அறிவியலின் தத்துவம்

அறிவியலின் தத்துவம் – ஓர் எளிய தொடக்கம்

 

pooranachandran1


நமது காலத்தில் பிற எல்லாத் துறைகளையும் விட அறிவியலே மிக சக்தி வாய்ந்ததாக உள்ளது. அதன் செயற்படுதுறைகளாகப் பொறியியல், மருத்துவம் போன்றவை உள்ளன. அறிவியல் கருவிகள் எல்லா இடங்களிலும் நிறைந்துள்ளன. எனவே கல்லூரிப் படிப்பிலும் ஆதிக்கம் மிகுந்த துறையாக அறிவியல் விளங்குகிறது. அறிவியல் மிக முக்கியமான கல்வித்துறை என்பதோடு பலவேறு கிளைகளையும் கொண்டது. இன்று அறிவியலின் வரலாறு, அறிவியலின் சமூகவியல், அறிவியலின் தத்துவம் போன்ற துறைகளில் சிந்தனை தொடங்கியிருக்கிறது. இதுவரை இந்தத் துறைகளில் பெருமளவு ஆர்வம் காட்டப்பட்டதாகச் சொல்லமுடியாது. 1950கள் வரை கலைத்துறைகள், மானிடத் துறைகள் கருத்தாதிக்கம் மிகுந்தவையாக நம் நாட்டில் இருந்தன. அறிவியல், கணிதம் கற்றவர்களுக்குக்கூட பி.ஏ. (கலைத்துறை இளையர்) என்றே அக்காலத்தில் பட்டம் தரப்பட்டது. இன்றோ தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கலைத்துறைகளில் படிப்பவர்களும் இன்று தங்கள் துறை அறிவியல் என்று வாதிடுகின்றனர். சான்றாக, எம்.எல்.ஐ.எஸ் (நூலக, தகவலியல் முதுகலைத் துறை) படிக்கும் மாணவர்கள் தாங்கள் ஓர் அறிவியல் துறையையே கற்பதாகக் கூறுகின்றனர். கல்லூரிப் படிப்புகளில் பி.ஏ. என்ற பட்டப்படிப்பு இருபதாண்டுகள் முன்புவரை பொருளாதாரம், வரலாறு, அரசியல் போன்ற துறைகளிலாவது இருந்தது. இப்போது அத்துறைகளில் அறவே அது இல்லை. தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிப்படிப்புகளில் மட்டுமே இன்று பி.ஏ. உள்ளது. பிற பி.ஏ. படிப்புகள் காணாமல் போய்விட்டன. இந்த மாற்றங்கள் நல்லவையா, தேவையானவையா என்பவை சமூகவியலாளர்களால் ஆழமாகச் சிந்திக்கப்பட வேண்டியவை. இவ்வளவு ஆதிக்கம் பெற்றுள்ள அறிவியல் கல்வி பற்றிச் சில குறிப்புகள்.

ariviyalin-thaththuvam4 (1)

அறிவியல் வரலாறு, அறிவியலின் சமூகவியல், அறிவியலின் தத்துவம் போன்ற துறைகள் இதுவரை அனுபவவாத விளக்கத்தின்பாற்பட்டவையாகவே இருந்தன. குறிப்பாக முதல் இரு துறைகள். இவை அறிவியல் இதுவரை அடைந்துவந்துள்ள மாற்றங்களைப் பற்றி எடுத்துரைக்க முயலுகின்றன. அறிவியல் என்பதன் அர்த்தம், அதன் முறைகள் போன்றவை எவ்வாறு மாறி வந்துள்ளன என்பதையும் விளக்க முயலுகின்றன. அறிவியலில் கருத்தியலின் பங்கு பற்றி ஆராயவும் முனைகின்றன. ஒரு காலத்தில் அறிவியல் என்பதே சித்தாந்தத்திற்கு (கருத்தியலுக்கு) முரணாக நிறுத்திப் பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது, அறிவியலே சித்தாந்தத்தின் அடிப்படையிலானது, கருத்தியல் வடிவமானது என்று நோக்கப்படுகிறது.

அறிவியல் பற்றிய சிந்தனைகளில் புதிய மாற்றம் ஏற்படுத்தியவர்கள், எடின்பரோ சிந்தனைக்குழுவினர். ரேஷனலிஸ்டுகளுக்கு (பகுத்தறிவுவாதிகளுக்கு) எதிர்நிலையில் இயங்கிய இவர்கள், 1970களில் மான்ஹீம் என்பவரின் சிந்தனைகளைப் பின்பற்றி, “அறிவியல் சமூகவயமானது, சமூகவயமானது மட்டுமே” என்ற கோட்பாட்டை முன்வைத்தனர். தூய அறிவியல் ஆய்வு என்ற பெயரால், அறிவியலாளர்கள் சமூகப் பொறுப்பின்றி இயங்கக்கூடாது என்றனர்.

அறிவியலின் தத்துவம், அடிப்படையான சில வினாக்களை மூன்று தளங்களில் எழுப்புகிறது.

1. கருத்தாக்கம், உற்றுநோக்கல், கொள்கை, விதி, மாதிரி, இவையெல்லாம் உண்மையில் யாவை? (கருத்தாக்கக் கேள்விகளின் தளம்)

2. கொள்கைகள் எவ்விதம் உருவாக்கப்படுகின்றன? எவ்விதம் மதிப்பிடப்படுகின்றன? அடுத்தடுத்து வரும் இரண்டு கொள்கைகள் எப்படித் தொடர்புபடுத்தப்படுகின்றன? (இது வழிமுறை- methodology-பற்றிய கேள்விகளின் தளம்.)

3. அறிவியல் சார்பான மதிப்புகள் (values), மதிப்பீடுகள் (evaluations) எப்படி உருவமைக்கப்படுகின்றன? அறிவியல் என்பது உண்மையில் முற்போக்கானது தானா? இல்லை என்றால் ஏன் அப்படி? அறிவியல் பகுத்தறிவு அடிப்படையிலானதுதானா? பொதுநோக்கு (அப்ஜெக்டிவிடி) உடையதுதானா? எப்படி அறிவியல் மதிப்புகள் சிலருக்குச் சார்பாகவும் சிலருக்கு எதிராகவும் அமைகின்றன? (இது மதிப்புகளியல்-ஆக்சியாலஜி-பற்றிய கேள்விகளின் தளம்).

இன்று நவகாலனியத்தன்மை பற்றி நாம் நன்றாக அறிவோம். மேற்கத்திய நாடுகள் எவ்விதம் திட்டமிட்டு தெற்கு, கிழக்கு நாடுகளைச் சுரண்டுகின்றன என்பது பற்றியும் அறிவோம். இவையாவும் மேற்கத்திய அறிவியல் பற்றிய கேள்விகள். இன்றுவரை, மேற்கத்தியப் பாணியிலான அறிவியல் மட்டுமே அறிவியல் என்ற பெயரால் கற்றுத்தரப்படுவதால், இந்தக் கேள்விகள் பெரிய முக்கியத்துவம் பெறுகின்றன.

இன்றுவரை, கல்லூரிகளிலும், பொறியியல், மருத்துவ நிறுவனங்களிலும், அறிவியல் பற்றிய ஒரு குறிப்பிட்ட படிமம் மாணவர்களுக்குத் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வந்துள்ளது. இந்தப் படிமம், அறிவியல் என்பது அறிவார்த்தமானது, பொதுநோக்குடையது, முற்போக்கானது என்று சொல்கிறது. இப்போது இவை அனைத்தும் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன.

அறிவியல் X அறிவியல் அல்லாதது என்பதன் எல்லைக்கோடுகள் என்ன? இவற்றிற்கிடையில் தெளிவான எல்லை உண்டா? எந்த அளவு இந்த எல்லை தெளிவானது? இந்தக் கேள்விகளும் இன்று எழுப்பப்பட்டுள்ளன. அறிவியல், அறிவியல் அல்லாதது என்று பிரிக்கும் எல்லைக்கோடு ஒரு மாயை என்பது இன்றைய நோக்கு. இக்கேள்விகளை ஆராயும்போது, அறிவியலின் தத்துவம், இலக்கியத்திற்கு விமரிசனம்போலச் செயல்படுகிறது. எனினும் இக்கேள்விகள் எழுப்பப்படுகின்ற நிலை, அறிவியலின் தகுதியை மாற்றிவிடவோ குறைத்துவிடவோ இல்லை. காரணம், இன்றும் இக்கேள்விகளை அறிவியலாளர்கள் எழுப்ப முனையவில்லை, தத்துவவாதிகள், சமூகவியலாளர்கள், வரலாற்றாளர்களே எழுப்புகின்றனர்.

1950கள் வரை அறிவியலில் நேர்க்காட்சிவாதம் (பாசிடிவிசம்) வலுவானதாக இருந்தது. 1950களுக்குப் பின்னர்தான் வேறு புதிய நோக்குகள் எழுந்தன. அறிவியலின் தத்துவத்தில் நவ-காண்ட்டிய நோக்கு, இப்பிரபஞ்சம் எப்படி அறிவியல் வாயிலாக அர்த்தம் கொள்ளப்படுகிறது, காலம்/வெளி பற்றிய கருத்தாக்கங்கள் அமைவது எவ்விதம், போன்ற கேள்விகளில் மட்டுமே அதிக கவனம் செலுத்துகிறது. ஆங்கில நோக்கு, அறிவியல் அறிவின் ஏற்புடைமையை ஆராய்ந்து உறுதிப்படுத்துவதில் மட்டுமே அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளது. இயற்கை அறிவியல்கள் தரும் அறிவு, பிற துறைகள் அளிக்கும் அறிவினின்றும் மாறுபட்டவை, முற்றிலும் நம்பகமானவை என நிறுவுவதில் ஆர்வம் காட்டிவந்துள்ளது. இவ்விரு நோக்குகளிடையே ஆட்பட்ட அறிவியலின் தத்துவம், அறிவியல் எவ்வாறு இருக்க வேண்டும் என்று வரையறை கட்டுவது, எவ்வாறு இருக்கிறது என்று வரையறுப்பது என்ற இரு நோக்குகளுக்கும் இடையில் சிக்கித் திணறித் திண்டாடிவருகிறது.

நேர்க்காட்சிவாதம்:

அறிவியல் துறை, பொதுநோக்குக் கொண்டதாக, உற்றுநோக்கல் தரவுகளின் அடிப்படையில் மட்டுமே அமைகிறது என்று சொல்வது நேர்க்காட்சிவாதம். ஃப்ரான்சிஸ் பேகன், டே கார்ட்டே காலம் முதலாக முன்வைக்கப்பட்ட கோட்பாடு இது. அறிவியல் பற்றிய பொதுப்புத்தி நோக்கிற்கு இது மிகவும் இணக்கமானது. உற்றுநோக்குதல்களை எந்த அளவு மிகுதிப்படுத்த வேண்டுமோ அந்த அளவு மிகுதிப்படுததவேண்டும், பின்னர் தானாகவே அவற்றிலிருந்து வருவித்தல் (இண்டக்ஷன்) முறையில் விதிகள், கொள்கைகள் உருவாகும் என்கிறது. “தரவுகளின் சேகரிப்பிலிருந்து விதிகள் தாமாகவே விளைகின்றன.”

வருவித்தல் முறை (இண்டக்ஷன்), விதிபின்பற்றல் (டிடக்ஷன்) முறை என்பவற்றை இங்கே சற்றே விளக்குவோம்.

கோழிக்கு இரண்டு கால்கள்தான் உள்ளன. புறாவுக்கும் இரண்டு கால்களே. மயிலுக்கும் இரண்டு கால்களே. காக்கைக்கும் இரண்டு கால்களே. இப்படித் தரவுகளை அடுக்கிக்கொண்டே சென்று, இவை எல்லாமே பறவைகள், ஆகவே பறவைகள் எல்லாவற்றிற்கும் இரண்டு கால்கள் என்று முடிவுக்கு வருவது இண்டக்ஷன்.

