நம் பண்பாட்டை அறிவோம்! – கேள்வி பதில் பகுதி – 7

1378158449993
கேள்வி: தமிழ்நாட்டில் பட்டிமன்றங்கள் பல நடக்கின்றன. அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: 
பட்டிமன்றம் போன்ற பாணியில் இலக்கிய விவாதங்களை நடத்துவது இந்திய மொழிகள், கலாச்சாரங்கள் பலவற்றிலும் உண்டு. குறிப்பாக, உருது, இந்தி போன்ற மொழிகளில் இதை நன்றாக நடத்தி வந்திருக்கிறார்கள். தமிழகத்தின் பட்டிமன்றங்கள் சற்றே வேறுபட்டவை, விசித்திரமானவை. ஒன்று, இது திராவிடக் கட்சிகளால் ஆரம்பித்து, ஆதரிக்கப்பட்டது- ஓர் அரசியல் விளைவு என்பது.
ஆரம்பத்தில் பட்டிமன்றம் பெரிய நன்மையாகவே இருந்தது. சாதாரண மக்கள் பேசும் உரிமை பரவலாக இல்லாத ஒரு நாட்டில், பட்டிமன்றம் ஒரு ஜனநாயக அமைப்பாகவே- பலருக்கும் பேசும் வாய்ப்புத் தருகின்ற அமைப்பாகவே முதலில் செயல்பட்டது. யாரோ முன்பின் தெரியாதவர்கள்-வெவ்வேறு ஊர்களைச் சேர்ந்தவர்கள்- வந்து தங்கள் கருத்துகளை மேடையில் வெளிப்படுத்துவது ஒரு ஜனநாயக நடைமுறையைப் பிரபலப்படுத்தும் விஷயமாகவே பார்க்கப்பட வேண்டும். இன்றுள்ள அரட்டை அரங்கம் போன்றவை முதலாக நீயா-நானா வரைகூட அப்படித்தான்.
இப்போது பட்டி மன்றம் அவ்வளவாகப் பிரபலமாக இல்லை. எண்பது தொண்ணூறுகளிலிருந்த வரவேற்பு இப்போது அவற்றிற்கு இல்லை. யாரோ ஒரு சிலர்-பாப்பையா, லியோனி போன்றவர்கள் பழம் புகழில் குளிர்காய்ந்து வருகிறார்கள் என்பதுதான் உண்மை. அதற்கு பதிலாக வேறு நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் வந்துவிட்டன. பட்டிமன்றம் தொலைக்காட்சி வருவதற்கு முன்பு மிகப் பிரபலம் அடைந்திருந்த ஒன்று.

இதுவும்கூட ஆரம்பத்தில் ஒருமாதிரியாக இலக்கியக் களமாகத்தான் தொடங்கியது. பலர், பட்டிமன்றத்தின் முதல் தலைப்பே “கற்பில் சிறந்தவள் கண்ணகியா-மாதவியா” என்று கூறுவார்கள்.

ஆனால் பிற்காலத்தில் இது வெறும் காட்சி ஆகிவிட்டது. செயற்கையான தலைப்புகள், அலங்காரப் பேச்சுமுறை, வெறும் நகைச்சுவைக் களஞ்சியமாக-நகைச்சுவைகளின் தொகுப்பாக ஆக்குதல்-கைதட்டல் வாங்குவதற்காகவே பேசுதல்-கருத்துகளுக்கு முக்கியத்துவமின்மை போன்ற தன்மைகள் அவற்றின் இலக்கியப் பண்பையும் விவாதத் தன்மையையும் இல்லாமல் செய்து கேளிக்கை ஆக்கி விட்டன. நான் முதலிலிருந்தே பட்டிமன்றத்தை எதிர்த்தவன். அதற்குக் காரணம், அதன் கோமாளித்தனமோ செயற்கைத்தன்மையோ கூட அல்ல. எந்தப் பிரச்சினையையும் அது நோக்கும் தன்மைதான்.

