ஆதிக்கக் கலாச்சாரம்-பகுதி 1

ஆதிக்கக் கலாச்சாரம்

(இந்த நீண்ட கட்டுரை, இருபத்தைந்து ஆண்டுகளுக்க முன்பு 1990இல் எழுதப்பட்டது. திருச்சி செயின்ட் பால்’ஸ் செமினரி (புனித சின்னப்பர் குருத்துவக் கல்லு£ரி) நடத்துகின்ற அன்னம் இறையியல் சிற்றேடாக (ஏடு 3, சிற்றேடு 3)ஆக வெளிவந்தது.

(ஏட்டிலுள்ள குறிப்பு: தமிழ் இறையியல் மன்றம், தமிழ்க் கத்தோலிக்க எழுத்தாளர் பேரவை, பண்பாடு-மக்கள் தொடர்பகம் ஆகிய மூன்று அமைப்புகளும் இணைந்து அன்னம் சிற்றேட்டினைத் தயாரிக்கின்றன. தொடர்பு முகவரி: மேலாளர், புதிய வைகறை, பெஸ்கி கல்லு£ரி, திண்டுக்கல்)

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் எழுதிய கருத்துகள் இன்றும்கூட சற்றும் மாறவில்லை, தமிழக நிலைமை அன்றிருந்ததைவிட மிகமோசமாகத்தான் மாறியிருக்கிறது என்பதை இன்று கண்கூடாகக் கண்டுகொண்டுதான் இருக்கிறோம். அதனால் பயன் கருதியே இந்தக் கட்டுரை வெளியிடப்படுகிறது. நீளம் கருதி மூன்று பகுதிகளாகப் பிரித்து வெளியிடப்படுகிறது.

ஆதிக்கக் கலாச்சாரம்-பகுதி 1

ஃ உலகில் மிகவும் தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று; அதேசமயம் உலகில் மிகவும் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாகவும் இந்தியா இருக்கிறது.

ஃ மத்திய அமைச்சர் முப்தி முகமத் சையத்தின் ஒருநாள் செலவு ரூ.7180.நமது மத்திய அமைச்சர்கள் 19 பேருக்கு ஓர் ஆண்டிற்கான செலவு ரூ.1.10 கோடி (இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்னால் என்பதை நினைவில் கொள்ளவும். இன்றைய மதிப்புக்கு இதை நீங்கள் நு£றால் பெருக்கிக்கொள்ளலாம்.) (இந்தியன் எக்ஸ்பிரஸ் 10-02-90)

ஃ நாள் ஒன்றுக்கு ஒரு டாலருக்கும் (ரூ.17 அப்போது) குறைவான வருமானம் பெறுபவர்கள் உலகில் 110 கோடி. இதில் 31.5 கோடி மக்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள். (உலக வங்கி அறிக்கை 16-07-90, இந்து இதழ்)

ஃ லண்டனில் சண்டே டைம்ஸ் வெளியிட்டுள்ள பிரிட்டனின் பணக்காரர்கள் பட்டியலில் நமது நாட்டைச் சேர்ந்த இந்துஜா குடும்பம் 11ஆம் இடம் பெற்றுள் ளது. இவர்களின் சொத்து மதிப்பு ரூ.3200 கோடி (இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்). பட்டியலில் உள்ள இதரப் பெரும் பணக்காரர்களில் பலர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். (இந்து நாளிதழ், 09-04-90).

ஃ 1989ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி, இநிதயாவின் அந்நியக்கடன் ரூ, 69681 கோடி. (இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ், 04-04-90).

அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி
அதன் அருகினில் ஓலைக் குடிசை கட்டி
பொன்னான உலகென்று பெயருமிட்டால்
இந்த பூமி சிரிக்கும், அந்த சாமி சிரிக்கும் (இன்றும் ஒலிக்கின்ற பிரபல திரைப்படப் பாடல்).

இந்தியாவின் பொருளாதார நிலையில் மக்களிடையே எவ்வளவு கடும ஏற்றத் தாழ்வுகள் என்பதை மேலே கொடுக்கப்பட்டுள்ள செய்திகள் ஓரளவு காட்டும். சமமமான பொருளாதார வாய்ப்புகள் அற்ற ஒரு நாட்டில் மக்கள் சம அந்தஸ்தோடு எப்படி வாழ முடியும்?

