பஞ்சதந்திரக் கதைகள் – பகுதி- 9

 

கிழமந்திரி சிரஞ்சீவி: பிராமணனிடத்திலிருந்த ஆட்டைச் சில வஞ்சகர்கள் எப்படி வஞ்சித்துக்கொண்டு போனார்களோ, அப்படியே நான் கோட்டான்கள் இருக்குமிடம் போய் அவர்களை வஞ்சனை செய்து கொல்கிறேன்.

காக அரசன் மேகவர்ணன்: அவர்கள் எப்படி ஆட்டைக் கொண்டு போனார்கள்?

Siragu-panchadhandhira-kadhaigal9-1

சிரஞ்சீவி: ஒரு தேசத்தில் மித்திரசர்மன் என்னும் பிராமணன் இருந்தான். மாசிமாதத்தில் யாகம் செய்வதற்காக ஒரு பசு அவனுக்குத் தேவைப் பட்டது. அதற்காகப் பக்கத்தில் உள்ளதொரு ஊருக்குப் போய், தகுதியுள்ள ஒருவனிடம் ‘பசு வேண்டும்’ என்று கேட்டான். “நீ நல்ல காரியத்திற் குத்தான் கேட்கிறாய், ஆனால் என்னிடம் பசு இல்லை. ஆடுதான் இருக்கிறது. அதைக் கொண்டு யாகம் செய்” என்று ஒரு பெரிய ஆட்டைக் கொடுத்து அனுப்பினான். அதைக் கொண்டுவரும் வழியில் அது அங்கும் இங்கும் ஓடத் தொடங்கியது. அதனால் அதை அவன் தோள்மேல் தூக்கிக்கொண்டு வந்தான். சில திருடர்கள் அதைத் தொலைவிலிருந்து பார்த்தார்கள். ஆட்டை எப்படியாவது கைப்பற்றி நம் பசியைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தார்கள். எனவே அவர்களில் ஒருவன் வந்து பிராமணனிடம் சொல்கிறான்:

நித்தியம் அக்னி வளர்க்கின்ற பிராமணனே, நீ ஒழுக்கமுள்ளவனாக இருந்தும் இப்படிப்பட்ட பழியான காரியத்தை ஏன் செய்கிறாய்? ஓர் ஈனமான நாயைத் தோள்மேல் எப்படிக் கொண்டுவருகிறாய்? உங்கள் சாதிக்கு நாய், கோழி, சண்டாளன், கழுதை ஆகியவற்றைத் தொடக்கூடாது என்று சாத்திரம் இருக்கிறதே, தெரியாதா?

பார்ப்பனன்: யாகத்திற்குரிய விலங்கை நீ நாய் என்று சொல்கிறாயே? உனக்குக் கண் பொட்டையா?

திருடன்1: சரி சரி, எனக்கு என்ன வந்தது? நீ சுகமாய்ப் போ.

பிராமணன் கொஞ்சதூரம் நடந்து சென்றான். அப்போது இரண்டாவது திருடன் அவனிடம் வந்தான்.

திருடன்2: உனக்கு என்னதான் கன்றுக்குட்டியின்மீது ஆசையிருந்தாலும், அது செத்தபிறகு அதைத் தோள்மேல் தூக்கிக்கொண்டு செல்கிறாயே, அது சரிதானா? செத்த மிருகங்களைத் தொட்டால் சாந்திராயணம், பஞ்சகவ்யம் ஆகிய சடங்குகளைச் செய்யாமல் தீட்டுப் போகாதே. அப்படியிருக்க, நீ செத்த பிராணியைத் தோள்மேல் ஏன் தூக்கிக்கொண்டு போகிறாய்?

பிராமணன் அவனையும் வைதுவிட்டு மறுபடியும் செல்லத் தொடங்கி னான். கொஞ்சதூரம் சென்றதும் மூன்றாவது திருடன் வந்தான்.

திருடன்3: ஐயா பிராமணரே, கழுதையைத் தீண்டுகிறவன் சசேல ஸ்நானம் (முழு உடைகளுடனும் குளிப்பது) செய்யவேண்டுமென்று சொல்லியிருக் கிறது. அப்படியிருக்கும்போது நீர் ஏன் கழுதையைத் தூக்கிக் கொண்டு போகிறீர்?

