மரபணுத் தொழில்நுட்பம்-சில சிந்தனைகள்

marabanu
மரபணுத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தித் தயாரித்த உணவுப்பொருள்கள்-காய்கறிகள், கீரைகள், கிழங்குகள் முதலியன நம்நாட்டில் எவ்வித எதிர்ப்புமின்றி நுழைந்துவிட்டன. இவற்றைக் கேள்வி கேட்க ஆளில்லை. நாம் தினந்தோறும் வேலையுடனும், பசியுடனும், உழைப்புடனும், ஊழல்போன்ற மோசமான சமூக நிலைகளுடனுமே போராடிக்கொண்டிருக்கும்போது இதில் எப்படிக் கவனம் செலுத்தமுடிகிறது? மேலும் உணவுப்பொருள்களின் விலைகளும் ஏறிக்கொண்டே செல்கின்றன.

இந்த ஆண்டு பணவீக்கம் மிக அதிகமாகச் சென்றதற்கு வெங்காய விலைதான் காரணம் என்கிறார் நிதியமைச்சர், ஆனால் அதைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் தான் இல்லை. இம்மாதிரி நிலைமைகளின் மத்தியில் வாழுகின்ற மத்தியதர வர்க்கத்தினர், மரபணுப் பொறியியலில் உருவான உணவா? அல்லது இயற்கையாக உருவான உணவா? என்பதில் எல்லாம் என்ன அக்கறை காட்டப்போகிறார்கள்?

இந்த நம்பிக்கையில் தான் மரபணுத் தொழில் நுட்பக் குழுமங்கள் செயற்கை உணவுப்பொருள்களைத் தயாரித்து நம்மிடையில் சந்தடியில்லாமல் விடுகின்றன. இவற்றால் எவ்வளவோ பாதிப்புகள் நிகழலாம். இவற்றை நாம் கேள்வி கேட்டுத்தான் ஆகவேண்டும்.

maramapnu-stil-2
உதாரணமாகக் காலங்காலமாகப் பழங்கள் சாப்பிட்டு வருகிறோம். ஆனால் இப்போது மரபணு மாற்றத்தால் உருவான ஆப்பிள்கள், பப்பாளிகள், மாதுளைகள் போன்றவை தான் கிடைக்கின்றன. (சிலசமயம், இயற்கைப் பழங்களோடும் சேர்த்து, இரண்டு வகையான பழங்கள் கடைகளில் வைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.) சென்னை, பெங்களூர் முதலாகச் சிறுநகரங்கள் வரை ரிலையன்ஸ், மோர் போன்ற பெருங்குழுமங்கள் நடத்தும் கடைகளில் இப்படிச் செயற்கையாகத் தயாரான பழங்கள் மட்டுமே கிடைக்கின்றன. (உங்களுக்கு எப்படி சார் தெரியும் என்று நீங்கள் கேட்கலாம், அதற்கு பதில் சொல்வதற்கு முன், இப்படி எந்த வித லேபிலும் இன்றி-இது இயற்கையா, செயற்கையா என்ற அறிவிப்புக்கூட இன்றி, விற்பதுதான் இலாபம் கொள்ளையடிக்கும் பெருங்குழுமங்களுடைய வேலை என்பதைச் சொல்லிவிடுவோம்.

maramapnu-stil-3
வழக்கமாக நான் பப்பாளிப்பழம் சாப்பிடுபவன். அதில் கரிய நிறமுள்ள விதைகள் மிகுதியாக உள்ளே இருப்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் சிலகாலமாக நான் வாங்கி உண்ணும் பப்பாளிகளில் விதைகளே இருப்பதில்லை. வெறுமையாக இருக்கும் உட்கூடு. விசாரித்த பிறகுதான் தெரிந்தது – இது செயற்கைப் பப்பாளி என்று. இதுபோலத்தான், சிவப்பாக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கிறதே, இதுதான் நல்ல ஆப்பிள் என்று நம்பி வாங்கிவிடாதீர்கள்.

மரபணுப் பொறியியல் என்றால் என்னஅது எவ்விதம் செய்யப்படுகிறது?

ஒரு மீனைத் தக்காளியுடனோ, அந்துப்பூச்சியுடன் கோழிக்குஞ்சையோ ஒரு விவசாயி கலப்பின வளர்ப்புச் (ஒட்டுச்) செய்வதாகக் கற்பனை செய்யுங்கள். அபத்தமான சிந்தனையாக இருக்கிறதே என்கிறீர்களா? இது இயலாதது என்று நமக்குத் தெரியும், காரணம் இயற்கை இதை அனுமதிப்பதில்லை. ஆனால் இன்று மரபணுப் பொறியியலாளர்கள் இதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். ஓர் உயிரியின் பாரம்பரிய வரைபட வார்ப்பினை மாற்றுவதன் வாயிலாக.

maramapnu-stil-4
மரபணுப் பொறியியலுக்கு 25 வயதுதான் ஆகிறது. வாழும் உயிரிகளின் டிஎன்ஏ அல்லது பாரம்பரிய அமைப்பை மாற்ற விஞ்ஞானிகளை அனுமதிக்கிறது இந்தத் தொழில்நுட்பம். அவர்கள் டிஎன்ஏவின் இழைகளையோ, ஓர் உயிரியின் டிஎன்ஏ விலிருந்து குறித்த மரபணுக்களையோ வெட்டவும், முழுமையாகத் தொடர்பே அற்ற வேறொரு உயிரியின் டிஎன்ஏ -வுக்குள் அவற்றை ஒட்டவும் செய்கிறார்கள். மனிதன், விலங்குகள், பாக்டீரியா, வைரஸ்கள், பூஞ்சணங்கள், தாவரங்கள் போன்ற முழுமையாக வேறுபட்ட இனங்களிலிருந்து மரபணுக்களைக் கலப்படம் செய்யும் இந்த முறைக்குப் பலவேறு பெயர்கள் உண்டு-நவீன உயிர்த்தொழில் நுட்பம், மரணுத் தொழில்நுட்பம், மரபணு மாற்றம், மரபுக்குறுக்கீட்டு மறுசேர்க்கைத் தொழில்நுட்பம். மரபணுக்களின் அடுக்கினைக் கலைத்துப்போட்டு இதுவரை இல்லாத புதிய உயிரிகளைப் படைக்கும் செயலாக இது சொல்லப்படுகிறது. இப்படித்தான் நாம் பழங்களில் மீனின் மரபணுக்களையோ, தாவரங்களில் அல்லது வைரஸ்களில் பூச்சிகளின் மரபணுக்களையோ, மீன்களில் கோழியின் மரபணுக்களையோ, பன்றிகள் அல்லது ஆடுகளில் மனித மரபணுக்களையோ, பலவாறாகக் காண முடிகிறது.

maramapnu-stil-5
புதுச் செல்லில் படையெடுப்பற்கோ அல்லது மரபணுத் துப்பாக்கி மூலமாக மரபணுவைப் புதுச் செல்லில் செலுத்துவதற்கோ செய்கின்ற மாற்றம், ஒரு பாக்டீரியத்தை அல்லது  வைரஸை  மரபணுவுக்கு வாகனமாகப் பயன்படுத்திச் செய்யப்படுகிறது. (இது உயிரியல் தொழில்நுட்பத் தொழில்துறையினர் செய்வதை அவ்வளவு துல்லியமாக எடுத்துரைப்பதல்ல. சுமாரான விவரிப்புதான்.) எந்த மரபணுப் பொறியியலாளரும் டிஎன்ஏவில் எங்கே புதிய மரபணு செருகப்படப் போகிறது என்பதைச் சொல்ல இயலாது. இது ஒரு குருட்டுத்தனமான, மாமரத்தின் கீழிருப்பவன், மாங்காய்க்குக் கல்லெறிவது போன்ற செயல். விழுந்தால் மாங்காய், விழாவிட்டால் கல்லோடு போயிற்று.

இடையில் ஒரு குறிப்பு-மரபணுப் பொறியியலுக்குள் நாம் செல்வதற்குமுன் டிஎன்ஏ என்றால் என்ன என்று சற்றே தெரிந்துகொள்வோம்.

டிஎன்ஏ: வாழ்வின் குறியமைப்பு:

ஒவ்வொரு தாவரமும், மனிதரும் அல்லது விலங்கும் ஒன்றிலிருந்து மற்றது வேறுபடுவதற்குக் காரணம், ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான டிஎன்ஏ (டிஆக்ஸி ரிபோநியூக்ளியிக் அமிலம்) என்ற மரபணு வரைபடம் இருப்பதுதான். தன் பெற்றோரிடமிருந்து ஒவ்வொரு உயிரியும் இதைப் பெறுகிறது. ஓர் உயிரி வளர்வதற்கும், செயல்படுவதற்கும் அல்லது வாழ்க்கையைக் காப்பதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்குமான முழுமையான தகவல்களின் தொகுப்பு இது. இந்தத் தகவல்கள், நடைமுறையில் உடலின் எல்லாச் செல்களிலும் காணப்படுகிறது. டிஎன்ஏவின் பகுதிகளில்-மரபணு என்று சொல்லப்படுபவற்றில்-குறிகளாக அமைந்துள்ளன. பாரம்பரியத்தின் அலகுகளான இவையே ஓர் உயிரியின் எல்லாச் சிறப்புப் பண்புகளையும் நிர்ணயிக்கின்றன. காக்கையா அல்லது சிட்டுக்குருவியா, பூவின் நிறமா, அல்லது உங்கள் தோற்றமா-எல்லாம் நிர்ணயமாவது இவற்றினால்தான். மரபணுக்கள், புரோட்டீன்களை உருவாக்கவும் செய்கின்றன. புரோட்டீன்கள்தான் நம் வாழ்க்கையின் அடிப்படைப்பொருள். உடலைக் கட்டும் தசைகளுக்காக, நாளமுள்ள, நாளமற்ற சுரப்பி நீர்களுக்காக,  நமது ஆற்றல்நிலைகளைச் செயல்படுத்த, உடல் இயக்கங்களுக்காக, இன்னும் சிந்திப்பதற்காகக் கூட இப்படிப் பல காரணங்களுக்காக எல்லா உயிரிகளுக்கும் புரோட்டீன்கள் தேவை.

maramapnu-stil-6
ஆனால் டிஎன்ஏவைப் பற்றி மிகக் குறைவாக-அதன் செயல்பாடுகளில் 3.5% தான் தெரியும் என்று அறிவியலாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். மீதியிருப்பது ஒதுக்கப்பட்ட பகுதி (ஜங்க் டிஎன்ஏ எனப்படும்.) மனித மரபணுத்தொகுதி எழுதியறியப்பட்ட போதிலும் எப்படி மரபணுக்கள் செயல்படுகின்றன, தமக்குள் இடைவினை புரிகின்றன என்பது பற்றிய பகுதி இதுதான்

மரபணுப்பொறியியல்மாற்ற உணவு என்றால் என்ன?

தாங்கள் பாடப்புத்தகத்தில் கற்றுக்கொண்டதை மரபணுப் பொறியியலாளர்கள் நாம் உண்ணும் உணவில் செயல்படுத்திப் பார்க்கிறார்கள். அந்த உணவுகளின் பண்புகளை மேம்படுத்துவதாக அல்லது முழுமைப்படுத்துவதாகச் சொல்கிறார்கள். உதாரணமாக, கடுங்குளிரைத் தாங்கமுடியாத தக்காளிகளை எடுத்துக் கொள்வோம். ஆர்க்டிக் நீரிலும் உயிர்பிழைத்திருக்கும் மீன்களையும் பாருங்கள். ஆர்க்டிக் குளிரைத் தாங்கக்கூடிய மரபணு ஒன்றைத் தட்டை மீன்களில் விஞ்ஞானிகள் கண்டனர். அந்த மீனிலிருந்து அந்த மரபணுவை மட்டும் வெட்டி, தக்காளியின் டிஎன்ஏவில் ஒட்டினார்கள்.

maramapnu-stil-7
இந்தப் புதிய தக்காளி கடுங்குளிரைத் தாங்க வல்லது. அதனால் நீண்டகால வளர்ச்சிப்பருவம் அதற்கு உண்டு. ஆனால் இந்த மரபணுப்பொறியியல்மாற்ற தக்காளியை நம்மால் சாதாரணத் தக்காளியிலிருந்து பிரித்துக் கண்டறிய முடியாது. மீன்களின் பக்கத் துடுப்புகளுடனோ செதில்களுடனோ தக்காளி வந்தால் அல்லவா நமக்குத் தெரியும்?

பல வாரங்களுக்கு அழுகாத, பூச்சிகளைத் தாங்கக்கூடிய தக்காளியைப் பாருங்கள். (பெங்களூர் தக்காளி என்று இதற்குப் பெயரிட்டிருக்கிறார்கள் கடைக்காரர்கள். நம் ஊர்த் தக்காளி, நாட்டுத்தக்காளியாம்.) களைக்கொல்லிகளையும், வைரஸ்களையும், பூஞ்சணத் தாக்குதல்களையும் தடுக்கக்கூடியவை இவை. அதேபோலப் பெரிய அளவில் உள்ள, பார்ப்பதற்கும் சுவைப்பதற்கும் நன்றாக இருக்கக்கூடிய பழங்களையும் காய்களையும் பாருங்கள். விவசாயிகள், கப்பல்காரர்கள், உணவு விளைவிப்பவர்கள், சிறு வியாபாரிகள் ஆகியோர்க்கு இவ்வகைப் பண்புகள் பிடித்திருக்கின்றன. அவற்றால் அதிக இலாபம் பெறமுடியும். ஆனால் இவ்வகை உணவு நமக்கு நல்லதா என்பது முறறிலும் வேறு விடயம்.

உதாரணமாக, மரபணுப்பொறியியல்மாற்ற உணவுகள் பல வாரங்களாக ரிலையன்ஸ், ஹெரிடேஜ், மோர் போன்ற பெருங்கடை அலமாரிகளில் இருந்தபோதும், அவை புதியவை என்பது போலக் காட்சியளிக்கின்றன. நன்கு சிவப்பாகவும் புதியதாகவும் காணப்படும் அவற்றில் எந்த ஊட்டச்சத்தும் மிஞ்சியிருக்காது. அழுகவியலாத் தக்காளிகளில் பாக்டீரியாக்களின் மரபணுக்கள் உள்ளன. இவை எதிருயிரிகளுக்குத் தடுப்புச் சக்தியை அளிக்கின்ற

குளிர்தாங்கும் தக்காளிகளைச் செய்கிறார்களேஎப்படி?

maramapnu-stil-8
விஞ்ஞானிகள் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாவிலிருந்து மரபணுப் பொருள்களின் துணுக்குகளை எடுத்துக்கொள்கிறார்கள். இவற்றிற்கு ஊக்கி (புரோ மோட்டர்), பிளாஸ்மிட் என்று பெயர்கள். இவை ஓரினத்திலிருந்து (மீன் என்று வைத்துக்கொள்வோம்) மற்றோர் இனத்திற்கு (தக்காளிச் செடிக்கு) ஒரு மரபணுவை மாற்றுவதற்கு உதவும். வைரஸ்களும் பாக்டீரியாவும் மரபணுவைக் கடத்திச் சென்று தாவரத்தின் டிஎன்ஏவில் செருகுவதற்காகப் பயன்படும் கடத்திகள். (குறிப்பு: ஊக்கி (புரோமோட்டர்) என்பது, தாவரம் வெளிமரபணுவைத் தன் சொந்தமரபணுவாகக் கருதி ஏற்றுக்கொள்ள வைக்கும் தந்திரத்தைப் புரிகிறது. டிஎன்ஏவுக்குத் துணைக்கருவியாகச் செயல்படுகின்ற டிஎன்ஏவின் வட்டவடிவத் துணுக்கு, பிளாஸ்மிட்.

அக்ரோபாக்டீரியம் என்பது தாக்குதல்சக்தி வாய்ந்த பாக்டீரியம். இது தாவரங்களில் கழலைகளை ஏற்படுத்தும். பிளாஸ்மிக்குள் ஊக்கியும் குளிரெதிர்ப்பு மரபணுவும் செருகப்படுகின்றன. இந்தப் பிளாஸ்மிட், அக்ரோபாக்டீரியத் துக்குள் வைக்கப்படுகிறது. இந்தப் புதிய பிளாஸ்மிடுடன் சேர்ந்த புதிய பாக்டீரியம் மில்லியன்கள் கணக்கில் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

ஒரு தட்டிலுள்ள தாவரசெல்களில் மேற்கண்ட அக்ரோபாக்டீரியா பற்றித் தொற்றிக் கொள்கின்றன. குளிரெதிர்ப்பு மரபணுவையும் ஊக்கியையும் (மற்றும், எதிருயிரித் தடுப்பு மரபணுவையும்) தாவர டிஎன்ஏவுக்கு மாற்றிவிடுகின்றன. தாவர செல் பிரியும் போது, ஒவ்வொரு தாவரசெல்லும் புதிய அந்நிய மரபணுக்களைப் பெறுகிறது. இவற்றில் ஒவ்வொன்றும் பின்னர் ஒரு முழுத்தக்காளிச் செடியாக வளர்க்கப்பட முடியும்.

