காப்பிய சிற்றிலக்கிய கால சமுதாயப் பின்புலங்களும் இலக்கியப் போக்குகளும்

kappiya-sitrilakkiya-2
இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கக் கால்பகுதியில் இருக்கும் நமக்குக் கவிதை பற்றிய சிந்தனைகள் முற்காலத்திய சிந்தனைகளிலிருந்து பெரிதும் மாறியிருக்கின்றன. இன்று நாம் வாழ்க்கைக்கு அர்த்தம் தேவை, அழகு தேவை, சுதந்திரம் தேவை என்றெல்லாம் நோக்குகின் றோம். சகமனிதர்களின் சமவாழ்விலிருந்துதான் இவை பிறக்கின்றன என்பதையும் உணர்ந்தி ருக்கிறோம். முற்காலத்தில் இப்படிப்பட்ட சிந்தனை கவிஞர்களுக்குள் இருந்ததா என்பது கேள்விக்குரியது. பெருங்கவிஞர்களிடையே இப்படிப்பட்ட சிந்தனை ஓரளவு முகிழ்த்திருந்தாலும், புராணங்களும் சிற்றிலக்கியங்களும் பாடிய கவிஞர்களிடம் இது மலர்ந்திருக்கமுடியாது என்று தோன்றுகிறது. காரணம், இலக்கியங்கள் எழுந்த காலப் பகுதிக்கும், அவ்விலக்கியங் களின் உள்ளடக்கம் உருவம் பண்பு முதலியவற்றுக்கும் இடையில் உயிரியக்கமான பிணைப்பு உண்டு என்பதை நாம் அறிவோம்.

தமிழிலக்கியத்தைக் காலப்பகுதிகளாகப் பகுத்த அறிஞர்கள், சங்க இலக்கிய காலம், அறநூல்கள் காலம், முற்காப்பியக் காலம், பக்தி நூல்கள் காலம், பிற்காப்பியக் காலம், சிற்றிலக்கிய, தலபுராணக்காலம், பிறசமய நூல்கள் எழுந்த காலம், தற்காலம் என்றெல்லாம் பலவேறு வகைகளில் பகுத்துள்ளார்கள்.
வையாபுரிப்பிள்ளை, தமிழ்க்காப்பிய காலத்தை முதற்காப்பிய காலம், இரண்டாவது காப்பிய காலம் என இரண்டாகப் பகுத்தார். இதற்குக் காரணம், சிலப்பதிகாரம், மணிமேகலை தோன் றிய காலத்திற்குப் பல நூற்றாண்டுகள் பிற்பட்டுத்தான் பெரியபுராணம், கம்பராமாயணம் போன்றவை தோன்றியிருக்கின்றன. இடையில் பக்தி இலக்கிய காலம் நுழைகிறது. ஒவ்வொரு காலப்பகுதிக்கும் ஒரு மையம் இருக்கிறது.
சங்கக்கவிதைக்கான காலம், பக்திஇயக்கத்துக்கான காலம், தற்காலம், இவை எவற்றின் கால எல்லையையும்விடக் காப்பிய சிற்றிலக்கியக் கால எல்லை பெரியது. சிலப்பதிகாரம் என்ற காப்பியம் தோன்றிய காலம் ஏறத்தாழ கி.பி.இரண்டாம் அல்லது மூன்றாம் நூற்றாண்டு என்று வைத்துக் கொண்டாலும், அதிலிருந்து, சிற்றிலக்கியங்கள் மிகுதியாகப் பாடப்பட்டுவந்த பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை இந்தக் காலப்பகுதி-ஏறத்தாழ 16 நூற்றாண்டுகள் விரிகிறது. இந்ததக் காலப்பகுதிக்குள் பக்தி இலக்கியக் காலமும் அடங்கிவிடுகிறது. ஆகவே இந்த மொத்தக் காலப்பகுதிக்கும் சமுதாயப் பின்புலம், இலக்கியப் போக்குகள் என்று சொல்வது, சங்கஇலக்கியத்தையும் தற்கால இலக்கியத்தையும் தவிர ஏறத்தாழ தமிழ் இலக்கியம் முழுவதை யும் பார்ப்பதே ஆகும்.
