அழிவை நோக்கி நாமும் உலகமும்

அழிவை நோக்கி நாமும் உலகமும்

எஸ். என். நாகராஜனின் ‘கீழை மார்க்சியம்’
என்ற நூலை முன்வைத்துச் சில எண்ணங்கள்

எஸ். என். நாகராஜன் பலராலும் மதிக்கப்படுகின்ற மார்க்சியத் தத்துவ அறிஞர். அவர் உருவாக்கியிருக்கும் தத்துவம் கீழை மார்க்சியம். அவருடைய குறிப்பிடத்தக்க நூல் ‘அழிவை நோக்கி நாமும் உலகமும்’ என்பது. அது கீழை மார்க்சியம்-வரலாறு-அரசி யல்-மெய்யியல் பற்றிய நூல்.

இத்தொகுப்புநூலில் ஐந்து தனித்தனி நூல்கள் அடங்கியுள்ளன.

இவற்றுள் முதலாவது, கம்யூனிசம்-விடுதலையின் இலக்கணம் என்னும் நூல். மனிதன் படைப்பினால் ஆண்டவன் ஆகிறான், ஆனால் இவ்வுலகில் அவன் அடிமையாகக் கிடக்கிறான். தான் ஒரு அடிமை என்று அறியாதவனுக்கு விடுதலை இல்லை என்று் இந்நூலில் நாகராஜன் கூறுகின்றார். வாழ்வு உண்டென்று புலனா னால், உழைக்கும் மக்கள் ஒன்றுபடுவர் என்கிறார். பின்னர் முதலாளித்துவ முறையின் குறைகள் விரிவாக அலசப்பட் டுள்ளன. ஆழ்நோக்கில் வறட்டு நாத்திகமும் மதமும் ஒன்றே என்பதையும் விளக்கியுள்ளார். நூலின் இரண்டாம் பகுதியில் ‘அந்நியமாதல் கோட்பாடு’ விளக்கப் படுகிறது. அதன் பின், கிறித்துவர்களுக்கும் மார்க்சியர்களுக்கும் இடையில் உரையாடல் நிகழும் பொதுக் களம் விவரிக்கப்படு கிறது. “மார்க்ஸை இளம் மார்க்ஸ், முதிய மார்க்ஸ் எனப் பிரித்துப் பார்க்கக்கூடாது” என்பதற்கான காரணங்களை எடுத் துரைக்கிறார். மூன்றாவது பகுதியில் உள்ள அறிவியல் பற்றிய கட்டுரைகள் முக்கியமானவை. உழைக்கும் மக்களுக்குத் தேவையான அறி வியல் பற்றிப் பேசுகிறார். புதியவகை விஞ்ஞானமும் தொழில் நுட்பமும் தேவை என்கிறார். இவ்விதம் ஏழு கட்டுரைகள் அடங்கியுள்ளன. 1982இல் வெளிவந்த நூல் இது.

இரண்டாவது நூல், மார்க்சியம்-கிழக்கும் மேற்கும் இதில் பதினைந்து கட்டுரைகள் அடங்கியுள்ளன. 1993இல் வெளிவந்த நூல் இது. காலனியத்தின் வரலாறு, அது திட்டமிட்டு எப்படி மக்கள் இயக்கங்களை அழிக்கிறது என்பது முதலில் பேசப்படுகிறது. பின்னர் மக்கள் விடுதலைபெறுவதற்கு, புரட்சிக்கு எதிர்நிலையில் ஏன் இருக்கிறார்கள் என்பது பற்றி. பின்னர் ஆசிய உற்பத்தி முறை பற்றியும், உழைப்பாளி வர்க்கத்திற்குத் தேவையான அறிவியல் பற்றியும் பேசப் படுகிறது. அதன்பின் மெய்காண் முறைகள் பற்றி. பிறகு கீழைமார்க்சியம் பற்றிய விரிவான விளக்கம் அடங்கியுள்ளது. இயங்கியல், மதச்சார்பின்மை போன்றவை பற்றிய விரிவான ஆய்வுகள் உள்ளன.

அடுத்த நூல், அழிவின் தத்துவம் இதில் பத்துக் கட்டுரைகள் அடங்கியுள்ளன. இது 1997இல் வெளியான நூல். அழிவின் தத்துவம் என்ற கட்டுரையிலிருந்தே இந்த நூலின் தலைப்பு பிறந்துள்ளது. அதில் அறிவியல் பற்றியும் சுற்றுச்சூழல் ஆபத்து பற்றியும் மனிதர்களைப் பற்றிய விஞ்ஞானிகளின் விவாதங்கள்பற்றியும் விரிவாக ஆராயும் நாகராஜன், இறுதியாக வரும் ஒரு முடிவு வியப்பில் ஆழ்த்தும்-”வலுவற்றதே வாழும்”. மேற்கத்திய அறிவியல் தொழில்நுட்பத்தின் ஆபத்துகள் பற்றி விரிவாகப் பேசியிருக்கிறார். தேவைகளைக் கட்டுப்படுத்தல், அள வாக வாழ்தல் போன்றவற்றை வலியுறுத்துகிறார். பெண்ணியம் பற்றி விரிவான அலசல் இல்லை. சுருக்கமாக, மேற்கத்திய மார்க்சியம் ஆணியம்-கீழை மார்க்சியம் பெண்ணியம் எனக்கூறி முடித்துவிடுகிறார். பசுமைப்புரட்சி, அது தந்த வீரியவித்துகள், பூச்சிக்கொல்லிகள் முதலியன உண்டாக்கிய சீரழிவுகள் பற்றி விரிவாகப் பேசியுள்ளார். சுருங்கச் சொன்னால், மேட்டுக்குடி அறிவியலை எதிர்க்கும் நூலாக இது அமைந்துள்ளது.

நான்காவது நூல், கிழக்கு வெல்லும் இதில் ஆறு கட்டுரைகள் உள்ளன. நூல் தலைப்பிலேயே முதற் கட்டுரை அமைந்துள்ளது. இது வெளியான ஆண்டு 1997. முன்நூலில் கூறிய ‘வலுவற்றது வாழும்’ என்பதன் நீட்சியாகவே இத்தலைப்பைக் கருதலாம். முதலில் டார்வினியத்தை ஆராய்கி றது இந்நூல். பிறகு நவகாலனியம், இந்தியஅரசின் பங்கேற்பு, இன்றைய போலிகம்யூனிஸ்டுகளின் நிலை, சூழலைக் காப்பாற் றுதல் போன்ற பலவிஷயங்கள் பேசப்படுகின்றன. நூலின் முக்கியக் கரு, “கீழைக்காற்று, மேலைக்காற்றை வெல்லும்” என்பதாகிறது. (இதனை நான் “தென்றல் வாடையை வெல்லும்” என்று சொல்லவிரும்புவேன்).

கடைசிநூல், எஸ் என் நாகராசன்-75ஆம் பிறந்தநாள் மலர் இதில் எட்டுக் கட்டுரைகள் உள்ளன. ‘வாழும் மார்க்ஸ்’ என்ற கட்டுரை, மார்க்சின் பதினான்கு மேற் கோள்களை எடுத்துக்காட்டி இவை தவறானால், மார்க்சியம் அழிந்துவிட்டதாகக் கூறலாம்; ஆனால் இவை இன்றும் உண்மையானவை; எனவே இன்றுதான் மார்க்ஸ் முன்னைவிட அதிகமாகத் தேவையாக இருக்கிறார் என்று நிறுவுகிறது. பிறகு சர்வதேசப் பொதுவுடைமை இயக்கங்கள் பற்றியும், இஸ்லாமியர், தலித்துகள் பிரச்சினைகள் பற்றியும் சிறிய அளவில் சொல்லப் படுகிறது. டாங்கே பற்றியும் இந்தியப் பொதுவுடைமைக்கட்சிகள் பற்றியும் விமரிசனம் ஒரு கட்டுரையில். பின்னர் மாவோவிட மிருந்து நாம் கற்றுக் கொள்ளக்கூடியவை பற்றிச் சொல்லப் படுகிறது.

