எனக்குப் பிடித்த நாவல்-நாகம்மாள்

அநேகமாக ஆர். ஷண்முகசுந்தரம் என்ற எழுத்தாளரை எல்லாரும் மறந்திருப்பார்கள். கொங்குநாட்டுக்காரர். 1942இல் நாகம்மாள் என்ற அவரது நாவல் வெளிவந்தது. இந்த நாவலில் முன்பு நம் கிராமங்களில் நடந்த பாகப்பிரிவினை, நிலத்தகராறு போன்றவை எப்படிக் குடும்ப வாழ்க்கையைச் சிதைக்கின்றன என்பது அருமையாகக் காட்டப்படுகிறது.

சிவிலியார் பாளையம் என்று ஒரு ஊர். அதில் நாகம்மாள் என்று ஒரு பெண். அவள்தான் கதைத்தலைவி. கணவன் கிடையாது. அவள் குடும்பத்தில் உள்ள பிறர்-அவளுடைய குழந்தை முத்தாயா; கணவனின் தம்பி சின்னப்பன்; அவன் மனைவி ராமாயி. தன் கணவனின் பாகத்தைச் சொத்திலிருந்து பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நாகம்மாள் நினைக்கிறாள். அது கூட்டுக்குடும்பக் காலம். அவளுடைய நினைப்புக்கு து£பம் போடுபவன் கெட்டியப்பன். பாகப்பிரிவினைச் சண்டை முற்றி, சின்னப்பன் கொலையில் முடிகிறது. நாகம்மாள் அதிர்ச்சியடைந்து நிற்கிறாள்.

ஒரு நல்ல யதார்த்த நாவல் இது. கொங்குநாட்டு கிராம மக்கள் வாழ்க்கையை உணர்ந்து அனுபவித்தவர் ஷண்முகசுந்தரம். கிராம மக்களின் வாழ்க்கை மையமே நிலம்தானே? எனவே அவர் படைப்புகளில் நிலம்தான் மையம். அறுவடை, சட்டி சுட்டது, பனித்துளி போன்ற நாவல்களிலும் இதே தன்மையைக் காணலாம். வலிந்து வர்க்கப்போராட்டத்தைத் திணிக்காமல், இயல்பான சமூக உறவுகளை வைத்து எழுதுகிறார். அநேகமாகத் தமிழில் யதார்த்தநாவல்களுக்கு நாகம்மாள் முன்னோடி என்று சொல்லலாம். இந்த நாவலின் பல நல்ல கூறுகளைப் பஞ்சும் பசியும், கரிசல், தாகம் போன்ற நாவல்கள் பின்பற்றுகின்றன. நடையில், உத்தியில், மண்ணின் மணத்தைக் காட்டுவதால் வட்டார நாவல்களுக்கு இது ஒரு முன்னோடி என்று சொல்லிவிட்டார்கள்.

பாத்திரப் படைப்பு விஷயத்தில் நாகம்மாள் நாவல் ஒரு புரட்சியே செய்திருக்கிறது. நாகம்மாள் கதாநாயகி, ஆனால் கதாநாயகிக்குரிய தன்மைகள் இல்லாதவள். விதவை. பணிவோ பயமோ அற்றவள். அதேசமயம் பாசம் மிகுந்த தாய். மைத்துனனிடம் மரியாதை உள்ளவள். இவளுடைய செயல்கள்தான் நாவ லின் அவலமுடிவுக்குக் காரணமாகின்றன. நல்ல பாத்திரப்படைப்பு.

பிரிவினை பற்றிய எண்ணத்தை மக்கள் மனதிலிருந்து அகற்ற கிராம சமூகத்தில் நடக்கும் ஒரு வீட்டு வாழ்க்கையை மையமாக வைத்து நாகம்மாளை எழுதினேன் என்று ஆசிரியரே குறிப்பிடுகிறார். நாட்டின் பிரிவினைக்கு வீட்டின் பாகப் பிரிவினையை ஒரு குறியீடாக அவர் காண்கிறார் என்பது தெளிவு. இதை ஒரு சிறிய இதிகாசம் என்று பாராட்டினார் தி. க. சிவசங்கரன். அவருடைய பல கூற்றுகள் போலவே இதையும் மிகைத்தன்மை கொண்டது என்றே வைத்துக்கொள்ளலாம். இருப்பினும் விமரிசன யதார்த்தப் பாணியைக் கையாள்வதில் தமிழ்நாவல்களுக்கு இது ஒரு முன்னோடி என்று கொள்வதில் தவறில்லை.

தினம்-ஒரு-செய்தி