தமிழகத்தில் காலந்தோறும் நிலவிவந்துள்ள சாதியமைப்பு முறை, தமிழ் இலக்கியத்தைப் பாதித்த மிக முக்கியமான கூறு ஆகும். குறைந்தபட்சம் சிலப்பதிகாரக்காலம் முதலாக, தமிழகத்தின் பொருளாதாரத்திற்குரிய அடிப்படையாக நிலவுடைமை அமைப்பு இருந்தது. (நிலவுடைமை அமைப்பைப் பண்ணைவிவசாய முறை, பண்ணையடிமை முறை, நிலமானிய முறை என்றெல்லாம் சொல்வார்கள். ஐரோப்பாவில் இது படைமானிய முறை என்றும் சொல்லப்பட்டது.) இத்துடன் சாதி அடிப்படையும் சேர்ந்ததுதான் கார்ல் மார்க்ஸ் குறிப்பிட்ட ‘ஆசியப் பொருளாதாரம்’ என்பது.
சாதிய முறைக்கு அடித்தளமாக நிலவுவது பார்ப்பனியம். இதற்கு நிகராகத் தமிழ் இலக் கியத்தில் காணப்படும் இன்னொரு போக்கு பெண்ணடிமைத் தனம். சங்ககாலம் முதலாகவே, தொல்காப்பியம் முதலாகவே தமிழ் இலக்கியம் பெண்ணை ஆணுக்கு நிகராகத் தமிழர்கள் கருதியதில்லை என்பதைக் காட்டுகின்றது. தமிழின் முதற்காப்பியமான சிலப்பதிகாரம், பெண்ணை அடிமைப்படுத்துகின்ற கருத்துகளைக் கொண்ட காப்பியமே என்பதில் சற்றும் சந்தேகமில்லை. கற்பு என்பதே பெண்களை அடிமைப்படுத்துகின்ற நோக்கு என்று இன்று நாம் விவாதிக்கிறோம். தனியுடைமை-சமூகத்தின் நன்மைக்கு மாறாகத் தனி ஒருவனே மிகுதியாகச் சொத்துகளைச் சேர்த்துக் கொள்வது அறத்திற்கு மாறானது என்ற கருத்து இருபதாம் நூற்றாண்டில்தான் சற்றே பரவலானது. பழைய இலக்கியங்கள் அனைத்தும் தனியுடைமையைப் போற்றுவன என்பதில் சந்தேகமில்லை. அரசர்கள், குறுநிலத் தலைவர்கள் முதல் சிறிய ஊர்த்தலைவன், ஜமீன்தார் வரை அனைவரையும் போற்றும் போக்கையே அவை கொண்டுள்ளன.
ஆனால்: இவை அந்தக் காலப்போக்கை வைத்துக் காணும்போது, இன்னும் குறிப்பாக சமஸ்கிருத இலக்கியம், கிரேக்க இலக்கியம் முதலிய அக்கால இலக்கியங்களையும் ஒப்ப வைத்துப் பார்க்கும்போது பெரிய குறைபாடுகள் அல்ல.
தனியுடைமைக்கும் அதிகாரத்திற்கும் எதிரான குரலையும் பழங்கால முதலாகவே தமிழ் இலக்கியத்தில் காணமுடியும். சிலப்பதிகாரக் கண்ணகி, அரசனையும் கடவுள்களையும் கேள்விக்குட்படுத்துகிறாள். அதேசமயம், கணவனின் தவற்றையும் மென்மையான முறையில் கூறி இடித்துரைக்கிறாள். மணிமேகலை சமதர்மத்துக்காக, அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காகப் போராடினாள். சித்தர்கள் எந்தவிதத் தனியுடைமை, அதிகாரம் எதையும் ஏற்றவர்கள் அல்லர்.
உண்மையில் தமிழ் மண், அதன் இலக்கிய வரலாறு மிகவும் போற்றத்தக்கது. இளங்கோ வையும் கம்பரையும் சித்தர்களையும் தோற்றுவித்தது இந்த மண்ணே அல்லவா?
அறநூல்கள் காலத்துக்குப் பின் பல்லவர்கள் ஆட்சி தமிழ் மண்ணில் ஊன்றியது. வடக்கில் பல்லவ அரசர்களும் தெற்கில் பாண்டிய அரசர்களும் ஆண்டனர். இவர்கள் முதலில் பெரும்பாலும் சமணசமயத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். பின்னர் பக்திக்காலத்தில்தான் இவர்கள் வைதிகசமயத்தைச் சேர்ந்தவர் ஆயினர். வைதிக-அவைதிக சமயப் போராட்டங் களை வேளாண்குலத்தவர்கள்-வணிகர்கள் போராட்டமாகக் கண்டு, இறுதியில் வேளாளர் களின் வெற்றியை மன்னர்களின் வைதிக மதமாற்றம் குறிப்பதாக விளக்கும் வரலாற்றாசிரியர்கள் உண்டு.