ஆக எஸ்.என். நாகராஜன் 1965முதல் எழுதிய கட்டுரைகள்-ஏறத் தாழ 45 ஆண்டுக ளின் சிந்தனைகள் தொகுக்கப்பட்டு ஒரே நூல் வடிவம் பெற்றுள்ளன. பின்னிணைப்பாக ஆசிரியர் முன்னுரைகள் சில, ஞானியின் அறிமுகங்கள், பேட்டிகள், கடிதங்கள் போன்றவை உள்ளன.இதனை வெளியிட்டிருப்பது காவ்யா. எஸ். என். நாகராஜன் அவர்களுடைய நூல்களை முன்னரே நான் அவ்வப்போது வாசித்திருக்கிறேன். என்றாலும் இப்போது முழுமை யாகச் சேர்த்து வாசிக்கும் அனுபவம் கிடைத்தது. நாகராஜன் இந்தக் கட்டுரைகளை எழுதிக் குறைந்தபட்சம் பன்னி ரண்டு ஆண்டுகளேனும் ஆகின்றன. இந்தக் காலப்பகுதியில் உலகில், இந்தியாவில் ஏற்பட்ட மாறுதல்கள் மிகமிக அதிகம். இதை நாம் மனத்தில் கொள்ளவேண்டும். ஆயினும் சில ஆண்டு களுக்கு முன் வெளிவந்த தமிழ் நேயம்-36இல் அவர் கூறியிருக்கும் கருத்துகள் நூலின் கருத்துகளோடு முற்றிலும் ஒத்தே செல்கின்றன. தமிழ்நேயம் கட்டுரையில் அவர் மார்க்சியத் திற்குத் தமது பங்களிப்பாகக் கூறியுள்ள கருத்துகளைக் காண்போம்:

1. மார்க்சியத்தைப் புரட்சிகர மெய்யியல் என்று அறிமுகப்படுத் தியமை, எளிதில் புரியக்கூடியதாக அது உள்ளதைச் சுட்டிக் காட்டியமை.
2. இனிவரும் புரட்சி உலகப்புரட்சியே, அதற்குத் தலைமை தாங்கப் போகின்றவர்கள் பெண்களே என்பதைச் சுட்டிக்காட் டியமை.
3. மாவோவையும் காந்தியையும் இணைக்கவேண்டும் எனக் கூறியமை.
4. பசுமைப்புரட்சியின் தீங்கான விளைவுகளை அறிவித்தமை.
5. கீழைமார்க்சியம் ஆகிய பெண்ணியம், சுற்றுச்சூழலை அடிப் படையாகக் கொண்ட சோஷலிசமாக அமைந்து எதிர்ப்பியக்கங் களை இணைக்கும் எனச் சுட்டிக்காட்டியமை.
6. மக்கள் தேவைகளைக் குறைத்துக்கொள்ளவேண்டும் என்றும் ஆயுதங்களற்ற போர் வேண்டும் என்றும் வலியுறுத்தியமை.

என ஆறு விஷயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார். இவற்றுள் இரண்டாவது நடக்கும் என்று தோன்றவில்லை. மூன்றாவதற்குத் தேவையேயில்லை. பிற நான்கும் நானும் என்னைப் போன்றவர் களும் உடன்படக்கூடிய விஷயங்களே.

1. மேற்கத்திய நாகரிகத்தின் அறிவு வன்முறை, அறிவியல் தொழில்நுட்பம் உண்டாக்கும் பேரழிவு, சுற்றுச்சூழல் உணர்வற்ற பொறுப்பின்மை போன்றவை நிச்சயம் வற்புறுத்தப்பட வேண்டி யவைதான். ஆனால் நாகராஜனின் மக்கள் தொகைப் பெருக்கம் பற்றிய கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. மால்தூஸ் கருத்தை ஏற்கிறோமோ இல்லையோ, பொதுவாக அனைவரும் சொல்லும் விஷயம், குழந்தை ஒரு வயிற்றுடன் மட்டுமல்ல, இரண்டு கைகளுடனும் பிறக்கிறது என்பது. இக்கருத்தை நாம் மறுக்க வில்லை. ஆனால், இதில் உழைப்புப் பிரச்சினை மட்டுமில்லை. உலகின் மூலவளங்கள் எல்லைக்குட்பட்டவை. யாரும் உலகத் தின் பரப்பளவை மாற்றிவிடமுடியாது. மண்ணெண்ணெய் வளம் குறைந்துகொண்டே வருகிறது. லட்சக்கணக்கான ஆண்டுகள் மட்கி எரிந்து இறுகி நிலக்கரியாகவோ எண்ணெயாகவோ மாறும் எரிபொருளை நூறே ஆண்டுகளில் சாப்பிட்டுவிட்டோம். மூல வளத்தைப் பெருக்க நமக்கு வழியில்லை. மாற்றுச் சக்திகளைக் கையாள்வதை முதலாளித்துவ அமைப்புகள் வேண்டுமென்றே தடுத்து வருகின்றன.

எல்லையற்றுப் பெருகும் மக்கள், நகர்ப்புறங்களுக்குத் தள்ளப் படுகிறார்கள், விவசாய நிலங்களில், ஏரிகளில் வீடு கட்டுகிறார் கள். காட்டை அழித்து வீடு கட்டு கிறார்கள். வீடுகட்டுவதற்கு ஆறுகளை மொட்டையடித்து மணல் அள்ளிக்கொண்டு போகிறார் கள். எங்கு பார்த்தாலும் தூசியையும் நச்சுப்புகையையும் வெளி விடும் சிமெண்ட் ஆலைகள். சாக்கடையாகும் நதிகள், குப்பை மேடுகளாகும் நகர்ப்புறங்கள். மேலும்மேலும் கழிவுகள், சாக்கடை கள், நோய்கள், வாழ்க்கை நரகமாதல். இப்படி மக்கள் தொகைப் பெருக்கத்தின் உபவிளைவுகளைச் சொல்லி மாளாது. உணவு மட்டுமே பிரச்சினை அல்ல. மக்கள் தொகை அதிகமாக அதிகமாக உணவு மட்டுமல்ல, இடம் தேவைப்படுகிறது. மின்சாரம் தேவைப் படுகிறது. வாகனங்கள் வசதிகள் தேவைப்படுகின்றன. பிரிவினைப் பட்ட பலவித வேலைகள் தேவைப்படுகின்றன. இன்னும் கனரகத் தொழிற்சாலைகள் தேவைப்படுகின்றன. விளைவு, இயற்கை அடியோடு நாசம். நமது அடுத்த தலைமுறைக்கு என்ன வைத்து விட்டுப் போகப்போகிறோம்? வறண்ட பாலை வனத்தையா?

