இணை மருத்துவம், மாற்று மருத்துவம்

inai-maruththuvam1உலக முழுவதும் பின்பற்றப்படும் இன்றைய மேற்கத்திய அறிவியல் நடைமுறை சார்ந்த மருத்துவம், அலோபதி (Allopathy) எனப்படுகிறது. அலோபதி மருத்துவத்தோடு கூடுதலாகப் பயன்படுத்தப்படும் மருத்துவ முறைகளை இணை மருத்துவம் (பேரலல் மெடிசின்) என்று சொல்வது மரபு. உதாரணமாக, நம் நாட்டில் ஆங்கில மருந்துகளைக் கையாண்டபோதும் ஒத்தடம் கொடுத்தல், பிடித்து விடுதல் (மசாஜ்), மூச்சுப் பயிற்சி செய்தல், யோகாசனங்கள் செய்தல் போன்றவற்றைப் பயன்படுத்துகிறோம். இவை இணை மருத்துவம்.

அலோபதி மருத்துவத்திற்கு பதிலாகப் பயன்படுத்தப்படுகின்ற மருத்துவ முறையை மாற்று மருத்துவம் (ஆல்டர்னடிவ் மெடிசின்) என்கிறோம். உதாரணமாக, ஒருவருக்கு மூட்டுவலி. அலோபதி மருத்துவத்தினால் அவருக்கு அது குணமாகவில்லை. அவர் சித்த மருத்துவர் அல்லது ஆயுர்வேத மருத்துவர் ஒருவரை நாடிச் சென்று மருந்து உண்கிறார். இது மாற்று மருத்துவம்.

inai-maruththuvam2இன்று அநேகமாக எல்லாத் தொலைக்காட்சிச் சேனல்களிலும், காலை எட்டு அல்லது எட்டரை மணிக்கே ஒரு சாமியார் அல்லது கோட்டு-டை-சூட்டு ஆசாமி வந்துவிடுவார். நாட்டு மருத்துவம், பாரம்பரிய மருத்துவம், சித்த மருத்துவம் என்ற பெயரில் அவர் ஏதாவது ஒரு மூலிகையைப் பற்றிச் சொல்வார். “எல்லாம் நம்ம வீட்டுத் தோட்டத்தில இருக்குங்க, உங்க வீட்டிலேயே மருந்து இருக்கிறது” என்பார். ஓரிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு யாரோ ஒரு சேனலில் ஆரம்பிக்கப்போக இதுவே இன்று வாடிக்கையாகவும் பிசினஸாகவும் ஆகிவிட்டது.

இன்றைய நகரங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வாழ்பவர்களிடம் வீட்டுத்தோட்டம் எங்கே இருக்கிறது? பிற இடங்களிலும்-கிராமப்புறங்களில்கூட மூலிகைச் செடிகளைப் பார்ப்பதே இப்போது அரிதாகப் போய்விட்டது. எங்கு பார்த்தாலும் முள்ளுச்செடிகளும் பார்த்தீனியமும்தான். “ஆலும் வேலும் பல்லுக்குறுதி” என்பார்கள். நானும் சிறு பையனாக இருந்தபோது ஆலங்குச்சி வேலங்குச்சி எல்லாவற்றிலும் பல்துலக்கியிருக்கிறேன். இப்போது ஆலமரத்தையாவது எங்கேயோ ஒன்று காணமுடிகிறது, வேல மரத்தைப் பார்க்கவே முடியவில்லை. சரி, நாம் விஷயத்துக்கு வருவோம்.

அலோபதியோ, சித்தமருத்துவமோ, ஹோமியோபதியோ, யூனானியோ, நேச்சுரோபதியோ, சீனமுறையோ, யோகமோ, பயோமெடிசினோ எதுவாயினும், பல்வேறு அறிவுச் சட்டகங்கள் வாயிலாக வருபவை அவை. ஒன்றின் அடிப்படைகள், அல்லது கருத்துச் சட்டகங்கள் மற்றொன்றிற்குப் பொருந்தாது. வெவ்வேறு அறிவுச் சட்டகங்கள் என்றால் அவை தவறானவை என்று பொருள் அல்ல.

எந்தச் சிகிச்சையையும் நீங்கள் மேற்கொள்வதற்கு முன் கருத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. அவற்றை இங்கே நாம் பார்க்கலாம்.

inai-maruththuvam61. சிகிச்சை பற்றிய தகவலைச் சேகரியுங்கள்.