பிராமணன் (தனக்குள்): ஒரே பிராணியைப் பார்த்தவர்களில் ஒருவன் நாய் என்கிறான், மற்றவன் செத்த கன்றுக்குட்டி என்கிறான், இன்னொருவன் கழுதை என்கிறான். அதனால் இந்த ஆடு ஏதோ பூதமாகத்தான் இருக்க வேண்டும். நாம் இதை விட்டுவிட்டுப் போவதே மேல்.

Siragu-panchadhandhira-kadhaigal9-2

இப்படி, பிராமணன் அந்த ஆட்டை அங்கேயே விட்டுவிட்டுப் பக்கத்திலிருந்த குளத்தில் நீராடிவிட்டு வீட்டுக்குப் போய்விட்டான். பிறகு அந்த வஞ்சகர்கள் மூவரும் அதைக் கொன்று சாப்பிட்டார்கள். அதுபோலவே நானும் பகைவர்களை வஞ்சித்து நம் காரியத்தை முடிப்பேன். நான் என்ன சொல்லுகிறேனோ அதை மட்டும் நீ செய்.

மேகவர்ணன்: உங்கள் உபாயத்தைச் சொல்லுங்கள்.

சிரஞ்சீவி: நான் பகைவர்கள் பக்கம் இருப்பதாக என்னை நீ நிந்தனை செய்து ஏதாவது ரத்தத்தைக் கொஞ்சம் என்மீது பூசி, என்னை ஆலமரத்தின் கீழ் எறிந்துவிட்டு நீ பிற காகங்களோடு மலைப்பக்கம் போய்விடு. அப்போது, கோட்டான்கள், தங்கள் பகைவர்களாகிய உங்களுக்கு நான் விரோதி என்று நினைப்பார்கள். அப்போது நான் அவர்களுக்கு நம்பிக்க வருமாறு நடித்து அவர்கள் பலவீனத்தை அறிந்து அவர்களை நாசம் செய்வேன்.

மேகவர்ணன் அதை ஏற்றுக்கொண்டு நடிக்கலாயிற்று.

மேகவர்ணன்: நீ ஏன் எங்களுக்கு துரோகம் நினைத்தாய். உன் உயிர்மீது கூட உனக்கு மதிப்பில்லை.

அமைச்சன்1: அமைச்சர்களை நம்பித்தான் அரசர்கள் பலவித காரியங் களையும் செய்யவேண்டியுள்ளது. அப்படியிருக்கும்போது உன்னைப் போல துரோகம் செய்தால் என்ன கதியாகும்?

இப்படி அது கத்த ஆரம்பித்ததும், அவற்றின் ரகசியம் மற்ற யாருக்கும் தெரியாததனால், மற்றப் பறவைகள் வந்து கிழட்டு மந்திரியைத் தாக்க ஆரம்பித்தன.

மேகவர்ணன்: நீங்கள் இவனைத் தண்டிக்க வேண்டாம். இவன் பகையாளிக்கு நன்மை செய்கின்ற துஷ்டனாக இருப்பதால் இவனை நானே தண்டிப்பேன்.

இப்படிக் கூறிவிட்டு, அது எழும்பி எழும்பிக் குதித்து, தன் அலகினால் அந்தக் கிழட்டுக் காகத்தைப் போலியாகக் கொத்தி, தங்கள் சங்கேதப்படி, அதை ஆலமரத்தின்கீழ் எறிந்துவிட்டுச் சென்றது. பொழுதுபோனவுடன் கோட்டான்களின் அரசன் அந்த இடத்திற்குத் தன்கூட்டத்துடன் வந்து பார்த்தது. அங்குக் காகங்கள் எதுவும் இல்லை.

கோட்டான்களின் அரசன் அரிமர்த்தனன்: காகங்கள் எல்லாம் எவ்வழிப் போயின? உங்களில் யாருக்கேனும் அது தெரிந்திருந்தால் அவர்கள் தப்பிக்கும் முன்பாகவே அவர்களைக் கொல்லுவோம்.

இப்படி அது சொல்லிக்கொண்டிருக்கும்போது கிழட்டுக்காகமாகிய சிரஞ்சீவி முனகிக் கத்தலாயிற்று. பல கோட்டான்கள் அதனிடம் சென்று அதைக் கொத்தத் தொடங்கின.

சிரஞ்சீவி: நான் மேகவர்ணனின் மந்திரி. என் பெயர் சிரஞ்சீவி. கொடியவனான எங்கள் அரசன் இப்படிப்பட்ட நிலைக்கு நான் வருமாறு செய்தான். ஆகவே நான் உங்களைச் சரணடைகிறேன்.