வெகுசனத் தொடர்புச் சாதனங்கள் வாயிலாக ஒருபக்கம் தனிமனிதன் ஒழுக்கமாக வாழவேண்டும் என்ற மேலோட்டமான போதனை நடக்கிறது. அதேசயம் நமது தலைவர்களின் ஊழலும் ஒழுக்கக்கேடும் சந்தி சிரிக்கிறது. இதில் கட்சி வேறுபாடுகள் இல்லை. ராஜீவ் காந்தியின் ஊழல்களை விளம்பரப் படுத்தி ஆட்சிக்கு வந்த ஜனதா தளத்தில் தேவிலால் சௌதாலாக்கள் இல்லையா? குடிக்க வேண்டாம் என்று ஒரு பக்கம் தமிழக அரசு விளம்பரம் செய்து கொண்டே தமிழ்நாட்டில் பாக்கெட் சாராயம் விற்பனை ஆகிறது
(மீண்டும் இந்தக் கட்டுரை 1990இல் எழுதப்பட்டது என்பதை அன்புகூர்ந்து நினைவில் கொள்ளுங்கள்).

கள்ளக்கடத்தல் மன்னர்களின், கள்ளச் சந்தைக் காரர்களின், சாராய வியாபாரிகளின் சட்டைப் பைக்குள் நம் அரசியல் தலைவர்கள். ஆட்டோ சங்கர் முதலிய கொலைகாரர்களின் பாக்கெட்டுகளுக்குள் நம் அரசாங்க அதிகாரிகள். ஆனால் இந்த அரசாங்கம் தனிமனிதனைப் பார்த்து போதனை செய்கிறது, “வன்முறை கூடாது, நல்லவனாக வாழ்” என்று.

கண்ணகி சிலையின் கீழ் ஆபாச போஸ்டர்கள். விபசாரம் நடக்கிறது. விளம்பரத் திற்காக பம்பாயிலிருந்து விலைமாதர்களை விடுதலை செய்து அழைத்து வருகிறது தமிழக அரசு. விபசாரத்தையே ஒழித்துவிட்டால் நல்லதுதான். ஆனால் ரெட்லைட் பகுதி பம்பாயில் மட்டும்தான் இருக்கிறதா? இங்கே தமிழகத்தில் சேலம் போன்ற சிறு நகரங்களிலும் நாறுகிறதே அதைப்பற்றிக் கவலை இல்லையா? இதுதான் இன்றைய கலாச்சாரம். கோளாறு எங்கே இருக்கிறது?

அமைப்புக் கூறுகள்
சமூகம் பல கட்டுமானங்களால் ஆகியது. பொருளாதாரம், சமுதாயம், சாதி, அரசியல், கலாச்சாரம் (இதில் மதம், கல்வி, கலை, இலக்கியங்கள் ஆகிய யாவும் அடங்கும்) ஆகிய தளங்களைக் கொண்டது. இவற்றில் பொருளாதாரக் கட்டுமானம்தான் அடிப்படை என்றார் கார்ல் மார்க்ஸ். பிற யாவும் அதன் மேல் அமைந்தவை. ஆகவே அவற்றை மேற்கட்டுமானங்கள் என்றார். பொருளாதாரம் என்ற அடிக்கட்டுமானமே பிற யாவற்றையும் பாதிக்கிறது என்பது அவரது கருத்து.

பொருளாதாரமே இறுதியில் மனிதனின் வாழ்நிலையை நிர்ணயித்தாலும், சமுதாய அரசியல் கலாச்சார மேற்கட்டுமானங்களும் ஓரளவு சுயநிர்ணயத்தோடு இயங்கி மனிதனின் வாழ்நிலையை பாதிக்கின்றன. மேலும், பொருளாதாரம் மட்டும்தான் சமுதாய, அரசியல், கலாச்சார நிலைகளை பாதிக்கிறது என்றில்லை. கலாச்சாரமும் கீழ்நோக்கி இயங்கி, பொருளாதார அமைப்பை பாதிக்கிறது. இப்போதுளள ஏற்றத் தாழ்வான சமூகத்தை மாற்றி சமத்துவ இந்தியாவை உருவாக்க வெறும் பொருளாதாரப் புரட்சி, அரசியல் புரட்சி நடந்துவிட்டால் போதாது. அடிப்படையில் அது ஒரு கலாச்சாரப் புரட்சியாகவும் அமையவேண்டும். பொருளாதார, அரசியல் மாற்றங்களை உள்வாங்கி ஏற்றுக்கொள்ள கலாச்சார மாற்றம் தேவை.
நமது வாழ்நிலையை ஓரளவு பாதித்துள்ள கலாச்சாரம், அடிக்கட்டுமானமாக இருக்கும் பொருளாதார அமைப்பையும் நியாயப்படுத்தி வருகிறது. எனவே கலாச்சாரம் பற்றிய ஆய்வு இன்று மிகவும் தேவையான ஒன்று.

