தமிழ்த் தேசியம் என ஒன்று சாத்தியமா? ஒரு பாமரனின் எண்ணங்கள்

thamil-desiyam3

கல்லூரியில் படிக்கும் காலத்தில் (1960களின் இடைப்பகுதி) எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் திராவிட தேசியம்தான். அப்போது தமிழ்த் தேசியம் என்ற தொடர் இப்போதுள்ள அர்த்தத்தில் வழக்கில் இருந்ததா என்று தெரியவில்லை. ஆனால் தமிழ் தேசியக் கட்சி என்ற ஒன்றை ஈ.வெ.கி.சம்பத் தொடங்கியபோது நாங்கள் மகிழ்ச்சிதான் அடைந்தோம். காரணம், அவர் ஒரு நேர்மையான தலைவர் என்பது எங்கள் கணிப்பு.  திராவிடநாடு இல்லை என்பது கொஞ்ச நாளிலேயே தெரிந்துவிட்ட பிறகு, தமிழ்நாடுதான் எங்கள் சிந்தனையில் முதன்மையான அக்கறையாக நின்றது. தமிழ் நாட்டில் உள்ள அனைவரும்-ஜாதி வேறுபாடின்றிப் படிக்கவேண்டும், முன்னேற வேண்டும், தமிழகம் தொழில்வளர்ச்சி கொண்ட, எல்லாரும் வேலை வாய்ப்புப் பெறுகின்ற ஒரு நாடாகத் திகழவேண்டும், தமிழ்நாட்டில் வறுமை இருக்கலாகாது என்பது போன்ற ஆசைகள்தான் இருந்தன.

ஏறத்தாழ 1970 வாக்கில் சிப்காட் திட்டங்கள் தொடங்கப்பட்டன. பெரிய, சிறிய தொழிலகங்கள் கொண்ட அகன்ற நிலப்பகுதிகளில் வந்த தொழிற்பேட்டைகள் அவை. பெரும்பாலும் தமிழ்நாட்டு எல்லைகளிலேதான் சிப்காட்டுகள் அமைக்கப்பட்டன. உதாரணமாக இராணிப்பேட்டை (ஆந்திர எல்லை), ஓசூர் (கருநாடக எல்லை) போன்ற இடங்கள். பிஎச்இஎல் போன்றவற்றின் புதிய தொழிற்பேட்டைகளும் அப்படித்தான். ஏன் எல்லைப்புறங்களில் அமைக்கிறார்கள் இவற்றை என்று எங்களுக்குக் கவலையாக இருந்தது. அயல்மாநிலக்காரர்கள் பிழைக்கவேண்டும் என்பதற்காகவே தமிழகஅரசு தொழில்துறை நடத்துகிறதா?

அந்தக் காலத்திலேயே வேலூர் சிஎம்சி மருத்துவமனை மலையாளிகள் கையில் இருந்தது. சென்னையின் நிலையைச் சொல்லவே வேண்டியதில்லை. தென்சென்னை பணக்காரர்கள் வாழும் இடம் என்றும், வடசென்னை ஏழைகள் வாழும் இடம் என்பதும் பொதுவான கருத்து. வடசென்னையில் தமிழர்கள்தான் ஏழைகளாக, கூலிகளாக, மீன்பிடிப்பவர்களாக என்றெல்லாம் இருக்கிறார்கள். அவர்கள் வாழும் பகுதிகள் இன்றும் சேரிகளாக இருக்கின்றன. ஆனால் வட சென்னையில் இன்றும் தம்புசெட்டித்தெரு, லிங்கிசெட்டித்தெரு போன்றவற்றிற்குச் சென்று பாருங்கள். வடநாட்டு சேட்டுகளும், மார்வாடிகளும், குஜராத்திகளும், பிறவட மாநிலங்களின் பணக்காரர்களும் மட்டுமே கொழிக்கும் இடம் அது.