வாசனை-ருசித் தக்காளி வகை ஒன்று 1994இல் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதிலும் குறைகள் இருந்தன. அது மிக மிருதுவாகவும் எளிதில் அடிபடக்கூடியதாகவும் இருந்தது. செடியும் உறுதியாக இல்லை. நுகர்வோர் அதன் விசித்திரமான உலோகச்சுவை பற்றிக் குறைகூறினார்கள். அதனால் 1994 இல் ஃபுளோரிடா மாகாணத்தில் அந்தத் தக்காளியின் முழு விளைச்சலும் பயன் இல்லாமல் போனது. கடைசியாகத் தோல்வி என ஒப்புக்கொள்ளப்பட்டு, கைவிடப்பட்டது.

அதேபோலப் பூச்சியெதிர்ப்புப் பருத்தி ஒன்று 1997 இல் அறிமுகமாயிற்று. இது தனக்குள்ளேயே பூச்சிக்கொல்லியை உருவாக்கிக்கொள்ளவல்லது. அமெரிக்க நாட்டில் இலட்சக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டபோது, செடிகளிலிருந்து பருத்திப்பந்துகள் தானாகவே உதிர்ந்துவிட்டன. விவசாயிகள் அமெரிக்க அரசாங்கத்திடம் கேட்ட இழப்பீடு ஒரு மில்லியன் டாலரையும் தாண்டியது.

ஏன் இந்த மரபணுப்பொறியியல்மாற்ற பயிர்கள் முழுமை அடைய முடியாது?

மரபணுப்பொறியியல்மாற்ற உருவாக்கங்களின் உள்ளார்ந்த முக்கியக் குறை, அவற்றின் உருவமைப்பிலுள்ள நிலைத்தன்மையின்மை (இன்ஸ்டெபிலிடி). (இங்கிலாந்தின் திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த) மரபியலாளர் டாக்டர். மே வான் ஹோ கருத்துப்படி, இம்மாதிரித் தாவரங்களின் மூலக்கூற்று மரபியல் தகவல்கள் எதுவும் நிலைத்தன்மையைக் காட்டவில்லை. செயற்கை மரபணுக் கட்டமைப்புகள் வேறு மரபணுப் பொருள்களுடனும், தவறான முறையில் உடையவும் சேரவுமான இயல்பைப் பெற்றுள்ளன என்று இதற்கு அர்த்தம். இதன் விளைவு, புதிய, முன் கணிக்கமுடியாத சேர்க்கைகள்.

மரபணு மாற்றிய மரபணு மாற்றப்பட்ட தாவரச்சேர்க்கைகளின் நிலையின்மை விஞ்ஞானிகளால் நன்கு அறியப்பட்ட ஒன்று. மமா தொழில்துறை இது ஒரு தொடரும் பிரச்சினை என்று ஒப்புக்கொள்கிறது. அடுத்தடுத்த சந்ததிகளில், இந்தத் தவறுகள் பெருக்கமடைகின்றன. நாம் விரும்பாத, தாறுமாறான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. பல இலட்சக்கணக்கான ஆண்டுகளாக எல்லா உயிர்களிலும் ஒன்றிசைந்து இருந்துவருகின்ற இயற்கையான, நிலைத்த மரபணுச் சேர்க்கைகளுக்கு இது முரணாக உள்ளது.

மரபணு மாற்றப்பட்ட தொழில் நுட்பம் எவ்வளவு சரியானது?                           

maramapnu-stil-9-300x123
மரபணுக்களைச் செருகும் முறைகள், முன்பே சொன்னதுபோல, வந்தால் சரி, போனால் போகட்டும் என்ற நிலையில்தான் உள்ளன. ஒருமுறை சரியான சேர்க்கையைப் பெற ஆயிரக்கணக்கான முறை போடவேண்டியுள்ளது. அப்படி வெற்றிபெறுபவையும் கட்டுப்பாடற்ற, எதிர்பாராத முடிவுகளைத் தருகின்றன. விஞ்ஞானிகள் முடிவுகளைக் கட்டுப்படுத்த இயலாத, முன்னுணர முடியாத நிலையில்தான் உள்ளனர். உதாரணமாக, வளர்ச்சி ஹார்மோன் ஒன்றின் மனித மரபணுவை எலிகளுக்குள் செலுத்தியபோது, மிகப்பெரிய எலிகள் உண்டாயின. அதே மரபணுவைப் பன்றிகளுக்குள் செலுத்திய போது மிகப் பெரிய பன்றிகள் உருவாகவில்லை, மாறாக, நோயுற்ற, வளர்ச்சி குன்றிய, மாறுகண் கொண்ட,  மலட்டுப் பன்றிகள்தான் கிடைத்தன.

ஏன் இப்படி?

டிஎன்ஏ, மரபணுக்கள் பற்றிய அறிவியலும் அவற்றின் பணிகளும் இன்னும் நன்கு தெளிவாகவில்லை. உயிர்த்தொழில்நுட்ப ஆதரவாளர்கள் சொல்வதைப் போலன்றி, அவர்கள் தொழில்நுட்பம் தவறான, காலத்துக்கொவ்வாத யூகங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது.

இடையில் ஒரு தகவல்: நாம் மரபுவழி வந்த நமது நாட்டு மக்காச் சோளத்தை உண்பதை அறவே விட்டுவிட்டோம். பெரிய நகரங்களில் அது கிடைப்பதே இல்லை. மாறாக, ஸ்வீட் கார்ன், பேபி கார்ன் போன்ற பெயர்களில் எல்லாம் இறக்குமதியான மரபணு மாற்றப்பட்ட சோளங்கள்தான் கிடைக்கின்றன. அவை எப்படிச் செய்யப்படுகின்றன என்பதைப் பார்ப்போம்.

உயிர்த்தொழில்நுட்பச் சோளத்தைச் செய்தல்:

சில பூச்சிகளுக்குக் கடுமையான விடமான ஒரு புரோட்டீனை உருவாக்குகின்ற பசிலஸ் துரிஞ்சியென்சிஸ் என்பதிலிருந்து விஞ்ஞானிகள் ஒரு மரபணுவைப் பிரிக்கின்றனர். இதை மாற்றியமைத்து, வேதிமுறையில் இதனை ஓர் எதிருயிரித் தடுப்பு மரபணுவில் இணைக்கின்றனர்.

இந்த மரபணுக்கள் மிகநுட்பமான 24 காரட் தங்கப் பொடியில் சேர்க்கப்பட்டு, கால்அளவு பிளாஸ்டிக் தட்டில் பரப்பப்படுகின்றன.

ஒரு வலைத்தடுப்பின்மீது இந்தத் தட்டு ஜீன் துப்பாக்கி ஒன்றினால் வீசப்படுகிறது. அப்போது மரபணுவைக் கடத்தும் துகள்கள் சென்று சோள செல்கள் அல்லது விதைக்கருக்கள் உள்ள தட்டின் மீது விழுகின்றன.

புதிய மரபணுக்கள் சில சோளச் செல்களுக்குள் சென்றுசேர்கின்றன. இவற்றைக் கண்டறிய, விஞ்ஞானிகள் இவற்றில் எதிருயிரித் தடுப்பு மரபணு கொண்டவற்றைத் தவிரப் பிற செல்களை அழித்துவிடும் எதிருயிரி ஒன்றைச் சேர்க்கின்றனர்.

இந்த மாறிய செல்கள் புதிய தாவரங்களாக முதிர்கின்றன. எல்லாச் செடிகளும் அல்ல இப்படிப்பட்ட ஒருசில செடிகளும் அவற்றின் சந்ததிகளும் பூச்சிக்கொல்லிப் புரொட்டீனை உற்பத்தி செய்கின்றன. இவற்றிலிருந்துதான் விதைகள் உருவாக்கப்பட்டு இப்போது நாம் விரும்பி உண்ணும் பேபிகார்ன், ஸ்வீட் கார்ன் போன்றவை உண்டாக்கப்படுகின்றன.

முன்பு மரபணு மாற்றப்பட்ட இணைப்புகள் தாறுமாறாக விளைவுகளை உண்டாக்குகின்றன என்று பார்த்தோம். அதற்குக் காரணம் என்ன?

“மரபணுக்கள் என்பவை எளிய குறியமைப்புகளை உடையவை, ஒரு குறித்த பண்புக்கு ஒரு மரபணுக்குறி மட்டுமே உண்டு” என்ற எளிமையான, குறுக்கல் வாதச்சிந்தனையின் விளைவு இது. ஓர் உயிரியின் டிஎன்ஏவை உடைத்து அதற்குள் ஓர் அந்நிய மரபணுவைச் செருகுதலாகிய செயல் எதிர்நோக்க இயலாத எதிர்பாராத விளைவுகளைக் கொண்ட வெடிப்புகளையும் மாற்றங்களையும் உண்டாக்குகிறது.

இயற்கையில், மரபணுக்கள் ஒன்றாக, ஒன்றுசேர்ந்து, ஒழுங்காகச் செயல்படுகின்றன, தங்களுக்குள்ளாகவும் ஒழுங்கமைப்பினாலும் பாதிக்கப்படுகின்றன. விஞ்ஞானிகள் நினைப்பதுபோல ஒரு மரபணு மட்டும் தனித்துச் செயல்படுவதில்லை. இந்த அடிப்படைக் கருத்தைப் புரிந்துகொள்ளாவிட்டால், சோதனைகள் நோய்பட்ட பன்றிகள் அல்லது பச்சை சால்மன் மீன்கள் போன்ற தாறுமாறான முடிவுகளைத் தருவதுதான் தொடரும்.

மரபணுப்பொறியியல்மாற்ற உணவுகள் இயற்கை உணவுகளைப் போன்றவையே என்று விளம்பரம் செய்யப்படுகிறதேஇந்தக் கூற்று உண்மையா?

maramapnu-stil-10
இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. உயிர்த்தொழில் நுட்பக் குழுமங்கள் மரபாக இயற்கை உணவைப் பதப்படுத்துவதன் (ரொட்டி, பீர் அல்லது ஒயின், பதப்படுத்திய தயிர், பாலடை போன்றவை செய்தல்) மற்றும் இயற்கை வளர்ப்பின் விரிவாக்கமே மபொ என்று கூறுகின்றன.

நீங்கள் எவ்வளவு ஒட்டுவளர்ப்புச் செய்தாலும், உங்கள் வீட்டுத்தோட்டத்தில் வளர்க்கும் தக்காளியில் மீன் அல்லது பூச்சியின் மரபணுப் பொருள் வரவே முடியாது. நாம் இயற்கையாகக் கிடைக்கின்ற ஈஸ்ட்டு போன்ற நுண்ணுயிரிகளைப் பயன்படுத்துகிறோம். மனிதனாக உருவாக்கிய, செயற்கையாக மாற்றப்பட்ட மரபணுக்களை ரொட்டி, பாலடை, ஒயின் போன்றவை செய்வதற்கு யாரும் பயன்படுத்துவதில்லை. பண்ணைகளில் ஒரே அல்லது ஒரேமாதிரியான இனத்திலிருந்துதான் ஒட்டு வளர்ப்புச் செய்யத் தேர்ந்தெடுக்கிறோம்.

மரபு வளர்ப்பு நவீன மரபணுப்பொறியியல் தொழில்நுட்பங்கள்:

மரபான வளர்ப்பு முறை பாரம்பரியமாக, பல நூற்றாண்டுகளாக வருவது. அதற்கு யாரும் உரிமை (பேடண்ட்) கொண்டாட இயலாது. மரபு வளர்ப்பிலும் சந்ததிகள் தங்கள் பெற்றோரிடமிருந்து வேறுபடத்தான் செய்கின்றன, ஆனால் அவற்றின் பண்பு வேறுபாடுகள் மிகக் குறைவு.

நவீன மரபணுப் பொறியியல் தொழில்நுட்பத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒன்று அல்லது மிகச்சில மரபணுக்கள் புகுத்தப்பட்டு, அவற்றிலிருந்து செயற்கையான வளர்ச்சியைச் செய்து, அவற்றிலிருந்து விதைகளை உருவாக்கி, பிறகு பயிர் என்ற நிலைக்கு வருகிறது.

இவற்றிலும் சந்ததிகள் தங்கள் பெற்றோரிடமிருந்து வேறுபடுகின்றன, அவற்றின் பண்பு வேறுபாடுகள் மிகப் பெரிய அளவில் உள்ளன.

தாவரங்கள், பிராணிகள், பாக்டீரியா, வைரஸ்கள், மனிதன் போன்ற முற்றிலும் தொடர்பற்ற உயிரிகளிலிருந்து மரபணுப் பொருள்களை ஆய்வகங்களிலும் சோதனைக் குழாய்களிலும் கலப்பதை மரபணுப் பொறியியல் செய்கிறது.

இந்த இரு முறைகளும் எவ்வளவு வேறுபட்டவை என்பதை நீங்களே புரிந்து கொள்ளலாம்.

செயற்கை முறையில், புதிய டிஎன்ஏவில் அந்நிய மரபணுக்களைச் செருகுவதற்கு பாக்டீரியாக்களையும் வைரசுகளையும் வைத்து மரபணுப் பொறியியலாளர்கள் அவற்றில் தாக்கி நுழைதலையும், படையெடுப்பையும் நடத்துகிறார்கள்.

இயற்கை வளர்ப்பில் (தாவரங்கள் அல்லது பிராணிகள்) இரு பெற்றோரிடமிருந்தும் டிஎன்ஏ முழுமையாக அப்படியே குரோமோசோம் வடிவில் செல்கிறது. இயற்கையாக ஒழுங்கமைத்த சங்கிலிகள் உடையாமல், ஒருங்கிசைவுடன் உள்ளன.

ஆனால் மரபணுப்பொறியியல்மாற்ற சந்ததியில் இயற்கைச் சங்கிலிகள் எதிர்நோக்கவியலாத வழிகளில் குலைக்கப்பட்டு, மறுஅமைப்புக்கு உள்ளாக்கப்படுகின்றன.

மபொ பழங்களும் காய்கறிகளும் முற்றிலும் தொடர்பற்ற இனங்களிலிருந்து (பூச்சிகள், விலங்குகள், பக்டீரியா, மனிதர்களிலிருந்தும்) டிஎன்ஏக்களைக் கொண்டுள்ளன என்பது அவற்றை இயல்புக்கு மாறானவை ஆக்குகிறது. அவ்வாறில்லை என்றால், உயிர்த் தொழில்நுட்பக் குழுமங்கள் ஏன் அவற்றிற்கு உரிமை பதிவு செய்து, அவற்றைப் பயன்படுத்த ராயல்டி (உரிமத்தொகை) பெற்று, பல்வேறு நாட்டு விவசாயிகளையும் பல்வேறு முரண்பாடுகள் கொண்ட ஒப்பந்தங்களுக்கு ஏன் உடன்படுத்தவேண்டும்?

உயிர்த்தொழில் நுட்பக் குழுமங்கள், மபொ உணவுகள், இயற்கை உணவுகளுக்குச் சமமானவை என்று கூறுவது ஏன்?

இந்த உணவுகளை உருவாக்க மிகப் பெரிய அளவு பணம் முதலிடப்படுகிறது. பிற போட்டியாளர்களுக்கு முன்னரே பாதுகாப்பான சந்தைகளில் தங்கள் விளைபொருள்களைத் தள்ளிவிட இந்தக் குழுமங்கள் விரைகின்றன.

உயிர்த்தொழில் நுட்பத் தொழிலகங்களின் விளக்கம் இப்படிச் செல்கிறது:

“ஒரு மரபணுப்பொறியியல்மாற்ற உணவின் மாற்றப்பட்ட பெரும்பான்மைப் பண்புகள் அதே போன்ற இயற்கை உணவின் பண்புகளுக்கு ஒத்தவையாக இருந்தால், அந்த மபொ உணவு இயற்கை உணவைப் போன்றே, எல்லா விதங்களிலும் இருக்கவேண்டும்”.

இந்த விளக்கம் தர்க்கத்துக்கு முரணானது. நான்கு கால்கள், மீசைகள், ஒரு வால், இரு காதுகள், உடல் முழுவதும் மயிர் போன்ற ஒரே மாதிரிப் பண்புகளைக் கொண்டுள்ளதால், ஒரு நாயும் எலியும் சமமாகிவிடுமா?

விலங்குகளையும் மனிதர்களையும் பயன்படுத்தி, மிகுதியான செலவு பிடிக்கின்ற, காலவிரயம் செய்கின்ற, நீண்டகாலச் சோதனைகளின் தேவை இன்றியே தங்கள் விளைபொருள்களை எவ்வளவு விரைவாக விற்கமுடியுமோ அவ்வாறு விற்பதற்காக உயிர்த்தொழில் நுட்பத் தொழிலகங்கள் மேற்கண்ட சமன்மை வாதத்தை மிகச் சாதுரியமாக பிரச்சாரம் செய்துவருகின்றன. துரதிருஷ்டவசமாக, நம்நாட்டுக் கட்டுப்பாட்டு அமைப்புகளும் ஒழுங்குபடுத்தும் அமைப்புகளும் தொழிலகங்கள் கண்டுபிடித்த இந்த “சாராம்சச் சமன்மை”யின் சட்ட நிபுணத்துவ நுட்பத்தை ஒப்புக்கொள்கின்றன. நுகர்வோரும் ஏமாற்றப்படுகிறார்கள். அதை அரசாங்கமும் ஏற்றுக் கொள்கிறது. பெரிய பெரிய முதலாளிகள்

அதனால் மரபணுப்பொறியியல்மாற்ற விளைபொருட்கள் உணவுப்பாதுகாப்புக் கட்டுப்பாடுகள், கடுமையான நீண்டகாலச் சோதிப்புகள், அடையாளப்படுத்துதல் (அதாவது இவை செயற்கையாகத் தயாரிக்கப்பட்டவை என்று லேபல் இடுதல்) உட்பட்ட செயல்களைத் தவிர்த்து வந்துவிடுகின்றன. நம் நாட்டில் நுகர்வோருக்கு எந்தவிதப் பாதுகாப்புமே இல்லை.

