மலையின் பாடல்

மலையின் பாடல்

குறிஞ்சிப்பாட்டு, பத்துப்பாட்டு என்னும் சங்க இலக்கியத் தொகுப்பில்-பத்து நூல்களில்-ஒன்று. இப் பாட்டின் திணை குறிஞ்சி. கூற்று, தோழி அறத்தொடு நிற்றல் என்று குறிப்புகள் விளக்குகின்றன.

தனியொரு திணை அல்லது துறையை விளக்குமாறு இவ்வளவு நீண்ட பாட்டு வேறெந்தத் திணை அல்லது துறைக்கும் எழுதப்படவில்லை. குறிஞ்சித் திணை குறித்த பாக்களிலேயே மிகவும் பெரியது என்பதால் பெருங்குறிஞ்சி என்று பெயரிட்டனர் இதற்கு.

இன்னொரு சிறப்பு, குறிஞ்சித்திணை பாடுவதில் மிக வல்லவராகக் கருதப்படுகின்ற கபிலர் இதனை எழுதியிருக்கிறார் என்பது. சங்கத் தொகை நூல்களில் மிகுதியான பாக்களைப் பாடியவர் கபிலர். (மொத்தம் 234 பாக்கள்). அவற்றில் மிகுதியானவை குறிஞ்சித்திணை சார்ந்தவை.

அகப்பாடல்களாக இருந்தாலும் அவற்றில் பெரும்பாலும் வரலாற்றுக் குறிப்புகள், பல் வேறு இடங்கள், நிகழ்வுகள் பற்றிய குறிப்புகள் போன்றவை இடம்பெறவே செய்யும். அப்படிப்பட்ட குறிப்புகள் ஏதும்இன்றி, முழு அகப்பாடலாகவே விளங்குவது இதன் மூன்றாவது சிறப்பு,

‘ஆரிய அரன் பிரகத்தனைத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது குறிஞ்சிப்பாட்டு’ என்று இதன் திணைதுறைக் குறிப்புகள் சொல்கின்றன. இது நான்காவது சிறப்பு.

ஆனால் இக்குறிப்பிற்கு வேறு ஆதாரம் எதுவும் இல்லை. இக்குறிப்புகள் போன்றவை பிற்காலத்தில் சங்கப்பாக்களைத் தொகுக்கும்போது சேர்க்கப்பட்டவை என்பது அறிஞர் கருத்து. சில தமிழறிஞர்கள் குறுந்தொகையில் பாட்டு இயற்றியுள்ள யாழ்ப் பிரமதத்தன் என்பவன் இந்த ஆரிய அரசன் பிரகத்தனே என்று குறிப்பிடுகின்றனர். பிரகத்தன் (பிரஹஸ்தன்) என்ற பெயர் எப்படி பிரமதத்தன் என்று மாறும்? மேலும் யாழ் என்ற அடைமொழி சேருவதற்குக் காரணம் என்ன? இவற்றைச் சரிவர அவர்கள் விளக்கவில்லை. எனவே ஆரியஅரசன் ஒருவனுக்குத் தமிழ் அறிவித்தற்குப் பாடியது என்ற குறிப்பையே நாம் ஆதாரமற்றது என்று சந்தேகப்படவேண்டியவர்களாக இருக்கிறோம்.

‘தமிழ் அறிவித்தல்’ என்பதற்குத் தமிழ்ப் பண்பாட்டினை அறிவித்தல் என்று பொருள் கொள்ளவேண்டும் என்கின்றனர் அறிஞர்கள். இங்கே தமிழ்ப் பண்பாடு என்றால் என்ன என்ற கேள்வி எழுகிறது. குறிஞ்சிப்பாட்டில் விளக்கப்படுவது களவுக்காதல். அது கற்பில் (திருமணத்தில்) முடியவேண்டும் என்பதற்காகத் தோழி செய்யும் செயல், அறத்தொடு நிற்பது. இது ஒன்றுதான் தமிழ்ப்பண்பாடா, அல்லது தமிழ்ப்பண்பாட்டின் மிகமுக்கியமான அம்சமா என்னும் கேள்வி எழுகிறது. இதற்குப் பின்னர் வருவோம். முதலில் இப்பாட்டு என்ன சொல்கிறது என்றுகாண்போம்.

சிலகாலமாக ஒரு பெண் (தலைவி) தன் உடல் இளைத்து வருத்தத்தோடு இருக்கிறாள். இதனைக் கண்ட அவளுடைய வளர்ப்புத்தாய் அவளுடைய தோழியிடம் அதற்கான காரணத்தைக் கேட்கிறாள். அப்போது தோழி அவளுக்குச் சொல்வது போல இந்தப் பாட்டு அமைந்துள்ளது.

பழங்காலத்தில் அன்னையாயினும் தோழியாயினும் முதலில் அவர்களை வாழ்த்திப் பிறகு செய்தியைக் கூறத் தொடங்குவது ஒரு மரபு. அதன்படி இப்பாடலும் செவிலித்தாயை வாழ்த்தித் தொடங்குகிறது.

“அன்னையே, நீ வாழ்க. நான் கூறுகின்றவற்றை விரும்பிக் கேட்பாயாக. ஒளி பொருந்திய நெற்றியையும் வளர்ந்த மென்மையான கூந்தலையும் கொண்ட என் தோழியின் மேனியில் ஏற்பட்ட வேறுபாட்டினையும் கையிலிருந்து வளையல்கள் கழல்வதால் ஏற்பட்ட மெலிவையும் நோக்கி, அவள் கடுமையான நோய்க்கு ஆட்பட்டிருக்கிறாள் என்று கருதி, நீ என்ன செய்யலாம் என ஆராயத் தொடங்கினாய்.
அவளுடைய நோய்க்கான காரணத்தை இவ்வூரின் கட்டுவிச்சி, வேலன் போன்றோரிடம் அறிய முற்பட்டாய். இது தெய்வத்தால் ஏற்பட்ட நோயாகும் என அவர்கள் கூற, நீ பாடியும், அர்ச்சனை செய்தும், வணங்கித் தொழுதும், மலர் தூவியும் நறுமணப் புகை காட்டியும் வேறுபட்ட பல உருவங்களை உடைய கடவுளுக்கு வழிபாடு செய்தாய். ஆனால் அவளுடைய நோய் குறையாமலிருக்கவே துன்பப்படுகின்றாய்.
அதற்குரிய காரணம் எனக்கும் முதலில் தெரியாது. அவளை நான் நெருக்கிக் கேட்கவே அவள் நடந்த உண்மைகளைக் கூறினாள். அவற்றைக் கூறுகிறேன், கேட்பாயாக.

“முத்து, மணி, பொன் ஆகியவற்றால் செய்த ஆபரணங்களில் பழுது ஏற்பட்டால் அவற்றைச் சீர்செய்து கொள்ளலாம். ஆனால் நற்பண்பும், பெருமையும், ஒழுக்கமும் சிறிதளவு குன்றினாலும், அதனால் ஏற்பட்டுவிட்ட பழியைத்துடைத்து, இழந்த புகழை மீண்டும் நிலைநாட்டுதல் தொன்மையான  நூல்கள் பல கற்ற பெரியோர்க்கும் அரியதாகும்.

“என் தந்தையின் கட்டுக்காவலை நீங்கி, நானும் தலைவனும் ஆராய்ந்து ஏற்றுக் கொண்ட திருமணம் இது என்று தாய் முதலியோர்க்கு நாம் கூறுவதில் பழி ஏதேனும் உண்டோ? அவ்வாறு செய்வதுதான் ஒழுக்கம் கெடாமல் காப்பதாகும். நாம் கூறியபின்னர் நம் தாய் தந்தையர் இதனை ஏற்றுக்கொள்ளாவிட்டால், மறு பிறப்பிலாவது நாங்கள் இணைவோம்” என்று சொல்லித் தலைவி செயலற்று வருந்தினாள்.

