படிமமும் குறியீடும்

படிமமும் குறியீடும்

இலக்கிய வடிவம், பொருள், இலக்கியப் பொருளை வடிவம் பெறச்செய்வதில் படைப்பாளன் பயன்படுத்தும் இலக்கிய உத்திகள், இலக்கியப் பொருள்மீதான அணுகுமுறை இவையெல்லாம் இன்று தனித்தனியாக ஆராயப் படுகின்றன. எந்த இலக்கியமாயினும் அதன் பல்வேறு கூறுகளை தனித்தனியே விளக்கி ஆராய்வது இன்றைய முக்கியப் பணியாக இருக்கிறது. ஓர் இலக்கியத்தின் பலவேறு கூறுகளையும் தனித் தனியாகப் பிரித்துப் பார்ப்பது என்பது அதனைக் கூறுபோட்டுச் சிதைப்பதாகும் என்று சிலர் கவலைப்படுவர். எந்த ஒரு கலையையும்போல் இலக்கியக் கலையும் ஒரு சமூகத்தின் சிறிய குழுவினரால் மட்டுமே உருவாகிறது. சொல்வளமும் கற்பனைத் திறனும் இலக்கிய உருவாக்கத்தில் புதிய அலகுகளை அளிக்கின் றன. படைப்புகளில் அழகூட்டுவதற்காகப் படைப்பாளர்களின் கற்பனையில் உதிக்கும் இலக்கியக் கருவிகளில் (உத்திகளில்) குறியீடு குறிப்பிடத்தக்கதாக விளங்குகிறது.

குறியீடு என்பது ‘சின்னம்’, ‘அடையாளம்’ என்று பொருள்படும். படிமம் என்பது வார்ப்பு, பிரதிமை, உருவத் தோற்றம் என்று பொருள்படும். இரண்டிற்கும் உள்ள தொடர்பு இவ்வர்த்தங்களால் தெளிவாகிறது. படிமம் என்பது ஒரு பரந்த காட்சியமைப்பு. அதில் இடம்பெறும் விலங்குகள், மனிதர்கள், மரங்கள் செடிகொடிகள் போன்ற எந்தக் கூறும் குறியீட்டுப் பொருள் பெறமுடியும். படிமம் என்பது ஒரு காட்சி. அதில் இடம்பெறும் கூறுகளில் ஒன்று குறியீடு குறியீடாகும்போது, அக்காட்சிக்கு வேறு அர்த்தங்கள் தோன்றுகின்றன.

சங்க இலக்கியத்தில் பயின்று வரும் அணிகளும், படிமங்களும் மக்கள் வாழ்க்கையைப் பிரதிபலிப்பனவாக உள்ளன. ஒரு காட்சியை விளக்க இன்னொன்றினைக் கையாளும்போது குறியீடு உருவாகிறது. தொல்காப்பியத்தில் கூறப்படும் பிசி, முதுமொழி, மந்திரம், குறிப்பு என்ற நான்கும் குறிப்பாகப் பொருளுணர்த்தும் இயல்புடையவை.

சங்க இலக்கியக் காலம் குறியீட்டுக் காலமாக அமைகிறது. இயற்கைப் பொருட்களை, அகப்பொருள் நுட்பங்களை உணர்த்த, குறியீடுகள் பயின்று வருகின்றன. சமயம் தொடர்பான தொன்மக் குறியீடுகள் பக்தி இயக்கக் காலத்தில் இடம் பெற்றன. சித்தர்கள், குறியீடுகளைப் பொதுமைப் படுத்தினர். குறியீடுகளை அடிப்படை யாகக் கொண்டு பிற்காலக் கவிஞர்களும் தமது கவிதைகளை அமைத்துள்ளனர்.

