கட்டுரையாளராகக் க.நா.சு.

க. பூரணச்சந்திரன்

5583098182_c953766a59_b

க.நா. சுப்பிரமணியத்தின் நூற்றாண்டுவிழா சாகித்திய அகாதெமியால் 01-08-2012 அன்று ஒருநாள் நிகழ்சசியாகக் கொண்டாடப்பட்டது. (க.நா. சுப்பிரமணியம் யார் என்று கேட்பவர்களுக்காக அவர் பற்றி ஒரு சிறிய அறிமுகம்: கந்தாடை நாராயண சாமி ஐயர் சுப்பிரமணியம் 1912 ஜனவரி 31ஆம் நாள், வலங்கை மானில் பிறந்தவர், வேறு எந்தவித வருமானத்திற்குரிய வேலைக்கும் போகாமல் முழுநேர எழுத்தாளராக மட்டுமல்ல-தமிழின் மேன்மைக்காக என்று நிச்சயமாகச் சொல்லமுடியும்-வாழ்ந்து 1988 டிசம்பர் 18ஆம்நாள் மறைந்தவர். பல நாவல்களையும் சிறுகதைகளையும் சில கவிதைகளையும் எழுதியவர். மொழிபெயர்ப்பில் புகழ்பெற்றவர். உலகத்தின் நல்ல நாவல்கள் பலவற்றை மொழி பெயர்த்துள்ளார். ஆனால், விமரிசகர் என்ற பெயரே அவருக்கு நிலைத்தது. விமரிசன நோக்கில் பல கட்டுரைகள், நூல்கள் எழுதியுள்ளார். அவருக்கு மிகவும் தகுதியானதே இந்த விழா. இன்னும் பல விழாக்களும் கூட எடுக்கப்பட வேண்டும், அவருடைய கொடைகளை நினைவுறுத்தி.)

அவர் நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் தவிர எழுதிய எல்லாம் கட்டுரைகள்தான். அவை எல்லாமே விமரிசனச் சார்புடையவை.

மேலும், கட்டுரை என்பது தனித்த ஒரு இலக்கிய வகை கிடையாது. எட்டாம் வகுப்புப் பையன் தன் காம்போசிஷன் நோட்டில் எழுதுவதும் கட்டுரைதான். ஜே. கிருஷ்ண மூர்த்தி போன்ற தத்துவஞானி எழுதுவதும் கட்டுரைதான். அப்படியானால் கட்டுரை என்பதற்கு என்ன வரையறை? மனத்தில் இந்தக் கேள்விகளோடு எழுதிய கட்டுரை இது. கட்டுரையாளராகக் க.நா.சு. என்ற விஷயத்திற்கு மேலே செல்லுங்கள்.

க.நா.சு. தாம் வாழ்ந்த 76 ஆண்டுக்காலத்தில் எழுதிக்குவித்தவற்றைப் பார்க்கும்போது நமக்கு மலைப்பாக இருக்கிறது. நாவலாசிரியர், சிறுகதையாசிரியர், திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர் என்று க.நா.சு.வைக் குறிப்பிடுபவர்கள், அவர் ஒரு கட்டுரையாளர் என்று குறிப்பிடுவதில்லை. இத்தனைக்கும், அவர் எழுதியவற்றில் கட்டுரைகள்தான் அதிகம். திறனாய்வாக இருந்தாலும் வடிவம் கட்டுரைதானே? இதற்குக் காரணம், கட்டுரை ஓர் இலக்கியவடிவமாகவோ வகையாகவோ தமிழில் ஏற்கப்படாததுதான் என்று சொல்லலாம். அவர் எழுதிய கட்டுரைகள் தமிழில்மட்டும் ஏறத்தாழ 40,000 பக்கங்கள்வரை இருக்கலாம் என்று தோன்றுகிறது. உலகத்துச் சிறந்த நாவல்கள், படித்திருக்கிறீர்களா, விமரிசனக் கலை, இலக்கிய விசாரம், முதல் ஐந்து தமிழ் நாவல்கள், சிறந்த பத்து இந்திய நாவல்கள், இலக்கியச் சிந்தனைகள், இலக்கியத்திற்கு என்று ஒரு இயக்கம், இந்திய இலக்கியம், கலைநுட்பங்கள் போன்ற இவற்றைத் தவிர அந்தக் கால Thought முதலிய பத்திரிகைகள் முதல், Mirror, Indian Literature, Hindu, Statesman பத்திரிகைவரை அவர் எழுதிய ஆங்கிலக் கட்டுரைகளும் இருக்கின்றன. இன்னும் அவருடைய நாட்குறிப்புகள் போன்றவையும் வெளியிடப்படவில்லை.