இது நாகராஜனுக்குத் தெரியாததல்ல. அதனால்தான் இனிவரும் போராட்டம் என்பது வழக்கமான வர்க்கப் போராட்டமாக இருக்காது, உலக அளவிலான, பெண்கள் தலைமை ஏற்கின்ற, சுற்றுச்சூழலைக் காப்பாற்றுவதை உள்ளடக் கிய போராட்டமாக இருக்கும் என்கிறார். இங்கே சீனாவை ஒப்பிடக்கூடாது. ‘நம்மைப் போன்று இரண்டுமடங்கு மக்கள் தொகையுள்ள சீனா’ என்று ஓரிடத்தில் குறிப்பிடுகிறார் நாகராஜன். இருமடங்கு மக்கள்தொகை இல்லை. ஏறத்தாழ ஒன்றரை மடங்கு, அவர்கள் மக்கள்தொகையில் பூச்சியவளர்ச்சிநிலைக்கு வந்துவிட்டார்கள். ஒருவீட்டுக்கு ஒரு குழந்தை என்பதை அமுல்படுத்திவிட்டார்கள். இது ஒருபுறம் இருக்கட்டும், அவர்களிடம் நம்மைப்போல் மூன்றரை மடங்குப் பரப்பு இருக்கிறது. மக்கள் தொகை அடர்த்தியைப்பற்றிச் சிந்திப்பது முக்கியம். எட்டடிக்குச்சில் எட்டுப்பேர் இருப்பதற்கும் நூறடி மாளிகையில் எட்டுப்பேர் இருப்பதற்கும் வித்தியாசம் இல்லையா?

ஒன்றரை ஆண்டுக்குமுன் சர்வதேச உணவுக்கொள்கை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், உலகின் அதிஏழ்மை நாடுகள் 119இல் இந்தியா 92ஆம்இடத்தில் இருக்கிறது. பாகிஸ் தான் 88ஆம் இடத்தில், மியான்மர்கூட 68ஆம் இடத்தில், இடைய றாது போர்நடந்த இலங்கை 69ஆம் இடத்தில். இந்திரா அம்மையார் அவசரநிலை பிரகடனம் செய்தபோது மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி)யில் 41 விழுக்காடு பங்க ளித்த இந்திய வேளாண்மை, இன்று 18 விழுக்காடுதான் பங்களிப் பதாக இருக்கிறது. கிராமப்புற இந்தியக் குழந்தைகளில் பாதிப்பேர் உணவுச்சத்துக் குறைபாடுகளோடிருக்கிறார்கள். 1997-2005 காலப்பகுதியில் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு மேல் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஏழைகளுக்கென ஒருலட்ச ரூபாய்க்குக் கார் தயா ரித்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்போகிறார், நமது அரசியல்-பொருளாதார-வாழ்க்கைநிலைத் தலைவிதிகளை நிர்ண யிக்கும் முதலாளிகளில் ஒருவர்.

இந்தியாவில் ஒருலட்சம் குழந்தைகள் பிறக்கும் போது ஐநூறு தாய்மார்கள் இறந்துபோகிறார்கள் (சீனாவில் இது ஒருலட்சத் திற்கு 45தான்). உலகில் மிகஅதிகமான பேர் படிக்காமலிருப்பது இந்தியாவில் தான். படிக்கத் தெரிந்தவர்கள் குமுதம் படித்துச் சந்தோஷமாக இருக்கிறார்கள். குமுதம் போன்ற பத்திரிகைகளைப் படிக்க இயலாதவர்கள், தொலைக்காட்சித் தொடர்கள் பார்த்து மிக்க மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள். அதுவும் செய்ய மனமில்லாத வர்கள், வேறு ஜாதி, இனம், மதம் சார்ந்தவர்களைக் கொலை செய்துகொண்டிருக்கிறார்கள்.

2. இன்று மக்கட்சமூகம் மாறிவிட்டது. முதலாளித்துவம் காலப் போக்கில் எப்படி மாறிவந்திருக்கிறதோ, அப்படியே பணிசெய் வோரின் இயல்பும் மாறிவிட்டது. இன்று மிக அடிப்படையான விவசாயத் தொழிலாளிகள், கீழ்த்தட்டுத் தொழிலாளிகளைத் தவிரப் பிற அனைவரும் (மத்தியதர, உயர்மத்தியதர மக்கள்) முதலாளிகளே. எல்லாரும் பங்குமார்க்கெட்டில் பங்குகள் வாங்கு கிறார்கள். பரஸ்பரநிதிகளில் முதலிடுகிறார்கள். அம்பானியின் தொழிற்சாலைகள் இன்று அம்பானிக்கு மட்டுமே சொந்தமில்லை. பங்குதாரர்கள் எவ்வளவோபேர் இருக்கிறார்கள். இருமாதங்கள் முன் ஒரு பெரிய ஐ.டி. நிறுவன இயக்குநர்மீது குற்றச்சாட்டு. அந்த நிறுவனம் அந்த நபருக்கு மட்டுமே சொந்தமானால், அதிலிருந்து பணத்தை எடுத்து அவர் மகன்களுக்குத் தருவது அவர் இஷ்டம். ஆனால் அது அவர் சொந்த நிறுவனம் அல்ல. பங்குதாரர்களின் நிறுவனம். அதனால் அவர் கையாடல் செய்தவராகிறார், குற்றம்செய்தவராகிறார்.

3. இன்று இரண்டுவர்க்கங்கள் இல்லை. பல வர்க்கங்கள் உருவாகிவிட்டன. அதனால் வர்க்கப் போராட்டம் என்பதும், அதன் அடிப்படையிலான பாட்டாளிவர்க்கச் சர்வாதிகாரம் என்பதும் எந்த அளவு ஏற்புடையவை என்ற கேள்வி எழுந்துள்ளது.

4. பாட்டாளிவர்க்கச் சர்வாதிகாரம், அல்லது பெண்கள் தலைமை யிலான சுற்றுச்சூழல் அடிப்படையிலான புரட்சி ஏற்புடைய தெனவே வைத்துக்கொள்வோம். பெரும் அளவில்- ”உலகத் தொழிலாளிகளே/விவசாயிகளே/பெண்களே ஒன்று சேருங்கள்” என்ற முழக்கத்தை முன்வைத்து ஒன்றுகூட்டுவதாகக் கொள் வோம். எங்கு அமைப்பு உருவாகிறதோ, அங்கு அதிகாரக் கட்டமைப்பு உருவாகிறது, ஊழல் உருவாகிறது. தலைமையில் போட்டி உருவாகிறது. உள்வட்டங்கள் பல தோன்றுகின்றன. யாவரும் சமம் என்பதுபோய், ஒரு உள்வட்டத்திற்கு இன்னொரு உள்வட்டம் மேலானது எனப் பலபடிமுறையமைப்பு உருவாகி விடுகிறது. ‘All are equal, but some are more equal’ என்று ஆர்வெல் சொன்னது நடந்துவிடுகிறது. அதாவது முதலாளித்துவத்தின் நோய்க்கூறுகள் என்னென்ன உண்டோ அத்தனையும் வந்துவிடு கின்றன. உருவாகும்போதே எந்த அமைப்பும் புற்றுநோயாகத்தான் உருவாகிறது. இதுவரை இதற்கு விதிவிலக்கில்லை.

