வேதநாயகம் பிள்ளையின் படைப்புகளில் அறவியல் நோக்கு

திருச்சி புனித சிலுவைக் கல்லூரியின் முதல்வர் சகோ. ஜெஸின் ஃபிரான்சிஸ் அவர்கள் எழுதிய “வேதநாயகம் பிள்ளையின் படைப்புகளில் அறவியல் நோக்கு” என்னும் நூலுக்கு அளித்த முன்னுரையும் மதிப்பீடும். (மார்ச் 2013)
அறம் மனிதச் சமூக வாழ்க்கைக்கு அடிப்படையானது. மானிடப் பரிவர்த்தனையின் அடிப்படையிலிருந்து அது எழுகிறது. சமூகம் இயங்குவதற்குத் தேவையான பொதுவான விஷயங்கள் அறம் என்னும் தொகுப்பில் அடங்குகின்றன. அதன் அடிப்படை “உன்னைப் போலப் பிறரையும் நோக்கு” என்பதாகும். பிறரிடம் திருடுகின்ற கள்வனும், தன்னிடம் ஒருவருவம் திருடுவதை விரும்புவதில்லை. பிறன் மனைவியைக் கள்ளத்தனமாக நோக்குபவர்களும் தன் மனைவியை இன்னொருவர் பார்க்கச் சகிப்பதில்லை. மற்றவர்களைக் கொலைசெய்யும் முரடர்களும் தன்னையோ தனக்கு வேண்டியவர்களையோ பிறர் கொலை செய்வதை ஏற்றுக்கொள்வதில்லை. ஆக இதுதான் அறத்தின் அடிப்படை. அறம் பொதுவாகக் கடைப்பிடிக்கப் படுவதால்தான் சமூகக் குடும்ப வாழ்க்கையும் சாத்தியமாகிறது.

ஒழுக்கம் வேறு, அறம் வேறு. அறத்தை மதங்களும் வாழ்க் கைத் தத்துவங்களும் ஏற்கும்போது சில விதிகளாக அவற்றை வகுத்துக்கொள்கின்றன. அப்போது அது ஒழுக்கம் ஆகிறது. ஒழுகுதல்-அதாவது, கடைப்பிடித்தல் என்பதிலிருந்து ஒழுக்கம் என்ற சொல் வருகிறது. ஆகவே ஒழுக்கம் பெருமளவு தனிமனித சம்பந்தப்பட்டது. ஒழுக்கத்தில் அற அடிப்படைகள் இருக்கலாம், அறத்திற்குத் தொடர்பற்ற விதிகளும் இருக்கலாம். உதாரணமாக, “திருடக்கூடாது” என்று மதம் சொல்வது அறத்தின் அடிப்படை கொண்டது. “பெண்கள் பர்தா அணிய வேண்டும்” என்பதற்கோ, “ஆண்களுக்கு அடங்கி நடந்துகொள்ள வேண்டும்” என்பதற்கோ அறத்தின் அடிப்படை இல்லை, அச்சத்தின் அடிப்படைதான் இருக்கிறது. இவை ஒழுக்க விதிகள். ஒழுக்கம் காலத்திற்குக் காலம் மாறுகிறது. அறம் அவ்வளவு எளிதாக மாறுவதில்லை.

அறத்தின் அடிப்படை சமூகம் அதை ஏற்று நடத்தல். ஒழுக்கத்தின் அடிப்படை தனிமனிதனுக்கு “நீ இவ்வாறு நட (அல்லது நடக்காதே)” என்று கற்பித்தல்.

சமூக வாழ்க்கைக்கே அறம் அடிப்படையாக இருக்கும்போது, அதன் ளிப்பாடான இலக்கியத்தில் அறம் அடிப்படை இடம் பெறுவதில் வியப்பில்லை. காலத்துக்குக் காலம் இலக்கியம் அடிப்படையான மனித தர்மங்களை வலியுறுத்தி வருகிறது. உதாரணமாக, ஜாதிசார்ந்த நீதிகள் இறுக்கம் பெற்று வந்த நாளில், கம்பராமாயணம், இராமன் இழிகுல வேடனான குகனையும் குரங்கினத் தலைவனான சுக்ரீவனையும் சகோதரர்களாக ஏற்றான் என்று சொல்லும்போது அறத்தை எடுத்துரைப்பதாகிறது. இப்படித் தான் இலக்கியங்கள் இயங்குகின்றன. இப்படிப்பட்ட பொதுவான மானிடத் தன்மைகளைப் பேசுவதனால்தான் திருக்குறள் சிறந்த அற நூலாக அமைகிறது.

