கண்ணதாசன் நினைவுகள்

kannadasan31பழையவை காலத்தால் மறக்கப்பட்டுவிடுகின்றன. மறைந்து போகின்றன. பல நல்ல திரைப்படங்கள், பாட்டுகள் போன்ற ஜனரஞ்சகமான விஷயங்களுக்கே இந்தக் கதி தமிழ்நாட்டில். இலக்கியங்கள், ஆய்வுகள், நூல்கள் போன்றவை மறுபதிப்பு வரவில்லை என்றால் சுவடின்றிப் போய்விடுகின்றன. பழங்காலத்தில் கரையானுக்கும் வெள்ளத்துக்கும் இரையாகிக் கிடைக்காமல் போன நூல்களைப் பற்றிப் பேசுகிறோம். இருபதாம் நூற்றாண்டிலும், இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் இப்படி நடக்கிறதே? மிகவும் கடின உழைப்பினால் பத்தொன்பதாம் நூற்றாண்டிலும், இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் பிரசுரிக்கப்பட்ட பல நூல்கள்கூட இப்போது கிடைப்பதில்லை. இருந்தவற்றைப் பதிப்பித்தது போக, சுயமாக எழுதப்பட்ட நூல்களோ எனில், என் கண்ணெதிரே ஆயிரக்கணக்கான நல்ல நூல்கள் அடுத்தடுத்து மறுபதிப்புகள் வராமையால் காணாமல் போயிருக்கின்றன. சான்றாக இருபதாம் நூற்றாண்டின் நல்ல ஆராய்ச்சி அறிஞர்களுள் ஒருவராகிய மயிலை சீனி. வேங்கடசாமியின் சமணமும் தமிழும், பௌத்தமும் தமிழும் போன்ற நூல்கள் இப்போது காணக்கிடைக்கவில்லை. இவை நிச்சயம் இன்றைக்கும் தமிழ் மாணவர்களும் ஆய்வாளர்களும் படிக்கவேண்டியவை. உரிய பதிப்பாளர்களோ வாரிசுகளோ இல்லாமையால் இம்மாதிரிக் காணாமற் போகின்றவை எத்தனை எத்தனையோ? இதற்காகவே நல்ல நூலகங்கள் தமிழகத்தில் நிலைத்திருக்க வேண்டியிருக்கிறது.

இதை இங்கே கூறக் காரணம், இணைய தளங்கள் பலவற்றில் கண்ணதாசனின் கவிஞன் இதயம், ஞானமாலிகா, புஷ்பமாலிகா போன்ற ஆரம்பகால நூல்களைத் தேடினேன். அவர் வாழ்க்கை வரலாற்றில் அவை எழுதப்பட்ட குறிப்பைக்கூடக் காண இயலவில்லை. ஒருவேளை கண்ணதாசன் பதிப்பகம் வைத்திருக்கும் அவரது வாரிசு (காந்தி கண்ணதாசனா?) அவற்றைக் காப்பாற்றி வைத்திருக்கிறாரோ என்னவோ? 1968இல் பி.எஸ்சி. படிப்பை முடித்த நாள் முதலாக (அப்போது கண்ணதாசனுக்கு 41 வயது), ஏறத்தாழ ஐந்தாண்டுகள்-1973 வரை நான் கண்ணதாசனின் பக்தன் (விசிறி என்று சொல்வதுகூடப் பொருந்தாது). (அக்காலத்தில் எங்கள் இறுதிப் பதின்வயதுகளில் எங்களை மிகவும் பாதித்தவர்கள் மு. வரதராசனார், நா. பார்த்தசாரதி, உரைநடையில், கவிதையில் என்றால் கண்ணதாசன்.)