குறியீடும் படிமமும் சங்க இலக்கியத்திலேயே மிகுதியாகக் காணப்படுகின்றன. சங்க காலச் சமூகம், அது உருவாக்கியுள்ள பொருளின் வரையறை போன்றவை தொடர்பான இன்றைய ஆய்வுகள், சங்ககாலம் பொற்காலம் என்னும் கருத்தினை மறுக்கத் தொடங்கியிருக்கும் நிலையிலும், மொழிநடை, கற்பனை, அணிநயம், செறிவு ஆகியவை நிறைந்த சங்க இலக்கி யத்தின் கவித்துவச் சிறப்பு பற்றிய ஐயத்தினை எங்கும் எழுப்ப இயலவில்லை. இத்தகைய மேம்பாடு நிறைந்த சங்க இலக்கியத் தில் நாம் காணும் உள்ளுறை இறைச்சி என்னும் குறிப்புப் பொருள்கள் அடங்கிய இலக்கியக்கூறுகள், குறியீடு, படிமம் போன்றவற்றின் சிறப்பை உணர்த்துபவையாக உள்ளன.

ஒன்றைச் சொல்லி வேறொன்றை உணர்த்துவது குறியீடு. அது உள்ளுறையாக, நூற்றுக் கணக்கில் சங்கப் பாக்களில் காணப்படுகிறது.

நனைய காஞ்சிச் சினைய சிறுமீன் யாணர் ஊரன் (ஐங்.)

என்ற பாட்டில் “பூத்திருக்கும் காஞ்சி மரங்கள் குலப் பெண் களையும் புலால் நாறும் மீன்கள் பரத்தையரையும்” குறிப்பதாகக் குறியீடு அமைகிறது. இதுபோல் செடி கொடி மரம் பறவை விலங்கு இவற்றின் செயல்பாடுகள் வழியே மக்களின் வாழ்வைக் குறியீடுகளால் விளக்கும் இலக்கிய உத்திகளைச் சங்க இலக்கியத்தில் காண்கிறோம்.

சங்க இலக்கியத்தின் குலமரபுச் செய்திகளும், நிலவழிப் பிரிவுகளான முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் பாலை ஆகியவையும் குறியீடுகளே ஆகும்.
படிமம் விரிவான காட்சியைத் தோற்றுவிக்கும் தன்மையுடையது. சங்க இலக்கியத்தில் வேங்கைப் பூக்களின் மலர்ச்சி, யானை, புலி இவற்றின் பகை, பொய்கூறும் தலைவன் நாட்டின் அருவி என்ற பல்வேறு படிமங்களின் வழியே தலைவன் தலைவி காதல் வாழ்வு விளக்கப்படுகிறது.

பிறிதுமொழிதல் அணி பயின்றுவரும் குறட்பாக்களில் உருவகங் கள் அமைந்துள்ளன.

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின் (குறள்.475)

இங்கு சாகாடு, அதில் பீலி பெய்தல், அதனால் அது இற்றுப் போதல் போன்றவை உருவகங்கள்.

பரியது கூர்ங்கோட்டதாயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின். (குறள்.599)
இங்கு யானை், புலி் ஆகியவை உருவகங்கள்.

கானமுயலெய்த அம்பினில் யானை
பிழைத்த வேல் ஏந்தல் இனிது. (குறள்.772)

கானமுயலெய்த அம்பு, யானை எய்து பிழைத்த வேல் இரண்டுமே இங்கு குறியீடுகள்.

பிறிதுமொழிதல் அணி அமைந்த குறட்பாக்களில் உருவகங்கள், குறியீடுகள் சிறப்புற அமைகின்றன என்று பொதுவாகச் சொல்ல இயலும்.

சங்ககாலத்திலும், சித்தர் காலத்திலும், இலக்கிய உத்தியாகப் பயன்பட்ட குறியீடு மீண்டும் புதுக்கவிதைக் காலத்தில் இலக்கிய உத்தியாகப் பயன்படுகிறது என்றும், வெறும் இலக்கிய உத்தியாக மட்டுமல்லாமல், அது புதுக்கவிதையின் சிறப்புப் பண்பாகவே மாறிவிட்டது என்றும் கவிஞர் அப்துல் ரகுமான் கூறியுள்ளார்.

