காப்பியக் கதைகள்: ஆபுத்திரன் – பகுதி-2

 

siragu-manimegalaiபுண்ணியராஜன் சாவக நாட்டில் ஆட்சி செலுத்திக் கொண்டிருந்தபோதுதான் சோழநாட்டில் பூம்புகார் நகரில் கோவலனுக்கும் மாதவிக்கும் மகளாக மணிமேகலை பிறந்து வளர்ந்து வந்தாள். தன் தந்தை கோவலன் மதுரையில் பாண்டிய அரசனால் கொலையுண்ட செய்தி கேட்டு அவள் வருந்திக் கொண்டே இருந்ததை மாற்ற நினைத்த அவளுடைய தாய் மாதவி, ஒரு நாள் அவளை ஒரு மாறுதலுக்காக வெளியே அனுப்ப நினைத்தாள். “நீ தொடுக்கும் பூமாலை உன் கண்ணீரால் நனைந்து பூசைக்கு ஆகாததாயிற்று. ஆகவே நீ சோலை சென்று புதுமலர் பறித்துக் கொண்டுவா” என்று அவளை அனுப்பினாள். மணிமேகலை, தன் தோழி சுதமதியோடு பூப்பறிப்பதற்காக உபவனம் என்ற சோலைக்குச் சென்றாள்.

முன்னரே மணிமேகலையை விரும்பியிருந்த அந்நகரத்தரசன் கிள்ளி வளவனுடைய மகன் உதயகுமரன் என்பவன் இதைத் தன் தோழர் மூலமாக அறிந்தான். மணிமேகலையைச் சோலையில் வலிந்து கொண்டுசென்று விடலாம் என்ற எண்ணத்தோடு தேரில் ஏறிவந்தான். சோலையில் அவன் புகுந்ததைக் கண்ட சுதமதி, மணிமேகலையை அங்கிருந்த ஒரு பளிங்கு அறையில் புகச்செய்தாள். (பளிங்கறை என்பது இக்காலத்திலுள்ள கண்ணாடி பதித்த குளிர்சாதன அறையை நமது நினைவுக்குக் கொண்டுவருகிறது. அதற்குள் இருப்பவரை வெளியிலிருந்து பார்க்கமுடியும். ஆனால் அவர்கள் பேசுவதைக் கேட்க முடியாது.) வெளியிலிருந்த சுதமதி, உதயகுமரனுக்குப் பலவிதமான நீதிகளையும் கூறி அவனைத் தடுத்தாள். ஆனால் அவள் நல்லுரைகள் உதயகுமரன் மனத்தில் ஏறவில்லை. “நான் இவள் பாட்டி சித்திராபதி மூலமாக இவளை அடைவேன்” என்று கூறியவாறு அவன் சென்று விட்டான்.

உதயகுமரன் சென்றதும் மணிமேகலை, பளிங்கறையிலிருந்து வெளிவந்து சுதமதியோடு உரையாடிக் கொண்டிருந்தபோது அங்கு மணிமேகலா தெய்வம் வந்தது. (இந்தத் தெய்வம், கோவலனின் குலதெய்வம். இதன் பெயரைத்தான் மணிமேகலை பிறந்தபோது அவளுக்குக் கோவலன் இட்டான்.) தன்னிடம் பக்தி பூண்டிருந்த கோவலனின் மகளைக் காக்கவேண்டும், அவள் மனம் உலகியலில் ஈடுபடலாகாது, உதயகுமரனிடம் சென்றுவிடலாகாது என்று அத் தெய்வம் கருதியது. எனவே ஒரு பெண் உருவத்தில் அவர்களிடம் வந்தது. அவர்களை நோக்கி, “நீங்கள் இங்கிருந்தால் உதயகுமரனால் உங்களுக்குத் துன்பம் உண்டாகும், ஆகையால், முனிவர்கள் வசிக்கும் சக்ரவாளக் கோட்டத்திற்குச் செல்லுங்கள்” என்று கூறியது. அங்குச் சென்ற மணிமேகலையும் சுதமதியும் பொழுது சாயவே உறங்கலாயினர். மணிமேகலா தெய்வம், அப்போது மணிமேகலையை மட்டும் மயங்குமாறு செய்து அவளை எடுத்துக்கொண்டு ஆகாயவழியில் தெற்கில் முப்பது யோசனை தூரம் சென்றது. அங்கே மணிபல்லவம் என்னும் தீவில் அவளை விட்டுவிட்டுத் திரும்பியது. சுதமதியிடம் வந்து, மணிமேகலையைத் தான் மணிபல்லவத் தீவில் விட்டதைக் கூறி, “கவலைப்படாதே, மணிமேகலை பூர்வஜென்ம நிகழ்ச்சிகளை அறிந்துகொண்டு, ஏழாம் நாள் திரும்பி வருவாள்” என்று சொல்லிச் சென்றது. சுதமதியும் மாதவியிடம் சென்று நிகழ்ந்ததைக் கூறவும், இருவரும் மணிமேகலையின் நினைவாகக் காத்திருக்கலானார்கள்.