ஆங்கிலத்தில் சிலர் Personal Essay என்பதை மட்டும் இலக்கிய வகையாகக் கொள்வது உண்டு. தனது சொந்த அனுபவங்களை எடுத்துரைக்கும் விதமாக எழுதப்படுபவை அவை. இவற்றிலே திறனாய்வுக் கட்டுரைகளையும் அடக்கவேண்டும் என்பது என் கட்சி. இங்கே நான் அமைப்புவாதிகள் சொல்லும் காரணங்களுக்கெல்லாம் போக வில்லை. சாதாரண தர்க்கப்படி பார்த்தாலும், திறனாய்வும் ஒரு நூலைப்பற்றிய சொந்த அனுபவங்களை எடுத்துரைப்பதுதானே? ஆங்கிலத்தில் சார்லஸ் லேம்பின் தனிப்பட்ட அனுபவக் கட்டுரைகளை மட்டும்தான் இலக்கியமாக ஏற்கிறார்கள் என்றில்லை. ஃபிரான்சிஸ் பேகனின் அறிவுபூர்வமான கட்டுரைகளையும், பிலிப் சிட்னி, ஷெல்லி ஆகியோரின் கவிதைக்கான தற்காப்பு நூல்களையும், டிரைடனின் நாடகக் கவிதை பற்றிய கட்டுரையையும் கட்டுரை இலக்கியமாகத்தான் ஏற்கிறார்கள்.  தமிழில் மட்டும் ஒரு புத்தகத்தைப் பற்றிய சொந்த அனுபவ எடுத்துரைப்பை இலக்கியம் அல்ல என்று விலக்குவானேன்?

இப்படி நான் வாதிடக் காரணம் உண்டு. க.நா.சு. பெர்சனல் எஸ்ஸே என்ற ஆங்கிலச் சொல் குறிக்கின்ற தனிப்பட்ட அனுபவக் கட்டுரை எதையும் எழுதவில்லை. மிக வேடிக்கையான விஷயம், தாம் இயங்கிய நாற்பது ஆண்டுகளில் நூல்களை, நூல் ஆசிரியர்களை, சிலசமயங்களில் சீர்திருத்தவாதிகளைத் தவிர வேறு எதைப் பற்றியும் அவர் கட்டுரை எழுதியது கிடையாது. பிற மொழி இலக்கியங்களையும்-குறிப்பாக நாவல்களை-ரசித்துப்படித்தவர் அவர். அப்படிப்பட்டவர் எழுதிய விஷயங்கள் எல்லாமே இலக்கியமாக இருப்பதில் சந்தேகம் என்ன? தாம் படித்த நூல்களைப் பற்றி வாழ்நாளில் சிந்திப்பது, அவற்றைப் பற்றி மட்டுமே எழுதுவது, அவற்றினால் தாம் அடைந்த இன்பத்தைத் தமிழ் உலகம் தானும் அடையுமாறு தருவது என்பது ஒரு பெரிய தவம்தான். அப்படிப்பட்ட தவஞானி க.நா.சு.

“கலை இலக்கிய விஷயங்களில் உண்மை என்கிற அடிப்படை இல்லாவிட்டால் எல்லாமே cant (பயனில சொல்லுதல்) தான்” என்பது அவர் கூற்று. ஆனால் உண்மை என்பது என்ன என்று யார் வரையறுக்க முடியும்? இலக்கியங்களில் ஒன்றை இருப்பதாகச் சொல்வதும் பிறகு இல்லையென்று சொல்வதும் போன்ற வேடிக்கைகளை அவர் கட்டுரைகளில் காணலாம். எனவே அவர் ஒரு solipsist என்ற எண்ணம் தோன்றுகிறது. (Solipsism is the philosophical idea that only one’s own mind is sure to exist).

ஏறத்தாழ 1950களின் தொடக்கத்தில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியவர், தாம் மறையும்வரை தொடர்ந்து எழுதியிருக்கிறார். இலக்கியச் சிற்றிதழ்களில் மட்டும் தான் எழுதவேண்டும் என்று நினைத்ததில்லை. சுதேசமித்திரன், குமுதம், முத்தாரம், துக்ளக் போன்ற வணிகநோக்கிலான பத்திரிகைகளிலும் எழுதினார். ஆனால் எங்கும் தமது கருத்துகளை அவர் எதற்காகவும் சமரசப்படுத்திக் கொண்டதில்லை.

