இந்தி(ய) மாநிலங்களில் ஓர் அனுபவம்

திரு. சியாம் சுந்தர் என்பவர் மின்னம்பலம் வாயிலாக வெளியிட்ட கட்டுரை இது.

பாஜக அரசு, கடைசி இரண்டு ஆண்டுகளை இந்தியைத் திணிப்பதற்காக மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு இருக்கும்போலுள்ளது. அந்த அளவுக்கு இந்தி திணிப்பு மெள்ள மெள்ள மறைமுகமாகவும் நேரடியாகவும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்தித் திணிப்பு புதிய வடிவம் எடுத்திருக்கும் இந்தக் காலத்தில்தான் என்னுடைய ‘தனித்த’ வட இந்தியப் பயணத்தைத் தொடங்கினேன். இந்தியாவின் அனைத்து நிலப்பரப்பையும், வானத்தையும், காற்றின் வாசத்தையும், தண்ணீர் சுவையையும், மனிதர்களையும் அவர்களின் வாழ்க்கையையும் தரிசித்து விட வேண்டும் என்றுதான், பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு ஒரேயொரு முதுகுப் பையுடன் டெல்லிக்கு ரயில் ஏறினேன்.

வட இந்தியப் பயணம் என்றவுடன் நண்பர்கள் கூறியது இதுதான்… ‘இந்தி தெரியாம, தனியா நார்த் இண்டியா போறது கஷ்டம்டா. பார்த்துக்கோ’. இந்தி தெரியாமல் வட இந்தியாவில் தாக்குப்பிடிப்பது கஷ்டம் என்பதை ஏற்கெனவே பலமுறை கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனாலும் எப்படியும் சமாளித்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் இருந்தது. யாருக்காவது ஆங்கிலம் தெரியாமலா போய்விடும் என்றொரு நம்பிக்கை இருந்தது. நாம் வசிப்பது வல்லரசு நாடல்லவா, நம் மக்களுக்கு ஆங்கிலம் கூடவா தெரியாமல் இருக்கும் என்ற நம்பிக்கை.

அதிகாலையில் ரயில் ஏறி மறுநாள் இரவு டெல்லியில் இறங்கும்வரை தமிழிலோ, ஆங்கிலத்திலோ பேசுவதற்கு ஆள் இல்லாமல் கம்பார்ட்மென்ட்டில் இந்தியில் பேசுபவர்களை அமைதியாகப் பார்த்துக் கொண்டே வந்தேன். என் ஜன்னலுக்கு வெளியே தெரிந்த வெப்பமான வட இந்திய நிலங்கள் மட்டுமே அப்போதைக்கு ஆறுதலாக இருந்தது. எங்கும் அறை முன்பதிவு செய்யாமல் த்ரில்லான ஒரு பயணத்தை மேற்கொள்ளத்தான் திட்டமிட்டு இருந்தேன். டெல்லி ரயில் நிலையத்தில் இரவு பதினோரு மணிக்கு இறங்கி ஹோட்டல் ஒன்றை எடுப்பதற்குள் பின் இரவு ஆகிவிட்டது. அதுவரை மனதில் இருந்த ஒரு பெரிய நம்பிக்கை, குருட்டு நம்பிக்கை அந்த இரவே தகர்ந்து விட்டது. ஒருநாட்டின் தலைநகர், வெளிநாட்டவர் அடிக்கடி வந்து போகும் சுற்றுலாத் தலம் வேறு… கண்டிப்பாக இங்கே மக்களுக்குக் கொஞ்சமாவது ஆங்கிலம் தெரிந்திருக்கும் என்றுதான் நம்பிக்கொண்டிருந்தேன். ஆனால், யாருக்கும் துளிக் கூட ஆங்கிலம் தெரியவில்லை. தெரியவில்லை என்பதன் அர்த்தம் அவர்களால் பேச முடியவில்லை என்பது மட்டும் அல்ல, நான் பேசுவதைப் புரிந்துகொள்ளக்கூட முடியவில்லை. ‘கோ’, ‘கம்’, ‘வேர்’ ‘லெஃப்ட்’, ‘ரைட்’ என்ற சில அடிப்படை ஆங்கில வார்த்தைகளைக் கூட அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. பொதுவாகத் தென் இந்தியா வில் ஆட்டோ, டாக்சி டிரைவர்களே குறைந்தபட்ச ஆங்கில அறிவோடு இருப்பார்கள். தென் இந்தியா வரும் பிற நாட்டு பயணிகளோடு எளிமையாக அவர்கள் உரையாடுவதைப் பார்த்திருக்கிறேன். அதேபோல வட இந்தியா விலும் ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் இருப்பார்கள், அவர்களுக்குக் குறைந்த அளவாவது ஆங்கிலம் தெரிந்திருக்கும், தப்பித்துக் கொள்ளலாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், உண்மை அப்படியில்லை. ஆட்டோ, டாக்சி டிரைவர்கள், ஹோட்டல் ரூம்கள் வைத்திருப்பவர்கள், ரயில்வே என்கொய்ரியில் இருப்பவர்கள், போலிஸ்காரர்கள் யாருக்கும்… யாருக்குமே துளிக்கூட ஆங்கிலம் தெரியவில்லை.