5. நான் பார்த்தவரை, மார்க்சியவாதிகள் அனைவரும் மகிழ்நோக்குடையவர்கள். எதிர்காலத்தில் நம்பிக்கை உடையவர் கள். இதில் அவர்கள் விஞ்ஞானிகளுடனும் அறிவுஜீவிகளுடனும் ஒன்று படுகிறார்கள். நாகராஜனும் இப்படித்தான். மிக அதிக நம் பிக்கை வைத்திருக்கிறார். விதிக்கொள்கையைச் சான்று காட்டு கிறார். “நல்லது செய்தால் நல்லது விளையும்” என்று நம்புகிறார். எனது கல்லு£ரியில் சில மாதங்களுக்குமுன் இரண்டு பேராசிரியர்கள் சுற்றுச் சூழல் மாசுபாட்டையும் வறட்சியையும் வெப்பத்தையும் நீரை விலைகொடுத்து வாங்கியே தீர வேண்டி யிருப்பதையும் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு பேராசிரியர் கடைசியாகச் சொல்கிறார்- ”கவலைப்படாதீர்கள், நமது விஞ்ஞானிகள் எப்படியாவது சமாளித்து விடுவார்கள். எதையா வது கண்டுபிடித்து இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்துவிடுவார்கள்”. இந்த அசட்டு நம்பிக்கை எனக்கு இல்லை. நாகராஜன் அளவுக்கு நான் உயிரியல் படிக்கவில்லை என்றா லும், நான் ஓரளவு இயற்பியல் படித்தவன். அதனால் என்ட்ராபி என்ற கருத்தில் எனக்கு நம்பிக்கை அதிகம். இந்த நூலில் ஓரிடத்தில் நாகராஜன் சொல்வது போல நெகடிவ் என்ட்ராபி உருவாவது/ உருவாக்குவது கடினம்; சாத்தியமற்றது என்பேன் நான்.
பிரபஞ்சம் என்பது வெறும் தாறுமாறான சங்கதியா (chaos-ஆ)? அல்லது ஒழுங்கமைவுள்ள விஷயமா(cosmos-ஆ)? இது அடிப்படைப் பிரச்சினை. cosmos என்பவர்கள் கோள்கள் ஒழுங்கான பாதையில் சுற்றுவது முதலாகப் பலவற்றை-பழைய ஆத்திக வாதிகள் போல-மேற்கோள் காட்டுகிறார்கள். எங்கேனும் நன் மைக்கு நன்மை, தீமைக்குத் தீமை என ஒழுங்கான விதியமைவு உண்டா? அப்படியிருக்குமானால் தீமைசெய்ய மக்கள் எவ்வளவு பயப்படுவார்கள்? சுனாமி சுற்றுச்சூழல் சீர்கேட்டின் எதிர்விளைவு என்றால் செத்துப்போன இலட்சக்கணக்கான மக்கள் அத்தனை பேரும் பாவிகளா? கிறித்துவம் பாவத்தின் சம்பளம் மரணம் என்றல்லவா சொல்கிறது? எங்கே எதில் ஒழுங்கு இருக்கிறது? பிரபஞ்சம் ஓர் நியதி தவறா ஒழுங்குமுறை (ordered system) என்றால் மட்டுமே நெகடிவ் என்ட்ராபி சாத்தியம்.

6. இன்றைய அறிவியல் தொழில்நுட்பத்தினால் ஏற்படும் பேரழிவுகள் விளையாமல் இருக்க வேண்டுமானால் மனிதன் பேரளவு தன் சுயநலத்தைத் துறக்க வேண்டும். அறிவியல் தொழில்நுட்பம் தேவையற்ற வசதிகளையும் ஆடம்பரங்களையும் அளித்தன்றி வேறென்ன செய்திருக்கிறது? எல்லாத் தொழில்நுட் பமும் மனித உறுப்புகளின் விரிவாக்கமே என்பார்கள். எதற்கு இந்த விரிவாக்கங்கள்? மனிதனை மனிதன் கொள்ளையடிக்க உதவுவதன்றி இவை வேறு எதற்குப் பயன்படுகின்றன? இன்று பேராசைமிக்க சுயநலம் என்பதின்றி மனிதன் உண்டா? எல்லோரும் எங்கு ஓடுகிறார்கள்? எதைத் தேடி அலைகிறார்கள்? ஏன் அந்நியப்பட்டுப் போகிறார்கள்? எனக்குத் தோன்றுகிறது, தமிழ் இலக்கியங்களிலுள்ள நிலையாமையை வலியுறுத்தும் பாக்களை அனைத்துலகப் பாடத்திட்டமாக வைக்க வேண்டுமென்று. வாழ்க்கையின், செல்வத்தின், இளமையின் நிலையின்மை தெரியாமலே “இதில் அது கிடைக்கும் அதில் இது கிடைக் கு”மென்று நாடிஓடுகின்ற மக்கள்கூட்டத்தை என்ன செய்வீர்கள்? ஆடம்பரத்தை தினசரி விரும்பி அலையும் மக்கட்கூட்டத்தி லிருந்துதானே புரட்சிக்கு உலகத் தொழிலாளர்களை, பெண்களை, விவசாயிகளை உருவாக்க வேண்டும்? அதனால் பின்னமைப்புவாதிகள் சிலர் இனி வர்க்கப் போராட்டம் என்பதே இயலாது, skirmishes எனப்படும் சிறுசிறு கலகங்கள்தான் இயலும், இனிமேல் அனைவரும் ஆங்காங்கு தங்கள் தங்கள் இடங்களில் மக்களைச் சிற்றளவில் திரட்டிப் போராட வேண்டும் என்று சொல்லும் நிலைக்குப் போய்விட் டார்கள்.

7. தான் தென்கலை வைணவனாக இருந்ததால்தான் கீழைமார்க்சியத்திற்கு வரமுடிந்தது என்பதைப் பலப்பலமுறை சொல்லி மகிழ்கிறார் நாகராஜன். அது அவருடைய தனிப்பட்ட அனுபவமாகலாம். தென்கலை வைணவம் என்ன, சைவசித் தாந்தம் என்ன? யாவும் கொள்கையளவில் ஒன்றைத்தான் சொல் கின்றன. ஆனால் நடைமுறை, அமைப்பு என்ற வகையில் தென்கலை வைணவத்தின்மீதும் எனக்கு மரியாதையில்லை. சீரங்கத்திற்கு அருகிலேயே முப்பத்தைந்து ஆண்டுகளைக் கழித்தவன் என்றநிலையில் அங்குள்ள தென்கலையாரும் பார்ப்பனத் திமிரோடும் சமஸ்கிருதச் சார்போடும் நடந்துகொள்வ தைத்தான் நான் நடைமுறையில் கண்டிருக்கிறேன். அவ்வாறில் லையேல் ஏறத்தாழ ஐந்தாண்டுகளுக்கு முன்பு ம.க.இ.க.வினர் சீரங்கத்தில் கருவறை நுழைவுப் போராட்டம் ஏன் நடத்து கிறார்கள்? ஏன் விரட்டி யடிக்கப்படுகிறார்கள்? அங்குள்ளவர்கள் ஏன் பெரியார் சிலையை உடைக்கிறார்கள்? இப்படி எத்தனையோ சொல்லலாம். அமைப்புரீதியான எதுவும் நம்புவதற்குரியதல்ல என்பது இக்காலத்தின் பாலபாடம். இன்றைக்கு இருக்கட்டும். பழங்காலத்தில் மட்டும் என்ன வாழ்ந்தது? நந்தனைச் சிதம்பரத்தில் தீயிட்டுக் கொன்றதுபோல, காவிரியாற்றில் திருப்பாணாழ்வார் மீது கல்லெறிந்தார்கள். அடிபட்டுக்கிடந்த அவரை ஆண்டவன் அழைக்கிறான் என்று கோவிலுக்குள் கொண்டு சென்று சமாதிகட்டிவிட்டார்கள். பக்தி இயக்கங்களையும் புகழ்கிறார் நாகராஜன். ஆனால் பௌத்த மதம் ஏன் இந்தியாவை விட்டுப் போய்விட்டது என்று கவலைப்படுகிறார். பௌத்தத்தையும் சமணத்தையும் வறட்டு அறவொழுக்க மதங்கள் என்று ஒழித்துக்கட்டியவையே பக்தி இயக்கங்கள்தானே? “சமணர் பௌத்தர் தலைகளையெல்லாம் அறுப்பதே கருமம் கண்டாய் அரங்கமா நகருளானே” என்று தொண்டரடிப்பொடி யாழ்வார் (ஒருவேளை பழையகால பஜ்ரங்தள் தொண்டரோ?) பாடுகிறாரே – இதுதான் வைணவம் கூறும் கைங்க ரியமா? எங்கும் கொள்கை வேறு, நடைமுறை வேறு.