இந்தக் கட்டுரை தொடரும் . . .

மரபணுத் தொழில்நுட்பம்-சில சிந்தனைகள் (முன் கட்டுரையின் தொடர்ச்சி)

marapanu-stil-1

(மபொ-மரபணுப் பொறியியல்,     மமா-மரபணு மாற்றப்பட்ட)

நம் நாட்டிலும் ரிலையன்ஸ், மோர், ஹெரிடேஜ் போன்ற பெருநிறுவனங்கள் கடைகளை நடத்தத் தொடங்கிய போதே மமா உணவுப் பொருள்கள் மிகுதியாக நாட்டில் பெருகிவிட்டன. தனியாக அடையாளமிடப் படாததால் மக்கள் தாங்கள் மபொ உணவுகளை உண்கிறோம் என்ற சிந்தனையே இல்லாமல் இன்றும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பீட்சா, பர்கர் போன்ற உணவுகளில் மமா நஞ்சு மிகுதி.

இதற்கு மேல் நமது அரசாங்கம் வால்மார்ட் போன்ற அமெரிக்கக் குழுமங்களைச் சிறிய அளவிலான கடைகள் வைக்கவும் அனுமதி அளிக்கிறது. அமெரிக்கா தான் மபொ நஞ்சுகளின் தாயகம் என்பதை மறந்துவிடாதீர்கள். ஏற்கெனவே மான்சாண்டோ குழுமத்தின் விதைகளை வாங்கிப் பயிரிட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது அரசாங்கம். இதுவரை கிரீன் பீஸ் போன்ற சில தனி அமைப்புகளே இவற்றை எதிர்த்து வருகின்றன. மக்களுக்கு இதுபோன்ற விசயங்கள் தெரியவும் இல்லை, அவர்களுக்கு இருக்கும் வாழ்க்கைப் போராட்ட நிலையில் இவற்றின்மீது அக்கறையும் இல்லை.

மபொ உணவுகள் பாதுகாப்பானவையா?

1989 -இல் ஒரு புத்தம்புதிய கொள்ளைநோய் அமெரிக்க ஐக்கிய நாட்டில் பரவியது. அதற்கு பலியானவர்கள் கடுமையான தசை வலியாலும் மிக அதிக எண்ணிக்கையிலான இரத்த வெள்ளை அணுக்களாலும் பாதிக்கப்பட்டனர். பக்கவாதம், நீண்டகால நரம்பியல், இதயப் பிரச்சினைகள், தோலில் வலிமிக்க வீக்கங்களும் வெடிப்புகளும், தன்னிச்சையான நோயெதிர்ப்புக் குறைபாடுகள், ஒளியைத் தாங்கமுடியாமை போன்றவை அவர்களைப் பீடித்த மற்ற சில அறிகுறிகள்.  சில மாதங்களுக்குள், மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட 5000 பேரில் 37 பேர் இறந்தனர், 1500 பேர் நிரந்தரமாக ஊனமாயினர். மருத்துவர்கள் இந்த வலிமிக்க, உயிருக்கு ஆபத்தான இரத்தச் சீர்கேட்டுக்கு ஈசனோ ஃபீலியா-மையால்ஜியா குறைபாடு என்று பெயரிட்டனர். அவர்கள் முயற்சி பலனளிக்கவில்லை.

marapanu-stil-2
பாதிக்கப்பட்டவர்கள் யாவரும் குறிப்பிட்ட உணவுக்கடைகளில் விற்கப்பட்ட ஓர் உணவுச்சேர்க்கையை ட்ரிப்டோஃபன் என்பதை உண்டனர் என்று கடைசியாக நோய்க்கட்டுப்பாட்டு மையம் கண்டுபிடித்தது. இந்த ட்ரிப்டோஃபன், ஒரு ஜப்பானியக் குழுமத்தினால் (ஷோவா டெங்கோ-ஜப்பானின் மூன்றாவது மிகப்பெரிய வேதிக் குழுமம் அப்போது) செய்யப்பட்ட மபொ உணவு என்பதை மேலும் செய்த ஆய்வுகள்  கண்டுபிடித்தன.

எனவே சந்தேகமின்றி ஒரு மபொ உணவு, உடல் நலத்துக்கு பாதுகாப்பானது என்று கூறமுடியாது. நமது பாரம்பரிய இயற்கை உணவுகள் நூற்றுக்கணக்கான, ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகப் பயன்பட்டுச் சேகரித்த அனுபவத்தினால் பாதுகாப்பானவை என்று நமக்குத் தெரியும். மாறாக இந்தப் புதிய தொழில் நுட்பம் நீண்டகால விளைவுகள் ஏற்படுவதைக் கணிப்பதில்லை. மபொ உணவுகள், விரும்பத்தகாத பக்கவிளைவுகளைத் தருபவையாக இருக்கக்கூடும். சில பத்தாண்டுகளுக்கு முன்னர், இப்படித்தான் டிடிடி -யினை உண்ட பசுக்களுக்குப் பாதிப்புகள் ஏற்பட்டன. ஆரோக்கியத்துக்கு மாறான அந்த விளைவுகளைக் கண்டுபிடிக்கப் பல ஆண்டுகள் ஆயிற்று.

marapanu-stil-3
மபொ டிரிப்டோஃபனின் விசயத்தில், அதை மேலும் உற்பத்தி செய்ய ஒரு பாக்டீரியத்தில் நான்கு மரபணுக்கள் செருகப்பட்டன. அந்த மரபணுக்கள் உண்டாக்கிய என்சைம் பாக்டீரியத்தின் வேதியமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தியதால் அது மேலும் மேலும் இந்த அமினோ அமிலத்தை உற்பத்தி செய்யலாயிற்று. அந்த அமிலம் புதிய வேதி மாற்றங்களைப் பக்கவிளைவாக ஏற்படுத்திப் புதியதொரு கூட்டுப்பொருளை உருவாக்கியது. அது டிரிப்டோஃபனை ஒத்ததாக இருந்தாலும் மனிதர்களுக்கு மிகுந்த நச்சுப்பொருள். புதிதாக உருவாகிய டிரிப்டோஃபன், 98.5% தூயதாக இருந்தாலும் அதில் மிகச் சிறிய அளவில் கலந்திருந்த நச்சுப்பொருளே மனிதர்களைக் கொல்லவோ செயலிழக்கச்செய்யவோ போதுமானதாக இருந்தது. (இந்தப் பிரச்சினை தெரியவந்தவுடனே அந்தக்குழுமம் எல்லா மாதிரிகளையும் அழித்துவிட்டது. அதற்கு லேபில் இட்டிருந்தால் தேடுதல் வேகமாக நிகழ்ந்திருக்கும்-இந்த வழக்கு இதுவரை தீர்க்கப்படாமலே இருக்கிறது.)

இயற்கையான பாக்டீரியா தயாரிக்கும் டிரிப்டோஃபன் நஞ்சானதல்ல. ஆகவே மாற்றப்பட்ட பாக்டீரியாதான் நச்சுப்பொருளை உற்பத்திசெய்த காரணி என்று நாம் சுட்டிக்காட்டலாம்.

marapanu-stil-4
நீண்டகாலம் மனிதர்களுக்கு எவ்வித ஆபத்தையும் ஏற்படுத்தாமல் இருந்தால் ஒழிய மபொ உணவுகள் உண்பதற்குப் பாதுகாப்பானவை என்று யாரும் 100% உறுதிகூற முடியாது.

தாறுமாறான முறையில் மரபணுக்களைத் தாவரத்திலோ விலங்கிலோ செருகுவது, எதிர்பாராத மாற்றங்களை அவற்றில் ஏற்படுத்தி, புதிய அல்லது உயர் அளவிலான தீங்கு பயக்கும் பொருள்களை உணவில் சேர்த்துவிடுகிறது. மபொ உணவுகளில் தீங்கான பொருள்கள் இருப்பதற்கு வாய்ப்பில்லை என்று உயிர்த்தொழில் நுட்பக் குழுமங்கள் கூறுவதற்கு எந்தவித அறிவியல் அடிப்படையும் இல்லை.

ஒரு புதிய மருந்து முழுமையாகச் சோதிக்கப்பெறவில்லை. அதன் மோசமான விளைவுகளைப் பற்றி இதுவரை எந்தத் தகவலும் இல்லை என்பதாலேயே நீங்கள் அதைப் பயன்படுத்திப் பார்ப்பீர்களா? இதைத்தான் நாம் மபொ உணவுகள் விசயத்திலும் கடைப்பிடிக்கச் சொல்கிறோம். ஆனால் தொழிலகங்களும், கட்டுப்பாட்டு அமைப்புகளும் அவை முழுமையாக ஏற்கத்தக்கவை என்று அழுத்திச் சொல்கின்றன.

உள்ளார்ந்த உடல்நல அபாயங்கள் நிகழ்ந்த சில சந்தர்ப்பங்கள்

marapanu-stil-5
* உயர்ந்த வேதிமாற்ற வீதம் இருக்குமாறு ஈஸ்டை மபொ வாயிலாக மாற்றினார்கள். அதனால் நொதித்தல் வேகமாக நிகழும், ரொட்டி செய்தல் அல்லது பீர் வடித்தலை விரைவுபடுத்தமுடியும். குளூகோஸில் வேதிமாற்றங்களை விரைந்து ஏற்படுத்தும் மரபணுக்கள் ஈஸ்டில் செருகப்பட்டன. இதனால் நஞ்சான மரபணுமாற்றப் பொருளான மெதில் கிளையோக்ஸால் என்பதன் சேர்க்கை ஈஸ்டில் ஏற்பட்டுவிட்டது என்று 1995 இல் ஆய்வாளர்கள் தெரிவித்தார்கள்.

* புகையிலைத் தாவரங்கள் மபொ வாயிலாக காமா-லினோலீயிக் அமிலத்தை உற்பத்தி செய்யுமாறு மாற்றப்பட்டன. இது உடல்நல உணவுத் தொழிலில் மிகுதியாகப் பயன்படுத்தப்படுகிறது. 1996 இல், இந்தத் தாவரம் எதிர்பாராதவிதமாக வேறொரு நச்சுப் பொருளை (ஆக்டாடெகாடெட்ரேனிக் அமிலம்) உருவாக்கத் தொடங்கிவிட்டது. இந்த நஞ்சு இயற்கையான புகையிலைத் தாவரங்களில் இருப்பதில்லை.

marapanu-stil-6
* 1998இல், பூச்சிகளைக் கொல்வதற்காக உருவாக்கப்பட்ட மபொ உருளைக்கிழங்கு, நோயெதிர்ப்பு மண்டலப் பிரச்சினைகள், முடமாக்கப்பட்ட உறுப்புவளர்ச்சி, தொண்டைக்குழல் உட்புறத்தோலில் மாற்றங்கள் எனப் பல கடுமையான உயிரியல் பிரச்சனைகளை எலிகளில் சோதித்தபோது ஏற்படுத்தியது என்று ஆய்வாளர் ஆர்பத் புஸ்டாய் காட்டினார். இந்த மபொ உருளைக்கிழங்கை உண்ணும் மனிதர்களுக்கும் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்குமா?

மபொ உணவை உண்பதால் வேறு பக்க விளைவுகள் உண்டா?

ஒவ்வாமை பற்றிய பிரச்சினைகள் உள்ளன. பெரியவர்களுக்கு 2% வீதமும் குழந்தைகளுக்கு 8% வீதமும் உணவு ஒவ்வாமை இருக்கிறது, ஏறத்தாழ நான்கிலொரு வீத மக்களுக்கு ஒவ்வாமை ஏற்படும் அபாயம் இருக்கிறது. இதற்குக் காரணம் புரோட்டீன்கள். புரோட்டீன் உற்பத்தியில் தான் மபொ ஈடுபடுகிறது. பொதுவாக ஒவ்வாமையை ஏற்படுத்தும் மூலங்களான பருப்புகள், மீன்கள், முட்டைகள் மற்றும் பால் பொருள்களிலிருந்து மட்டுமல்ல. மபொ உணவு, கூருணர்ச்சி மிக்க எவரிடமும் ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும். எதிர்பாராத, இதுவரை தெரியவராத ஒவ்வாமை விளைவிக்கும் பொருள்கள் உணவில் தோன்றுவதே இதற்குக் காரணம். ஒருவருக்கு இதுவரை பாதுகாப்பாக இருந்த உணவு, மபொ மாற்றத்திற்குப் பிறகு அபாயகரமானதாக மாறிவிடக்கூடும். புதிய புரோட்டீன்கள் அவற்றில் உற்பத்தி ஆவது ஆபத்தான வேதிவினையைத் தூண்டுவதாகிவிடலாம்.

marapanu-stil-7
களைக்கொல்லிகளை எதிர்க்குமாறு உருவாக்கப்பட்ட மபொ சோயா அவரையில் பாக்டீரியா, பெடூனியா, ஹெபாடைடிஸ் பி மற்றும் எச்ஐவியை உண்டாக்கும் வைரஸ் போன்றவை அடங்கியுள்ளன.

அதிகமான புரோட்டீனைத் தருவதற்காக சோயா அவரைக்குள் பிரேசில் பருப்பிலிருந்து எடுத்த ஒரு மரபணு செலுத்தப்பட்டது. ஒவ்வாமை உடைய நபர்கள் எல்லோருக்கும் இந்த சோயா அவரையால் மோசமான எதிர்வினை உண்டாயிற்று என்று பின்னர் நடந்த சோதனைகள் காட்டின. அந்த உற்பத்திப் பொருள் நிறுத்தப்பட்டது.

இங்கிலாந்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மபொ சோயா அவரையினால் உணவு ஒவ்வாமை 50% கூடுதலாக அதிகரிக்கிறது என்று காட்டினார்கள். செரித்த பிறகுதான் இந்த புரோட்டீன் எதிர்வினைகளைத் தூண்டுகிறது. பாதிக்கப்பட்டவர்கள், குடல் எரிச்சல் உணர்வு, செரிமானப் பிரச்சினைகள், தோல்நோய்கள், மிகுகளைப்பு அறிகுறிகள், தலைவலை, வேலைசெய்ய இயலாமை போன்றவை ஏற்படுவதாகப் புகார் கூறினர்.

ஒவ்வாமை வேதிகள் இருக்கின்றனவா? என்று உங்களால் சோதித்துத்தான் அறிய முடியும். ஒவ்வாமை உணவுகளைச் சாப்பிட்ட பிறகு கொஞ்சநேரம் கழித்துத்தான் எதிர்வினைகள் நிகழ்கின்றன. பாக்டீரியா, வைரஸ்கள், பூஞ்சைகள், பூச்சிகள், தாவரங்கள் அல்லது விலங்குகள் போன்ற உயிரிகளிலிருந்துதான் மரபணுக்கள் எடுக்கப்படுகின்றன. இவை உணவில் இதுவரை சேர்க்கப்படாதவை. எனவே அவை உற்பத்திசெய்யும் பொருள்கள் (புரோட்டீன்கள்) என்ன, எப்படிப்பட்ட பாதிப்பைத் தரும் என்பது தெரியாது.

உங்களுக்கு இதுவரை தெரியவராத ஒன்றை எவ்விதம் சோதிக்க முடியும்? இவற்றைப் பற்றிய லேபில்கள் (அறிவிப்பு ஒட்டிகள்) இன்றி இவற்றையும் இயற்கை உணவையும் வேறுபடுத்தி அறியமுடிவதில்லை என்பதால், மேலும் கேடு நிகழ்கிறது, நுகர்வோரால் இம்மாதிரி உணவுகளைத் தவிர்க்கமுடிவதில்லை.

மபொ உணவுக்கும் எதிருயிரி எதிர்ப்புக்கும் உள்ள தொடர்பு என்ன?

உயிர்த்தொழில்நுட்பத்தில் எதிருயிரி எதிர்ப்பு மரபணுக்களின் பயன்பாடு இன்னொரு பிரச்சினை. கிருமிகளுக்கெனப் பயன்படுத்தும் எதிருயிரிகள் (ஆண்ட்டிபயாடிக்ஸ்-நோய்களுக்கும் தொற்றுகளுக்கும் சிகிச்சைக்கெனப் பயன்படுத்தும் பயனுள்ள மருந்துவேதிகள்) எல்லாக் கிருமிகளையும் அழிப்பதில்லை. சில கிருமிகள் ஏற்கெனவே மருந்து எதிர்ப்புச் சக்தி பெற்றுவிட்டதால் பிழைத்துவிடுகின்றன. பாக்டீரியாக்களில் எதிருயிரிமருந்துக்கு எதிர்ப்பு உருவாக்கும் மரபணுக்களை மரபணுப் பொறியியலாளர்கள் “காட்டி”களாகப் பயன்படுத்துகிறார்கள்.

marapanu-stil-8
புதிய உயிரிக்குள் வேண்டப்பட்ட மரபணுக்களோடு இவையும் செலுத்தப்படுகின்றன. இந்தக் காட்டிகளைக் கொண்டு, இந்த அந்நிய மரபணுக்களை ஏற்றுக்கொண்ட செல்களை விஞ்ஞானிகள் பிரித்தறிய முடியும். (காட்டிகளை ஏற்ற செல்கள் மட்டும்தான் எதிருயிரிமருந்து இருக்கும் நிலையில் பிழைத்திருக்கமுடியும், பிற செல்கள் அனைத்தும் அழிந்துவிடும்.)

