாழ இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகச் சொல்லிவரும் கருத்து. அது மட்டுமல்ல, செய்யுள் என்பதும் வேறுதான். ஒரு நூற்றி ஐம்பது ஆண்டுகள் முன்னால் இந்தப் பிரிவுகளுக்கெல்லாம் பெரிய வேறுபாடு இல்லை. ஆனால் ஆங்கிலக் கல்வி வளர்ந்து, ஆங்கில முறையைப் பின்பற்றி நாம் புதுக்கவிதை, மரபுக்கவிதை என்றெல்லாம் ஆளத்தொடங்கிய பிறகு, முன்புபோலப் பேசினால் அர்த்தமில்லை.

முதலில் செய்யுள் என்ற சொல். இதை நாம் உடன்பாடாகவோ (பாசிடிவாகவோ), எதிர்மறையாகவோ (நெகடிவாகவோ) எடுத்துக்கொள்ளலாம். செய்யுள் என்றால் செய்யப்பட்ட ஒன்று என்று அர்த்தம். அது கவிதையாகவும் இருக்கலாம், உரைநடையாகவும் இருக்கலாம், புதுக்கவிதையாகவும்கூட இருக்கலாம். ஆனால் பொதுவழக்கின்படி, யாப்பின்படி அமைந்த, கவிதையாகாமல் போய்விட்ட ஒன்றிற்குத்தான் செய்யுள் என்று பெயர்.

அண்ணன்  என்பவன்  தம்பிக்கு  மூத்தவன்

திண்ணை  என்பது தெருவிலே  உள்ளது

கண்ணன்  என்பவன்  கண்ணிரண்டு  உள்ளவன்

வெண்ணெய்  என்பது  பாலினில்  விளைவதே.

இது செய்யுள் என்பதற்கு பேராசிரியர் கைலாசபதி தந்த எடுத்துக்காட்டு. இதில் யாப்பு மிக நன்றாக அமைந்திருக்கிறது. ஆனால் இதைக் கவிதை என்று நமது நண்பர்கள் கருதமாட்டார்கள் என்பது நிச்சயம்!

கவிதை என்பது ஓர் அனுபவத்தை மனத்திற்குள் விதைத்துச் சிந்திக்கத் தூண்டுகின்ற ஒன்று. அது யாப்பில் அமைந்திருக்கலாம், யாப்பில் இல்லாமலும் இருக்கலாம். யாப்பில் இல்லாததைப் புதுக்கவிதை என்றும் மற்றதை மரபுக் கவிதை என்றும் சொல்லும் வழக்கம் ஏற்பட்டுவிட்டது. ஒரு மிகச் சிறிய கவிதை இதோ-

இருப்பதற்கென்றுதான்

வருகிறோம்

இல்லாமல்

போகிறோம்.

வருகிறோம்-போகிறோம் என்ற இருமை எதிர்வையும், இருப்பதற்கென்றுதான்-இல்லாமல் என்ற முரண்பாட்டையும் பாருங்கள். எவ்வளவு அற்புதமாகச் சொல்ல வந்ததைச் சொல்லிவிடுகிறது!

இந்த இரண்டிலிருந்தும் வேறுபட்டது பாட்டு. பாட்டு, இசை என்ற கைத்தடி இல்லாமல் நடக்கமுடியாது. ஸ்வரம் மாதா, லயம் பிதா என்பார்கள். ஸ்வரங்களால் ஆன ராகத்தைப் பாட்டு கொண்டிருக்கவேண்டும், லயம் என்ற தாளத்திற்கேற்ப அது நடக்கவேண்டும்-அதாவது பாடப்பட வேண்டும்.

கவிதை பாடப்படவேண்டிய அவசியம் இல்லாதது. கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக என்ற திருக்குறள் கவிதையை-இது நிச்சயம் கவிதை-எந்த ராகத்தில் பாடுவது? பாடுவதுதான் தேவையா? யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற சங்கக்கவிதையை எந்த ராகத்தில், எந்தத் தாளத்தில் பாடுவது? இவற்றைப் படித்து அனுபவிப்பது, உணர்வதுதான் முக்கியம்.

திரைப்படப் பாடல்கள் எல்லாம் பாட்டுகள்தான். பாட்டுகளில் வார்த்தை இல்லாத இடத்தை லாலாலாலா, ராராரீரீ, டபக் டபக்கு டபக்குதான், சிங்கிரி சிச்சான் சிச்சான் ங்ங்கொய்யா என்று எதையாவது போட்டு நிரப்பிவிடுவார்கள். பழைய பாகவதர்கள் என்றால் ஆலாபனையிலேயே இழுத்துவிடுவார்கள். ஆக, இசைக்காக, தாளத்துக்காக எழுதப்பட்டதைப் பாட்டு என்கிறோம். பழைய காலத் திலேயே ஜாலிலோ ஜிம்கானா டோலிலோ கும்கானா ஆளுங்கோ ரவுண்டானா அசந்துட்டா டஹல்தானா என்று திரைப்படப் பாட்டு எழுதியிருக்கிறார் தஞ்சை ராமையதாஸ்.