இவர்களைத் தவிர, ஏற்கெனவே நான் சொல்லி வருகிற மாதிரி, தமிழகம் ஏறத்தாழ எழுநூறு ஆண்டுகளாக அடிமைப்பட்டிருந்ததால்,இங்கு ஊருக்கு ஊர் தெலுங்கர்கள், கன்னடர்கள் வாழ்கிறார்கள். மலையாளிகளின் வரவு பழங்காலத்தில் குறைவுதான். டீக்கடை என்றாலே நாயர் என்பது பிரசித்தம். அங்கங்கே மலையாள ஜோசியர்கள், மந்திரவாதிகள் இருப்பார்கள். இப்போது எழுபது வருடங்களாகத்தான் கேரளத்தின் பெரிய படையெடுப்பு. முதலில் சினிமாத்துறை, பிறகு பார்த்தால் எத்தனை கேரள நகைக்கடைகள், எத்தனை முத்தூட், மணப்புரம் அடகுக்கடைகள், எவ்வளவு நிறுவனங்கள் அவர்களிடம்? இதுபோலச் சென்னையில் இருக்கும் தெலுங்குச் செட்டிகளின் கடைகளைக் கணக்கெடுத்துப் பாருங்கள். இன்று தமிழ்நாட்டின் பொருளாதாரம் தமிழர்களிடம் இல்லை. மலையாளிகளிடமும் தெலுங்கர்களிடமும் வடநாட்டவர்களிடமும் சிக்கியிருக்கிறது. இது ஒரு புறம்.

thamil-naagarigam2

இப்போது தமிழ் தேசியத்திற்கு வருவோம். தேசம் என்பது சமூகவியலில் ஒரு மொழி, ஒரு கலாச்சாரம் கொண்ட ஓர் இனம் வாழும் நாடு என்று சொல்லப்படுகிறது. இப்போது தமிழ்நாட்டில் அப்படிப்பட்ட நிலை உண்டா? தமிழ்நாட்டில் பூர்விகக் காலத்திலிருந்து வாழும் தமிழர்கள் மட்டுமே இருக்கவேண்டும், வந்தேறியவர்களெல்லாம் சென்றுவிட வேண்டும் என்று சொல்லமுடியுமா? தமிழ் தேசியம் பேசுவதில் தலையாய பிரச்சினை இதுதான். இதேபோன்ற பிரச்சினை வேறுவடிவத்தில் இந்தியாவுக்குச் சுதந்திரம் பெற்ற போது ஏற்பட்டது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளை மட்டும் பிரித்துக்கொண்டு பாகிஸ்தானாகப்- புதிய நாடாக மாற்றினார்கள். அங்கிருந்த இந்துக்களையும் சீக்கியர்களையும் கொடுமைப்படுத்தித் துரத்தினார்கள். ஆனால் இந்தியாவிலிருந்து நாம் முஸ்லிம்களை அப்படிக் கொடுமைப்படுத்தித் துரத்தியிருக்க முடியமா? அவர்கள்தான் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஊருக்கு ஊர் இருக்கிறார்களே? எங்கள் நாடு எங்கள் மொழி இதுதான் என்று சொந்தம் கொண்டாடுபவர்களை என்னதான் செய்வது?