அதுவரை கண்ணதாசன் எழுதியிருந்த அத்தனை நூல்களையும் அப்போது படித்து முடித்திருந்தேன். அவற்றில் என் இதயத்தை மிகவும் கவர்ந்தவை கவிஞன் இதயமும், ஞானமாலிகாவும். அப்போதுதான் புதுக்கவிதை முளைவிட்டுக் கொண்டிருந்த நேரம். சந்தித்த புதுக்கவிஞர்களிடம் கவிஞன் இதயத்திற்கு, ஞானமாலிகாவுக்கு இணையாக உன்னால் எழுத முடியுமா சொல் என்று சவால் விட்டிருக்கிறேன். இப்போது? நினைக்க வேதனையாகவும் மடத்தனமாகவும் இருக்கிறது-கண்ணதாசன் என்றால் திரைப்படப் பாடல்கள், அர்த்தமுள்ள இந்துமதம்-அவ்வளவுதான். இவற்றை வைத்துக் கொண்டே, அவருடைய உண்மையான படைப்புத்திறனையும் அறியாமல், நூல்களையும் (ஏறத்தாழ 200க்கும் மேல்) படிக்காமல், “கண்ணதாசன், காளிதாசன்” என்று ஒப்ப வைத்துப் பாட்டுக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

kannadasan41கண்ணதாசனின் கவிதைத் தொகுதிகள் ஐந்துவரை அப்போது வெளிவந்திருந்தன என்று ஞாபகம். அவற்றில் முதல் மூன்று தொகுதிகளும் எங்களுக்கு மிகவும் பிடிக்கும். (எங்களுக்கு என்ற சொல், என்னையும், என்னோடு ஒத்த ஈடுபாடுகள் கொண்ட ஆர்க்காட்டுத் தலைமைத் தமிழ்ச்சங்க நண்பர்களையும் குறிக்கும்.) நான்காம் ஐந்தாம் தொகுதிகளில் அநாவசியமான அரசியல், போற்றுதல், தூற்றுதல் இத்தியாதிகள் இருந்தன.

பொதுவாகப் பழைய இலக்கியாசிரியர்கள், கவிஞர்கள், அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தையும், எண்சீர் விருத்தத்தையும் இலகுவாகக் கையாளுவார்கள். எழுசீர்க் கழிநெடிலடி எழுதுவதற்குச் சற்றே கடினம். ஆனால் அறுசீர், எண்சீரைவிட ஓசைநயம் மிகுந்தது. கண்ணதாசன் எழுசீர் ஆசிரிய விருத்தத்தை மிகவும் இலகுவாகக் கையாளக்கூடியவர். இதுவே எங்களை அவர்பால் வெகுவாக ஈர்த்தது. அவரைப் பின்பற்றி எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்கள் எழுத முயற்சி செய்தோம்.

இன்று இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்களாக எத்தனை எத்தனையோ பேர்களைச் சொன்னாலும், பாரதிக்குப்பின் கண்ணதாசன்தான். கவிஞர்களுக்குச் சொற்கள் கைகட்டி ஏவல்செய்யும் என்பார்கள். அம்மாதிரி பாரதிக்குப் பின் தமிழ்ச்சொற்கள் கைகட்டி ஏவல்செய்ததது கண்ணதாசனிடம்தான். அவ்வளவு இயல்பாக எந்தப் பொருள் பற்றிப் பாடினாலும் சொற்கள் அவருக்கு வந்து விழும். அந்தச் சொல்வளம் வேறெவருக்கும் இல்லை. தலைமைத் தமிழ்வளர்ச்சி மன்றம் என்று ஆர்க்காட்டில் மன்றம்வைத்து மாதந் தோறும் கவிபாடிக் கொண்டிருந்த-அல்லது கவிபாட முயற்சி செய்துகொண்டிருந்த எங்களுக்குக் கண்ணதாசன் ஒருவிதத்தில் விடிவெள்ளி, இன்னொருவிதத்தில் எட்டாத அடிவானம்.