 

ஆனால் காலத்தின் தன்மைக்கு இலக்கியங்களும் பலசமயங் களில் ஒத்துச் செல்கின்றன. “மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்” என்றும், “கொழுநன் தொழுதெழுவாள்” என்றும் இலக்கியம் பேசும்போது தன் காலத்தைத் தாண்டி அறத்தைப் பற்றிச் சிந்திக்க வில்லை என்றுதான் கூறவேண்டும்.

 

இதனை இங்கு சொல்வதற்குக் காரணம், வேதநாயகம் பிள்ளை, அறவியல் நோக்கில் தோய்ந்தவர். ஆனால் அவர் இலக்கிய வாயிலாகப் பேசும்போது ஒழுக்கங்களைத்தான் முதன் மைப் படுத்திப் பேசுகிறார். அது மட்டுமல்ல, அவர் ஆங்கிலக் கல்வி வாயிலாகப் பெற்ற சில நோக்குகளின் அடிப்படையில் பெண்கல்வி, பெண் சமத்துவம் போன்றவற்றை வலியுறுத்திப் பேசினாலும், பெண்கள் ஆண்களுக்கு அடங்கி நிற்க வேண்டும் என்பதுதான் அவருடைய வரையறை. இந்த இடத்தில் அவர் காலத்தின் போக்கிற்கு எதிராகச் சிந்திக்கவில்லை.

 

காலத்தின் போக்கிற்கு முற்றிலும் எதிராகச் சிந்தித்தல் சிலரால்தான் இயலும். எனவே அதனை இலக்கியத்தின் ஒரு குறையாகக் கணிக்க இயலாது. ஆனால் வெறும் ஒழுக்கத்தையே இலக்கியம் பேச முற்படும்போது அது இலக்கியத் தன்மையை இழந்து விடுகிறது. உதாரணமாக, திருக்குறள் சில இடங்களில் தன் காலத்தை மீறிச் செல்லா விட்டாலும், பொதுவாக அறம் என்பதன் அடிப்படையில் பேசுவதால் அது சிறந்த இலக்கியமாக நிற்கிறது. ஆனால், ஆசாரக்கோவை வெறும் ஒழுக்கங்களையே பேசுவதால் அது இலக்கியமாக நிற்பதில்லை. இன்று சமூக ஆவணமாகத்தான் அதை நோக்குகிறோம்.

அதுபோலவே அறத்தின் பாற்பட்டு இயங்கும் இலக்கியங்கள், “நீ இப்படி நட, அப்படி நட” என்று எளிய விதிகளாக மாற்றிவிடுவ தில்லை. எல்லாச் சமயங்களிலும் அப்படிச் செய்யவும் இயலாது. ஆனால் ஒழுக்கத்தைப் பேசுபவை “நீ இதைச் செய், அதைச் செய்யாதே” என்று எளிதாகக் கூறிவிடுகின்றன. தமிழில் இன்னா நாற்பது, இனியவை நாற்பது முதல் “ஓதாமல் ஒருநாளும் இருக்கவேண்டாம்” என்பதுவரை இப்படிப்பட்டவை.

வேதநாயகரின் நூல்களை நாம் இன்று படிக்கும்போது அவற்றில் காணப்படும் ஆழ்ந்த சமூக அக்கறை நம்மை பிரமிப்புக் கொள்ளச் செய்கிறது. அதே சமயம், அவர் எல்லாவற்றையும் பெருமளவு ஒழுக்கவிதிகளாக மாற்றிவிடுகிறார் என்பதும், அழகி யல் மதிப்புகளில் பெருமளவு அக்கறை கொள்ளவில்லை என்பதும் அவருடைய இலக்கியங்களின் மதிப்பைக் குறைத்துவிடு கின்றன.