பறவைகள் எல்லாவற்றிற்கும் இரண்டு கால்கள் தான் என்பது இப்போது விதி ஆகிவிட்டது.

நான் காண்பது ஒரு புதிய நீலநிறப் பறவை. பறவை என்பதால் அதற்கும் இரண்டு கால்கள் மட்டுமே இருக்கவேண்டும் பொது விதியிலிருந்து தனிப்பட்ட சான்றுக்கான முடிவை அடைவது விதிபின்பற்றல் (டிடக்ஷன்).

“வெள்ளைக்காரர்கள் யாவரும் ஆதிக்கம் செய்தவர்கள். சென்ற நூற்றாண்டுவரை உலகில் பல காலனிகளை ஏற்படுத்தியிருந்தார்கள்”-இது கருதுகோள் (ஹைபோதீசிஸ்). இது சரியாகவும் இருக்கலாம். தவறாகவும் இருக்கலாம். (மேற்கண்ட கருதுகோள் தவறு. ஏனெனில், போலந்து, ஹங்கேரி, ஸ்வீடன் போன்ற நாடுகளில் இருப்பவர்களும் வெள்ளைக்காரர்கள்தான். அந்நாடுகள் ஆதிக்கம் செய்யவில்லை.)

உற்றுநோக்கலை ஆங்கிலத்தில் Observation என்பார்கள். அறிவியல் சோதனைகளின் அடிப்படை உற்றுநோக்கல்தான். உற்றுநோக்கலினால் பெறப்படும் விவரங்களைத் தரவுகள் (data) என்பார்கள்.

இனி, நேர்க்காட்சிவாதத்தின் அடிப்படைகளைக் கொஞ்சம் பகுத்துப்பார்க்கலாம்.

1. உற்றுநோக்கல் தரவுகள், கோட்பாட்டுக் கலப்பற்றவை.

உற்றுநோக்கல் தரவுகள், புலன் அனுபவங்களால் பெறப்படுகின்றன. எனவே இவை அடிப்படையானவை, எவ்விதக் கோட்பாட்டுக் கலப்பும் அற்றவை, புலன் அனுபவங்களிலிருந்து பெறப்படுவதால் இவை, மெய்ம்மைத்தன்மை கொண்டவை என்ற அனுபவவாத அடிப்படையில் எழுந்தது இது.

இயற்கை அறிவியல்கள் அனுபவவாத அடிப்படை கொண்டவையாக இருக்கும் போது, கணிதம் போன்ற சில அறிவுத்துறைகள் மட்டும் தருக்கவாத அடிப்படை கொண்டவையாகவும், ஆதிமெய்ம்மைகள் (a priori facts)என்பவற்றில் நம்பிக்கை வைப்பவையாகவும் இருந்துள்ளன.

2. மெய்ம்மை X மதிப்பு இருமைத்தன்மை

மெய்ம்மைகள் அடிப்படையிலான தீர்ப்புகள் வேறு. மதிப்புகள் அடிப்படையிலான தீர்ப்புகள் வேறு. அறிவியல் முன்னவற்றைத் தருமே அன்றிப் பின்னவற்றைப் பற்றிப் பேசாது.

3. அறிவியல் என்பது மெய்ம்மை காணலில் புறச்சட்டக     வடிவு (வாய்பாட்டு வடிவம்) கொண்டது.

4. அறிவியல் கொள்கைகள் உற்றுநோக்க இயலாதவை பற்றி எதுவும் சொல்வதில்லை. அவற்றுக்குத் தொடர்பற்றவை.

5. அறவியல் முறை என்பதே வருவித்தல் (இண்டக்ஷன்) முறைதான்.

6. சரிபார்த்தல் என்பது அறிவியலின் அடித்தளம்.

7. அறிவியல் பிற படைப்பாக்கத் துறைகளிலிருந்து வேறுபட்டது. (அதாவது கலை, இலக்கியம் போன்றவற்றினும் மேம்பட்டது.) ஏனென்றால் அதன் வழிமுறை தனித்தன்மை கொண்டது. (இக்கோட்பாடு விஞ்ஞான முதன்மை வாதம்-சயண்டிஸம் எனப்படும்.)

8. எல்லா அறிவியல்களுக்கும், அதன் பல்வேறு கிளைகளுக்கும், அறிவியல் முறை என்பது ஒன்றேதான். (methodological monism).

9. அறிவியல் வளர்ச்சி என்பது தடுக்கவியலாதது. நிர்ப்பந்தமானது. ஏனெனில் அது மேலும் மேலும் பல்வேறு அறிவியல் கிளைகளிலிருந்து பெறும் தொகுப்பான வளர்ச்சியைக் கொண்டது. மேலும் மேலும் காலத்தால் நுண்ணிய தரவுகள், அதாவது உற்றுநோக்கல்கள் பெருகப் பெருக, அதன் அடித்தளம் வலுவடைகிறது. அதிலிருந்து வருவிக்கப்படும் மேற்கட்டுமானமாகிய கொள்கைகளும் அதனால் உறுதிபெற்றவை ஆகின்றன.

10. அறிவியலில் மாற்றம் எப்போதும் வளர்ச்சி நோக்கிய திசையிலானதே.

(நேர்க்காட்சிவாதக் கொள்கைகளை ஏற்க மறுக்கும் கார்ல் பாப்பர் போன்றவர்களும் இக்கருத்தை ஏற்கின்றனர்.)

NPG P370; Sir Karl Raimund Popper by Lucinda Douglas-Menzies

மேற்கண்ட நேர்க்காட்சிவாதக் கருத்துகளுள் ஒன்றிரண்டு முன்னரே மறுக்கப்பட்டுள்ளன. காரணகாரியக் கோட்பாட்டை முன்வைத்த டேவிட் ஹ்யூம், அறிவியல் உற்று நோக்கல்களின் நிச்சயத் தன்மையை மறுத்தார். வருவித்தல் முறை (இண்டக்ஷன்) என்பதே முன்யூகங்கள் சார்ந்தது, எனவே அதை நியாயப்படுத்த முடியாது என்பது அவர் கோட்பாடு. இதற்குச் சற்று மாறாக, தே கார்த்தே, கருதுகோள் முறையை (ஹைபோதெடிசிஸம்) என்பதை முன்வைத்தார். இதுவம் தர்க்கவாத அடிப்படை கொண்டதுதான்.

வருவித்தல் முறைக் கோட்பாடு, அறிவியலின் நிச்சயத்தன்மை, பேரளவிலான அறிவு ஆகியவற்றை உறுதிப்படுத்தும் நோக்கம் கொண்டதாக இருந்தது. கருதுகோள் முறைக் கோட்பாடு, ஆழ்ந்த உண்மையைத் துருவி வெளிப்படுத்துதல் என்பதை இலக்காகக் கொண்டது. இவையிரண்டிற்கும் மாறாக அறிவியல் தர்க்கத்துக்கு மாறாக, நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்தது என்று கூறுவது ஹ்யூமின் கோட்பாடு. எங்கு கருதுகோள்களும், வருவித்தலும் முடிகின்றனவோ, அங்கிருந்துதான் அறிவியல் தொடங்குகிறது என்றார் ஹ்யூம். கலை, இலக்கியம், மானிடவியல் போன்றே அறிவியலும் புலனால் அறிய ஒண்ணாதவற்றைப் பற்றிப் பேசுகிறது; அது ஆழ்ந்துள்ள, மறைந்துள்ள உண்மை களைத் தேடுகிறது; அதிலும் கலையைப் போலவே புதுமையும் படைப்பாற்றலும் உள்ளன என்பது ஹ்யூமின் கருத்து.

1950க்குப் பின் அறிவியலை நேர்க்காட்சிவாத அடிப்படையில் நோக்குவது குறைந்துவந்தது. இதற்கு அமைப்புவாதம். பின்னமைப்புவாதம் போன்றவற்றின் எழுச்சியும் துணைபுரிந்தது. நேர்க்காட்சி வாதத்தின் அடிப்படையில் அறிவியலை நோக்காதவர்களைப் பிந்திய நேர்க்காட்சி வாதிகள் (போஸ்ட்-பாசிடிவிஸ்டுகள்) எனலாம். இவர்கள் மூவகைப்படுவர்.

1. நேர்க்காட்சிவாதத்தை அரைமனத்தோடு ஏற்பவர்கள்/மறுப்பவர்கள்.

(சான்று, கார்ல் பாப்பர்).

2. நேர்க்காட்சிவாதத்தை அறவே புறக்கணிப்போர். (சான்று, டி.எஸ். கூன்).

3. நேர்க்காட்சிவாதத்தை மறுப்பவர்கள். (சான்று, பெயரபெண்ட்).

இனி, பாப்பர், கூன், பெயரபெண்ட் ஆகிய அறிவியல் தத்துவவாதிகள் முன்வைத்த கருத்துகளைச் சுருக்கமாகக் காணலாம்.

(இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த சிறகு இதழில் வெளியாகும்.)

அறிவியலின் தத்துவம் – ஓர் எளிய தொடக்கம் – பகுதி-2

 

கார்ல் பாப்பர் (Carl Popper)

ariviyalin-thaththuvam21 (12)

“அறிவியல் முறை ஆராய்பவனின் மனத்திலுள்ள முன்கருத்துகளைச் சார்ந்தது” என்று ஹ்யூம் கூறியதைப் பார்த்தோம். இதனை ஏற்பவர் கார்ல் பாப்பர் (Carl Popper). எனினும் அறிவியலில் மாறாத தர்க்க அமைப்புமுறை உண்டு என்றும், அறிவியல் முற்போக்கானதே என்றும் கருதுபவர். எனவே நேர்க்காட்சிவாதத்தை இவர் முற்றிலும் மறுப்பவர் அல்ல. அதேசமயம், உற்றுநோக்கலும், அதன் விளைவான தரவுகளும் முன்கொள்கைச் சார்புடையவையே என்றும் கூறுகிறார்.

உற்றுநோக்கல் எவ்விதம் முன்முடிவு சார்ந்தது?

1. உற்றுநோக்கலில் ஈடுபடும் அறிவியல் ஆய்வாளன், முன் அனுபவமின்றி அதில் ஈடுபடுவதில்லை. உற்றுநோக்கம் என்பது ஒரு செயலூக்கமற்ற (passive)செய்கை அல்ல. செயல்தீவிரம் வாய்ந்தது. முன்புரிந்துகொள்ளலை வேண்டுவது. எனவே அது முன் முடிவு சார்ந்தது.

2. உற்றுநோக்கல், குறித்த இலக்கு நோக்கிச் செய்யப்படுவது. எனவே இலக்குச் சார்ந்த தரவுகள் மட்டுமே திரட்டப்படுகின்றன. அந்தக் குறிப்பிட்ட இலக்கைச் சாராத, அதற்குத் தேவையற்றது என்று கருதப்படுகின்ற தரவுகள் புறக்கணிக்கப்படுகின்றன.

3. எல்லா உற்றுநோக்கல் தரவுகளும் எழுதிக் குறிக்கப்படுகின்றன. எழுதிக் குறித்தல் என்பது வருணித்தல் என்ற வகையில் அடங்கும். உற்றுநோக்கல்கூட, மனத்திற்குள் செய்யப்படும் வருணனைதான். வருணிப்பதில்லை என்றால் அது பயனற்றது. வருணித்தல் என்பது மொழியின் செயல்பாடு. கையாளப்படும் மொழியோ, அக்கால, இட, ஆதிக்கக் கோட்பாட்டை/கருத்தியலைச் சார்ந்தது.