சுற்றுச்சூழலில் உள்ள பாக்டீரியாக்களும், எளிய உயிரிகளும் மபொ பயிரிலிருந்து இந்த எதிருயிரி எதிர்ப்பு மரபணுக்களைப் பெற்றுக்கொள்ளமுடியும் என்பதுதான் அபாயம். சிறிதுகாலத்தில் இவை இவற்றைப் பண்ணையிலிருக்கும் பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் கடத்திவிடும். எனவே மபொ உணவின் பரவலான பயன்பாடு, தொற்றுகளுக்கும் நோய்களுக்கும் பயன்படுத்தும் மருந்துகளுக்கு எதிர்ப்புச் சக்தியைப் பரப்புவதாகவே முடியும்.

எதிருயிரி எதிர்ப்பு மரபணுக்களைக் கொண்ட மபொ உணவை நாம் உண்ணும்போது எவ்வித பாதிப்பு நமக்கு ஏற்படுகிறது?

டிஎன்ஏவும், மரபணுக்களும் மிகத் தயாராக பாக்டீரியாக்களுக்கும் பிற எளிய உயிரிகளுக்கும் இடையில் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன என்பதைப் பல ஆய்வுகள்  நிரூபித்துள்ளன. மபொ தொழிலகங்கள் சொல்வதற்கு மாறாக, அவை முழுமையாக மபொ உணவிலிருந்து பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் வாய், உணவுப்பாதை வழியாகப் புகுந்துவிடமுடியும்.

மரபணுக்களும் டிஎன்ஏவும் செரிப்பிலும் உயிர்பிழைத்திருக்கும்

* எதிருயிரி எதிர்ப்பு மரபணுக்கள், மபொ உணவிலிருந்து அப்படியே மனித உணவுப் பாதைக்குள் குதித்து, குடலில் பல நிமிடநேரம் உயிர்வாழ முடியும். ஆகவே மபொ உணவிலிருந்து நேராகவே எதிருயிரி எதிர்ப்பு மரபணுக்கள் மனிதருக்கும் (அல்லது விலங்குகளுக்கும்) பரவ முடியும். மபொ உணவை உண்ணும் மனிதர்கள் நோயுறும்போது எதிருயிரி மருந்துகளால் அவர்களுக்குப் பலனிருக்காது.

marapanu-stil-9
* உணவுப்பாதையின் செரிப்பு மாற்றங்கள் டிஎன்ஏவை பாதிப்பதில்லை. எலிகளுக்குத் தரப்பட்ட டிஎன்ஏவை அவற்றின் இரத்த வெள்ளை அணுக்கள், மண்ணீரல், கல்லீரல் செல்கள் பெற்றுக்கொண்டன. எலிகளின் டிஎன்ஏவுடன் அவற்றில் சில ஒருங்கிணைந்துவிட்டன.

எதிருயிரிக் காட்டி மரபணுக்கள் ஒருவேளை பாக்டீரியா அல்லது வைரஸ்களுக்குக் கடத்தப்பட்டால், எதிருயிரி மருந்துகளுக்குக் கட்டுப்படாத நோய்கள் வனவிலங்குகளுக்கும் பண்ணை விலங்குகளுக்கும் மனிதருக்கும் பரவக்கூடும். இப்படிப்பட்ட காட்டி மரபணுக்களையும் அவற்றின் விளைபொருள்களையும் கொண்ட பயிர்களைப் பரவலாகப் பெருமளவில் பயிரிடுதலும் நுகர்தலும் நுணணுயிர்கள், தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் எல்லாரிடத்திலும் மிகப்பெரிய அளவில் எதிருயிரி மருந்தெதிர்ப்பு மரபணுக்களை உருவாக்கிவிடும் என்று விஞ்ஞானிகள் கவலைப்படுகிறார்கள்.

உதாரணமாக, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு (எஃப்டிஏ) 90களில், பாலில் எதிருயிரிகளின் அளவை 100 மடங்கு அதிகப்படுத்த அனுமதி அளித்தது. தங்கள் பண்ணைகளிலிருக்கும் பசுக்களுக்குத் தொற்று ஏற்படாமலிருக்க மிகுதியாக எதிருயிரி மருந்துகளை விவசாயிகள் பயன்படுத்த இது வாய்ப்புத்தந்தது. ஆனால் இதனால், எதிருயிரிகளுக்குக் கட்டுப்படாத புதிய நோய்க்கிருமிகள் அவற்றில் உருவாயின. இவற்றின் பாலைக் குடித்த மக்கள், மேலும் அதிக அளவிலான மருந்துகளையும், புதிய மருந்தெதிர்ப்பு பாக்டீரியாக்களையும் ஏற்க நேரிட்டது.

ஏற்கெனவே, அதிக எண்ணிக்கையிலான நோய்களை (காச நோய், காலரா, நிமோனியா போன்றவற்றை) குணப்படுத்த முடியவில்லை. பலவகை எதிருயிரி மருந்துகளுக்கும் எதிர்ப்புச்சக்திகொண்ட உயர்வகைக் கிருமிகள்தான் இதற்குக் காரணம். உபயோகமான மருந்துகளை மருத்துவர்கள், விவசாயிகள், பிராணிஉணவுத் தயாரிப்புத் தொழிலகத்தினர் போன்றோர் மிகுதியாகவும் தவறாகவும் பயன்படுத்தியதால் இந்த நிலை ஏற்பட்டது.

மரபணுப் பொறியியல்பக்கவாட்டு (சமதள) மரபணுப் பெயர்ப்பு என்ற கொள்கை 

அடிப்படையில் நிகழ்கிறது. இதற்கு ஓர் இனத்திலிருந்து தொடர்பற்ற இன்னொரு இனத்திற்கு மரபணுக்களை  மாற்றுவது என்பதுதான் அர்த்தம்.

மேலும் மோசம், பக்கவாட்டு மரபணுப் பெயர்ப்பு நிகழும் போது, நோய்க் கிருமிகள் எதிருயிரி மருந்துகளுக்குக் கட்டுப்படாமல் போவதால், இம்மாதிரிச் சமதள மாற்றத்தில் அவை புதிய சேர்க்கைகளில் அல்லது இடமாற்றங்களில் புதிய நோய்களை உண்டாக்குகின்ற புதிய, அதிக ஆற்றலுள்ள கிருமிகளை உருவாக்கிவிடும்.

மரபணுப் பொறியியலில் அபாயகரமான பாக்டீரியாக்களையும் வைரஸ்களையும் பயன்படுத்துவதில் பிற ஆபத்துகள் ஏதேனும் உண்டா?

marapanu-stil-10
புதிய நோய்களைத் தொடங்கும் அபாயம் இருக்கிறது. உயிர்த்தொழில் நுட்பத் தொழிலகங்களால் பயன்படுத்தப்படும் பல பாக்டீரியாக்கள், வைரஸ்கள் போன்றவை கழலைகள், பற்றுகள், நோய்களைத் தாவரங்களிலும் பிராணிகளிலும் உண்டாக்கக் கூடியவை. உதாரணமாக, மபொ பயிர்களில் காலிபிளவர் மொசாய்க் வைரஸ் மரபணுக்களை செயலூக்கம் செய்யவோ செயல்மட்டுப்படுத்தவோ ஊக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ஹெபாடைடிஸ் பி-யை ஒத்தது, எச்ஐவிக்குத் தொடர்புள்ளது. நாய்க்கடி வைரஸ் (ரேபீஸ்) பயிர்களில் பயன்படுத்தப்படுகிறது. பயிர்களுக்குப் பல நோய்களை எதிர்ப்பதற்காகப் பயன்படுத்தும் கிருமிக்கொல்லிகளில், ஒரு பூச்சியின் வைரஸில் தேளின் விசத்திலுள்ள மரபணுவைச் சேர்த்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

அது ஒருவேளை மனிதர்களுக்குக் கடத்தப்பட்டால், நரம்புமண்டலம் அல்லது நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது.

மரபணுப் பொறியியலில் இயற்கைக்கு மாறான முறையில் மரபணு மாற்றம் செய்வது, புதிய நோய்களின் தோற்றத்துக்குக் காரணம் எனச் சில விஞ்ஞானிகள் நினைக்கிறார்கள். இவை இனங்களின் எல்லைகளை மீறிக் குதிப்பதால், மனிதனுக்கும் விலங்குக்கும் ஏற்படுபவை. இவை பாக்டீரியாவும் வைரஸ்களும் முன் கணிக்க இயலாத மாற்றங்களுக்கு உட்பட்டதால் ஏற்பட்டவை. உதாரணமாக, பழ ஈக்களிலிருந்து ஒரு மரபணு மனிதர்களுக்குத் தாண்டிக்குதித்ததால் நரம்பியல் சார்ந்த ஒரு க்ஷீணநோய் ஏற்படுகிறது என்று புதிதாகக் கண்டுபிடித்தார்கள்.

தொடர்பற்ற பல நோய்க்கிருமிகள் புதிய செல்களில் தாக்கக்கூடிய மரபணுககள் பலவற்றைப் பொதுவாகக் கொண்டிருக்கின்றன. இந்தச் சூழல் பக்கவாட்டு மரபணு இடப்பெயர்ச்சிகளால் மட்டுமே நேர்ந்திருக்கமுடியும் என்று விஞ்ஞானிகள் மதிப்பிடுகிறார்கள். இவற்றின் விளைவாகப் பலவேறு இனங்களுக்கிடையில், தாவரங்களிலிருந்து பூஞ்சைகளுக்கும், பூச்சிகளிலிருந்து பிற விலங்குகள், பண்ணைப் பிராணிகள் ஆகியவற்றிற்கும், இவற்றிலிருந்து கடைசியாக மனிதராகிய நமக்கும் புதிய நோய்களும் தொற்றுகளும் கடத்தப்படும்.

உயிர்த்தொழில்நுட்பக் குழுமங்கள் சொல்லுவதுபோலபயிர்களின் மரபணுப் பொறியியல்,நச்சுவேதிப்பொருள் பயன்பாட்டைக் குறைக்கிறதா?

இல்லை. மாறாக, அதிகமான நச்சுவேதிப் பொருள் எச்சங்களைத்தான் நாம் எதிர் பார்க்கமுடியும். மபொ பயிர்களில் பெரும்பான்மையானவை, இவற்றின் விதைகளை விற்கும் குழுமங்கள் தயாரிக்கும் களைக்கொல்லிகளைப் பயன்படுத்தி வளருமாறுதான் உருவாக்கப்படுகின்றன. எனவே, இயல்பாகவே இந்தக் களைக்கொல்லிகளின் விற்பனை மிகுதியாகியுள்ளது.

ஆகவே எப்போதையும் விட இன்று நச்சுவேதிப்பொருள்களைச் சார்ந்திருப்பது மிகுதியாகியிருக்கிறது. மபொ பயிர்கள், களைக்கொல்லிகளின் செயலை எதிர்ப்பதால், முன் போலன்றி, விவசாயிகள் இப்போது தங்கள் பயிர்களைப் பாதுகாக்க, மேலும் அதிக நச்சுப் பொருள்களைத் தெளிக்கக்கூடும். இதன்விளைவாக, நாம் உண்ணும் பயிர்களில் முன் எப்போதையும்விட அதிக நச்சுப்பொருள்கள். சில மபொ பயிர்கள், தங்கள் ஒவ்வொரு செல்லிலுமே பூச்சிக்கொல்லிகளைத் தயாரிக்குமாறு உருவாக்கப்படுகின்றன. (அமெரிக்காவில் இப்பயிர்களே பூச்சிக்கொல்லிகளாகத்தான் வகைப்படுத்தப்பட்டுள்ளன.) ஆனால் எதிருயிரித் தடுப்புக் கிருமிகளைப் போலவே, இவற்றில் பிழைத்திருப்பவை எதிர்ப்பை ஏற்று, ‘மீயுயிரி’களாக மாறிவிடும். இது விவசாயிகளுக்குப் புதிய சுற்றுப் பிரச்சினைகளை உருவாக்கும், மேலும் அதிகப் பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்த நேரிடும்.

இம்மாதிரி தங்கள் செல்களுக்குள்ளாகவே உள்கட்டமைக்கப்பட்ட நஞ்சுகளைக் கொண்ட பயிர்கள், நாம் உண்பதற்குப் பாதுகாப்பானவை என்று உயிர்த்தொழில் நுட்பக் குழுமங்கள் சாதிக்கின்றன.

ஆனால் இவை புதிய பயிர்களாக இருப்பதாலும், மனிதர்களிடம் இவற்றைச் சோதிக்கப் பல ஆண்டுகள் ஆகும் என்பதாலும், இவை சோதிக்கப்படுவதே இல்லை. இவற்றின் பக்க விளைவுகள் தெரியவரப் பல ஆண்டுகள் பிடிக்கலாம். இதுவரை மனிதர்கள்மீது எவ்வித ஆய்வும் நடத்தப்பட்டதில்லை என்பதால் அவை பற்றி யாருக்கும் தெரியாது.

சில பயிர்கள், பூச்சிகளைக் கொல்லுமாறும், களைக்கொல்லிகளை எதிர்க்குமாறும் உருவாக்கப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட உணவுகள், நம்மை அதிக அளவு நச்சு வேதிப் பொருள்களை நாம் விழுங்க வைக்கும் என்பது உறுதி.

marapanu-stil-11
பிடி (Bt) பயிர்கள்: பூச்சிக்கொல்லி உள்அமைப்பு ஒவ்வொரு செல்லிலும் தங்கள் பூச்சிக்கொல்லிகளைத் தாங்களே படைத்துக்கொள்ளுமாறு உருவமைக்கப்பட்டவை.

இன்று பல தாவரங்கள், தாங்களே தங்களுக்குள் நஞ்சு உருவாக்கிப் பூச்சிகளைத் தடுக்குமாறு உருவாக்கப்பட்டுள்ளன. இதில் மிகப் பிரபலமான ஒன்று, Bt எனச் சுருக்கமாகச் சொல்லப்படும் பசிலஸ் தூரிஞ்சியென்சிஸ். இது இயல்பாக மண்ணில் காணப்படுவது. இது உருவாக்கும் நஞ்சு இப்போது எல்லா உணவுகளிலும் உள்ளது. இயற்கைப் பூச்சிக்கொல்லி பயன்படுத்தும் விவசாயிகள் மிக ஆர்வத்தோடு 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நஞ்சைத் தெளித்து வருகிறார்கள். சில பூச்சிகளின் உணவுப்பாதையில் சேரும்போது மட்டுமே நஞ்சாகுமாறு இவ்வேதி அமைந்துள்ளது. இந்த நச்சுக்குக் காரணமான பிடி மரபணுவைப் பலவேறு பயிர்களில் (உருளைக்கிழங்கு, சோளம், தக்காளி, ஆப்பிள், புகையிலையிலும்கூட) செருகினார்கள். இந்தத் தாவரங்கள் உருவாக்கிய Bt நஞ்சு, பரந்த எண்ணிக்கையிலான பூச்சிகளை-வண்ணத்துப் பூச்சிகள், தேனீக்கள், மகரந்தச் சேர்க்கைசெய்யும் பிற பூச்சிகள் போன்ற நன்மை செய்பவற்றையும்கூடக் கொல்லும் அல்லது அவற்றிற்குத் தீங்கு செய்யும் சாத்தியத்தைக் கொண்டிருந்தது.

Bt தொழில்நுட்பத்தால் நஞ்சு உட்புகுத்தப்பட்ட பயிர்களில் தாவரங்கள் தாமே இந்த நஞ்சைத் தொடர்ச்சியாக உற்பத்தி செய்வதால், செல்களில் உயர்அளவில் இது தேங்கி விடுகிறது. இந்த நஞ்சு பூச்சிகளின் உணவுப்பாதைகளைத் தகர்த்து ஒழிக்கிறது. விலங்குகளிலும், மனிதர்களிலும்கூட, உயர்அளவிலான இந்த நஞ்சு ஏதேனும் உயிரியல் மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. Bt உணவை மிக அதிக அளவில் உண்ணும் நுகர்வோருக்கு ஒவ்வாமை ஏற்படுத்தலாம், அல்சருக்கான மருந்துகளை அல்லது வயிற்று அமிலத்தன்மையைக் குறைக்க ஆண்டாசிடுகளைப் பயன் படுத்துவோரிடம் மோசமான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

மபொ பயிர்களை வளர்ப்பதால் வேறுபிற எதிரான விளைவுகள் உண்டா?