thamil-desiyam1
இந்தப் பிரச்சினைக்குத்தான் காந்தி உயிரையும் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒரே இனம் வாழும் நாடு (பாகிஸ்தான் போன்றவை) பிழைத்துக் கொள்வது எளிது. பல இனங்கள் வாழும் தேசம் (இந்தியா), பலவற்றில் விட்டுக் கொடுத்துத்தான் போகவேண்டியிருக்கிறது. இதுதான் அன்றிலிருந்து இன்றுவரை நிலைமை. இதேநிலைதான் வேறுவடிவத்தில் தமிழகத்தில் இருக்கிறது. இங்கு இனம் என்பதை மதம் என்று அர்த்தப்படுத்தாமல், பிற திராவிட மொழிகள் பேசும் மக்கள் என்று கொண்டு பாருங்கள். கன்னட நாட்டில் பெங்களூர், மைசூர் தவிர கிராமப்புறங்களில் தமிழர்கள் இல்லை. இருப்பினும் மிகமிகச் சிறுபான்மை. ஆந்திர நாட்டிலும் அப்படித்தான். கேரளத்திலும் அப்படித்தான். அதனால்தான் காவிரிப்பிரச்சினை ஒருசமயம் சூடானபோது, தமிழர்களைக் கன்னட நாட்டிலிருந்து பத்தாண்டுகளுக்கு முன்பு (பாகிஸ்தான் இந்தியர்களைச் செய்ததுபோல) அடித்துத் துரத்தினார்கள். ஆனால் தமிழகத்தில் ஊருக்கு ஊர் இவர்கள் எல்லாரும் இருக்கிறார்கள். ஆகவே “பல இனங்கள் வாழும் தேசம் பலவற்றில் விட்டுக்கொடுத்துத்தான் போகவேண்டியிருக்கிறது. இதுதான் அன்றிலிருந்து இன்றுவரை தமிழகத்தின் நிலை.”

தமிழ்தேசியம் தனித்தமிழ் இயக்கத்திலிருந்தும் திராவிட இயக்கத்திலிருந்தும் தோன்றியது என்று விக்கிபீடியா முதலான அண்மைக்காலப் பதிவுகள் வரை குறிப்பிடுகின்றன. திராவிட இயக்கத்தின் சுயநல நோக்கம் முன்பே பதிவு செய்யப்பட்டது. தனித்தமிழ் இயக்கம் என்பது சாத்தியமா?

thamil-naagarigam1

தமிழ்த் தேசியம் என்ற சொல்லில் இருக்கும் தேசம் என்ற சொல்லே வடமொழிச்சொல்தான். வடமொழிக் கலப்பு ஆதிகாலத்திலிருந்து, நமது ஆதிநூலான தொல்காப்பியத்திலிருந்து இருக்கிறது. தொல்காப்பியம் செய்யுள் எழுதுவதற்கான சொற்களில் ஒன்றாக வடசொல்லைக் குறிப்பிடுகிறது. அவ்வாறானால் அந்த அளவு வடமொழியாளர்கள் தமிழகத்தில் பழங்காலத்திலேயே கலந்துவிட்டார்கள் என்பதுதானே அர்த்தம்?

ஆனால், பிற திராவிடமொழிகளின் தனித்தன்மை வடமொழியால் அழிந்து போன மாதிரி தமிழின் தனித்தன்மை அழியவில்லை என்பது ஆறுதலான விஷயம். ஆனால் இன்று தனித்தமிழைக் கையாள முடியாது.

முதல் காரணம், உலகத்தின் அறிவுப்பெருக்கம், ஒரு மணிக்கு ஆயிரக்கணக்கான சொற்களின், தொடர்களின் தேவையை வேண்டி நிற்கிறது. தனித் தமிழ்வாதிகள், ஆயிரம் நாட்களுக்கு ஒரு சொல்வீதம் தமிழில் சேர்க்கிறார்கள். அது பெரும்பாலும் பலராலும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை, அல்லது ஏற்கப்படப் பலகாலம் ஆகிறது. மொழியின் முன்னேற்றத்திற்கு மிகப் பெரிய தடை தனித்தமிழ். தொல்காப்பியரே, இளங்கோவடிகளே, சங்கப்புலவர்களே தனித் தமிழைக் கையாளவில்லை, வடமொழிக் கலப்பை ஏற்றுக்கொண்டார்கள் என்றால் நாம் எம்மாத்திரம்?