4. உற்றுநோக்குவதற்குக் கருவிகள் (மைக்ராஸ்கோப் போன்றவை) கையாளப் படுகின்றன. கருவிகளே சில கொள்கைகளின் அடிப்படையில் உருவமைக்கப்பட்டவைதான். எனவே ஒரு கருவியை ஒருவர் கையாளும்போது அக்கருவிக்குள் பொதிந்துள்ள அல்லது அமைந்துள்ள கோட்பாட்டையும் ஏற்பவர் ஆகிறார்.

5. எல்லா உற்றுநோக்கல்களும் கொள்கையின் அங்கீகாரத்தை எதிர்நோக்கியே செய்யப்படுகின்றன. (சான்று, கலிலியோவின் வாழ்க்கை).

6. எல்லா உற்றுநோக்கல்களும் சில தேர்வுகளை/தேர்வுக்கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டே செய்யப்படுகின்றன. தேர்வு என்பது முன்யூகங்கள், முன்னறிவு சார்ந்த ஒன்று. எந்தெந்த உற்றுநோக்கல்களை, எங்கே, எவ்வாறு செய்யலாம் என்பது முன்கோட்பாடு சார்ந்ததாகிறது. ஒரு கொள்கையில் நம்பிக்கை, சில எதிர்பார்ப்புகளைத் தருகிறது. எதிர்பார்ப்புகள் அடிப்படையில்தான் ஆய்வுப் பிரச்சினையும் அதற்கேற்ற தரவுகளும் உருவாகின்றன.

மேற்கண்டவற்றால், பாசிடிவிசத்தின் அடிப்படையான “சார்பற்ற உற்றுநோக்கல்” என்பதும் அதிலிருந்து “தானாகவே திரளும் கொள்கை” என்பதும் தகர்ந்து போகின்றன.

நேர்க்காட்சிவாதிகள் உற்றுநோக்கல் தரவுகளிலிருந்துதான் கோட்பாடுகள் பெறப்படுகின்றன என்கின்றனர். ஆனால் அது உண்மையல்ல. எவற்றை உற்றுநோக்க வேண்டும் என்பதிலிருந்தே நம் மனத்தின் முன்முடிவுகள் தாக்கத் தொடங்கிவிடுகின்றன. எனவே உற்றுநோக்கல் சார்பற்ற செய்கை அல்ல, அதுவும் கருத்தியல் சார்ந்ததாகிறது. கருத்தியலும் உற்றுநோக்கலைச் சார்ந்தது. குறித்த நோக்கம், ஒரு துறையில் ஏற்கெனவே பெற்றிருக்கும் முன்னறிவு, எதிர்நோக்கும் இலட்சியம் ஆகியவற்றால் நிர்வகிக்கப்படு அமைவதுதான் உற்றுநோக்கல் என்ற செயல். உற்றுநோக்கல் என்பது நம்மால் செய்யப்படுவதே ஒழிய, தரப்படுவது, தானாக வருவது அல்ல.

மேற்கண்ட நேர்க்காட்சிவாதக் கொள்கைகளைத் தாக்கிய கார்ல் பாப்பர், வேறொரு மாற்றுப் படிமத்தை அறிவியலுக்கு அளித்தார். அறிவியலிலும், தத்துவத்திலும் அவரைப் பாராட்டுவோர் பலரை உருவாக்கியது, அவரது அறிவியல் செயல்முறைக் கோட்பாடு. நேர்க்காட்சிவாதிகள், விதிவருமுறை அல்லது வருவித்தல் முறை (இண்டக் டிவிசம்) யை முழுமுதலாக முன்வைத்தனர். இதற்கு எதிரான ஹைபோதீசம் (கற்பிதங்களை உருவாக்கிக்கொண்டு நிறுவ முனைவது) என்பதை மாற்றாக முன்வைத்தார் பாப்பர்.

ariviyalin-thaththuvam4 (1)

நாம் கண்ணில் காணும் இந்தப் பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்ள வேண்டும், அதற்கு விளக்கமளிக்க வேண்டும் என்பதே தத்துவத்தின் அடிப்படையாக இருக்கிறது. உலகை அறிந்துகொள்ளும் பிரச்சினை, நாம் உட்பட்ட உலகின் ஒரு பகுதியான நமது அறிவு உள்ளிட்ட இந்தப் பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்ளுவது என்னும் பிரச்சினை ஆகும். இக் கேள்விக்கான பதிலை அளிப்பதற்கு இயலும் தன்மையிலிருந்தே அறிவியல் தனது சிறப்பிடத்தைப் பெறுகிறது.

அறிவியல் கொள்கைகள் எவ்விதம் மதிப்பிடப்படுகின்றன, ஏற்றுக்கொள்ளப்படுகின்றன அல்லது ஒதுக்கப்படுகின்றன, என்பதைப் பற்றி மட்டுமே அறிவியல் முறையின் இயல்பு பற்றி தத்துவம் ஆராய முனையும்போது கவனம் செலுத்தினால் போதும் என்றார் பாப்பர். எப்படி இந்தக் கொள்கைகள் உருவாயின என்பதைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. ஒரு கொள்கை உருவான சூழல் பற்றி நமக்கு அக்கறை தேவையில்லை. அது எவ்விதம் நியாயப்படுத்தப்படுகிறது என்பதுதான் முக்கியம். அறிவியல் கொள்கைகூட, படைப்பு மனோநிலையின் வெளிப்பாடுதான். எனவே அது எப்படி உருவாயிற்று என்ற ஆராய்ச்சி தேவையற்றது.

இரண்டாவதாக, அறிவியல்- அறிவியல் அல்லாதது என்பதற்கான வித்தியாசத்தை அறிவியல் வழங்கவேண்டும். உதாரணமாக, மூட்டுவலிக்கு ஒரு அலோபதி மருத்துவர் தாம் செய்கின்ற மருத்துவம் அறிவியல் சார்ந்தது என்று கருதினால், அதே மூட்டு வலிக்கு ஒரு சித்தமருத்துவர் செய்யும் மருத்துவம் எவ்விதம் அறிவியல் அற்றது என்பதை வேறுபடுத்திக் காட்டவேண்டும்.

அறிவுத்தேடலில், புறவுலகில், அறிவியலே முதன்மை வாய்ந்தது என்று நேர்க்காட்சி வாதிகளைப் போன்றே பாப்பரும் கருதினார். ஆனால் நேர்க்காட்சிவாதிகள், அறிவியல் கோட்பாடுகளின் சிறப்பு, அவற்றை யார் வேண்டுமானாலும் நிரூபித்துப் பார்த்துக்கொள்ளலாம் (வெரிஃபையபிலிடி) என்பதில்தான் இருக்கிறது என்றனர். பாப்பர் சொல்கிறார்: “மற்றத் துறை அறிவுகளிலிருந்து அறிவியல் எப்படி வேறுபடுகிறது என்றால், அறிவியல் கொள்கைகளை யார் வேண்டுமானாலும் மெய் என நிரூபித்துக்காட்ட முடியும் என்பதனால் அல்ல; யார் வேண்டுமானாலும் தவறு என்று என்று நிரூபித்துக் காட்டலாம் (ஃபால்ஸிஃபையபிலிடி) என்பதில்தான் இருக்கிறது.”

எந்தச் சூழ்நிலையில் அவற்றைப் புறக்கணித்துவிடலாம் என்று அறிவியல் கொள்கைகள் வெளிப்படையாகவே தெரிவித்துவிடுவதனால், அவை தவறு எனக் காட்டப்படக் கூடியவை. ஓர் அறிவியல் கொள்கை வெளிப்படுத்தப்படும்பொழுதே, அது எந்தச் சூழலில், எந்த ஆய்வுச்சாலை நிபந்தனைகளின்படி, நிரூபிக்கப்பட்டது என்ற தகவலும் சேர்ந்த வெளியிடப்படுகிறது. (வெளியிடப்பட வேண்டும்.) ஆகவே ஒரு நல்ல அறிவியல் கொள்கை, தன்னைத் தவறு என்று காட்டுவதற்கான சாத்தியப் பாடுகளைத் தன்னகத்தே கொண்டுதான் வருகிறது.

மேலும், ஓர் அறிவியல் கொள்கை, தான் தவறு என்று நிரூபிக்கப்படாதவரை மட்டுமே உண்மையானது. அக்கொள்கையை ஆயிரம் அறிவியல் அறிஞர்கள், ஆயிரம் முறை சரியாக இருக்கிறதா என்று ஆய்வகங்களில் நிரூபித்துப் பார்த்திருக்கலாம். ஆயினும் அது சரியான கொள்கை ஆகிவிடாது. ஒரே ஓர் அறிஞர், அது இன்ன இன்ன சூழ்நிலைகளில், அது தவறாகிவிட்டது என்று நிரூபித்துவிட்டால், அந்தக் கொள்கை தவறாகிவிடும். அதாவது, எந்த அறிவியல் விதியும் தனக்குரிய சோதிப்புக் குறிப்புகளைத் (டெஸ்ட் இம்ப்ளிகேஷன்ஸ்) தரவேண்டும். சோதிப்புக் குறிப்புகளைத் தந்தால்தான் அது அறிவியலாகும். அப்படித் தராவிட்டால் அது அறிவியல் ஆகாது.

இதைப் பற்றிப் பேசும்போதுதான் கார்ல் பாப்பர், மார்க்சியத்தை ஒரு போலி அறிவியல் என்று தாக்குகிறார். ஏனென்றால் மார்க்சியம், தன்னைச் சோதித்துக் கொள்ள-எந்தச் சூழலில் தவறாகலாம் என்று அறிவதற்குரிய சோதிப்புக் குறிப்புகளைத் தருவதில்லை.

இன்னும் கொஞ்சம் தெளிவாகவே பார்க்கலாம். நமது பாடப்புத்தகங்களில், அறிவியல் நேரியது, முறையானது என்ற படிமம் உருவாக்கப்பட்டிருக்கிறது. எப்படி உருவாயிற்று அது?

உற்றுநோக்கல் தரவுகள் > பொதுமைப்படுத்தல் > கருதுகோள் உருவாக்கல் > சரிபார்த்தல், உறுதிப்படுத்தல் > விதி > கோட்பாடு (உண்மை) என்பது அறிவியல் முறை என்றும், இந்த முறைதான் அறிவியலில் பின்பற்றப்படுகிறது என்றும் ஒரு தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அப்படி அல்ல என்றார் பாப்பர்.

ஒரு பிரச்சினை > தற்காலிகத் தீர்வு > அதைத் தவறாக்குதல் > வேறு சான்றுகளால் உறுதிப்படுத்துதல் > உண்மை போன்ற தோற்றம் (வெரிசிமிலிடியூட்).

இதைத் தர்க்கப்பாணியில் சொன்னால், ஆ-வில் இ அடக்கம் என்று வைத்துக்கொள் வோம். ஆ-இல்லை அல்லது தவறு என்றால், இ-யும் இல்லை அல்லது தவறு. ஆனால் ஆ-இருக்கிறது என்றால், இ-இருக்கிறது என்று அர்த்தம் அல்ல. ஓர் உதாரணத்தினால் இதைப் பார்ப்போம். இரண்டு கால் கொண்டவை என்பதில் மனிதன் அடக்கம். இரண்டுகால் கொண்டவை அல்ல என்றால் மனிதனும் அந்தப் பகுப்பில் இல்லை. ஆனால் இரண்டுகால் கொண்டவைதான் என்றால் மனிதன்தான் என்று கூறிவிட முடியாது. (பறவையாகவும் இருக்கலாம் அல்லவா?)

இதன் விளைவு என்ன என்றால், எந்த அறிவியல் கொள்கையுமே தற்காலிகமானது தான். தவறென்று நிரூபிக்கப்படாத வரையில் அது உண்மை என ஏற்றுக்கொள்ளப்பட்டுவருகிறது. அதைத் தவறென நிரூபிக்கும் வாய்ப்பு கிடைத்தவுடன் அது தவறாகி விடுகிறது. எனவே எந்த அறிவியல் உண்மையும் தவறாக நிரூபிக்கப்படாத வரையில் தான் உண்மை. அல்லது மாற்றிச் சொன்னால், ஒன்றை நாம் அறிவியல் உண்மை என இதுவரை ஏற்றுக்கொண்டிருக்கிறோம் என்றால், இதுவரை அது தவறானது என நிரூபிக்கும் வாய்ப்பினைப் பெறவில்லை என்பதுதான் அர்த்தம். ஒருவேளை இனிமேல் அது தவறாக்கப்படலாம்.