இணை மற்றும் மாற்று மருத்துவங்கள் இப்போதெல்லாம் மாறிக் கொண்டேயிருக்கின்றன. அலோபதி மருத்துவத்திலோ சிகிச்சை முறைகளும், மாத்திரை மருந்துகளும் மாறிவிடுகின்றன. ஆகவே இந்த மாற்றங்களை நாம் பின்பற்றிச் சென்று புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். இதற்கு நூலகங்களிலுள்ள நூல்களும், இணையதளங்களும் பயன்படலாம். ஆனால் இணையதளங்களில் போலிகளும் தவறான தகவல்களையும் அரைகுறைத் தகவல்களையும் தருபவை உள்ளன. எச்சரிக்கையைக் கடைப்பிடியுங்கள்.

2. சிகிச்சை அளிப்போரைக் கண்டறிந்து மதிப்பிடுங்கள்.

குறிப்பாக மாற்றுமருத்துவத்தை நாடிச் செல்பவர்கள் இதைச்செய்வது அவசியம். கூடியவரை சிகிச்சையாளர் உண்மையானவர் (ஜெனூயின்)தானா என்று தெரிந்துகொள்வது அவசியம். இன்று விளம்பர விவகாரங்கள் அதிகம். போலி மருத்துவர்களே “போலிகளை நம்பாதீர்கள்” என்று விளம்பரம் தரும் காலம் இது. மருத்துவரைப் பற்றி எதுவும் தெரியாத நிலையில் ஏதோ ஒரு தொலைபேசிக் குறிப்பேட்டிலிருந்து ஏதோ ஒரு தொலைபேசி எண்ணையோ பெயரையோ தேர்ந்தெடுப்பது அபாயமானது. நானும் இது போல் அவதிப்பட்டிருக்கிறேன். நல்லவேளையாக, எனக்கு பணச் செலவோடு போயிற்று. பலபேருக்கு உயிராபத்தே நேரலாம்.

சிலசமயங்களில் நேராக நம்பத்தக்க நிறுவனங்களிலிருந்து தகவலைப் பெறலாம். உதாரணமாக நீங்கள் அக்குபங்ச்சர் மருத்துவம் மேற்கொள்ளப் போகிறீர்கள் என்றால், அவுரங்காபாதிலுள்ள ‘இந்தியன் அகாதெமி ஆஃப் அக்கு பங்ச்சர் சயின்ஸ்’ நிறுவனத்திலிருந்து உங்கள் இடத்தினருகில் உள்ள மருத்துவரைப் பற்றி அறியமுடியும். முடிந்தால் நீங்கள் மேற்கொள்ளஇருக்கும் சிகிச்சையை ஏற்கெனவே பயன்படுத்தியவரிடம் பேசிப்பாருங்கள். குறிப்பிட்ட மருத்துவரிடம் அவருடைய அனுபவங்களைக் கேளுங்கள்.

3. சிகிச்சைக்கான செலவைக் கருத்தில் கொள்ளுங்கள்.

inai-maruththuvam7இணை, மாற்று மருத்துவ முறைகள் பலவற்றுக்கு உடல்நல, மருத்துவக் காப்பீடு கிடையாது. எனவே அந்த சிகிச்சைக்குத் துல்லியமாக எவ்வளவு செலவாகும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். பொதுவாக, அலோபதி முறையைவிட ஹோமியோபதி மலிவு என்று சொல்லப்படுகிறது. சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் ஆகியவையும் அவ்வளவு செலவு பிடிப்பவை அல்ல என்ற கருத்து இருக்கிறது. ஆனால் இவை தவறு என்பதை என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன். பிரசித்தி பெற்ற ஹோமியோ மருத்துவர் ஒருவர் சென்னையில் ஐநூறு அல்லது அறுநூறு ரூபாய்க்குக் குறையாமல் ஆலோசனைக் கட்டணம் மட்டுமே வாங்குகிறார். அலோபதி டாக்டர்கள் மட்டுமல்ல, இன்று சித்த, ஆயுர்வேத மருத்துவர்களும் பணம்பிடுங்கிகளாக மாறிவிட்டார்கள்.

குறுகிய கால சிகிச்சைக்கு அலோபதியே நல்லது. உடனடியாகப் பிரச்சினை தீர, செலவும் குறையும். சித்த, ஆயுர்வேத, ஹோமியோ மருத்துவ முறைகளைப் பெரும்பாலும் நீண்டகாலம் மேற்கொள்ள வேண்டும்.

4. உங்கள் மனப்பான்மையைச் சோதித்துக் கொள்ளுங்கள்.