8. இங்கு முதலில் இந்தியா என ஒரு நாடு உண்டா என்ற விவாதம் தேவை. நாகராஜன் கேள்வியின்றி பாரதம் என்பதை ஏற்கிறார். இந்தியாவின் அனைத்துப் பகுதிகளும் தமிழனுக்கு துரோகம் செய்கின்றன. தமிழ் மீனவன் சிங்களப்படைகளிடம் தினசரி அடிவாங்கினாலும் கொல்லப்பட்டாலும் நாதியில்லை. இதேபார்வைதான் ஈழத்தமிழன் மீதும் தொடர்கிறது. நதிநீர்ப் பங்கீட்டிலும் துரோகம். நதிநீரைச் சுரண்டுவதிலும் துரோகம். கோதாவரியும் கிருஷ்ணாவும் துங்கபத்ராவும் வடபெண்ணையும் ஓடும் ஆந்திரம், ஓர் இருபது மைல்தூரம் மட்டுமே ஆந்திரா வுக்குள் பாலாறு ஓடுமிடத்தில் அணைகட்ட முனைகிறது. தமிழர் களுக்குத் தக்க தலைவர்கள் இல்லை. தமிழ்நாட்டில் மார்க்சியக் கட்சிகளும் வெறும் சோற்றுக்கட்சிகளாகவும் ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளாகவும் இருக்கும் கேவலம். உலகமும் தமிழர்கள் பக்கம் இல்லை. ஐ.நா.சபையும் துரோகம் செய்கிறது. சீனா ஈழத்தமிழர்களைக் கொல்லப் படை அனுப்பு கிறது. இந்தமாதிரிச் சூழலில் தமிழன் தன்னைத் தீயிட்டு மாய்த்துக் கொள்வதைத் தவிர வேறெதுவும் செய்ய இயலாத கையறு நிலை. இப்படி ஒரு பாரதமா? இதற்கு நாம் அங்கமாக இருக்கவேண்டுமா? நாமெல்லாம் உப்பிட்டுச்சோறு தின்பவர்கள் தானா? நான் எந்த மொழியையும் வெறுக்கவில்லை. 1965இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டேன். ஆனால் 1968இல் இந்தி பிரவீண் படித்துமுடித்தேன். வடநாடு சென்றால் எந்தக் காரணமும் இல்லாமல் மதராசி என்று கேலிசெய்கிறார்களே, வெறுக்கிறார்களே, அதற்கு என்ன பதில்? இப்படிப் பல கேள்விகள் நமக்கு முன்னால். வடக்கு முழுதும் மதவாதத்தில் ஒன்று திரண்டு நிற்கிறது. அத்வானியும் மோடியும் வருண் காந்தியும் வெளிப்படையாகவே முஸ்லிம்களைக் கொல்லவேண்டும், கிறித்துவர்களை ஒழிக்க வேண்டும் என்று பேசுகிறார்கள். உச்சநீதிமன்றமும் இவர்களுக்கு ஜால்ரா போடுகிறது. இவர்களோடு நமக்கு என்ன ஒட்டுறவு? தமிழகத்தில் பலகாலமாக இல்லாதிருந்த மதஅடிப்படைவாதச் சக்திகள் இப்போது ஓரளவு நுழைந்துவிட்டன. இன்னும் அதிகமாக நுழையப் பெருமுயற்சி செய்கின்றன. இவற்றை எப்படி எதிர் கொள்வது? நான் படித்தவரை பலநூல்களும் “ஒருமொழிக்கு ஒரு கலாச்சாரம், ஒரு கலாச்சாரத்திற்கு ஒரு நாடு” என்றுதான் சொல்கின்றன. அப்படியானால் தமிழகத்திற்கு விடிவு என்ன?
நாகராஜன் மாவோகாலத்துச் சீனத்தையும் யேனானையும் மீண்டும் மீண்டும் புகழ்கிறார். மேற்கண்டதுபோன்ற பிரச்சினைகள் சீனாவிலோ, அல்லது வேறு உலக நாடுகளிலோ இல்லை. 22 பாஷைகள் நம்நாட்டில். எனவே குறைந்தது 22 வித கலாச்சாரங்கள். இதில் மதமும் ஜாதியும் புகுத்தும் பிரிவினைகள் வேறு. எப்போது எந்தெந்த விதத்தில் இடையூறு செய்யலாம் என்று நோக்கும் பகைவர்கள் மத்தியிலேயே தமிழகம் மட்டு மல்ல, இந்தியாவும் வாழநேர்ந்திருக்கிறது. இதில் சுற்றுச்சூழல் சீர்கேடும் மாசுபாடும் அளவிறந்துபோய்விட்டன. எது எப்படிப் போனால் என்ன என்று நமது அரசியல்வாதிகள் அனைவரும் சுருட்டியபடி இருக்கிறார்கள். இந்தியாவை என்றோ அமெரிக்கா வுக்கும் மேற்கத்திய வல்லரசுகளுக்கும் எழுதிக்கொடுத்தாகி விட்டது. அண்மையில் அரவிந்த அடிகா எழுதிய நாவல் ஒன்றில் (The White Tiger) மிகத் தெளிவாக முன்வைக்கப்படும் ஒரு கருத்து, “இந்தியாவில் இரண்டு இந்தியாக்கள் இருக்கின்றன. கடலோர இந்தியா வெளிச்சமாக இருக்கிறது. நதியோர இந்தியா இருளில் ஆழ்ந்திருக்கிறது”. (இந்தப் பார்வை முன்பே எனக்குப் பரிச்சயமா னதுதான். இந்தியாவின் விளிம்புப்பகுதிகள் அனைத்தும் முன்னே றியுள்ளன, உள்நாட்டுப்பகுதி பின்தங்கிவிட்டது என்று கூறும் வடநாட்டு அதிருப்திப்பார்வை இது). இப்படிப்பட்ட பிரச்சினைகள் எந்தநாட்டில் இருந்தன? சோவியத் ரஷ்யாவில், சீனாவில், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில், கியூபாவில்-எங்கே?

9. சீனாவில் யேனான் புரட்சி ஏற்பட்டபோது இவ்வளவு பிரச் சினைகளை எதிர் நோக்கவில்லை. இந்தியாவைவிடப் பலமடங்கு பரப்புள்ள சீனாவில் (வேறு ஐந்துமொழிகளும் பல கிளைமொழிக ளும் இருந்தாலும்) மாண்டரின் ஒன்றுதான் அலுவல்மொழி. அதற்குத் தடையோ எதிர்ப்போ கிடையாது. தமிழகத்தில் தமிழ்வழி படிக்கக்கூட நாதிகிடையாது. விவசாயிகளும் கிராமப் புற மக்களும் கூலித்தொழிலாளரும் யாவருமே மனத்தளவில் ஆங்கில அடிமைகளாக – மேட்டுக்குடி எச்சங்களாக மாறியிருக்கி றார்கள். இந்த மனப்பான்மை மாறுவதற்கு எந்தப் புரட்சி உதவும்? மாவோ காலத்துச் செயல்களைப் புகழ்கிறார். ஆனால் மாவோ காலத்திலேயே அல்லது அவர் மறைந்தவுடனே சீனா மாறிவிட் டதற்குக் காரணம் என்ன? சோவியத் யூனியனிலாவது புரட்சி நடந்து பலஆண்டுகள் கழித்து, ஸ்டாலினும் குருஷ்சேவும் போன பிறகுதான் பெரெஸ்த்ரோய்க்கா வந்தது. சீனாவில் உடனே சந்தைச் சோஷலிசம் என்றும் பன்னாட்டு முதலாளித்துவம் என்றும் மாறிப்போனதற்குக் காரணம் என்ன? மார்க்சியம் அவ்வ ளவு பலவீனமானதா, ஒரு தலைவர் போனவுடனே அதுவும் மறைந்து போய்விடுவதற்கு? சுயநலத் தலைவர்களை மட்டுமே நம்பாமல், மக்கள் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல யோக்யதை இல்லாத தத்துவம் எவ்விதத்தில் பயன்தரும்?