உதாரணமாக, வேதநாயகர், ‘தமிழ் நாவலின் தந்தை’ என்று புகழப்படுகிறார். ஆனால் அவருடைய கதைக் கட்டமைப்பு இறுக்க மாக, காரண காரியத் தொடர்புடையதாக இல்லை. தளர்த்தியாக, தொடர்பற்ற பல சம்பவங்களின் கோவையாக இருக்கிறது. அவை கதைத் தலைவனால்தான் இணைப்புப் பெறுகின்றன. கதைத் தலைவன் மிகவும் கள்ளமற்றவன், மிகச் சூதுவாதற்ற எளிய உள்ளம் படைத்தவனாக இருக்கிறான். அதேசமயம் நன்கு கற்ற றிந்தவனாகவும் இருக்கிறான். அவனிடம் காணப்படும் அறிவார்த் தமான மகிழ்வூட்டும் தன்மையும் ஹாஸ்யமும் ஆச்சரியமாக இருக்கின்றன. கதை “நான்” என்று தற்கூற்றாகச் சொல்லும் போக்கில் அமைகிறது. ஏறத்தாழ இப்போது நூற்று முப்பத்தைந் தாண்டுகளுக்குப் பிறகு அதைப் படிக்கும்போது, கதையின் தனித்த சம்பவக்கோவைகள் நன்றாக இருக்கின்றன. ஆனால் ஒரு கதை என்று தொடர்ச்சியாகப் படிக்கும்போது சலிப்பு ஏற்படுகிறது. மேலும் ஏராளமான உபகதைகள் வாசிப்பைக் கெடுக்கின்றன. அவை சமயங்களில் சாத்தியமின்மை என்ற எல்லைக்கும் செல்கின்றன. ஒழுக்கத்தை போதிக்கும் தன்மை மிக முனைப்பாக இருக்கிறது. சமூக, கலாச்சாரச் சீர்திருத்தங்கள் பலவற்றிற்கு ஆசிரியர் வேண்டுகோள் விடுக்கிறார்.

ஆகவே இந்த நாவலை நாவல் என்று சொல்வதைக் காட்டி லும் அவரே சொன்னதுபோல, குறித்த நோக்கத்தைக் கருதி இயற்றப்பட்ட ‘வசன காவியம்’ என்ற சொல்லால் குறிப்பது ஏற்புடையதாகத் தோன்றுகிறது. நல்லவேளையாக, இந்த நாவ லுக்கு அடிப்படையாக அமைந்த விஷயங்கள், அக்கால யதார்த் தத்தோடு ஒத்துச் செல்கின்றன என்பது ஒன்று, இரண்டாவது, அவற்றை கவனித்து நாவலில் இடம்பெறச் செய்த வேதநாயகரின் கூர்மையான, விமரிசன நோக்குள்ள பார்வை. இவை இந்த தளர்த்தியான வீரசாகசக் கதைக்கு (ரொமான்சுக்கு) சிறந்த இலக்கியப் பண்பை அளித்துவிடுகின்றன. வேதநாயகரின் நடை பொதுவாகப் பண்டிதத் தன்மை கொண்டது என்றாலும் அவர் எடுத்துக் கொண்ட விஷயமே அதை மாற்றி இலகுவான தன்மை கொண்டதாகச் செய்கிறது என்பதோடு இன்று அதன் பழங்கவர்ச் சிக் கெனவே நாம் அதை வாசிக்க முடிகிறது.

ஆக, இன்று நோக்கும்போது, வேதநாயகர் ஓர் அறிஞர், சீர் திருத்த வாதி, சமூக மேம்பாட்டு உற்சாகி என்பவை அவருடைய படைப்பாற்றலை விட மேம்பட்டுத் தெளிவாகத் தெரிகின்றன. இதனை அவருடைய பொதுவான இலக்கிய இயல்பு என்று நாம் ஏற்கலாம். நாவலை ஓர் உதாரணத்துக்காக எடுத்துக் கொண் டோமே அன்றி, சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள், பெண்மதி மாலை போன்ற பொதுவான நூல்களில் மட்டுமன்றி, தேவமாதா அந்தாதி போன்ற சமய நூல்களிலும் இந்தப் பண்புகளே மேலோங்கி நிற்கின்றன.

