ஈடிபஸ் அரசன் நாடகம் – காட்சி 1

ஈடிபஸ் அரசன் நாடகம் – காட்சி 1

[ஈடிபஸின் அரண்மனை வாயில். வாயிலுக்கு எதிரில் சீயூஸ் தெய்வத்தின் பலிபீடம். இருபுறமும் மேடைகள், ஒன்றில் கடவுளரின் சிலைகள் இருக்கலாம். இன்னொன்றில் மூன்று வாயில்கள். இருபுறமும் இரு வாயில்கள். நடுவாயில் தான் அரண்மனை வாயில். இருபுற வாயிற்படிகளில் ஆலிவ் கிளைகளை ஏந்தி இரங்கிநிற்கும் மக்கள். துக்கத்தின் பாதிப்பில் பலநிலைகளில் படிகளில் சாய்ந்து ஓய்ந்து உட்கார்ந்திருக்கிறார்கள். நடுவாயிலின் வழியே ஈடிபஸ் வருகிறான்.]

ஈடிபஸ்: குழந்தைகளே, என் செல்வங்களே! காட்மோஸ் மன்னனின் வழிவந்த கருணை உள்ளங்களே! ஏன் கடவுளின் சிலை முன்னர் ஆலிவ் கிளைகளை ஏந்தித் தவித்துக்கொண்டிருக்கிறீர்கள்? கைகளில் மலர்மாலைகள், பூச்செண்டுகள். மாலைகளிலிருந்து எழும் நறுமணம், நகரத்தின் நான்குபக்கமும் பிரார்த்தனைக ளாகவும், ஒப்பாரிகளாகவும் உலாவுகிறது!

ஈடிபஸ்-இந்தப் புகழ்வாய்ந்த பெயரைத் தாங்கிக்கொண்டிருக்கும் நான் உங்களோடு நேரடியாகப் பேசவே விரும்பி வந்திருக்கிறேன். தூதர்கள் மூலம் உங்களோடு பேசவிரும்பவில்லை.

(பூசாரியிடம்) ஆ, இங்குள்ளவர்களில் வயதுமுதிர்ந்தவர் நீங்கள்தான். இவர்களுக்காக என்னிடம் பேசுங்கள். உங்களைப் பிய்த்தெடுக்கும் துயரம்தான் என்ன? பயந்துபோய் வந்தீர்களா, அல்லது என்னிடம் ஆசிகள்பெற என்னை அணுகினீர் களா? என்னால் இயன்ற அளவில் உங்களுக்கு உதவி செய்வேன். சொல்லுங் கள். இதில் எள்ளளவும் ஐயம் வேண்டாம். இரங்கிவந்தோர்க்கு நெகிழாவிட்டால் எனக்கு இதயம் என்ற ஒன்று எதற்கு?

பூசாரி: ஈடு இணையற்ற ஈடிபஸ்! பராக்கிரமும் பலமும் மிக்க தீப்ஸ் நாட்டு மன்னனே! இன்று குழந்தைகளிலிருந்து முதியவர்கள்வரை உன் அரண்மனை வாயிலில் பழியாகக் கிடக்கிறார்கள். நிற்கக்கூட இயலாத சின்னஞ்சிறு குழந்தை கள், முதுமை எய்தித் தளர்ந்துபோன என்னைப் போன்றவர்கள், இல்லற வாழ்வு எய்தாதவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டு என்னோடு வந்திருக்கும் இளைஞர்கள். இன்னும் பலர். தீப்பொறிகளில் கனன்று பேசும் அப்போலோ தெய்வம் வாழும் பல்லாசின் இரு பலிபீடங்களிலும் ஆலிவ் மரக்கிளைகளை ஏந்திநிற்கும் இன்னும் ஆயிரக்கணக்கானோர்.