உறக்கம் நீங்கி எழுந்த மணிமேகலை, தான் இருக்கும் இடமும் தோற்றமும் வேறாக இருக்கக் கண்டாள். எனவே மனத்தில் திகைப்புடன் அந்தத் தீவில் எங்கேனும் சுதமதி இருப்பாளோ என்று கருதி, அவளைத் தேடி அலைந்தும், காணாமல் வருந்தி, தன் தந்தை கோவலனின் நினைவாகப் புலம்புபவள் ஆயினாள். அப்போது அவள் கண்முன்பு புத்த பீடிகை (புத்தரின் பாதப்பதிவுகள் கொண்ட பீடம்) ஒன்று தோன்றியது. அது முன்பு இந்திரனால் இடப்பட்டது. பழம்பிறப்பை உணர்த்துகின்ற தன்மை உடையது. இதைக் கண்ட மணிமேகலை விம்மிதம் எய்தி, கைகளைத் தலைமேல் குவித்து, அதை மும்முறை வலம் வந்து தொழுதாள். அதனால் அவளுக்குத் தனது முற்பிறவி நிகழ்ச்சிகள் தோன்றின. தன்னை மணிமேகலா தெய்வம் அங்குக் கொண்டு வந்ததையும் அறிந்துகொண்டாள். அதனால் அந்த தெய்வம் மறுபடியும் தன்னிடம் வரும் என்று காத்திருந்தாள்.

மணிமேகலை தன் முற்பிறவி வரலாற்றை அறிந்ததனால் பக்குவ நிலை பெற்றிருப்பதை அறிந்த மணிமேகலா தெய்வம் அவளிடம் வந்தது. முற்பிறவியில் அவளுடைய கணவனாக இருந்த ராகுலன் என்பவனே இப்போது உதயகுமரனாகப் பிறந்திருக்கிறான் என்பதைச் சொல்லிவிட்டு, மணிமேகலை, ஆகாய வழியில் பறந்து செல்லவும், உணவின்றியே உயிர்வாழவும், எந்த உருவத்தையும் எடுத்துக் கொள்ளவும் ஆகிய மூன்று வரங்களை அவளுக்கு அளித்துவிட்டுச் சென்றுவிட்டது.