தாம் படித்த உலக இலக்கிய ஆசிரியர்களை அவர் அறிமுகப்படுத்தினார். தமிழில் மொழிபெயர்ப்பு அதிகமாகப் படிக்கப்படுவதில்லை. அதனால் முக்கியமான நூல்களைச் சுருக்கமாகக் கட்டுரைகள் வாயிலாகவேனும் அறிமுகப்படுத்தவேண்டும் என்பதில் அவருக்கு அளவிறந்த ஈடுபாடு இருந்தது.

அவருடைய கட்டுரைகள் வேகமானவை அல்ல. மென்மையானவை. தம்மளவில் ஓர் ஒழுங்கான அமைப்பு, ஒருமைப்பாடு, சமநிலை, தர்க்கம், ஆற்றொழுக்கான போக்கு, எளிமை, லாகவம், ஏறத்தாழ பேச்சுத்தொனி ஆகியவற்றைக் கொண்டவை. அதனால் சொற்சிக்கனம் அவரிடம் இல்லை. “நாவலில் இலக்கியப் பிரக்ஞையை வளர்த்துக் கொள்ள என்ன செய்யவேண்டும் என்று கேட்டால், நல்ல நாவல்களை மேலும் மேலும் படித்துக் கொண்டே இருக்கவேண்டும் என்பது என் கருத்து” என்று எழுதுவார். இத்தொடரில் வருகின்ற “என்ன செய்யவேண்டும் என்று கேட்டால்” போன்ற தொடர்கள் பேச்சுதொனியைக் கொண்டு வந்தாலும் தேவையற்று வாக்கியத்தை நீட்டுகின்றன.

மிக நீளமான கட்டுரைகளைப் பெரும்பாலும் அவர் எழுதியதில்லை. சிறுசிறு கட்டுரை கள்தான். மிகக் கடினமான இலக்கிய விஷயங்களைப் பற்றியும் அவர் பேசியது கிடையாது. மிக அடிப்படையான, எளிமையான செய்திகளைத்தான் அவர் பேசினார்.

“எங்கு பேசினாலும்-குறிப்பாக வெளிநாட்டார் இடையிலே-தமிழன் தன் இலக்கியத்தைப் பற்றிப் பேசியிருக்கவேண்டும், ஆனால் போதிய அளவு பேசவில்லை” என்பது அவர் கருத்து. “சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவைப் போன்ற ஒரு கவி, குறளாசிரியரைப் போல மனித நெறியைச் சொன்ன ஓர் ஆசிரியரை ருஷ்ய மொழி படைத்திருக்க வில்லையே என்று ருஷ்யாக்காரர்களும் ஆங்கிலத்தில் படைத்திருக்க வில்லையே என்று ஆங்கிலேயர்களும் பெருமூச்சு விடவைக்கிற காரியத்தையும் நாம் செய்யத் தவறிவிடுகிறோம்” என்று ஓரிடத்தில் அவர் சொல்லியிருக்கிறார். ஏனென்றால் “மொழி என்பது வெறும் மொழி மட்டுமல்ல. தமிழ் மொழியில் தமிழ், பூகோளம், தமிழ்ச் சூழ்நிலை, தமிழ்ப் பண்பாடு, தமிழ் சரித்திரம் எல்லாம் அடங்கியிருக்கிறது. தமிழ் மனம், தமிழ் மானம், தமிழ் உணர்ச்சிகள், தமிழ்ப்போக்கு, தமிழ் எதிர்காலம் எல்லாம் அடங்கியிருக்கிறது. அதனால்தான் இலக்கியம் முக்கியமாகிறது” என்கிறார் க.நா.சு. மேம்போக்காக இந்த மேற்கோளைப் பார்ப்பவர்கள், அவரை ஒரு தமிழ்த் தேசியவாதி என்றுகூட முடிவுகட்ட முடியும்.

