ஆகாசம் நீலநிறம்

ஆகாசம் நீலநிறம்

(இந்தக் கட்டுரை, கவிஞர் விக்ரமாதித்தனின் ‘ஆகாசம் நீலநிறம்’ என்ற கவிதைத் தொகுதியை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துமுகமாக, 1983ஆம் ஆண்டு யுரேகா என்ற சிற்றிதழில் எழுதப்பட்டது.)

மல்லார்மே என்ற ஃபிரெஞ்சுக் கவிஞரின் நண்பர் ஒருவர், அவர் எந்த அனுபவத்தைக் கொண்டு எழுதுகிறார் என்று கேட்டாராம். கவிதை எழுதுவதற்கு அனுபவம் முக்கியமில்லை, வார்த்தைகள்தான் முக்கியம் என்று மல்லார்மே கூறினாராம். யேட்ஸ் என்ற ஆங்கிலக் கவிஞர்கூட, ‘தரிசனம்’ என்ற ஒரு தத்துவ நு£லைத் தாம் உருவாக்கியதுகூட, அந்த நூல் தனக்கு கவிதை எழுதுவதற்குப் படிமங்களைத் தருவதற்கே என்றார் என ஒரு கதை உண்டு. ஒரு கவிஞன், ஒரு தத்துவத்தையோ ஒரு கொள்கையையோ எழுதவேண்டுமென்ற நிர்ப்பந்தம் கிடையாது. அவனுக்கு அடிப்படை சுயநிர்ப்பந்தம்தான். அவன் தன்இச்சைப்படி எதைப் பற்றியானாலும் எப்படிவேண்டுமானாலும் எழுதவேண்டும் என்ற கருத்துப்பட ராபர்ட் ஃப்ராஸ்ட் என்ற அமெரிக்கக் கவிஞர் கூறியிருக்கிறார். ஒரு படைப்பு நமக்கு இன்பத்தைத் தருவது, அது ஒரு சன்மார்க்கக்கருத்தைக் கூறுவது என்பதாலோ அல்லது ஒரு அரசியல் கொள்கையை வற்புறுத்துவது என்பதாலோ அல்ல.

எந்தப் படைப்பும் தன் கட்டமைப்பின் சிறப்பினால், நடை உயர்வினால், அதை எழுதிய ஆசிரியரின் பிரத்தியேகப் பார்வையால், நமக்கு ஒரு கலை இன்பத்தைத் தருகிறது. இந்த அடிப்படைகளுக்குஅரசியல், தத்துவம், எந்த விஷயமும் பயன்படுத்தப்படலாம். இன்னும் தெளிவாகக் கூறினால், கவிதைப் படைப்புக்கென இவை இங்குவந்து சேர்ந்திருக்கின்றனவே அன்றி, இவற்றிற்காகக் கவிதை பயன்படுத்தப்படுவதில்லை. தாஸ்தாயேவ்ஸ்கி ஒரு நூலில் கூறியதுபோல, “வாழ்க்கையின் எந்த அவமானத்தையும்விட வாழ்க்கைதான் முக்கியம்”.

விக்கிரமாதித்தன் தன் கவிதைகளில் தன் அனுபவத்தை கலைவடிவமாக மாற்றியிருக்கிறார். அந்த அனுபவங்கள் கசப்பாக இருக்கலாம் என்பது வேறு. இந்த அடிப்படையில் நோக்கும்போது விக்ரமாதித்தன் என்ற கவிஞரின் கருத்தியல்கள் அல்லது கொள்கைகள் யாவை என்பது பற்றிய கேள்விகள் இலக்கிய விமரிசனத்திற்குப் பொருத்தமற்றவைதான். ஆனால் தமது வாழ்க்கைப் பார்வைகள் அல்லது தன்மைகள் அனைத்தும் ஒருசேர விகற்பமின்றி இணையுமாறு சில உத்தமமான கவிதைகளை அவர் நமக்குத் தந்திருக்கிறார். அவர் வாழ்க்கையின் கசப்பு அவர் கவிதையில் எவ்வளவு இன்பமாக நாம் சுவைக்குமாறு ஒலிக்கிறது என்பதற்கு ஓர் உதாரணத்தை நாம் பார்க்கலாம்.
கற்றுக் கொண்டு விட்ட தமிழ்
கவிதை எழுத மட்டும் உதவும்
இம்மாதிரி வரிகளால்தான் விக்ரமாதித்தன் என்ற ஒரு மனிதரைப் பற்றி நாம் யோசிக்க முடிகிறது. அவர் வாழ்க்கையின் பார்வையில் தத்துவ, அரசியல், மதச்சார்பான கொள்கைகள் எல்லாம் பின்தள்ளப்பட்டு, ஒரு கவிஞரின் பார்வை – தன்னளவில் வாழ்க்கையை நுட்பமாக, ஆழமாக, விரிவாகப் பார்த்தவிதம் நமக்கு ஒரு சிறந்த கலையின்பத்தைத் தருகிறது. இங்குதான் அவர் கவிதை வெற்றி பெறுகிறது. இதுவும் காலம் காலமாக ஒலிக்கும் குரல்தான். இதற்கு ஒத்த குரலை மூன்று நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த இராமச்சந்திரக் கவிராயரிடமும் கேட்கலாம். ஆயினும் கவிஞனிடம் அந்தந்தக் காலத்துக்கேற்ற தன்மைகளும் ஒலிக்கவே வேண்டும்.