இதைக் கோட்டான்கள் கேட்டு கோட்டான்களின் அரசனாகிய அரிமர்த்தன னுக்குக் கூறின.

அரிமர்த்தனன்: ஏ சிரஞ்சீவி, உனக்கு இந்த நிலை ஏன் ஏற்பட்டது?

சிரஞ்சீவி மிகப் பணிவாக அதனிடம் சொல்லியது:

முன்னர் நீங்கள் காகங்களை அடித்தீர்கள் என்று கோபமாக அந்தக் கொடியவன் மேகவர்ணன் உங்களுடன் போர்செய்ய எழுந்தான். அப்போது நான், அவனிடம், “அரசே இது உங்களுக்குத் தக்கதன்று. வலியவனுடன் எளியவன் போர்செய்தால் விளக்கை அவிக்க விட்டில் அதில் போய் விழுவது போல் ஆகும். ஆகவே அவர்களுடன் சமாதானமாகப் போய், அவர்கள் கேட்பதைக் கொடுத்து, நம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். செல்வத்தை எப்போதும் ஈட்டிக்கொள்ளலாம், உயிர் போனால் வருமா?” இப்படி நான் கூறியதும், “நீ என்ன பகைவர் பக்கமாகப் பேசுகிறாய்” என்று வைது, என்னைக் குத்திக் கிழித்துவிட்டுப் போய்விட்டான். இப்போது எனக்கு உங்களுடைய திருவடிகளே துணை. எனக்கு இந்தக் காயங்கள் குணமானால், காகங்கள் அனைத்தையும் கொன்றுவிட்டு உங்களுக்குத் துணையாக இருப்பேன்.

கோட்டான்களின் அரசனுக்கு குருதிக்கண்ணன், கொடுங்கண்ணன், கொள்ளிக்கண்ணன், குரூரநாசன், பிரகாரநாசன் என்று ஐந்து மந்திரிகள். அவர்களைப் பார்த்து, அரிமர்த்தனன், “பகைவர் மந்திரியாகிய இவன் இப்போது நம் கைவசம் ஆனான். இவனை என்ன செய்யலாம்” என்று கேட்டது.

குருதிக்கண்ணன் (மந்திரி1): காலமாறுபாட்டினால் இவன் தனது அரசனுக்கு எதிரியாகத் தோற்றமளித்தான். ஆகவே இவனை நம்மிடத்தில் வைத்துக் கொண்டு, பகைவனோடு சமாதானம் செய்யவேண்டும். சாமபேத தான தண்டம் ஆகிய நான்கு உபாயங்களிலும் சாம உபாயமே சிறந்தது. ஆகவே சமாதானத்தைக் கடைப்பிடிப்பதே சிறந்தது என்பது என் எண்ணம்.

கொடுங்கண்ணன் (மந்திரி2): காகங்கள் நமக்கு இயல்பான பகைவர்கள். ஆகவே இவர்களுடன் சமாதானம் தக்கதன்று. தண்ட உபாயமே சிறந்தது. ஆனால் இவனைக் கொல்ல வேண்டியதில்லை. சிலசமயங்களில் பகைவனும் நல்லதைச் சொல்கிறான். ஒரு திருடன் ஒருவனைப் பிழைக்க வைத்ததும், ஒரு ராட்சதன் இரண்டு பசுக்களைப் பிழைப்பித்ததும் தங்களுக்குத் தெரியாததா?

அரசன்: அது எப்படி?

Siragu-panchadhandhira-kadhaigal9-3

கொடுங்கண்ணன்: ஓர் ஊரில் ஒரு பார்ப்பனன் இரண்டு பசுக்களை நன்றாக வளர்த்துவந்தான். ஒருநாள் ஒரு திருடன் அவற்றைத் திருடிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு கயிறுகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டான். வழியில் ஓர் அரக்கனைப் பார்த்து பயந்தான். அவன் “நீ யார்” என்று கேட்க, “நான் ஒரு திருடன். ஒரு பிராமணன் வைத்திருக்கும் இரண்டு பசுக்களைக் கவர எண்ணிப் புறப்பட்டேன்” என்றான். அரக்கன், “அப்படியானால் சரி, நானும் வருகிறேன். நீ பசுக்களைக் கொண்டு செல். எனக்கு அந்தப் பார்ப்பனன் உணவாவான். வழியைக் காட்டு” என்றான்.