கண்ணதாசனுக்குக் கவிதை எழுதுவது, பிறவகையான நூல்கள், கட்டுரைகள் எழுதுவது முதல் ஈடுபாடு. பத்திரிகைகள் நடத்தினார். அவற்றுள் குறிப்பிடத்தக்கது தென்றல். கண்ணதாசன் என்ற பத்திரிகையையும் அவரே ஆசிரியராக இருந்து நடத்தியதாக ஞாபகம். அதில் மாதாமாதம் வெண்பாப் போட்டிகள் வைக்கப்பட்டன என்பது நினைவிருக்கிறது. சிலவற்றில் நானும் கலந்துகொண்டிருக்கிறேன். இப்பத்திரிகைகளுக்கெனக் கட்டுரைகளும் கவிதைகளும் அவ்வப்போது தேவைப்பட்டன, எழுதப்பட்டன. வாழ்க்கையின் நடுப்பகுதியிலிருக்கும்போது அவர் எழுதிய சுயசரிதை, வனவாசம்.

இவற்றைத்தவிரத், திரைப்படத்துறையிலோ அவர் ஈடுபடாத விஷயங்கள் இல்லை. திரைப்படம் எடுத்தார், திரைக்கதை வசனம் எழுதினார், பாடல் எழுதினார்.   மாலையிட்ட மங்கை முதல் கருப்புப் பணம் வரை சில திரைப்படங்கள் (பன்னிரண்டு என்று நினைக்கிறேன்) அவரது சொந்தப்படங்கள். குறிப்பிடத்தக்க ஒன்று, சொந்தப் படங்களில் அவருடைய பாடல்கள் மிகச் சிறப்பாக இருக்கும்.

இந்தத் திரைப்படங்களில் என்னை மிகவும் கவர்ந்தது சிவகெங்கைச் சீமை. ம.பொ.சி. முதலியோரும் கூடக் கட்டபொம்மனைப் பெரிய எழுச்சிவீரனாகக் கொண்டாடிக் கொண்டிருந்தது அவருக்குப் பிடிக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். கட்டபொம்மன் பற்றிய வரலாறுகளில் முரண்பாடுகள் அதிகம். அவன் வெறும் கொள்ளைக்காரன், பக்கத்துப் பாளையங்களில் பிரிட்டிஷ்காரர்களுக்கு பதிலாக வரி வசூலிக்க முற்பட்டவன் என்பதிலிருந்து பிரிட்டிஷாரை எதிர்த்தவன் என்பதுவரை பலவேறு பாடங்கள் உண்டு. (கட்டபொம்மு கொள்ளைக்காரன் என்றே தமிழ்வாணன் ஒரு நூல் எழுதியிருக்கிறார்).

ஆனால் உண்மையிலேயே அக்காலத்தில் மிக முனைப்பாக, தெளிந்த விழிப்புணர்வோடு பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் மருது சகோதரர்கள். இவர்களைப் பற்றிய படம்தான் சிவகெங்கைச் சீமை, 1800இல் தென்னிந்திய அரசுகளின் கூட்டமைப்பின் சார்பாக அந்நியர்களான பிரிட்டிஷ் காரர்களை விரட்டவேண்டும் என்று திருச்சி மலைக்கோட்டைக் காவல் வாயிலில் பிரகடனம் ஒட்டியவர்கள் அவர்கள். (இன்றைக்கு அதுதான் மெயின் கார்டு கேட் எனப்படுகிறது.) கட்டபொம்மன் படத்திற்கு எதிராக சிவகெங்கைச் சீமை என்ற பெயரில் மருதுசகோதரர்களைப் பற்றிப் படம் எடுத்தார் கண்ணதாசன். இல்லற ஜோதி திரைப்படத்திற்கு அவர் எழுதிய கதை வசனமும் பாடல்களும் மிகச் சிறப்பாக இருந்தன (1952-இசை ஜி. ராமநாதன்). அப்படத்தில் இடம் பெற்ற “கேட்பதெல்லாம் காதல் கீதங்களே” என்ற பாடல் இன்னும் என் காதில் ஒலிக்கிறது. அவருடைய வாழ்க்கையைக் குறித்த பாடல் போலவே அது இருந்தது!

