நம் பண்பாட்டை அறிவோம்! – கேள்வி பதில் பகுதி – 8

pongal_22
கே. நாட்டுப் பற்று, தேசத்துரோகம்-இந்தச் சொற்கள் இப்போதெல்லாம் அரசியல் வாதிகள் பேச்சிலும் ஊடகங்களிலும் மிகுதியாகக் கையாளப்படுகின்றன. இவற்றுக்கு விளக்கம் தேவை. (சிவானந்தம், கடலுர்)

முதலில் நாம் தெளிவு படுத்திக் கொள்ளவேண்டியது நாடு வேறு, அரசு வேறு, அரசாங்கம் வேறு. ஆங்கிலத்தில் நாடு என்பதை country என்பார்கள். தேசத்தை nation என்பார்கள். அரசு என்பது state. அரசாங்கம் என்பது government , நிர்வாக முறை. தேசம் என்பது ஓர் இன மக்களைக் குறிக்கும் சொல். நாடு என்பது அந்த இன மக்கள் வாழும் எல்லைக்குட்பட்ட, நிர்வகிக்கப்படுகின்ற பிரதேசம் என்று வைத்துக் கொள்ளலாம்.

இன்றைக்கு அரசு செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டாமல் மறைத்தல், தேசியக் கொடி போன்ற அரசாங்கச் சின்னங்களை மதித்தல், தேசியகீதம் பாடுவது, அரசியலமைப்புச் சட்டம் புனிதமானது என்று போற்றுவது, நம்நாடு அல்லது கலாச்சாரம்தான் உலகத்திலேயே உயர்ந்தது என்று பேசுவது இவையெல்லாம் நாட்டுப் பற்றுக்கு அடையாளமாகக் கொள்ளப்படுகின்றன. ஆனால் உண்மையில் இவை புற அடையாளங்களே ஒழிய, உண்மையான நாட்டுப்பற்று அல்ல. தேசிய கீதம் பாடுவதற்கும் சைவன் ஒருவன் திருநீறு பூசுவதற்கும் வித்தியாசம் ஒன்று மில்லை.
திருநீறு பூசிக்கொண்டே சைவக்கொள்கைகளுக்கு எதிராக நடப்பவர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்? அதுபோலத்தான் தேசியகீதம் பாடுபவர்கள் அல்லது அரசியல் சட்டத்தைப் புனிதமாகப் போற்றுபவர்கள் பேசுபவர்கள் நாட்டுப் பற்றாளர்களாக இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை.

உண்மையில் நாட்டு மக்களை-எந்தப் பகுதியில் அவர்கள் வாழ்ந்தாலும்-மதித்து அவர்களைப் பாதுகாப்பது, அவர்கள் உரிமைகளைப் போற்றுவது, அவர்களுக்கு வேண்டிய வாழ்வாதாரங்களை எவ்விதத்திலும் மறுக்காமல் இருப்பது இவைதான் முதலில் நாட்டுப்பற்றுக்கு அடையாளம். அரசாங்கம் இன்றைக்கு ஒரு விதமாக இருக்கும், நாளைக்கு மாறும். இன்று ஒரு கட்சி அரசாட்சியில் இருக்க லாம், நாளை மாறலாம். இவற்றைக் குறைகூறுவதும், இவை செய்யும் தவறு களை எடுத்துரைப்பதும் நாட்டுப்பற்று அல்ல என்று நமது அரசியல் கட்சியாளர் கள் (குறிப்பாக காங்கிரஸ் கட்சியினர்) கருதுகிறார்கள். அதற்கேற்ப ஊடகங் களும் தாளம் போடுகின்றன. ஒவ்வொரு கட்சிக்கும் சில ஊடகங்கள் இருக்கின் றன. கட்சியின் நிர்வாக முறையைக் குறைகூறினால் அவை தேசப்பற்று நாட்டுப் பற்றைக் குறைகூறிவிட்டதாக ஒப்பாரி வைக்கின்றன. மாநில, மைய அமைச்சர் களும் இதற்கு விதிவிலக்கில்லை.

உதாரணமாக, நமது தேசியகீதத்தை எடுத்துக் கொண்டால், பஞ்சாப சிந்து குஜராத மராட்டா திராவிட உத்கல வங்கா என்று வருகிறது. பஞ்சாப், சிந்து, குஜராத், மகாராஷ்டிரம், உத்கலம் (ஒரிசா), வங்கம் ஆகிய நாடுகள் மட்டும் குறிக் கப்படுகின்றன. தென்னகம் முழுவதையும் திராவிடம் என்ற ஒரேசொல் அடக்கி விடுகிறது. வடக்கிலுள்ள ஆறுகள் மட்டுமே குறிக்கப்படுகின்றன. தெற்கு பற்றி வேறு குறிப்புகளே கிடையாது. இதைச் சொன்னால் நாட்டுப் பற்று இல்லாதவன், தேசத்துரோகி என்பார்கள். ஒரு நாட்டுக்குப் பொதுவான தேசிய கீதம் இப்படியா இருப்பது?