kappiya-sitrilakkiya-3
காஞ்சியும் மதுரையும் சமணத்துறவிகளின் இருப்பிடங்களாக விளங்கின. சமணசமயம் தர்க்க ரீதியான அறிவாலும், சாஸ்திர ஞானத்தாலும், தர்க்கவன்மையாலும் சிறந்து விளங்கிய ஒன்று. இதனை மக்கள் கலைகளைப் பயன்படுத்திய வைதிக சமயங்கள் வெற்றிகொண்டதில் வியப் பில்லை. பொதுவாக மக்கள் மத்தியில் அன்றும் இன்றும், தர்க்க ரீதியான அறிவைவிடக் கவர்ச்சியே வெற்றிபெறுகிறது.

பாண்டிய-பல்லவ மன்னர்கள் சமணர்களாக இருந்த காலத்தில்தான் சிலப்பதிகாரம், மணி மேகலை, சீவகசிந்தாமணி, குண்டலகேசி, நீலகேசி, பெருங்கதை, சூளாமணி போன்ற காப்பி யங்கள் அனைத்தும் இயற்றப்பட்டன. பெருங்காப்பியங்கள் எழவேண்டுமானால் பேரரசர் களின் அமைதியான ஆட்சி வேண்டும் என்பது உலகம் ஒப்பும் அடிப்படை. எனவே பல்லவ-முதற்பாண்டிய மன்னர்களின் காலமே ஐம்பெருங்காப்பியங்களின் காலம் ஆதல் வேண்டும். ஆனால் இவை முதலில் ஐம்பெருங் காப்பியங்களாகக் கருதப்படவில்லை. முதன்முதலில் நன்னூல் உரைகாரராகிய மயிலை நாதர்தான் (இவர் கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டுக்கும் பிற்பட்டவர்) ஐம்பெருங்காப்பியம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். இந்தத் தொடர் சமஸ்கிருதத்தின் பஞ்சகாவியங்கள் என்ற மரபை நமக்கு நினைவூட்டுகிறது. இது மிகப்பிற்கால வழக்கு என்பதில் சந்தேகமில்லை. ஐம்பெருங்காப்பியங்களின் பெயர்கள்-சிலப்பதிகாரம் மணிமேகலை சீவகசிந்தாமணி வளையாபதி குண்டலகேசி என்று ஏறத்தாழ கி.பி. 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருத்தணிகை உலாவில்தான் குறிப்பிடப்படுகின்றன. இவற்றுள், குண்டலகேசி, வளையாபதி ஆகியவற்றை எந்தத் தன்மைகளால் பெருங்காப்பியங்கள் என்று ஏற்றுக் கொண்டார்கள் என்பது தெரியவில்லை. இவற்றில் காப்பியத்துக்குரிய தன்மைகள் அறவே இல்லை.
சிலப்பதிகாரக் கதைக்கூறுகள் சங்க இலக்கியத்தில் உள்ளன. பேகன்மனைவி கண்ணகி கதை சங்க இலக்கியத்தில் வருகிறது. வள்ளல் பேகன், தன் மனைவி கண்ணகி என்பாளை விட்டுவிட்டு நல்லூர்ப் பரத்தை ஒருத்தியோடு வாழ்ந்தான் என்ற செய்தியும், அவனுக்குப் புலவர்கள் அறிவுரைகூறித் திருத்தினார்கள் என்ற செய்தியும் நமக்குக் கிடைக்கின்றன. ஒருமுலையறுத்த திருமாவுண்ணி என்பவளின் கதையையும் நாம் அறிவோம். இளங்கோ வடிகளுக்குக் கண்ணகி என்ற கற்பனைப் பாத்திரத்தை உருவாக்கி, அவள் கதையை அடிப்படையாக வைத்துத் தம் சமகாலத்து வடமொழி நெறியையும் தமிழ்நெறியையும் சமரசப் படுத்திப் படைக்கும் நோக்கம் இருந்தது. சிலப்பதிகாரம் என்னும் பெயரே சிலம்பு என்னும் தமிழ்ப்பெயரும் அதிகாரம் என்னும் வடசொல்லும் இணைந்து உருவானதுதான். காப்பியம் முழுவதும் நாம் இப்படிப்பட்ட தமிழ்நெறி-வடவர்நெறி இரண்டையும் சமரசப்படுத்தும் போக்கையே காண்கிறோம். தமிழ் மண்ணின் கூறுகளான வரிப்பாடல்கள் குரவைகள் முதலிய பலவற்றை எடுத்துக் கொண்ட அவர், இறுதியில் தமிழ்ப்பெண் கோயில் கொண் டதை விட மாடலமறையோனின் வைதிகநெறி மேம்படுவதையே காட்டிக் காப்பியத்தை முடிக்கிறார்.