அப்போது அத்தீவில் ஒரு பெண் மணிமேகலையின் எதிரில் வந்தாள். “மிகுந்த துயரத்தோடு இத்தீவில் திரிந்துகொண்டிருக்கும் நீ யார்?” என்று கேட்டாள். மணிமேகலை, தன்  முற்பிறவி, இப்பிறவி வரலாறுகளைக் கூறிவிட்டு, “நீ யார்?” என்று அவளைக் கேட்டாள். “இத்தீவின் அருகில் ரத்தினத் தீவு என ஒன்று இருக்கிறது. அதில் சமந்த கூட மலை என்ற உயர்ந்த மலை ஒன்றிருக்கிறது. அதன் உச்சியில் உள்ள புத்த தேவனின் பாதங்களை தரிசித்து விட்டு இத்தீவுக்கு முன்ஒரு காலத்தில் நான் வந்தேன். அது முதல் இந்திரனின் கட்டளையினால் இங்குள்ள புத்த பீடிகையைக் காத்துவருகிறேன். என் பெயர் தீவதிலகை” என்று அவள் கூறினாள். பிறகு மணிமேகலையை நோக்கி, “இந்த புத்தபீடிகைக்கு முன்னே குவளை மலர்களும் நெய்தல் மலர்களும் மிகுந்த கோமுகி என்னும் பொய்கை இருக்கிறது. அப்பொய்கைக்குள் அமுதசுரபி என்னும் அட்சய பாத்திரம் ஒன்று அமிழ்ந்து கிடக்கிறது. அது ஒவ்வொரு ஆண்டும், புத்தருடைய பிறந்த நாளாகிய வைகாசிப் பௌர்ணமி அன்று  மட்டும் மேல் எழுந்து வரும். இன்று புத்த பூர்ணிமை நாள். அது தோன்றுகின்ற வேளையும் இதுவே. இப்போது அப்பாத்திரம் உன் கைக்கு வரும். அதில் எடுக்கும் உணவு அள்ள அள்ளக் குறையாமல் வந்தவாறிருக்கும், அதன் வரலாற்றைப் பின்னர் அறவண அடிகளிடம் கேட்டறிவாயாக” என்று கூறினாள். அதன்படியே மணிமேகலை அப்பொய்கையை வலம் வர, அட்சய பாத்திரம் அவள் கையில் வந்து சேர்ந்தது. அதைக் கண்ட தீவதிலகை, மணிமேகலையிடம், பசித் துயரத்தின் கொடுமையை எடுத்துரைத்து,

ஆற்றுநர்க்கு அளிப்போர், அறவிலை பகர்வோர்,

ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்

மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை.

மண்திணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே

என்று பசியை ஆற்றுபவர்களின் சிறப்பையும் எடுத்துரைத்தாள்.

இதன்பின் மணிமேகலை சிறிதுநேரம் தீவதிலகையோடு அளவளாவி யிருந்து, பிறகு அவளைப் பணிந்து விடைபெற்றாள். ஆகாயவழிச் செல்லும் மந்திரத்தை உச்சரித்து, பறந்துசென்று புகார் நகரத்தை அடைந்தாள். தன் வருகையை எதிர்பார்த்திருந்த மாதவி, சுதமதி ஆகியோர் முன்னிலையில் சென்று தோன்றினாள். தனது முற்பிறப்புக் கதையை அவர்களுக்குக் கூறி, கையிலிருந்த அட்சய பாத்திரத்தையும் காட்டி, “இது ஆபுத்திரனின் திருக்கரத்தில் இருந்த அமுதசுரபி. இதை வணங்குங்கள்” என்று கூறி வணங்கச் செய்தாள். பின்னர் தவவழியை மேற்கொள்ளும் பொருட்டு, அறவண அடிகளை அடைந்தாள். தனக்கு தர்ம உபதேசம் புரிந்து, ஆபுத்திரன் வரலாற்றையும் கூறவேண்டும் என்று கேட்டாள். அவர், ஆபுத்திரன் வரலாற்றை அவளுக்குக் கூறிவிட்டு, “சிலநாட்கள் கழித்து உனக்கு தர்மோபதேசம் அளிக்கிறேன், அதுவரை நீ இந்த அமுதசுரபியைக் கொண்டு இங்கு பசிப்பிணியை நீக்குவாயாக” என்று உரைத்தார்.

அதன்பின் மணிமேகலை, புகார் நகரத்திலிருந்த ஆதிரை என்னும் கற்புடைய மங்கையின் கையால் அட்சய பாத்திரத்தில் முதன்முதலில் பிச்சைபெற்று, அதிலிருந்து வளரும் உணவினைக் கொண்டு பசித்துவந்தோர் பசியைப் போக்கிவரலானாள். காயசண்டிகை என்னும் வித்தியாதர மங்கையின் யானைத்தீ (பஸ்மக நோய்) எனப்படும் தீராப் பசிநோயையும்  தீர்த்தாள். பிறகு பல விசேட நிகழ்ச்சிகள் அவள் வாழ்க்கையில் நடந்தேறின.