உன் கண்களே உனக்குச் சொல்லும்-மரணக்கடலில் வீழ்ந்து தவிக்கிறது தீப்ஸ் நாடு. மரண அலைகளிலிருந்து தலையைத் தூக்க முடியாமல் மயங்கிக்கிடக்கிறது. பூமியில் மலர்ந்துள்ள மொட்டுக்களையும் பழங்களையும் ஒரு ராட்சஸப் புழு கபளீகரம் செய்துகொண்டிருக்கிறது. கால்நடைகள் வியாதியால் கஷ்டப்படுகின் றன. குழந்தைகள் பிறவாமலே வயிற்றில் உயிர்விடுகின்றன. இங்கே பிள்ளைகளைச் சுமத்தலே வீணாகிப்போனது. கொள்ளை வியாதியும் சிதைநெருப்பும் கொடிய மின்னல்களாக நகரத்தை வேட்டையாடிக் கொண்டிருக்கின்றன. காட்மோஸின் நகரத்தில் இன்று வீடுகளில் எல்லாம் இருள் சூழ்ந்துள்ளது. இந்தத் துயரம் மிகுந்த தீப்ஸில் சாவு ஒன்று தான் சந்தோஷமாயிருக்கிறது.

நீ மரணத்தை வென்ற கடவுளல்ல, தெரியும் எங்களுக்கு. நிலையான முறைகளில், மனிதனின் அறிவு மிக்க வழிகளில் தேர்ந்தவனும், கடவுளின் வழிகளில் ஞானம் நிரம்பியவனும் நீ. கடவுளின் வரப்பிரசாதம் பெற்றவன் நீ.

அன்று கனல் உமிழும் கொடிய பாடகி ஸ்பிங்ஸிடமிருந்து, அவளுக்கு நாங்கள் செலுத்திவந்த கொடும் திறையிலிருந்து எங்களைக் காப்பாற்றினாய். எனினும் நீ எங்களைவிட எல்லாம் அறிந்தவனும் அல்ல. ஏதோ தெய்வந்தான் எங்களுக்கு உதவ உன்னை அனுப்பி வைத்தது போலும்!

ஆகவே, அதிபராக்கிரம ஈடிபஸ், நாங்கள் தஞ்சமாக உன்னிடம் வந்துள்ளோம். கடவுள்களின் அறிவுரையை ஏற்றோ, அல்லது மனிதர்களின் வழியாகவோ, எங்களுக்குப் பாதுகாப்பைத் தா. பரிகாரத்தைத் தா. நிரூபிக்கப்பட்ட ஞானம் வாய்ந்த மன்னன் நீ. எங்கள் கஷ்டகாலத்தில் எங்களுக்காகச் செயல்படு. இறந்து கிடக்கும் உன் நகரத்திற்கு உயிர்கொடு.

அன்று எல்லோரும் உன்னை ‘நாட்டிற்கு விமோசனம் அளித்தவன்’ என்று போற்றினார்கள். இன்னும் அதை யாரும் மறந்துவிடவில்லை. “நாங்கள் எழுச்சி பெற்றோம், ஆனால் உடனே வீழ்ந்துவிட்டோம்” என்று அவர்கள் சொல்லும்படி ஆகிவிட வேண்டாம். இந்தப் புயலில் நாடு அழிந்துவிடாமல் காப்பாயாக!
பலவருடங்களுக்கு முன்பு இந்த நாட்டின் நல்ல நிமித்தமாக, எங்களுக்கு ஈடிணையற்ற செல்வமாக வந்தவன் நீ. இன்றும் அப்படியே நீ இருப்பாயாக. உன் சக்தியை இன்று எதிர்க்கும் துணிவு பெற்றவன் யாரும் இல்லை. ஆனால் மக்களை ஆட்சிசெய்! மரணத்தால் அழிந்த நகரத்தை ஆட்சி செய்ய வேண்டாம். மனிதர்கள் நடமாடாத போது கப்பல்கள் வெறும் தகரக்கூடுகளே. காவல் மதில்கள் வெறும் குட்டிச் சுவர்களே!