இணை, மாற்று மருத்துவங்களை விமரிசனமின்றி ஏற்றுக் கொள்ளும் மனநிலை பலரிடம் காணப்படுகிறது. அதற்குத் தக்கவாறு அந்த மருத்துவர்களும் இதற்கெல்லாம் “பக்க விளைவுகள் கிடையாது” என்று சொல்லிவிடுகிறார்கள். யாரிடம் சோதித்தறிந்து இதை அவர்கள் சொல்கிறார்கள்? அலோபதி முறையிலாவது எலியிடம், குரங்கிடம் என்று சோதிப்பார்கள்-பிறகு மனிதனுக்கும் அதுவே பொருந்தும் என்று சொல்லிவிடுவார்கள். மாற்று மருத்துவத்தினரைப் பொறுத்தவரை, இந்தியாவில், எல்லாம் “அனுபவ வைத்தியம்” என்று சொல்லிவிடுவார்கள். இந்தமாதிரி அனுபவ வைத்தியத்திற்குட்பட்ட என் உறவினன் ஒருவனே துடித்துத் துடித்து இறந்துபோனதைக் கண்டிருக்கிறேன். (குறைந்த பட்சம், அலோபதியில் வலியைப்போக்கவோ, குறைக்கவோ, மறக்கவோ, மரக்கச்செய்யவோ மருந்து தருவார்கள். பிறவற்றில் இவை இல்லை.)

விமரிசனமின்றி ஏற்றுக் கொள்ளுதல், சோதித்துப் பார்க்காமலே மறுத்து விடுதல் என்னும் இரண்டையும் தவிர்ப்பது நல்லது. திறந்த மனத்தோடும், அதேசமயம் பெரிய நம்பிக்கை கொள்ளாமலும் இருப்பது நல்லது.

5. முதலில், மாற்று மருத்துவத்தைவிட இணை மருத்துவத்தைத் தேர்ந்தெடுங்கள்.

அலோபதி அல்லாத மருத்துவ முறைகள், அலோபதிக்கு மாற்றாக இருப்பதை விட இணைவு செய்வதே சிறப்பாக இருக்கிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. பலவித சிகிச்சை முறைகள் ஒன்றுக்கொன்று உதவியாக இயங்குவது சிறப்பானது.

திடீரென, கடுமையான, உயிருக்கு ஆபத்தான நலப்பிரச்சினை ஏற்பட்டால் அலோபதியையே நாடுங்கள். குறிப்பாக அவசரச் சிகிச்சைப் பிரிவுக்குச் செல்லுங்கள். சற்றே குணம் பெற்ற பிறகு இணைமருத்துவத்தைத் துணைக் கொள்ளுங்கள்.

6. உங்கள் மருத்துவரிடம் உங்கள் தெரிவுகளைப் பற்றி விவாதியுங்கள்.

inai-maruththuvam4நீங்கள் பெறும் எல்லாச் சிகிச்சைகளையும் பற்றி உங்கள் மருத்துவரிடம் கூறினால், அவருக்கு உங்கள் உடல்நல முன்னேற்றம் பற்றிய முழுமையான சித்திரம் கிடைக்கும். அதனால் சிகிச்சையும் எளிதாகும், உடல்நலமும் தேறும். ஒரு தொலைக்காட்சிச் சேனலில் ஐந்து அலோபதி மருத்துவர்கள் வந்து மருத்துவக் கேள்விகளுக்கு பதிலளிக்கும் அதேநேரத்தில், மாற்று மருத்துவர் ஒருவரையும் அழைத்து அவரையும் ஆலோசனை கூறச் செய்கிறார்கள். இது நல்ல ஏற்பாடு.

பொதுவாக அலோபதி மருத்துவர்கள் தன்னை நாடிவருபவரிடம் மனம் விட்டுத் தங்கள் சிகிச்சைமுறை, மருத்துவம் பற்றிப் பேசத் தயாராயிருப்பதில்லை. இது மோசமான நிலை. தனக்குப் பணம் தருகின்ற நோயாளிதான் தன் எஜமான் (கடவுள் என்று கருதாவிட்டாலும்) என்பதை அந்த டாக்டர்கள் உணர்ந்தால் நல்லது. மாறாகப் பணம் கறப்பதும், தன்னை எஜமானாகவும் நோயாளியை அடிமையாகவும் பாவிப்பது மருத்துவ ஒழுக்க விதிகளுக்கே முரணானது.

பொதுவாக எந்த நல்ல மருத்துவரும், அலோபதி, இணை, மாற்று என எவராயினும், நல்ல ஊட்டச்சத்துள்ள உணவு, உடற் பயிற்சி, புகைபிடிக்காமை, மது அருந்தாமை, மன அழுத்தத்தைக் குறைத்தல் போன்ற நடைமுறைகள் உங்கள் நீடித்த வாழ்வுக்கும் மேம்பாட்டிற்கும் உதவுபவை என்று கூறுவார்கள்.