‘எப்பவுமே ரசனை கெட்ட மனிதர்கள்’  ‘திசை முடிவுக்குத் தெரிவதெல்லாம் ஆகாசம் நீலநிறம்’  என்றெல்லாம் வருணிக்கும்போது அதனைக் காண்கிறோம்.

சிதைவுகள் என்ற கவிதையில் கவிஞரின் நுண்ணிய மென்மையான மன இயல்பு வெளிப்படுகிறது.

லௌகீக வாழ்க்கை நெருக்கடியில்
மனசின் பாஷையை
யார் புரிந்துகொள்ளப் போகிறார்கள்

நண்பா, இனிமேல் எந்த சூரிய சந்திரன்
என்னைப் பூக்க வைக்கும்?
எனக்கில்லை
என் சந்ததிக்கேனும்
தப்பித்தல் அல்லாமல்
விடுதலை எப்போது பூக்கும்?

நிலை என்ற கவிதையில் இப்படிச் சொல்கிறார்:
மலையேறும் வாழ்க்கையில்
மகா உன்னதம் தேடி என்ன லாபம்?

மொழியைக் கையாள்வதிலும் கவிஞர் சம்பிரதாயங்களை- இது சரி, இது தவறு என்ற வரையறைகளை உடைத்தெறிந்துவிட்டு அனுபவத்தினுடைய அடிநிலையான மூர்க்கத்தன்மையுடன் வெளிக்காட்டிவிடுகிறார்.

வாழ்க்கை
தேவடியாளின் வக்கிரத்துடன்
இருத்திவைத்திருக்கிறது
மிக உதாசீன பாவத்துடன் (கேஷுவலாக) எழுதப்பட்ட இந்தத் தொடர், பொருளில்லார்க்கு வாழ்க்கை வசீகரமாக இருப்பதில்லை என்ற தரிசனத்தையும் உட்கொண் டிருக்கிறது.

புதுக்கடன் கேட்கும்போது
பழைய கடனை ஞாபகப் படுத்துவான்
பெட்டிக்கடைக் கருப்பையா
இந்தக் கவிதையிலும் ஒரு கசப்புத் தெறிக்கிறது. கடனில்லாமல் வாழமுடியாது என்ற நிலை வந்தபின் கடனுக்குமேல் கடன் கேட்காமல் மனிதன் என்னதான் செய்ய முடியும்?

கவிதையின் உருவ அமைப்பைத்தான் அதன் கட்டுக்கோப்பு என்கிறோம். ஒரு கவிதையின் பகுதிகள் எவ்வாறு இணைகின்றன, அவற்றின் ஆரம்பம், நடு, இறுதி இவைகளிடையே நிகழும் இயக்கம் எவ்வாறு செல்கிறது என்பது கட்டமைப்பு. இந்தப் புற அமைப்பின்பின்னால் கவிஞர் மனத்தின் நுடபமான இயக்கத்தை நாம் காணலாம். தட்சணாமூர்த்தியாக, ஏகாதசி, ஸ்வயம்புகள் என்ற கவிதைகளில், கவிதை கடைசியிலிருந்து தொடர்ந்து தலைப்புடன் முடிந்து ஒரு மண்டலமிட்டுக் கிடக்கும் பாம்புபோல் (பழங்காலச் சித்திரக்கவிதைபோல்) தோற்றமளிக்கிறது. ஆகாசம் நீலநிறம் என்ற கவிதையில், திசைகள் அனைத்தும் உள்பரவி, பலபடியாகத் தொடர்ந்து, கடைசிப்பகுதியில் அவை சுவடு தெரியாமல் மறைந்துவிடுவதைப் பார்க்கலாம். இந்தக் கட்டுக்கோப்பே கவிதையில் சொல்லப்படும் அனுபவத்தின் வீச்சையும் ஆழத்தையும் பலதளங்களுக்குக் கொண்டுசெல்கிறது.

பார்வை என்ற கவிதையில் சிகரெட் நுனி, முக்கால் சிகரெட் என்ற படிமங்களில் நுட்பமான அமைப்பின்மூலம் பார்வை என்ற அனுபவத்தை மறைமுகமாகக் காட்டுகிறார் கவிஞர். இதைப்போலவே கடல் என்ற குறுங்காவியக் கட்டத்தில் வேலை இல்லாதவன் என்ற தொடங்கும் கவிதை, அதன் கடைசி அடியான ‘ஓயாத காற்று’ என்ற சொற்றொடர் மூலம் உச்சகட்டத்தை அடைந்துவிடுகிறது. கண்ணாடியில் தெரியும் கவிதை என்ற மூன்று அடிக் கவிதையில் கண்ணாடி என்ற சொல் மூன்றுமுறை திரும்பிவருவதில் அடிக்கு அடி அதன் அர்த்தம் திசைதிரும்பி ஒரு முழுமை அடைகிறது. ‘இருட்டுக்கு நட்சத்திரங்கள் நிறைய’ என்று தொடங்கும் கவிதையின் கட்டுக்கோப்பைப் பார்க்கும்போது கவிதை முடியாமல் இருப்பது அதற்கு அர்த்தமில்லை என்று தோன்றவைக்கக்கூடும். ஆனால் ஈடுபாட்டுடன் வாசிப்பவர் களுக்கு அதன் அர்த்தம் வயப்படும்.
விக்ரமாதித்தன் கவிதைகளில் யாப்பில்லை என்றாலும் நுட்பமான ஓசை இருககிறது. சான்றாக
சிதைவும் சீரழிவும் கலைஞனுக் கில்லை