ஈடிபஸ்:  என் அருமை மக்களே, நீங்கள் இங்குவர ஆசைப்பட்ட காரணங்கள் அனைத் தையும் அறிவேன் நான். மரணத்தை விளைவிக்கும் வியாதிகளால் துடித்துக்கொண்டிருக்கிறீர்கள். அதைவிட அதிகமான மனத்துயரத்தில் மூழ்கியிருக்கிறீர்கள். அவரவ ருடைய கஷ்டங்களிலும் கவலைகளிலும் மூழ்கி வருத்தத்தில் ஆழ்ந்திருக்கிறீர்கள். என் ஆத்மாவோ, இந்த நகரத்திற்காக, எனக்காக, உங்களுக்காக முனகிக் கொண்டிருக்கிறது. நான் உறங்கிக் கொண்டிருக்கவில்லை. நீங்கள் என்னை எழுப்பவுமில்லை. என் மனத்தில் ஓடிக்கொண்டிருக்கும் சிந்தனைப் பாதைகள் எண்ணிலடங்கா. தேடித் தேடி ஒரு தீர்வைக் கண்டுபிடித்தேன். என்னுடைய எந்தச் செயலால், அல்லது சபதத்தால் இந்த நாட்டினைக் காக்க முடியும்-இதை அப்போலோவிடமிருந்து அறிந்துவர என் மைத்துனன்-அரசி ஜொகாஸ்டாவின் சகோதரன்-கிரியோனை டெல்ஃபிக்கு அனுப்பி யிருக்கிறேன். சென்றவன் எப்போது திரும்பி வருவான் என்று நாள்களை எண்ணிக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு விநாடியும் துடித்துக்கொண்டிருக்கிறேன். சென்றவன் அங்கு என்ன செய்துகொண்டிருக்கிறான்? இத்தனை நாட்கள் அங்கு என்ன வேலை அவனுக்கு? திரும்பிவந்தவுடன் கடவுள் ஆணையிட்ட எந்தச் செயலையும் செய்வதில் நான் குறைவைக்க மாட்டேன்.

பூசாரி: காலத்தினால் செய்த உதவி! கிரியோன் வந்துகொண்டிருப்பதாகச் சொன் னார்கள்.

ஈடிபஸ்: அப்போலோ தெய்வமே! ஒளிவீசும் அவன் முகம்போல அவன் கொண்டு வரும் செய்தியும் ஒளியைக் கொண்டுவரட்டும்.

பூசாரி: புன்னை மகுடம் அணிந்து வருகிறார் அவர். பலிபீடங்கள் பழங்களால் நிறைந் துள்ளன. நல்ல செய்தி கொண்டுவருகிறார் என்றே நினைக்கிறேன்.

ஈடிபஸ்: சீக்கிரமே தெரிந்து போகும்.

(கிரியோன் வருகிறான்)

ஈடிபஸ்: மைத்துனனே, கடவுளிடமிருந்து நீ கொண்டுவந்த செய்தி என்ன?

கிரியோன்:  அழுத்தமான செய்தி. நல்லபடியாக நிறைவேற்றினால் துயரங்கள் தூர ஓடிப்போகும்.

ஈடிபஸ்:  அசரீரி என்ன சொல்லிற்று? அதன் மறைமுகமான வார்த்தைகள் எப்போதுமே பயத்திற்கும் நம்பிக்கைக்கும் இடையில் என்னை ஊசலாட வைத்துள்ளன.

கிரியோன்: இத்தனைபேருக்கும் மத்தியில் நான் அதைச் சொல்லவேண்டும் என்று விரும்புகிறாயா?

ஈடிபஸ்: எல்லோரிடமும் அதைக் கூறு. எனக்காக உழல்வதைவிட நான் அவர்களுக்காக ஆயிரம் மடங்கு கவலையில் உழன்றுகொண்டிருக்கிறேன்.