திருக்குறளின்மீது அவருக்கு அளவுகடந்த பற்று இருந்தது. இத்தனைக்கும் திருக்குறள் இலக்கியமா என்ற கேள்வியை எழுப்பியவர் அவர். ஆனால், “இதென்ன நெருப்பு? கிட்டவந்தால் குளிர்கிறது; தூரப்போனால் சுடுகிறது என்று குறளில் வருகிறபோது இதற்கு ஈடாக உலகக்கவிகள் ஒருவரும் செய்துவிட வில்லை என்று சொல்லவே தோன்றுகிறது. மனிதனே அல்லாதவன் எப்படி மனிதன் போலத் தோன்றுகிறான் என்று குறளாசிரியர் கேட்கும்போது நம்மை எங்கோ அழைத்துச் சென்றுவிடுகிறார் கவி” என்று திருக்குறளின் இலக்கியத் தன்மையை எடுத்துரைக்கவும் செய்கிறார்.

அதேசமயம் உலக இலக்கியத்தின் நல்லபகுதிகள் தமிழில் வரவேண்டும் என்று அவர் விரும்பினார். “உலக நாவல் பாரம்பரியம் மிகவும் பரவலானது, விரிவானது. அந்த நூல்களில் பலவும் தமிழ்மொழியில் நாவல் எழுத விரும்புகிறவர்களுக்கு முன்னுதார ணமாக மொழிபெயர்ப்பில் வரவேண்டும் என்று நான் எண்ணுகிறேன். அப்போது தான் தமிழ்நாவல் வளமும் பெருகும். தமிழில் இருப்பது போதாது என்ற யாரும் சொல்லவில்லை. அதுமட்டும் போதாது; உலக இலக்கிய வளம் தெரியவேண்டும் என்று கட்சியாட இடம் உண்டு” என்று அவர் சொல்கிறார்.

தம் கட்டுரைகளில் அவர் நடுநிலை தவறியதில்லை. உதாரணமாக, “வால்மீகி எழுதிய காவியத்தில் கைவைக்க புதுமைப்பித்தன் போன்ற நபர்களுக்கு இடம் கிடையாது என்று ராஜாஜி கூறியது அசட்டுத்தனமானது” என்று ராஜாஜியைக் கண்டிக்கிறார். ஓர் இலக்கியகர்த்தாவாக ராஜாஜிக்கு என் பட்டியலில் இடமில்லை என்று தெளிவாகவே சொல்கிறார். அதேசமயம், ராஜாஜியின் பெருந்தன்மைக்காக அவரைப் பாராட்டுகி றார்: “இலக்கியத்தில் தரத்தை எட்டுவதற்கு ஏதோ ஒரு சக்தி தேவையாக இருக்கிறது. பெரிய மனிதனாக இருப்பதற்கும் ஒரு சக்தி தேவையாக இருககிறது.”

படைப்புக்கென ராஜாஜியைப் பாராட்டாத க.நா.சு. பெரியாரைப் பாராட்டுவதைப் பார்க்கலாம்: “ஈ.வெ.ராவின் நடையிலும் ஒரு இலக்கியத் தரமான வார்த்தைச் செட்டைக் காணலாம். பாரதியாரில் போல அவர் பேச்சிலும் அவர் உள்ளத்தைத் துல்லியமாகக் காண முடிந்தது. இத்தனைக்கும் அவர் இலக்கிய சேவை செய்ய முன் வந்ததாகச் சொல்லிக் கொள்ளவில்லை.” இதுதான் க.நா.சு.

இலக்கியாசிரியர்களின் சொந்த வாழ்க்கையை வைத்து அவர் என்றைக்கும் எடை போட்டதில்லை. “ஃபாக்னர் விளம்பரப் பிரியர் குடிகாரர் என்பதற்காக அவருடைய நாவல்கள் நன்றாக இல்லை என்று சொல்லிவிடமுடியுமா?” என்று மேற்கோள் காட்டுகிறார்.

“எனக்கு ஒரே ஒரு கோஷ்டிதான் உண்டு. அது நன்றாக எழுதுகிறவர்கள் என்று நான் நினைக்கிறவர்கள் அடங்கிய கோஷ்டி” என்று தம்மை கோஷ்டியாளர்கள் பட்டியலில் சேர்த்தவர்களுக்கு பதில் சொல்கிறார். மார்க்சிய விமரிசகர்கள் அவரைக் கலை கலைக்காகவே குழுவினரில் சேர்த்துப் பேசினர். கலை எதையாவது பேசித்தான் தீரும். ஆகவே கலை கலைக்காகவே என்பது இயலாத விஷயம் என்று சொல்லியிருக் கிறார்.