போர்செய்ய முனைந்த இருபெரு வேந்தர்களுக்கு இடையில் இருவரையும் சமாதானம் செய்ய முனைந்த அறிஞர்களைப்போல நானும் உனக்கும் இவளுக்கும் இடையே அகப்பட்டு அஞ்சி வருந்துகிறேன். நன்மை, குடிச்சிறப்பு, குணம், உதவி முதலியவற்றை ஆராய்ந்து ஒப்பிட்டு நோக்காமல் நாங்களாகத் துணிந்து ஏற் றுக்கொண்ட இத்திருமணம் நிகழ்ந்த விதத்தை நீ நன்கு புரிந்துகொள்ளும் வண்ணம் சொல்கிறேன். என்மீது கோபம் கொள்ளவேண்டாம்.

“நீ எங்களைத் தினைப் புனம் காக்க அனுப்பினாய். ஆகவே நாங்கள் பரண் மேலிருந்து கிளி முதலியவற்றை ஓட்டிக்கொண்டிருந்தோம். பின்னர் அருவியில் மிக ஆசையோடு நீராடச் சென்றோம். நாங்கள் விரும்பிய பாடல்களைப் பாடினோம். செங்காந்தள் முதலிய பல மலர்களைப் பறித்து அகன்ற பாறையிலே குவித்துவிட்டு, மலைப்பக்கத்துப் புனத்தில் கிளியையும் ஓட்டிக் கொண்டிருந்தோம். தழையாடையை உடுத்திக்கொண்டு, பலவகை மலர்களையும் கூந்தலில் அணிந்துகொண்டு அசோக மரத்தின் நிழலில் தங்கியிருந்தோம்.

அப்போது ஓர் அழகிய ஆடவன் வந்தான். எண்ணெயும் மயிர்ச்சாந்தும் (ஒருவகை வாசனைப் பொருள்) பூசி, விரலால் உலர்த்தியிருந்தான். அகிற்புகை ஊட்டிய, வண்டுகள் மொய்க்கின்ற தலைமயிரில் பலவகை மலர்களை அணிந்திருந்தான். பிச்சி மலரால் செய்த ஒற்றை வடத்தைத் தலையில் அணிந்திருந்தான். ஒருகாதில் அசோகந்தளிரைச் செருகியிருந் தான். மார்பில் அணிந்த பூமாலை ஆபரணத்தோடு விளங்கியது. கையில் அழகிய வில் ஒன்றினை ஏந்தி, அம்புகளைத் தெரிந்து, இடையிலே கச்சையைக் கட்டி, காலில் வீரக்கழல் அணிந்து தோற்றம் அளித்தான். அவனுடன் வந்த நாய்கள் குரைத்துக் கொண்டு எங்களை வளைத்தன. நாங்கள் அவற்றிற்கு அஞ்சி, நடுங்கி, வேறிடத்திற்கு விரைந்து ஓடினோம். அப்போது நாங்கள் பயப்படுவதற்கு அவன் அஞ்சி, எங்கள் அருகில்வந்து, இனிய சொற்களைக் கூறினான். எங்களைப் புகழ்ந்து, “இளம் பெண்களே, ஒரு யானை என்னை விட்டு ஓடிவந்தது. அதனை நீங்கள் பார்த்தீர்களா?” என்று கேட்டான்.

நாங்கள் பதில் உரைக்கவில்லை. அதனால் அவன் கலக்கமடைந்து, “என்னை விட்டு வந்த விலங்கினைப் பற்றிக் கூறாவிட்டாலும், என்னுடன் பேசவேனும் கூடாதா?” என்று கூறிப், பூங்கொம்பு ஒன்றினை எடுத்து, எங்களை பயமுறுத்திய நாய்களைக் குரைக்காமல் இருக்கச் செய்தான்.

அப்போது வேடன் ஒருவனால் விரட்டப்பட்ட ஒரு யானை, மதம்கொண்டு, மரங்களை முறித்துக்கொண்டு, எங்களை நோக்கி வந்தது. நாங்கள் எங்களைப் பாதுகாத்துக்கொள்ளப் புகலிடம் இன்மையால், நாணத்தையும் விட்டு, அந்த அழகனை நெருங்கி அவன்அருகில் மயில்களைப்போல் நடுங்கிக்கொண்டு நின்றோம். அவன் உடனே ஓர் அம்பினை எடுத்து அக்களிற்றின் முகத்திலே ஆழமாகப் பதியும்படி எய்தான். அந்த யானை அங்கிருந்து ஓடி விட்டது.

அப்போதும் அச்சம் தீராமல் நாங்கள் நடுங்கிக்கொண்டே இருந்ததால் தலைவன் எங்கள் அருகில் வந்தான். தலைவியை நோக்கி ‘அஞ்சாதே’ என்று கூறி அவள் நெற்றியைத் தடவினான். இம்மாதிரிச் சந்திப்புகள் நீளவேண்டும் என்று நினைப்பதுபோல என்னைப் பார்த்துச் சிரித்தான்.

பெண்களுக்கு இயல்பான நாணமும் அச்சமும் தலைவிக்குத் தோன்றியதால், அவனிடத்திலிருந்து அவள் விலகமுயன்றாள். அவன் விடாமல் அவளை அணைத்துத் தழுவி னான். பிறகு தலைவியை நோக்கி, “விருந்தினர்களுக்கு அளித்து எஞ்சிய உணவை நீ எனக்கு அளிக்க, நான் அதை உண்பதாக அமையக்கூடிய இல்லறம் சிறந்தது” என்று கூறினான். மலையில் உள்ள முருகக் கடவுளை வாழ்த்தி, உன்னைப் பிரியமாட்டேன் என்று கூறி, எங்களைத் தெளிவிக்கச் சூளுரைத்து, அருவி நீரைக் குடித்தான். அதனால் இவள் அவனுடன் நெஞ்சு நெருங்கினாள். இவ்வாறு நிகழ்ந்த ‘களிறுதரு புணர்ச்சி’ நிறைவடைய, அன்றைய பகல் முழுதும் அவர்கள் சோலையில் கழித்தனர்.

“சூரியன் மறைந்தான். மான்கூட்டங்கள் மரங்களின் அடியில் கூடின. கன்றுகளை நினைத்துப் பசுக்கள் மன்றங்களில் புகுந்தன. அன்றில் பறவைகள் அழைத்தன. பாம்புகள் இரைதேடுவதற்காகத் தங்கள் மணிகளை உமிழ்ந்தன. கோவலர் ஆம்பற் பண்ணை இசைத் தனர். ஆம்பல் மொட்டுகள் மலர்ந்தன. மகளிர் விளக்குகள் ஏற்றினர். அந்தணர் மாலைக் கடன் செய்தனர். வேடர் பரண்களின்மீது நெருப்பினை ஏற்றினர். மேகங்கள் மலையைச் சூழ்ந்தன. காட்டில் விலங்குகள் முழங்கின. பறவைகள் கூடுகளில் ஒலித்தன. மாலைக்காலம் நெருங்கியது.