மேலே எழுதிய வரிகள் தமிழர்களின் இளகிய மனதுக்குக் கண்டிப்பாகக் கோபத்தை உண்டாக்கி இருக்கும். மற்றவர்களின் ஆங்கில மொழி அறிவைக் கிண்டல் செய்யாதீர்கள் என்று கமெண்ட் இட கைகள் பரபரத்துக் கொண்டிருக்கலாம். அப்படி கமெண்ட் இட உங்கள் மனது தயாராக இருந்தால் அதற்கு முன்பு ஒரு விஷயத்தைச் சொல்கிறேன் கேளுங்கள். சென்னை ஐஐடி-யில் படிக்கும் குஜராத்தை சேர்ந்த நண்பன் ஒருவனிடம் வாட்ஸ்அப்பில் இந்தித் திணிப்பு, தமிழக அரசியல் பற்றி எல்லாம் விவாதித்துக் கொண்டிருந்த சமயம், ‘உங்களுக்கு மொழிப்பற்று எல்லாம் கிடையாது. மொழி வெறி. அவ்வளவுதான். முக்கியமாக உங்களால ஒரு மொழிக்கு மேல கற்றுக் கொள்ளக்கூடிய அளவுக்குத் திறமை இல்லை. அதான் நீங்க இந்தியை எதிர்க்கறீங்க’ என்றான். இதே எண்ணம் பல வட இந்தியர்களிடம் இருப்பதைக் கவனித்து இருக்கிறேன். பன்மொழி அறிவு பற்றி அவர்கள் அப்படிக் கூறியதை வைத்து, சரி வட இந்தியர்கள் எல்லோருக்கும் கண்டிப்பாகப் பன்மொழி அறிவு இருக்கும் என்றுதான் நினைத்துக் கொண்டிருந் தேன். ஆனால் உண்மையில் ஒருமொழிக்கு மேல் கற்றுக்கொள்ளும் திறமை அவர்களுக்குத்தான் இல்லை. வட இந்தியர்களால்தான் இந்தியைத் தவிர வேறு ஒரு மொழியைக் கற்றுக் கொள்ள முடியவில்லை. இந்தத் தலைமுறை தமிழ் இளைஞர்கள் பலர் தமிழ், ஆங்கிலம் மட்டும் அல்லாமல் கல்லூரிகளில் ஜெர்மன், பிரெஞ்ச் மற்றும் கல்லூரியின் இருப்பிடத்தைப் பொறுத்து மலையாளமோ, தெலுங்கோ கற்று இருக்கிறார்கள். நம்மவர்களுக்குப் பன்மொழி அறிவு நிறையவே இருக்கிறது.

டெல்லி செல்லும் ரயிலில் அமர்ந்திருந்தபோதுதான் அந்தச் செய்தியைப் படித்தேன். சென்னை மின்சார ரயில் டிக்கெட்டுகளில் இருந்து தமிழ் அகற்றம். தமிழுக்குப் பதில், இந்தி என்று செய்தியில் இருந்தது. இனி மின்சார ரயில் டிக்கெட்டுகளில் இந்தியும் ஆங்கிலமும் மட்டும்தான் இடம்பெறும். இந்தி திணிப்பு என்பதையும் தாண்டி இதில் வேறு ஒரு விஷயம் இருக்கிறது. தமிழர்களுக்கு இந்தி தெரியாது என்பது எல்லோருக்குமே தெரியும். அதனால்தான் ஆங்கிலம் இடம்பெற்றிருக்கிறது. ஒரு மாநிலத்து மக்களிடம் அவர்களது தாய்மொழிக்குப் பதிலாக வேறொரு மொழி அறிவை எதிர்பார்க்கும் வட இந்தியர்களிடம் நாமும் இயல்பாக ஆங்கிலத்தை எதிர்பார்ப்பது இயல்பு தானே. நம்மால் ஆங்கிலத்தைப் புரிந்துகொள்ள முடியும், பீச் ஸ்டேஷனில் மீன் கூடையோடு ஏறி தாம்பரத்தில் இறங்கும் பாட்டிக்கு டிக்கெட்டில் இருக்கும் ஆங்கிலத்தைப் புரிந்து கொள்ள முடியும் என நம்பும் வட இந்தியர்களிடம் நாமும் ஆங்கில அறிவை எதிர்பார்ப்பது இயல்புதானே.