கிரியோன்  (மக்களை நோக்கி) : அப்படியானால், நான் டெல்ஃபியில் கேட்டதை உங்களுக்குச் சொல்கிறேன். தெளிவான சொற்களில், செய்தி இதுதான்: இந்த தீப்ஸ் நாட்டில் நாம் ஒரு கொடிய விஷத்தை, ஒரு பெரிய பாவமூட்டையைக் கட்டிக் காத்துக் கொண்டிருக்கிறோம். அதனை உடனே வெளியேற்றுமாறு கடவுள் கட்டளை இட்டார்.

ஈடிபஸ்: என்ன விஷம் அது? என்ன பாவமூட்டை? எப்படி அதிலிருந்து விடுபடுவது?

கிரியோன்: ஒரு கொலைபாதகம்தான் நாட்டை இந்தக் கதிக்கு உள்ளாக்கியிருக்கிறது. கொள்ளைநோயைக் காற்றில் உலவவிட்டிருக்கிறது. கொலைசெய்த குற்றவாளியை நாட்டைவிட்டுக் கடத்த வேண்டும் அல்லது கொன்றுவிடவேண்டும்.

ஈடிபஸ்: யார், யாரைக் கொலைசெய்தார்கள்? கடவுள் கொலைகாரனின் பெயரைக் கட்டாயம் சொல்லியிருக்க வேண்டுமே?

கிரியோன்: மன்னா, நீ இந்த நாட்டை ஆளும் முன்பு லேயஸ் இந்த நாட்டை ஆண்டு கொண்டிருந்தார்.

ஈடிபஸ்: தெரியும் அது எனக்கு. அவரைப் பற்றிப் பிறர் சொல்லக் கேள்விப்பட்டிருக் கிறேன். பார்த்ததில்லை.

கிரியோன்: அவர் கொல்லப்பட்டார். அவரைக் கொன்றவனைப் பழிக்குப் பழிவாங்க உத்தரவிடுகிறது அப்போலோ தெய்வம்.

ஈடிபஸ்: யார் அவரைக் கொன்றவன்? எங்கிருக்கிறான் அவன்? இத்தனை வருடங்கள் கழித்துக் குற்றவாளியைக் கண்டுபிடிக்க ஆதாரங்களுக்கு எங்கே போவேன் நான்?

கிரியோன்: அந்தப் படுகொலை இந்த நாட்டில்தான் நடந்தது. “கவனக்குறைவால் பார்வைக்குத் தப்பியவை எல்லாம் கடுமையான தேடலால் கைக்குள் வரக்கூடும்” என்று அசரீரி சொன்னது.

ஈடிபஸ்: சொல் கிரியோன், லேயஸ் எங்கு கொலை செய்யப்பட்டார்? வீட்டிலா? வயல் வெளியிலா? காட்டிலா? அல்லது, அயல்நாட்டிலா?

கிரியோன்: கடவுள்கள் வாழும் க்ஷேத்திரங்களைக் காணத் திட்டமிட்டுப் புறப்பட்டார் அவர். சென்றவர் திரும்பவேயில்லை.

ஈடிபஸ்: என்ன நடந்தது என்று சொல்லச் சாட்சிகள்-உடன் சென்றவர்கள் – ஒருவரேனும் இல்லாமலா போனார்கள்?

கிரியோன்: சென்றவர்கள் யாவரும் கொல்லப்பட்டார்கள், ஒருவனைத் தவிர. அந்த ஒருவனும் அரண்டுபோய் மனம் பேதலித்துப்போனான். அவனுக்கு ஒன்றே ஒன்றுதான் நினைவில் இருந்தது.

ஈடிபஸ்: என்ன, அந்த ஒன்று? ஒரே ஒரு விஷயம், பலவற்றிற்குத் திறவுகோல் ஆகலாம், நாம் அதைச் சரிவரப் பயன்படுத்தினால்.

கிரியோன்: வழிப்பறிக் கொள்ளைக்காரர்கள் சிலர் எல்லோரையும் சூழ்ந்துகொண்டு தாக்கினார்களாம். எண்ணிக்கையில் அவர்கள் பலராக இருந்ததால், மன்னர் அவர்கள் பிடியிலிருந்து தப்ப முடியாமல் மாண்டுபோனார் என்று அவன் சொன்னான்.