பட்டிமன்றம், எந்தப் பிரச்சினையையும் (இலக்கியம், சமூகம் சார்ந்த எதுவா யினும்) இரண்டு எதிரெதிர் முனைகளாக- அமைப்புவாதத்தில் துருவ எதிர்வுகள் அல்லது இருமை எதிர்வுகள் (binary opposites என்று சொல்வார்கள்-அப்படிப் பகுத்துப் பார்க்கிறது. இது ஒரு கோளாறான பார்வை. உதாரணமாக நன்மை-தீமை என்று இரண்டு எதிரெதிர் முனைகளில் சமுதாயத்தில் காணும் எல்லாவற்றையும் அடக்கிவிட முடியுமா?  வெள்ளை-கருப்பு என்ற இருமையில் எல்லாமே வந்துவிடுமா? இடையில் எத்தனை விதமான சாம்பல்நிறச் சாயைகள் இருக்கின்றன? இதுவா-அதுவா என்று பார்ப்பதே தவறான முறை. ஏனென்றால் இதுவும் அல்லாமல் அதுவும் அல்லாமல் அவற்றிற்கு உள்ளேயோ வெளியேயோ ஏராளமான நிலைப்பாடுகள் உண்டு. பட்டிமன்றத்தின் அடிப்படையே இரண்டு அணிகள், ஒரு தலைவர். இரண்டு அணிகள் இரண்டு எதிர்முனைகளை எடுத்து வாதிடுகின்றன. ஆனால் விஷயமே இந்த இரண்டு எதிர்முனைகளுக்கும் இடையில்தான் இருக்கிறது.

அதனால் அறிவைக் குறுக்குதல், எளிமைப்படுத்திப் பிரச்சினைகளை நோக்குதல் என்ற அடிப்படைத் தவறுகள் பட்டிமன்றத்தில் ஏற்பட்டுவிடுகின்றன. இதனால் அது வரவேற்கத்தக்கதல்ல என்பது என் அபிப்பிராயம்.

கேள்வி: நடிக நடிகையர்கள் அரசியலில் பெரிய தலைவர்கள் ஆகின்றார்களே, அது சரிதானா?

பதில்: ஜனநாயகம் என்றால் மக்கள் ஆட்சி. மக்கள் எல்லாருக்கும் அந்த ஆட்சியில் பங்கேற்கச் சரிசமமான உரிமை உண்டு என்பதுதான் அதன் பொருள். நடிகர்களும் நடிகைகளும் மக்கள்தானே? அந்த வகையில் அவர்களும் தேர்தல் நடைமுறையில் பங்கேற்கவோ கட்சிகள் வைக்கவோ தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்படவோ நாட்டை ஆளவோ உரிமை உண்டு என்பதை நாம் மறுப்பதற்கில்லை. அயல்நாடுகளிலும் இப்படி நடிக நடிகையர் தலைவர்கள் ஆகியிருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம்.

ஆனால் நடிக நடிகையர் பங்கேற்பதில் ஒரு பெரிய ஆதாயம் அவர்களுக்கு இருக்கிறது. தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு இன்று பரவலான ஒரு விளம்பரம்-அல்லது பங்கேற்பவர்களைப் பற்றிய ‘பிம்பம்’(இமேஜ்) ஒன்று தேவையாக இருக்கிறது. பழங்காலத்திலும் இன்றும் பலருக்குச் சமூகத் தொண்டின் வாயிலாகவோ, சமூக அக்கறை சார்ந்த உழைப்பின் வாயிலாகவோ, பெரிய பதவிகள் வாயிலாகவோ அந்த பிம்பம் ஓரளவுக்கு ஏற்படுகிறது. சென்ற நூற்றாண்டின் மத்தியில் பலர் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் என்ற பிம்பத்தினாலேயே தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். (நான் காமராஜர் போன்ற பெரிய தலைவர்களைப் பற்றிக்கூடச் சொல்ல வரவில்லை. பல ஊர்களில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட கட்சி காங்கிரஸ், அதில் இருந்தவர்கள் என்ற காரணத்தினாலேயே பல பஸ் முதலாளிகளும் பணக்காரர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.)

சினிமா நடிகர்களுக்கும் நடிகையர்களுக்கும் இந்த பிம்பம் ஏற்கெனவே தயாராக, கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. மக்கள் அவர்களைத் திரையிலும் விளம்பரங்களிலும் போஸ்டர்களிலும் பார்த்துப் பார்த்து அவர்களைக் குடும்பத்தில் ஒருவராக நினைக்கத் தொடங்கிவிடுகிறார்கள். இந்த பிம்பத்தை அவர்கள் எளிதாகப் பயன்படுத்திக்கொண்டு தேர்தலில் வெற்றிபெற்றுவிட முடிகிறது. ஒரு தொகுதியில் யாரோ ஒரு குப்புசாமி நிற்பதற்கும் ஒரு நடிகர் நிற்பதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. இது சமமற்ற போட்டி. நடிகர் ஏற்கெனவே முக்கால்வாசி தூரம் ஓடி வெல்லும் நிலையில் இருக்கிறார். எதிர்ப்பவரோ ஆரம்பத்திலிருந்து ஓடியாக வேண்டும். எனவே நடிகர்கள் தங்களுக்கு உரியதல்லாத ஆதாயத்தை அடைகிறார்கள். அது அவர்கள் தொழிலினால் கிடைத்தது. ஒரு எழுத்தருக்கோ விவசாயிக்கோ அதிகாரிக்கோ தொழில்ரீதியாகக் கிடைக்காத விளம்பரம் திரைப்படத் துறையில் கிடைக்கிறது. திரைப்படமும் ஒரு தொழில்தானே? இப்படிப்பட்ட முன் தயாரித்த விளம்பரங்களைப் பயன்படுத்திக் கொள்வது தவறு என்று நான் நினைக்கிறேன்.