மதம், கல்வி ஆகிய கலாச்சாரக் கூறுகள் பற்றி அன்னம் ஏடுகளில் ஏற்கெனவே கட்டுரைகள் வெளிவந்துள்ளன. இந்த ஏடு பொதுவாக ஆதிக்கக் கலாச்சாரம் பற்றி நோக்குகிறது. கலாச்சாரம் என்னும்போது முக்கியமாகக் கலை இலக்கியங்களும் அவற்றோடு தொடர்புடைய வெகுஜனச் சாதனங்களும் எடுத்துக்கொள்ளப் படுகின் றன.

கலாச்சாரம்
கலாச்சாரம் என்ற சொல் பலருககுப் பலவிதமான அர்த்தங்களைத் தரக்கூடும். இசை, நாட்டியம், இலக்கியம், ஒவியம் போன்ற நுண்கலைகள் சம்பந்தப்பட்டதுதான் கலாச் சாரம் என்று நினைப்பவர்கள் இருககிறார்கள். இச்சொல்லுக்குச் சமமாக பண்பாடு என்ற து£யதமிழ்ச் சொல்லும் ஏறத்தாழ ஐம்பதாண்டுகளாக வழக்கில் இருக்கிறது. மனம் பண்படுவது அல்லது ஒழுக்க சம்பந்தமானதுதான் பண்பாடு என்பவர்கள் உண்டு. கலாச்சாரம் என்ற சொல்லுக்கு இந்த அர்த்தங்கள் இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால் இவற்றை உள்ளடக்கிய, இன்னும் பரந்த அர்த்தத்தில் இந்தச் சொல் இன்று மானிடவியல், சமூகவியல் ஆகிய அறிவுத் துறைகளில் ஆளப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் அனைவரின் உணவு, உடை, பழக்க வழக்கங்கள், சடங்குகள், சமயம், கலை, பிற வாழ்நெறிகள் ஆகிய அனைத்தும் கலாச்சாரம் என்பதில் அடங்கும். இவ்வாறு பார்க்கும்போது, கலாச்சாரம் என்பது வெறும் கலை, ஆச்சாரம் மட்டும் அன்று, ஒரு சமூகத்தின் அக, புற விஷயங்கள் அனைத்தையும் குறித்து நிற்பதாக அமைந்திருக்கிறது.

கலாச்சாரம் என்ற சொல்லோடு எத்தனையோ அடைமொழிகள் சேர்த்து, பலவேறு விஷயங்கள் குறிக்கப்படுகின்றன. வெகுஜனக் கலாச்சாரம், கும்பல் கலாச்சாரம், பிரபல கலாச்சாரம், மேல்மட்டக் கலாச்சாரம், ஆதிக்கக் கலாச்சாரம், மாற்றுக் கலாச்சாரம் எனப்பல. டாமினன்ட் கல்ச்சர் அல்லது ஆதிக்கக் கலாச்சாரம் என்ற சொல்லுக்குச் சமூகவியல் அகராதிகள் பெரும்பான்மையோரால் கைக்கொள்ளப்பட்டு வரும் கலாச்சாரம் என்றே அர்த்தம் சொல்கின்றன. எந்த ஒரு சமூகத்திலும், இன, மத, சாதி, பால் வேறுபாடுகளைக் கடந்து, பெரும்பான்மையான மக்கள் ஒரேவிதமான சிந்தனைப்போக்கு, பழக்கவழக்கங்கள் ஆகியவற்றிற்கு ஆட்பட்டிருப்பதைப் பார்க்கலாம். இவர்களது சிந்தனை செயல்களை நாம் ஆதிக்கக் கலாச்சாரப் போக்கு கள் என்று சொல்லலாம். இதற்கு எதிரான போக்கு, ஒரு சிறுபான்மையோரால் ஆதிக்கக் கலாச்சாரத்துக்கு எதிராகக் கடைப்பிடிக்கப்படும் சிந்தனை, செயல், போக்குகள் மாற்றுக் கலாச்சாரம் என்று அழைக்கப்படுகிறது.