கண்ணதாசனின் திரைப்படப் பாடல்களை (ஏறத்தாழ 5000 என்று சொல்கிறார்கள்) வைத்து அவரை நாங்கள் மதிப்பிட்டதில்லை. அவர் எழுதியவற்றில் மிகச் சிறப்பான பாடல்கள் இருந்தன என்பது நன்றாகவே தெரியும். அவருக்கு முன்னாலும் சமகாலத்திலும் நல்ல பாடல்கள் எழுதக்கூடியவர்கள் சிலர்-உடுமலை நாராயண கவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கு,சா. கிருஷ்ணமூர்த்தி, மாயவநாதன் போன்றவர் கள் இருந்தார்கள். வதனமே சந்த்ரபிம்பமோ என்பதுபோல மணிப்பிரவாள நடையில் 1940களின் இறுதிவரை வழங்கிய திரைப்படப் பாடல்களை அவர்கள்தான் 1950களின் தொடக்கத்தில் எளிமையான நல்ல தமிழுக்கு மாற்றியவர்கள்.

kannadasan2ஆனால், திரைப்படப் பாடல்கள் கவிதை அல்ல. அவை இசைத்துறை சார்ந்த ஓர் எழுத்துவகை. தமிழகம் தவிர வேறு எந்த நாட்டிலும் திரைப்படப் பாடல் எழுது வோரைக் கவிஞர் என்று சொல்வதில்லை. அவர்கள் வெறும் பாடலாசிரியர்கள்தான். திரைப்பாடல் என்பதை வேண்டுமானால் வேறு ஒரு துறையாக வைத்துக் கொள்ளட்டும், அது இலக்கியத்தைச் சேர்ந்ததுமல்ல, கவிதையும் அல்ல. அதில் கவிதை நயங்கள் இருக்கின்றனவே என்றால், எதில்தான் கவிதை நயம் இல்லை? கிராமத்து மக்கள் பேச்சிலெல்லாம் கவிதை மணக்கிறது. எத்தனை விளம்பரங்கள் கவிதை நயத்தோடு அமைந்திருக்கின்றன? அவற்றையெல்லாம் கவிதை இலக்கியம் என்று சொல்பவர்கள் இருக்கிறார்களா?

ஆகவே கண்ணதாசனைத் திரைப்படப் பாடல்களை வைத்து நாங்கள் சிறந்த கவிஞர் என்றதில்லை. அவரது கவிதைத் தொகுதிகள், மாங்கனி போன்ற சிறுகாவியங்கள், (இவை ஏறத்தாழ 6000 இருக்கும் என்கிறார்கள்) புதுக்கவிதை நடைகொண்ட கட்டுரைத் தொகுதிகள் போன்றவற்றை வைத்துத்தான். ஏறத்தாழ எழுபதின் இடைப்பகுதி முதலாக அவர் (இறுதி ஏழெட்டாண்டுகள்) எழுதியவை பெரும்பாலும் சரியில்லை (அர்த்தமுள்ள இந்துமதம் உள்பட). நிறையக் கதைகள் எழுதினார் அல்லது எழுத முயற்சி செய்தார். இவற்றில் மட்டும் அவர் திராவிடப் பாரம்பரியத்தை மீறவே இல்லை. பொதுவாகவே திராவிடப் பாரம்பரியத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் நல்ல நாடகங்களும், திரைக்கதை வசனங்களும், பத்திரிகைக் கட்டுரைகளும் எழுதுவார்கள், ஆனால் நாவல்கள், சிறுகதைகள் எழுதுவது அவர்களுக்குக் கைவராது. இதற்கு அறிஞர் அண்ணாதுரையும் விலக்கல்ல. கண்ணதாசனின் கதைகளும் அவர் கால ராதாமணாளன் போன்ற திராவிட எழுத்தாளர்களின் கதைகள் போலக் காமக் கோலங்களாகவே அமைந்தன. ஆனாலும் வேடிக்கை: அவர் எழுதிய சேரமான் காதலி என்ற கதைக்குத்தான் சாகித்திய அகாதெமி பரிசு கொடுத்தது.