இன்னும் சிறிதுநேரத்தில் இருட்டிவிடும் என்றுகருதி, இவளை நோக்கி, “உன் கையை உன் சுற்றத்தார் பிடித்துத் தர, நாட்டிலுள்ளோர் அனைவரும் அறியுமாறு வெளிப்படையாகத் திருமணத்தினைப் பிறகு செய்துகொள்வோம். சில நாட்கள் வருந்துவதை நீக்குவாயாக” என்று அன்புடைய சொற்களைக் கூறி, எங்களோடு உடன்வந்து, நம் ஊர் நீர்த்துறை அருகில் எங்களை விட்டுவிட்டுச் சென்றான். அன்று முதல் தினந்தோறும் இரவுப்போதில் முதல்நாள் கொண்ட விருப்பத்தைப் போன்ற விருப்பத்துடனே வந்து செல்கின்றான். அவ்வாறு வரும்போதில், ஊர்க் காவலர்கள் திரிந்தாலும், நாய்கள் குரைத்தாலும், நீ விழித்துக் கொண் டாலும், நிலவு எரித்தாலும் இவளைக் காணாமலே போகநேரிடும். நாங்கள் செய்த அடை யாளம் தவறிப்போனாலும் அதற்காக எங்களிடம் கோபிக்கமாட்டான். அவன் இளைஞன். தனக்குரிய செல்வத்தையும் நற்குணங்களையும் பெற்றவன்.

தன்னை நாடிவரும்போதெல்லாம் அவனுக்கு நிகழக்கூடிய துன்பங்களை எண்ணி இவள் வருந்துகிறாள். அவன் வரும் வழியில் புலியும், சிங்கமும், கரடி யும், காட்டுப்பன்றியும், யானையும், இடியும், பாம்பும், முதலைகளும், கொடிகள் படர்ந்துள்ள பாறைகளும், பிசாசுகளும், மலைப்பாம்பும் துன்பம் தரக்கூடுமே என்று ஒவ்வொரு நாளும் கலங்கிக் கண்ணீர் சிந்துகின்றாள். வலையில் அகப்பட்ட மயில் போல அழகு குலைந்து கலங்கி நிற்கிறாள்” என்று தோழி செவிலித்தாய்க்கு எடுத்துரைத்தாள்.

ஒரு சிறுகதைபோல அமைந்திருக்கும் இந்த மலையின் பாட்டு (குறிஞ்சி என்றால் மலை என்று பொருள்), அபூர்வமான அழகுடையது என்பதில் ஐயமில்லை. குறிஞ்சி என்பது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரக்கூடிய அபூர்வமான பூவையும் குறிக்கிறது. தமிழில் சொல்லப்படுகின்ற இந்தத் தலைவன் தலைவி காதலும், குறிஞ்சிப்பூக்களின் இணைவு போல-மிக உயர்ந்த மலையிலே பூக்கின்ற மிக அபூர்வமான மலர்களின் சந்திப்புப்போன்றது என்ற பொருள் புலப்படுகிறது. ஏனெனில் இக்காதல் இயல்பாக நடைபெறுகிறது, செயற்கையான சடங்குகள் இல்லை, வரதட்சிணை இல்லை. வியாபாரம் இல்லை.

ஆனால் இயற்கை-செயற்கை முரண் இதில் இல்லாமலும் இல்லை. எந்த விலங் கினத்திலும்-மனிதர்கள் உட்பட-புணர்ச்சி இயற்கை. அதற்கான சடங்குகள், திருமணம், போன்றவை செயற்கை. குறிஞ்சிப்பாட்டு, இயற்கையைப் போற்றினாலும், செயற்கையை வலியுறுத்துகின்ற பாட்டுதான்.

இந்திய மொழிகளில் தமிழ் ஒரு தனிநிலையில் இருக்கிறது. சமஸ்கிருதத்திற்கு ஒப்பப் பழங்காலத்திலிருந்து நடக்கின்ற ஒரே மொழி என்பதனால், சமஸ்கிருதத்தின் பல கூறுகள் நம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. திராவிட மரபு என்பதன் பல கூறுகள் இந்தியா முழுவதும் பரவியிருக்கின்றன. ஆனால் அதேசமயம் இந்த இணை நிலையோடு, ஒரு முரண் நிலையும் ஆதியிலிருந்தே காணப்படுகிறது. அநேகமாகத் தமிழின் பழங்காலப் பிரதிகள் எல்லாமே இந்த இணைநிலை-முரண்நிலை ஆகியவற்றை வெளிப்படுத்துவதாகவே அமைந் துள்ளன.

இங்கு இதைக்கூறக் காரணம், குறிஞ்சிப்பாட்டு ஆரியஅரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்கு-அதாவது தமிழ்ப்பண்பாட்டின் தனிச்சிறப்பை உணர்த்துவதற்கு-இயற்றப்பட்டது என்ற கூற்றுதான்.
“எட்டுவகை மணங்கள் ஆரிய மரபில் கூறப்படுகின்றன. பிரமம், பிரஜாபத்யம், ஆர்ஷம், தெய்வம், காந்தர்வம், ஆசுரம், ராக்ஷஸம், பைசாசம் என்பன அவை.

பிரமம் என்பது, வேதம் ஓதினவனாகவும் நல்லொழுக்கம் உள்ளவனாகவும் இருக் கின்ற பிரமசாரியைத் தானாகவே அழைப்பித்து அவனை நு£தன வஸ்திரத்தால் அலங்கரித்து கன்னிகையையும் அவ்வாறே  நூதன வஸ்திர பூஷண அலங்காரம் செய்வித்து அவனுக்கு அவளை தானம் செய்வது.

பிரஜாபத்யம் என்பது ஒரு பிரமசாரியை அழைத்துப் பூசித்துத் தன் பெண்ணை தானம் செய்யும்போது நீங்கள் இருவருமாய் தருமங்களைச் செய்யுங்கள் என்று கொடுப்பது. பெண்ணின் தந்தைக்குக் கேட்கும் பணத்தைக் கொடுத்துப் பெண்ணுக்குப் பூஷணங்களைப் போட்டுப் பெண்ணை வாங்கி விவாகம் செய்வது.

ஆர்ஷமாவது தான் செய்யவேண்டிய யாகாதி கர்மத்துக்காக வரனிடத்து ஒரு ரிஷபம், ஒரு பசு, அல்லது இரண்டு ரிஷபம், இரண்டு பசு இவற்றை வாங்கிக் கொண்டு கல்யாணம் செய்து கொடுப்பது.

தெய்வமாவது தனக்குப் புரோகிதனாக இருப்பவனுக்குத் தன் பெண்ணை அலங்கரித்துக் கொடுப்பது.

காந்தர்வமாவது ஸ்திரீயும் புருஷனும் ஒருவருக்கொருவர் புணர்ச்சி ஆசையால் மனம் ஒத்துச் சேர்வது.

ஆசுரமாவது விரும்பாத பெண்ணை வலியப்புணர்தல்.

ராக்ஷஸமாவது ஒருவன் தன் பலத்தினால் கன்னிகை அழும்போது அவள் வீட்டி னின்றும் அவள் பந்துக்களை அடித்தும் கொன்றும் வலிமையால் கொண்டுபோதல்,

பைசாசமாவது ஒரு கன்னிகை து£ங்கும்போதும் குடியினால் வெறித்திருக்கும்போதும் பித்துக்கொண்டவளாய் இருக்கும்போதும் அவளுடன் புணர்வதாம் என்று மனு கூறுகிறார்.

மேற்கண்டவற்றில் பிரஜாபத்திய மணமே சிறந்ததாய் இப் பரதகண்டத்துள் யாவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது”.

(இந்த மேற்கோள் சிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணி  நூலிலிருந்து தரப்பட்டது.)