பாப்பர் மார்க்சியத்தின்மீது வைக்கும் விமரிசனத்தை இடையில் பார்த்துவிடுவோம். முதலாளித்துவ சமுதாயத்தைப் பற்றி மார்க்ஸ் தமது கொள்கையை முன்வைத்தபோது அது அறிவியல் கொள்கையாகத்தான்-அதாவது தவறாக்கப்படக் கூடியதாகத்தான் இருந்தது. அதைச் சோதிக்கும் குறிப்புகளாக அமைந்தவை:

1. மத்தியதர வர்க்கத்தின் மறைவு

2. முன்னேறிய தொழிற் சமூகங்களிலேயே புரட்சி ஏற்படுதல்

இந்தக் குறிப்புகள் தவறாகிவிட்டன. எனவே மார்க்சியமும் தவறென நிரூபிக்கப்பட்டு விட்டது.

ஆனால் மார்க்சியத்தைப் பின்பற்றுபவர்கள், அவ்வப்போதைய நிகழ்வுகளை எடுத்துக்காட்டி, அந்த மாறிய நிலைமைகள் காரணமாகவே மார்க்ஸ் கூறியவை நடைபெற வில்லை என்று நிரூபிக்க முன்வந்தார்கள். இப்படி மாறிவரும் நடைமுறைகளைக் காரணம் காட்டி மாற்றிக்கொண்டே செல்லும்போது, ஒரு கோட்பாடு, நிறையத் தற்காப்புக் கேடயங்களைப் பெற்று, தவறாக்கவே முடியாதது ஆகிவிடுகிறது. அதாவது தனது அறிவியல் தன்மையை இழந்துவிடுகிறது.

ariviyalin-thaththuvam61

தவறாக்கப்படக் கூடிய ஒன்றே அறிவியல் கொள்கையாக முடியும். சமயக் கொள்கைகள் தவறாக்கப்பட முடியாதவை. எனவே அவை அறிவியல் கொள்கைகள் அல்ல. கடவுள் இத்தனை நாளில் உலகத்தைப் படைத்தார் என்ற கூற்றையோ, அடுத்த பிறவி எனக்கு இதுவாகத்தான் இருக்கும் என்ற கூற்றையோ எப்படி ஒருவர் தவறாக்க முடியும்? ஆகவே அவை அறிவியல் பூர்வமானவை அல்ல. ஆனால் பாப்பர் சொல்கிறார்: மதவாதிகள் யாரும் தங்கள் கோட்பாடுகள் அறிவியல்பூர்வமானவை என்று சொல்லவில்லை. ஆனால் மார்க்சியர்கள் உணர்வுபூர்வமாகத் தங்கள் கொள்கை அறிவியல் சார்ந்தது என்கிறார்கள். தவறாக்கப்பட முடியாததால் மார்க்சியம் அறிவியல் கொள்கை அல்ல. (மதம் என்று கூறலாம்). ஆனால் அது அறிவியல் கொள்கை என வேடமிடுவதால், போலிஅறிவியல் ஆகிறது.

அறிவியல் முறை இண்டக்டிவ் (விதி வருவிப்புமுறை) அல்ல. கருதுகோளினின்றும் வருமுறை (ஹைபோதெடிகோ டிடக்டிவ்) என்றார் பாப்பர். இதனைச் சற்று விளக்கலாம்.

இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?

வருவிப்பு (இண்டக்டிவ்) முறைதான் அறிவியலினுடையது என்பவர்கள், உற்று நோக்கல் தரவுகள், கொள்கை சார்ந்தவை அல்ல என்கிறார்கள். எனவே அறிவியல் என்றும் மாறாதது, அசைக்கப்பட முடியாதது என்று ஆகிறது. அப்படியானால் அவற்றை மீண்டும் சோதித்துப் பார்க்கவேண்டிய அவசியம் ஏன் அல்லது எப்படி வருகிறது?

ஆகவே பாப்பர் சொல்கிறார்:

நாம் முதலில் கருதுகோள்களை உருவாக்குகிறோம். அவை கற்பனைகள். அவை எந்தெந்த சந்தர்ப்பங்களில் உண்மையாகின்றன என்பதை மட்டும் வைத்துக்கொண்டு அவற்றை உண்மைகள் என்கிறோம். இதற்கும் புராணத்திற்கும் வேற்றுமை இல்லை.

ஏனெனில் தன் குழந்தைக்குக் கருமாரி நோய் வந்ததைப் பார்த்த ஒருவன், அது மாரியம்மன் கோபத்தால் வந்தது என்று ஒரு கருதுகோளை உருவாக்குகிறான். அவள் சிலைக்கு அபிஷேகம் செய்தும், கூழ் ஊற்றியும் குளிர்ச்சிப்படுத்துகிறான். தற்செயலாகத் தன் குழந்தையின் நோய் இறங்கிவிட்டதைப் பார்க்கிறான்.

இதுபோல இரண்டு மூன்று சந்தர்ப்பங்களை அவன் பார்க்க நேர்ந்தால், கருமாரி நோய் மாரியாத்தாளால் வந்தது என்ற அறிவியல்கூற்றை (!) உருவாக்குகிறான். இந்தப் புராணிக முறைக்கும் அறிவியலுக்கும் வேற்றுமை இல்லை. எனவே எந்த அறிவியல் கொள்கையாயினும் அதன் நிகழ்வுக்கூறு (Probability)பூச்சியம்தான் என்கிறார் பாப்பர். ஒரு சோதனை நேர்முக (உடன்பாட்டு) முடிவைத் தந்தவுடனே, நேர்க்காட்சிவாதிகள் அந்தக் கொள்கை உண்மை என்று சொல்லிவிடுகிறார்கள். அப்படி அல்ல, அந்தக் கொள்கை இன்னும் தவறாக்கப்படவில்லை என்பதுதான் நாம் அறியக்கூடியது என்கி றார் பாப்பர்.

நிரூபிக்கப்படல் கொள்கை, தவறாக்கப்படல் கொள்கை ஆகிய இரண்டிற்கும் உள்ள வேற்றுமையை கிரிமினல் சட்ட உதாரணம் ஒன்றின் மூலமாகப் பார்க்கலாம்.

ஒரு கிரிமினல் சட்ட அமைப்பில், சான்று கிடைக்கும்வரை, குற்றவாளியை தவறு செய்யாதவன் என்றே கருதவேண்டும். ஆகவே கூண்டில் நிறுத்தப்பட்டவனைக் குற்றவாளி ஆக்க வேண்டும் என்றால் அவன்தான் தவறிழைத்தான் என்று காட்டியாக வேண்டும்.

இன்னொருவித சட்ட அமைப்பு இருப்பதாகக் கொள்வோம். இதில் கூண்டில் நிறுததப்பட்டவன் குற்றவாளி (தவறிழைத்தவன்) என்றே நினைக்கவேண்டும். அவனுக்கு எதிரான சாட்சியம் எதுவும் வராதவரை நிரபராதி என ஏற்கப்படுவான். ஒரே ஒரு சாட்சி அவனுக்கு எதிராக வாய்த்தாலும் அவன் குற்றமிழைத்தவன் ஆகிவிடுவான். இவற்றில்,

முதலாவது அமைப்பு, நேர்க்காட்சிவாதம்.

இரண்டாவது அமைப்பு பாப்பருடைய கொள்கை.

தமது தவறாக்கல் முறை அல்லது கருதுகோள் தருமுறை என்பது, வருவித்தல் முறையைவிட மேம்பட்டது என்று கருதுகிறார் பாப்பர். அதற்குக் காரணங்கள்:

1. பாப்பருடைய முறை, விஞ்ஞான மனப்பான்மை அல்லது விமரிசன மனப்பான்மை என்பதற்கு ஏற்றதாக இருக்கிறது. அறிவியல் சோதனையின் நோக்கம், ஒரு கொள்கையைத் தவறு எனக் காட்டுதல் என்பதன் மூலம், நாம் எப்போதுமே எந்தக் கொள்கையுமே தற்காலிகமானதுதான், எவ்வளவு உறுதிப்படுத்தப்பட்டாலும் நிரந்தரமானது அல்ல என்று சொல்கிறோம். எந்தக் கொள்கையுமே தன் தலைமீது கத்தி தொங்கிக் கொண்டிருக்கும் குற்றவாளிதான். நேர்க்காட்சிவாதிகள் அறிவியலை நிலைத்த உண்மை கொண்டதென அறுதியிட்டு விடுகிறார்கள். ஆனால் அறிவியல் நோக்கு என்பது எப்போதும் திறந்த மனத்தோடு இருப்பது, இறுகிவிடாமல் இருப்பது என்கிறார் பாப்பர்.

2. வருவிப்புமுறையை (இண்டக்டிவ் மெதாட்) அறிவியல் பின்பற்றியிருந்தால், இப்போதுள்ள அளவு அது வளர்ந்திருக்காது என்கிறார் பாப்பர். ஓர் அறிவியலாளர் இண்டக்டிவ் முறையைப் பின்பற்றுவதாக வைத்துக்கொள்வோம். அவர் என்ன செய்வார்?

தமது துறையில் தம்க்குக் கிடைக்கும் சான்றுகளைத் திரட்டிக்கொண்டே செல்வார். ஒருவேளை அவரது கருதுகோளைப் பொய்யாக்கக்கூடிய சான்று ஒன்று கிடைத்தால் என்ன செய்வார்? தமது கருதுகோளைத் திருத்துவார். அல்லது அதற்கு வரையறைகள் விதிப்பார். இன்னின்ன சந்தர்ப்பம் நேரிடாவிட்டால் இந்தக் கொள்கை உண்மை என் பார். இப்படியே இரண்டு மூன்று எதிர்ச்சான்றுகள் கிடைத்துவிட்டால் அந்த வரையறை மேலும் மேலும் குறுகிப் போய்க்கொண்டே இருக்கும். இன்னும் சில எதிர்ச் சான்றுகள் கிடைத்தால் அது பயனற்ற நிலையையே அடைந்துவிடும்.

பாப்பருடைய கருதுகோள் முறையைப் பின்பற்றும் விஞ்ஞானி என்ன செய்வார்?

எதிர்ச்சான்று கிடைக்கும்போது தமது கருதுகோளைத் தூக்கி எறிந்துவிடுவார். தைத்த சட்டையை சந்தர்ப்பத்திற்கேற்ப எல்லாம் மாற்றித் தைத்துக் கொண்டிருப்பதை விட, புதிய சந்தர்ப்பத்திற்குப் புதியதொரு கொள்கையை உருவாக்குவது மேலானதுதானே?

ஆகவே ஏற்கெனவே கிட்டிய சான்றுகளையும், இந்தப் புதிய சான்றையும் ஒன்றாகப் பொருத்தக்கூடிய வலிய கருதுகோள் ஒன்றை உருவாக்குவதில் இந்த விஞ்ஞானி ஈடுபடுவார். ஆகவேதான் அறிவியல் இந்த அளவு முன்னேறியிருக்கிறது. இல்லாவிட்டால் அது வெறும் தற்காப்புவாதமாகப் போயிருக்கும்.

(பாப்பர், கூன், பெயரபெண்ட் ஆகியோருடைய கொள்கைகள் பற்றி மேலும் தொடரும்.)