அகநானூற்றில் பல பாடல்கள் குறியீட்டுத் தன்மை பெற்றவை.

இருள்கிழிப்பதுபோல் மின்னி வானம்
துளிதலைக் கொண்ட நளிபெயல் நடுநாள்
மின்மினி மொய்த்த முரவுவாய்ப் புற்றம்
பொன்னெறி பிதிரின் சுடர வாங்கிக்
குரும்பி கெண்டும் பெருங்கை ஏற்றை
இரும்பு செய் கொல் எனத் தோன்றும் (அகம்.72:1-6)

கரடி புற்றாஞ்சோற்றை நாடிவரும் நேரம் நள்ளிரவு. எங்கும் இருள் பரவியிருக்கிறது. இந்த இருளைக் கிழிப்பதுபோல் மேகம் மின்னுகிறது. மின்மினிப் பூச்சிகள் புற்றைச் சுற்றி மொய்க்கின்றன. அந்தக் காட்சி உலைக்களக் காட்சி போல் உள்ளது. உலைக் களத்தில் இரும்பைக் காய்ச்சி அடிக்கும்போது பிதிர்கள் சிதறும். ஒளியும் வீசும். அந்தப் பிதிர்களைப் போல மின்மினிப் பூச்சிகள் தோன்றுகின்றன. உலைக்களத்தில் இருந்து வேலை செய்யும் கொல்லனைப் போல் தோன்றுகிறது கரடி.

எருமைவெளியனார் மகன் கடலனார் எழுதிய இப்பாட்டின் முதற் படிமம் இது. இதே பாட்டில் இன்னொரு படிமமும் காணக்கிடக்கிறது.

ஈருயிர்ப் பிணவின் வயவுபசி களைஇய
இருங்களிறு அட்ட பெருஞ்சின உழுவை
நாம நல்லரா கதிர்பட உமிழ்ந்த
மேய்மணி விளக்கின் புலர ஈர்க்கும் (அகம்.373: 12-15)

இப்பகுதியில் புலியின் அன்பு வாழ்க்கை விவரிக்கப்படுகிறது. தனது பெண்புலியின் பசியைக் களைவதற்காக யானையைக் கொன்று வந்த ஆண்புலி, அதனைப் பாம்பு உமிழ்ந்த மணியின் வெளிச்சத்தில் இழுத்துச் செல்கிறது.

தலைவியைப் பிரிந்து தலைவன் பொருள் தேடுவதற்காகச் சென்றிருக்கிறான். அவன் சென்ற வழியின் கொடுமையை நினைத்தும், அவன் திரும்பி வந்து தன்னை மணமுடிக்காத நிலை குறித்தும் தலைவி வருந்துகிறாள். அவள் தனது தோழிக்குக் கூறுவதாக இப்பாடல் அமைகிறது.

இப்பாட்டின் இரு படிமக் காட்சிகளும் ஒன்றிற்கொன்று முர ணானவை. முதல் காட்சியில் தனது பசியைத் தீர்த்துக் கொள் வதற்காக மின்னி இடிக்கும் வானத்தையும் பொருட்படுத்தாமல் புற்றுக்குள் கைவிட்டு ஈயற் சோற்றை உண்ண விரும்பும் கரடியின் சித்திரத்தைக் காண்கிறோம். அதற்கு எதிரான இன்னொரு காட்சியில் தனது மனைவியாகிய புலியின் துயர் தீர்க்கச் சிறுவெளிச்சத்திலும் தான் கொன்ற யானையை இழுத்துச் செல்லும் ஆண் புலியின் செயலைக் காண்கிறோம்.