பிரகத்தன் என்னும் வடநாட்டுஅரசன் கபிலரை “எங்கள் எட்டுவகை ஆரியத் திருமணத்தைவிட உங்கள் தமிழ்மணம் உயர்ந்ததோ” என்று கேட்க, கபிலர் குறிஞ்சிப்பாட்டினைப் பாடினார் ஆகலாம். அதாவது தமிழ்த்திருமண முறை, மனம் ஒத்து ஆணும் பெண்ணும் புணர்தல் என்னும் அளவில் காந்தர்வத்தை ஒத்தது, ஆனால், அதன்பின் அறத்தொடு நின்று கற்பில்நிலை பெற்று இல்லறம் செய்தல் என்னும் அளவில் அதைவிடச் சிறப்பானது என்று கபிலர் பிரகத்தனுக்கு உணர்த்த முனைகிறார், அதனால் தமிழ்ப்பண்பாடு உணர்த்தப்படுகிறது என்பது கருத்து. அதாவது, உங்கள் ஆரிய கந்தருவ முறையில் ஒழுக்கம் (மணம்புரிந்துகொள்ளுதல்) என்பது இல்லை, தமிழில் உண்டு என்று காட்டுவது நோக்கம். இங்கு சமஸ்கிருதப் பண்பாடு, தமிழ்ப்பண்பாடு இவற்றிற்கான இணை-முரண் கருத்துகளைக் காணலாம்.

இனி இப்பாட்டின் அமைப்பைப் பற்றிச் சில செய்திகள்.
இப்பாட்டின் 135ஆம் அடியில்-தலைவன் வருகை ‘ஆகாண் விடையின் அணிபெற வந்து’ என வருணிக்கப்படுகிறது. அதாவது தன்னுடன் போரிடக்கூடிய பிற வலிய எருது களையெல்லாம் போரிட்டு விரட்டிவிட்டுத் தனக்கேற்ற பசுவைத் தேர்ந்தெடுக்க வரும் ஒரு வலிய எருதினைப் போல வருகின்றான் தலைவன். இது தொடக்கம்.

பின்னர், 235ஆம் அடியில் ‘துணை புணர் ஏற்றின் எம்மொடு வந்து உண் துறை நிறுத்துப் பெயர்ந்தனன்’ என்று முடிகிறது. புணர்ச்சிமுடிந்த பிறகு, தன்னுடைய துணையைப் புணர்ந்த காளையைப் போலப் பெருமிதத்தோடு எங்கள் சிறுகுடிவரை வந்து விட்டுச் சென்றான் என்பது முடிவு.

இப்படி, இந்தப் பாட்டு ‘ஒரு காளை பசுவைத் தேடி அடைவது’ என்ற படிமத்தை வலுவாக முன் வைக்கிறது. இடையிலுள்ள 100 அடிகளில்தான் ‘களிறுதருபுணர்ச்சி’ நிகழ்கிறது. தலைவன் உறுதி கூறல் இடம்பெறுகிறது.

இன்னொரு வகையிலும் குறிஞ்சிப்பாட்டின் அமைப்புமுறை சிறப்பானது. தமிழில் உள்ள இடப்பெயர் முறையை-அதாவது,
நான்-நாம்/நாங்கள் (தன்மை)
நீ (முன்னிலை)
அவன்/இவள் (படர்க்கை)
என்னும் கூற்றுமுறையை இது நன்கு பயன்படுத்துகிறது.

தொடங்கும்போது தோழி செவிலியை ‘நீ’ என்று விளித்து அவள் கவலையை விவரிக்கிறாள். பின்னர் ‘நான்’ என்று தொடங்கித் தனது நிலைப்பாட்டினைச் சொல்கிறாள். பிறகு ‘நாங்கள்’ என்று (தன்னையும் தலைவியையும் இணைத்து) தொடங்கிச் செய்த செயல்களை விவரிக்கிறாள். பிறகு ‘அவன்’ என்று தொடங்கித் தலைவனின் வருகை, அவனுடன் ஏற்பட்ட தொடர்பு ஆகியவற்றைப் பேசுகிறாள். பின்னர் இறுதியாக ‘இவள்’ என்று தொடங்கித் தலைவியின் ஆற்றாமையைக் கூறி முடிக்கிறாள். இந்த அமைப்பை விரிவாகப் பார்ப்போம்.

1. செவிலியை நீ என விளித்து இடம் பெறும் அடிகள் இவை.
அன்னாய் வாழி, வேண்டு அன்னை,
என் தோழி மேனி, விறல்இழை நெகிழ்த்த வீவரும் கடுநோய்
அலவுற்று, எய்யா மையலை நீயும் வருந்துதி

(நான் சொல்லப்போகும் செய்தியைக் கேட்டு) சினவாது ஈமோ

2. நான் எனத் தொடங்கித் தனது செயல்களைக் கூறும் அடிகள்.
அரும்படர் யான் கடவலின், கலங்கிக் கையற்று, ஆனாச் சிறுமையள் இவளும் தேம்பும்…..
இருபேரச்சமொடு யானும் ஆற்றலேன்…..
எண்ணாது எமியேம் துணிந்த ஏமம் சால் அருவினை
செப்பல் ஆன்றிசின்

3. நாங்கள் என்று தொடங்கித் தங்கள் செயல்களைக் கூறும் பகுதி.
படுபுள் ஓப்பி, எல்பட வருதியர்” எனநீ விடுத்தலின்
உருப்பவிர் அமையத்து, அவ்வெள்ளருவித் தண்டாதாடி, தண்ணிழல் இருந்தனமாக

4. இதற்குப் பிறகு அவன் வரும் பகுதி.
திளையாக் கண்ண வளைகுபு நெரிதர, இடும்பைகூர் மனத்தேம் மருண்டுபுலம் படர
அணிபெற வந்து, மெல்லிய இனிய மேவரக் கிளந்து, ஐம்பால் ஆய்கவின் ஏத்தி,
இளையீர் இறந்த கெடுதியும் உடையேன் என்றனன்.

(பதில்) சொல்லேம் ஆதலின், கலங்கி, சொல்லலும் பழியோ மெல்லியலீர் என
(நாய்களின்) கடுங்குரல் அவித்து, சொல்லற்பாணி நின்றனனாக,
மையல் வேழம் மடங்கலின் எதிர்தர, விதுப்புறு மனத்தேம் விரைந்து அவன் பொருந்தி நடுங்க,
பகழி வாங்கிக் கடுவிசை, அண்ணல் யானை மணிமுகத்து அழுத்தலின்
(அது) அயர்ந்து புறங்கொடுத்த பின்னர்
கைபிணிவிடேம் நடுங்க
“நின் அணிநலம் நுகர்கு” என
மாசறு சுடர்நுதல் நீவி நீடுநினைந்து என்முகம் நோக்கி நக்கனன்.
குன்றுகெழு நாடன், பிரியவும் விடான், ஆகம் அடைய முயங்கலின்,
உள்ளத்தன்மை உள்ளினன் கொண்டு
“விருந்துண் டெஞ்சிய மிச்சில்
பெருந்தகை நின்னொடு உண்டலும் புரைவது”
என்றாங்கு, வாய்மையின் தேற்றி அந்தீந் தெண்ணீர் குடித்தலின்
அருவிடர்அமைந்த களிருதரு புணர்ச்சி பூமலிசோலை அப்பகல் கழிப்பி
மாலை துன்னுதல் காணு£உ, நாடறி நன்மணம் அயர்கம்
என ஈரநன்மொழி தீரக்கூறி உண்துறை நிறுத்துப் பெயர்ந்தனன்.

….அதற்கொண்டு இரவரன் மாலையனே, இன்துயில் என்றும் பெறாஅன்
பெயரினும் முனியல் உறாஅன்.

…..இளமையின் இகந்தன்றும் இலனே
வளமையின் தன்னிலை தீர்ந்தன்றும் இலனே

5. இறுதியாக இவள் என்று தலைவியின் செயல்களைக் கூறும் பகுதி.
ஆனாச் சிறுமையள், இவளும் தேம்பும்….
மாயவரவின் இயல்பு நினைஇத்
ஈரிய கலுழும் இவள் பெருமதர் மழைக்கண்…..
விழுமம் பல, குழுமலை விடர்அகம் உடைய என ஆகத்து அரிப்பனி உறைப்ப
வலைப்படு மஞ்ஞையின் நலஞ்செலச் சாஅய் நினைத்தொறும் கலுழுமால் இவளே.