அசல் தமிழ்க்கதையும் சமதர்மக்கதையுமான மணிமேகலையிலும் வடமொழிக்கூறுகள், மீயியற் கைச் சம்பவங்கள் முதலியன உள்ளன. ஆபுத்திரன் கதை மூலமாகப் பட்டவர்த்தனமாகப் பார்ப்பனியத்தை எதிர்க்கும் கதையாக அது தோற்றம் பெறுகிறது. என்றாலும் அக்கால வணிக வர்க்கம் தனது ஈவிரக்கமற்ற சுரண்டலை நடத்தியதை இரட்டைக் காப்பியங்கள் காட்டுகின்றன. அதனால் பசியினால் வாடி மக்கள் துடிதுடிக்க, அந்தப் பசியைப் போக்க எழுந்த அக்ஷய பாத்திரக் கற்பனையைத்தான் மணிமேகலையில் காண்கிறோம்.
சீவக சிந்தாமணி இரட்டைக் காப்பியங்களுக்குப் பின்னரும், கம்பர் காவியத்துக்கு முன்னரும் எழுந்த நூல் ஆதல் வேண்டும். இதன் காவியச் சுவையை நாம் விளக்கவேண்டியதில்லை. ஆனால் முன்எழுந்த சிலம்பு, மேகலை இரண்டு காப்பியப் போக்குகளுக்கும் மாறாக, ஒரு ஆடவனை-அதுவும் வடநாட்டு மன்னனைக் காப்பியத் தலைவனாக ஏற்கும் தன்மையை இதில் காண்கிறோம்.
kappiya-sitrilakkiya-1

சூளாமணி, பெருங்கதை, சீவக சிந்தாமணி மூன்றும் ஓரிரு நூற்றாண்டுகள் காலப்பகுதிக்குள் எழுந்தவையாக இருக்கவேண்டும். ஒரேமாதிரியான கதைப்போக்கினை இவை கொண் டுள்ளன. கம்பராமாயணம், பெரிய புராணம் இரண்டுக்கும் முன்னதாக எழுந்த சமண, பௌத்த சமயக் காப்பியங்களில் சிறந்தவை இவையே. அடுத்த நிலையில் நீலகேசியை ஏற்கலாம்.
கதைப்போக்கினை வைத்துப் பார்த்தாலும்கூட வளையாபதி பெருங்காப்பியமாக ஆவதற்கான சாத்தியம் தென்படவில்லை. குண்டலகேசியில் சில புரட்சிக்கூறுகள் தென்படுகின்றன. இது பௌத்த சமயக்காப்பியம் ஆனதால், பௌத்தர் அல்லாதவர்கள் இதனை அழித்திருக் கலாம் என்று கமில் சுவலபில் கருதுகின்றார். யாப்பருங்கலம், குண்டலகேசியைத் தர்க்கவாதம் என்று குறிப்பிடுகிறது. வீரசோழியமும் புறத்திரட்டும் இதை அகலகவி என்கின்றன.
ஐம்பெருங்காப்பியம் என்ற தொடரை வைத்து ஐஞ்சிறுகாப்பியம் என்ற தொடரும் உருவாகி யுள்ளது. சூளாமணி, யசோதர காவியம், நீலகேசி, உதயணகுமார காவியம், நாககுமார காவியம் என்பன அவை. இவற்றுள் உதயணகுமார காவியம், நாககுமார காவியம் என்பவை காவியம் என்னும் தகுதி படைத்தவையும் அல்ல, கவித்துவம் கொண்டவையும் அல்ல.
இதுவரை முற்காப்பிய காலம் பற்றி ஒருவாறு நோக்கினோம். பிற்காப்பிய காலத்திற்கு வருவோம்: சோழர் அரசு அக்காலத்தில் தனிப்பேரரசாகத் திகழ்ந்தது. வடநாடுகளிலும் கடலுக்கு அப்புறமுள்ள பர்மா, சுமத்திரா, ஜாவா முதலிய நாடுகளிலும் சோழர்களது வெற்றிக்கொடி பறந்தது. இப்படிப்பட்ட பேரரசுக்காலத்தில் கம்பராமாயணம் பெரியபுராணம் போன்ற பெருநூல்கள் தோன்றியதில் வியப்பில்லை. இவற்றுடன் கலிங்கத்துப் பரணி போன்ற போர்ப் பிரபந்தங்கள், சாஸனக் கவிதைகள், மெய்க்கீர்த்திகள், உலா, கோவை போன்ற சிற்றிலக்கிய நூல்களும், திருத்தொண்டர் திருவந்தாதி போன்ற பக்திநூல்கள், ராஜராஜேசுவர நாடகம் முதலிய நாடகங்கள் ஆகியவையும் தோன்றின. சோழ அரசர்கள் பெருமை பெற்று விளங்கிய காலத்தில் அந்த அரசர்களது வெற்றிச் சிறப்பு முதலியன பற்றிப் பல பிரபந்தங்கள் தோன்றின.