10. நெறியும் குறியும் (means and ends) பற்றி நூலில் பல இடங்களில் பேசப்படுகிறது. சரியான நெறிதான் சரியான இலக்கிற்கு அழைத் துச் செல்லும் என்பதுதான் நாகராஜன் கொள்கை என நினைக் கிறேன். நெறி தவறாக இருந்தால், இலக்கும் தவறித்தான் போகும். கத்தி எடுத்தவன் கத்தியாலே மாள்வான், மாந்திரீகம் செய்பவனை அந்த மாந்திரீகமே அழிக்கும் என்றெல்லாம் நமது கிராமப்புறங்களில் பழமொழிகள் இல்லையா? அதுபோல ஆயுத மேந்திய போராட்டம் என்பது சரியான பலனைத் தருவதற்கு வாய்ப்பே இல்லை. இதனை நாகராஜனும் ஏற்கிறார். காந்தியை ஓரிடத்தில் கடுமையாகச் சாடும் நாகராஜன், பல இடங்களில் ஏற்றுக் கொள்கிறார். காந்தி ஒரு சனாதனவாதி. பெரியார் பல முறை சாதியம் பற்றி எழுதிய கடிதங்களுக்கும் அவர் விடையளித்தது கிடையாது. வருணாசிரம தர்மமே நல்லது என்றவர் அவர். அவரிடம் உடன்பாடான விஷயங்கள் இரண்டு தான். ஒன்று நமது நாட்டுக்குப் புதியதல்ல என்றாலும் உலகிற்கு அன்று புதியதாக இருந்த அஹிம்சை வழி. இரண்டாவது பெருந்தொழில்களை, பெரும் ஆலைகளை மறுத்தது. இவ்விரண் டில் மட்டுமே அவரை நாம் இன்று ஏற்க இயலும். எனவே காந்தி-மாவோ இணைவு தேவைதானா என்பதையும் சிந்திக்க வேண்டும்.

11. தத்துவஞானிகள் யாவரும் உலகை மாற்ற நினைத்தனர், மார்க்ஸ் ஒருவர்தான் உலகை மாற்றும் நெறிமுறையைத் தந்தார் என்று பொதுவாகச் சொல்லுவார்கள். நாகராஜன் பழைய தத்துவ ஞானிகள் போலததான் தத்துவம் பேசுகிறார். அவை எதுவும் நடைமுறைக்கு, போராட்டத்திற்கு ஏற்றவையாக இல்லை. சீனா விலும் மார்க்சியம் தோற்றபிறகு மாவோவின் மார்க்சியமும் குறையுள்ளது என்றே நினைக்க வேண்டியுள்ளது. தமிழனுக்குத் தேவையான தனிவகை மார்க்சியம் ஒன்று இன்றைய தேவை. நாகராஜனே சொல்வதுபோல, நமது சித்தர் களும், பழங்கால இலக்கியவாதிகளும் இதை உருவாக்கப் போது மானவர்கள். மாவோ வந்து நமக்கு “அகந்தையை ஒழி” என்று சொல்லவேண்டியதில்லை. சைவ சித்தாந்தம் கூறும் மும்மலங் களில் அழிக்கமுடியாதது, மிகக்கடினமானது ஆணவமலம்தான். அதனை விட்டால்தான் ஈசனை அடையமுடியும். நான்கு குரவர் களில் திருநாவுக்கரசர் தொண்டின் வடிவம். தாசமார்க்கம் எனப் படும் சேவை வழியைக் கடைப்பிடித்தவர். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். எனினும் மேலே நான் சுட்டிக்காட்டியபடி, பக்தி இலக்கியத்தில் கசடுகளும் உண்டு. எச்சரிக்கையாக எடுக்கவேண்டும்.

12. நாகராஜன் மேற்கத்திய மார்க்சியத்தில் அன்பைப் புகுத்தி நோக்குகிறார் என்று சொல்லப்படுகிறது. அன்பு என்பதைவிட அருள் என்றோ மக்கட்பண்பு என்றோ சொல்வது பொருந்தும். ஏனெனில் அறிவு தவறு செய்வதைப் போலவே அன்பும் தவறுசெய்யக்கூடும் என்று வள்ளுவர் சொல்கிறார். “அறத்திற்கே அன்பு சார்பு என்ப அறியார்/ மறத்திற்கும் அஃதே துணை”. தேசத்தின் பெயராலும் சாதியின் பெயராலும் மதத்தின் பெயரா லும் இன்னும் பலவற்றின் பெயராலும் நடக்கும் அட்டூழியங் களுக்கெல்லாம் காரணம் குறுகிய விதத்திலான அன்பே அல் லவா? ஒரு தாய் தன்மகனுக்கு வரதட்சிணை வாங்குவதற்குக் காரணம்கூட அவன் மேலுள்ள அன்பு என்றுதான் சொல்கிறாள். அன்பு குறையுடையது. அருள் குறையற்றது. மக்கட்பண்பு அல்லது மனிதநேயம் என்று வள்ளுவர் போற்றுவது குறையற் றது. “அரம் போலும் கூர்மையரேனும் மரம்போல்வர்/ மக்கட் பண்பில்லாதவர்”. எனவே நாகராஜன் அன்பு என்று பேசுவதற்கு பதிலாக அருள் என்றோ, மக்கட்பண்பு என்றோ குறிப்பிடவேண் டும்.

13. நாகராஜன் கருத்துகளோடு எனக்குப் பெரும்பாலும் உடன்பாடுதான். ஏன் எனில், நான் ஓர் ஆன்மிகவாதி என்று சற்றே தற்பெருமையுடன் சொல்லிக்கொள்ளலாம். வள்ளலாரு டைய ஆன்மநேயக்கொள்கைகளைக் கடைப்பிடிக்கவேண்டும் என்று நினைப்பவன். எனது நோக்கில் நாகராஜனும் முழுஆன்மிக வாதியே. தென்கலை வைணவ ஆன்மிகவாதி.
ஆன்மிகம் என்ற சொல்லை இங்கு வரையறுக்கவேண்டும். மரபாக இது மனிதனுக்கு ஆன்மா என ஒன்று உண்டு, அது அழியாதது, பல பிறப்புகளை அது மீண்டும் மீண்டும் எடுக்கிறது என்ற கொள்கை. நான் கூறும் ஆன்மிகம் இது அல்ல. புல், நெல் முதலாக, தாவரங்கள் முதலாக எல்லா உயிர்களுக்கும் இயற் கையில் ஓரிடம் உண்டு, எனவே அவற்றை மதிக்க வேண்டும், அவற்றைத் தேவையின்றி அழிக்கக்கூடாது. ஒவ்வொரு உயிரும் – அது தாவரமோ, விலங்கோ, புழுவோ, பறவையோ, இன்னும் கேட்டால் பாக்டீரியமோ, வைரஸோ – எதுவாயினும் அழிக்கப் படும்போது இயற்கைச் சீர்குலைவு ஏற்படுகிறது என்பது எனது கருத்து. மனிதனால் ஒரு அமீபாவைக்கூடப் படைக்கஇயலாது (குளோனிங்கை விட்டுவிடுங்கள், அது போலி செய்வது). அப்படி யிருக்கும்போது அழிக்க என்ன உரிமை இருக்கிறது என்று கேட்பது எனது ஆன்மிகம். மற்றப்படி கடவுளிலோ மறுபிறப் பிலோ ஆன்மாவிலோ எனக்கு உடன்பாடு இல்லை.