மொழிக்கு அடிப்படை தொடர் அமைப்பே தவிரச் சொற்கள் அல்ல என்பது மொழியியல் கற்றவர்களுக்குத் தெரியும். ஆனால் தனித்தமிழ் இயக்கம் தொடரமைப்பைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. சொற்களைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறது.

thamil-desiyam2
இதை விளக்க ஓர் உதாரணம் சொல்லலாம். “உடுது துரடத்தைக் கருண்டது”* என்று நான் ஒரு “மடத்தனமான” தொடரை உருவாக்குகிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்குப் பொருள் புரியவில்லை என்றாலும் தமிழ்த்தொடரின் அமைப்பில் இந்த மூன்று சொற்களும் உள்ளன என்று சொல்லிவிடுவீர்கள். காரணம் என்ன? முதல் சொல்லில் வரும் து-விகுதி, இறுதிச் சொல்லில் வரும் து-விகுதியோடு பொருந்தி ஏதோ அஃறிணை எழுவாய் “உடுது” என்பதான தோற்றத்தை உருவாக்குகிறது. இரண்டாவது சொல்லில் வரும் இரண்டாம் வேற்றுமைக்கான ஐ-விகுதியும், புணர்ச்சி வல்லொற்றும் (க்), தமிழுக்கே உரியவை. இரண்டாம் வேற்றுமைக்குப் பின் வல்லெழுத்து மிகும். மூன்றாவது சொல், ஓர் அஃறிணை வினைமுற்று போன்று காட்சியளிக்கிறது. (கருண்டது என்பது சுருண்டது என்பதுபோல இருக்கிறது.) ஆக, இந்த வாக்கியத்திற்குச் சொல்லளவில் பொருள் இல்லையென்றாலும், தொடரமைப்பு தமிழ் என்று உங்களுக்குப் புரிந்துவிடும். மொழி என்பது இம் மாதிரி, தொடரமைப்பில் உள்ளதே அன்றி சொற்களில் அல்ல. (இங்கு கையாளப்பட்ட மூன்று சொற்களுக்கும் அர்த்தமே இல்லை.) அதனால்தான் இடைக்காலத்தில் வெறும் சமஸ்கிருதச் சொற்களை இட்டு, ஆனால் தமிழின் வாக்கிய அமைப்பில் மணிப்பிரவாளம் என்ற ஒரு தனிநடையை உருவாக்க முடிந்தது.

இன்று நம்மிடையே முஸ்லிம்கள், கிறித்துவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் பெயரெல்லாம் வட எழுத்துகள் மிகுதியாகக் கொண்டவையாக உள்ளன. வட எழுத்துகளை விலக்கவேண்டாம், சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் அவற்றுக்கு மட்டும் கிரந்த வடிவங்கள் (ஜ, ஷ, ஹ, ஸ, க்ஷ) தமிழில் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இவற்றை விலக்கமுடியாது.

ஜார்ஜ் என்பதை சார்ச்சு என்று எழுதினால் கேலிக்கூத்துதான். நான் என் “பத்திரிகை தலையங்கம்” என்ற நூலில் இருபதாண்டுகளுக்கு முன்பே காட்டிய உதாரணம் போல, ரஷீத் என்பதை கிரந்த எழுத்துகளை நீக்கி எழுதினால் “இரசீது” என்றாகும். சொல் முக்கியமா, அர்த்தம் முக்கியமா என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். தனித்தமிழ் அர்த்தத்தைவிடச் சொற்களை முதன்மையாகக் கருதுகிறது.

நாட்டார் வழக்காறுகளிலும் வடசொற்கள் சேர்ந்துதான் இருக்கின்றன. அவற்றை விலக்க முடியாது. அதுபோலத்தான் தமிழகத்தில் சேர்ந்துவிட்ட பிற மாநில, பிற மொழிக்காரர்களையும் விலக்குவது சாத்தியமல்ல. நாம் செய்ய வேண்டியது, தமிழர்களை, தமிழ்மொழியை முன்னேற்றவேண்டும் என்பதைத் தான்.