இருவரும் சென்றபோது அந்தப் பார்ப்பனன் உறங்கிக்கொண்டிருந்தான். அரக்கன் அவனைத் தின்னப் போகும்போது, திருடன், “நான் பசுக்கள் இரண்டையும் பிடித்துக் கொண்ட பிறகு நீ அவனைத் தின்னு” என்றான். அதற்கு அரக்கன், “பசுக்கள் கூச்சலிடுமாதலால் பார்ப்பனன் விழித்துக் கொண்டால் காரியம் கெட்டுப்போகும். ஆகவே நான் முதலில் அவனைச் சாப்பிடுகிறேன். நீ பிறகு அச்சமில்லாமல் பசுக்களை ஓட்டிக் கொண்டு செல்லலாம்” என்றான். ஆனால் திருடன் ஒப்புக் கொள்ளவில்லை. இரண்டு பேர்க்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அந்தப் பார்ப்பனன் விழித்துக் கொண்டான். அவன் தன் இஷ்ட தேவதையை தியானம் செய்து அரக்கனிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டதோடு மட்டுமின்றி, கையில் தடி எடுத்துக்கொண்டுவந்து திருடனையும் விரட்டினான். ஆகவே மாற்றானும் எப்போதாவது ஒருசமயம் நமக்கு இதம் சொல்லக்கூடும் என்கிறேன்.

இப்போது அரிமர்த்தனன் மூன்றாம் அமைச்சனைப் பார்த்து, “உன் மனத்தில் உள்ளதைச் சொல்” என்றான்.

கொள்ளிக்கண்ணன்: அரசே, சாமமும் பேதமும் எனக்கு உடன்பாடு அல்ல. சமாதானத்தினால் பகைவனுக்குச் செருக்கு உண்டாகும். பேதம் செய்வதை அறிந்துகொண்டாலோ, அவன் ஒருவேளை மோசமும் செய்யக்கூடும். தானமே இப்போது உரியது. விவேகமுள்ளவன், கொடையால் பகைவனை வசம் பண்ணி அதை மேன்மேலும் பெருகச் செய்தால் பகைவன் நம் கைவசமாவான். மேலும் இவன் அவர்களோடு விரோதம் கொண்டு நம்மிடத்தில் வந்ததால் அவர்களுடைய குறைகளை நமக்குத் தெரிவிப்பான். எனவே இவனைப் பாதுகாக்க வேண்டும். பாதுகாத்தால் இவன் நமது இரகசியங்களையும் அவர்களுக்குத் தெரிவிக்க முடியாது. அவ்வாறன்றி, ஒருவருக்கொருவர் இரகசியங்களை வெளியிட்டால், அவர்கள் வயிற்றிலிருந்த பாம்பும், புற்றிலிருந்த பாம்பும் நாசம் அடைந்தாற் போலக் கெடுவார்கள்.

அரசன்: அது எப்படி?

கொள்ளிக்கண்ணன்: விஷ்ணுவர்மன் என்று ஒரு மன்னனுக்கு வயிற்றில் ஒரு சிறுபாம்பு குடிபுகுந்ததால் அவனுக்கு வயிற்றில் நோயுண்டாயிற்று. அவன் நாளுக்குநாள் உடல் மெலிந்து வெவ்வேறு கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்யலானான். அம்மாதிரி ஒரு கோயிலுக்கு அவன் சென்று வருந்திக் கொண்டிருக்கும் சமயம், அந்த ஊரின் அரசனின் இரண்டு பெண்கள் அரசனோடு கோயிலுக்கு வந்தார்கள். அவர்களில் ஒருத்தி விஷ்ணுவர்மனைப் பார்த்து “உனக்கு வெற்றி உண்டாகுக” என்றாள். மற்றொருத்தி, “நீ நல்ல உணவை உண்பாயாக” என்றாள். இரண்டாவது மகளின் பேச்சைக் கேட்டு கோபம் கொண்ட அரசன், “இவளை இந்த நோயாளிக்கே கட்டி வைத்துவிடுங்கள், இவளும் நல்ல உணவையே சாப்பிடட்டும்” என்று கூறிவிட்டான். அவனது அமைச்சர்கள், இரண்டாவது மகளை விஷ்ணுவர்மனுக்கு அந்தக் கோயிலில் திருமணம் செய்து வைத்துவிட்டார்கள்.