புழுபூச்சிகள் முதலாகவே அழிக்கக்கூடாது, அவை துன்புறக் கூடாது என்றால், மனிதர்களைக் கேவலப்படுத்துவதோ கொடு மைப் படுத்துவதோ (சாதியின் பெயராலோ, தொழிலின் பெயராலோ, இனத்தின் பெயராலோ) எப்படி ஆன்மிகம் ஆகும்? அதுவும் சமூக முன்னேற்றத்திற்குப் பாடுபடக்கூடிய, நாகராஜனின் சொற்களில் இன்றைய ஆண்டவர்களாகிய, படைப்பவர்களாகிய உழைக்கும் மக்களை உயர்வாகப் போற்ற அல்லவா வேண்டும்? நான் சொல்லும் அர்த்தத்தில் ஆன்மிகவாதி என்பவன் மார்க்சியத்தை (நாகராஜன் கூறும் கீழை மார்க்சியத்தை) முழு அளவில் உடன்பட்டு ஏற்பவனாகவே இருப்பான். தேவையற்ற அழிவு கூடாது என்பதை விளக்கவேண்டும். புல் பூண்டு முதலாக அனைத்தும் உயிர்கள் என்றாலும் நாம் உணவுக்காக ஓரளவேனும் அவற்றை அழித்தே தீரவேண்டும் என்பது இயற்கைவிதி. புல்லை உண்ணாமல் பசுவாலோ, மாமிசம் உண்ணாமல் புலியாலோ ஜீவிக்கமுடியாது. இந்த இயற்கை விதிக்குத் தலைவணங்காமல் நாமும் வாழமுடியாது. “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்ற வள்ளலார் கூட அரிசியுணவையோ வரகையோ பிற தாவரங்களையோ உண் ணாமல் 58 ஆண்டுகள் வாழ்ந்திருக்கமுடியாது.
ஆனால் புலியின் தோலுக்காகப் புலிகளையும் பாம்பின் தோலுக்காகப் பாம்புகளையும், அறிவியல் ஆராய்ச்சி என்ற பெயரில் எத்தனை எத்தனையோ உயிரினங்களையும் அழிப்பது எந்த நேயமாகவும் தோன்றவில்லை. இங்கு அவசியத்திற்கும் ஆடம்பரத்திற்குமான வேறுபாடு வருகிறது. ஆடம்பரத்திற்காக ஏன் அழிக்கிறீர்கள் என்று கேட்டால் “நீங்கள் (அவசியத்திற்காக வேனும்) அழிக்காமலா இருக்கிறீர்கள், இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?” என்று என்னிடம் பலர் வாதம் புரிந்திருக்கிறார்கள். கொல்லாமையை அறத்துப்பாலில் முதன்மை அறமாகப் போற்றும் திருவள்ளுவரும், பொருட்பாலில் “கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல்” என்று சொல்லத் தலைப்படுகிறார். இதுதான் கொள்கைக்கும் நடைமுறைக்கும் உள்ள இடைவெளி. அதனால் வேறு வழியின்றி வர்க்கப்போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டால் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்று சிலர் வாதிட்டுள்ளனர்.

14. Humanism என்ற சொல் மனிதநேயம் என்று தமிழில் தவறாக மொழிபெயர்க்கப்படுகிறது. அதற்கு அர்த்தம் மனிதநேயம் அல்ல, மனிதமையவாதம். மனிதநேயத்தை Humanitarian compassion என்று சொல்லவேண்டும். டே கார்ட்டே, பேகன் முதலாகத் தொடங்கி மனிதனையும் அவனது அறிவையும் மையப்படுத்தும்போக்கு முக்கியத்துவம் பெற்றதல்லவா, அதற்குப் பெயர்தான் ஹ்யூம னிசம் அல்லது மனிதமையவாதம். இதனை நான் முற்றிலுமாக ஏற்பதில்லை. “மனிதன்தான் உலகின் மையம்” என்று சொல்லும் இது, கிறித்துவத்தின் பைபிளில் உள்ள விஷயம். இறைவன் மனிதனைப் படைத்து, “எல்லாவற்றையும் உனக்காகப் படைத்தி ருக்கிறேன், நீ அவற்றை அனுபவிக்கலாம்” என்று கூறியதாகச் சொல்லப்படுகிறது. “உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக” என்ற முதலாளித்துவ சங்கதி இது. புரோடஸ்டண்டு இயக்கம் தோன்றியபிறகுதான் முதலாளித்துவம் உருவாயிற்று. முதலாளித்துவத்தின் சுயநலச் சிந்தனைக்கும் புரோடஸ்டண்டு இயக்கத்திற்கும் உள்ள தொடர்பினைச் சுட்டி மாக்ஸ் வெபர், ‘Protestantism and the Rise of Capitalism’ என்று ஒரு நூலே எழுதி யிருக்கிறார்.

15. அறிவியல் தொழில்நுட்பம் பற்றி நாகராஜன் பேசும் கருத்துகள் எனக்கு மிகவும் உடன்பாடானவை. அறிவியலில் இருவேறு அமைவுகள் உண்டென்பதிலும் ஐயமில்லை. சான்றாக, நமது விவசாயிகள் காலங்காலமாகப் பாவித்துவந்த உரங்கள், விதைகள் போன்றவை அவர்களால் அனுபவமுறையில் நம் சூழலுக்கேற்ற வகையில் அமைந்தவை. ஆனால் பசுமைப் புரட்சி என்றபெயரால் மேற்கத்திய அறிவியலைப் புகுத்தினோம். மருத்துவத்தில் எத்தனையோ விதமான அறிவுச்சட்டகங்கள் (Frameworks or Paradigms of Knowledge) உண்டு என்பது என்றைக்கோ தெளிவான விஷயம். அலோபதி மருத்துவம் மட்டுமே மருத்துவமல்ல. யூனானி, சித்த வைத்தியம், ஆயுர்வேதம், ஹோமியோபதி என எத்தனை மாற்றுச் சட்டகங்கள் உள்ளன? இவை யாவும் உலகை வெவ் வேறு வகைகளில் பகுத்துப்பார்க்கும் பார்வைகள். அதுபோல அறிவியலையும் மேற்குநாட்டு நோக்கில்தான் காணவேண்டும் என்ற அவசியமில்லை. பல்வேறு அறிவுச்சட்டகங்கள் வாயிலாகக் காண இயலும், ஒற்றை அறிவியல் என்பது பாசிடிவிசத்தின் நேர் விளைவு.

16. மார்க்சியம் – எந்த மார்க்சியமாயினும் – சூழலடிப்படையில் மனிதன் உருவாகிறான் என்று பேசுகின்றன. அதில் தவறில்லை. பெருமளவு அப்படித்தான். ஆனால் சிற்றளவிலேனும் மரபணுக்கள்
(ஜீன்கள்) அடிப்படையில் பாரம்பரியப்பண்பு சுமத்தப்பட்டே வரு கிறது. (எனக்கு லைசென்கோவின் மரபியம் தெரியாது). பாரம் பரியப் பண்பில் மாற்றம் மிகமிக மெதுவாக நிகழக்கூடியது. எனவே மக்கள் அனைவரும் திடீரென்று நல்லவர்களாக மாறிவிடுவார்கள் என்று நம்ப ஏது இல்லை. மேலும் புறச் சக்திகளுக்கு மார்க்சியம் தரும் அழுத்தத்தை அகத்திற்கு அளிப்பதில்லை. இங்குதான் ஃப்ராய்டியம், இருத்தலியம், நிகழ்வுவாதம், ஆன்மிகம் எதுவாயினும் தேவைப்படுகிறது. ஆனால் அகத்தைச் சீர்ப்படுத்த இலக்கியம் ஒன்று மட்டுமே உதவும். வேறெதுவும் உதவாது.