இதுவரை நான் பொதுவாகப் பேசிவந்ததுபோலத் தோன்றும். இல்லை. “வேத நாயகம் பிள்ளையின் படைப்புகளில் அறவியல் நோக்கு” என்ற இந்த நூலில் மேற் கண்ட கருத்துகளை முனைவர் சகோதரி ஜெஸின் ஃபிரான்சிஸ் அவர்கள் சிறப்பாக ஆங்காங்கு வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த நூலின் அமைப்பு,

அறவியல் அணுகு முறையும் விளக்கமும்,

வேதநாயகம்பிள்ளையின் படைப்புகளும் வாழ்வியல் கூறுகளும், அறக் கருத்துகள்,

திருக்குறளின் தாக்கம்,

படைப்பாளுமைத் திறன்,

அறவியல் நோக்கு

என்னும் ஆறு இயல்களாக அமைந்திருக்கிறது. கூறியது கூறல் இன்றி, ஒவ்வொரு இயலும் தன்னளவில் ஒரு நோக்கம் சார்ந்த தாக அமைந்திருக்கிறது. வேண்டியவர்களைப் பாராட்டுவது, வேண்டாதவர்களைத் தேவையின்றி இகழ்வது என்னும் நோய்கள் இன்றைய ஆய்வுகளிலும் திறனாய்வுகளிலும் காணப்படும் மிக முக்கியமான குறைகள். இந்தக் குறைகள் இந்த நூலில் அறவே இல்லை என்பது எல்லாவற்றையும் விட முக்கியமானது, சகோதரி எவ்வளவு துல்லியமாக வேதநாயகரின் நூல்களை மதிப்பீடு செய்கிறார் என்பதைப் பாருங்கள்:

“பிரதாப முதலியார் சரித்திரமும், சுகுணசுந்தரியும் அறவியல் நோக்கில் தோல்வியே அடைந்திருகின்றன என்பதுதான் முக்கிய மான உண்மை….வேதநாயகம் பிள்ளையின் உத்திகள் மிக பலவீனமானவை….தமிழுக்கே புதிய வடிவமான புதினத்தை, முதன்முதலில் கையாளுவதனால் வேதநாயகர் தோல்வியடைந் திருக்கிறார் என்று சொல்வதே பொருத்தமாக அமையும்….வேத நாயகர் முதன்மையாக ஒரு புதின ஆசிரியர், இலக்கியப் படைப்பாளி என்பதை விடவும் அறவியல்வாதி, தற்செயலாகவே அவர் புதினம் என்னும் வடிவத்தைச் சென்றடைந்தார் என்றே கூறவேண்டும்.” (ப. 181)

சகோதரி அவர்கள் ‘அறவியல் நோக்கு’ என்னும் இயலின் தொடக்கத்தில் அதன் குறைபாடாகச் சொல்வன எல்லாம் ஒழுக்கவியல் நோக்கின் குறைபாடுகளே அன்றி, அறவியல் சிந்தனையின் குறைபாடுகள் அல்ல. ஆனால், ஒருவகையில் அறத்தைச் செயல்படுத்தும்போது அது ஒழுக்கமாகக் குறைந்து விடுகிறது என்பதும் அறவியலைப் பேசும்போது ஒழுக்கவியலாகி விடுகிறது என்பதும் கோட்பாடு-செயல்முறை சம்பந்தப்பட்ட இடர்ப்பாடுகள்.

முடிவுரையில் சகோதரி தொகுத்துச் சொல்லும் கருத்துகள், அவருடைய திறனாய்வு நோக்கு அடிப்படையினைத் தெளிவு படுத்துவதோடன்றி, இலக்கியத்தை எவ்விதம் மதிப்பிட வேண்டும் என்பதை மாணவர்க்குச் சொல்லித் தருவனவாகவும் அமை கின்றன.

“அறக்கருத்துக்களை நேராகச் சொல்லிப் பயனில்லை. மேலும் அறக்கருத்துகளைச் சொல்வோர் தம்மை ஓர் உயர்ந்த பீடத்தில் வைத்துக்கொண்டு பிறரை இழிவாக நோக்குவதற்கே அறம் கூறுதல் பயன்படுகிறது. எனவே அறக்கருத்துகள் இலக்கியத்தில் நேர்முகமாக வெளிப்படலாகாது. எவ்வளவுக் கெவ்வளவு மறைமுகமாக வாழ்க்கை அனுபவங்களின் வாயிலாக வெளிப்படுகின்றனவோ அவ்வளவுக்கவ்வளவு அவற்றுக்கு ஆற்றல் அதிகம். எனவே அறநூல்கள் கூடியவரை மறைமுகமாகக் கூறும் இலக்கியங்களாக அமையவேண்டும்.”