நல்ல கருத்துகளைச் சொல்லும் எவரையும் பாராட்டுவது அவர் பண்பு. கு.அழகிரி சாமி: “எந்த நூலையும் அதன் உடனடியான பயனை வைத்து மதிப்பிடக்கூடாது. அப்படி மதிப்பது என்பது வந்துவிட்டால் வாய்பாடுதான் முதலிடம் பெறும்” என்று கூறியதை சிலாகிக்கிறார்.

தமிழின் இலக்கியத் தரம் உயரவேண்டும், தமிழன் உலக இலக்கியம் அனைத்திற்கும் தன்னை வாரிசாக நினைக்கவேண்டும் என்பது அவர் எண்ணம். “அதிகமாக வளராத மொழியில் எழுதுகிறவன்கூட உலக இலக்கியத்தின் மகோன்னத சிகரங்கள் என்று கருதப்படுபவை எல்லாவற்றிற்கும் வாரிசுதான்.”

கலை கலைக்காகவே எனப் பேசுபவர் என்று மதிப்பிடப்பட்டதால், பொதுவாக க.நா.சு. மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு, அவர் சமூக அக்கறை கொண்டவர் அல்ல என்பது. அவசரநிலைப் பிரகடனம் வந்தபோது அதை எதிர்த்துக் கையெழுத்திட்ட செயல் ஒன்றே அவரது சமூக அக்கறையைக் காட்டப் போதுமானது என்றாலும் தம் கட்டுரைகளிலும் அவர் சமூக அக்கறையைத் தேவையான சமயத்தில் காட்டாமல் விட்டதில்லை. உதாரணமாக ஒரு கட்டுரையில்,

“வறுமையை ஒழிக்க அரசியல்வாதிகள் திட்டங்கள் தீட்டுகிறார்கள். தங்கள் வறுமையை ஒழிக்கவே அவர்களுக்குப் பொழுது போதுவதில்லை. பிறர் வறுமையை எப்படி எங்கே ஒழிக்கப்போகிறார்கள்?” என்று பகடி செய்கிறார்.

அவர் எதிர்த்தது வெளிப்படையான பிரச்சாரத்தைத்தான். “இலக்கியம் இலக்கியமாக முதலில் இருக்கவேண்டும். பிறகு அது கம்யூனிசமா திராவிடமா என்று பார்க்கலாம்” என்ற அவரது கூற்று இதைத்தான் சொல்கிறது.

“மொழிவளர்ச்சி என்று ஏராளமான பணம் செலவாகிறது. மொழிகள் பரிதாபகரமாக வளராமலே இருக்கின்றன” இப்படிப்பட்ட முரண்படுத்தல்களில் எழும் மென்மையான பகடிதான் அவருடைய கட்டுரைகளின் பொதுப்பண்பு என்று சொல்லலாம்.

தம்மளவில் அவர் ஒரு நவீனத்துவவாதி. சோதனை முயற்சிகளை ஆதரித்தவர். அவருடைய ஒவ்வொரு நாவலும் ஒவ்வொரு ரகம். ஆனால் கட்டுரைகளில் அப்படி இருக்கமுடியாதல்லவா?

ரொமாண்டிக் வாதிகளின் அடிப்படைக் குணம் உணர்ச்சியை வெளிப்படுத்துவது என்றால், நவீனத்துவவாதிகளின் தனிககுணம், உணர்ச்சியைச் சற்றும் மிகைப்படுத் தாமல், அதைக் கீழ்அடக்கி எழுதுவது. இத்தன்மையை அவர் போற்றுகிறார். “உணர்ச்சியைத் தூண்டாத, உணர்ச்சி வசப்படாத, அறிவுபூர்வமான முயற்சிகளில் தான் நவீன கலை அம்சம் அதிகமாக இருக்கிறது. உணர்ச்சி ஒன்றுதான் அனுபவம் என்றில்லை. அறிவு என்பதும் கலா அனுபவமாக உருப்பெற இயலும். உணர்ச்சி பூர்வமாக உள்ளதைத் தரமில்லாததாகவே நவீன அளவில் நாம் கருதவேண்டும். இலக்கியத்தில் அறிவில்லாததுதான் பெருங்குற்றம். உணர்ச்சிவசப் படாமையல்ல!” என்று தம் கோட்பாட்டினைத் தெளிவாக அறிவிக்கிறார் அவர். இந்த நோக்கின்படியே அவரது கட்டுரைகள் அமைந்துள்ளன.