ஆளும் கலாச்சாரம் அல்லது ஆதிக்கக் கலாச்சாரம் என்ற சொல்லுக்கு இருவித அர்த்தங்கள் உண்டு. ஒன்று மேலே கூறியதுபோலப், பெரும்பான்மையோரால் கடைப் பிடிக்கப்படும் கலாச்சாரம். மற்றொன்று, இந்தக் கலாச்சாரக் கூறுகள், ஆதிக்க சக்திக ளால், பிற யாவர்மீதும், அவர்கள் சிந்தனைப் போக்கின்மீதும், குறிப்பாக உருவாகும் இளஞ்சிறார்மீதும் கட்டுப்பாடு செலுத்துமாறு, கலாச்சாரக் கருவிகள்மூலமாகத் திணிக் கப்படுகின்றன. அதேசமயம் அந்தச் சமூகத்தின் பெரும்பான்மையான மக்களும், வளரும் பருவத்தினரும் தங்கள் மேல் இவை திணிக்கப்பட்டதாக உணரா வண்ணம், அவர்கள் விரும்பி ஏற்றுக் கொள்ளுமாறு அவர்கள் மனத்தின் மேல் ஆதிக்கம் செலுத் துமாறு கவர்ச்சியாக அவை தரப்படுகின்றன. இந்த அர்த்தத்தில் நம் மனத்தின்மீது, கட்டுப்பாடு/ஆளுகை செலுத்தக்கூடிய கலாச்சாரம் என்றும் பொருள்படுகிறது. இந்த இரண்டு அர்த்தங்களும் ஒருங்கு செல்லக்கூடியவை என்றாலும, இரண்டாவதாகக் கூறப்படும் அர்த்தமே முக்கியமானது.

தமிழ்க் கலாச்சாரம்
பொதுவாக இந்திய ஆதிக்கக் கலாச்சாரம் என்று பார்ப்பதற்கு முன்னர் தமிழ்க் கலாச் சாரம் என்பதன் சாரத்தைக் கொஞ்சம் பார்ப்போம். தேசியக் கவிஞரான நாமக்கல் கவிஞர், தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு என்று பாடினார். நம் தமிழ்ச் சமுதாயத்தின் ஆதிக்கக் கலாச்சாரம் எதையெதைத் தமிழ் மக்களுக்கான விதிகளாக வகுத்துள்ளது? இவற்றின் அறிகுறிகள் என்ன?
******************************************************************************************«
சென்னை நகரில் சராசரியாக தினம் ஒருவர் தன்னைத் தீயிட்டுத் தற்கொலை செய்துகொள்வதாகச் சென்னைக் காவல்துறை, பொதுமருத்துவமனைப் புள்ளி விவரங்கள் குறிப்பிடுகின்றன. இந்தத் தற்கொலைகள் அரசியல் தலைவர்களுக்காக நிகழ்ததப்படும்போது, பத்திரிகைகள் வரிந்துகட்டிக்கொண்டு இவர்களைப் பற்றி வார்த்தைத் தோரணங்கள் கட்டுகின்றன, கண்டிப்பதேயில்லை. -சுட்டி, ஏப்ரல் 1990
“””””””””””””””””””””””””””””””””””””””
பெண் குழந்தைகளைப் பிறந்தவுடனே கொன்றுவிடுவார்கள் என்றார் ஒரு எண்பது வயதுப் பெண்மணி. கடந்த ஆறு அல்லது ஏழு வருடங்களில் எனக்குத் தெரிந்து இந்தக் கிராமத்தில் மட்டும் (உசிலம்பட்டி அருகே) குறைந்தது 150 பெண் குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கின்றன. சாதி வேறுபாடில்லாது, பொருளாதாரப் பற்றாக்குறையே பிரச்சினையின் ஆணிவேராக இருப்பது தெரிகிறது.
-தி இல்லஸ்டிரேடட் வீக்லி ஆஃப் இந்தியா 04-03-90
“”””””””””””””””””””””””””””””””””””””””””
உலகில் எந்த ஒரு மூலையில் பிறக்கும் எவனொருவன் மீதும் மத/வர்க்க முத்திரைகள் மட்டுமே பதிக்கப்படுகின்றன. ஆனால் இந்தியாவில் பிறக்கின்ற ஒருவன் இவை தவிர சாதி முத்திரையும் தரித்துக்கொண்டுதான் இம்மண்ணில் கால்தரிக்க வேண்டியிருக்கி றது. நந்தனார் நெருப்பில் எரித்துக் கொண்டுதான் தம் சாதித் தகுதிகளை உயர்த்திக் கொள்ளமுடிந்தது. இப்படி முக்தியடைந்து அடியார்கள் ஆனபின்பும் உயர்சாதி அடி யார்களுக்குச் சமமாய் மதிக்கப்பட்டதில்லை.
-அ. மார்க்ஸ், சாதியும் வர்க்கமும், முன்னுரை, 17-05-88
**************************************************************************************************
மேற்கண்ட மூன்று மேற்கோள்களும தமிழ்ச் சமூகத்தின் மூன்று அடிப்படை அம்சங்க ளான (பரந்த அளவில் இந்தியக் கலாச்சாரத்தின் அடிப்படைகளுமான) வீரம், பெண் பற்றிய நோக்கு, சாதியம் இவற்றைக் காட்டுகின்றன. நம் கலாச்சாரத்தை உருவாக்கும் இன்னொரு விஷயம் பணம்.