நான்-நீ-நாங்கள்-அவன்/இவள் என்னும் இக்கண்ணியில் பலவீனமானது ‘நாங்கள்’ என்னும் தலைப்பில் வருபவைதான். பிற யாவும் ஒருமையாக இருக்க, இது மட்டும் இடையில் பன்மையில் பொருந்தாமல் நிற்கிறது. அதுபோலவே பாட்டிலும் ‘நாங்கள்’ என்று தொடங்கித் தோழியும் தலைவியும் நீர்விளையாடல், பூக்களைப் பறித்தல், தம் இயல்புப்படிப் பாடிக் கொண்டிருத்தல் போன்ற பகுதிகள்தான் பலவீனமானவை. தேவையற்ற வருணனைகளைக் கொண்டவை. அவற்றில் பெரும் பகுதியை நீக்கினாலும்-குறிப்பாக 99 மலர்களைப் பற்றிய பட்டியல் இங்கே இடம் பெறுகிறது-எவ்வகையிலும் பாட்டு சிதையாது.

மலர்களைப் பற்றிய இந்தக் குறிப்பு நமது மலர்க்கலாச்சாரத்தை உணர்த்துவது என்று இதற்குப் பலபேர் சமாதானம் கூறினாலும், திரைப்படத்தில் வரும் பாடற்காட்சிபோல கதையை நிறுத்திவைத்து விட்டுப் புறம்போவதாகத்தான் இது அமைந்திருக்கிறது.

99 பூக்களின் பெயர்களை அடுக்கிச் செல்வது, கபிலரின் சொல்வன்மையையும், இயற்கையறிவையும் காட்டுகிறது என்பதில் ஐயமில்லை. நமக்குத் தெரிந்த பூக்களின் பெயர்களைச் சொல்லச்சொன்னால் இருபதுவரையில்கூடத் தேறுமா என்பது சந்தேகமே. ஆனால் அவ்வாறு அடுக்கிச் செல்வதன் இலக்கியத்தன்மை என்ன, அது எடுத் துரைப்பினை எவ்விதம் பாதிக்கிறது என்ற கேள்வி வேறு.
‘நாங்கள்’ என்று வரும் பகுதி வேறொருவகையிலும் இப்பாட்டிற்கு எதிராகச் செயல்படுகிறது. அது பின்னர் விளக்கப்படும்.

இதன் மிகச் சிறப்பான பகுதி ‘அவன்’ என்ற படர்க்கைப்பகுதி. சிறப்பான உவமைகளும் உள்ளுறை உவமையும், வருணனைகளும் இதில்தான் அமைந்திருக் கின்றன. ‘இவள்’ என்னும் பகுதி தொடக்கத்தில் ஒருபகுதியும் இறுதியில் ஒரு பகுதியுமாக அமைந்து தொடர்ச்சியைத் தருகிறது. தொடக்கப்பகுதி அறச் சிந்தனையையும், இறுதிப்பகுதி மிகுதியான உணர்ச்சியையும் கொண்டது.

அறச் சிந்தனைக்கு அடிப்படை எப்போதுமே பயவுணர்ச்சிதான். பொதுவாகவே ஆடவன் பெண்ணைக் கைவிட்டுவிடுவானோ என்ற பயவுணர்ச்சிதான் கரணம் (திருமண முறை) என்பதை வலியுறுத்தக் காரணமாக அமைந்தது. இங்கும் தலைவியின் அறச்சிந்தனைக்கு ஆதாரமாக அமைகிறது.

இப்பாட்டில் 18 வாக்கியங்கள் அமைந்திருக்கின்றன. அவையும் தங்கள் கனத்திற்கேற்றவாறு இடம் பெற்றுள்ளன என்பது சிறப்பு.

இவள் எனத் தலைவியின் கூற்றாக 3 வாக்கியங்கள் உள்ளன.

அவன் எனத் தலைவனின் செயல்களைக் கூறும் வாக்கியங்கள் 7.

நாங்கள் என இருவர் செயல்களையும் கூறும் வாக்கியங்கள் 2.

நீ எனச் செவிலியை வேண்டுவது 4.

நான் எனத் தன்னிலை வெளிப்பாடாக அமைவது 2.

நடந்த நிகழ்ச்சி என்ற முறையில் தலைவனைப் பற்றி விரிவாகக் கூறவேண்டியது அவசியம் ஆகலின் 7 வாக்கியங்கள் தலைவனுக்கே தரப்படுகின்றன. அடுத்து ஆகவேண்டிய திருமணத்தை நிகழ்த்தவேண்டியவள் செவிலி ஆகலின் அவளுக்கு 4 வாக்கியங்கள். அவை சிறுசிறு தொடர்களாக அமைந்தவை. தலைவியின் நிலைப்பாட்டைக் கூறுவது முக்கியமா தலின் அவளுக்கு 3 வாக்கியங்கள். கடைசியாகத் தன் நிலை வெளிப்பாட்டிற்குச் சாதுரியமாக 2 வாக்கியங்கள் என எடுத்துக் கொள்கிறாள் தோழி என இப்பாட்டு அமைகிறது.

ஒரே ஓரிடத்தில் இடப்பெயர் வழு ஏற்படுகிறது. எல்லா இடங்களிலும் இப்பாட்டில் தலைவன் ‘அவன்’ என்றே (ஒருமையில்) குறிப்பிடப்படுகிறான். ஆனால் இறுதியில் தலைவி புலம்புமிடத்தில் மட்டும், ” ‘அவர்’ குழுமலை விடரகம் விழுமம் உடையது” என்று கவலைப்படுகிறாளாம். திடீரென அவன் எப்படி அவர் ஆனான்? இது தவறி ஏற்பட்டதா, வேண்டுமென்றே (தமிழ்ப்பண்பாட்டிற்கேற்ப) அமைக்கப் பட்டதா என்னும் கேள்வி எழுகிறது.

தமிழ்ப்பண்பாட்டினை அறிவிப்பது என்னும் தகுதிக்கேற்ப இதில் வரும் இரண்டு இடங்கள் குறிப்பிடத் தக்கவை. அவை பெரியவர்களின் கூற்றாக அல்லது அறிவுறுத்தலாக அல்லாமல் இரண்டு இளைஞர்களின்-தலைவி, தலைவன்-மனத்திலிருந்து வருவது நோக்கத் தக்கது. அதாவது அவர்களின் மனங்கள் இத்தகைய சிந்தனைக்கு அக்காலத்திலேயே நிலைப்படுத்தப்பட்டிருக்கின்றன என்பது முக்கிய மானது. இப்படிப்பட்ட நிலைப்படுத்தலைத்தான் ஒழுக்கம், பண்பாடு என்று தமிழில் ஆதிகாலம் முதல் கூறிவருகின்றனர்.

தோழிக்குத் தலைவி அறத்தொடு நிற்கும்போது,
“முத்து, மணி, பொன் ஆகியவற்றால் செய்த ஆபரணங்களில் பழுது ஏற்பட்டால் அவற்றைச் சீர்செய்து கொள்ளலாம். ஆனால் நற்பண்பும், பெருமையும், ஒழுக்கமும் சிறிதளவு குன்றினாலும், அதனால் ஏற்பட்டுவிட்ட பழியைத்துடைத்து, இழந்த புகழை மீண்டும் நிலைநாட்டுதல் தொன்மையான  நூல்கள் பல கற்ற பெரியோர்க்கும் அரியதாகும்.