17. எனவே நமது கல்விமுறை மாறவேண்டும். அடிப்படை மக்க ளுக்கான கல்வியாக அது அமையவேண்டும். அதில் அறிவியலுக் கும், மனிதவியல்களுக்கும் சமபங்கு அளிக்கவேண்டும். அதே போல அறிவியல் தொழில்நுட்பமும் மாறவேண்டும். இவற்றில் ஐயம் இல்லை. ஆனால், கல்விச்சூழல் மாறி நல்ல மக்களை உருவாக்கி, மரபணுக்களும் சில தலைமுறைகளிலேனும் ஓரளவு மாற்றம் பெற்று, நல்ல மனிதர்கள் உருவானபின்னர்தான் நாகராஜன் கூறும் போராட்டத்தைச் செய்யமுடியும். இதற்குச் சிலநூறு ஆண்டுகளேனும் தேவை. ஆனால் ஒரு நூறு ஆண்டு களேனும் உலகம் இருக்குமா என்ற தீவிரமான கேள்வியைச் சுற்றுச்சூழலியம் எழுப்புகிறது.

18. இந்தநாட்டை வர்க்கப் புரட்சியினாலோ, பெண்களின் சுற்றுச் சூழல் புரட்சியினாலோ, எதனாலுமோ காப்பாற்றமுடியும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. ஏனெனில் எல்லாவற்றிற்கும் மக்களைக் கருத்தடிப்படையில் திரட்டவேண்டும். நடிகைகள் குத்தாட்டம் போடுகிறார்கள் என்றால் ஒருவேளை நம் இந்தியர்கள் லட்சக் கணக்கில் திரளக்கூடும். அல்லது கிரிக்கெட் பார்ப்பதற்குத் தொலைக்காட்சிமுன்னால் லட்சக்கணக்கில் ஒரே சமயத்தில் உட்கார்ந்திருக்கக்கூடும். பிறஎதற்கும் – குறிப்பாகப் போராட்டத்திற் குத் திரளமாட்டார்கள். மக்களின் மனப்பாங்குகள் மாறிவிட்டன. எல்லாரும் முதலாளிகளோ இல்லையோ, முதலாளித்துவ மனப் பான்மைகள் இந்தியாவில், தமிழகத்தில் முற்றிலும் ஊறியிருக் கின்றன. இந்த விதத்தில் நமது அரசியல் கட்சிகளின் நோக்கம் மிக நன்றாக ஈடேறி யிருக்கிறது. முதலாளித்துவ விளம்பரங்க ளின் நோக்கமும் முற்றிலும் ஈடேறியிருக்கிறது.

உடலில் ஏதோ ஓரிரு பாகங்கள் நைந்திருந்தால் வைத்தியம் செய்யலாம். உடல் முழுவதுமே புரையோடி அழுகிப்போன பிறகு என்ன செய்வது? இன்று இந்தியாவும், தமிழகமும் முற்றிலும் புரையோடி அழுகிப்போய்விட்டன. நாகராஜன் கூறும் கீழை மார்க் சியமெல்லாம் இன்று உதவும் என்று தோன்றவில்லை. அதனால் தான் நாகராஜனுக்கு நம்பிக்கை அதிக அளவில் இருக்கிறது என்று முன்பு சொன்னேன். இன்னும் பத்துப்பதினைந்து ஆண்டு கள்கூட இந்தியா பிழைத்திருக்கும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. பத்தாண்டுகள் கழித்துத் தமிழகத்தில் குடிப்பதற்குத் தண்ணீர் தடையின்றிக் கிடைக்கும் என்று எவரேனும் உறுதி யளிக்கமுடியுமா? தமிழகத்தில் விவசாயிகள், அடிமட்டத் தொழிலாளிகள் ஏதோ சம்பாதித்துக்கொண்டு உயிரோடாவது இருப்பார்கள் என்று உறுதிகூற முடியுமா? ஜாதிக்கொடுமைகள் ஒழியும் என்று சொல்லமுடியுமா? பெரும்பான்மை மக்களின் வறுமை ஒழிந்து வாழ்க்கை சீர்ப்படும் என்று கூறமுடியுமா? பெருமுதலாளித்துவம் ஓரளவாவது கட்டுப்பட்டு, இயற்கை வளம் பெறும் என்று சொல்லமுடியுமா? இப்படியெல்லாம் உறுதி கூறுபவர்கள் இருந்தால், பிறகு கீழை மார்க்சியம், இந்திய மார்க்சியம், தமிழக மார்க்சியம் யாவற்றையும் பற்றி நாம் பேசலாம்.

19. ஒரேஒரு நம்பிக்கை இருக்கிறது. உலகின் எல்லாப்பகுதிகளும் இன்று ஒன்றோடொன்று பிணைப்புண்டிருக்கின்றன, ஒருநாடு அழிந்தாலும் உலகம் முழுவதும் அழியும் என்ற எண்ணத்தி னால்தான் இந்த நம்பிக்கை வருகிறது. தமிழகம் அழிந்தால் தமிழகம் மட்டும் அழியாது, இந்தியா முழுதும் பாதிக்கப்படும். இந்தியா அழிந்தால், உலகமே அழியும் நிலை ஏற்படும் என்று ஓரளவு நம்பலாம். ஆனால் அண்மை நிகழ்வுகள் இதிலும் மண்ணை அள்ளிப் போடுகின்றன. தமிழினமே அழிந்தாலும் சரி பரவாயில்லை என்று உலகநாடுகள் இருக்கவில்லையா? பாலஸ் தீனப்போராளிகள் அழிந்தாலும் இஸ்ரேலை எப்படியேனும் காப்பாற்ற வேண்டும் என்று மேற்கு முயல வில்லையா? அது போல இந்தியா போன்ற ஏதேனும் ஒருநாடு அழிந்தாலும் பரவாயில்லை எனப் பிறநாட்டினர் கருதிவிட்டால் என்னஆகும்?

20. 2020இல் இந்தியா வல்லரசாகும் என்று பழைய குடியரசுத் தலைவர் பாடிவந்தார். ஆம், ஒருவேளை வல்லரசாகலாம். இந்தியாவில் இரண்டு சதவீத முதலாளிகள் உலகிலேயே பெரும் பணக்காரர்களாகத் திகழ, பிறயாவரும் பிச்சையெடுக்க அல்லது மடிய, இந்தியா பெரும்பணக்கார நாடுகளில் ஒன்றாக இருக்கக் கூடும்.
“குப்பையையும் மலத்தையும் நீக்கும் அழுக்குப் படிந்த கைகளே தூய்மையான கைகள். இத்தகைய பணியில் ஈடுபட்டுள்ள தாழ்த் தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மற்றும் மலைவாழ் மக்களும் பெண்க ளுமே இனி மாந்தஇனத்தை, மறுமலர்ச்சியை உருவாக்கப் போகின்றார்கள்” என்று எஸ்.என்.என் இந்நூலின் ப.368இல் குறிப் பிடுகிறார். அப்படி நடந்தால் நல்லதுதான். ஆனால் இந்த நம்பிக்கை மனத்தில் உதயமாகப் பெரும்பிரயத்தனம் தேவைப் படுகிறது.

சமூகம்