“மந்திரம்போல் வேண்டுமடா சொல்லின்பம்” என்றார் பாரதி. “நெருப்பு என்றால் பற்றி எரியவேண்டும்; தண்ணீர் என்றால் சிலுசிலுப்புத் தெரியவேண்டும் என்பார் லா.ச.ரா.” என்றெல்லாம் கூறும் கருத்துகளை ஏற்றுக்கொள்பவர், தமது எழுத்தை அத்தகைய கவர்ச்சியுடைய ஒன்றாக ஆக்கவில்லை.

மொழியின் போதாமை, எல்லைகள் பற்றிய சிந்தனை எப்போதும் அவரிடம் இருந்தது.

“மனித அனுபவத்தைப் பூரணமாக எடுத்துத் தருவதற்கு வார்த்தைகள் ஓரளவுக்கு மேல் லட்சிய சாதனங்கள் அல்ல. ஆனால் அதைவிட லட்சிய சாதனத்தை உருவாக்க மனிதனால் இயலவில்லை” என்கிறார் அவர்.

வெறும் பொழுதுபோக்குப் பத்திரிகைகளை மட்டுமே படிக்கும் தமிழனின் சுபாவத்தை அவர் சாடினார். “சிந்தனை வறுமை, செயல் வறுமை, நூல்கள் மூலம் சிந்திக்கும் சக்தியை வளர்த்துக்கொள்ள இயலாத வறுமை, சிந்திக்கும் சக்தியை உங்களுக்குத் தரக்கூடிய நூல்களைத் தெரிந்துகொள்ள இயலாத வறுமை” இவையெல்லாம் தமிழனைப் பீடித்திருக்கும் வியாதிகள்.

இந்திய இலக்கியம் என்ற கருத்தாக்கத்தில் அவருக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது. பிரபாகர் மாச்வே போன்றவர்கள் இந்திய இலக்கியம் என்பதை வலியுறுத்தத் தொடங்குவதற்கு முன்னாலேயே இந்திய இலக்கியத்தின் ஒருமைப் பாட்டினைப் பற்றிப் பேசியவர் க.நா.சு. தமிழின் இலக்கியமும் இந்திய இலக்கியத்தின் ஒரு பிரிவு என்பதில் அவருக்குச் சந்தேகமில்லை. இந்திய நோக்கு இந்தியப் பார்வை இந்திய இலட்சியச் சூழல் என்பதை வலியுறுத்திவந்தார்.

“இலக்கியம் என்பது ஒருபாதி எழுதுபவனின் ஆற்றலிலும் கலை உத்தி விசேஷங்களிலும் மறுபாதி வாசகர் மனப்பாங்கிலும் இருக்கிறது” என்று ஏற்றுக்கொண்டவர் அவர். அமைப்புவாதம், பின்நவீனத்துவம், ஏற்புக்கொள்கை போன்ற கொள்கைகள் பரவிய பின்னரே வாசகனின் பங்கு இலக்கியத்தில் வலியுறுத்தப்பட்டது. மேற்கத்திய இலக்கியக் கொள்கைகளில் அவருக்கு எவ்வித நம்பிக்கையும் கிடையாது. ஆனால் வாசகனின் பங்கேற்பில் இலக்கியம் உருவாகிறது என்பதைச் சில இடங்களில் சொல்லியிருக்கிறார்.

இலக்கியத்துக்கும் சமூகத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?

“சமுதாயச் சீர்திருத்தம் என்பது சரிவர ஏற்படவேண்டுமானால் இலக்கிய அறிவு பரவலாக, விமரிசனபூர்வமாக, ஒரு சமுதாயத்தில் படரவேண்டும்.”

“மற்றவர்கள் இலக்கியாசிரியனைவிட முக்கியமானவர்கள் என்று நம்பும்படி பொது ஜனம் ஏமாற்றப்படும்போது நல்ல இலக்கியம் பிறப்பது அரிதாகி விடுகிறது. அரசாங்கமும் அதிகாரிகளும் மற்ற எல்லோருக்கும் முக்கியத்துவம் அளித்து, இலக்கியாசிரியனை அறியாமையால் புறக்கணிக்கும்போது நாட்டிலே பண்பாடு குறைகிறது. அறிந்து புறக்கணிக்கும்போது சர்வாதிகாரம் வளர்கிறது”

இது இன்றைக்கும் பொருந்துவதுபோல் இல்லையா?