பின்னர் அவள் அறவண அடிகளிடம் விடைபெற்று, ஆகாய வழியே சென்று சாவக நாட்டில் ஒரு நகர்ப்புறத்தில் ஒரு சோலையில் இருந்தாள். அங்கிருந்தோரிடம், அது நாகபுரம் என்னும் நகரத்தின் புறத்திலிருந்த சோலை என்றும், அதை ஆள்பவன் புண்ணிய ராஜன் என்றும் அறிந்து இருந்தாள். “புண்ணிய ராஜன் பிறந்த நாளாக, இந்நாட்டில் மழைவளம் பிழைத்ததில்லை. பூமியும் மரமும் தங்கள் பலன்களைத் தக்கவாறு அளிக்கின்றன. உயிர்கள் நோயின்றிச் சுகமாக வாழ்ந்து வருகின்றன” என்று மேலும் அந்த அரசனின் பெருமைகளைக் கூறினர். அச்சமயம், புண்ணிய ராஜன், தன் தேவியோடு அந்தச் சோலைக்கு வந்தான். அங்கே தர்ம சாவகன் என்ற முனிவனிடம் தர்மோபதேசம் கேட்டு, அவனருகிலிருந்த மணிமேகலையைப் பற்றி வினவினான்.

அப்போது  அருகிலிருந்த அமைச்சன், “முன்னொரு காலத்தில் கிள்ளிவளவன் என்னும் அரசனோடு  நட்புக்கொள்ள அறவண அடிகள் காவிரிப்பூம்பட்டினம் சென்றார். அவர் திரும்பியபோது இப்பெண்ணின் வரலாற்றை விளக்கி உரைத்தார் என்று முன்னரே உங்களுக்குக் கூறியிருக்கிறேன், அந்தப் பெண்ணே இவள்” என்று கூறினான்.

உடனே மணிமேகலை, “அரசே, முற்பிறப்பில் உன் கையிலிருந்த அட்சய பாத்திரம்தான் இப்பிறப்பில் என்னிடம் வந்து சேர்ந்தது. நீ இப்போது முற்பிறப்பை அறியாமையினால் தடுமாறுகின்றாய். மணிபல்லவம் சென்று அங்குள்ள புத்தபீடிகையைத் தொழுதால் உன் முற்பிறப்பை அறியலாம். உடனே வருவாயாக” என்று சொல்லிவிட்டு, தான் மட்டும் ஆகாய மார்க்கமாக முன்னதாக மணிபல்லவத்திற்குச் சென்றுவிட்டாள்.

புண்ணிய ராஜன், அரண்மனைக்குச் சென்று தன்னை வளர்த்த தாயாகிய அமர சுந்தரி என்பாளிடம் தன் வரலாற்றைக் கேட்டான். அவள் அவன் பிறப்பு வரலாற்றைக் கூற, அவன் வருத்தமடைந்து, அரசாட்சியில் வெறுப்புக் கொண்டு தான் துறவு எய்தி, மணிபல்லவம் செல்லவேண்டும் என்ற ஆசையை வெளியிட்டான்.