நாட்டுப்பற்றுக்கு எதிரானது தேசத்துரோகம். நமது நாட்டை வெளிநாட்டு முதலாளிகளுக்கு விற்பவர்கள் யார்? நமது மக்களின் உரிமைகளைப் பறித்து அயல் நாட்டுக் கம்பெனிகளுக்கு வாரி வழங்குவது யார்? அவர்கள் கொள்ளை அடிக்க நமது நாட்டு வளங்களைத் திறந்துவிட்டு, அங்குள்ள ஏழை மக்களை இடம் பெயர்ப்பது யார்? நமது நாட்டு மக்களின் உரிமைகளைக் காப்பாற்றுவதை விட்டு இன்னொரு நாட்டுக்காரனுக்கு செல்வத்தை வாரி வழங்கி அவன் இரா ணுவத்திற்கும் பயிற்சி அளிப்பது யார்? இவர்களெல்லாம் நாட்டுத் தலைவர்களா, தேசத் துரோகிகளா? கூடங்குளத்திலிருந்து 29 கி.மீ.இல் நாகர் கோவில் இருக்கும்போது அதைப் பாதுகாப்பான இடம் என்று தேர்வு செய்து மக்களை ஒழிக்கும் திட்டத்தை அமுல்படுத்துவது யார்? மேலே கூறியதைச் செய்பவர்கள் யாரோ அவர்கள்தான் இன்று தேசத் துரோகிகள்.

இவர்கள் சொல்லுவதுதான் நாட்டுப்பற்றாக இருக்கிறது, வயிற்றுக்கே போராடுகின்ற ஏழை எளியவர்கள் தங்கள் வயிற்றுப்பாட்டை-பிற உரிமைகளைக் கூட அல்ல-கேட்டால் அவர்கள் தேசத்துரோகிகள் ஆகிவிடுகிறார்கள். அவர்களுக்காகப் போராடுபவர்கள் நக்சலைட் என்று முத்திரைகுத்தப்பட்டு ஒழிக்கப்படுகிறார்கள். வேறு எந்த நாடாவது சொந்த மக்களையே கொன்று குவித்துப் பார்த்திருக்கிறீர்களா?

உண்மையில் அரசாங்கத்தை விமரிசனம் செய்வது சிறந்த நாட்டுப்பற்றே ஆகும். நாடு முன்னேற வேண்டும் என்ற அக்கறையில்தானே அந்த விமரிசனம் செய்யப் படுகிறது? அடுத்தபடியாக தனிமனித அளவில் என்று சொன்னால் நமது கடமை யை ஒழுங்காகச் செய்வதுதான் நாட்டுப்பற்று. அரசாங்க அதிகாரிகள், தலைவர் கள் என்றால், நாட்டு மக்களுக்கு வேண்டியதைச் செய்வது நாட்டுப்பற்று, மக்கள் உரிமைகளை மறுப்பது தேசத்துரோகம். தொலைநோக்குப் பார்வையில் அரசாங்கத்தை விமர்சிப்பது நல்லது. தேவையானதும் கூட.

கே. தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என்று இன்று பரவலாகப் பேசப்படு கிறது. அப்படி என்றால் என்ன? அவை உண்மையில் தொண்டு செய்கின் றனவா? (பரமேஸ்வரன், காட்பாடி)

தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என்பவை அரசாங்கத்துக்குச் சம்பந்த மில்லாத, ஆனால் ஏதேனும் ஒரு கொள்கைப்படி மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஏற்பட்ட நிறுவனங்கள் என்று பொதுவாக வரை யறை செய்யப்படுகின்றது. இன்று இந்தியாவில் யார்வேண்டுமானாலும் ஒரு தொண்டு நிறுவனத்தை அமைக்கலாம். அதற்காகப் பண உதவி பெற்றுத் தொண்டுசெய்கிறேன் என்று கூறலாம், ஏமாற்றவும் செய்யலாம்.

இன்று இந்தியாவில் ஏறத்தாழ 40000 க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன. இவை உண்மையான தொண்டு செய்திருந்தால் நாடு எப்படி இருந்திருக்கும் என்பதை எண்ணிப்பாருங்கள். மக்களுக்கு விழிப்புணர்வு தருவதைவிட அவர்கள் அறிவை மழுங்கடிப்பதைத்தான் இவை நன்றாகச் செய்கின்றன.

இன்று உலகமயமாதல்தான் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டம். தனியார்மயமாதலின் இன்னொரு பெயர்தான் அது. பன்னாட்டுக் கம்பெனிகள் தங்கள் ஆதிக்கத்தை உலகின் எல்லாப்பகுதிகளிலும் நிறுவச் செய்யப்பட்ட ஏற்பாடுதானே அது? தொண்டு நிறுவனங்களும் இந்தப் பன்னாட்டுக் கம்பெனிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு அவர்கள் சார்பாக இயங்குபவையே.

மேலும் அரசு செய்யவேண்டிய பல சேவைகளைத் தொண்டு நிறுவனங்கள் செய்யும் நிலையும் இருக்கிறது. இது ஜனநாயகத் தன்மையை நீர்த்துப்போகச் செய்யும். அரசுத் துறைகள் பெயரளவிலாவது மக்களின் கட்டுப்பாட்டில் இருக் கின்றன. ஆனால் தொண்டு நிறுவனங்கள் அப்படி அல்ல. அவை தங்களுக்கு நிதி உதவி செய்கின்ற பெருநிறுவனங்கள், பெரும்பணக்காரர்களின் கட்டுப்பாட் டில்தான் இயங்கமுடியும். பலசமயங்களில் அரசாங்க அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் பிறர் பெயரால் (பினாமியாக) தொண்டு நிறுவனங்களை நடத்தி வருகின்றனர்.

தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், மக்களுக்கு உதவி செய்கிறேன் என்ற பெயரில் அவர்களுக்கு அந்தந்த சமயத்திலான சிறு ஆறுதலை வழங்கி, அவர்க ளுடைய விமரிசனப் பண்பையும் போராட்ட குணத்தையும் மழுங்கடிக்கின்றன என்பது மார்க்சிய நோக்கிலான விமரிசனம்.

நல்ல மக்கள் நல அரசாங்கம் செயல்பட்டால் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு வேலையில்லை.

கேள்வி பதில்