உண்டு. மரபணு மாசுபாடு என்பது பெட்ரோல் அல்லது கச்சாஎண்ணெய் பரவியதைத் துடைப்பதைப் போல எளிதில் துடைத்துவிடக் கூடியதல்ல. மபொ உயிரிகளும், பாக்டீரியாக்களும், வைரஸ்களும் வெளிச்சூழலில் விடப்படும்போது, அவற்றைக் கட்டுப்படுத்தவோ மீட்டுக்கொள்ளவோ இயலாது. மரபணுக்களில் நிகழ்த்தப்பட்ட தவறுகளைச் சரிசெய்வது கடினம். ஏனெனில் இவை வேதி மாசுகளைப் போன்றவை அல்ல. இவை வளர்கின்ற, வாழ்கின்ற, மாற்றமடைகின்ற, இனப்பெருக்கம் செய்கின்ற உயிரிகள். இதன் விளைவாக, விலங்குகளிலும், சுற்றுச்சூழலிலும் எதிர்பாராத முடிவுகளை ஏற்படுத்துமாறு சூழலியல் மாசுபடலாம்.

இப்போதே மபொ பயிர்களிலிருந்து மகரந்தம் காற்றாலும் மழையாலும் அடித்துச் செல்லப்படுகிறது, வண்டுகள், மகரந்தத்தைப் பரப்பும் தேனீக்கள் போன்ற காட்டு உயிரிகளால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன, பண்ணைப் பயிர்களுக்கும், மைல் கணக்கில் தொலைவிலுள்ள அப்பூச்சிகளின் இனங்களுக்கும் பரவுகின்றன.

உள்வளரும் பூச்சிக்கொல்லிகளைக் கொண்ட மபொ பயிர்கள் தீங்குசெய்யும் பூச்சிகளை மட்டுமல்ல, வண்ணத்துப்பூச்சிகள், தேனீக்கள் போன்ற மகரந்தச் சேர்க்கை செய்வனவற்றையும், தீங்கான பூச்சிகளை உண்டு உதவுவனவற்றையும் கொல்லும் இயல்பு படைத்தவை.

இப்படியிருப்பினும்இந்தப் புதிய பயிர்கள் வளர்க்கப்படுவதும் உணவாக விற்கப்படுவதும் ஏன்?

மிகப் பெரிய அளவிலான பணம் இவற்றில் கொட்டப்பட்டிருக்கிறது. (2000இல் உலக அளவிலான உயிர்ப்பொருள் சந்தையின் மதிப்பு 2000 பில்லியன் அமெரிக்க டாலர், இது இன்னும் பலமடங்கு அதிகரித்துள்ளது.)

உயிர்த்தொழில் நுட்பம், உணவு, சேர்க்கைப்பொருள்கள், மருந்துப்பொருள்கள், வேதிப் பொருள்கள், விதைகள் ஆகிய தொழில்களில் கட்டுப்படுத்தும் ஆற்றலோடு இறங்கியிருப்பவை ஒருசில இராட்சசத் தொழிலகங்களே. இந்த பன்னாட்டுத் தொழிலகங்கள், தாங்கள் பெரும்பணம் செலவிட்டு வளர்த்த மபொ விளைபொருள்களின் உரிமைகளையும் முழு அதிகாரத்தையும் கையில் வைத்துள்ளன. ஆகவே போட்டியாளர்களை மீறிச் சந்தைகளை அடைய அவை வேகமாகச் செயல்படுகின்றன. அரசாங்கத்தின் பாதுகாப்பு நிபந்தனைகளைத் தளர்த்தவும் விரைகின்றன.

marapanu-stil-12
இதனால்தான் உணவுப் பயிர்கள், பிராணிகள் போன்றவற்றை மரபணுப் பொறியியல் மாற்றம் செய்வது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பண்ணைகளில் நடைபெறும் இயற்கையான வளர்ப்புமுறையின் ஒரு வகையே என்று உயிர்த் தொழில்நுட்பத் தொழிலகங்கள் கூறிவருகின்றன. அவற்றின் வாதங்களைச் சுருக்கிச் சொன்னால்-

* மபொ உணவுகள், நாம் உண்ணும் இயற்கை உணவுகளோடு ஒத்தவை ஆதலின் (சாராம்சச் சமன்மை என்பது இங்கு பயன்படுத்தப்படும் சொல்) அவைகளிலிருந்து வேறுபட்டவை அல்ல.

* மபொ உணவுகள், இயற்கை உணவுகளைப் போன்றவையே ஆதலின், அவற்றை மிகுந்த பணச்செலவு பிடிக்கக்கூடிய, மனிதர்கள், விலங்குகள் மீதான முழுமையான நீண்டகாலச் சோதனைக்கு உட்படுத்துவது தேவையில்லை;

* ஆகவே இம்மாதிரி மபொ உணவுகளைத் தனியாக அடையாளமிடுவதுகூடத் தேவையில்லை, ஏனெனில் அவை இயற்கை உணவுகளைப் போன்றவையே என்று அத்தொழிலகங்களின் வாதம் செல்கிறது.

அரசாங்கங்களும், பன்னாட்டு ஒழுங்குபடுத்தும் அமைப்புகளும் (எஃப்ஏஓ, டபிள்யூஎச் ஓ போன்றவை) இந்த வாதங்களை ஏற்றுக்கொண்டுள்ளன. ஆகவேதான் இப்போது எங்கு பார்த்தாலும் மபொ பயிர்களை வளர்ப்பதும் விற்பனை செய்வதும் நடக்கிறது, அடையாளமிடப்படாத செயற்கை உணவுகள் எங்கும் கிடைக்கின்றன.

சாராம்சச் சமன்மையினால் ஏற்படும் பிரச்சினை

சாராம்சச் சமன்மை என்ற வாதத்தின் காரணமாகத்தான் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் மபொ உணவுகளை நீங்கள் இப்போது சாப்பிடுகிறீர்கள். பாரம்பரியத் தாவர அல்லது பிராணி வளர்ப்பு முறையின் சற்றே மாறிய வடிவமே மபொ என்று தொழிலகங்கள் சொல்வதைக் கட்டுப்பாட்டு அமைப்புகள் ஒப்புக்கொள்கிறார்கள். ஊட்டச்சத்துப்பொருள்கள், ஒவ்வாமை பயக்கும் வேதிகள், இயற்கை நஞ்சுகள் போன்ற சில அடிப்படைகளில் மட்டுமே மபொ உணவுகள் சோதிக்கப்படுகின்றன. அவற்றில் புதிதாக நஞ்சாகவோ, தீங்குபயப்பதாகவோ இருக்கக்கூடிய தெரியாத பொருள்களைச் சோதனைகள் கருத்தில் கொள்வதில்லை.

டிரிப்டோஃபனால் கொடிய விளைவுகள் ஏற்பட்டபோதிலும் அந்தக் குழுமம், சாராம்சச் சமன்மை என்ற கோட்பாட்டு அடிப்படையில், தனது மபொ விளைபொருள், “தூய்மையானது”, இயற்கைப்பொருளைப் “போன்றே உள்ளது” என்று காட்டமுடிந்தது. விலங்கு அல்லது மனிதன் மீது இந்தப் பொருள் சோதிக்கப்பட்டிருந்தால், இந்த விளைபொருள் இயற்கையான டிரிப்டோஃபனைப் போன்றது அல்ல என்று உடனே தெரிந்திருக்கும்.

மமா உணவு பாதுகாப்பானது. பாரம்பரிய உணவு சோதிக்கப்படுவதை விட அது இன்னும் முழுமையாகவே சோதிக்கப்படுன்றது. ஆகவே மேலும் பாதுகாப்பானதாகவே இருக்கும்” என்று உயிர்த்தொழில்நுட்பத் தொழில் சொல்கிறது. இதை நாம் நம்ப முடியுமா?

இந்தத் தொழில்நுட்பம் இன்னும் புதியது தான். 30 வயது கூட ஆகவில்லை. மரபணுக்களின் நடத்தையைப் பற்றிப் போதிய அளவு நமக்குத் தெரியாது. ஆகவே இவ்வகை உணவு பாதுகாப்பானது என்ற கூற்றை ஒப்புக்கொள்ள முடியாது. மான்சான்டோ போன்ற முன்னணி நிறுவனம்கூட, “மபொ உணவுகளை நீண்டகாலம் உண்பதன் விளைவுகளைப் பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது, எங்கள் விளைபொருள்களைப் பாதுகாப்புக்கென மனிதர்கள்மீது ஒருபோதும் சோதித்துப் பார்த்ததில்லை” என்று ஒப்புக்கொள்கிறது.

தொழில்நிறுவனங்கள் அபாயங்கள் இல்லை என்று கூறினாலும், இவ்வளவு சிக்கலான ஆபத்துகளும், ஏதேனும் தவறாகப் போனால் யார் பொறுப்பு என்னும் கேள்வியும் எழுவதால் காப்பீட்டுக்கழகங்கள் தொழிலைக் காப்பீடு செய்வதற்கான செலவைக் கணிக்க முடியாமல் திணறுகின்றன.

எந்த மபொ உணவிலும் மரபணுக்களைத் தாறுமாறாக மாற்றுவதே முன்கணிக்க இயலாத விளைவுகளைக் கொண்டதுதான். எந்த அபயாகரமான பொருளையும் கண்டு பிடிக்க முழுமையாக நம்பத்தகுந்த முறை எதுவும் இப்போது கிடையாது.

marapanu-stil-13
மருந்துகளின் பாதுகாப்பைச் சோதிக்கும் இப்போதுள்ள முறைகள் மிகவும் செலவு பிடிப்பவை, காலம் எடுத்துக்கொள்பவை. அப்படியும் அவையும்கூட, சந்தையில் புதிதாகப் புழக்கத்துக்கு வரும் மருந்துகளில் 13% அளவு ஏற்படுத்தும் தீங்கான விளைவுகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இம்மாதிரிச் செலவுமிகுந்த நீண்டகால சோதனைகளைத் தவிர்க்க, உயிர்த்தொழில் நுட்பப் பெருந்தொழில், மிகப் பெரிய முயற்சியை மேற்கொண்டு ஒழுங்குபடுத்தும் அமைப்புகளைப் பாரம்பரிய வளர்ப்புமுறையின் ஒரு மாறுபாடுதான் மரபணுப் பொறியியல் என்று நம்பவைத்துள்ளது.

வேடிக்கை என்ன என்றால், ஒழுங்குபடுத்தும் அமைப்புகளே விளைபொருள்களைச் சோதிக்கவும் மதிப்பிடவும் மேற்கண்ட உயிர்த்தொழில்நுட்பத் தொழிலகங்களைத்தான் சார்ந்துள்ளன.

நீதிபதியே தீர்ப்புச் சொல்லக் குற்றவாளியை நம்பியிருக்கும் நிலைதான்!

அரசாங்கத்தின் அமைப்புகளிலுள்ள விஞ்ஞானிகளுக்கு இவை எல்லாம் நன்றாகத் தெரியும். ஆனால் அரசாங்கத்துக்கு பயந்தோ, பெரிய குழுமங்களிலிருந்து கிடைக்கும் பெருந்தொகைகளுக்கு ஆசைப்பட்டோ அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள். அணுவின் ஆபத்து தெரிந்தும் கூடங்குளங்களை வரவேற்கும் விஞ்ஞானிகள் போலத்தான். அரசியல்வாதிகளுக்கு ஓட்டுப் பொறுக்கினால் போதும். அவர்கள் இதைப் பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டார்கள். ஆனால் மபொ நஞ்சுகள் எல்லார் உடலிலும் கலந்தால் யாரும் விளைவுகளைத் தவிர்க்க இயலாது. பணமுள்ளவர்கள் லஞ்சம் கொடுத்தும் தப்பித்துக்கொள்ள முடியாது. ஒருவேளை வளரும் நாடுகளின் அரசாங்கங்கள், இம்மாதிரி உணவை உண்டு மக்கள் தாங்களாகவே தங்கள் தொகையைக் குறைத்துக் கொள்ளட்டும் என்று விட்டுவிடுகிறார்களோ என்றும் நினைக்கவேண்டியுள்ளது.

(அடுத்த வாரம் இக்கட்டுரையின் இறுதிப்பகுதி)

மரபணுத் தொழில்நுட்பம்-சில சிந்தனைகள் – கட்டுரையின் இறுதிப்பகுதி

marapanu-stil-14
மரபணுத் தொழில் நுட்பத்தினால் ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த வேண்டிய நிறுவனங்களே தங்கள் சோதனைகளுக்கு அத்தொழில்நுட்பத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் ஆய்வகங்களைச் சார்ந்துள்ளன என்று முன்பே குறிப்பிட்டோம். அந்த நிறுவனங்கள் மிக மேலோட்டமாகத்தான் சோதனைகளை நிகழ்த்துகின்றன. மனித உயிரின் மாண்பு என்பது அந்நிறுவனங்கள் அறியாதது. அவை அறிந்ததெல்லாம் காசு பார்ப்பது ஒன்றே.

நிறுவனங்களின் மேலோட்டமான சோதிப்பு முறைகளுக்கு உதாரணங்கள்:

மபொ உருளைக்கிழங்கு: Bt நஞ்சினைத் தன் மபொ உருளைக்கிழங்கில் மான் சாண்டோ சோதித்தது ஒரு மேலோட்டத்தன்மைக்கு ஒரு நல்ல உதாரணம். இந்த உருளைக்கிழங்கு பலபேருக்கு ஒவ்வாமை எதிர்வினையை ஏற்படுத்தியது. பூச்சிக்கொல்லி எதிர்ப்பு உருளைக் கிழங்கிலிருந்து போதிய அளவு நச்சுப் பொருளைப் பிரித்தெடுக்க முடியவில்லை என்று குழுமம் என்று சாக்குக் கூறியது. ஆகவே Bt மரபணுவை E.கோலை கிருமிகளில் புகுத்தினார்கள். இந்தக் கிருமிகளிலிருந்து வெளிப்பட்ட நஞ்சினைத் தனிமைப்படுத்திச் சோதனைகளில் பயன்படுத்தினார்கள். இந்த நஞ்சு, குறிப்பாக ஒவ்வாமைகளுக்குக் காரணமாக அமையும் தன்மையில் மபொ உருளைக்கிழங்கில் வெளியாகும் அதே நஞ்சாக இருக்க வாய்ப்பில்லை.

பூச்சித்தடுப்புச் சோளம்: (Bt சோளம் என்று சொல்லப்படுவது) மனிதர் உணவுக்கானது. நோவார்ட்டிஸ் நடத்திய உணவுச்சோதனைகள் இந்தச் சோளத்தைப் பயன்படுத்திச் செய்யப்படவில்லை. இதற்கும் ஒரு மாற்று ஏற்பாடுதான். (Bt நஞ்சு, E.கோலையிலிருந்தே பெறப்பட்டது.) இந்தச் சோளத்தைச் சரியாகவும் சோதிக்கவில்லை. மனிதருக்கு பதிலாக எலிகள் பயன்படுத்தப்பட்டன. மக்களுக்கு இந்த மபொ சோளம் விஷமூட்டும் அளவுக்குப் பாதுகாப்பற்றதாக இருக்கும் என்ற சாத்தியத்தை இந்தக் குழுமம் அறவே புறக்கணித்துவிட்டது.

நட்பான, இலக்கு நிர்ணயிக்காத பூச்சிகளின்மீது Bt சோளத்தின் தாக்கத்தை மதிப்பிடுவதற்கான ஆய்வுகள் மோசமானமுறையில் அமைக்கப்பட்டிருப்பது, தனியார் உளவுநிறுவனம் ஒன்றினால் கண்டறியப்பட்டது. யதார்த்தமான முறையில் இந்த ஆய்வு நடத்தப்படவில்லை. பூச்சிகள் அந்த நஞ்சுகளை உண்டனவா என்பதே ஐயத்திற்கிடமானது. இந்நிலையில் எந்த எதிரான விளைவுகளும் அறியப்பட வாய்ப்பில்லை. குழுமத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், உணவுச் சங்கிலி எதிர்வினைகளையும் புறக்கணித்துவிட்டார்கள், வேதி நஞ்சுகளைச் சோதிக்கப் போதுமான முறைகளை அவர்கள் கையாளவில்லை.

marapanu-stil-21
மான்சாண்டோவின் rBGH: பசுக்கள் மிகுதியாகப் பால் கொடுக்கவேண்டி அவற்றின் உடலில் இந்த மறுசேர்க்கைக் கால்நடை ஹார்மோன் ஊசியாகப் போடப்பட்டது. இதற்கான சோதனை, முப்பது எலிகளின்மீது 90 நாட்கள் மட்டுமே நடத்தப்பட்டது. (வழக்கமாக, மனிதர்கள் பயன்பாட்டுக்கான புதிய மருந்தினைக் குறைந்தபட்சம் பல நூற்றுக்கணக்கான எலிகள்மீது இரண்டு ஆண்டுகளேனும் நடத்துவதுதான் முறை.)