இணையதளத்தைப் பயன்படுத்துதல்

inai-maruththuvam8இன்று பலர் இணையதளங்களை நாடி அதில் தகவலைக் கேட்டுப் பெறும் முறை பெருகியுள்ளது. உடல் ஆரோக்கியம் பற்றி ஆயிரக்கணக்கான இணைய தளங்கள் உள்ளன. அவற்றில் போலியானவையும் ஏராளமாக உண்டு. எனவே இணைய தளங்களில் காணும் எந்தத் தகவலையும் கவனமாக மதிப்பிடுங்கள்.

1. அண்மைக்காலத் தகவல்களைத் தேடுங்கள். யோக்கியமான இணைத்தளங்கள் தங்கள் கட்டுரை ஒவ்வொன்றிலும் தேதிகளை இணைக்கின்றன.

2. அடிப்படைச் சான்றுகள், தகவல் மூலங்களைச் சரிபாருங்கள். அண்மையில் வெளிவந்துள்ள மருத்துவ ஆய்வுகளின் அடிப்படையில் அவை உள்ளனவா என்று சரிபாருங்கள். பொதுவாகக் கருத்துரைகள், விளம்பரங்கள் பகுதிகளில் வெளியாகும் தகவல்களை நம்பாதீர்கள்.

3. வலைத்தளம் ஒன்றில் பெற்ற தகவலை அதே மருத்துவத் துறை சார்ந்த மற்றொரு வலைத்தளத்தில் சரிபாருங்கள்.

4. கூடியவரை குறிப்பிட்ட நிறுவனம் ஒன்றைச் சார்ந்த வலைத்தளங்களைத் தவிருங்கள். வணிக வலைத்தளங்களைத் தவிர்ப்பது நல்லது.

5. பற்பசை, தலைமுடி வளர்தல், அழகுசாதனங்கள் போன்றவற்றிற்கான நமது விளம்பரங்களில் இடம்பெறுவது போன்ற சொற்கள்-மாபெரும் முன்னேற்றம், வியக்கத்தக்க விளைவுகள், புதிய கண்டுபிடிப்பு, இத்தனை நாட்களில் சரியாதல் என்று இடம்பெற்றிருந்தால் அந்த மருந்து போலி என்று பொருள். இதை எந்த மருத்துவப் பிரதிநிதியிடமும் நீங்கள் சரிபார்த்துக் கொள்ளலாம்.

6. பெரும்பாலும் ஒரு மருந்து ஒரு நோய்க்குத்தான் உதவும். ஒரு விளம்பரத்தில் அல்லது வலைத்தளத்தில் பல நோய்களைக் குறிப்பிட்டு அவற்றை எல்லாம் இந்த ஒரே மருந்து குணமாக்கும் என்றால் அங்கே தவறு இருக்கிறது.

7. வணிகத் தளங்கள், விற்பனையை ஊக்குவிக்கும் விதமான மருந்தின் நன்மைகளை மட்டுமே தரும். எதிர்மறை விளைவுகளைப் பற்றி எதுவும் தராது.

இன்று பலவித நோய்களுக்கும் நீடித்த மருத்துவம் தேவைப்படுகிறது. எந்த மருத்துவத்தை நீங்கள் தேர்ந்தெடுத்தாலும், ஏறத்தாழ ஒன்றரை மாதம் அல்லது இரண்டுமாதம் கழித்துப் பின்வரும் கேள்விகளை உங்களை நீங்களே கேட்டுக் கொள்வது நல்லது.

1. இந்த மருத்துவமுறையை நான் ஏன் தேர்ந்தெடுத்தேன்?

2. இதனால் ஏதேனும் வித்தியாசம் காணப்படுகிறதா?

3. ஏதேனும் பக்கவிளைவுகள் பாதித்திருக்கின்றனவா?

4. எனது இலக்கு என்ன?

நீங்கள் எதிர்பார்த்த விளைவுகள் உங்களுக்குக் கிடைத்திராவிட்டால், உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள். ஒருவேளை நீங்கள் மருந்துகளைக் கையாண்ட முறையிலோ அவற்றை ஏற்றுக் கொண்ட அளவிலோ குறை இருக்கலாம். உங்களுக்கு அந்த மருத்துவ முறை பயனற்றது என்று தோன்றினால், உடனே மற்றொன்றுக்கு மாறிவிடுவது நல்லது.

சமூகம்