அதைக் கேட்ட ஜனமித்ரன் என்ற மந்திரி, “அரசே! வாழ்க! என் சொற்களைக் கேட்டருள வேண்டும். உன்னை நமது முன்னாள் அரசர் பெறுவதற்கு முன்பு இந்நாட்டில் பன்னிரண்டு ஆண்டுகள் மழைபெய்யாமல் பஞ்சமாக இருந்தது. அப்போதுதான் நீ கோடைகாலத்தில் மழைபெய்தாற்போல இங்கே தோன்றினாய். நீ தோன்றியபின் இந்நாட்டில் எல்லா வளங்களும் நிரம்பின. அதிலிருந்து இன்றுவரை எல்லாவகைச் சுகங்களோடும் இந்நாட்டு மக்கள் வாழ்ந்து வருகின்றனர். நீ இப்போது நீங்குவாயானால் எல்லா உயிர்களும் தாயைப் பிரிந்த கன்றுகளைப் போல் வருந்தும். நீ உன் நலம் ஒன்றை மட்டுமே கருதி நாட்டைவிட்டுப் பிரிவது நன்றல்ல” என்று கூறினான். புண்ணிய ராஜன், “மணிபல்லவத்திற்குச் சென்று புத்தபீடிகையை வணங்க வேண்டும் என்ற ஆவல் கரைகடந்து என் உள்ளத்தில் எழுகிறது. ஆகவே அங்கு நான் சென்று திரும்பிவரும் காலம்வரை நீ எனது சார்பாக இந்நாட்டைப் பாதுகாப்பாயாக” என்று கூறிக் கப்பலேறிச் சென்று மணிபல்லவத்தையும் அடைந்தான்.

அங்கு மணிமேகலை அவனுக்கு புத்தபீடிகையைக் காட்ட, அவன் அதனை வலம் வந்து துதித்துத் தன் முற்பிறவி வரலாற்றை அறிந்தான். தனக்கு அமுதசுரபியை அளித்த சிந்தாதேவியைத் துதித்தான். பிறகு அங்கிருந்து சென்று ஒரு புன்னை மர நிழலில் இருந்தான். அப்போது அத்தீவின் காவல் தெய்வமான தீவதிலகை, ஆபுத்திரனிடம் வந்தாள். “அக்காலத்தில், இத்தீவில், உன்னைத் தனியே விட்டுவிட்டுக் கப்பல் ஏறிச்சென்ற ஒன்பது செட்டிமார், பின்பு உன்னைக் காணாமல் இத்தீவுக்கு வந்தார்கள். நீ இறந்து போன வரலாற்றை அறிந்து, அவர்களும் உண்ணாவிரதம் இருந்து இறந்துபோனார்கள். அவர்களுடைய உடல் எலும்புகள் இவை. அவர்களுடன் வந்தவர்கள் சிலரும் பிரிவாற்றாமையால் உயிர்துறந்தார்கள். இவை அவர்களுடடைய எலும்புகள். இதோ இந்தப் புன்னைமர நிழலில்தான் உனது எலும்புகளும் புதையுண்டிருக்கின்றன. இவ்வாறு, உன் உயிரையும் போக்கிக் கொண்டு, உனக்கு இரங்கிய பிறஉயிர்களையும் கொலைக்கு ஆளாக்கிய நீ அல்லவா இப்போது புண்ணிய ராஜன் எனச் சாவக நாட்டை ஆளுகின்றாய். இது என்ன வியப்பு!” என்று கூறினாள்.

இவற்றைக் கண்ட புண்ணிய ராஜன் ஆச்சரியமும் துக்கமும் கொண்டு மயங்கி நின்றான். தீவதிலகை, பின்னர் மணிமேகலையை நோக்கிக் கூறலாயினாள். “மணிமேகலையே! உனது பிறப்பிடமாகிய பூம்புகாரைக் கடல் கொண்டது. சில நாட்களுக்கு முன்னர் காவிரிப்பூம்பட்டினத்து அரசனான கிள்ளிவளவன், நாகநாட்டரசன் வளைவணன் என்பவனின் மகளாகிய பீலிவளையைக் காதலித்துக் கந்தர்வ மணம் புரிந்துகொண்டான். ஒரு நாள் பீலிவளை, அரசனிடம் சொல்லாமல் தன்னிடத்திற்குச் சென்றுவிட்டாள். அரசன் வருந்தி அவளை எங்குத் தேடியும் காணாமல் திகைத்திருந்தான். அப்போது முக்காலமும் உணர்ந்த சாரணன் ஒருவன் அங்கு வர, அவனைக் கண்டு வினவினான். அவன், ‘பீலிவளை இனி உன்னிடம் வரமாட்டாள். உனக்கு அவள் வயிற்றில் பிறக்கும் மகன்தான் உன்னிடம் வருவான். ஆகவே நீ  இது பற்றி வருந்தாதே’ என்று கூறினான்.