ஆனால் அந்தக் குறைந்த நாட்களிலேயே மருந்து எலிகளுக்குத் தீங்குசெய்வது குழுமத்திற்குத் தெரிந்துவிட்டது. எலிகளில் எதிர்ச்செயல்செல்கள், தைராயிடு கழலைகள், புரோஸ்டேட் சுரப்பி பாதிப்பு ஆகியவை கண்டறியப்பட்டன. பசுக்களிலும் 20க்கு மேற்பட்ட கடுமையான பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புத் தெரிந்தது. தொற்றுகள் அவற்றிடையே மிகுதியாகப் பரவுதல், குறிப்பாகப் பால்மடிகளில் தொற்று, சினைப்பைகளில் குழிப்புண்கள், கருப்பையிலும் செரிப்பு மண்டலத்திலும் ஒழுங்கீனங்கள், உறுப்புகளில் காயம், கால்களில் கோளாறுகள், கன்றுகள் பிறப்புக் குறைபாடு ஆகியவை ஏற்பட்டன. தொற்றுக்கு ஆட்பட்ட பசுக்களின் பாலில் அதிக சீழ், மிகவலுவான கிருமிகள், இரத்தம் ஆகியவை காணப்பட்டன. மற்ற முடிவுகள்: பாலின் சுவை மாற்றம், வீட்டில் வைத்திருக்கும் கால அளவில் குறைபாடு, அதிகக் கொழுப்பு, குறைந்த புரோட்டீன் அளவு போன்றவை. இவ்வளவு குறைகள் இருந்தும், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை(FDA), rBGHக்கு அனுமதி வழங்கியது. இதனால் தொற்றுகளைத் தடுக்க அதிக அளவில் எதிருயிரி மருந்துகள் தேவையாயின. பாலில் அனுமதிக்கப்படும் எதிருயிரிகளின் அளவை 100 மடங்கு (10000%) FDA உயர்த்தியது.

அமெரிக்க FDAவுக்கு மான்சாண்டோ அளித்த ஆய்வு, சுதந்திரமான அறிவியல் மதிப்பீட்டுக்கு அளிக்கப்படவே இல்லை. மான்சாண்டோவின் மதிப்பு சரிப்படுத்த இயலாத அளவுக்குக் கெட்டுப்போகும் என்ற கருத்தினால் இதுவரை FDA ஆய்வின் அடிப்படைத் தகவல்களை மதிப்பிட அனுமதி வழங்கவே இல்லை.

marapanu-stil-31

ரவுண்ட்அப் ரெடி சோயா அவரை (RRS): மீன்களுக்குப் பத்துவார அளவு வரை உணவாக அளிக்கப்பட்ட பின்பு, மான்சாண்டோவின் RRS மனிதர்களுக்குத் தகுதியானது என்று சான்று அளிக்கப்பட்டுவிட்டது. சிறிய எண்ணிக்கையிலான கோழிக்குஞ்சுகள், எலிகள், பசுக்களுக்கு சிற்றளவுச் சோதனைகள் நடத்தப்பட்டன. சோதிக்கப்பட்ட RRSக்கு ரவுண்ட்அப் களைக்கொல்லி தெளிக்கப்படவே இல்லை. எனவே அதில் பாதிக்கக்கூடிய வேதிப்பொருளான கிளைபோசேட்டின் அளவு மிகக்குறைவாகவே இருந்திருக்கும். முறையான நஞ்சுச் சோதனைகளாக இவை ஏற்கப்படாது என்று மான்சாண்டோவிற்கு நன்றாகத் தெரியும். இருப்பினும் இதற்கு உடல் நலத்திற்கு ஏதுவான சோதனை என்று குழுமம் பெயர் இட்டது. மேலும் பல விடுபாடுகளும் யூகங்களும் இருந்தன. புதிய புரோட்டீன்கள் பாலில் இருப்பது புறக்கணிக்கப்பட்டது. விவாதிக்கவே படவில்லை. ஒவ்வாமையை உண்டாக்கும் தெரிந்த புரோட்டீன்கள் மட்டுமே சோதிக்கப்பட்டன. சாதாரணப் பசுக்கள், கோழிக்குஞ்சுகளோடு ஒப்பிட்டால், சோதிக்கப்பட்ட சிறிய அளவிலான பசுக்களின் பாலில் அதிகக் கொழுப்பும், கோழிக்குஞ்சுகளுக்கு அதிக மாமிசமும் காணப்பட்டன. ஏன் என்று சோதிக்க மேலும் சோதனை எதுவும் நடத்தப்படவே இல்லை. RRSஇன் சுவை நன்றாக இருந்ததால், அது மிக அதிகமாக உண்ணப்பட் டதுதான் காரணம் என்று மான்சாண்டோ கூறிவிட்டது. அதிக எண்ணிக் கையிலான பிராணிகளை வைத்துச் சோதித்திருந்தால் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இருந்திருக்கக்கூடும்.

ஒழுங்குபடுத்தும் அதிகாரஅமைப்புகள் இத்தகைய ஆய்வுகளை முதலில் எவ்விதம் ஒப்புக்கொண்டன என்பதே விந்தையானது. இப்படிப்பட்ட புதிய உற்பத்திப் பொருள்களை நீண்டகாலம் மனிதர்களுக்குக் குறைந்த அளவில் உணவாக அளித்துச் சோதிப்பது ஒன்றே உணவுப்பாதுகாப்பினைத் தகுந்த அளவு உறுதிப்படுத்த ஒரே வழி.

(குறிப்பு: 1998 மே மாதத்தில் அமெரிக்காவில் அறிவியலாளர்கள், மதத் தலைவர்கள், உடல்நல அதிகாரிகள், நுகர்வோர், உணவுசமைப்போர் ஆகியோர் அடங்கிய கூட்டமைப்பு ஒன்று FDAவின்மீது வழக்குத் தொடர்ந்தது என்பதில் வியப்பில்லை. கடுமையான சோதனைகள் இன்றியும், அடையாளப்படுத்தப் படாமலும் மபொ உணவுகளைச் சந்தையில் விடுவதன் வாயிலாக FDA உலகம் முழுவதுமுள்ள பொதுமக்கள் நலத்தைப் புறக்கணிக்கிறது, மத சுதந்திரத்தைக் குலைக்கிறது என்பது அதன் சாரம்.

போதுமான பாதுகாப்பு மதிப்பீடுகள் இல்லாததைப் பற்றிக் குழுமத்தின் சொந்த அறிவியலாளர்கள், நலத்திறனாளர்கள் ஆகியோரின் பரவலான எதிர்ப்பையும் எஃப்டிஏ புறக்கணித்துவிட்டது என்பதை எடுத்துக்காட்டுமுகமான ஆவணங்க ளையும் நினைவுக்குறிப்புகளையும் இந்த வழக்கு வெளிப்படுத்தியது.)

மருந்துகளிலும், பாரம்பரிய நோய்களைக் குணப்படுத்துவதிலும் நமக்கு மரபணுப் பொறியியல் உதவ முடியுமா?

மரபணுநகலெடுத்தல் (குளோனிங்) உள்ளிட்ட மருத்துவ ஆய்வுகள் மரபணுப் பொறியியலைப் பயன்படுத்துகின்றன. இவற்றில் வேறு முரணான பிரச்சினைகள் எழுகின்றன. இங்கு மபொ உணவுகள் பற்றி மட்டுமே பார்ப்பதால் அந்தப் பிரச்சினைகளைப் பற்றி இங்கு எழுதஇயலாது. ஆயினும், அதே தவறான தொழில்உத்திகள், கருதுகோள்கள் அடிப்படையில்தான் ஆய்வு அமைந்திருப்பதால், விவசாயத்தில் எழும் அதே பிரச்சினைகளே மருத்துவத்திலும் எழுகின்றன.

நாம் மபொ உணவுகளை உண்கிறோமா? இந்தியாவில் மபொ உணவுகள் விற்கப் படுகின்றனவா?

——————–

மரபணுரீதியில் கெடுக்கப்பட்டு, இந்தியாவில் விற்கப்படும் உணவுகள்

சீஸ் ஸ்ப்ரெட்-”கிரீம் சீஸ்”

கிரீம்டு ஹனி-”குழந்தைகளுக்கு ஏற்றது”

marapanu-stil-41

டெய்ரி மில்க்-சாக்கலேட்

பேபி பிஸ்கட்-”தனியாகக் குழந்தைகளுக்கெனச் செய்யப்பட்டது”

கார்ன் ஆயில்

வைட்டமின் ஈ சப்ளிமெண்ட்

குழந்தைகளுக்கான செயற்கைப் பால்

இன்னும் பல.

——————————

மபொ சோயா அவரை (களைக்கொல்லி எதிர்ப்பு) விற்கப்படுகிறது. மற்றசில தாவர வகைகளும்-சோளம், தக்காளி, உருளைக்கிழங்கு முதலியவை விற்கப்படுகின்றன. இவை இயல்பாக விளைந்து வந்த உணவுகள் அல்ல, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட, பெருங்கடைகளில் கிடைக்கின்ற பதப்படுத்தப்பட்ட உணவுகள்.

வேகஉணவுத் தொடர்கள், உணவுக்கடைகள் போன்றவை பொதுவாக மற்றொரு ஆதாரம். மெக்டொனால்டு கடைகளின் பர்கர் பன்களிலும், கேஎஃப்சியின் பன்களிலும் ரவுண்ட்அப் ரெடி சோயா பீன்ஸ் இருப்பதை கிரீன்பீஸ் நிறுவனம் கண்டறிந்தது. (இந்த நிறுவனத்தின் சிக்கன்65 விளம்பரங்களைப் பெருநகரங் களில்-ரூ.25க்கு இது கிடைக்கிறதாம்-எங்கும் காணலாம்.)

அடையாளமிடப்படாததால், குறித்த ஒரு பொருள் மபொவா இல்லையா என்பதை உறுதியாகச் சொல்லமுடியாது. சோயா அவரையைப் பொறுத்தமட்டில், இயற்கையான சோயாபீன்ஸ் உடன் செயற்கை உணவைத் தயாரிப்பாளர்கள் கலந்துவிடுவதால் உங்களால் தனியாக அதைத் தேர்ந்தெடுக்க முடியாது.

மபொ உணவுகளின் வகைகள்

பொதுவாக மபொ உணவுகளில் மூன்று வகைகள் உள்ளன:

ஃ புதிதாக வரும் உணவு அல்லது இயற்கைவிளைச்சல்களிலிருந்து மாறுபடும் உணவு. உதாரணமாக, வைட்டமின் ஏ மிகுதிப்படுத்திய அரிசி அல்லது உறைவுஎதிர்ப்பு ஸ்ட்ராபெரிப் பழங்கள்.

ஃ ஓரளவு பதப்படுத்தலுக்கு ஆளாகிய, சோயா பால் போன்ற மபொ உணவுகள் அல்லது உணவுப்பகுதிகள். அவற்றில் மாற்றப்பட்ட புரோட்டீன் அல்லது டிஎன்ஏ உள்ளது.

ஃ கடைசியாக, மபொ தாவரங்களிலிருந்து பெறப்பட்ட, மிகுதியான பதப்படுத்தலுக்கு ஆளான உணவுகள். உதாரணம், மபொ கரும்பிலிருந்து பெறப்பட்ட சர்க்கரை. இவற்றில் மாற்றப்பட்ட புரோட்டீன் அல்லது டிஎன்ஏவின் அளவு இருக்காது அல்லது மிகக் குறைவாக இருக்கும். அதைக் கண்டுபிடிப்பது கடினம்.

மபொ உணவைத் தவிர்ப்பது எப்படி?

மபொ உணவுகளைத் தவிர்ப்பது மிகக்கடினமாகி வருகிறது. எதிலும் அடையா ளமிடுவதே கிடையாது என்பதால், நீங்கள் மபொ உணவு எது என்றே கண்டறிய வழியில்லை. ஆகவே வாங்குவதா தவிர்ப்பதா என்பதையும் முடிவெடுக்க முடியாது. மிகச்சாதாரணமாகக் கடைகளில் கிடைக்கின்ற மபொ சோயாவை எடுத்துக்கொள்ளுங்கள். வடஇந்தியர்கள் அதிக அளவு சோயா பீன்ஸை உண்கி றார்கள். தமிழ்நாட்டிலும் இப்போது சோயாவை உண்பது அதிகரித்து வருகிறது. பலவேறு சோயா பீன்ஸ் உணவுவகைகளையும் தயாரிப்பு முறைகளையும் தயாரிக்கும் குழுமங்களே அறிமுகப்படுத்துகின்றன. மேற்கிலும்கூட சோயா எண்ணெய், சோயா மாவு, சோயா லெசிதின் போன்ற தயாரிப்புகள் உட்பட அவை எல்லாப் பதப்படுத்தப்பட்ட உணவுகளிலும் 60%க்குக் குறையாமல் உள்ளன. பெரிய முதலீட்டாளர்களின் கடைகளில் விற்கப்படும் ஐஸ்கிரீம், தானியங்கள், பிஸ்கட்டுகள், குழந்தை உணவு, மரக்கறி பர்கர்கள் முதலியவற்றிலிருந்து சமையல் எண்ணெய் வரை மபொ உணவுகள் தான்.

marapanu-stil-51
சோளம், கனோலா போன்றவை சமையல் எண்ணெயிலும் மார்கரீனிலும் பயன்படுத்தப்படும் பொதுவான மபொ உணவுகள். தக்காளி, உருளைக்கிழங்கு, ஸ்க்வாஷ் போன்றவை பிற பொருள்கள்.

உணவுச்சேர்க்கைகளுக்கும் (அமிலேஸ், கேடலேஸ், லாக்டேஸ் போன்ற) என்சைம்களுக்கும் உணவுத்தயாரிப்புத் தொழிலகங்களும் பரவலான பொருள்களைத் தயாரிக்க மபொ உணவுகளையே நம்பியிருக்கின்றன. இவற்றில் ரொட்டி, குழந்தை உணவுகள், சர்க்கரை, கார்ன்சிரப், பழச்சாறுகள், ரொட்டிசோடா, மென்பானங்கள் போன்றவை அடங்கும். இப்போது பாலடைகளைத் தயாரிக்க உதவும் ரென்னெட்டுக்கு மபொ பாக்டீரியா பயன்படுத்தப்படுகிறது. பத்தாண்டுகளுக்கு முன்பு அதிகமாகக் கடைகளில் பாலடை (சீஸ்) கிடைக்காது. இப்போது எங்குபார்த்தாலும் பாலடை கிடைக்கிறது. மபொதான்! நம் உயர்குடி யினர் மொழியிலும், தொலைக்காட்சி மொழியிலும் இது ‘ப(ன்)னீர்’! இப்போது கடைகளில் பன்னீர் என்றால் வாசனைத் தெளிப்பு நீர் கிடைக்காது. பாலடையைத்தான் கொடுப்பார்கள். அந்த அளவு பழக்கத்துக்கு வந்துவிட்டது.

‘பனீர்’ தயாரிப்பில் பக்கவிளைவுகளாகக் கிடைப்பன, சாக்கலேட், மார்கரீன் போன்றவற்றைத் தயாரிக்கப் பயனாகின்றன. ரொட்டி, பரப்பிகள், உணவுச் சேர்க்கைகள், பீட்சா, பீர், ஒயின் போன்றவற்றைத் தயாரிக்க மபொ யீஸ்டு பயன்படுகிறது. நீரிழிவுக்காரர்களுக்கான செயற்கைச் சர்க்கரைகளும் மபொ தயாரிப்புகளே.

அடையாளமிடுதல் இல்லை ஆகையால், நீங்கள் நேரடியாக விளைந்துவரும் உணவுகளை உண்டாலொழிய, மபொ உணவுகளைத் தவிர்க்க இயலாது. சலவைப் பொருள்கள், அழகுசாதனங்கள், சோப்பு, ஷாம்பு, பபிள்பாத் போன்ற தனிமனித பராமரிப்புப் பொருள்கள் ஆகியவற்றிலும் மபொ கலப்புகளை உயிர்த் தொழில் நுட்பத் தொழிலகங்கள் கலந்துவிட்டன. கால்நடைகள், மீன் போன்றவை உண்ணும் பொருள்களிலும் மபொ தயாரிப்புகள் மிகுதியாகக் கலந்து விட்டன. இவை கடைசியாக நமது உணவுத்தட்டுகளுக்குத்தான் வந்து சேர்கின்றன.

நான்-ஜிஎம்ஓ, ஜிஎம்ஓ-ஃப்ரீ என்ற வகைகளுக்கான வித்தியாசத்தை நாம் உணர வேண்டும். (ஜிஎம்ஓ என்றால் ஜெனடிகலி மாடிஃபைடு ஆர்கானிம்-மரபணு மாற்றப் பட்ட உயிரி என்பது பொருள்). நான்ஜிஎம்ஓ என்றால் குறிப்பிட்ட அளவைவிட (1% என்று கொள்ளுங்கள்) அப்பொருளில் கலப்பு குறைவு என்று பொருள். ஜிஎம்ஓஃப்ரீ என்றால் கலப்பு இல்லவே இல்லை என்று பொருள்.

(குறிப்பு: அமெரிக்காவில் 2000இல் ஏறத்தாழ 5 கோடி ஏக்கரில் மபொ பயிர்கள் இடப்பட்டன. இப்போது அயல்மகரந்தச் சேர்க்கையாலும், அளிப்புத்தொடரிலுள்ள கலப்பினாலும், அந்த நாட்டில் மபொ உயிரிக் கலப்பற்ற உணவு என்பதைப் பிரித்துக்கூறவே முடியாது என்கிறார்கள்.)