தமிழகம் இன்று தனி நாடாவதும் இயலாது. “நாடா வளத்தன நாடு” என்றார் வள்ளுவர். இது தேசத்திற்கான அவரது வரையறை. ஒரு நாட்டில் பெரும்பாலும் எல்லா வளமும் இருக்க வேண்டும். தண்ணீர் முதலாக எல்லாவற்றிற்கும் பிறரிடம் கையேந்தும் நாம் (பிறரை) நாடாத வளம் கொண்டவர்களாக எப்படி இருக்க முடியும்?

இது உலகமயமாக்கல் காலம். அமெரிக்கக் கம்பெனிகள் நம் சிற்றூர்களில் வந்து கிளைகள் திறக்கின்றன. பொருளாதாரப் பிரதேசங்கள் (எகனாமிக் சோன்ஸ்) என்ற பெயரில் நிலங்கள் அயல்நாட்டவர்க்கும், அயல் மாநிலத்த வர்க்கும் எவ்வளவோ தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டுவிட்டன. மீதி இருக்கும் நிலம், விவசாயத்துக்கும் வேண்டாம், நிலத்தடி நீருக்கும் வேண்டாம் என்று “நகர்”களாக “பிளாட்” போட்டு விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. தமிழ்நாட்டின் தமிழர் அமைப்புகள் அரசுமயமாக்கப்படுகின்றன. (உதாரணம், பச்சையப்பன் அறக்கட்டளை, அண்ணாமலைச் செட்டியார் நிறுவனங்கள்). ஆனால் தமிழை அறவே அகற்றும், வெறுக்கும் தனியாரது பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள் முதலியன தமிழ்நாட்டு அரசினாலேயே வரவேற்கப்படுகின்றன.

இந்த லட்சணத்தில் என்னய்யா தமிழ்த் தேசியம்? இவற்றையெல்லாம் மாற்றுவதற்கான போராட்டங்களை உருவாக்கத்தான் தமிழ் தேசியம் பேசுகிறோம் என்றால், போராட்டக் காலங்கள் முடிந்து விட்டன. ஆனானப்பட்ட மார்க்சியர்களே (பொதுவுடைமைக்காரர்களே) பெரிய அளவிலான தொழிலாளர், விவசாயிகள் போராட்டங்களை இனிமேல் நடத்தமுடியுமா என்று கவலைப்படுகிறார்கள். அவரவர் வாய்க்கும் வயிற்றுக்கும் மட்டுமே போராட்டம் நடத்திப் பிழைக்கவேண்டிய காலமாக இது மாறிவிட்டது. வயிற்றுப் பிழைப்புக்காகப் படிக்கும் மொழியையே தன் தாய்மொழியாக ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறான் தமிழன். ஆங்கிலத்தையே தாய்மொழியாக ஏற்றுக்கொண்டால் என்ன என்று என்னிடம் எத்தனையோ ஆங்கிலப் பேராசிரியர்கள் சண்டை போட்டிருக்கிறார்கள்.

மக்கள் ஒன்றாக இருந்தால் மிக எளிதில் தீர்த்துவிடக்கூடிய தமிழ்நாட்டுப் பிரச்சினைகள்கூட இன்று பிரம்மாண்ட உருவெடுத்து மத்திய அரசிடம் கையேந்தும் (அல்லது “கடிதம்” ஏந்தும்) பிரச்சினைகளாக மாறிவிட்டன. முல்லைப் பெரியாறு, காவிரிநீர், மீனவர் பிரச்சினை, கச்சத்தீவு போன்ற அனைத்தும் தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்தால் மிக எளிதில் தீர்க்கக்கூடியவை. இம்மாதிரிப் பிரச்சினைகளில் அயல் மாநிலங்களில் நடிகர்கள்கூடப் பங்கேற்று மக்களுக்கு உற்சாகம் அளிக்கிறார்கள். ஆனால் வாய்-வயிறு போராட்டத்தைத் தாண்டிச் சிந்திக்கும் தமிழ்மக்கள், இம்மாதிரிப் பொதுப் பிரச்சினைகளுக்குக் குரல் எழுப்பிப் போராடக்கூடியவர்கள் தமிழ்நாட்டில் எங்கிருக்கிறார்கள் என்பதுதான் தெரியவில்லை. இங்கு காலங்காலமாக வாழும் தெலுங்கர்களும் கன்னடர்களும் மலையாளிகளும் இந்த நாட்டின் மூலவளங்களை அனுபவிப்பதற்கு மட்டுமே தயாராக இருக்கிறார்களே தவிரப் போராடுவதற்குத் தயாராக இல்லை. அது தான் நமக்கும் தமிழ்த் தேசியத்தின் அடிப்படைப் பிரச்சினையாக இருக்கிறது.

