என் இளமைக் காலம்-2

பல விஷயங்கள் இன்று நினைக்கும்போது எனக்கு அதிசயமாகவும் அதிர்ச்சியாகவும் கூட இருக்கின்றன. உதாரணமாக எங்கள் காலத்தில் நாங்கள் யாரும் உயர்நிலைப் பள்ளிக்குக் கூட (பதினோராம் வகுப்பு வரை) செருப்பணிந்து சென்றதில்லை. அநேகமாகப் பல வீடுகளில் மின்சாரம் கிடையாது. ஆகவே மின்விளக்கு, மின் விசிறி போன்றவை அபூர்வம்… இப்படிச் சொல்லிக் கொண்டே செல்லலாம். (இன்று என் பேரன்மார்கள், எல்கேஜியிலேயே ஷூ போட்டுக் கொண்டுதான் செல்கிறார்கள், இண்டர்நெட்டில் பிடித்த நிகழ்ச்சிகளைப் பார்க்கிறார்கள்.)

ஆனால் எனக்கு அதிர்ச்சி தருவது மக்கள்தொகை விஷயம்தான். நான் பிறந்த அக்காலம், சுதந்திரம் வந்தபின் இரண்டு ஆண்டுகள். அநேகமாக மக்கள்தொகை 40 கோடிக்குமேல் இருந்திருக்க வாய்ப்பில்லை. இப்போது எழுபதாண்டுகள் கழித்துப் பார்த்தால் அதைப்போல் மூன்றரை மடங்கு அதிகமாக இருக்கிறது. உண்மையில் பயமாக இருக்கிறது.

ஒரு நாட்டின் புவியியல் பரப்பு அதிகரிப்பதில்லை. உணவு உற்பத்தி ஓரளவு அதிகரிக்கிறது. (மால்துஸ் சொன்னதுபோல அரித்மெடிக் புரொக்ரஷனில்-அதாவது, கூட்டல் வீதத்தில்.) மக்கள் தொகையோ பெருக்கல் வீதத்தில் –அதாவது நான்கு, பதினாறு, அறுபத்தினாலு, இருநூற்று ஐம்பத்தாறு என்பதுபோல– அதிகரிக்கிறது. இவ்வளவு பேருக்கு உணவும் நீரும் எங்கிருந்து கிடைக்கும்?

நியாயமாக நமது அரசாங்கம் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த நல்ல முயற்சி எடுத்திருக்க வேண்டும். எடுக்கவில்லை. உதாரணமாக இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு அரசாங்க உதவிகளோ, வேலை வாய்ப்போ கிடையாது என்பது போன்ற நடைமுறைகளைச் செயல்படுத்தியிருக்கலாம். இவற்றைத் தொடக்கத்திலிருந்தே செய்திருந்தால் எவ்வித எதிர்ப்பும் இருந்திருக்க வாய்ப்பில்லை.

சரி போகட்டும். எங்களுக்குச் சொத்து சுகங்கள் இல்லை. குத்தனூரில் நாலுகாணி புஞ்சை இருந்தது.  (ஒரு காணி என்பது ஒரு ஏக்கரைவிடச் சற்று அதிக நிலப் பரப்பு.) அதை நாங்கள் மேற்பார்வை செய்ய இயலாததால் சாமி கவுண்டன் என்பவனிடம் குத்தகைக்கு விட்டிருந்தோம். அதில் கடலைக்காய் (வேர்க்கடலை) மட்டுமே விளையும் என்பான். அதில் என்ன பயிரிட்டான், எவ்வளவு விளைந்தது, எவ்வளவுக்கு அவன் விற்றான் என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. ஏதோ வருடத்திற்கு நூறுரூபாய் போல கொண்டுவந்து தருவான்.  கடைசியில் அந்த நிலத்தையும் என் படிப்புச் செலவுக்கு என்ற பெயரில் 1963இல் அவனுக்கே அறுநூறு ரூபாய்க்கு விற்றுவிட்டோம். (அதாவது, ஒரு காணி  புஞ்சை, நூற்றைம்பது ரூபாய்க்கு.  இதுவே இன்றைய நோக்கில் அதிசயம்தான்!)

ஆனால் இது ஒன்றும் பெரிய அதிசயமல்ல. என் தாத்தாவின் தாத்தா-அவர் பெயர் சண்முகம் பிள்ளையாம்–யாரோ ஒரு பார்ப்பனர் கேட்டார் என்று மூன்று காணி நிலத்தை இலவசமாகவே கொடுத்துவிட்டாராம். கேட்டபோது, “பார்ப்பனர்கள் அவர்பூதேவர்கள், அவர்களுக்கு தானம் செய்தால் கோடி புண்ணியம்” என்றாராம்.

என் தந்தைவழிப் பாட்டனாருடன், பாட்டியுடன் பிறந்தவர்கள் எனக்குத் தெரிந்து யாரும் இல்லை. அடுத்த தலைமுறையில், என் அப்பாதான் வீட்டில் மூத்தவர். அவருக்குப் பின் இரண்டு சகோதரர்கள். முதல் தம்பி, மகாதேவன். இரண்டாவது தம்பி சிவலிங்கம். (பிள்ளை பட்டம் போட்டுக் கொள்வதெல்லாம் என் தாத்தா காலத்தோடு போய்விட்டது.) என் தந்தையார் படித்தது எட்டாம் வகுப்புதான். என் தாயின் படிப்பு ஐந்தாம் வகுப்பு. ஆனால் என் அப்பா, தம் இரு தம்பிகளையும் எஸ்.எஸ்.எல்.சி. வரை படிக்க வைத்து, பிறகு செகண்டரி கிரேடு பயிற்சியும் முடித்துவைத்தார். மகாதேவன் முதலிலிருந்து கடைசிவரை செகண்டரி கிரேடு ஆசிரியராகவே இருந்தார். சிவலிங்கம் பிறகு தாமாக பி.ஏ. பி.டி. படித்து பி.டி. ஆசிரியராக இருந்தார். மகாதேவனுக்கு ஒரு மகள்,  மூன்று மகன்கள். சிவலிங்கத்திற்கு முதலில் மூன்று மகள்கள், கடைசியாக ஒரு மகன்.

என் தாய்வழிச் சொந்தங்கள்தான் அதிகம்.

 

 

 

வாழ்க்கை வரலாறு