உணவுப் பகுதிப்பொருள்களிலும் உணவுப்பொருள்களிலும மபொ கலப்புகள்

இயற்கையாக விளைந்தது என்று வெளிப்படையாகக் கூறாமல், கீழே கூறப்பட்ட பகுதிப்பொருள்கள் பொருளின் அடையாளஅட்டையில் குறிப்பிடப்பட்டிருந்தால், அதில் ஒருவேளை மபொ கலப்பு இருக்கலாம். வெறுமனே “மாற்றப்பட்ட” ஸ்டார்ச் என்று குறிப்பிட்டிருந்தால், அது மபொ என்று பொருளல்ல. அதற்கு அப்பொருள் வேதிமுறை அல்லது வெப்பம் வாயிலாக மாற்றப்பட்டது என்பதே அர்த்தம். (ஆனால் அந்த ஸ்டார்ச் ஒருவேளை மபொ சோளத்திலிருந்து பெறப்பட்டிருக்கலாம்.)

பின்வரும் பொருள்களில் மபொ சேர்க்கை இருக்கலாம்

முதல் வகை

marapanu-stil-61
சோயாஅவரை: சோயா மாவு, சோயா எண்ணெய், சோயா பானங்கள், தாவர அல்லது சோயா சாறு, சோயா புரோட்டீன், சோயா தனிப்பிரித்த புரோட்டீன், ஹைட்ரலைஸ்டு தாவர புரோட்டீன். மபொ சோயா சார்புகளைப் பெற்ற பொருள்கள்: வைட்டமின் ஈ, தானியங்கள், மரக்கறி பர்கர்கள், சாஸேஜ்கள், சோயா சாஸ், சிப்ஸ், ஐஸ்கிரீம், உறைதயிர், குழந்தை உணவு, சாஸ்கள், புரோட்டீன் பவுடர், மார்கரீன், சோயா சீஸ், நொறுக்குத்தீனிகள், ரொட்டிகள், குக்கிகள், சாக்கலேட், இனிப் புகள், பொரித்த உணவுகள், மேம்டுத்தப்பட்ட மாவுகளும் பேஸ்டாக்களும்.

மக்காச்சோளம் அல்லது சோளம்: சோள மாவு, சோள ஸ்டார்ச், சோள எண்ணெய், சோளச் செயற்கைச் சர்க்கரை, சோள சிரப். மபொ சோளப் பொருள்களைக் கொண்ட உற்பத்திப் பொருள்களான  வைட்டமின் சி, சிப்ஸ், மிட்டாய்கள், ஐஸ்கிரீம், குழந்தை உணவுகள், சாலட் மேலிடுபொருள்கள், தக்காளி சாஸ்கள், ரொட்டிகள், பருப்புகள், ரொட்டி சோடா, ஆல்கஹால், வனிலா, மார்கரீன், சோயா சாஸ், பொரிக் கப்பட்ட உணவுகள், மாவுச்சர்க்கரை, மேம்படுத்தப்பட்ட மாவுகள், பேஸ்டாக்கள்.

கனோலா: எண்ணெய். மபொ கனோலாப் பொருள்களைக் கொண்டவை-சிப்ஸ், சாலட் மேலிடுபொருள்கள், குக்கிகள், மார்கரீன், சோயா பாலடை, பொரித்த உணவுகள்,

* பருத்தி: எண்ணெய். மபொ பருத்தி அல்லது அதன் பொருள்களைக் கொண்டவை:

சிப்ஸ், கடலை எண்ணெய், நொறுக்குகள், குக்கிகள்.

* உருளைக்கிழங்கு: மாவு, உருளைக்கிழங்கு ஸ்டார்ச். மபொ உருளைக்கிழங்கு அல்லது அதன் பொருள்களைக் கொண்டவை-அடையாளமிடாத பதப்படுத்திய உணவுகள் (பொரித்தவை, பிசைந்தவை, சுட்டவை, கலந்தவை போன்றவை), சிப்ஸ், நீரகற்றிய உருளைக்கிழங்கு மென்நறுக்குகள், சூப்புகள்.

* தக்காளிப் பொருள்கள்: மபொ தக்காளியை அல்லது தக்காளிப் பொருள்களை உடையவை. சாஸ்கள், பீட்சா, லாசேன்.

*  பசுக்களிலிருந்து பெற்ற பால் பொருள்கள்: கால்நடை வளர்ச்சிக்கான ஹார் மோன்களைக் கொண்டவை (அமெரிக்காவில் rBGH எனப்படுபவை)-பால், பாலடை, வெண்ணெய், மோர், புளிப்புகிரீம், யோகர்ட் (தயிர்), பிற பதப்படுத்திய பொருள்கள்.

பிராணிகளிலிருந்து பெறும் பொருள்கள்: பல நாடுகளில், பிராணிகளுக்கான உணவுகளில் மபொ பகுதிப்பொருள்கள் சேர்ந்திருப்பதால், பிராணிகளிலிருந்து பெறும் பொருள்கள் அலலது அல்லது உப பொருள்கள் யாவுமே பாதிக்கப்பட்டிருக்கும். அமெரிக்காவில், மபொ வளர்ச்சி ஹார்மோன்கள் (ஏறத்தாழ 6 வகைகள்) கால்நடைகளின் வளர்ச்சிக்கெனப் பயன்படுத்தப்படுகின்றன. மாட்டிறைச்சியில் இதன் எச்சங்கள் காணப்படும்.

இரண்டாம் வகை

மபொ மூலங்களிலிருந்து தயாரித்தவற்றைக் கொண்ட சேர்க்கைகளும் பதப்படுத்தும் உதவிப்பொருள்களும்

சோயா லெசிதின்/லெசிதின்(E322), காரமெல் நிறப்பொருள்(E150), ரிபோஃபிளேவின் (வைட்டமின் பி2), கைமோசின் போன்ற என்சைம்கள் (மரக்கறிப் பாலடை தயாரிக்க உதவும் மபொ என்சைம்), வெள்ளைச் சர்க்கரை செய்ய உதவும் ஆல்ஃபா அமிலேஸ், மால்டோடெக்ஸ்ட்ரின்கள், சத்துமிக்க கார்போஹைட்ரேட் இனிப்பாக்குபொருள்கள் (கார்ன் சிரப்), அடுமனைத் தயாரிப்புகளைப் புத்தம்புதிதாக வைக்கப்பயன்படும் நோவாமைல்(TM), புல்லுலானேஸ் (உயர்அளவு ஃப்ரக்டோஸ் கொண்ட கார்ன் சிரப் தயாரிக்க உதவுவது). விற்பனைப் பொருள்களின் லேபில்களில் என்சைம்களைக் குறிப்பிடத் தேவையில்லை-காரணம், அவை பீர்கள், ஒயின்கள், பழச்சாறுகள், சர்க்கரை, எண்ணெய்கள், பால்பொருள்கள், அடுமனை உணவுகள் போன்றவற்றில் சேர்க்கப்பட்டாலும் உணவுப் பொருள்களாகக் கருதப்படுவதில்லை.

மூன்றாம் வகை

மபொ மூலங்களிலிருந்து பெறப்பட்டாலும், பெருமளவு மபொ சேர்க்கைகளைப் பதப்படுத்துதல் நீக்கிவிடும் தன்மை பெற்றவை

சோயா எண்ணெய், தாவர எண்ணெய், ஹைட்ரஜனேற்றம் செய்த தாவர எண்ணெய்,

தாவரக் கொழுப்பு, மாற்றப்பட்ட சோள ஸ்டார்ச், குளூகோஸ் சிரப், சோளச்சர்க்கரை, சோள சிரப், டெக்ஸ்ட்ரோஸ், ஃப்ரக்டோஸ், மால்டோடெக்ஸ்ட்ரின்.

மபொ உணவுகளை அடையாளப்படுத்த வேண்டுமா?

கட்டாயம். நமது உணவு மபொ வா இல்லையா என்பதை அறியும் உரிமை நமக்கு உண்டு. நாம் விரும்பும் உணவுப்பொருளைத் தேர்ந்தெடுப்பது அடிப்படை உரிமை. அடையாளப்படுத்துதல் அறியும் உரிமையை காக்கிறது. வெறும் சுவைக்காகவோ விருப்பத்திற்காகவோ மட்டுமின்றி, உடல்நலத்துக்காகவும் நாம் தேர்ந்தெடுக்கிறோம். ஆஸ்துமா, நீரிழிவு, புற்றுநோய், இதய நோய்கள், பிற நெடுங்கால நோய்கள் உள்ளவர்கள் மட்டுமல்ல, எடைகுறைப்பவர்கள், குழந்தையை எதிர்பார்க்கும் தாய்மார்கள், விளையாட்டுவீரர்கள், மரக்கறிஉணவை உண்பவர்கள் போன்றவரும் தங்கள் உணவு களைப் பற்றிப் பெரிதும் கவலைப்படுவார்கள்.

உணவு ஒவ்வாமை உடையவர்களும் அவ்வாறே. வேர்க்கடலை, பிற கொட்டைகள், ஷெல்மீன், பால், பால்பொருள்கள் போன்றவை ஒவ்வாமைக்குக் காரணமாகலாம். தினவு, தடிமன்கள் முதலாக மூச்சிறைப்பு, வேற்றுப்பொருள்களால் ஏற்படும் ஒவ் வாமை அதிர்ச்சிகள் உட்பட இவற்றின் எதிர்வினை உடனடியானது.

மரபணுப் பொறியியல் உணவுகளில் ஆபத்தானவைகளைச் சேர்ப்பதால், உடல்நல முள்ளவர்களும் நீண்டகால அளவில் மபொ உணவுகளை உண்ணும்போது உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மபொ பற்றி-குறிப்பாகத் தாறுமாறாகப் புதிய புரோட்டீன்களை உண்டாக்குவது பற்றி இன்னமும் மிகப்பெரிய அளவிலான அறிவியல் நிச்சயமின்மை காணப்படுகிறது. இவற்றின் எதிர்பாராத விளைவுகளைப் பற்றி ஒருவருக்கும் தெரியாது, டிரிப்டோஃபனில் கண்டது போல, எந்த விஞ்ஞானியும் எதிர்பாராத விளைவு ஏதும் 100% ஏற்படாது என்று உறுதிகூற இயலாது. விளைவுகள் வெளிப்படச் சில பத்தாண்டுகள்கூட ஆகலாம். மேலும் அடையாளப்படுத்தல் இன்றி, சுகாதார அதிகாரிகள், பிரச்சினைகளின் மூலத்தைத் தேடியறிய முடியாது.

கடைசியாக, நுகர்வோர் பாதுகாப்புக்காக அல்லாமல், ஒழுக்கவியல் காரணங்களுக் காகவும் பலர் மபொ உணவுகளைத் தவிர்க்க விரும்பலாம். அவர்கள் இந்தச் சிந்தனைக்கும் அல்லது முழுத் தொழிலுக்குமே ஆட்சேபணை தெரிவிக்கக்கூடும்.

அடையாளப்படுத்தலுக்கும் மேலாக இதில் பிரச்சினைகள் உண்டா?

தகவல் தராமை நுகர்வோர் சரியான தேர்ந்தெடுப்பைச் செய்கின்ற அடிப்படை உரிமையைப் பறிப்பதாகிறது. அடையாளமிடுதல் இன்றி நுகர்வோர்கள் அறியாமையில் தள்ளப்படுவது மட்டுமல்ல, ஏதேனும் தவறாகப் போகும் நிலையில், மூலங்களை அல்லது காரணங்களைக் கண்டறிவதும் மிகக் கடினமாகிவிடும். டிரிப்டோஃபன் விஷயத்தில், புதிய விசித்திர நோயின் மூலத்தையும் உற்பத்தியாளரையும் அறிவதில் அமெரிக்க அதிகாரிகள் மிகவும் கஷ்டப்பட்டார்கள். அதற்குள் குழுமம் தன் சேமிப்புகள் அனைத்தையும் அழித்துவிட்டதால் எவ்விதச் சோதனையும் செய்ய இயலாமல் போயிற்று.

அடையாளமிடுதல் இன்மை முறையான வாணிகமும் அல்ல. நுகர்வோரைத் தவறான வாங்குதலுக்குட்படுத்தல், ஏமாற்றுதல் இதில் உள்ளது. நுகர்வோர்கள் அடையாளமிடு தலை அமைப்புகள் வாயிலாகக் கேட்கும்போது, உயிர்த்தொழில்நுட்பக் குழுமங்கள் உரிமம்பெறும் அலுவலகத்திற்குத் தங்கள் பொருள்கள் இயற்கைப் பொருள்கள் போன்றவை என்று கூறியவாறு உரிமம் பெற ஓடுவதைப் பார்த்தாலே இது தெளிவாகும்.

நமது மத மற்றும் ஒழுக்கவியல் பார்வைகளுக்கும் மபொ உணவுகளுக்கும் என்ன தொடர்பு?

marapanu-stil-71
நிறைய இருக்கிறது. இந்தியா, வெவ்வேறு மதங்களும் கலாச்சாரங்களும் கொண்ட பலவேறு இனத்தவர் வாழும் நாடு. ஹராம் அல்லது தடைசெய்யப்பட்ட உணவு முஸ் லிம்களிடையே பிரச்சினையை ஏற்படுத்தும். அறியாத அல்லது அடையாளமிடப்படாத மூலங்களிலிருந்து பெறப்பட்ட மரபணுக்களைப் பயன்படுத்திய மபொ உணவுகளின் இயல்பு (ஹலால்) பற்றி இயல்பாகவே அவர்கள் கவலைப்படுவர். குறிப்பாக இது வரை உணவாகப் பயன்படுத்தப்படாதவை பற்றிக் கவலை இருக்கும். பன்றியின் மரபணுக்களைப் பயன்படுத்தியவைகளையும், இஸ்லாமிய முறைப்படி கொல்லப்படாத பிற பிராணிகளையும் அவர்கள் உண்ண விரும்பமாட்டார்கள்.

இந்துக்களும் பௌத்தர்களும்-குறிப்பாக மரக்கறி உணவு உண்பவரும், மாட்டிறைச்சி உண்ணாதவர்களும் விலங்கு மரபணுக்கள் கொண்ட உணவுகளைப் பற்றிக் கவலைப்படுவார்கள். மரக்கறி உணவுப்பழக்கமுள்ளவர்கள், விலங்குகள் அல்லது மனித மரபணுக்களைக் கொண்ட எந்த உணவையும் எதிர்ப்பார்கள்.

வலுவான மத நம்பிக்கை உடையவர்கள், கடவுளின் படைப்புக்கு மரபணுப பொறியியல் மாறானது என்ற அடிப்படையில் மபொ உணவுகளை எதிர்ப்பார்கள். உயிர்ப் பிராணிகளுடைய வாழ்வின் பாரம்பரிய அமைப்புகளை மாற்றுவதும் கலப்பதும் கடவுளின் ஆட்சிக்கும் அவரது தெய்விகத் திட்டத்திற்கும் மாறானது என்று கருதுவார்கள்.

உலகத்தில் வறுமையையும் பசியையும் மாற்றித் தங்கள் மபொ பயிர்கள் உணவளிக்கும் என்ற உயிர்த்தொழில்நுட்பத் தொழிலகங்களின் பேச்சை நாம் நம்பமுடியுமா?

உயிர்த்தொழில்நுட்பக் குழுமங்கள் வணிக நிறுவனங்கள், தங்கள் உற்பத்திப் பொருள்களை விற்பவை என்பதை நாம் மறந்துவிடலாகாது. இது ஒரு மிகப்பெரிய வாணிகம். 1999இல் மபொ பயிர்களுக்கு ஜப்பான், கிழக்கு ஐரோப்பா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகியவை தடைவிதித்தபோது அமெரிக்காவின் ஏற்றுமதிக்கு ஒரு பில்லியன் (நூறுகோடி) டாலருக்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டதாக அமெரிக்க விவசாயத் தொழிலகங்கள் கணக்கிட்டன. ஹார்மோன் பயன்படுத்திய அமெரிக்க மாட்டிறைச் சிக்குக் கிழக்குஐரோப்பிய நாடுகள் இறக்குமதித் தடைவிதித்ததால் மட்டும் 20 முதல் 30 கோடி டாலர் இழப்பு ஓராண்டில் அமெரிக்காவுக்கு ஏற்படுகிறது.

ஆகவே நுகர்வோருக்கு மபொ உணவுகளினால் விளையுமென எதிர்பார்க்கும் நன்மை நிஜமாக இதுவரை உண்டாகவில்லை. இதுபற்றி மிகையாகச் சொல்லப்படுகிறது. ஆபத்துகளும் எதிர்மாறான விளைவுகளும் வெளியிடப்படுவதில்லை. ஏழை நாடுகளில் பசியையும் பஞ்சத்தையும் போக்க, அதிகரித்துவரும் உலக மக்கள் தொகையைக் காப்பாற்ற, நமக்கு மரபணுப் பொறியியல் தேவை என்பது புதிதாக இக்குழுமங்கள் கண்டுபிடித்த வாதம்.

ஐக்கியநாடுகள் சபையின் உலக உணவுத் திட்டத்தின்படி, உலகிலுள்ள ஒவ்வொருவருக்கும் தேவையான உணவைப்போல இப்போதே ஒன்றரை மடங்கு இருக்கிறது. உலக மக்கள் தொகையின் எதிர்காலத் தேவைகளை நிறைவேற்ற, மபொ அற்ற உணவுகளே போதுமானவை என்று 2000 ஜூலையின் அறிக்கையில் உணவு விவசாய நிறுவனம் கூறியிருக்கிறது.