இங்கு தலைவி அமைக்க விரும்பும் இல்லறக்காட்சியின் குறியீடாக இரண்டாவது செயற் படிமம் இடம்பெறுகிறது. எப்படி அந்த ஆண்புலி தனது பெண்புலிக்காக யானையைக் கொன்று நள்ளிரவிலும் இழுத்துவர முற்படுகிறதோ அப்படித் தனக்காகத் தன் கணவன் வாழும் இல்லற வாழ்வைத் தலைவி நாடுகிறாள் என்பது குறியீட்டுச் செய்தியாக அமைகிறது.

ஆனால் முதற்காட்சியோ தனது இன்பத்தை மட்டுமே கருதித் தன் பசியைத் தீர்த்துக்கொள்ள முனையும் கரடியைக் காட்டுகிறது. அவ்வாறே தலைவனும் இப்போது செயற்படுவதாகத் தலைவி நினைக்கிறாள். அதனால் அவள் வருந்துகிறாள். ஆனால் எவர் மீதும் தவறில்லை என்றும் தோழியிடம் துன்பத்தோடு உரைக் கிறாள். ஆகவே இப்பாடலில் படிமங்கள் குறியீடுகளாகச் செயற் பட்டு இப்போது காணும் வாழ்க்கை நிலைக்கும் தான் கற்பனை செய்துள்ள வாழ்க்கை நிலைக்குமான முரணை மிகச் சிறப்பாக எடுத்துரைக்கின்றன என்பதைக் காணமுடிகிறது.

இங்கு குறியீடாக அமைபவை இரு படிமக் காட்சிகள். படிமத்திற்கும் குறியீட்டுக்கும் உள்ள தொடர்பினை இப்பாடல் நன்கு விளக்குவதாக அமைந்துள்ள்து.
முதற் படிமக் காட்சியில் கரடி தலைவனைக் குறிக்கிறது என்றும், அது புற்றாஞ் சோற்றை உண்பது தலைவியின் நலனைத் துய்ப்பது என்றும் கொள்ள இயலும்.

இரண்டாவது காட்சியிலும் ஆண் புலி தலைவனைக் குறிக்கிறது, பெண் புலி தலைவியைக் குறிக்கிறது. ஆனால் இக்காட்சி இல்லற அன்பு வாழ்க்கையை உணர்த்துவதாக உள்ளது. இப்படி இன்றுள்ள நிலைக்கும் எதிர்பார்ப்புக்குமான முரணைச் சிறப்புறக் குறியீட்டுப் படிமங்களால் இப்பாடல் நன்கு உணர்த்து கிறது.

மண்டிலம் மழுக மலைநிறம் கிளர
வண்டினம் மலர் பாய்ந்து ஊத, மீமிசைக்
கண்டற் கானல் குருகினம் ஒலிப்ப
திரைபாடு அவிய திமில் தொழில் மறப்ப
கரையாடு அலவன் அளைவயிற் செறிய
செக்கர்தோன்ற, துணைபுணர் அன்றில்
எக்கர்ப் பெண்ணை அகமடல்சேர
கழிமலர் கமழ் முகம் கரப்ப, பொழில்மனைப்
புன்னை நறுவீ பொன்னிறம் கொளாஅ
எல்லை பைப்பயக் கழிப்பி எல்லுற
யாங்கு ஆகுவல்கொல் யானே? (அகம்.260:1-11)

தலைவனைப் பிரிந்த தலைவி மாலைக்காலம் வரும்போது “யாங்காகுவல்கொல் யானே?” எனக் கவலைப்படுவதை இப்பாட்டு காட்டுகிறது. மாலைக்காலத்தின் வருகையைப் பலவிதப் படிமங்களால் உணர்த்துகிறார் கவிஞர் மோசிக்கரையனார்.

