ரோசா லக்சம்பர்க்-திரைப்படம்

ரோசா லக்சம்பர்க்கைப் பற்றிக் கேள்விப்படாத மார்க்சியர்கள் இருக்கமுடியாது. அவரைப் பற்றிய திரைப்படம் 1986இல் ஜெர்மனியில் எடுக்கப்பட்டது, மார்கரெத் வான் த்ரோத்தா என்னும் பெண்மணியால் இயக்கப்பட்ட படம் அது. ஜெர்மன் மொழியில் சிறந்த திரைப்படத்திற்கான பரிசையும் அது 1986இல் பெற்றது. மிகச் சிக்கலானதோர் ஆளுமையின் மிகச் சிறந்த வெளிப்பாடு இப்படம் என்னும் சிறப்பை இந்தப் படம் பெறக்காரணம், இதன் முதன்மை நடிகை பார்பாரா சுக்கோவா, ரோசா லக்சம்பர்கின் குணாதிசயத்தை மிக அருமையாக வெளிப்படுத்தியிருந்த சிறப்புதான்.

இங்கு சுருக்கமாக ரோசா லக்சம்பர்க் பற்றிய அறிமுகத்தைத் தருவது நன்றாக இருக்கும். 1871இல் போலந்தில் பிறந்த அவர் 1919இல் பெர்லினில் மறைந்தார். மதிநுட்பம் மிகுந்தவராகவும், கல்வியில் சிறந்த மாணவியாகவும் விளங்கிய ரோசா, சோஷலிச நடவடிக்கைகளில் இளம் வயதிலேயே ஈடுபட்டார். அதன் விளைவாகக் கைதாவதைத் தவிர்க்க ஸ்விட்சர்லாந்து சென்றார். பல்கலைக்கழகத்தில் கணிதம், இயற்கை விஞ்ஞானம் முதலியவற்றோடு அரசியல் பொருளாதாரம் பயின்றார். போலந்து சோஷலிசக் கட்சியின் தேசியவாதத்தை எதிர்த்து, சமூக ஜனநாயகக் கட்சியைத் தொடங்கினார். அக்கட்சியின் முக்கிய அமைப்பாளர் லியோ ஜோகிசசுடன் தீவிர அரசியல் பிணைப்புக் கொண்டிருந்தார். 1898இல் தன் அரசியல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த ஜெர்மனி சென்றார்.

ஐரோப்பிய சோஷலிசம் பற்றிய விவாதங்களில் மையமான இடத்தைப் பெற்ற சிந்தனையாளர் ரோசா. ‘சீர்திருத்தமா, புரட்சியா’ என்ற நூல் அப்போது அவர் எழுதியது. முதலாளியம் இருக்கும்வரை அதனுள் நிலவும் முரண்களும் சிக்கல்களும் ஒழிக்கப்பட முடியாதவை என்றும், பெர்ன்ஸ்டீன் முன்வைத்த திருத்தல்வாதம் போன்றவை சோஷலிச உருவாக்கத்தின் அஸ்திவாரத்தை மறுத்து அதனைக் கற்பனாவாதமாக மாற்றிவிடும் என்றும் அதில் வாதிட்டிருக்கிறார். சீர்திருத்த நடவடிக்கைகள் முதலாளிய உற்பத்தி உறவுகளை ஒழிக்கப் போதுமானவை அல்ல. தொழிலாளர் இயக்கம் தன் இறுதி இலட்சியமான புரட்சிக்கான அதிகாரத்தைக் கைப்பற்றுதல் என்பதை மறந்துவிடலாகாது. 1904இல் ‘ரஷ்ய சமூக ஜனநாயகத்தின் அமைப்புரீதியான கேள்விகள்’ என்ற பிரசுரத்தில், லெனினை இறுக்கமான மையப்படுத்தப்பட்ட கட்சி தேவை என்றதற்காக விமர்சித்திருக்கிறார். அது தொழிலாளர் வர்க்கத்தை சேவக நிலையிலேயே வைத்துவிடும் என்றார். 1905இல் புரடசிக்கான ஒத்த எதிர்வினை லெனினையும் அவரையும் இணங்கிவரச் செய்தது. ரஷ்யப்புரட்சியை எதிர்நோக்கிய அவர், ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சியையும் அதுபோன்ற பணியில் ஈடுபடுமாறு வற்புறுத்தினார். ‘பொது வேலைநிறுத்தமும், கட்சியும், தொழிற்சங்கங்களும்’ என்ற நூலில், பொது வேலைநிறுத்தத்தினைத் தொழிலாளர் புரட்சிக்கான சிறந்த வடிவமாகக் கண்டுள்ளார். 1910இல் இந்த நோக்கு காட்ஸ்கியுடன் பிளவு ஏற்படக் காரணமாயிற்று.

ஏகாதிபத்தியம் குறித்து மிகுதியாகச் சிந்தித்தவர் ரோசா. ‘மூலதனக் குவிப்பு’ என்ற (அக்யூமுலேஷன் ஆஃப் கேபிடல்) முக்கியமான நூலை 1913இல் வெளியிட்டார். ‘ஜூனியஸ் பிரசுரம்’ என்பதன் வாயிலாக, முதல் உலகப்போரில் ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் நிலைப்பாட்டை எதிர்த்ததால், போரின் பெரும்பகுதியை அவர் சிறையில் கழிக்கவேண்டி வந்தது. சிறையில் ரஷ்யப் புரட்சி என்ற நூலை எழுதினார். அதில் சோஷலிச ஜனநாயகத்தைக் குறுக்கும் போக்கினை விமர்சித்திருக்கிறார்.

இத்திரைப்படம் 1898 முதல் 1919வரை பெரிதும் ஜெர்மனியில் ரோசா வாழ்ந்த காலத்தின் சித்திரிப்பாகும். அரசியல் செய்தியாளராக, ஆசிரியராக, பேச்சாளராக, கருத்தியல் நூல்களின் ஆசிரியராகப் பெரும்புகழ் பெறுவதிலிருந்து தொடங்குகிறது படம். மீண்டும் மீண்டும் அரசியல் காரணங்களுக்காகச் சிறைப்படுவதை விவரிக்கிறது. 1919இல் ஜெர்மன் அரசின் இராணுவத்தினால் அவர் கொலைப்படுவதுடன் முடிகிறது.

இத்திரைப்படத்தில் ரோசாவின் பெண்புரட்சியாளர் பிம்பம், ஒரு மென்மையான, சமாதான விரும்பியான, தாவரங்களையும் விலங்குகளையும் நேசித்த அவர் பண்புகளுடன் பிணைக்கப்பட்டுள்ளது. மேலும் சுமைகளை ஏற்றுக்கொள்ள அஞ்சாத பெண் என்பதும் நன்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

திரைப்படப் பரிந்துரை