டெல்லி சென்று அவர்களின் மொழி கொஞ்சம் பழகிய பின்பும், டெல்லியில் இருக்கும் தோழி ராகவிஜயா கூறிய சில வழிமுறைகளைப் பின்பற்றியும் ஒருவாறு சமாளித்துக் கொண்டிருந்தேன். அந்தத் தோழிக்கும் இந்தி தெரியாது. ஒரு வருடமாக அவரும் சைகையை வைத்தும் கூகுள் டிரான்ஸ்லேட்டரை வைத்தும்தான் சமாளித்துக் கொண்டிருக்கிறார். அதன்படியேதான் நானும் டெல்லியின் தெருக்களைச் சுற்றிக் கொண்டிருந்தேன். சாந்தினி சவுக் பகுதியில் இருக்கும் செங்கோட்டைக்குச் சென்றுவிட்டு அப்படியே குதுப்மினார் சென்றபோதுதான் அந்தச் சம்பவம் நடந்தது. குதுப்மினாரில் இருக்கும் புல்வெளிகளில் இளைப்பாற உட்கார்ந்து இருந்தபோது மூன்று வட இந்திய இளைஞர்கள் வந்து பக்கத்தில் உட்கார்ந்தனர். கையில் இருந்த பானி பாட்டிலை பார்த்துவிட்டுக் குடிக்கக் கேட்டனர். பேச ஆரம்பித்தார்கள். எனக்கு இந்தி தெரியாது என்றவுடன் பேசாமல் அமைதியாக இருந்தனர். பின் நிறையக் கூச்சத்துடன் அந்த மூவரில் ஒரெ யொரு ஆள் மட்டும் அரைகுறை ஆங்கிலத்தில் பேசினார். வார்த்தைகளுக்கு இடையில் நானே இணைப்புகளை இட்டு புரிந்து கொண்டேன். பயணத் திட்டம் பற்றிக் கூறினேன். அவர்களின் சொந்த ஊர் வாரனாசி. சுற்றிப் பார்க்க டெல்லி வந்திருக்கிறார்கள். அந்த அரைகுறை ஆங்கிலத்தில் பேசியவரின் பெயர் சந்தீப் திவாரி. அவர் படித்தது பெரிய கல்வி நிறுவனத்தில் எம்.பி.ஏ பட்டம். அவர்களுடன் இருந்த ஆருஷ் திவாரி, படித்ததோ பொறியியல். அவரால் ஒரு வார்த்தைகூட ஆங்கிலத்தில் பேச முடியவில்லை. அவர்கள் மூவரும் நன்றாகவே பழகினார்கள். மொழி அரசியல் நம்மை எப்படி எல்லாம் பிரித்து இருக்கிறது. நாம் இந்தி கற்காததால் எந்த வகையிலும் பின்தங்கிவிடவில்லை. ஆனால் அவர்கள் ஆங்கிலம் இல்லாமல் பல வகைகளில் பல விஷயங்களை இழந்து இருக்கிறார்கள். ஆங்கிலத்தில் வரும் ஆய்வுக் கட்டுரைகளைப் படிக்காமல் ஆருஷ் எப்படிப் பொறியியல் முடித்தார் என்றே தெரியவில்லை.

இவர்களைப் பற்றி இங்குக் குறிப்பிட ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது. மூவரும் அடுத்த மாதம் இறுதியில் சென்னை வரப் போகிறார்கள். சோழிங்கநல்லூரில் இருக்கும் ஒரு நிறுவனத்தில் வேலை செய்ய வருகிறார்கள். அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்கிறேன் என்று கூறி இருக்கிறேன். ஆனாலும் அவர்களை நினைத்து பாவமாய் இருக்கிறது. இந்தி என்ற ஒன்றை வார்த்தையை வைத்து நடக்கும் அரசியலால் அவர்கள் இழந்தது பல. அது அவர்களுக்கே தெரியவில்லை. தமிழ்நாட்டில் எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற பயம் மட்டுமே அவர்களிடம் இருக்கிறது. ஏற்றுக்கொண்டாலும் கொள்ளவிட்டாலும் ஆங்கிலம் இல்லையெனில் பல விஷயங்களை இழக்கத்தான் வேண்டும். இந்தியை வைத்து இந்தியாவுக்குள் வேண்டுமானால் பேசலாம்.