சூரிய மண்டிலம் மறைகிறது. மலை செந்நிறம் பெறுகின்றது. வண்டினங்கள் மலரைத் தேடிச்சென்று ஊதுகின்றன. கண்டல் மரங்கள் நிறைந்த கானலில் குருகினங்கள் ஒலிக்கின்றன. திரைகள் ஒலித்தலையும் மோதுதலையும் தவிர்க்கின்றன. வலை ஞர்கள் திமில்தொழிலை மறந்து வீடுசேர்கிறார்கள். கரையில் ஆடிக்கொண்டிருக்கும் நண்டுகள்கூடத் தங்கள் வளைகளைச் சென்று அடைந்துவிட்டன. எங்கும் செக்கர் ஒளி பரவியிருக்கிறது. துணையோடு சேர்ந்த அன்றிற் பறவை, பனை மரத்தின் அகமடலில் சென்று தங்குகிறது. மலர்கள் கூம்புகின்றன. புன்னை மலர்கள் பொன்னிறம் கொள்கின்றன. இவ்வாறு பகலின் எல்லையினைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கழித்து இருள்சேர்ந்த மாலை வந்து நிறைகின்றது. “இப்போது நான் என்ன செய்வேன்” என்று வருந்துகிறாள் தலைவி.

மிக அழகான மாலை நேரக்காட்சி இங்கு படைக்கப்படுகிறது. மாலைநேரத்தில் கடற்கரையில் நிகழும் ஒவ்வொரு செயலும் வருணிக்கப்படுகிறது. ஒவ்வொரு செயலும் தலைவியின் துன்பத்தை மிகுவிப்பதாக இருக்கிறது என்பது இப்பாட்டின் பொருள். ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு நிகழ்ச்சியும் தலைவிக்குத் தலைவனின் நினைவைத் தூண்டுகின்றனவாக அமைகின்றது. அதற்கும் மேலாக அச் செயல்கள் ஒவ்வொன்றிற்கும் குறியீட்டுத் தன்மை காணப்படுகிறது.

நிகழும் செயல்கள் யாவுமே ஏதோ ஒருவகையில் ஒடுங்குதல், மறைதல், ஒளிகுன்றுதல், செயல்குறைவு, போன்றவற்றை எடுத்துரைப்பதாக இருக்கின்றன. அலைகள்கூடத் தங்கள் செயல் ஒடுங்கி ஆரவாரமின்றி அடங்குகின்றன. பரதவர்கள் திமில் தொழிலை – அதாவது வலைவீசி மீன்பிடிக்கும் செயலைவிட்டு வீட்டுக்குச் செல்கின்றனர். அன்றிற் பறவைகளும் பனைமரத்தின் அகமடலில் ஓய்வு கொள்கின்றன. மலர்கள் கூம்புகின்றன. மாலைநேரம் இருளடைந்து செக்கர் தோன்றுகிறது.

இப்படி இங்கு அமையும் காட்சிகள் யாவுமே கூம்புதலையும் ஓய்வையும் குறிக்கும் படிமங்களாகவும், அதேசமயம் குறியீடுகளாகவும் உள்ளன.
தலைவி மட்டும், தன் தலைவனோடு இல்லத்தில் இருக்க வேண்டியவள், தலைவன் இல்லாததால் தவிக்கிறாள். அவளது உணர்வுகள் ஓய்வுபெறுவதற்கும் குறைவதற்கும் மாறாக எழுச்சி பெறுகின்றன என்று முரண்பட இக்காட்சி அமைகிறது. கூம்பும் செய்கைகள் அனைத்துமே தலைவன் தலைவியை மறத்தல், அல்லது நீண்ட நாள் பிரிந்திருத்தல் என்பதற்கு இணையாக அமைகின்றன. இப்படி இப்பாடல் குறியீட்டுத் தன்மை கொண்ட படிமங்களால் நிரம்பிக் காணப்படுகிறது.

படிமக்காட்சிகள் உருவாக உவமைகள் மிகுதியாக உதவுகின்றன. அணிகளிலே தலையானது உவமையணி எனக்கூறுவர்.