ஆகவே பாட்டு வேறு, செய்யுள் வேறு, கவிதை வேறு என்று தெரிந்து கொள்வது நல்லது. பாட்டு எழுதுபவர்களைக் கவிஞர்கள் என்று சொல்வது வழக்கமில்லை. லிரிசிஸ்டு என்பார்கள் ஆங்கிலத்தில். பொயட் என்று அந்தஸ்து தரமாட்டார்கள். நம் ஊரில்தான் பாட்டு எழுதுபவன் எல்லாருமே கவிஞன் என்று போட்டுக்கொள்கிறான்.

நாம் இப்போதெல்லாம் திரைப்படப் பாடல்களுடனே வாழ்ந்து திரைப் படப் பாடல்களுடனே சாகிறோம். குழந்தை பிறந்த சில நாட்களுக்குள்ளாகவே சினிமாப்பாடல் பழக்கமாகிவிடுகிறது.

பாட்டு கவிதை இல்லை என்று சொன்னதால் கெட்டது என்று அர்த்த மில்லை. நம் திருவையாற்றில், பிறகு சென்னையில் ஆண்டுக்கு ஒருமுறை பெரிய சங்கீதத் திருவிழா நடத்துகிறார்களே, எதற்கு? எல்லாம் தியாகராஜ சுவாமிகள் செய்த தெலுங்குக் கீர்த்தனைகளுக்கு (பாடல்களுக்கு)த்தான்.

அப்பர் சுவாமிகள், திருஞான சம்பந்தர் காலம் தொடங்கி, வள்ளலார் வரைக்கும் இறைவன்மீது பக்திப்பாடல்கள் பாடியிருக்கிறார்கள். வள்ளலார் கீர்த்தனைகளும் பாடியிருக்கிறார். பாரதியார் பாடல்கள் இயற்றியிருக்கிறார். பாரதி தாசன் இசையமுது இயற்றியிருக்கிறார். இவையெல்லாம் நல்ல பாட்டுகள் (அதாவது ஏதோ ஒரு இலட்சியத்தைக் கொண்டு அமைந்த பாடல்கள்) என்று சொல்லலாம். இலட்சியமில்லாத பாட்டுகளையும், பாட்டு எழுதுபவன் வாழ்க்கைக்குச் சம்பந்தம் இல்லாத பாட்டுகளையும் நான் மோசமான பாட்டுகள் என்பேன்.

வானம் எனக்கொரு போதிமரம்

நாளும் எனக்கது சேதி தரும்

ஆகா, என்ன அற்புதமான வரிகள், எவ்வளவு அற்புதமான கருத்து என்று பாராட்டத் தொடங்கிவிடுவீர்களே? இதை எழுதியவர் யாரென்று உங்களுக்குத் தெரியும்.

இது உண்மையான, இலட்சியப் பாட்டு என்றால், அந்தப் பாடலாசிரிய ருக்கு வானம் என்ற போதிமரம் நாளும் தந்த சேதி என்ன? கோடிகோடியாகக் குவித்துக்கொள், காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்பதா? இந்த ஜனங்கள் எல்லாம் முட்டாள்கள், நன்றாக இவர்களை எந்த உருவகத்தையாவது போட்டு ஏமாற்று என்பதா? அதனால்தான் இதுபோன்றவற்றைப் போலிப்பாட்டுகள், ஏமாற்றுப் பாட்டுகள், வணிகப்பாட்டுகள் என்கிறோம். அந்த நேரக் கவர்ச்சிதான் இதற்கெல் லாம் முக்கியம். அதற்குமேல் ஒன்றுமில்லை.

தமிழ்த் திரைப்படப் பாட்டுகளின் மிக முக்கியமான குணம், பெண்    அடிமைத்தனத்தை உருவாக்குவது. சிறு குழந்தை முதலாகவே திரைப்படப் பாடல்கள் மனத்தில் நம்மை அறியாமல் பதிந்து நம்மை ஆட்சிசெய்துகொண்டே இருப்பதால், பெண் அடிமைத்தனம்-அதாவது பெண்களை அடிமைகளாக நினைப்பது, இரண்டாந்தர மனிதர்களாக நினைப்பது என்ற பண்பு ஆண்களுக்கு இயல்பாகவே வந்துவிடுகிறது. பெண்களுக்குத் தங்கள் அடிமைத்தனத்தை இது இயல்பானதுதான் என்று ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை வந்துவிடுகிறது.