அறிவியலின் தத்துவம் ஓர் எளிய தொடக்கம் –பகுதி- 3

 

இந்த விசயத்தைத்தான் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு ஹ்யூம் சொன்னார். “எந்தப் பொதுமைக்கூற்றையும் எத்தனை ஆயிரக்கணக்கான சான்றுகளாலும் நிரூபித்துவிட முடியாது.” (அறிவியலில், எல்லா விதிகளும் கோட்பாடுகளும் பொதுமைக் கூற்றுகளே.) அறிவியல் விமரிசனபூர்வச் சிந்தனை கொண்டது. விமரிசனபூர்வச் சிந்தனை என்பதே, நமது கூற்றுகளை எப்படி எப்படியெல்லாம் தவறாக்க முடியும் என்று சிந்திப்பதுதான்.

ariviyalin-thaththuvam21 (12)

இப்படியிருக்க, அறிவியல் முற்போக்கானது, முன்னேறிவருவது என்று கார்ல் பாப்பரால் எவ்விதம் சிந்திக்க முடிகிறது? அறிவியல் முன்னேற்றத்தை எப்படி அளக்க முடியும்? அறிவியல் கொள்கைகள், மேலும் சிறந்த கொள்கைகள் ஆகின்றன என்கிறார் பாப்பர்.

மேலும் சிறந்த கொள்கை என்பது என்ன?

அறிவியலில் உண்மை என்று எதுவும் கிடையாது. உண்மை போன்றது (verisimilitude) என்பதுதான் உண்டு. உண்மையை இது நெருங்குவது என்றும் சொல்லலாம். அறிவியல், உண்மையாக இல்லாவிட்டாலும், உண்மையை மேலும் மேலும் நெருங்கிச் செல்லக்கூடும். இதுதான் அறிவியல் முன்னேற்றம். புராணங்கள் போலன்றி, அறிவியல் விமரிசனத்திற்கு உட்படக்கூடியது என்பதுதான் அதற்கு ஓர் அறிவார்ந்த தன்மையை அளிக்கிறது.

உண்மைபோன்றது என்பதை எப்படி அறிவது?

எந்தக் கோட்பாட்டிலும் சில சோதனைக் குறிப்புகள் உண்டு. அவற்றைச் சோதித்தால் சில உடன்பாட்டு முடிவுகளைத் தரலாம், சில எதிர்மறை முடிவுகளைத் தரலாம். உடன்பாட்டு முடிவுகளைத் தருவனவற்றை உண்மை அல்லது நேர்முக உள்ளடக்கம் என்றும், எதிர் முடிவுகளைத் தருவனவற்றை எதிர் உள்ளடக்கம் என்றும் சொல்லலாம். நாம் மேலும் மேலும் “அதிக உண்மை போன்றதற்கு” நெருங்கிச் செல்கிறோம். அதாவது மேலும் மேலும் சிறந்த கொள்கைகளை உருவாக்குகிறோம். அதாவது அறிவியல் முன்னேறுகிறது.

உண்மையில், ஒரு கொள்கை, அதைவிட நல்ல கொள்கை கிடைக்கும் என்ற நிலையில்தான் தவறானதாக ஆகிறது. அதாவது, தன்னிடம் ஏராளமான சோதிப்புக் குறிப்புகளையும் சான்றுகளையும் கொள்ளும் நிலையில் இன்னொரு பொதுமைக் கூற்று வராவிட்டால், இருக்கும் பழைய கொள்கையே இருந்துகொண்டிருக்கிறது. புதிய கொள்கை வரும்போது பழைய கொள்கை அதன் உபகணமாக (சப்செட்), உட்பிரிவாக மாறிவிடுகிறது. இப்படிப் பழைய கொள்கைகள், புதிய கொள்கைகளின் பகுதிகளாக ஆவதன்மூலம், அறிவியல் தொடர்ந்து முன்னேறுகிறது.

அறிவியல் கொள்கைகள், நாம் உற்றுநோக்க முடியாத கருத்துலகத்தை, அருவ உலகத்தைச் சார்ந்தவை என்கிறார் பாப்பர். இதனால் அவர் ஒரு ரியலிஸ்ட் (யதார்த்தவாதி) ஆகிறார். (அறிவியல் யதார்த்தவாதம் வேறு, இலக்கியத்தில் பேசப்படும் யதார்த்தவாதம் வேறு.) மேலும் மேலும் கோட்பாடுகள் மூலமாக இந்த உலகம் நமக்கு மேலும் மேலும் பிடிபடுகிறது. உற்றுநோக்கக்கூடியவைகளால் மட்டும் அல்ல.

நேர்க்காட்சிவாதிகள், கொள்கைகள், உற்றுநோக்கல் தரவுகளால் உருவாகுபவை என்றனர். உற்றுநோக்கல்களில் தற்சார்பானது (சப்ஜெக்டிவ்) எதுவுமில்லை. ஆகவே அறிவியல் பொதுநோக்குடையது (அப்ஜெக்டிவ்) என்றனர். பாப்பர் அறிவியல் பொது நோக்குடையது என்று சொல்வது, தரவுகள் பொதுவானவை என்பதனால் அல்ல; அறிவியல் கொள்கைகள் பொதுவானவை என்பதால். மேலும் பிற துறையினரும் சோதித்துப் பார்க்கக்கூடியவை என்பதனால் பொதுமை அடைகின்றன.

அறிவியல் கண்டுபிடிப்புகள் எவ்விதம் நிகழ்கின்றன என்பதில் நாம் அக்கறை காட்டக் கூடாது என்ற பாப்பரின் கருத்து, கேள்விக்குள்ளாகியிருக்கிறது. உள்ளுணர்வு மூலமாகக் கண்டுபிடிப்புகள் நிகழ்வதாக அவர் கருதுகிறார். பென்சீன் கட்டமைப்புப் பற்றி கெக்யூலே என்ற விஞ்ஞானி கண்ட கனவை அவர் உதாரணமாகத் தருகிறார். இதனை நாம் ஒரு பொதுவிதியாக்க முடியாது. ஏதோ சில நனவிலி நிகழ்வுகள், கருதுகோள்களைக் கண்டடைவதில் துணைநிற்கின்றன. ஆயினும் அதற்கு முன்னாலும் பிறகு அந்தக் கருதுகோள் உண்மைதானா என்று சரிபார்த்தல்/தவறாக்கல் மூலமாக நிரூபிக்கப்படுவதற்கு முன்னாலும், தொடர்ந்த தர்க்கம் ஆட்சிபுரிகிறது.

எவ்வளவு உற்றுநோக்கல் தரவுகள் கிடைத்தாலும், ஒரு கொள்கையை உருவாக்க அவை துணைபுரியா என்று அவர் சொல்வது உண்மை. ஆனால் கண்டுபிடித்தலைப் பற்றிய அறிவார்த்தமான கொள்கை ஒன்று சாத்தியமேயில்லை என்று அவர் சொல்வது சரியன்று. ஹான்சன் என்பார் தமது புகழ்பெற்ற படைப்பான “பேட்டர்ன்ஸ் அவ் டிஸ்கவரி” என்ற நூலில், பாப்பரது கோட்பாடு தவறானது என்று காட்டுவதோடு, பேர்ஸின் பணி அடிப்படையில், கண்டுபிடிப்புகளுக்கான ஒரு பொதுக்கோட்பாட்டை உருவாக்கவும் முயன்றுளளார்.

தாமஸ் கூன்

ariviyalin99

1962இல் தாமஸ் எஸ், கூன் எழுதிய “அறிவியல் புரட்சிகளின் அமைப்பு” (Structure of Scientific Revolutions) என்ற நூல் வெளியானது. நேர்க்காட்சி வாதத்திற்கு முற்றிலும் மூடுவிழா நடத்திய நூல் என்று இதனை வருணிப்பர். முற்றுப்பெற்ற அறிவியல் சாதனைகள் செவ்வியல் நூல்களிலும், பாடப்புத்தகங்களிலும் இடம் பெறுகின்றன. இவற்றிலிருந்துதான் அறிவியல் பற்றிய படிமம் உருவாக்கப்படுகிறது. மாறாக, அறிவியல் ஆராய்ச்சிகளின் வாயிலாக வெளிப்படும் வரலாற்றுப்படிமம் ஒன்றினை அறிவியலுக்குத் தரவேண்டும் என்பது கூனின் கருத்து. அவருக்கு முன்பு, அறிவு வளர்ச்சியியல் (எபிஸ்டிமாலஜி) என்பது ஒரு கலை என்று கருதப்பட்டு வந்தது. ஆனால் அது இயற்கைவாதத்தின் பாற்பட்ட ஓர் அறிவியலே என்று முதலில் நிரூபிக்கிறார் கூன். அறிவியல் அறிவினைப் புரிந்துகொள்ள அவர்

சட்டகம் (பேரடைம்)

இயல்பு அறிவியல்

பிறழ்ச்சி

அறிவியல் புரட்சி

பொதுத் தரஅடிப்படையின்மை

ஆகிய கருத்துகளை முன்வைத்தார்.

அறிவியல் கருதுகோள்கள், கொள்கைகள் ஆகியவை ஒரு சட்டக அமைப்பிற்குள் உருவாகின்றன. அன்றிருக்கும் அறிவியல் கொள்கைகள், சரியான முறைகள் எவை என்பது பற்றிய கருத்துகள், விவாத முறைகள், அறிவுஅடிப்படை மதிப்புகள் ஆகிய வற்றிலிருந்து ஒரு சட்டகம் அல்லது கருத்தமைப்பு உருவாகிறது. எவ்விதம் விஞ்ஞானப் பிரச்சினைகள் உருவமைக்கப்படுகின்றன, அவற்றிற்குத் தீர்வு காணும் முறைகள் எவ்விதம் அமைக்கப்படுகின்றன என்பதும் இதில் அடங்கும்.

சட்டகம் என்பதற்குக் கருத்தியல் என்பதுபோலக் கூன் பலவித அர்த்தங்களைத் தருகிறார். ஒருபுறம், ஒரு சமூகத்தின் நம்பிக்கைகள், மதிப்புகள், அறிவுநுட்பங்கள் ஆகியவற்றின் ஒட்டுமொத்தஅமைப்பினையும் அது குறிக்கும். மறுபுறம், அதன் ஒரு பகுதியான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணல்களையும் குறிக்கும்.

வரலாற்றில் பல்விதமான கொள்கைச் சட்டகங்கள் உருவாகி வருகின்றன. அறிவியல் ஒரே ஒரு சட்டகத்திற்குக் கட்டுப்பட்டது என்று நேர்க்காட்சிவாதம் நினைக்கிறது. உதாரணமாக, இன்றைய அலோபதி மருத்துவம் மட்டுமே அறிவியல் பூர்வமானது, அறிவியல் முறைகளின் அடிப்படையிலானது என்று நேர்க்காட்சிவாதம் நினைக்கிறது. ஆனால், பழைய கால சீன மருத்துவ முறை, தமிழ்நாட்டின் சித்த மருத்துவ முறை, இந்தியாவின் ஆயுர்வேதம், ஹோமியோபதி, அரேபிய யூனானி மருத்துவ முறை போன்றவை மாற்றுச் சட்டகங்களாக உள்ளன. இவை வரலாற்றில் ஒவ்வொரு கட்டத்தில் உருவாகி வந்தவை. இவையும் அறிவியலின் பாற்படும் என்பது கூனின் கருத்து. ஒரு புதுச் சட்டகம் ஏற்கப்படுகின்ற நிலை, ஏற்கெனவே இருக்கும் அறிவியலை மறுவரையறைக்கு உள்ளாக்குகிறது.

