கல்வி-கேள்விகள். கேள்வி 3

(3)   கடலென கற்றறிந்து தெளிதலின் இன்பம் எப்படி, எதனால் மாயமாயிற்று? அறிவும் வேட்கையும் இருந்தாலும் நல்ல கல்வி என்பது எல்லோருக்கும் எட்டாக் கனியாக இருப்பதாலா?

இதில் உள்ள இருபகுதிகளில் முதல் பகுதிக்கு விடை:
“கடலெனக் கற்றறிந்து தெளிதலின் இன்பம்” என்பதெல்லாம் வெகுமக்களுக்கும் கீழ்த்தட்டு மக்களுக்கும் வெற்று வார்த்தைகள். இவை படித்த ஒருசிலரின் பிதற்றல்கள். நிலவுடைமைக் காலத்தில்-விஜயநகர ஆட்சி வந்து நமது ஊராட்சி முறையை அழிக்கும்வரை-பெரும்பான்மை மக்கள் தங்கள் தங்கள் குலத்தொழில்களைச் சிறப்பாகச் செய்து ஓரளவு நல்ல வாழ்க்கை வாழ்ந்தனர். பிழைப்புக்கு மேற்பட்ட ஒரு தேவையை (இதை ஆன்மிகநாட்டம் என்று வைத்துக் கொள்ளுங்களேன்) அவர்கள் உணர்ந்தபோது கற்றோரின் உரைகளை, சொற்பொழிவுகளைக் கேட்டுத் தெளிவு பெற்றனர். அதனால்தான் வள்ளுவர் கல்விக்கு அடுத்தபடி கேள்வி என்ற அதிகாரத்தை வைக்கிறார். பெரும்பான்மை மக்களுக்குப் பழங்காலத்தில் “கேள்வி”தான் வழி.
எந்தக் காலத்திலும் கற்றறிந்து தெளியும் இன்பம்—இது பெரும்பாலும் இலக்கியக் கல்வியைத்தான் குறிக்கிறது—ஒரு சிலருக்கே உரியதாக இருந்தது. கல்வியில் உண்மையான நாட்டம் கொண்ட, இலட்சிய பூர்வமான சிலர், வயிற்றுப் பிழைப்பை மீறியும் இவ்வித முயற்சியில் ஈடுபட்டனர் என்பது உண்மை.

மிகப் பலருக்குக் கல்வி என்பது எந்தக் காலத்திலும் பிழைப்புக்கானதோர் வழி. அவ்வளவுதான். இன்றும் அப்படித்தான். அதனால்தான் இன்று மாணவர்களின் பெற்றோர்கள் தாங்கள் எந்தக் கல்வியினால் வேலை வாய்ப்பு கிடைக்குமோ அதைத் தேடி அலைகின்றனர், அதை அடையும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். சிபிஎஸ்இ கல்விமுறை, பன்னாட்டுக் கல்விமுறை போன்றவற்றைக் கையாளும் பள்ளிகளில் இளம் வயதிலேயே நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் சக்திக்குமீறியும் இலட்சக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளைச் சேர்க்கின்றனர்.
இதில் இரண்டாவது கேள்விக்கு விடை:
“அறிவும் வேட்கையும் இருந்தாலும் நல்ல கல்வி என்பது எல்லோருக்கும் எட்டாக் கனியாக இருப்பதாலா?“ என்பது நீங்களே தருகின்ற சுவையான விடைதான். ஆம். நல்ல கல்வி என்பது எல்லாருக்கும் எட்டாக் கனியாகத்தான் நம் நாட்டில் இருக்கிறது. ஆனால் நல்ல கல்விக்கான அறிவும் வேட்கையும் சிறு வயதில் நம் நாட்டிலோ (ஏன் எந்த நாட்டிலும்தான்) தூண்டப்படுகின்றனவா? இருபதாம் நூற்றாண்டில் உலகளாவிய பெருமுதலாளித்துவம் ஏற்படத் தொடங்கிவிட்ட பிறகு கல்வி என்பது முழுமையான ஒரு வியாபாரம் ஆகிவிட்டது. அந்த வியாபாரத்தில் தங்கள் பிள்ளைகளைப் பெற்றோர் ஈடுபடுத்தும்போது அறிவும் வேட்கையும் எங்கிருந்து வருகின்றன? வர முடியும்? அறிவும் வேட்கையும் சிலபேருக்கு இயல்பாக இருக்கலாம். பொதுவாக அவை பிள்ளைகளுக்குப் பள்ளிகளில் தூண்டப்படத்தான் வேண்டும். மிகப் பெரும்பான்மையர்க்கு வாழ்க்கைப் பிழைப்புக்கான ஒருவழிதான் கல்வி.

கேள்வி பதில்