தமிழ்க்கலாச்சாரம்-அன்றும் இன்றும்
சங்க இலக்கியங்கள் தொடங்கித் தமிழ்க்கலாச்சாரக் கூறுகளை ஆராய்ந்தால், அது தமிழ்ச் சமூகத்தின் அடிப்படைகளை அறிய உதவும்.

அகம் (உள்ளுலகம்-பெண்ணுக்கு), புறம் (வெளியுலகம்-ஆணுக்கு), கற்பு (பெண் ணுக்கு), வீரம் (ஆணுக்கு), நடுவீடு (நம்மவர்க்கு), புறவீடு/திண்ணை (பிறருக்கு) ஆகிய கலாச்சாரக் கூறுகள் சங்ககாலம் தொடங்கி இன்றுவரை தமிழ்ச் சமுதாயத்தில் காணப் படுகின்றன. இக்கூறுகள் வெளிப்படும் வடிவங்கள் மாறியிருக்கின்றன. ஆனால் உள்ளடக்கம் ஒன்றுதான். உதாரணமாக, சங்க காலப் பெண்கள் வீட்டிற்குள் இருந்து வீட்டுவேலைகளான சமையல் முதலியவற்றைச் செய்துவந்தார்கள். இன்று பெண்கள் ஆண்களுக்குச் சமமாகப் படித்து வெளியே சென்று வேலைசெய்து வந்தாலும், சமையல் முதலிய வீட்டுவேலைகளைச் செய்கிறார்கள். பெண்ணாக உருவகிக்கப்பட்ட நாட்டையும் தங்கள் பெண்களையும் பிறர் கைப்பற்றிவிடக் கூடாது என்பதற்காகப் போரிட்டனர் சங்ககால ஆண்கள். தங்கள் வீட்டுப் பெண்கள்மீது பிறர் கை பட்டுவிடக்கூடாது என்று பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் ஆண்களை இன்றும் காண்கிறோம். யாவற்றுக்கும் மேலாக, தமிழ்த் திரைப்படங்களில் ஆதிக்கம் செலுத்துகின்ற ஒரே விஷயம் காதல்-வீரம் (அடிதடி, சண்டை).

இன்றைய தமிழனின் தனித்த கலாச்சார குணங்களில் முக்கியமானவை மூன்று. ஒன்று, நரி வலம்போனால் என்ன, இடம் போனால் என்ன, மேலே விழாமல் போனால் சரி என்ற சுயநல மனப்பான்மை. ஐயோ, நம்மால் முடியுமா என்று பீதி கொண்டு மயங்கும் தாழ்வு மனப்பான்மை. நமக்கேன் வம்பு என்ற போர்க்குணம் இன்மை. இந்த மூன்றையும் தொகுத்துச் சொன்னால், எப்படியும் பிழைக்கும் தத்துவம்ட என்று சொல்லலாம். இந்த மூன்று குணங்களும் பிற இனத்தவர், மொழியி னரிடையே இருந்தாலும் தமிழரிடையேதான மிக அதிகமாகக் காணப்படுகின்றன.