எனக்கில்லை
என் சந்ததிக்கேனும்
விடுதலை எப்போது பூக்கும்

வொத்தையடிப் பாதையிலே
வொரு சுவடும் மிச்சமில்லை

என்ற கவிதைகளின் ஒலியமைப்பைக் காணலாம்.

சாதாரணமாக மொழி நமது அன்றாட வாழ்க்கை அவசியங்களுக்கும் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கும் பயன்படும் அளவுக்கு அனுபவத்தின் நுணுக்கத்தையும் ஆழத்தையும் பிறருடன் பகிர்ந்துகொள்ள உடன்படுவதில்லை. இது கவிஞனுக்கும் ஒரு பிரச்சினையாகத்தான் இருக்கிறது. இதற்காகவே கவிஞர்கள் வெவ்வேறு ஆளுமைகள் கொண்ட, வெவ்வேறு தன்மைகள் கொண்ட வட்டார வழக்குகள் போன்றவற்றையும் ஆளுகிறார்கள். மொழியைக் கடந்துசெல்வதையும் மொழியை வைத்துக்கொண்டுதான் செய்யவேண்டியிருக்கிறது. கவிஞன் தனது மொழியை மொழி மூலமாகவே படைக்கின்ற அனுபவம் வெற்றிபெறுகையில் அப்படிப்பட்ட அனுபவமில்லாதவர் களுக்கு அது ஒரு பிரமிப்பையும் விளைவிக்கலாம். ஆனால் வெற்றி பெற்றவையில்கூட அனுபவத்தின் எல்லையும் ஆழமும் முழுமையாக வெளிப்படுகின்றனவா என்பது ஐயத்திற்குரியது.

கலாப்ரியா, கல்யாண்ஜி, விக்ரமாதித்யன் போன்றவர்களின் மொழி வட்டாரப் பேச்சுத் தமிழின் வேகத்தினால் வகை செய்யப்பட்டு வெளியீடு பெற்றவை. அடிப்படைகள்கூட, காலப்போக்கில் வெவ்வேறுவிதமாக மொழி பார்க்கப்படுவதால் அதற்கு ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுத்துவிடுகின்றன. உருவமும் உள்ளடக்கமும் வேறுபிரிக்கமுடியாமல் பிணைந்துபோகையில் சம்பிரதாயமான பார்வைகளிலும் ஒரு கலைப்பூர்வமான விளைவு ஏற்படுகிறது. ஆகவே, உருவத்தையும் உள்ளடக்கத்தையும் வெவ்வேறாகப்பிரித்து விக்ரமாதித்தன் கவிதைகள் பொருளாதார நெருக்கடியில் மனிதன் உறும் அவஸ்தைகளைச் சித்திரிக்கின்றன என்று பொருளை மட்டும் பாராட்டுவதில் அர்த்தம் இல்லை.

விக்கிரமாதித்தன் கவிதையின் மொழி திருநெல்வேலித் தமிழ். அதிலும் திருநெல்வேலிப் பிள்ளைமார் தமிழ் என்று சொல்லலாம். இந்தப் பிள்ளைமார் தமிழ் என்ற பேச்சுத் தமிழில் இடம்பெறும் தமிழ்ச் சொற்கள் பெரும்பாலும் கவிதையின் கட்டுக்கோப்புடன் முரணில்லாமல் இயைந்து கவிதைகளுக்கு ஒரு வேகத்தைக் கொடுத்து விடுகிறது. இதற்கு நூற்றுக்கணக்கான சொற்களை உதாரணம் காட்டலாம். மேலும் கவிஞருடைய பிரக்ஞையை மீறி, அவர் பாரம்பரியத்தின் இயல்பான சில மதச்சார்பான சொற்களுடன் அவை இயைந்து புதுப்புது அர்த்தங்களை உருவாக்கிவிடுகின்றன.

ஒவ்வொரு கலைஞனும் கடவுளுக்குப் போட்டியாகப் படைப்புத் தொழிலைச் செய்கிறான் என்று சொல்கிறார்கள். கடவுள் படைத்த உலகிற்கு, வாழ்விற்கு, திட்டவட்டமாக, தீர்மானமாக, இதுதான் உலகம், இதுதான் வாழ்க்கை என்று அர்த்தம் கூறமுடியாது. அது போலத்தான் படைப்பும்.

திறனாய்வு