ஈடிபஸ்: ஆச்சரியம்! கொள்ளைக்காரர்கள் மன்னரைத் தாக்குவதா? யாராவது லஞ்சம் கொடுத்துத் தூண்டியிருக்க வேண்டும்.

கிரியோன்: அப்படித்தான் நினைத்தோம். மன்னர் மரணத்திற்குக் காரணமானவர் களைக் கண்டுபிடித்துப் பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கை எடுக்கும் முன்பாக, புதிய துயரங்கள் எங்களுக்குச் சுமை ஏற்றிவிட்டன. பழிவாங்க ஆளில்லை.

ஈடிபஸ்: புதிய துயரங்களா?

கிரியோன்: ஆம், புதிய துயரங்கள்தான். புதிர்போடும் ஸ்பிங்ஸின் பழிவாங்கும் பாடல்கள். அவை காதில் விழுந்தபின் பழைய துனபம் எதையும் அது காதில் விழாது அடித்துச்சென்றுவிட்டது.

ஈடிபஸ்: முதல்முறை உங்களை ஸ்பிங்ஸிடமிருந்து மீட்டேன். இரண்டாவதாக இப்போது நான் இருள் சூழ்ந்து கிடக்கும் இந்நாட்டிற்கு ஒளியூட்டுவேன். அப்போலோ வின் தீர்ப்பினால், இறந்தவர் நம் நெஞ்சை உறுத்தியிருக்கிறார்.

நான் என்றென்றைக்கும் உங்களைக் காத்து நிற்பேன். உறுதி இது. கண்காணா ஒரு நண்பரின் மரணத்திற்குப் பழிவாங்குவது மட்டுமல்ல, இந்நாட்டை அலைக்கழிக்கும் தீ வினையைப் பனியாய் உருகிப்போகச் செய்யும் செயல் இது. லேயஸ் மன்னரைக் கொன்றவன் யார்? யாருக்குத் தெரியும்? அவனது குரூரமான கைகள் என் கழுத்தைத் தேடிக்கூட விரைவில் நகரலாம்.

நான் அவனைப் பழிவாங்கியே தீருவேன். இறந்த மன்னருக்காகச் செயல்படுவதில் என் சுயநலமும் கலந்தே இருக்கிறது, பாருங்கள்! செல்வங்களே,

ஆலிவ் கிளைகளை எடுத்துக்கொண்டு கிளம்புங்கள். உங்களில் ஒருவர் நமது பிரஜைகளை அழைத்து, இங்கு எல்லோரையும் கூட்டிவைத்து, என்னால் இயன்றதை அவர்களுக்குச் செய்வேன் என்பதைச் சொல்லுங்கள்.

(ஒரு காவலாளி வெளியே செல்கிறான்)

கடவுள் கருணை உதவியால் நாம் காப்பாற்றப்படுவோம். இல்லாவிட்டால் நாம் காணாமற் போய்விடுவோம்.

பூசாரி: எழுந்திருங்கள் மக்களே, நாம் வந்த காரியம் முடிந்துவிட்டது. மன்னர் நமக்கு உறுதிமொழி கொடுத்துவிட்டார். அப்போலோ தெய்வமும் அசரீரி மூலம் செய்தி ஒன்றைச் சொல்லியிருக்கிறது. அந்தக் கடவுளே வந்து இந்தக் கொள்ளை நோயை விரட்டியடிப்பார்.

[ஈடிபஸ், கிரியோன் இருவரும் நடுக்கதவு வழியாக வெளியேறுகின்றனர். பூசாரியும் இரங்கிநின்றவர்களும் இடது வலது கதவுகள் வழியாக வெளியேறுகின்றனர். சிறிது நேரத்திற்குப் பின் கோரஸ் (குழுப்பாடகர்கள், தீப்ஸ் நகர மக்கள்) வரவேண்டும். குழுப்பாடகர்கள் மீதி நாடகம் முழுவதும் மேடையிலேயே இருப்பார்கள்.]

நாடகம்