மருத்துவத்தில் மாற்றுச் சட்டகங்கள் உள்ளன என்பது இப்போது ஓரளவுக்கு எல்லோருக்குமே புரிகிறது, அவற்றை ஏற்பதனால் மாற்று மருத்துவங்களிலும் மக்கள் ஈடுபடுகிறார்கள். மேற்கத்திய மருத்துவத்தின் சட்டக அடிப்படைகள் வேறு, சித்த மருத்துவத்தின் சட்டக அடிப்படைகள் வேறு. ஒரு நோய் வாத பித்த சிலேத்துமக்கூறுகளின் பல்வேறு அமைவுகள் காரணமாக உருவாகிறது என்பதையோ நாடித்துடிப்பு இவற்றின் தன்மைகளை உணர்த்தும் என்பதையோ மேற்கத்திய மருத்துவச் சட்டகம் ஏற்காது. ஆனால் மக்கள் சித்த மருத்துவச் சட்டகத்தையும் ஏற்கவே செய்கிறார்கள்.

ஆனால் இதேபோல இயற்பியல், வேதியியல், கணிதம் போன்ற பிற அறிவியல்களுக்கும் மாற்றுச் சட்டகங்கள் இருக்கக்கூடும் என்பது எவருக்கும் புரிவதில்லை. அதனால் ஒரேவித இயற்பியல்தான் இருக்கிறது, அல்லது ஒரேவித வேதியியல் மட்டுமே உள்ளது என்று நினைக்கிறார்கள்.

ஆனால் ஒரு சட்டகத்திற்கும் மற்றொரு சட்டகத்திற்கும் பிரச்சினைகளின் அடிப்படைகள், தீர்வுகாண் முறைகள் யாவுமே மாறுபடுகின்றன.

ஒவ்வொரு சட்டகமும் தனக்கான பிரச்சினைகாண் முறைகள், தீர்வுமுறைகள் ஆகியவற்றிற்கான அடிப்படைகளை வைத்துள்ளது. ஆனால் மற்றொரு சட்டகத்தின் பிரச்சினைகாண் முறைகள், தீர்வுமுறைகளின் அடிப்படைகளை அது முற்றிலும் திருப்திசெய்ய இயலாது.

சட்டகங்கள் மாறுபடுவதற்கு முக்கியக் காரணம், உற்றுநோக்கல்களே கொள்கை அடிப்படையில் அமைவதுதான் என்றார் கூன்.

அறிவியல் ஆராய்ச்சியும் மரபுசார்ந்ததும் மரபுக்குக் கட்டுப்பட்டதாகவுமே உள்ளது. பாப்பர் கருதியதுபோல அறிவியலாளர்களும் திறந்த மனதுள்ளவர்களாகவும், விமரிசன மனப்பான்மை உடையவர்களாகவும் இல்லை. இதுவரை உள்ள அறிவியல் சட்டகமும், புதிர்களுக்கு விடைகாணல் என்ற மரபுச்சட்டகத்தின் பாற்பட்டதாகவே உள்ளது. ஏற்கெனவே புழக்கத்தில் இருக்கின்ற கருத்தாக்க, தொழில்நுட்ப உத்திகளைச் சார்ந்து புதிய சில பிரச்சினைகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றிற்குத் தீர்வு காண்பதிலேயே இயல்பு அறிவியல் ஆய்வின் வெற்றி அடங்கியிருக்கிறது.

ஒரு சட்டகத்திற்குக் கட்டுப்படாமல், இயல்பு (விதிமுறைசார்) அறிவியல் என்பது இருக்கவே இயலாது என்கிறார் கூன்.

சீட்டு விளையாட்டின்போது எதிர்பாரா நிலைமையினால் உருவாகும் தடை, இடையூறு, அவற்றை ஏதாவதொரு முறையினால் தீர்வுகண்டுவிடலாம் என்ற எதிர்பார்ப்பு இவற்றினால் புதுமை விளைகிறது. இது அறிவியலுக்கும் பொருந்தும். ஒரு சட்டகத்தின் பின்னணி ஏற்படுத்தும் எதிர்பாரா ஒன்றுதான் பிறழ்ச்சி.

இன்று பலரும் கருதுவதுபோல, அறிவியல் என்பது காலங்காலமாகத் திரட்டப்பட்டு வரும் அறிவுத்திரள் அல்ல. இயல்பு அறிவியலின் மரபுசார்ந்த செயல்முறைகளுக்கு மாறாக, மரபை உடைக்கின்ற விதமாக ஏற்படும் புதுச் சேர்க்கைகள் அறிவியல் புரட்சிகள் எனப்படுகின்றன. இவற்றால்தான் அறிவியல் வளர்ச்சி ஏற்படுகிறது. இயல்பு அறிவியலினால் அல்ல.

உதாரணமாக, பிளேட்டோனிய உலகமைப்பு முறை நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை அறிவியல் சட்டகமாக ஏற்கப்பட்டுவந்தது. அதன்படி உலகமே பிரபஞ்சத்தின் மையம். பிற கோள்கள் யாவும் உலகத்தைச் சுற்றுவன. சூரியனும் ஒரு கோளாகவே கருதப்பட்டது. இந்த முறை அடிப்படையிலான கணக்கீட்டின்படிதான் கிரகணம் போன்ற நிகழ்வுகள் யாவும் கணிக்கப்பட்டன. அவை சரியாகவும் இருந்தன.

ஆனால் கலிலியோ உருவாக்கிய தொலைநோக்கியும், அவர் உருவாக்கிய சூரியமையக் கோள் அமைப்பு முறையும் ஓர் அறிவியல் புரட்சியை உருவாக்கின. அடுத்தநிலையிலான அறிவியல் வளர்ச்சியை இதுதான் சாத்தியப்படுத்தியது.

இவ்வாறே இன்றுவரையிலும், நியூட்டனின் இயங்கியல் விதிகள்தான் சாதாரண நிலையில் பயன்படுகின்றன. அவை சரியாகவும் இருக்கின்றன. ஆனால் ஐன்ஸ்டீனின் இயங்கியல் கொள்கை, அடுத்தநிலையில் விண்ணியல் சார்ந்த இராக்கெட் போன்றவற்றின் இயக்கங்களுக்கு உதவக் கூடியதாக அமைந்தது.

ஏற்கெனவே திரட்டப்பட்டு வந்திருக்கின்ற அறிவமைப்புகளிலிருந்து விலகி, பழைய சட்டகத்திற்கு முற்றிலுமோ, பகுதியளவிலோ மாறுபட்ட அல்லது பொருந்தாத கருத்தமைப்புகளைக் கொண்டு உருவாகுவது புதிய சட்டகம். அதுதான் அறிவியல் புரட்சிக்கு அடிப்படை.

அறிவியல் புரட்சி நிகழும்போது அறிவியலாளர்கள் உலகினை நோக்கும் கருத்துப்பார்வை முற்றிலுமாக இடம்பெயர்ந்து, புதியதொரு நோக்கிற்கு இடமளிக்கிறது.

இவ்வாறு நிகழும்போது பழைய சட்டகம், புதிய சட்டகம் இரண்டிற்கும் பொதுவானதொரு தரஅடிப்படை அளவுகோல் கிடையாது. இதனைத்தான் பொதுத் தர அடிப்படையின்மை (Incommensurability) என்றார் கூன். ஒன்றுக்கொன்று போட்டி யிடும் இரு சட்டகங்களுக்கிடையிலான மாற்றம் ஒன்று, நடைபெறுவதேயில்லை, அல்லது, தர்க்கரீதியாகப் படிப்படியாக முழுமையாக நிகழ்கிறது. இந்த மாற்றத்தை யாரும் நிர்ப்பந்திக்க இயலாது.

அரசியல் சட்டகங்களும் இவ்வாறே மாறுபட்ட சமூகநிலைமைகளால் உருவாகின்றன. இவை ஒன்றுக்கொன்று முற்றிலுமோ, ஒருபகுதியோ பொருந்தாதவையாக இருக்கும். சான்றாக, ஜனநாயக அமைப்பும், ஒற்றைத் தனியாட்சி (சர்வாதிகார) முறையும் இரண்டு வெவ்வேறு சட்டகங்கள். ஒன்றிலிருந்து இன்னொன்றிற்கு முற்றிலும் மாறியாக வேண்டும், அல்லது மாற்றமே இன்றி அப்படியே இருக்கவேண்டும். ஆனால் அரசியல் புரட்சியோ, அறிவியல் புரட்சியோ எதுவாயினும் குறிப்பிட்ட சமூகத்தின் கருத்தேற்பின்றி நிகழ்வது கிடையாது.

ஆனால் இரண்டினையும் ஒரே தராசில் வைத்து அளக்கக்கூடிய பொதுத்தர அடிப்படை என்பது கிடையாது. வெவ்வேறு சட்டகங்கள் உலகினைப் பார்க்கும் பார்வையும், உலகில் காணும் பிரச்சினைகளும், அவை அறிவியல் என்பதை வரையறுக்கும் முறையும் என எல்லாமே மாறுபடுவதால் பொதுத்தர அடிப்படை யின்மை ஏற்படுகிறது.

அதாவது இதற்கு அர்த்தம் எளிய சொற்களில் கூறினால், சித்த மருத்துவத்தையும், சீன அக்குபங்ச்சர் முறையையும், அலோபதி முறையையும் ஒரே தராசில் வைத்து எடைபோட்டு, இது சரி, இது தவறு என்றெல்லாம் கூறமுடியாது.

சமூக வாழ்க்கையில் காணும் கொள்கைகளுக்கும் இது பொருந்தும். உதாரணமாக, முதலாளித்துவம் உலகத்தில் காணும் பிரச்சினைகளும், அதற்கு அது முன்வைக்கும் தீர்வுகளும் வேறு. பொதுவுடைமை அல்லது மார்க்சியம் காணும் பிரச்சினைகளும் அது முன்வைக்கும் தீர்வுகளும் வேறு. ஆகவே அது அறிவியல், இது போலி அறிவியல் என்றெல்லாம் கூறமுடியாது. இரண்டும் வெவ்வேறு கொள்கைச் சட்டகங்கள். ஆனால் நீங்கள் ஒன்று முதலாளித்துவவாதியாக இருக்கலாம், அல்லது மார்க்சியவாதியாக இருக்கலாம். இரண்டுமாக இருக்க இயலாது.

சமூக அறிவியல்கள் பலவற்றில் ஒரேவிதமான கொள்கைச் சட்டகங்கள் உள்ளன. ஒன்றிற்கொன்று தொடர்பும் உள்ளது. அறிவியலாளர்கள் இப்படிப்பட்ட பொதுச் சட்டகங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளனர். உதாரணமாக, வெப்பஇயங்கியல் என்ற சட்டகம், இயற்பியல், வேதியியல், உயிர்த்தொழில் நுட்பம் போன்ற பல அறிவியல்களுக்குப் பொதுவானது.

கூன் முன்வைத்த புரட்சிகரமான கருத்துகளைத் தொகுத்தால்,

1. அறிவியல், உண்மை போன்ற நிலையான ஒன்றை நோக்கித் தேடலில் இயங்கும் அமைப்பு என்று கூற இயலாது.

2. தங்கள் முன்னோர் வகுத்த வழியில்தான் அறிவியலாளர்கள் செல்கின்றனர். முன்னோர்கள் வகுத்த நிர்ணய மரபுகளைப் பின்பற்றி, அவர்கள் கொண்ட கொள்கைகள், தொழில்திறன்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தித்தான் ஆய்வு செய்கின்றனர். கொள்கைகளை ஒப்பிடுவது ஒப்பியலானது. நிச்சயமானது அல்ல.

3. அறிவியல் மேலும் மேலும் பல பிரிவுகளாகப் பிரிந்து, தனித்திறன்களை நோக்கி வளர்ச்சியடைகிறது (உதாரணமாக, பொதுவாக மருத்துவர் என்றிருந்த நிலை மாறி, கண்ணுக்குத் திறனாளர் ஒருவர், பல்லுக்கு ஒருவர், சிறுநீரகத்திற்கு ஒருவர், இதயத்திற்கு ஒருவர்…. எனத் தனித்திறனாளர்கள் தோன்றுகின்றனர்). இது அறிவியல் மாற்றத்தின் ஒரு படிநிலை அல்ல. மாறாக, அறிவியலாளர்கள் தங்கள் அறிவுசார் இலக்குகளை அடைகின்ற வழிமுறை இதுதான்.