சோழர் காலம், பாண்டியர் காலம் வரை பழைய நிலவுடைமை முறையே நிலவியது. தமிழகத் தின் நிலவுடைமை முறையை இரண்டு வகையாகக் காணவேண்டும் என்பதை வரலாற்று நோக்கு காட்டுகிறது. முற்கால நிலவுடைமை முறை வேறு, விஜயநகர அரசு ஏற்பட்ட பின் தோன்றிய பிற்கால நிலவுடைமை முறை வேறு.
சமயச்சார்பு பற்றிய சில வகைப் பிரபந்தங்கள் பக்திக்காலத்திலேயே தோன்றி யிருந்தாலும், அரசர்களைக் குறித்த பிரபந்தங்கள் பிற்காப்பிய காலத்தவை என்பதில் ஐயமில்லை. இவை ஒருவகையில் அரசர்களை மகிழ்வித்தும், கவிச்சுவையினால் இன்னொரு வகையில் மக்களை மகிழ்வித்தும் வந்தன. இவற்றுள் மிகச் சிறந்தவை கலிங்கத்துப் பரணியும் மூவருலாவும் ஆகும். “சமயத்தைவிடுத்து உலகியல் விஷயங்களை நூற்பொருளாகக்கொண்டு பல செய்யுட்களும் இக்காலத்து மிகுதியாய்ப் பிறந்தன. சமுதாய நிலைக்கும் இலக்கியங்களுக்கும் உள்ள தொடர்பை இது நன்கு விளக்குகின்றதல்லவா?” என்பார் வையாபுரிப் பிள்ளை.
சோழர் காலத்தில்தான் முதற்கால நிலவுடைமை அமைப்பு உச்சத்தை அடைந்தது. உறுதிப் பாடு பெற்றது. கூடவே சாதியமைப்பும் இறுக்கம் பெற்றது. இந்தியாவில் சாதியமைப்பு வர்க்க அமைப்புடன் இறுக்கமான தொடர்புடையது. இதனால்தான் சமயத்தை விடுத்து உலகியல் விஷயங்கள் நூற்பொருளாகும் தன்மை பெற்றன, கம்பராமாயணம் போன்ற பெருங்காப் பியம் எழுவதும் இயன்றது.
சங்ககாலம் முதலாகவே பல்லவர்காலம், சோழர்காலம் ஊடாகத் தமிழகத்தின் தனிச் சிறப்பான ஊராட்சிமுறையும் தன்னிச்சையாக இயங்கிவந்தது. கம்பராமாயணம் தனிச் சிறப்புடன் திகழ்வதற்கு அக்கால ஊராட்சியின் தன்னாட்சித் தன்மையும், ஊராட்சிமுறையில் முக்கியத்துவம் பெற்றிருந்த சடையப்ப வள்ளல் போன்றவர்களின் உதவியும் முக்கியக் காரணம். ஊர்ச்சபைகள் நிலவுடைமை முறையின் வெளிப்பாடுகள் என்றாலும் குறைந்த பட்சமாக உணவு உரிமை (உணவுரிமை என்பது சேக்கிழாரின் பெரிய புராணத்தில் வரும் தொடர்) என்பது அதில் இருநதது. மேலும் இன்னின்ன சாதிக்கு இந்த இடம் என்று வரையறுக்கப்பட்டு ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் நிலை இருந்ததால் சாதிக் கட்டுப்பாடு இருப்பினும் ஒருவிதச் சார்புநிலையும் நிலவியது. இந்தப் பின்னணியில்தான் கம்பரின் இராமாயணம் தோன்றியது. இதைத்தான் முதற்கால நிலவுடைமை முறை என்கிறோம்.
எந்தக் கவிஞனும் தன் காலச் சமூகநிலையைப் பிரதிபலிப்பதுபோலவே அதனைத் தன்போக்கில் மறுபடைப்புச் செய்யவும் செய்கிறான். கம்பரின் சமத்துவக் கோட்பாடு பற்றிப் பலரும் விளக்கியுள்ளனர். கம்பர் தம் காலநிலையை மறுப்பதனையே அது காட்டுகிறது.