இதற்கு விதிவிலக்கான திரைப்படப்பாடல்கள் மிகக் குறைவு. ஒரு சதவீதம் தேறுவதுகூடக் கடினம். உதாரணத்திற்கு சில பாடல்களை நாம் பார்க்கலாம். நான் எங்கள் காலத்திலிருந்து (ஓர் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்னாலிருந்து) எங்களை பாதித்த-நல்ல இனிமையான பாடல்கள் என்று கருதப்பட்டவற்றிலிருந்து எடுத்துக்கொள்கிறேன்.

1968இல் வெளிவந்த ஒரு பாட்டு-நான் மலரோடு தனியாக ஏன் இங்கு வந்தேன், என் மகராணி உனக்காக ஓடோடி வந்தேன், நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்….என்று செல்வது. உங்களில் பலபேருக்குத் தெரியும் இது.

பலபேர் இது ஒரு நல்ல காதல்பாட்டு என்று நினைத்துக் கொண்டிருக் கிறார்கள். ஒரு காதலன் தன் காதலியைக் கேள்வி கேட்பது போலவும், காதலி அதற்கு விடை சொல்வதுபோலவும் அமைந்திருக்கிறது. காதலன் கேட்கிறான்-

நீ வருகின்ற வழிமீது யார் உன்னைக் கண்டார்?

உன் வளைகொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?

உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?

உன் வடிவான இதழ்மீது பரிசென்ன தந்தார்?

(இதையெல்லாம் இந்தக் காதலனே செய்ததாக எடுத்துக்கொள்ளவேண்டுமாம், இது மரபாம்.) அந்தக் காவியக் காதலி அவ்வளவு சுரணை உள்ளவள் அல்ல. அவள் சற்றும் கோபமில்லாமல் சொல்கிறாள்-

பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத

நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட

என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக

நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற

என்கிறாள். உண்மை கூறவாம், நினைத்துப்பாருங்கள், எவ்வளவு மோசம் என்று.

இன்னும் பழங்காலப் பாட்டு ஒன்று.

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேசவேண்டும்

நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும்

பெண்ணுக்குச் சிந்திப்பதற்கும் தனக்கென்று ஓர் உலகத்தை உருவாக்கிக் கொள்வதற்கும் உரிமை கொஞ்சம்கூட இல்லையா?

முதல்வராய் இருந்த ஒரு நடிகரின் பாட்டுகளில் பெண் அடிமைத்தனம் மிகப் பச்சையாகவே இருக்கும். ஒரு திரைப்படத்தில் வரும் “இப்படித்தான் இருக்கவேண்டும் பொம்பளே-இங்கிலீசு படிச்சாலும் இன்பத்தமிழ் நாட்டிலே” என்ற பாட்டைக் கொஞ்சம் கேட்டுப்பாருங்கள். அல்லது “புத்தம் புதிய புத்தகமே உன்னைப் புரட்டிப் பார்க்கும் புலவன் நான்” என்ற பாட்டைக் கேட்டுப்பாருங்கள். இதில் புரட்டிப்பார்ப்பது, பள்ளியறை என்ற சிலேடை (இரண்டு அர்த்தம் தொனிக்கும் சொற்கள்) வேறு.

இப்படி புத்தகம், கித்தகம் என்ற நல்ல சொற்கள்கூட இல்லாமல்போய், இப்போது சினிமாப் பாட்டுகளில் பெண்ணைக் கட்டையாக்கி, ஃபிகர் ஆக்கிவிட்டார்கள். சற்றும் கூச்சமில்லாமல் நாட்டுக்கட்டே நாட்டுக்கட்டே என்று பெண்ணை விளிக்கிறான் ஆண். பெண்ணும் சற்றும் தயக்கமில்லாமல் அதை ஏற்றுக் கொள்கிறாள். போய் உண்மையாகவே கிராமத்தில் விளித்துப்பாருங்கள். விளைவு என்னவென்று தெரியும்.

ஆனால் இதையெல்லாம் பொது இடத்தில்- ஏற்றுக்கொள்ளும், பாடும் மனம்-திருவிழாவில் ரிகார்டு போடும் மனப்பான்மை எப்படி உண் டாயிற்று? அதுதான் ஈவ்டீசிங் முதலிய கொடுமைகளுக்குக் காரணம். இப்படிப் பாடல் எழுதுபவர்களை என்ன செய்ய முடியும்? அவர்களாகத் திருந்தினால்தான் உண்டு.

சமூகம்