“குலத்தளவே யாகுமாம் குணம். ஒருகாலத்தில் சொன்னார்கள். இன்று யாரும் எந்த விதமாகவும் குலமுறை கிளத்தமுடியாது. அது வழக்கொழிந்துபோய்க் கொண்டிருக்கும் காரியம் ஆகிவிட்டது” என்று தம் காலத்தில் அவர் உறுதிப்படச் சொன்னார். அவருக்குப் பின் வந்த நம்மால் இவ்வளவு நம்பிக்கையோடு சொல்லமுடியவில்லை.

“மட்டமானது இருந்துகொண்டுதான் இருக்கும். அதைக் கூடியவரை மறந்துவிட்டு நல்லதை, மேன்மையானதை அதிகமாகச் செய்வதற்குத் தேடவேண்டும். அதை விட்டால் உய்ய வேறு வழியில்லை” என்று அவர் சொன்னாலும் கூடியவரை தவறான போக்குகளைச் சாடிக்கொண்டுதான் இருந்தார். காரணம், “மொழியின் இன்றைய உபயோகம் தவறான வழிகளில் போய்விடாமல் தன் எழுத்து மூலம் பார்த்துக்கொள்வது இலக்கியாசிரியன் முதல் கடமையாகும்.”

இலக்கியம்தான் வாழ்க்கையைப் பின்பற்றுகிறது என்று இல்லை. வாழ்க்கை இலக்கியத்தைப் பின்பற்றுகிறது என்றார் ஆஸ்கார் வைல்டு என்று க.நா.சு. கூறுவது வாழ்க்கை யையும் அவர் ஒரு பிரதியாகவே நோக்கினார் என்பதற்கான அடையாளம்தான்.

“வார்த்தைகளைத் துல்லியமாக உபயோகிப்பவனை நல்ல இலக்கியாசிரியன் என்றும், தற்காலிகமாகப் பயன்படுவதற்கு உபயோகப்படுத்துபவனைப் பத்திரிகைக்காரன் என்றும், ஏற்கெனவே அறிந்த ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த உபயோகிப்பவனைப் பேராசிரியன் என்றும், வார்த்தைகளை எந்தெந்த அர்த்தத்தில் உபயோகிக்கலாம் என்று சொல்லித் தருபவனை அகராதிக்காரன் என்றும், பழசு பற்றி வார்த்தைகள் மூலம் புதுவிஷயங்களைக் காணவைப்பவனை ஆராய்ச்சிக்காரன் என்றும் சொல் லலாம்.”

“சிறப்பான இலக்கியம் எல்லாமே யதார்த்தமானதுதான்” என்கிறார் குண்டகர்.

“எழுதுகிற எல்லோருமே வார்த்தை வியாபாரிகள்தான்”

இதுபோன்ற கூற்றுகளைச் சில கட்டுரைகளில் காணமுடியும்.

பொதுவாகக் க.நா.சு. கட்டுரைகளில் கூறியதுகூறல் மிகுதி. சில விஷயங்களையே திரும்பத் திரும்பச் சொல்லிவந்தவர் அவர். இலக்கிய அளவுகோல் வேண்டும், அதன்படி தரமான இலக்கியங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும், வாசகர்களுக்கு நல்ல வாசிப்புப் பயிற்சியும் அனுபவமும் வேண்டும், இலக்கியங்கள் கோட்பாடுகளைப் பின்பற்றி எழுதப்படலாகாது, அனுபவத்தின் அடிப்படையிலேயே அவை எழவேண்டும், இலக்கியத்தில் நேர்மை, உண்மை வேண்டும் என்பன போன்ற கருத்துகளைத் தான் அவர் வாழ்நாள் முழுவதும் வலியுறுத்திவந்தார். பொதுவாக வேதாந்த மரபை ஏற்றுக்கொண்டதாகக் கூறினாலும் சநாதனியாக அவர் என்றும் இருந்ததில்லை.

தமிழில் க.நா.சு. கட்டுரைகள் ஒருவாறு தொகுக்கப்பட்டு வெளிவந்துகொண்டிருக்கின்றன. அவருடைய ஆங்கில எழுத்துகளைத் தொகுத்து வெளியிடுவதற்கு எவரேனும் முன்வரவேண்டும் என்பதுதான் என் வேண்டுகோள்.

—-

இலக்கியம்