அவள் தன் கணவனை வழிபட்டுப் பணிவிடை செய்துவந்தாள். மற்றொரு தேசத்திற்கு அவள் கணவனோடு சென்றுகொண்டிருக்கும்போது, சமையலுக் கெனச் சரக்குகள் வாங்கிவர, வேலைக்காரனை அழைத்துக்கொண்டு அவள் சென்றாள். நோயாளி உறங்கிக்கொண்டிருந்தான். அப்போது அங்கே பக்கத்தில் புற்றிலிருந்த ஒரு பாம்பு, அவன் வயிற்றிலிருந்த பாம்புடன் உரையாடலாயிற்று. இதற்குள் அவன் மனைவி வந்து ஒரு மரத்தின் மறைவில் நின்று அவற்றின் உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்தாள். புற்றுப்பாம்பு, வயிற்றுப் பாம்பை நோக்கி, “அட துஷ்டனே! இந்த அழகான ராஜகுமாரனை ஏன் வருத்துகிறாய்?” என்றது. வயிற்றுப்பாம்பு, புற்றுப்பாம்பை நோக்கி, “ஆகாரம் நிறைந்த குடத்தில் நான் வசிக்கிறேன், என்னை நீ ஏன் வைகிறாய்?” என்றது. புற்றுப்பாம்பு, “அவன் கடுகு தின்றால் நீ இறந்து போவாயே” என்றது. வயிற்றுப் பாம்பு, “உன்னையும்தான், யாராவது வெந்நீர் ஊற்றினால் கொன்றுவிடக்கூடும்” என்றது. இரண்டின் இரகசியங்களையும் அறிந்துகொண்ட ராஜகுமாரி, அவ்விதமே செய்து இரண்டையுமே கொன்றாள். அதனால் விஷ்ணுவர்மன் சுகமடைந்து, தன் னைவியோடு தன் ராஜ்யத்திற்கு வந்து அரசு செய்துகொண்டிருந்தான். ஆகவே பரஸ்பரம் இரகசியங்களைக் காப்பாற்றாமல் போனால், இழப்பு ஏற்படும்.

இதைக் கேட்ட கோட்டான்களின் அரசன், நான்காவது அமைச்சனாகிய குரூரநாசனைப் பார்த்து உன் கருத்தென்ன என்று கேட்டது.

அமைச்சன்4: இம் மூவர் கூறியதும் சரியில்லை. சாம தான பேதம் என்னும் மூன்றும் வலிமையற்றவர்கள் செய்பவை. வலிமையுள்ளவர்கள் தண்ட உபாயத்தையே கையாள வேண்டும். அதைவிட்டு மற்ற மூன்று உபாயங்களையும் செய்தால் பகைவன் நம்மைக் கேவலமாக எண்ணிவிடுவான். அப்படி வீரம் இல்லாவிட்டால் தெய்வத்தால் என்ன நேரிடுகிறதோ அதை அனுபவிக்க வேண்டும். உலகத்தில் யாவரும் விரும்புகின்ற லட்சுமி, மன ஊக்கத்துடன் தண்டத்தினால் எதிரிகளை வெல்லுகிறவர்களிடமே வருகிறாள். ஆகவே பகைவனைக் கொல்வதே சிறந்தது.

அரசன் ஐந்தாவது அமைச்சனை நோக்கி “உன் கருத்தென்ன” என்று வினவியது.

பிரகாரநாசன்: அரசே, பழங்காலத்தில் விபீஷணன் எப்படி இராமனை வந்து அடைந்தானோ அதுபோல இப்போது இவன் நம்மிடம் வந்திருக்கிறான். அவனை வைத்து இராமன் இராவணனை வென்றதுபோல, இவனை வைத்து நாம் காகங்களை அழிக்க வேண்டும். சரணமடைந்தவனைக் கொல்லுதல் சரியல்ல. அவ்வாறு கொல்கிறவன் ரௌரவம் எனப்படும் நரகத்தை அடைவான் என்று சொல்கிறார்கள். மேலும் தன்னைச் சரணடைந்த புறாவுக்காக சிபிச் சக்ரவர்த்தி தன் உடலின் மாமிசத்தையே வேடனுக்கு அளித்ததாக மகாபாரதத்தில் சொல்லியிருக்கிறது. மேலும் சரணடைந்த வேடன் ஒருவனைக் காப்பதற்காகப் புறாக்கள் தங்கள் உயிரையே கொடுத்தன.

அரிமர்த்தனன்- அது எப்படி, சொல்வாயாக.

(தொடரும்) 

இலக்கியம்