4. அறிவியல் வளர்ச்சி, ஒரு தனித்த அறிவியலாளரால் ஏற்படுவது அல்ல. ஒரு அறிவியல் சமூகத்தின் செயலினால் நிகழ்வது. அறிவியல் என்பது சமூகமுன்னேற் றத்தை அல்லது வளர்ச்சியை நோக்கியதாகத்தான் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆகவே அறிவியல் விதிமுறை சார்ந்த அல்லது இயல்பு நெறிமுறை ஒன்றை ஏற்கவேண்டும் என்கிறார் கூன்.

(அடுத்து பெயரபெண்டின் கொள்கைகளை நோக்கி இக்கட்டுரையை நிறைவு செய்யலாம்.)

அறிவியலின் தத்துவம்- தொடர்ச்சி

லாகடாஸ் (Lakatos)
ariviyal1

ariviyal1பாப்பர் விளக்கிய முறையிலிருந்து வேறுவழியில் அறிவியல் அறிவின் முன்னேற்றத்தைக் கூன் விளக்கியதை முன்பு பார்த்தோம். இவர்கள் இருவரின் இருவேறுபட்ட பார்வைகளையும் ஒன்றிணைக்கும் முயற்சி இம்ரேலாகடாஸ் என்பவரால் மேற்கொள்ளப்பட்டது. கூனின் அறிவியல் சட்டகம் என்ற கருத்திற்கு பதிலாகத் தமது முன்னோக்கி நிகழும் அறிவியல் திட்டம் என்ற கருத்தாக்கத்தினால் இரண் டையும் இணைக்க முயன்றார் அவர்.

தவறாக்கல் என்ற முறையினைப் பற்றிப் பாப்பர் கூறியதை முன்னர்க் கண்டோம். கூன் அதனை இலட்சியவாதமாகக் கருதினார், அறிவியலின் வரலாறு இயல்நெறி முறையில் செல்கிறது, அதில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட சட்டகத்திற்குள் சோதனைகளும் கொள்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன என்றார். சில சமயங்களில் இம்மாதிரி ஆதிக்கத்திலிருக்கும் சட்டகம் தலைகீழாக்கவும் படுகிறது. அப்படிப்பட்ட சட்டகப் பெயர்ச்சி நிகழ்ந்தாலும் அது பகுத்தறிவினால் மட்டும் நிகழ்வதில்லை என்றார் கூன்.

இந்த இரு பார்வைகளுக்கும் இடையில் அமைகிறது லாகடாஸின் கருத்து. காலப்போக்கில் ஒரு பொதுவான திடக் கருத்துநிலைப்பாட்டின் அடிப்படையில் சிறிதளவு மாறுபட்ட கோட்பாடுகளும், சோதனைமுறைகளும் மாறிவருகின்றன. இந்தக் கருத்துநிலைப்பாட்டிற்கு லாகடாஸ் அறிவியல் ஆய்வுத் திட்டம் என்று பெயரிட்டார். ஓர் அறிவியல் ஆய்வுத்திட்டத்திற்குள் பணிபுரியும் அறிவியலாளர்கள், தங்கள் பொதுக் கருத்தாக்கத்தினைத் துணைக்கருதுகோள்களின் தொகுதி ஒன்றினால் தவறாக்கலிலிருந்து தடுக்க முற்படுகிறார்கள். ஒரு குறித்த உலகக் கருத்து மெய்யா பொய்யா என்பதற்கு பதிலாக அது முற்போக்கானதா, சீர்கெடக்கூடியதா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. முன்னோக்கி நிகழும் கருத்துத் திட்டமாக இருந்தால், அந்தக் காலத்தில் அறிவியல் வளர்ச்சி, புதுமைகள் கண்டுபிடிப்பு, துல்லியமான கணிப்புகள் ஆகியவை நிகழ்கின்றன. சீர்கெடக்கூடிய கருத்துத்திட்டமாக இருந்தால், வளர்ச்சியின்மை, புதுமைகள் கண்டுபிடிக்கமுடியாமை ஆகியவை நிகழ்கின்றன.

லாகடாஸின் அறிவியல் திட்டம் என்ற கருத்து பாப்பரின் கருத்தினை மேலும் துல்லியப்படுத்துவதாக அமைந்தது, இதற்கு அவர் பாப்பரின் மாணவர் என்பதும் ஒரு காரணம். ஆனால் கூனின் கருத்திலிருந்து மிகவும் வேறுபட்டது இது. சட்டகம் என்ற கருத்துக்கு பதிலாக, திடமான கருத்தை மையமாகக் கொண்ட ஆய்வுத்திட்டம், துணைக்கருதுகோள்களின் தொகுதி போன்ற கருத்துகளை முன்வைத்தார் லாகடாஸ். இது பகுத்தறிவுக்கு ஒத்த செயல்முறையைக் கூறுவதாக அமைந்தது. சட்டகப் பெயர்ச்சி ஏற்படும்போது, ஒரு சீர்கெடக்கூடிய கருத்துத் திட்டத்திலிருந்து முற்போக் கான திட்டத்திற்கு மாறுவதாகவே உள்ளது. எனவே கூன் கூறியதுபோல அது பகுத்தறிவுக்கு மாறானதன்று, பகுத்தறிவுக்கு ஒத்ததே என்று வாதிடுகிறார் லாகடாஸ்.

பாப்பர் போலவே கூன் போலவோ லாகடாஸ் பிரசித்தி பெறவில்லை. ஆனால் அவர் கருத்துகள் பாப்பரின் கருத்துகளை மேலும் நுண்மைப் படுத்துவ தாகவும், கூனின் கருத்துகளை விட ஏற்புடையனவாகவும் அறிவுக்கு ஒத்தவையாகவும் அமைந்தன.

ஆனால் இவரது கருத்துகளை மிகவும் கடுமையாகக் கண்டனம் செய்தவர் ஃபெயரபெண்ட்.

ஃபெயரபெண்ட்:

ariviyal2

ariviyal2ஆஸ்திரியத் தத்துவவியலாளரான ஃபெயரபெண்டும் பாப்பரிடம் கற்றவர்தான். முறையியலுக்கு எதிராக (அகெய்ன்ஸ்ட் மெதாட்) என்ற அவரது நூலில் அவருடைய முக்கியமான கருத்துகளைக் காணலாம். சுருக்கமாக இங்கு அவற்றைக் காண்போம்.

1, தவறாக்கல் என்ற பாப்பரின் கருத்தைக் கூன், லாகடாஸ் இருவரும் ஏற்பது போலவே ஃபெயர பெண்டும் எதிர்க்கிறார். எந்தக் கோட்பாடும் எந்த ஒரு காலத்திலும் எல்லா ஏற்புடைய மெய்ம்மைகளுக்கும் இசைந்திருப்பதில்லை. அவ்வக் காலத்தில் ஆதிக்கம் பெற்றிருக்கக்கூடிய சட்டகத்தினைக் காப்பாற்ற அவ்வப்போதான கொள்கைகளைப் பயன்படுத்துவது அறிவியல் முன்னேற்றத்திற்கு அவசியம். ஆனால் அவ்வப்போதான கருத்துகளை (இவை பின்னர்தான் கொள்கையினால் நியாயப் படுத்தப்படுகின்றன) அறிவியலாளர்கள் பயன்படுத்தும்போது அவர்கள் அறிவியல் முறையிலிருந்து முற்றிலும் விலகிப்போகிறார்கள். ஃபெயரபெண்ட் கருத்தின்படி, இம்மாதிரி தற்காலிகக் கருத்துகள், அறிவியல் ஆய்வில் மையமான இடத்தை வகிக்கின்றன. காணும் மெய்ம்மைகளுக்கு ஒத்துச்செல்லக்கூடிய தற்காலிகமான ஒரு புதிய கொள்கையை அவை உருவாக்குகின்றன. பின்னர் அந்தக் கொள்கை, பிற கொள்கைகளால் ஆதரிக்கப்பட்டு நிலைபேறு அடைகிறது.

2. சட்டகப் பெயர்ச்சிகளைப் பொறுத்தவரை, ஆதிக்கத்திலுள்ள சட்டகம், காணக் கூடிய நிகழ்வுகளை விளக்குவதில் கடுமையான பாதிப்பினை ஏற்படுத்துகிறது என்ற கூனின் கருத்தை ஃபெயரபெண்ட் ஏற்கிறார். சட்டக மாதிரியில், ஆதிக்கச் சட்டகம், புதிதாக வரும் கொள்கையை நெறிக்கவும் செய்கிறது. உற்று நோக்கல்களுக்கு ஒத்துச் செல்வதோடு அல்லாமல், பழைய கொள்கையுடன் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் புதிய கொள்கை ஒத்துச்செல்லவேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

3. மேற்கண்ட இரு கருத்துகளையும் இணைத்து, அறிவியலாளர்கள் பயன்படுத்தும் ஒரேவித முறையியல் விதிகளால் அறிவியலின் முன்னேற்றத்தை நோக்குவது சாத்தியமற்றது என்கிறார் ஃயெரபெண்ட். அப்படிப்பட்ட அறிவியல் முறை, அறிவியலாளர்களின் செயல்பாட்டை எல்லைக்குட்படுத்தி, அறிவியல் முன்னேற்றத்தையும் தடுக்கும் என்கிறார். பொதுவான, வரையறுக்கப்பட்ட விதிகளின்படி செயல்படுவதைக் கைவிடவேண்டும். ஏற்கெனவே உள்ள விதிகளை உடைக்கக்கூடிய அவ்வப்போதைய கருத்துகளினால்தான் அறிவியல் முன்னேற்றம் நிகழ்கிறது. எல்லாக் கருத்துகளின் உருவாக்கமும் இப்படித்தான் நிகழும் என்ற ஃபெயரபெண்டின் பார்வை, அறிவியல் அராஜகம் எனப்படுகிறது.

4. அறிவியல் அராஜகம் என்ற நோக்கு, ஃபெயரபெண்டின் முக்கியப் பங்களிப்பு. அதேசமயம், அறிவியலுக்கும், சமூகத்திற்கும் உள்ள தொடர்பு பற்றியும் அவர் பேசுகிறார். உலகளாவிய (யாவருக்கும் பொதுவான) ஒற்றை அறிவியல்முறை என்பது கிடையாது என்பதிலிருந்து தொடங்குகிறார், மேற்கத்திய சமூகத்தில் அறிவியல் பெற்றிருக்கும் மிக உயர்ந்த அந்தஸ்தினைப் பெறுவதற்கு அது தகுதியுடையது அல்ல என்ற நிலைப்பாட்டுக்குச் செல்கிறார். உலகளாவிய முறையன்றிலிருந்து எழுபவை அல்ல என்பதால் அறிவியல் நோக்குகள் உயர்தரமான முடிவுகள் என்று கூற முடியாது, ஆகவே அறிவியலைப் பிற மானிடவியல்களுக்கு மேலாகவோ, மதத்திற்கு உயர்வாகவோ கூற இயலாது. சோதிடம், மாற்றுமருத்துவம் போன்றவை பற்றி அறிவியலாளர்கள் மிகக் கீழான அபிப்பிராயம் வைத்திருப்பது சரியன்று. சமூகத்தில் விடுதலைக்கான இயக்கமாகச் செயல்படுவதற்கு மாறாக, ஒடுக்குமுறைக்கான கருத்திய லாக அறிவியல் பல சமயங்களில் செயல்படுகிறது. எனவே பன்மைத்தன்மை வாய்ந்த ஒரு சமூகத்தில் பிற கருத்தியல்களிலிருந்து அறிவியலுக்குப் பாதுகாப்பளித்து அறிவியலை மிக உயர்வான ஒரு துறையாக ஆக்கக்கூடாது.