கம்பர் கவித்துவம் பெரியதென்பதை விளக்கவும் வேண்டுமோ? புராண இயல்பை மீறிப் பேரிலக்கியமாகக் கம்பர்காவியம் திகழ்கிறது. வான்மீகி இராமாயணத்தைக் கம்பர் தம் காலத் துக்கேற்றவாறு மறுபடைப்புச் செய்தார். கம்பர் கண்ட தெய்வம், வால்மீகி கண்ட இராமன் அல்ல. அது மனிதனுக்குள்ளிருந்து, தமிழ் மண்ணிலிருந்து விளைந்த தெய்வம். கம்பர் பல செய்திகளைப் பல பாடல்களில் சொல்லிச் செல்கின்றபோதே ஆங்காங்கு கவித்துவம் வெடித்து அற்புத ஒளிவீசுகிறது என்பதை யாவரும் அறிவார்கள்.
ஆனால் இருபதாம் நூற்றாண்டில் கம்பர் காப்பியம் இகழப்பட்டதுபோல-கம்பரசம் போன்ற நூல்களால் இழித்துரைக்கப் பட்டதுபோல வேறு எந்த நூலும் வசைக்கு ஆளாகவில்லை, அதேபோலக் கம்பன் விழாக்களும் கம்பன் வியாக்கியானச் சொற்பொழிவாளர்களும் பாராட்டியதுபோன்ற சிறப்பும் வேறு எந்தக் காப்பியத்திற்கும் கிடைக்கவில்லை.
இந்தியாவில் வர்க்கம்-வருணம்-சாதி மூன்றும் ஒன்றிற்கொன்று ஆதாரமானவை. மனிதர்களுக்குப் பிறப்புரிமைகள் உண்டு, எல்லா மனிதர்களும் சமம் என்பதை இந்தியச் சமூக அமைப்பு ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை.
கம்பராமாயணம் மிகவும் ஆதியான மீயியற்கைத் தன்மை கொண்ட கதையை எடுத்துக் கொண்டதால் நேரடியாக இந்தச் சமூக அமைப்புக்குள் நுழைய வேண்டிய தேவையில்லாமல் போயிற்று. ஆனால் சைவ அடியார்களின் வரலாற்றைக்கூற எழுந்த, தமிழின் முதல் சைவசமயக் காப்பியமான பெரியபுராணம் பக்தியைப் போற்ற வேண்டி எழுந்ததால் பார்ப் பனியத்தை ஏற்றுக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டது. சுந்தரர் எழுதிய திருத்தொண்டத் தொகை இதற்கு மூலமாக அமைந்துள்ளது. பெரியபுராணத்தில் திருஞானசம்பந்தருக்கு நிகரான பெருமை திருநாவுக்கரசருக்கு அளிக்கப்படவில்லை என்பது வெளிப்படை. பார்ப்பன அடியார்களுக்கும் பிற அடியார்களுக்கும் வெவ்வேறு வகையான நீதிகள் பேசப் படுகின்றன இக்காப்பியத்தில் என்பதை யாவரும் அறிவர்.

kappiya-sitrilakkiya-4

சேக்கிழார் ஏன் மாணிக்க வாசகரைப் பெரியபுராணத்தில் சேர்க்கவில்லை என்பதற்கு விடை இல்லை. மாணிக்கவாசகரைத் தொகையடியார் என்பதில் சேர்க்கலாம் என்று சிலர் கூறுவார்கள். இப்படி மணிவாசகரை நூற்றோடு நூற்றொன்றாகச் சேர்க்க எவ்விதத்திலும் முடியாது. அநபாயசோழன் பற்றிய கதை கூறுவதுபோல, சமணர்களை முறியடிப்பதற்கு அவர்களுடைய காப்பியம் என்னும் ஆயுதத்தைத் தமதாக்கிக் கொண்டார் சேக்கிழார் என்பது உண்மை.
பெரிய புராணத்தைச் சிலர் காப்பியம் என்கிறார்கள். காப்பியத்தின் மையக்கதை சுந்தரர் கதை என்றால் பிற எல்லாக் கதைகளும் இந்த மையத்தோடு இணைகின்ற முறையில்தானே இருக்கவேண்டும்? அப்படி அமையவில்லை. இருப்பினும் பெரிய புராணத்தின் இலக்கியச் சிறப்பில் நமக்கு ஐயமில்லை. எந்தெந்தக் காலத்திலோ எந்தெந்த வடிவங்களிலோ எங்கெங்கோ நடை பெற்ற தாறுமாறான நிகழ்ச்சிகளைத் தம் காலத்தில் நிகழ்ந்தனவாகக் கொண்டு சிவனடியார் வரலாற்றைப் படைப்பதில் சேக்கிழார் வெற்றி பெற்றிருக்கிறார். சிவனும் சிவனடியார்களும் ஒன்று என்ற சைவ உணர்வின் அடிப்படையில் இதிலுள்ள பல கதைகள் இயங்குகின்றன. இயற்பகை நாயனார் கதை போன்றவற்றை இப்படித்தான் காண முடியும். தேவாரமூவர் வாழ்க்கைகளில் நடந்ததாகக் கூறப்படும் எலும்பைப் பெண்ணாக்கிய கதை, முதலை உண்ட பாலகனை மீட்ட கதை, கடலில் கட்டிப் பாய்ச்சிய போதும் உயிரோடு வந்த கதையெல்லாம் வெறும் கதைகளாக எஞ்சுபவை, இவை புராணங்களாகத்தான் தகுதி உடையவை. இலக்கியம் ஆக இயலாதவை. ஆனால், இலக்கியம் என்று சொல்வதற்கு ஏற்ற முறையில் புராணக் கூறுகள் அமுங்கி மனிதவாழ்வின் மேன்மைகள் சில கதைகளில் சிறப்பாக வெளிப்பட்டுள்ளன. இம்மாதிரிக் கதைகள் சிலவற்றில் மட்டும் நாம் நவீனகாலப் போக்கினை இனம் காணமுடிகிறது.