இவ்விதம், வேதநாயகரின் படைப்பாளுமையை மதிப்பிடுவதில் இந்த நூல் நேர்மையான ஒன்றாக நிற்கிறது என்பது இதன் சிறப்பாகும். ஆனால் வேதநாயகரின் வாழ்க்கையையோ, அவர் அக்காலத்தின் பிற சிறந்த ஆளுமைகளோடு கொண்டிருந்த தொடர்பையோ இவ்வளவு முனைப்பாகச் சொல்லியிருக்க வேண்டியதில்லை என்பது என் கருத்து. அவை இந்த நூலின் ஓட்டத்தைக் குறைக்கின்றன. ஆனால் அந்தச் செய்திகளும் பெரும்பாலும் பிறர் அறியாதவை, பிற்கால ஆய்வாளர்களுக்குப் பயன்படுபவை என்ற அளவில் பயனுடையவையே.

வேதநாயகரின் வாழ்க்கையையும் அவரது நூற்கருத்துகளையும் தொடர்புபடுத்திக் காட்டுவதில் சகோதரி முனைப்புக் காட்டியிருக் கிறார், அதற்காகவே இந்த நூலின் நிறையப் பக்கங்களைச் செலவழித்திருக்கிறார் என்றாலும், இன்றைய திறனாய்வில் நாம் அப்படிச் செய்வதில்லை. அது தேவையுமில்லை. அந்த அளவுக்கு ஒரு இலக்கியவாதியின் வாழ்க்கைக்கும் படைப்புகளுக்கும் தொடர்பிருக்குமா என்பதும் ஐயத்திற் குரியது. அறம், அனுபவத் தின் வடிவத்தை ஏற்க வேண்டும் என்பதுதான் முக்கியமானது. வாத்ஸ்யாயனரின் காமசூத்திரமும் இலக்கியமாகக் கொண்டாடப் படுகின்ற நாட்டில், ஐந்து மனைவியரோடு வாழ்ந்த வேதநாயகர், திருக்குறளின் காமத்துப்பாலிலிருந்து ஒரு கருத்தையும் ஏற்கவோ மேற்கோளாகக் காட்டவோ இயலவில்லை என்பதை நாம் துறவி களுக்குரிய ஒரு மனத்தடை (இன்ஹிபிஷன்) அவரிடமும் இருந்ததாகக் காண முடியுமே அன்றி அதனை ஒரு சிறப்பாகக் கொள்ளமுடியுமா என்பது எண்ணத் தக்கது.

எவ்வாறாயினும், இது இந்த நூலின் சிறப்பை எவ்விதத்திலும் குறைப்பதன்று. இந்நூல், அறவியல் நோக்கில் ஆய்வு செய்ய வரும் மாணவர்களுக்குப் பயன்படும் என்பதோடு பொதுவாக இலக்கியத்தை எவ்விதம் அணுக வேண்டும் என்பதற்கும் ஒரு நல்ல வழிகாட்டியாக நிற்கவல்லது.

கடைசியாக, இந்த நூல், சகோதரி அவர்களின் முனைவர் பட்ட ஆய்வேட்டின் அடிப்படையில் உருவானது என்பதைச் சொல்லி யாகவேண்டும். தற்செயலாக சகோதரி அவர்களின் ஆய்வுக்கு வழிகாட்டியாக அமைந்தவன் நான் என்பதைத் தவிர இதற்கு முன்னுரை வழங்கச் சிறப்புத் தகுதி ஒன்றும் எனக்கு இல்லை. சகோதரி அவர்களின் சமயச் சார்பற்ற தன்மையும் தமிழின் மேலும் தமிழ் இலக்கியத்தின் மேலும் அவர்கள் கொண்டுள்ள பற்றும் மிகச் சிறப்பாக இந்த நூலில் புலனாகின்ற விஷயங்கள். அவர்கள் மேலும் இம்மாதிரி நூல்கள் பலவற்றைச் சிறப்பாகத் தமிழில் இயற்றிக் கல்வி உலகிற்கும் தமிழுலகிற்கும் பயனளிக்க வேண்டும் என்பது என் முனைப்பான வேண்டுகோள்.

நூல்-பரிந்துரை