இன்றைய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பற்றிய ஆய்வுகளில், ஃபெயரபெண்ட் கூறிய பன்மைவாதக் கருத்து-அதாவது உண்மையின்மீது அறிவியலுக்கு ஒற்றை அதிகாரம் இல்லை, சமூகத்தில் அதன் அதிகாரமிகுந்த அந்தஸ்து கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும்-என்பது, மிக முக்கியமான அடிப்படை நோக்காக ஏற்கப் பட்டுள்ளது.

ஃபெயரபெண்டின் கருத்து, தீவிரமானது, ஆர்வத்தைத் தூண்டக்கூடியது என்று பிற அறிவியல் தத்துவவாதிகள் கருதுகிறார்கள். அவருடைய கருத்துகள் தீவிரமான விமரிசனத்துக்கும் ஆளாகியுள்ளன. சான்றாக, அறிவியலையும் மதம் போன்றவற்றையும் ஒரே தட்டில் வைத்து நோக்குவது சரியன்று என்று பலர் கூறுகிறார்கள். அறிவியல், சோதனைகள் வாயிலான சான்றுகள் கிடைக்கும்போது தன் கருத்தை மாற்றிக்கொள்வதுபோல, மதம் செய்வதில்லை. உற்றுநோக்கலுக்கு முரண் பாடான கருத்துகளை அறிவியல் வைத்திருந்தால் அது காலத்தில் நிலைப்பதில்லை.

கலீலியோவின் வாழ்க்கைச் சான்றையும் அறிவியலையும் ஃயெரபெண்ட் மிகுதியாகப் பயன்படுத்துகிறார் என்பது அறிவியல் வரலாற்றாசிரியர்களின் மற்றொரு குற்றச்சாட்டு. தனது கால அறிவியலுக்கு எதிராகப் புரட்சி செய்தவராக மீண்டும் மீண்டும் கலிலியோ காட்டப்படுகிறார். இன்று நாம் கையாளும் அறிவியல் முறை என்பது கலிலியோவின் காலத்துக்குப் பிறகு உருவான ஒன்று. தொலைநோக்கி, நுண்ணோக்கி போன்ற ஏராளமான அறிவியல் கருவிகளின் கண்டுபிடிப்பு இன்றைய அறிவியல்முறை உருவாக வழிவகுத்துள்ளது. எனவே கலிலியோவை மட்டுமே சான்றுக்கழைப்பது ஏற்கத்தக்கதன்று.

அசாதாரணமான ஆய்வுமுடிவுக்கு வர அசாதாரணமான சான்றுகள் தேவை. ஃபெயரபெண்டின் அசாதாரணமான முடிவுகளுக்கு ஏற்ற அசாதாரணமான சான்றுகள் அவரால் அளிக்கப்படவில்லை என்பது இன்னொரு விமரிசனம். அவர் காட்டும் சில சான்றுகள் அறிவியலாளர்களால் சரியானவை என ஏற்கப்படுவதில்லை. உதாரணமாக, கலீலியோவுக்கு முரண்படுவதால், நியூட்டனின் புவிஈர்ப்பு வேகமுடுக்கக் கொள்கை புரட்சிகரமானது என்கிறார் ஃபெயரபெண்ட். இது தவறானது. பூமிக்கு அருகிலுள்ள ஒரு பொருளைப் பொறுத்தவரை, கலீலியோவின் கொள்கைக்கு நியூட்டனின் கொள்கை முரண்படவில்லை.

பொதுவாக, அறிவியலின் வரலாற்றில் காணப்படும் தனிப்பட்ட சான்று களிலிருந்து (கேஸ்-ஸ்டடிகளிலிருந்து) தத்துவவாதிகள் பொதுவான முடிவுகளுக்கு வருகிறார்கள். இது தத்துவத்தன் இலட்சியத்துக்கு உகந்தது அன்று, மேலும் கையாளப்படும் சான்றுகள் கேள்விக்குரியவையாக இருந்தால், சிக்கலுக்கு இடங் கொடுப்பவையும் ஆகும்.

அறிவியலின் தனியாதிக்கம் பற்றிய ஃபெயரபெண்டின் விமரிசனம், மிக முக்கியமானது என்று கருதப்படுகிறது. சமூகத்தில் அறிவியலின் பயன்பாடு எல்லாச் சமயங்களிலுமே பயன்தருவதாக இருந்ததில்லை என்பதைக் கணிக்கின்ற பல ஆய்வுகளுக்கு இக்கொள்கை இட்டுச் சென்றுள்ளது. போர்க்கருவிகளின் உருவாக்கம், பயன் பாடு போன்றவை மட்டுமின்றி, மக்கள் தொகுதியின்மீது தேவையற்ற, சற்றும் பிரசித்த மற்ற, பயனற்ற நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவும் அறிவியலின் ஆதிக்கம் காரணமாக அமைந்துள்ளது என்பதைப் பல ஆய்வுகள் காட்டியுள்ளன. (நமக்கு மிகவும் நெருக்கமான சான்றாக, இந்திய அறிவியலாளர்கள், அரசாங்கத்தின் சார்பாக, கூடங்குளம் அணுமின்திட்டத்தை ஆதரித்ததைக் கூறமுடியும். அறிவியலின் பலமான ஒற்றை அதிகாரத்தைக் கூடங்குளம் திட்டம் காட்டுகிறது.)

லாத்தூ(ர்)

ariviyal3

ariviyal3 ஃபெயரபெண்டிற்குப் பிறகு இன்று மிகப் பிரபலமாக விளங்கும் அறிவியல் தத்துவவாதி மற்றும் வரலாற்றாசிரியர், ப்ரூனோ லாத்தூ(ர்) (Bruno Latour). ஆய்வக வாழ்க்கை: அறிவியல் மெய்ம்மைகளின் கட்டமைப்பு என்பது அவருடைய முக்கிய மான நூல். ஸ்டீவ் உல்கர் என்பவர் இதன் உடனாசிரியர். அறிவியல் ஆய்வகச் செயல்முறை என்பது எழுத்துப்பதிவு முறை. அதாவது எல்லாவித அளவீடுகளும் எழுத்துருவில் பதிவுசெய்யப்படுகின்றன. அவை எவருக்கும் அளிக்கப்பட முடியும். இவற்றின் அளவீடுகள் நேரடியாக வாதிக்கப்படுவதில்லை, அவற்றின் பிரதிநிதிகளான வரைபடங்கள், ஆவணங்கள் போன்றவற்றினாலே மட்டுமே வாதிக்கப்படுகின்றன. மேலும் ஜாக்கிரதையான சோதனைகளின் விளைவாகவே கோட்பாடுகள் உருவாக் கப்படுகின்றன அல்லது அழிகின்றன என்னும் அறிவியல் முறை பற்றிய பொதுப் புரிந்துகொள்ளலுக்கு ஆய்வகச் செயல்முறைகள் இடமளிப்பதில்லை. ஆய்வகச் சோதனைகள் பெரும்பாலும் சரியான முடிவுக்கு வருவதற்கு இடம் தராத தரவு களைத்தான் தருகின்றன. அவை தரும் தரவுகளில் எவற்றை வைத்துக்கொள்வது, எவற்றை விட்டுவிடுவது என்பது பெரும்பாலும் அகவயமான முடிவே ஆகும். எனவே ஆய்வக ஆராய்ச்சிகள் மெய்ம்மைகளை வெளிப்படுத்துவதற்கு மாறாக, அவற்றைச் செயற்கையாகக் கட்டமைக்கின்றன அல்லது உருவாக்குகின்றன.

ஆய்வகத்தில் பயன்படும் பொருள்கள், கருவிகள், அவற்றில் செயல்படுவோர், ஆய்வகத்தில் பணியாற்றும் அறிவியலாளர்கள் எல்லாவற்றையும், எல்லோரையும் செயல்புரிவோர் (ஆக்டர்) என்று லாத்தூகூறுகிறார். இவர்களுடைய வலைப்பின்னல்தான், ஆய்வகம் தரும் மெய்ம்மைகளைக் கட்டமைக்கிறது.

சமூகமே சில மெய்ம்மைகளைக் கட்டமைக்கிறது என்பது யாவருக்கும் தெரியும். உதாரணமாகப் பணம். பணம் என்பது வெறும் காகிதம், நம் நாட்டு எல்லைக்கு அப்பால் சென்றால் அதற்கு எவ்வித மதிப்புமில்லை, சர்வதேசப் பரிமாற்றங்களில் காகிதப்பணம் பயனற்றது என்பது எல்லாருக்கும் தெரியும். இருப்பினும் அதன் பயன்பாடு கருதி ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் அதை உண்மையென ஏற்றுக் கொள்கிறோம். ஆகவே பணம் என்பது சமூகம் கட்டமைத்த ஒரு மெய்ம்மை. (மெய்யான மெய்ம்மை அல்ல). அதுபோலவே, ஐன்ஸ்டீனின் E = Mc2 என்ற கருத்தும் ஒரு கட்டமைக்கப்பட்ட மெய்ம்மையே. அது இயற்கையின் உண்மையன்று. ஓர் அழகான கட்டடம் எப்படி வடிவமைக்கப்பட்டதோ, ஓர் இசையமைப்பாளரின் இசை எப்படிக் கட்டமைக்கப்பட்டதோ, அது போலவே அறிவியல் மெய்ம்மைகளும் கட்டமைக்கப்பட்டவையே என்பது லாத்தூரின் கருத்து.

அறிவியல் மெய்ம்மைவாதத்திற்கு (Scientific realism–அறிவியல், இயற்கையின் உண்மைகளைக் கண்டறிந்து வெளிப்படுத்துகிறது என்ற நோக்குக்கு) லாத்தூரின் கட்டமைப்புவாதம் எதிரானதாக உள்ளது. பொதுவாக அறிவியலாளர்களும், அறிவியல் தத்துவவாதிகளும் இதை ஏற்றுக்கொண்டாலும், சில சான்றுகளுக்கு இதனை நேரடியாகப் பயன்படுத்த இயலாது. உதாரணமாக அணுக்கதிர்வீச்சு என்பது கட்டமைக்கப்பட்ட மெய்ம்மை மட்டுமே, உண்மையன்று என்று வாதிடுவது மிகவும் கடினம்.

1976இல் பிரெஞ்சு அறிவியலாளர்கள், எகிப்திய ஃபாரோ அரசன் ராமீசஸ் மிமிஇன் பாதுகாக்கப்பட்ட சவத்தை (மம்மியை) ஆராய்ந்தபோது, அவன் காசநோயால் இறந்தான் என்று கண்டுபிடித்தார்கள். எகிப்திய ஃபாரோக்களின் காலத்தில், காச நோய்க்கிருமி கண்டுபிடிக்கப்படவில்லை, ஆகவே அந்த மன்னன் காசநோயால் இறந்திருக்க இயலாது என்ற லாத்தூரின் கருத்து கடும் விமரிசனத்துக்குள்ளாகியது. எல்லா மெய்ம்மைகளுமே கட்டமைக்கப்பட்டவை என்ற பின்நவீனத்துவக் கொள்கையை லாத்தூரின் கொள்கை ஒத்துள்ளது. சான்றாக ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு ஈராக்கின்மீது அமெரிக்கா படையெடுத்துப் போரிட்டபோது ஏவுகணைகள் வீசப்பட் டதையும், கச்சாஎண்ணெய் சிதறிக் கடலில் கலந்து, அதிலிருந்த உயிரினங்கள் மடிந்ததையும் நாம் ஊடகங்களின் ஒளிபரப்பில் காணமுடிந்தது. நம் காலத்தில், நம் கண்ணெதிரே நிகழ்ந்த இந்தப் போரே அமெரிக்க ஊடகங்கள் கட்டமைத்த ஒன்று, அது உண்மையாக நடந்ததல்ல என்றார், பின்நவீனத்துவத் தத்துவவாதியான பூத்ரியார்!

சமூகம்