அரசனைப் பிரிந்த பீலிவளை, ஓர் ஆண் மகவைப் பெற்றாள். அக்குழந்தையோடு சில நாட்களுக்கு முன் இத்தீவுக்கு வந்தாள். புத்தபீடிகை யை வலம் வந்து தொழுதுகொண்டிருக்கும்போது, கம்பளச் செட்டி என்னும் வணிகனின் கப்பல் இந்தத் தீவுக்கு வந்தது. பீலிவளை அவனிடம் சென்று, குழந்தையைக் கொடுத்து, “இவன் சோழ அரசனின் மகன். இவனை அரசனிடம் சேர்ப்பது உன் கடமை” என்று கூறினாள். அவன் மகிழ்ச்சியுடன் அக்கடமையை ஏற்றுக்கொண்டான். பிறகு அவன் கப்பலைச் செலுத்திக் கொண்டு சோழநாட்டை நோக்கி வரும் வேளையில், இடைவழியில் கப்பல் உடைந்து போயிற்று. பலர் மாண்டு போயினர். தப்பிப் பிழைத்த சிலர் காவிரிப் பூம்பட்டினம் வந்து, குழந்தையைப் பீலிவளை செட்டியிடம் ஒப்படைத்ததையும் கப்பல் உடைந்த விஷயத்தையும் கூறினர். அரசன் மிக வருத்தமடைந்து கடற்கரை ஓரமெல்லாம் ஓடித் தேடித் திரிந்துகொண்டிருந்தான்.

அதனால் இந்திரவிழா எடுக்க வேண்டிய காலத்தில் எடுக்காமல் தவறிப்போயிற்று. இதனால் மணிமேகலா தெய்வத்தின் சாபத்தினால், கடல் பொங்கிவந்து புகார்நகரத்தை அழித்தது. அரசன் முதலானோர் வேறிடம் சென்றனர். உன் தாயும் தோழியும் அறவண அடிகளோடு வஞ்சி நகரத்திற்குச் சென்றிருக்கிறார்கள். ஆகவே நீ வஞ்சிமா நகரம் செல்வாயாக” என்று கூறினாள். அதன்படியே மணிமேகலையும் வஞ்சிமாநகரம் சென்று அங்கு அறவண அடிகளைக் கண்டு, அறவுரை பெற்று, அங்கிருந்த பல மதத்தினரையும் தன் வாதத்திறமையால் வெற்றிகொண்டு வாழ்ந்திருந்தாள்.

ஏறத்தாழ இங்குச் சொல்லப்பட்ட ஆபுத்திரன் கதை, மணிமேகலைக் காப்பியக் கதையையும் உள்ளடக்கியிருக்கிறது. இதில் வருகின்ற மீயியற்கைச் செய்திகளை விட்டு விட்டாலும் நமக்குச் சில செய்திகள் தெளிவாகின்றன.

அக்காலத்தில் அரசர்களை (அல்லது தெய்வங்களை) மட்டுமே காப்பியத் தலைவர்களாகக் கொண்டு காப்பியம் படைப்பது வழக்கம். அறிஞர்கள் எல்லாருமே மணிமேகலை என்ற பெண்ணை, அதுவும் கணிகை குலப்பெண்ணைச் சீத்தலைச் சாத்தனார் தலைவியாகக் கொண்டு காப்பியம் வரைந்த புரட்சியைப் பாராட்டியுள்ளனர். அது மட்டுமன்று. அந்தக் காலத்திலேயே சிறைச்சாலையில் உள்ளவர்களுக்கும் பசியாற உணவு தந்து அதை அறச்சாலையாக மாற்றலாம் என்று சிந்தித்தவர் சீத்தலைச் சாத்தனார்தான்.