மறுபடியும், தமிழ்நாட்டில் இன்னும் ஒரு கேவலம் இருக்கிறது. இது நடிக நடிகையர்களுக்குத் திரைப்படத் துறையில் அளிக்கின்ற பட்டம். இதை யார் உற்பத்தி செய்கிறார்கள் என்பதே நமக்குத் தெரிவதில்லை (மக்கள் எந்தப் பொதுக் கூட்டத்திலும் அல்லது அமைப்பிலும் வழங்கியதில்லை). எந்தப் புரட்சியையும் பார்க்காமலே, பங்கேற்காமலே புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி, எந்த இராணுவத்தையும் கண்ணாலும் காணாமலே தளபதி, இளைய தளபதி, கேப்டன் போன்ற பட்டங்கள். இவையெல்லாம் நடிகர்களின் பிம்பங்களை ஊதிப் பெருக்குகின்றன. மேலும் காமிரா என்பது ஒரு பொய் சொல்லும் கருவி என்பதையே அறியாத மக்களுக்கு சினிமாவில் முன் வைக்கப்பட்ட கருத்தெல்லாம் உண்மை என்று தோன்றுகிறது. சில பெயர்கள்கூட பிம்பத்தை உருவாக்குகின்றன. ஒரு நடிகர் திருச்சிக்குத் தான் படித்த கல்லூரிக்கு வந்தபோது மாவீரன் என்ற அடைமொழியோடு போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அந்தச் சரித்திரப் பெயருக்குரியவர் மாவீரன்தான். ஆனால், அந்தப் பெயரை உடைய நடிகரும் மாவீரன் ஆகிவிடுவாரா?

இது தமிழகத்தில் மட்டுமே உள்ள கேவலம். பிற நாடுகளில் ரீகன் ரீகன்தான். ராஜ்கபூர் ராஜ்கபூர்தான். மாவீரன் ரீகனோ புரட்சிச் சிங்கம் ராஜ்கபூரோ அல்ல. ஒரே விதிவிலக்கு ஆந்திராதான். அங்கேதான் கிருஷ்ணபகவானாகவும் இராமனாகவும் நடித்த என்.டி.ஆரின் பிம்பத்தை நிஜவாழ்க்ககையிலும் நம்பி வணங்கி ஓட்டுப்போட்டனர். உண்மையில் எந்தக் கடவுளாவது வந்து தேர்தலில் நிற்க முடியுமா என்ற சிறிய சிந்தனைகூட அவர்களுக்கு இல்லை.

இது அவரவர்களோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. என்டிஆருக்குப் பிறகு அவருடைய மகனும் அரசியலில் தந்தையின் பிம்பத்திலேயே வெற்றிபெற்று விட முடியும். எம்ஜிஆருக்குப் பிறகு அவருடைய வாரிசுகள்கூட ஆட்சிசெய்யமுடியும்.

எல்லாவற்றிற்கும் மேலாக நடிக நடிகையர் அவர்கள் துறையில்- நடிப்பில்-வேண்டுமானால் திறன் உடையவர்களாக இருக்கலாம் (இதையும் உறுதிப்படச் சொல்லமுடியாது). ஆளுவதற்கு அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? வேண்டுமென்றே கட்டமைக்கப்பட்ட சினிமாக் காட்சிகளில் தவிர, நிஜமாகவே சமூகத்தைப் பற்றிய அக்கறையை எங்கேயாவது வெளிப்படுத்தியிருக்கிறார்களா? சமூகத்திற்கு அவர்களுடைய பங்களிப்பு என்ன? எந்தச் சமூகப் போராட்டத்திலாவது ஈடுபட்டார்களா என்பது பற்றியெல்லாம் மக்கள் யோசிக்க வேண்டும்.

கேள்வி பதில்