சுயநலம்
எப்படியாவது அதிக வருமானம் பெறவேண்டும், தான் மட்டும் முன்னேறிவிட வேண்டும் என்ற நோக்கமே சுயநலத்தை வளர்க்கிறது. அரசாங்க அதிகாரியாக இருப் பவன் லஞ்சம் வாங்குகிறான். ஏழைகளோ லாட்டரிச் சீட்டு வாங்குகிறார்கள்.
இந்திய மாநிலங்களில் அச்சாகும் லாட்டரிச் சீட்டுகளில் 70 சதவீதம் தமிழ் நாட்டில் விற்பனையாகின்றன. லட்சாதிபதி ஆகிவிட வேண்டும் என்பதே வாழ்க்கையின் ஒரே லட்சியம். லாட்டரிச்சீட்டு எத்தனை லட்சம் பேரை ஏமாற்றியிருக்கிறது என்பது ஒரு சோகக்கதை. உழைப்பில் தமிழனுக்கு நம்பிக்கை போய்விட்டது. குறுக்கு வழியே சிறந்த வழி இங்கே. அதில் கேவலம் கொள்ளும் மனப்பான்மை மறைந்து, பணம் எல்லாவற் றையும் சரிப்படுத்திவிடுகிறது. பதவிக்காக, பிழைப்புக்காக, தமிழ்நாட்டில் எம்.எல்.ஏக் கள் மந்திரிகள் மட்டுமல்ல, கலெக்டர்கள், பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் கூட அரசியல்வாதிகளின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுகிறார்கள். எப்படியாவது பிழைத்தாக வேண்டும் என்பதன் தீவிரத்தன்மை நக்கிப் பிழைக்கும் ஒரு சமூகத்தை உருவாக்கியிருக்கிறது. தவறு செய்பவர்களைத் தட்டிக் கேட்பதும் விமரிசனம் செய்வ தும்தான் ஜனநாயகத்தின் அடிப்படை. தட்டிக்கேட்டால் நாம் பாதிக்கப்படுவோம் என்பதற்காக அநீதிகளை வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்கும் சுயநலம் தமிழரிடம் அதிகம் உண்டு.
சென்னைக்கருகே பட்டப்பகலில் தாதர் எக்ஸ்பிரஸில் பலபேர் முன்னிலையில் மூன்று மாணவிகள் மீது பாலியல் வன்முறை நிகழ்ந்த்தாகவும், மக்கள் நெருக்கம் மிகுந்த சென்னை அண்ணாசாலையில் பணப்பறிப்பும் நகைப்பறிப்பும் நிகழ்ந்ததாகவும் நாளிதழ் செய்திகள் கூறுகின்றன. நான், எனது என்ற சுயநல மனப்பான்மை, எவன் எப்படிப் போனால் என்ன என்ற தலையிடாக் கொள்கையை உருவாக்கிவிட்டது. இந்தப் பண்பைத் தமிழ்த் திரைப்படங்கள் உருவாக்கி வளர்த்து வருகின்றன. கதாநாயகனுக்கும் வில்லன் கூட்டத்தினர்க்கும் சண்டை நடைபெறும்போது சுற்றி சுமார் ஐம்பதுபேராவது நிற்பார்கள். ஆனால் தலையிட மாட்டார்கள். வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

தாழ்வு மனப்பான்மை
“இதை என்னால் சமாளிக்க முடியுமா?” என்ற கோழைத்தனம் தாழ்வு மனப்பான்மை யால் ஏற்படுகிறது. தோல்வியை அல்லது இழப்பைத் தாங்கிக் கொள்ளமுடியாமல் தற் கொலை செய்துகொள்ளும் கோழைத்தனம் தமிழரிடையே அதிகம் காணப்படுகிறது. தற்கொலை ஓர் உளநோய். வாழ்க்கைச் சிக்கலை எதிர்த்து நிற்கும் திறமையின்மையின் வெளிப்பாடு. இதனைப் பாமரத் தமிழ் மக்கள் போதிய அளவு உணரவில்லை. தமிழ் நாட்டில் உள்ள அரசியல் சக்திகள் இந்த பலவீனத்தைப் பெருக்கி வருகின்றன. தற்கொலை, அரசியல் சார்பு பெறுகின்றபோது தியாகங்களாகப் போற்றப்படுகின்றன. இந்தியாவில் சென்னை நகரில்தான் மிகுதியான தற்கொலைகள் நிகழ்கின்றன. தற்கொலைகள் மிகுதியாக உள்ள மாநிலம் தமிழர வாழும் புதுவை மாநிலம் என்று அசைட் என்ற ஆங்கில இதழ் கூறுகிறது. இந்திரா காந்தி அம்மையார் கொலைசெய்யப்பட்டதை அறிந்து தற்கொலை செய்துகொண்டவர்கள் அனைவரும் தமிழர்களே. ஆந்திர மாநில முதலமைச்சராக இருந்த என். டி. ராமாராவ், மத்திய அரசின் நடவடிக்கையால் முதலமைச்சர் பதவியை இழந்தபோது அதற்காகத் தற்கொலை செய்துகொண்டவர் ஒரு தமிழர் என்றால் வியப்பாக இல்லையா?