எஃகுற்று
இருவேறாகிய தெரிதரு வனப்பின்
மாவின் நறுவடி போலக் காண்தொறும்
மேவல் தண்டா மகிழ்நோக்கு உண்கண் (அகம்.29:5-8)

இலக்கியங்களில் மகளிர் கண்களுக்கு மாவடுவை உவமையாகக் கூறுவர். சங்க இலக்கிய ஆட்சியில் ஒரு வேற்றுமையைக் காணலாம். பிற்காலத்தில் கண்களுக்கு வெறும் மாவடுவை உதாரணமாகக் கூறும்போது அதில் சிறப்பில்லை. மாவடுவினைக் கத்தியால் இரு பாதியாக வெட்டினால் அந்த அமைப்பு கண்ணைப் போலவே தோன்றும். மாவடு இரு துண்டுகளாக்கப் படும்போது தான் கண்ணின் கருவிழிக்கும் மற்ற வடிவமைப்புக்கும் ஏற்ற உவ மையாகப் பொருத்தம் பெறுகின்றது. இது சிறப்பான காட்சிப் படிம மாகவும் அமைகிறது.

உவமை போலவே வேறு பல அணிகளும் படிம உருவாக்கத் திற்குத் துணைபுரியக் கூடியன. தொடக்கத்தில் பிறிதுமொழிதல் எவ்விதம் குறியீட்டுத் தன்மைக்கும் படிமத்தன்மைக்கும் உறுதுணையாக நிற்கின்றது என்பது எடுத்துக்காட்டப்பட்டது.

பகுவாய் வராஅல் பல்வரி இரும்போத்துக்
கொடுவாய் இரும்பின் கோள்இரை துற்றி
ஆம்பல் மெல்லடை கிழியக் குவளை
கூம்புவிடு பன்மலர் சிதையப் பாய்ந்தெழுந்து
அரில்படு வள்ளை ஆய்கொடி மயக்கித்
தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது
கயிறிடு கதச்சேப் போல மதமிக்கு
நாட்கயம் உழக்கும் … (அகம்.36: 1-8)

மருத நிலத்தின் வளத்தை விளக்க விரும்பிய நக்கீரர் வரால் மீனின் வலிமையையும் செருக்கையும் விவரிக்கிறார். மீன் பிடிப்பவரின் தூண்டிலுக்கு வயப்படாமல், அதில் மாட்டியிருந்த இரையை மட்டும் தின்று, பல் வகைக் கொடிகளையும் சிதைத்து, அவர்கள் தூண்டிலை இழுக்க இழுக்க வராமல் பொய்கையையே கலக்கிவிடுகிறதாம் ஒரு வாளைமீன். இதை விளக்கும் உவமை யாக மற்றொன்றைக் கூறுகின்றார். கயிற்றால் பிணித்து இழுக் கும் போது இழுப்போரை அலைத்து ஆட்டும் சினம் கொண்ட எருதுபோல் அந்த வரால் மீனும் கலக்குகிறதாம். இது சிறந்த உவ மையாகவும், கருத்தை விளக்கும் படிமமாகவும் அமைந்துள்ளது. உவமையும், அது விளக்கும் உவமேயமும் என இரண்டுமே சிறந்த படிமங்களாக அமைவதைக் காணமுடியும்.
உவமையும் பிறிதுமொழிதலையும் போன்றே பிற அணிகளும் படிம உருவாக்கத்திற்குத் துணை செய்யக்கூடியவை என்பதை நாம் வேறு பாக்களைக் கொண்டுஅறிய முடியும். படிமங்கள் பல, குறியீடுகளாக ஆக்கம் பெறும் தன்மையுடையவை. ஆனால் குறியீடுகள் அனைத்தும் படிமங்கள் ஆகமாட்டா என்பதை மட்டும் நினைவில் வைக்க வேண்டும்.

 

 

இலக்கியம்