“என் தந்தையின் கட்டுக்காவலை நீங்கி, நானும் தலைவனும் ஆராய்ந்து ஏற்றுக் கொண்ட திருமணம் இது என்று தாய் முதலியோர்க்கு நாம் கூறுவதில் பழி ஏதேனும் உண்டோ? அவ்வாறு செய்வதுதான் ஒழுக்கம் கெடாமல் காப்பதாகும். நாம் கூறியபின்னர் நம் தாய் தந்தையர் இதனை ஏற்றுக்கொள்ளாவிட்டால், மறு பிறப்பிலாவது நாங்கள் இணைவோம்” (13-24)

என்று கூறுகிறாள். இங்கும் இயற்கைக்கும் செயற்கைக்குமான போராட்டத்தைக் காண்கிறோம். அதாவது இயல்பான காதலுணர்ச்சிக்கும் தந்தை தாய் திருமணத்திற்கு என்ன சொல்வார்களோ என்ற பயவுணர்ச்சிக்குமான முரண்பாடு இங்கு வெளிப்படுகிறது.

அதுபோலவே தலைவனும், அறநெறியிலிருந்து தவறாதவனாகவே காட்டப் படுகிறான்.
(தலைவியின்)உள்ளத் தன்மையை தன்மனத்திற்கொண்டு

“விருந்தினர்களுக்கு அளித்துஎஞ்சிய உணவை நீ எனக்கு அளிக்க, நான் அதை உண்பதாக அமையக்கூடிய இல்லறம் சிறந்தது” என்று கூறினான். மலையில் உள்ள முருகக் கடவுளை வாழ்த்தி, உன்னைப் பிரியமாட்டேன் என்று கூறி, எங்களைத் தெளிவிக்கச் சூளுரைத்து, அருவி நீரைக் குடித்தான்.” (200-211)

என்று வரும் பகுதியை கவனிக்கவும்.

பொதுவாக, இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள, ஆனால் அக்காலத்தில் வட மொழி வழக்கு எனக் கருதப்பட்ட மரபில், தாரைவார்த்து (அதாவது நீரைப் பிறர் கையில் ஊற்றி) அளித்தல் அல்லது உறுதிகூறுதல் உண்டு. இன்றும் புரோகிதர்கள் நீரை நம் கையில் ஊற்றி நம்மைத்தான் குடிக்கச் செய்கிறார்கள். தமிழ்மரபில் அதுபோல அன்றி, உறுதிகூறும் தலைவன் தானே தண்ணீரை அருந்துகிறான்.

பூக்களை வருணிக்கும் பகுதியில் திணைமயக்கம் ஏற்பட்டிருப்பதாகப் பலர் கூறுவார்கள். அவ்வாறல்ல. கபிலர் நன்றாக உணர்ந்தே இதனைப் பயன்படுத்தி யிருக்கிறார். தொல்காப்பியத்தில் ‘பூவும் புள்ளும் எவ்விடத்தும் மயங்கும்’ என்ற  நூற்பா உள்ளது. இவையிரண்டிற்கும் ஏன் இந்த விலக்கு அளிக்கப்பட்டது?
பூவை எவரும் சூடிக்கொண்டு எந்த நிலத்திற்கும் செல்லலாம். புள்ளுக்கு-அதாவது பறவைக்கு எங்கு செல்லவும் பாஸ்போர்ட், விசா தேவையில்லை. எங்கும் இடம்பெயரும். எனவே நெய்தலுக்கே உரிய அன்றிற் பறவையையும் தாழையின் மலரையும் குறிஞ்சியில் இணைக்கக் கபிலர் தயங்கவில்லை. 99 பூக்களின் பெயரைச் சொல்லும் கபிலர், அவற்றில் சூட இயலாத பூக்களின் பெயர்களையும் ஏன் இணைத்தார் (உதாரணமாக வாழைப்பூ) என்ற கேள்வியும் எழுகிறது. தலைவன் தலைவி சந்திப்புக்குப் பிறகு பூக்களின் பட்டியல் இடம் பெற்றிருந்தால், இந்த விலக்கம் அவர்களின் புணர்ச்சிக்கான தயாரிப்பாக இடம் பெறுகிறது என்று விளக்கலாம் (திரைப்படங்களில் காதலன் காதலி முத்தமிடும் அல்லது புண ரும் காட்சி வரும்போது காமிரா இடம்பெயர்ந்து பூக்களையோ, வானத்தையோ காட்டுவது போல). ஆனால் இப்பட்டியல் தலைவன் தலைவி சந்திப்புக்கு முன்னால் வருகிறது.

இப்பாட்டைப் படிக்கும்போது இதில் தொடைகள்-எதுகை, மோனை, இயைபு ஆகியவை கையாளப்பட்டுள்ள முறை பிரமிப்பை உண்டாக்குகிறது. உதாரணமாக,

நற்கவின் தொலையவும் நறுந்தோள் நெகிழவும்
புட்பிறர் அறியவும் புலம்புவந் தலைப்பவும்
உட்கரந்து உறையும் உய்யா அரும்படர்
செப்பல் வன்மையின் செறித்து யான் கடவலின்

இப்பகுதியில் மோனை எவ்வளவு செறிவாகச் செயல்படுகிறது என்பதை வாய்விட்டுப் படிப்போர் உணரலாம். எதுகை, மோனை ஆகிய தொடைகள், பொருட்பிணைப் பினை உண்டாக்கக்கூடியவை. அதிலும் குறிப்பாக முதற்சீர், மூன்றாம் சீரின் தொடைகள் இசைவது (ஒரூஉ) மிகச்செறிவான பிணையை உருவாக்கக் கூடியது.

பொதுவாக உயர்ந்த குடிப்பிறந்த தலைவன் தலைவியரே அகப்பாக்களில் இடம்பெற வேண்டுமென்பது தொல்காப்பியர் கருத்தாக இருந்தாலும், சங்க அகப்பாக்கள் பெரும் பாலும் அப்படிக் காட்டவில்லை. ஆனால் குறிஞ்சிப்பாட்டின் தலைவன் தலைவி உயர்ந்த குடியைச் சேர்ந்தவர்கள் என்பது தீர்மானமாக வலியுறுத்தப்படுகிறது.

நெற்கொள் நெடுவெதிர்க் கணந்த யானை/முத்தார் மருப்பின் இறங்குகை கடுப்பத்/

துய்த்தலை வாங்கிய புனிறுதீர் பெருங்குரல்/

எனவரும் பகுதியில் ‘மலைமூங்கிலுக்கு அண்ணாந்து துதிக்கையை உயர்த்தும் யானை’ என்ற படிமம் தலைவனைக் குறிக்கிறது. இதனால் தலைவியின் உயர்ந்த குலம் குறிக்கப்படுகிறது என்று உரையாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். ‘நெடுந்தேர் எந்தை அருங்கடி நீவி’ என வரும் தலைவியின் கூற்றும் இதனை உறுதிப் படுத்துகிறது.

தலைவனும் உயர்ந்த குடியிற் பிறந்தவனாகவே கூறப்படுகிறான்.