தாழ்வு மனப்பான்மை தன்னம்பிக்கையின்மையை உருவாக்கியிருக்கிறது. இதனால் தமிழனுக்குத் தாய்மொழிமேல் நம்பிக்கையின்மை ஏற்பட்டுள்ளது. வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக எந்த மொழியையும் படிக்கத் தயாராக இருக்கிறான் தமிழன். தமிழ் உச்சரிப்பிலும் எழுத்துக்கூட்டலிலும் பிழைகள் இருந்தால் கண்டுகொள்ளாத தமிழன், ஆங்கில உச்சரிப்பில், எழுதுவதில் தவறு காணப்பட்டால் அதைக் குறையாகக் காண்கிறான். இது தமிழனின் தாழ்வு மனப்பான்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு.
தன்னைத் தாழ்வாக நினைப்பதனால்தான் கட்சித்தலைவரை, அபிமான நடிகரை, கடவுளாக வழிபடும் அளவுக்குத் தாழ்ந்துபோகிறான்.
*************************************
பகல் பதினொரு மணியளவில் சுமார் பத்துப் பன்னிரண்டு அடி உயரமுள்ள கமலஹாசன் கட் அவுட்டுக்கு உச்சியில் சாரம் கட்டி ஏறி பால் அபிஷேகம் செய்தார் கள் அவரின் ரசிகர்கள். -நக்கீரன் இதழில் பிரபஞ்சன்
**********************************
தலைமை வழிபாட்டுக்கு மூல ஊற்று தாழ்வு மனப்பான்மை. தன்னைப் பற்றியும் தன் ஆற்றலைப் பற்றியும் பிறரோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போதெல்லாம் தன்னுடைய திறமை குறைவானது என்ற தாழ்வுணர்ச்சியும் தன்னம்பிக்கைக் குறைவும் ஏற்படுகிறது. இதனால் பிறரைச் சார்ந்து வாழும் நிலைக்கு ஆளாகிறான். சார்புணர்ச்சியே அவனைத் தலைமை வழிபாட்டுக்கு அழைத்துச் செல்கிறது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்குத் தமிழகத்தில்தான் இரசிகர் மன்றங்கள் ஆயிரக்கணக்கில் இயங்குகின்றன. நடிகர் ரஜனிகாந்த் பெயரில் 13 பத்திரிகைகள் வெளிவருவதாகவும், உலகிலேயே ஒரு நடிகருக்காக இவ்வளவு பத்திரிகைகள் வெளி வருவது தமிழில் மட்டும்தான் என்றும் தெரியவருகிறது.

தனக்காக ஒரு தலைவன் இருக்கிறான் என்ற எண்ணம் தொண்டனுக்குப் பாதுகாப்பாக இருக்கிறது. தலைவனோடு தன்னை ஒன்றிணைத்துக் கொள்கிறான். இதற்குப் பணம் கொடுத்தும் நடிகர்கள் வளர்க்கிறார்கள். இந்த ஒன்றிணைப்பு மூலம் தலைவனின் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கேற்கப் பழக்கப்படுத்தப்படுகிறான். தன் சொந்தக் குழந்தையை சற்றும் கவனிக்காதவன், தன் தலைவனுக்குக் குழந்தை பிறந்தால் இனிப்பு வழங்கி மகிழ்கிறான். தலைவன் மனைவியைப் பிரிந்திருந்தால் இவன், தன் சொந்த மனைவியை கவனிக்கத் தெரியாதவன், உண்ணாவிரதம் இருக்கிறான்.

போர்க்குணம் இன்மை
தமிழர்களின் குணங்களுள் ஒன்றாகக் குறிக்கப்படுவது பொறுமை. எதிரியிடம் போராடுவதைவிட அவரிடம் இணங்கிப் போகின்ற இந்தப் போர்க்குணம் இன்மை எதிரிகளுக்கு நல்ல வாய்ப்பாக அமைகிறது. அண்டை மாநிலத்தவர் தமிழர்களை ஏமாற்றுவதற்கும் இது பயன்படுகிறது. தமிழ்நாட்டை ஆரியச் சார்பும், தெலுங்குச் சார்பும் கொண்ட மன்னர்கள் ஆண்டபோதும், மகாராட்டிரர்கள் ஆண்டபோதும், ஐரோப்பியர்கள் வருகை தநத்போதும் பொதுமக்களின் இயக்கங்கள் தமிழகத்தில் எழா தது குறிப்பிடத்தக்கது. கங்கைகொண்ட, கடாரம் கொண்ட இனம் தமிழினம் என்று வாய்ச்சவடால் அடித்துக் கொண்டிருக்கிறோம். தமிழரைப் பற்றி அறிஞர் கார்ல் மார்க்ஸ் எழுதும்போது, அயல் ஆதிக்கத்திற்கு (ஆங்கிலேயருக்கு) ஏதுவாக, எளிதாக அடிபணிந்த நாடுகளுள் தமிழநாடு முன்னிலை வகிக்கிறது என்கிறார்.