ஊட்டச்சத்துக் குறைந்த மக்களுக்கென அதிகச் சத்துவாய்ந்த பயிர்களை (வைட்டமின் ஏ மேம்படுத்தப்பட்ட அரிசி போன்றவற்றை) உருவாக்குவதாக உயிர்த்தொழில் நுட்பக் குழுமங்கள் கூறினாலும், அவை யாருக்கு மிகுதியாகத் தேவைப்படுகிறதோ அவர்கள் அவற்றை வாங்கவும் இயலாது. இதற்குத் தீர்வு விவசாயத்துக்கு வெளியில் தான். (அதாவது ஏழைகளின் வருவாயைப் பெருக்குதல் போன்றவை). உணவு தானியங் களைக் கால்நடைகளுக்குத் தீனியாகக் கொடுத்தல் போன்றவற்றைத் தவிர்க்கலாம்.

உயிர்த்தொழில் நுட்பக் குழுமங்கள் சொல்லுவதுபோல மபொ வளரும் நாடுகளுக்கு உதவ இயலுமா?

மாறாக, இருக்கும் பிரச்சினைகளை மரபணுப் பொறியியல் மேலும் மோசமாக்கவே முடியும். நிறுவனங்களின் வாக்குறுதி ஒருபுறம் இருக்க, வளரும் நாடுகள், பெரும் நிறுவனங்கள் மற்றும் முதல் உலகத்தின் உதவிக்கு அலையவும் அவர்களிடம் கடன்பெறவும் அவர்களைச் சார்ந்திருக்கவும் நேரிடும். மபொ பயிர்கள் “அதிநவீன” விவசாயத்தொழில் நிறுவனங்களுக்கானவை. வேதிப்பொருள்களை மிகுதியாகப் பயன்படுத்துகின்ற, ஒரேமுறை பயிர்செய்கின்ற, (மிக அதிகமான நீர், வேதியுரங்கள், களைக்கொல்லிகள் பூச்சிக்கொல்லிகள் தேவைப்படுகின்ற) பெரிய பண்ணைகளை வைத்திருக்கின்றவர்களுக்கானவை. வளரும் நாடுகளில் இவை சிறிய, குடும்ப விவசாயநிலங்களை வைத்திருப்பவர்களை பலியாக்கும். உணவுப்பயிர் வளர்ப்பது மேலும்மேலும் பெரிய நிறுவனங்களின் ஒற்றை மேலாண்மையின்கீழ் வருவதால், நிலமின்மை, ஏழ்மை ஆகியவற்றை மபொ அதிகரிக்கச் செய்யும்.

முக்கியமாக, உயிர்த்தொழில்நுட்பக் குழுமங்கள் தங்கள் விதைகளுக்கு உரிமம் வாங்கி விடுகின்றன. ஆகவே அவற்றைப் பயன்படுத்தும் விவசாயிகள், பல்லாயிரம் ஆண்டுகளாகத் தாங்கள் செய்துவருவதுபோல, அந்த விதைகளை விற்பனை செய்யவோ, பிறரிடம் பரிமாறிக்கொள்ளவோ, அடுத்த ஆண்டுக்கெனச் சேமித்து வைக்கவோகூட முடியாது. இந்த விதைகளைப் பகுப்பாய்வு செய்யவோ இவற்றை ஆராய்ச்சிக்குட்படுத்தவோ முடியாது. இந்தக் கட்டுப்பாடுகளுக்குமேல், மான்சாண்டோ போன்ற கம்பெனிகள் தொழில்நுட்பக் கட்டணம் ஒன்றையும் வசூலிக்கின்றன. சோயா விதையின் 25கிலோ கொண்ட பை ஒன்றுக்கு ஆறரை டாலர் கட்டணம். (1998இல் இந்தக் கட்டணமே இக்குழுமத்திற்கு 200 மில்லியன் டாலர்களை ஊதியமாகப் பெற்றுத்தந்தது.)

ஒவ்வோராண்டும் இத்தகைய கட்டணம் செலுத்தி இந்த விதைகளை வாங்க மூன்றாம் உலக விவசாயிகளால் முடியுமா? தொன்றுதொட்டுத் தாங்கள் விதைகளைச் சேமித்து வைக்கும், பரிமாறிக் கொள்ளும் உரிமையை அவர்கள் விட்டுத்தரமுடியுமா? (அமெரிக்க விவசாயிகள் தங்கள் ஒப்பந்தங்களை முறித்ததற்காக மபொ நிறுவனங்கள் வழக்குத் தொடர்ந்தன. உலகெங்கிலும் உள்ள விவசாயிகள் விதைத் திருட்டுச் செய்வ தாக ஆயிரக்கணக்கான வழக்குகள்.)

பயிர்கள் அழுகுவதைத் தடுக்கவும், அவற்றை நீண்டகாலம் சேமித்து வைக்கவும், அவற்றில் நோய்களைத் தடுக்கவும், பூச்சிவிழுவதைத் தடுக்கவும், அவற்றிற்கு நல்ல தோற்றத்தை அளிக்கவும் பெருங்குழுமங்கள் செய்த முயற்சிகள் யாவும் ஏற்றுமதிக்காரர்கள், வேதிவிவசாயக் குழுமங்கள், உற்பத்தியாளர்கள், சிறுவியாபாரிகள் ஆகி யோருக்குப் பயன்பட்டனவே தவிர, மூன்றாம் உலகத் தேவைகளுக்குப் பயன்படவேயில்லை. நிலநடுக்கோட்டு விரைவுப் பயிர்களுக்கு பதிலாக மாற்றுகளைப் பயிரிட மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் (சான்றாக, தென்னை, பாமாயில், வனில்லா, கோகோ) மலேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற தெற்குநாடுகளின் ஏற்றுமதி முயற்சிகளுக்கு ஊறுசெய்தன.

உண்மையில் மபொ தொழில் நுட்பம், உலகத்தின் செல்வத்தை மிகச்சில ஒற்றை யாதிக்கக் குழுமங்களுக்கே குவியச்செய்யும்.
உயிர்த்தொழில் நுட்பம் பற்றி அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?  

மரபணுத் தொழில் நுட்பத்தின்மீதான அரசாங்கத்தின் நிலைப்பாடு ஈரடியாக இருப்பதுபோலத்தான் தோன்றுகிறது. ஒருபுறம் அது பொதுமக்கள் ஆரோக்கியம், பாது காப்புப் பற்றித் தன் அக்கறையினைத் தெரிவிக்கிறது; மறுபுறம் விவசாயத்திற்கு இரு பத்தோராம் நூற்றாண்டின் தேர்வாக உயிர்த்தொழில் நுட்பத்தை ஆதரிக்கிறது.

சர்வதேச அளவில் மலேசியாவின் நிலைப்பாடு உதாரணநிலையில் உள்ளது. உயிர்ப் பாதுகாப்பு பற்றிய கார்ட்டெக்னா உடன்பாட்டு ஒப்பந்தத்தில் அது கையெழுத்திட்டுள்ளது. உடல்நலம், சுற்றுச்சூழல் மீது உயிர்த்தொழில்நுட்பத்தின் கோளாறான விளைவுகளைக் குறைக்க இது ஒரு முன்வரைவாகும். கார்ட்டெக்னா ஒப்பந்த உடன்படிக்கை மரபணுரீதியாக மாற்றியமைக்கப்பட்ட உயிரிகளின் பயன்பாடு, இட மாற்றம், கையாளுகை, எடுத்துச்செல்லுதல், புகுத்துதல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்து கிறது. இறக்குமதி செய்யும் நாடுகள் முழுஅளவு அறிவியல் ஆபத்துகள், இடர்ப்பாடு களின் நிச்சயின்மை பற்றித் தெரியாமல் இவற்றைத் தடைசெய்யவும் கட்டுப்படுத்த அனுமதிக்கவும் இவற்றுக்கு அடையாளமிடவும் அது வழிசெய்கிறது. ஜிஎம்ஓக்களை நிர்ப்பந்தமான தரநிர்ணயித்தலின் வாயிலாக நாடுகள் ஒழுங்கு படுத்த அனுமதிக்கிறது.

தேசிய விவசாயக் கொள்கை, விவசாய வணிகத்தை மேம்படுத்துவதற்கு உயிர்த் தொழில் நுட்பத்தை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான கருவியாக நோக்குகிறது. இதனால் விளைச்சலை மேம்படுத்தவும், தாவரப்பூச்சிகள், நோய்கள் ஆகியவற்றால் ஏற்படும் இழப்பினைக் குறைக்கவும், உழைப்பு மற்றும் நிலத்தின் விளைவை முன்னேறச்செய்யவும் நினைக்கிறது. கார்ட்டெக்னா உடன்பாடு 2003இல் அமுலுக்கு வந்தது.

கூட்டாக எஃப்ஏஓ-டபிள்யூஎச்ஓ உயிர்த்தொழில்நுட்பம் மற்றும் உணவுப்பாதுகாப்பு அமைத்த நிபுணர் ஆலோசனையையே-அதாவது, பாரம்பரிய முறைகளால் வளர்க்கப்பட்ட இயற்கை உணவுகளுக்கு மபொ உணவு ஒப்பானது என்ற நிலைப்பாட்டையே பெரும்பாலான வளரும் நாடுகளின் உடல்நல அமைச்சகங்கள் பின்பற்றுகின்றன.
உயிரியல் பலதரத்தன்மை பற்றிய அமைப்பு முன்வைத்துள்ள முன்னெச்சரிக்கைக் கொள்கையின் சார்பாக இந்நாடுகள் நின்றிருக்கலாம். நிச்சயின்மை இருக்கும்போது, அதாவது ஜிஎம்ஓக்களின் மற்றும் அவற்றின் உற்பத்திப் பொருள்களின் பாதுகாப்பு பற்றிய தெளிவான சான்று கிடைக்கும்வரை, அவற்றின் இறக்குமதியையும் பயன்பாட்டையும் மறுப்பது என்பதுதான் அந்த முன்னெச்சரிக்கைக் கொள்கை.

இடர்க் கணிப்பு முறை :

நம் நாட்டில் பழங்கள், காய்கறிகள், நெல், சோயா, ஆர்க்கிடுகள் போன்ற துறைகளில் சோதனைகளுக்காகப் பல ஆய்வு நிறுவனங்கள் ஆய்வக மற்றும் களச்செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளன. ஒழுங்குபடுத்தும் செயற்பாடுகளும், உயிர்ப்பாதுகாப்பு பற்றிய சட்டங்களும் உருவாக் கப்பட்டு, உரிய இடம் அளிக்கப்படும்வரை, இடர்க்கணிப்பு என்பது வெறும் வாய்ச் சொல்லாகவே இருக்கும். பாதுகாப்பைப் பற்றிய பல பிரச்சினைகள் மற்றும் சூழலியல் தாக்குதல்கள் இன்னும் கவனத்தில் கொள்ளப்படவே இல்லை.

இந்த நாடும், ஏனை வளரும் நாடுகளைப் போல, பன்னாட்டுக் குழுமங்கள் பரிந்துரைக்கும் உள்ளார்ந்த அபாயகரமான ஆய்வுகளுக்குச் சோதிக்குமிடமாகவும் அவற்றின் கழிவுகளைக் கொட்டும் இடமாகவும் மாறிவிடக்கூடும் என்று நாம் கவலைப்படுகிறோம். மேலும் இப்போது மேற்கில் மபொவுக்கு எதிராக நுகர்வோரின் எதிர்ப்புக்குரல் எழுச்சி பெற்றிருப்பதால், மபொ குழுமங்கள் தங்கள் குவிமையங்களையும் திட்டங்களையும் கிழக்குநாடுகளையும், வளர்ச்சி குறைந்த நாடுகளையும் நோக்கித் திருப்பியுள்ளன. மபொ உணவின் உடல்நல ஆதாயங்களை விளம்பரப்படுத்துகின்றன. மபொவை உலக அளவில் பசிக்கும் வறுமைக்கும் ஒரு தீர்வாகவும் இவை முன்வைக்கின்றன.

அமெரிக்கா, கானடா, ஆர்ஜெண்டினா ஆகிய மூன்று நாடுகளும்தான் அதிகபட்சமாக மபொ உணவுகளை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்பவை. இவற்றிற்கு மியாமி நாடுகள் என்று குறிப்புப் பெயர். இவை கார்ட்டெக்னா உடன் பாட்டை ஏற்றுக் கொள்ளவே இல்லை. அதற்குப்பின் வந்த நகோயா உடன்பாட்டையும் ஒதுக்கி யிருக்கின்றன.

வளரும் நாடுகள் பல, பூச்சிகளுக்கும் களைக்கொல்லிகளுக்கும் தடைச்சக்தி பெற்றுள்ள, அழுகாத இந்த “அற்புதப்” பயிர்களுக்குக் கதவுகளைத் திறந்துள்ளன. பெருங்குழுமங்களின் இலவச முன்னோட்டங்களுக்கும், தொழில்நுட்பத் திட்டங்க ளுக்கும் இந்நாடுகள் தடைசொல்வது கடினம்தான். தங்கள் சொந்த நலன்க ளுக்கு மட்டுமே பாடுபடும் நம் நாட்டு அமைப்புகளின் பக்கபலமும் இவற்றுக்கு உள்ளது. அமெரிக்க வணிகத் துறை அல்லது எஃப்டிஏ, உலகவங்கி, யுனெஸ்கோ போன்ற சர்வதேச அமைப்புகள் உயிர்த்தொழில் நுட்பக் குழுமங்களுக்கும் வளரும் நாடுக ளுக்கும் இடையில் சமரசம் செய்கின்ற விவசாயத்தொழில் பயன்பாடுகளை ஏற்கும் சர்வதேசச் சேவை போன்ற அரசுசாராத் தன்னார்வ அமைப்புகள் போன்றவை பின்னணியில் பேரத்தில் ஈடுபடுகின்றன. இவை போகும்போக்கில் வளரும் நாடுகளின் தொழில்நுட்பத் தேவைகளைக் கண்காணிப்பதோடு, அவற்றின் விஞ்ஞானிகளுக்கும் பயிற்சிதருகின்றன.

நம் அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்?  

நுகர்வோரின் பாதுகாப்புக்காகவும் உடல்நலத்துக்காகவும், பின்வருவனவற்றைக் கடைப்பிடிக்கவேண்டும்:

ஃ மபொ சோயா அவரை உள்ளிட்ட எல்லாவிதமான மபொ உணவுகள் மற்றும் விளைபொருள்களின் இறக்குமதி, விற்பனை ஆகியவற்றைச் சட்டப்படி நிறுத்தி வைக்கவேண்டும்.
இத்துறையில் புறவயமான, அறிவியல் பூர்வமான, கட்டுத்திட்டமான, தன்னிச்சையான சோதனைகளை நிகழ்த்தவேண்டும். மபொ உணவுகள், விளைபொருள்கள் பாதுகாப் பானவை என்று நிரூபிக்கும் பொறுப்பை அவற்றை உற்பத்தி செய்வோரும், ஏற்றுமதி செய்வோரும்தான் ஏற்க வேண்டும்.
ஃ உடல்நலத்தின்மீதும் சுற்றுச்சூழலின்மீதும் எதிரான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, மரபணுப்பொறியியல் உருவாக்கிய உயிரிகளை உற்பத்திசெய்து சுற்றுச்சூழலமைவில் நுழைக்கும்விதமான விவசாய மற்றும் பிறதுறை சார்ந்த மரபணுத் தொழில்நுட்பம் தடைசெய்யப்பட வேண்டும்.
ஃ பன்னாட்டு உயிர்ப்பாதுகாப்பு விதித்தொகுப்பினை எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் ஏற்றுச் செயல்படுத்தவேண்டும். இதன்படி, கடுமையான தேசிய உயிர்ப்பாதுகாப்புச் சட்டங்கள் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட வேண்டும். அவை சர்வதேச அளவில் விதிக்கப்பட்டுள்ள குறைந்தபட்சத் தரங்களை ஏற்றிருக்க வேண்டும்.
ஃ மபொ உணவுகளும் விளைபொருட்களும் கண்டிப்பாக அடையாளமிடப்பட வேண் டும். தாங்கள் எதை உண்கிறோம் என்று அறிந்துகொள்ளும் உரிமை, அதுவும் அபாயங்கள் இருக்கும்போது, மத மற்றும் ஒழுக்க விதிகளோடு அது சம்பந்தப்பட்டி ருக்கும்போது, நுகர்வோருக்குக் கண்டிப்பாக உண்டு.
ஃ விவசாயிகளுக்கும் அந்தந்த வட்டார மக்களுக்கும் பாதுகாப்பான, சுற்றுச்சூழலுக்கு ஏற்றவிதமான நீண்டகாலப் பயனுடைய விவசாய, உற்பத்தி முறைகளில் முதலீடு செய்யவேண்டும். இப்போதுவரை, பெரிய, பன்னாட்டுக் குழுமங்களுக்கு இலாபம் ஈட்டித் தருகின்ற, போதிய அளவு சோதிக்கப்பெறாத, தொழில்நுட்ப விரைவு ஒட்டு வேலைகளுக்கே அதிக அழுத்தம் அரசினால் தரப்பட்டு வந்துள்ளது.

சமூகம்