மெய்ப்பொருள் நாயனார் கதை, பூசலார் கதை, மனுநீதிச்சோழன் கதை முதலியன நமக்கு உகந்த கதைகளாக உள்ளன. இவற்றில் மிகச் சிறப்பானதாக கண்ணப்ப நாயனார் கதையைச் சொல்லலாம். சிவகோசரியார் ஆகம வழிப்பட்ட சடங்குகளின் சார்பாக நிற்பவர். கண்ணப்பருக்கு பக்திதான் பெரியது. தன்னைப்போலவே இறைவனையும் மானிடவடிவமாகவே கருதும் மனப்பான்மை கொண்டவர். சிவனுக்கு ஊறுநேர்ந்தால் கண்ணைமட்டும் அல்ல, உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்கிறார். இந்தக் கதை ஓர் அருமையான உருவகமாக இலங்குகிறது. சட்டம், விதிமுறை, ஒழுங்கு சார்ந்தவர்கள் ஒருபுறமும், மனிதநீதி, இயற்கை நீதியின் சார்பாக நிற்பவர்கள் மறுபுறமும் எதிரெதிராக இயங்குவதைக் காட்டுகிறது இது.
திருநாளைப்போவார் கதை கடுமையான விமரிசனங்களுக்கு உள்ளான கதை. தங்கள் வாழ்நிலைக்குரிய சிறுதெய்வங்களை மறுத்துவிட்டு நந்தனார் பெரிய தெய்வமான சிவபெரு மானைத் தேடிச் செல்கிறார், ஆனால் சாதிமுறைமையை மீறிய காரணத்தினால் கோயிலுக்குள் மட்டுமல்ல-ஊர் எல்லைக்குள்ளாகவே நுழையமுடியாமல் தீயில் சாகிறார். இதில் சேக் கிழார் படைத்துக்காட்டும் கடவுளாகிய சிவனும் சாதி ஆதிக்கம் உடையவனாகவே இருக்கிறான். “தீயில் நீ மூழ்கித் தூய்மை அடைந்துவா” என்று ஆணையிடும் கடவுளை வேறு எப்படிப் பொருள்படுத்த முடியும்? திருநாளைப் போவாரைக் குலவொழுக்கம் மீறாமல் நடந்து கொண்டவராகவே சேக்கிழார் காட்டுகிறார். எனவே அக்கால முறைமையை மீறாமல் திருநாளைப் போவார் சந்தோஷமாகவே தீயில் இறங்கி ‘ஐயராகி’ யிருப்பார்.
சுந்தரரைச் சிவபெருமான் ஆட்கொண்டது ஓர் அற்புதமான நாடகமாகக் காட்சியளிக்கிறது. கடவுள் மனிதனுக்குத் தோழமைப்படுவதும் மனைவியின் பொருட்டாகத் தூதுசெல்வதும் வியப்பளிக்கின்றன. இத்தகைய இறைவனின் செயலையே விமரிசனப்படுத்தி உயிர்துறக்கும் ஏயர்கோன் கலிக்காம நாயனாரையும் நாம் பெரிய புராணத்தில் காண்கிறோம்.
சமண சமயத்தால் தமிழுக்கு விளைந்த நன்மை நீதிநூல்களும் காவியங்களும் மட்டுமல்ல. சமணர்கள் சமயவிவாதங்களில் அதிகமாக ஈடுபட்டுவந்ததால், சைவத்திலும் அந்தப்போக்கு தோன்றியது. இதன் விளைவாக எழுந்தனவே சமய சாத்திரங்கள். சுமார் கி.பி.1000 முதல் 1350க்குள் இவை எழுந்தன.