டெல்லியில் இருக்கும் தமிழ் நண்பர்களைச் சந்தித்தபோது ஸ்ரீனிவாசன் என்ற நண்பன் இப்படிக் கூறினான், ‘ப்ரோ இவ்ளோ நாளா இங்க இருக்கேன், யாருக்குமே இங்கிலீஷ் தெரியாது. ஆனா கேஸ்ட் (caste) மட்டும் என்னன்னு கரெக்டா கேட்டுட்றாங்க. அதுக்கு மட்டும் இங்கிலீஷ் தேவைப்படுது’ என்றான். அவன் அப்படிக் கூறிய மறுநாளே என்னிடம் ஒரு வயதான ஆள் ‘சர்நேம் கியா ஹே’ என்று பல முறை அழுத்தி அழுத்திக் கேட்டார். கடைசி வரை பதில் இல்லை என்றதும். ‘நான் வெஜ், பீஃப் சாப்பிடுவியா?’ என்று கேட்டார் (பேசியதை வைத்து புரிந்துகொண்டேன்). ‘பீஃப் சாப்பிடுவேன்’ என்றதும் கொஞ்ச நேரத்தில் அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டார். நம் தென்னிந்தியர்களும் இந்த விஷயத்தில் சளைத்தவர்கள் அல்ல. மொழி மாறினாலும் இந்தியாவில் சாதி எண்ணம் மாறவே மாறாது.

இதுவரை ஆறில் இருந்து எழு மாநிலங்களைச் சுற்றிவிட்டேன். இதெல்லாம் டெல்லியில் மட்டுமே நடந்த சம்பவங்கள். ம்ம்ஹும் மெட்ரோ சிட்டி, தலைநகர். இன்னும் நான் சென்ற வட இந்திய கிராமங்கள் எல்லாம் எப்படி இருக்கும் என்று யோசியுங்கள். நீட் தேர்வில் இந்தி ஆதிக்கம், மத்திய அரசின் பிற தேர்வுகளிலும் இந்தி ஆதிக்கம், ஊர் எங்கும் இந்திப் பெயர் பலகைகள் என எல்லாவற்றுக்கும் பின் அவர்களது ஆங்கிலம் மீதான பயம் இருக்கிறது. ஆங்கிலம் பேசுபவர்களை அவர்கள் அந்நியமாகப் பார்க்கிறார்கள். 200 வருடம் அடிமைப்பட்ட மனம் இன்னும் ஆங்கிலத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. இந்தி திணிப்பின் பின்புறம் இருக்கும் மற்றுமோர் உண்மை இதுதான். அவர்கள் ஆங்கில அறிவு பெற இன்னும் நெடுங்காலம் ஆகும். ஐடி நிறுவனங்கள் தென்னிந்தியாவை நோக்கிப் படையெடுக்க முக்கியக் காரணம் நம்மவர்களின் ஆங்கில அறிவுதான். இந்தியைத் திணித்தபோது இதையெல்லாம் யோசித்துதான் நம்மவர்கள் அதை எதிர்த்தார்களா என்று தெரியவில்லை.

ஆனால் இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஆகப்பெரும் நன்மையை நமக்குக் கொடுத்திருக்கிறது. கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சையால் எனக்குத் தமிழ், ஆங்கிலத்தைத் தவிர வேறு மொழி தெரியாது என்று வட இந்திய பல்கலைக்கழகத்தில் சொல்ல முடிவதில் இருக்கிறது நம் மொழிப்போரின் வெற்றி. அவர்களை மறக்காதீர்கள். முக்கியமாக நம் மொழிப் போராளிகளைப் பின்பற்றுங்கள். இந்தி திணிப்பை எத்தனை காலம் ஆனாலும் எதிர்த்திடுங்கள்.