ஆனால் இவை யாவும் இருந்தும் என்ன? கண்ணதாசன் மீது எங்களுக்கிருந்த பெருமதிப்பு 1975 அளவில் மாறிவிட்டது. கண்ணதாசன் உண்மையிலேயே கண்ணனுக்கு தாசன்தான். அதாவது கண்ணனின் புகழை அருமையாகப் பாடக் கூடியவர். மற்றப்படி அவருக்கு ஒரு கொள்கை என்பது இருந்ததா என்பது கேள்விக்குறி. அவருடைய அரசியல் வரலாறும் அப்படித்தான். முதலில் தி.மு.க.வில் இருந்தார். பிறகு 1954க்குள்ளாகவே அதிலிருந்து விலகி, காங்கிரஸில் சேர்ந்தார். காங்கிரஸ் இரண்டாகப் பிரிந்தபோது இந்திரா காங்கிரஸில் சேர்ந்து அவர்புகழ் பாடுபவரானார். அறுபதுகளில் என்று நினைக்கிறேன், ஈ.வெ.கி. சம்பத் தமிழ்தேசியக் கட்சி தொடங் கியபோது அதில் சேர்ந்தார். நிலையான அரசியல் கொள்கை இல்லாதது போலவே அவருக்குச் சமூகத்தைப் பற்றிய, அதன் மேம்பாட்டைப் பற்றிய அக்கறை இருந்ததா என்பதும் கேள்விக்குறிதான். அதிகபட்சமாக அவரது சமூக ஈடுபாடெல்லாம் மத ஈடுபாடுதான்-காஞ்சி சங்கராச்சாரியருடைய உரைகளை எல்லாம் தொகுத்து “தெய்வத்தின் குரல்” என்ற தலைப்பில் ஒரு பெரிய நூலாக வெளியிட்டார்.

அவருடைய சமூக அக்கறையின்மைதான் எங்களை அவரிடமிருந்து விலக வைத்தது. கண்ணதாசனின் கவிதைகள் (திரைப்படப் பாடல்கள் உட்பட) யாவும் மிகு உணர்ச்சியின் விளைவாக எழுந்த வெளிப்பாடுகளே. (அப்படித்தான் தன் சாவைப் பற்றியும் முன்னாலேயே பாடினார்.) அவ்வப்போது மனத்தில் தோன்றியவற்றைத் தான் பாடுவார். உள்ளிருந்து ஓர் எழுச்சி அவருக்கு வரவேண்டும். அதற்குக் குடி, பெண், போதை மருந்துகள், ஐந்து நட்சத்திர விடுதி அறை போன்றவை தூண்டுகோல்கள். போதை மருந்தில் (அவர் பயன்படுத்தியது பெதிடின்) இருந்தாவது வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் வேறுவழியில்லை என்ற நிலையை எய்தியபோது விடுபட்டார். பெண்ணும் குடியும் அவருக்கு இருந்தே தீரவேண்டும். அவரே பாடியது போல, “ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு, ஒரு கோலமயில் என் துணையிருப்பு” “நித்தம் நித்தம் ஒரு புத்தம் புதிய சுகம் நான் தேடினேன்” என்பதுதான் அவர் வாழ்க்கை, ஈடுபாடு, கோட்பாடு எல்லாம். இப்படிப்பட்டவர் சமூகத்திற்கு என்ன பங்களிப்புச் செய்துவிட முடியும்?

இருபதாம் நூற்றாண்டின் சிறந்த எழுத்தாளர்களாக நான் கருதுவது-கவிதையில் கண்ணதாசனையும், உரைநடையில் சுஜாதா என்ற புனைபெயரில் எழுதிய ஸ்ரீரங்கம் ரெங்கராஜனையும்தான். ஆனால் இருவருமே தமிழ் இலக்கியத் துறையைப் பொறுத்தவரை, வீணாய்ப் போனவர்கள். கண்ணதாசன், கவிஞனுக்கு இருக்க வேண்டிய ஒரு அடிப்படையான சமூக அக்கறையும் நிலைத்த கோட்பாடும் இன்றி வீணாய்ப்போனார். சுஜாதாவின் கோட்பாடோ பணத்திற்காக எழுதுவதுதான். நல்லதொரு நடையழகு கைவரப் பெற்றிருந்ததும், பத்திரிகைத் தொழிலில் இலட்ச இலட்சமாகச் சம்பாதிப்பதற்காகவே மர்மக்கதைகளையும், குற்றக் கதைகளையும் எழுதிக் குவித்தார். ஒருவர் திரைப்படத் துறையையும், மற்றவர் பத்திரிகைத் துறைக்குக் குப்பைகளை வழங்குவதையும் விட்டிருந்தால், இன்று தமிழ் இலக்கிய உலகில் மிகச்சிறந்த தொண்டாற்றியவர்களாகப் புகழ்பெற்றிருப்பார்கள்.