thamil-desiyam4
இன்று தமிழகம் தன்னளவில் மட்டுமே ஒரு தேசமாக வாழும் பண்பை இழந்துவிட்டது. தனித் தமிழ்நாட்டினால் தீர்க்கமுடியாத ஏராளமான சிக்கல்கள் இன்று உள்ளன.

அவ்வாறானால் இனி நாம் செய்யக்கூடியது என்ன? அமெரிக்காவில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாநிலங்கள் இருக்கின்றன. ஆனால் அவை தன்னாட்சி பெற்றவை. (நமது தமிழ்ச் சிந்தனையின்படி “மாநில சுயாட்சி” பெற்றவை.) அமெரிக்கா சம்பந்தப்பட்ட ஒட்டுமொத்தப் பிரச்சினைகளுக்கு மட்டுமே வாஷிங்டனின் வெள்ளை மாளிகை அரசியல். பிற யாவும், அந்தந்த மாநிலங்களினால் தீர்த்துக் கொள்ளப்படுகின்றன. இம்மாதிரி மாநிலசுயாட்சி இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் தேவை. இந்தியாவுக்குப் பொதுவான இராணுவம், அயலகத்துறை, பொதுப்பொருளாதாரம், நதிகள் உட்பட்ட நில-நீர் அமைப்புகள், கல்வி போன்றவை மைய அரசிடம் இருக்கலாம், பிறதுறைகள் யாவும் மாநில அரசுகளிடமே இருக்க வேண்டும். அந்தந்த மாநிலத்தில் அந்தந்த மொழி மட்டுமே ஆட்சிமொழியாக இருக்கவேண்டும்,

பிற மாநிலங்களுக்கோ, மைய அரசுக்கோ தொடர்பு கொள்ளுதல் இந்த எந்திர (மொழிபெயர்ப்பு)க் காலத்தில் ஒரு பெரிய விஷயமே அல்ல. இதற்குக் கூடப் பயன்படாவிட்டால் மொழிபெயர்ப்புத் துறைதான் எதற்கு?

நாம் சுதந்திரம் பெற்றபோதே இங்கிலாந்தின் அரசியல் அமைப்பையும் நீதிமுறை அமைப்பையும் ஏற்றுப் பெரிய தவறு செய்துவிட்டோம் என்பதை வி.ஆர். கிருஷ்ணய்யர் உட்பட்ட சிந்தனையாளர்கள் அடிக்கடி எடுத்துக்காட்டியிருக்கிறார்கள். அமெரிக்கா போன்ற நாடுகளின் ஃபெடரல் அமைப்பினை ஏற்றிருந்தால் இந்தியாவின் பிரச்சினைகள் எத்தனையோ எளிதாகத் தீர்ந்தி ருக்கும்.

இப்போதே சர்வதேச அளவிலான புள்ளிவிவரங்கள் தமிழ் அழிகின்ற மொழி என்றுதான் குறிப்பிடுகின்றன. மேற்கண்டமாதிரிச் சில அடிப்படை மாற்றங்களைச் செய்தால் எதிர்காலத்தில் தமிழ்நாடு வாழும், தமிழ்மொழி வாழும் என்று எதிர்பார்க்கலாம். இல்லையென்றால் சந்தேகந்தான்.

சமூகம்