1311இல் தில்லி சுல்தானின் தளபதி மாலிக்காபூர் தமிழ்நாட்டின்மீது படையெடுத்த போது திருச்சிக்குப் பக்கத்திலுள்ள ஓர் ஊர்மக்கள் அனைவரும் ஒன்றுகூடித் தங்களையும் தங்கள் கால்நடைகளையும் தீயிட்டுக் கொளுத்திக் கொண்டனர். வீரமற்ற கோழைகளாக வாழ்ந்திருக்கிறோம்.

இன்றும், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண இயலாத நிலையிலேயே தமிழர்களாகிய நாம் வாழ்ந்து வருகிறோம். வங்காளியரைச் சார்ந்து அல்லது பஞ்சாபியரைச் சார்ந்து ஈழம் போன்றதொரு சிக்கல் தோன்றியிருக்குமேயானால் இந்தியாவில் மீண்டும் ஒரு வங்கப்போர் தொடங்கியிருக்கும் என்று முன்னாள் வெளியுறவுத் துறைச் செயலர் ஏ. பி. வேங்கடேசுவரன் கூறியிருக்கிறார்.

தமிழரின் தனித்த கலாச்சார குணங்களாகப் பார்த்தவை ஓரளவு பரந்த அளவில் இந்தியாவின் கலாச்சாரக் குணங்களாகக் கொள்ளக்கூடியவையே என்பதில் நமக்கு மகிழ்ச்சியில்லை. பழையகால தமிழ்க்கலாச்சாரத்தின் அடிப்படை மதிப்புகள் அனைத்தையும் இன்றைய யதார்த்தத்தோடு தொடர்புபடுத்திக் காணமுடியும்.

நிலவுடைமைக் காலத்துக் கருத்துககூறுகளான ஆதிக்கக் கலாச்சாரக் கூறுகள்-குறிப்பாகச் சாதி தொடர்பானவை-இன்றைய முதலாளித்துவ யதார்த்தத்துடனும் இணைந்துள்ளன. பழைய ஆதிக்கச் சமூக மதிப்புகள் நி£யயமாக இன்றைய சமூகத்தில் மறைந்து போயிருக்க வேண்டும். புதிய மதிப்புகள் உருவாகியிருக்கவேண்டும். ஆனால் மக்கள் தொடர்புச் சாதனங்களும் கல்வியும் மதமும் கோயில்களும் சாதியும் பழைய ஆதிக்கக் கலாச்சாரக் கூறுகள் மறைந்துவிடாமல் கட்டிக்காத்து வருவதால் புதியவை உருவாக முடியவில்லை.

பத்திரிகைகள், திரைப்படங்கள், வானொலி, தொலைக்காட்சி ஆகிய தொடர்புச் சாதனங்கள் அரசியல், பொருளாதார பலம் கொண்டோர் கையில் உள்ளன. இவற்றின் வெளிப்பாடுகள் அனைத்தும் ஆதிக்கக் கலாச்சாரக் கூறுகளைத் தன்னுள் கொண்டவையே. இந்தத் தொடர்புச் சாதனங்களை நுகர்வோர் தாங்களாகவே விரும்பி ஆதிக்கக் கலாச்சாரக் கூறுகளை ஏற்றுக்கொள்ளும் வகையில் கலாச்சாரத் திணிப்பு நடைபெறுகிறது. விளம்பரங்களை எடுத்துக் கொண்டால், அவை எல்லோராலும், குறிப்பாகச் சிறார்களாலும் அதிகம் விரும்பிப் பார்க்கப்படுகின்றன. இந்த விளம்பரங்கள் நுகர்வுப் பண்டங்களை அறிமுகப்படுத்துவதோடு ஆதிக்கக் கலாச்சார மதிப்புகளையும் சேர்த்துக் கொ(கெ)டுக்கின்றன. (தொடரும்)

சமூகம்