கண்ணதாசனைப் பற்றி ஆய்வு செய்து 2011இல் உளவியல்மருத்துவத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற ஓ, சோமசுந்தரம் என்பவர், கண்ணதாசனின் அல்லது கண்ணதாசனைப் போன்று பேராற்றல் படைத்த (outstanding)ஆளுமைகளின் படைப்பாற்றல் திறனுக்கு, மூன்று காரணங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

1. தன்னம்பிக்கையின்மைக்கும், அளவுக்கு மிக அதிகமான தன்னம்பிக்கைக்கும் இடையில் ஊசலாடும் சுயமரியாதையும் தன்னைப் பற்றிய கற்பனைகளும்.

2. மிகக்கூரிய சிந்தனைக்கும் படைப்பாற்றலுக்கும் இடையில் மனக்குழப்பங்களும் அக்கறையின்மையும் மாறிமாறி வந்து செல்லும் நிலை.

3. உள்நோக்கிய சுயஈடுபாட்டுக்கும், பழகுவதற்கு ஆட்களைத் தேடுவதற்கும் (இது மிக அதிகமான பாலியல் ஈடுபாட்டில் கொண்டுவிடலாம்) இடையில் மாறிமாறி ஊசலாடும் தன்மை.

kannadasan5இவற்றைச் சொல்லிக் கண்ணதாசன் படைப்பு மனோநிலையை ஆராயும் ஆய்வாளர், பிறகு இப்படிக் குறிப்பிடுகிறார். “கண்ணதாசனுக்குக் குடி ஒரு சடங்காகவே இருந்தது. காலையில் தொழில் சம்பந்தமான விஷயங்களில் ஈடுபட்ட பிறகு, வீட்டுக்குத் திரும்பி, மதியம் 12 அளவில் குடிக்கத் தொடங்குவார். பிறகு சிறந்த அசைவ உணவு. சற்றே தூக்கத்திற்குப் பிறகு மாலையில்தான் கற்பனையாற்றலுடன் கூடிய செயல்கள்-கவிதை, திரைப்படப் பாடல்கள், கதைகள், வசனங்கள், கட்டுரைகள் போன்றவை. நள்ளிரவு வாக்கில் வீடுதிரும்பும் அவர் அளவுக்கு மீறிய குடியில் மீண்டும் ஈடுபடுவார்.” சோவியத் யூனியனுக்கு ஒருமுறை அவர் சென்றிருந்தபோது எல்லையற்றுக் குடியில் ஈடுபட்டதனால், அவரோடு வந்த மற்றக் கலைஞர்களும் பயணிகளும் பல்வேறு இடங்களைச் சென்று பார்க்கத் தூண்டியபோதும் விடுதியறையை விட்டு அவர் நகரவில்லையாம்!

நல்ல படைப்பாற்றலுக்கும், தானே தேர்ந்தெடுத்துக்கொண்ட மோசமான வாழ்க்கைக்கும் இடையில் ஊசலாடிய கண்ணதாசன் (இயற்பெயர் முத்தையா) அமெரிக்கா சென்றபோது 1981இல் காலமானார். தமிழ்நாட்டின் தலையெழுத்து, நல்ல கலைஞர்கள் இப்படி ஆகிவிடுவது என்றுதான் வேதனைப்பட முடியும். ஒருவேளை பாரதி போல, புதுமைப்பித்தன் போல, அன்றாடச் சோற்றுக்கும் பிழைப்புக்கும் அல்லாடு பவராக இருந்தால்தான் படைப்பாற்றல் நல்ல பயனை விளைவிக்கும் போலும்!

இலக்கியம்