பழுமிளகு உக்க பாறை நெடுஞ்சுனை/ முழுமுதற் கொக்கின் தீங்கனி உதிர்ந்தெனப்/
புள்ளெறி பிரசமொ டீண்டிப் பலவின்/ நெகிழ்ந்துகு நறும்பழம் விளைந்த தேறல்/
நீர்செத் தயின்ற தோகை வியலு£ர்ச்/ சாறுகொள் ஆங்கண் விழவுக்களம் நந்தி/
அரிக்கூட் டின்னியம் கறங்க ஆடுமகள்/ கயிறு£ர் பாணியின் தளரும் சாரல்/

எனவரும் பகுதிக்கு உள்ளுறை கூறும் உரையாசிரியர்கள், பாறை நெடுஞ்சுனை என்பது தலைவனின் தொன்மையான குடியைக் குறிப்பதாகவும், மாங்கனியும் பலவும் இணைந்து விளைந்த தேறல் தலைவனாகவும், அதனை அறியாது பருகிய மயில் என்பதைத் தலைவியாகவும் கொள்கின்றனர்.
ஆனால் தலைவனின் குடி எப்படியிருப்பினும் அவன் நடந்துகொள்ளும் முறை இயற்கைப்புணர்ச்சி என்ற கோட்பாட்டுக்கு உரியதாக இல்லை. ஏனெனில் இயற்கைப் புணர்ச்சி என்பது எந்த ஒரு முன்னேற்பாடோ திட்டமோ இல்லாமல், ‘அடுப்பாரும் கொடுப் பாரும் இன்றி’, தற்செயலாகத் தலைவி-தலைவன் ஆகியோர் சந்தித்துக் காதல் கொள்வது என்று நமது இலக்கியங்கள் வருணிக்கின்றன. இங்கு நிலைமை வேறு என்பதை இப்பாட்டு காட்டுகிறது.

முன்பே ‘ஆகாண் விடைபோல’ அவன் வந்தான் என்ற பகுதி காட்டப்பட்டது. அதாவது பசுவைப் பார்க்கவரும் எருதுபோல-பெண்பார்க்கும் நோக்கத்தோடுதான் வருகிறான், தலைவன். திட்டமிட்டு இவளைப் பெற வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடனேதான் வருகிறான். அதனால்தான் ஒரு வேட்டைநாய்ப் படையுடன் வருகிறான். அதைக் கண்டு அஞ்சி நடுங்கும் பெண்களிடம் வந்து ‘நான் ஒரு விலங்கைத் தவறவிட்டுவிட்டேன், பார்த்தீர்களா’ என்று வினவுகிறான். அவர்கள் பதிலுரைக்கவில்லை.
பெண்கள் பதிலுரைக்காத நிலையில் சாதாரணமாக (எந்தத் திட்டமும் அற்ற) ஓர் ஆடவன் என்றால், அவன் அகன்று போயிருப்பான். ஆனால் இவன் அங்கேயே நிற்கிறான். ‘நான் தவறவிட்ட விலங்கைப்பற்றிச் சொல்லவில்லை என்றாலும் என்னோடு உரையாடுவதும் கூடாதா பெண்களே’ என்று வினவுகின்றான். பிறகு அவர்கள் பதில்சொல்வதை எதிர்பார்த்துக் காத்திருக்கவும் செய்கிறான் (‘சொல்லற் பாணி நின்றனன் ஆக’). இப்படி அடுத்தடுத்துச் சந்தர்ப்பங்களை வலிய உருவாக்கிக் கொள்பவனாகத்தான் இத்தலைவன் இருக்கிறான்.

பிறகு தானாகவே அவனுக்கு ஒரு அருமையான சந்தர்ப்பம் வாய்க்கிறது. யானைக்கு அஞ்சிய பெண்கள் தானாகவே ஓடிவந்து அவனை அணைத்துக் கொள்கிறார்கள். யானை சென்ற பிறகும் அவர்களின் நடுக்கம் தீரவில்லை. அப்போது அவன் தலைவியிடம் ‘நான் உன் நலத்தை நுகர்வேன்’ என்று கூறுபவன், தோழியின் முகத்தைப்பார்த்து நகைக்கிறான். இதற்கு என்ன பொருள்? ஏன் தோழியின் முகத்தைப்பார்த்து நகைக்கவேண்டும்? (இவளை கவனித்து விட்டுப் பிறகு உன்னையும் கவனித்துக் கொள்கிறேன் என்று அர்த்தமா? அல்லது எங்களுக்கு இடைஞ்சலின்றி விலகியிரு என்று அர்த்தமா? அல்லது இந்த நிகழ்ச்சியை எவருக்கும் சொல்லிவிடாதே என்ற அர்த்தமா? அல்லது இதுபோன்ற சந்திப்புகள் இன்னும் நிறைய ஏற்படும், உதவிசெய் என்ற அர்த்தமா?)

இவ்வாறு கேள்விகளை எழுப்புவது பழந்தமிழ் அறிஞர்களுக்குக் கொஞ்சம் தொந்தரவளிப்பதாக இருக்கலாம். ஆனால், தோழி நடந்த நிகழ்ச்சிகளைக் கூறும் போது தலைவன் தங்களைநோக்கி (பன்மையில்) விளித்துவருவதாகவே-இருவரையும் நோக்கிப் பேசுவதாகவே-கூறுகிறாள். உதாரணமாக, “எம் ஐம்பால் ஆய்கவின் ஏத்தி” “அசைமென் சாயல் அவ்வாங்கு உந்தி (இன்றைய தொப்புள் கலாச்சாரம்!) மடமதர் மழைக்கண் இளையீர்” போன்ற பகுதிகளைக் காணலாம்: “எங்கள் அழகினைப் புகழ்ந்து” என்றால், யாருடைய அழகினை ஏத்துகிறான் தலைவன்? தலைவியின் அழகையா, தோழியின் அழகையா, அல்லது இருவரின் அழகையுமா?

தமிழ் அகப்பாடல்களின் மிக இடைஞ்சலான பகுதி, தலைவியோடு தன்னை ஒன்று படுத்திக்கொண்டு தோழி ‘நான்’ அல்லது ‘நாங்கள்’ என்று கூறுமிடங்கள். முன்பே கூறியபடி, தலைவியும் தோழியும் நீராடுதல், பறவை ஓப்புதல், பூக்களைப் பறித்துச் சூடுதல் இம்மாதிரி இடங்களில் ‘நாங்கள்’ என்ற தன்மைப்பன்மை எந்த இடைஞ்சலும் விளைவிக்கவில்லை.

ஆனால் “இருவேம் ஆய்ந்த மன்றல் இது” வென அல்லது “நாம் அறிவுறாலிற் பழியும் உண்டோ” என்பது போன்ற இடங்களில் இடிக்கிறது. உண்மையில் இது தலைவி ஆய்ந்து கொண்ட மணமாகத்தான் இருக்கமுடியும். அதில் தோழிக்குப் பக்கத்திலிருந்து உதவுவதைத் தவிர வேறு என்ன இடம்? ‘இரண்டுபேரும் ஆய்ந்து கொண்ட மணம்’ என்றால் தலைவன் தோழியையும் மனைவிபோல ஏற்றுக் கொள்கிறான் என்று அர்த்தமா? எந்த நிலைவரை ஒரு தோழி தலைவியுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளமுடியும்?

இப்படிப்பொருள் கொள்வதற்குச் சங்ககால மரபும் துணைசெய்வதாகத்தான் இருக்கிறது. சங்ககாலத்தில்தான் தலைவன் திருமணமானபின் எந்தப் பெண்ணையும் பரத்தை என்ற பெயரில் வைத்துக்கொள்ள முடியுமே? (அதற்கு மருதத்திணை என்ற ஒன்றைத் தனியாகவே ஒதுக்கியிருக்கிறார்கள்.) அப்படிப்பட்டபெண்களில் தோழியும் ஒருத்தியா? அப்படியானால், தோழி ஏன் பரத்தையிடம் சென்றுவரும் தலைவனுக்கு வாயில் நேர்தல் அல்லது வாயில் மறுத்தல் போன்ற பணிகளில் ஈடுபடவேண்டும்? இது போன்ற கேள்விகள் எழுகின்றன.