மணிமேகலை வாழ்ந்த காலத்தில்தான், சோழன் கிள்ளிவளவன் காலத்தில்தான் பூம்புகார் நகரம் கடற்கோளால் அழிந்தது என்பது. சிலப்பதிகாரக் காப்பியத்தில் பெருமையுடன் விளங்கிய இந்த நகரம், மணிமேகலைக் காப்பியக் காலத்தில் அழிந்துவிட்ட செய்தியைக் கேள்விப் படுகிறோம்.

கிள்ளிவளவன், பீலிவளை என்னும் நாகநாட்டரசியைச் சேர்ந்து ஓர் ஆண்குழந்தையைப் பெற்றான் என்ற செய்தி. இந்தக் குழந்தைதான் பின்னர் தொண்டைமானாக (பல்லவ அரசனாக)த் தொண்டை மண்டலத்தை ஆளலாயிற்று என்பது செய்தி. தொண்டைமான் அல்லது பல்லவன் என்ற பெயருக்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன.

பௌத்த மதம் பசிப்பிணியைத்  தீர்ப்பதில் காட்டிய அக்கறை. சீத்தலைச் சாத்தனார் உலகத்தின் பெரும்பான்மைத் துன்பங்களுக்குக் காரணம், பசி என்பதை உணர்ந்தார் ஆகவே ஏழைபாழைகளுக்கு எவ்விதமேனும் உதவ வேண்டும் என்றும் கருதினார். ஆனால் அக்காலத்தின் போக்குப்படி அவரால் அட்சய பாத்திரம் என்ற ஒன்றைக் கற்பனை செய்து அதன் வாயிலாக ஏழைகள் யாவருக்கும் சோறிட்டு அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்றுதான் சிந்திக்கமுடிந்தது. ‘உடோபியா’ போன்ற ஒரு கற்பனைத் தீர்வுதான் இது. ஆனால் இந்த அளவுகூட இந்தியாவில் வேறெந்த மொழிக் கவிஞனும் ஏழைகளின் நிலையைப் பற்றி எண்ணவும் இல்லை, அதற்கு ஒரு தீர்வுகாண வேண்டும் என்று கருதவும் இல்லை. அவர்கள் எல்லாம் அரசர்களைப் புகழ்ந்துபாடிப் பரிசு வாங்கிக் கொண்டு (உதாரணத்திற்கு, காளிதாசனைப் போல) பெருஞ்செல்வத்தோடு அரசவைகளில் மிகச் சுகமாக வாழ்ந்துகொண்டிருந்தார்கள். இந்த வகையில் சீத்தலைச் சாத்தனாரின் தனி மாண்பு போற்றத்தக்கதாகிறது.

பொதுவாக இந்தக் காப்பியத்தில் பிராமணர்களின் இழிகுணங்களும், யாகங்களும் வெறுக்கப்படுகின்றன. செட்டியார்கள் காப்பியம் முழுவதும் முக்கியத்துவம் பெறுகின்றனர். முக்கியமாக, மணிமேகலை அட்சய பாத்திரத்தில் முதன்முதல் உணவு பெறுவது ஆதிரை என்ற கற்புக்கரசியிடத்திலிருந்து. கடல்கடந்து வணிகம் செய்வதற்காகச் சென்ற ஒரு செட்டியாரின் மனைவி அவர் என்பது கருதத் தக்கது. கடற் பயணங்களும் கடல்வணிகமும் காப்பியம் முழுவதும் நிறைந்துள்ளன. அக்கால வைதிக மதம் கடற்பயணங்களைத் தடுத்தது என்பதும் நினைக்கத் தக்கது.

கடைசியாக, பௌத்த மதத்திற்கென்றே உலகம் முழுவதிலும் உள்ள ஒரே பழைய காப்பியம் இதுதான். இந்தியாவிலோ, பௌத்த மதம் பரவிய பிற நாடுகளிலோ அதற்கான காப்பியம் ஒன்று தோன்றவில்லை. இதனால் மணிமேகலைக் காப்பியத்தின் பெருமை மேலும் பொலிவு பெறுகிறது.

(தொடரும்)

இலக்கியம்