மொழியே தெரியாவிட்டாலும் பிறந்த நாள் அன்று ஹரித்வார் கங்கை கரையில் அமர்ந்திருக்கும்போது தூரத்தில் ஓடிக்கொண்டிருந்த இந்திப் பாடலின் இனிமை இன்னும் காதுக்குள் கேட்டுக் கொண்டேதான் இருக்கிறது. இந்தி உண்மையில் ஓர் இனிமையான மொழி. கற்பதற்கும் எளிமையான மொழி. நம்மவர்கள் எப்போதுமே இந்தியை எதிர்த்தது இல்லை. 60-களில் இந்தி எதிர்ப்பு போராட்டம் உச்சத்தில் இருந்தபோதுதான் இந்திப் பாடல்களின் மீதான ஈர்ப்பும் அதிகமாக இருந்தது. நம்மவர்கள் எதிர்ப்பது எல்லாம் இந்தியின் ஆதிக்கத்தை மட்டும்தான். ஒருவனின் தாய் மொழியைக் கொன்று, புசித்து இந்தியை வளர்த்துவிடலாம் என்ற எண்ணம் கொண்டிருக்கும் அரசியலைத்தான் நம்மக்கள் எதிர்க்கிறார்கள். மேலும் கொஞ்சம் ஆங்கிலம் கற்றுக்கொண்டால்தான் என்ன? வல்லரசு நாட்டு மக்கள் இதைக் கூடச் செய்யவில்லை என்றால் எப்படி?

ஏரோஸ்பேஸ் படித்துக்கொண்டிருந்தபோது ஐ.எஸ்.ஆர்.ஓ-வுக்கு ஒரு ஆய்வுக்காகச் சென்றிருந்தேன். அப்போது அங்கு வேலை பார்க்கும் ஒரு தமிழரிடம் பேசினேன். இனிவரும் காலங்களில் ஐ.எஸ்.ஆர்.ஓ. கணினிகளில் சமஸ்கிருதத் தைப் பயன்படுத்த போகிறார்கள் என்று கூறினார். இப்போதும் அதை நினைத்தால் சிரிப்பு வருகிறது. இந்தி பேசியதற்கே இவ்வளவு பின்தங்கி இருக்கிறோம். மேலும் ஐ.எஸ்.ஆர்.ஓ-வில் அதிகமாக இருப்பது தமிழர்களும், மலையாளிகளும் தான்.அவர்களின் ஆங்கில அறிவுதான் பல ஆய்வுகளுக்கு உதவி இருக்கிறது. சமஸ்கிருதத்தைக் கொண்டு வந்தால் இந்தியா அறிவியலில் இன்னும் பின்தங்க ரொம்பக் காலம் ஆகாது.

இந்தியாவில் மொத்தம் 22 அதிகாரபூர்வ மொழிகள் இருக்கின்றன, 1500-க்கும் அதிகமான சிறு சிறு மொழிகள் (சமஸ்கிருதத்தையும் சேர்த்து) இருக்கின்றன. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் தவிர மற்ற எல்லா மொழிக்காரர்களும் தற்போது அதிகபட்சம் இந்தியில்தான் பேசுகிறார்கள். அவர்களது மொழியை அவர்களே தெரியாமல் இழந்துவிட்டார்கள். மும்பையில் மராத்தி பேசுபவர்களைப் பார்ப்பது அரிதாகிவிட்டது. ஏன், இரண்டு மலையாளிகள் வட இந்தியாவில் சந்தித்துக்கொண்டால்கூட இந்தியில்தான் பேசுகிறார்கள். இத்தனை மொழிகளைக் காவு கொடுத்து, இந்தியாவின் பன்முகத்தைக் கெடுத்து அப்படி இந்தியைக் கட்டாயமாக்குவதன் நோக்கம்தான் என்ன?

தங்கள் மொழி, தங்களுக்கே தெரியாமல் அழிந்துப்போனதை இப்போதுதான் பிற மாநிலத்தவர்கள் புரிந்துகொண்டு இருக்கிறார்கள். மேற்கு வங்கம், வடகிழக்குப் பகுதிகள், மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் கொஞ்சம் கொஞ்சமாக இந்தி ஆதிக்கத்துக்கு எதிரான அலை வீசத் தொடங்கி இருக்கிறது. முதல் வரியில் எழுதியிருந்தேன்… இந்தி திணிப்பு என்ற வார்த்தைதான் பலகாலமாகத் தமிழ்நாட்டு அரசியல் தலைவிதியை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது என்று, இப்போது சொல்கிறேன் குறித்துவைத்துக் கொள்ளுங்கள்… இந்தி திணிப்பு தமிழ்நாட்டை மட்டும் அல்ல… இனி மொத்த இந்திய அரசியல் வரலாற்றையும் ஆட்டிப் படைக்கப் போகிறது. ஒருநாள் எல்லா மாநில மக்களும் இந்தி திணிப்புக்கு எதிராகப் போராடுவார்கள்.

அதெல்லாம் சரி பன்னெடுங்காலமாக வேற்றுமையில் ஒற்றுமை என்கிறோமே… வேற்றுமை இருக்கிறது, ஒற்றுமை எங்கே?

சமூகம்