தலைவனுக்கு இப்பாட்டில் பயன்படுத்தப்படும் உருவகச்சொற்கள் இரண்டு மட்டுமே-விடை, ஏறு ஆகியவை. இவையிரண்டும் (விடைத்தல், ஏறுதல்) புணர்ச்சி பற்றிய குறிப்புள்ள சொற்கள். (எனவே அவன் பல பெண்களை நாடக்கூடிய-புணர்ச்சி நாட்டம் மட்டுமே உடைய ஒருவனாகத்தான் தென்படுகிறான். பசுக்களைத் தேர்ந்தெடுக்க வரும் விடைபோல வந்தான் என்ற குறிப்பும் அதைத்தான் உறுதி செய்கிறது.) ஆனால் எத்தனை பெண்களை ‘வைத்திருப்’ பவனும் இல்லறத்திற்கென மனையாளாக ஒருத்தியைத்தான் கொள்ளமுடியும். அந்த நிலையில்தான் தலைவிக்குத் தலைவன் உறுதி கூறுகிறான் என்று தோன்றுகிறது. புணர்ச்சி நிகழ்ந்து விட்ட நிலையில் உன்னைக் கைவிடமாட்டேன் என்று சொல்லி எவனுமே (அயோக்கியனும் கூட) பெண்ணைத் தேற்றவேண்டியிருக்கிறது. இவனும் ‘அறம் புணையாகத்’ தேற்று கிறான்.

மீண்டும் ‘நாங்கள்’ என்ற பன்மைச் சொல்லின் இடைஞ்சல் பற்றி. ஒரு யானை தலைவி-தோழி இருவரையும் நோக்கி வருகிறது. பயப்படுகிறார்கள் இருவரும்.
“நாணுமறந்து/ விதுப்புறு மனத்தேம் விரைந்தவற் பொருந்திச்/ சூருறுமஞ்ஞையின் நடுங்க”

இது சரி. ஆனால் யானை வந்து அம்புபட்டுச் சென்றபிறகும் தலைவியும் தோழியும்-இருவருமே-தலைவனை விடாமல் அணைத்துக் கொண்டிருப்பது ஏன்?

(யானை)புள்ளி வரிநுதல் சிதைய, நில்லாது, அயர்ந்து புறங்கொடுத்த பின்னர்
நெடுவேள்/ அணங்குறு மகளிர் ஆடுகளம் கடுப்பத்/ திணிநிலைக் கடம்பின்
திரளரை வளைஇய/ துணையறை மாலையின் கைபிணி விடேஎம்
தலைவனுக்கேற்ற காமத்தன்மை கொண்ட தலைவி, தோழிதான் இவர்கள்!

தலைவன், தலைவியின் நெற்றியை நீவி, தோழியைப் பார்த்துச் சிரிக்கிறான். பிறகு என்ன நிகழ்கிறது?
“நாணும் உட்கும் நண்ணுவழி அடைதர/ ஒய்யெனப் பிரியவும் விடாஅன் கவைஇ/ ஆகம் அடைய முயங்கலின்” (தலைவன் இவர்களைப் பிரியவிடாமல் அணைத்துக்கொள்கிறானாம்)

எல்லா இடங்களிலும் நான், நீ, நாம், நாங்கள், அவன், இவள் என்று இடப் பெயர்களைப் பயன்படுத்தும் குறிஞ்சிப்பாட்டு, முக்கியமான இந்த இடத்தில் இடப் பெயர்களைத் தவிர்த்துவிடுகிறது. நாணும் உட்கும் (யாரை) அடைகிறது? (யாரை) ஒய்யெனப் பிரியவும் விடான்? (யாரை) ஆகம் அடைய முயங்கலின்? ஏன் இந்த இடங்களில் இடப்பெயர்களே இல்லை? இங்கே கேள்வி எழுப்பப்பட்ட மூன்று இடங்களிலும் யாரை என்பது தலைவியை மட்டும் குறிக்கிறதா, இருவரையுமா என்பதுதான் ஐயம். ஏனெனில் இதற்குமுன்அடிவரை இருவரையும் குறிப்பதாகவே-‘யாம்’ ‘எம்’ என்றே சொற்கள் தோழியால் பயன்படுத்தப்பட்டு வந்தன.

ஆக, எப்படிப்பட்ட தமிழ்ப்பண்பாட்டை உணர்த்துவதாக அமைகிறது குறிஞ்சிப் பாட்டு? இப்பாட்டு பழங்குடிமக்கள் கையாண்ட மணமுறையின் எச்சத்தை உணர்த்துகிறது என்பது உண்மை. எவ்வாறு பழங்குடிமக்களிடம் உடலுறவில் எவ்வித மனத்தடையும் தயக்கமும் இல்லையோ அதுபோலவே இங்கும் தலைவி, தோழி, தலைவன் எவரிடமும் இல்லை. அந்தவகையில் உண்மையாகவே இது இயற்கைப் புணர்ச்சிதான்!

அக்காலத்தில் தலைவன் தலைவி புணர்ச்சிக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இருந்ததாகவும் தெரியவில்லை. தலைவன் எத்தனை பெண்களை விரட்டும் ‘விடை’ யாக இருக்கிறான் என்பதும் தெரியவில்லை. இப்பாட்டுக்குச் செயற்கையான களங்கத்தைத் தருபவை, தலைவி முதலில் நிகழ்த்தும் அறவுரைப் புலம்பலும், தலைவன் அறம் புணையாகத் தேற்றுவதும்தான். அதனால்தான் முன்பே அவர்கள் அவ்வாறு பேசுமாறு நிலைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள், நிர்ப்பந்தப்படுத்தப் பட்டிருக்கி றார்கள் என்று சொல்லப்பட்டது. இங்கு தொல்காப்பியர் கூறும் ‘கரணமும்’ இல்லை.

ஆனால் செயற்கையாக, இவற்றைத் திணித்திருக்கிறார் கபிலர். கடைசிப் பகுதியிலும் தலைவன் திருமணம் செய்துகொள்வானா என்பது பற்றித் தலைவி கவலைப்படவில்லை. மாறாக, அவனுக்கு வரும் வழியில் எதுவும் இடையூறு நேர்ந்து விடக்கூடாதே என்றுதான் கவலைப்படுகிறாள். இதனைத்தான் தமிழ்ப்பண்பாடு என்று கபிலர் ஓர் ஆரியஅரசனுக்கு உணர்த்தியிருப்பாரா?

கபிலர் என்பதே வடமொழிச் சொல்லாகவும், அவர் பார்ப்பனர் என்பது பிற பாடல்கள் வாயிலாக அறியப்படுவதாகவும் இருப்பதால் ஒரு பார்ப்பனக் குறும்போடு இப்படியான பழங்குடித்தன்மையும் பாலியல் பன்மையும் கொண்டதுதான் தமிழ்ப் பண்பாடு என்று ‘அறிவுறுத்துவதாகப்’ படைத்திருப்பாரா? அல்லது பின்வந்த பார்ப்பனர்கள் வேண்டுமென்றே இப்படிப்பட்ட குறிப்பை உருவாக்கியிருப்பார்களா? (‘மலையின் பாடல்’ என்பது இப்பாட்டின் பழங்குடிப்பண்பிற்கு ஒத்த தன்மைக்குப் பொருத்தமான தலைப்பாகவே அமைகிறது.) அல்லது “உங்கள் ஆரியப்பண்பாட்டின் எட்டுவகை மணங்களுமே மிகவும் செயற்கையாக அமைந்திருக்கின்றன, எங்கள் தமிழ்ப்பண்பாட்டில் இப்படிப்பட்ட செயற்கைத் தன்மை இல்லை” என்று இதன் வழியாகக் கூறியிருப்பாரோ? இந்த யூகங்கள் யாவும் திணைதுறைக் குறிப்புடன் இருக்கின்ற ‘ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழுணர்த்துவதற்காகப் பாடியது’ என்பதற்கான எதிர்வினை மட்டுமே. அக்குறிப்பிற்கே ஆதாரம் இல்லை என்றால், இந்த எதிர்வினைகளும் அவசியமற்றவையே.

திறனாய்வு