சோழப் பரம்பரை சிதைந்துபோய், இரண்டாவது பாண்டியப் பேரரசும் வலிமை குன்றிய நிலையில் புதுவகையான நூல்களும் இலக்கியங்களும் தோன்றும் வாய்ப்பு ஏற்படவில்லை. இது பதினான்காம் நூற்றாண்டின் தொடக்க காலம். மத்திய அரசு வலிமை குன்றிவிடவே நாட்டில் அமைதியும் குலைந்தது. சோழப் பேரரசின் வீழ்ச்சியைத் தொடர்ந்து பாரம்பரிய ஊராட்சிமுறை மங்குதசை அடைந்தது. இச்சமயத்தில், பண்டை நூல்களைக் கற்று அவை அழியாமல் பாதுகாத்த அறிஞர்கள் இருந்தனர். அவர்கள் தமிழ் இலக்கியங்களுக்கும் இலக்கணங்களுக்கும் உரை எழுதினர். கி.பி.1250 முதல் 1600 வரை உரையாசிரியர்கள் காலம் எனலாம். இளம்பூரணர், பேராசிரியர், சேனாவரையர், அடியார்க்கு நல்லார், பரிமேலழகர், நச்சினார்க்கினியர் போன்றோர் யாவரும் இக்காலப்பகுதியில் தோன்றியவர்கள். தமிழ் உரைநடைக்கு அடிகோலியவர்கள் உரையாசிரியர்களே.
சித்தர்களின் இலக்கியம் தமிழின் தனிச்சிறப்பு. சாதிமத பேதங்களை மறுத்தவர்கள் சித்தர்கள். சான்றாக, சிவவாக்கியர், “உங்கள் பேதமன்றி உண்மை பேதமில்லையே” என்கிறார். சமரச சன்மார்க்கத்தை வலியுறுத்தியவர்கள் தாயுமானவரும் வள்ளலாரும். “வேதாந்தம் சித்தாந்தம் வேறென்னார் கண்களிக்கும் நாதாந்த மோன நலமே பராபரமே” என்கிறார் தாயுமானவர். ஆனாலும் பழங்காலச் சித்தர்கள் முதல் வள்ளலார் வரை எல்லோரும் சமூகத்திலிருந்து ஒதுங்கி வாழ்ந்த ஆட்சேபணையாளர்களே தவிர, புரட்சியாளர்கள் அல்லர். தமக்குப் பிடிக் காத சமுதாயத்திலிருந்து விலகிக்கொண்டவர்கள் அவர்கள். “கடைவிரித்தேன் கொள்வா ரில்லை” என்ற வள்ளலார் கூற்று இதனை உறுதி செய்கிறது.
மேலும் சித்தர்களின் கோட்பாடுகள் அவ்வக்காலச் சமயநெறிக்கும், அதனால் சாதிநெறிக்கும், ஆதிக்கக் கருத்தியலுக்கும் உட்பட்டிருந்தன. அதனால் அவர்களால் பெரியதாக எதுவும் செய்ய இயலவில்லை.
பேரரசர்களின் காலத்திற்குப் பிறகு தமிழ் இலக்கியம் ஒடுங்குதசையை அடைந்தது. விஜய நகரப் பேரரசில் மக்களின் உரிமைகளைவிடக் கடமைகளே வலியுறுத்தப்பட்டன. இடைவிடாத போர்களால் நாடு நலிவுற்றது. இவற்றால் ஆங்காங்குள்ள பிரபுக்களை நாடி வயிறுவளர்க்கும் கேவலத்திற்குத் தமிழறிஞர்கள் ஆளாயினர். இராமச்சந்திரக் கவிராயர் “கல்லைத்தான் மண் ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா?” என்று தம்மை நொந்துகொள்ளும் கவிதை இதற்குச் சான்று. பெரும்பாலும் புராணங்களும் சில்லறைப் பிரபந்தங்களுமே இக்காலங்களில் பாடப்பெற்றன.
விஜயநகரப் பேரரசின் கீழும், மராட்டியர்கள் கீழும், பாளையக்காரர்களின்கீழும், தெலுங்கு கன்னடம் மராட்டி போன்ற பாஷைகளே ஆதரிக்கப் பட்டதால் தமிழின் வளம் குறைந்தது. சிற்றரசர்கள் சிலர் தமிழை ஆதரித்தனர். திருவாவடுதுறை ஆதீனம், தருமபுரம் ஆதீனம், காசிமடம், திருவண்ணாமலை மடம் போன்ற மடங்களில் சைவத் தமிழ்க் கல்வி கற்பிக்கப்பட்டது. திருவரங்கம் ஜீய மடம் போன்றவை வைணவச் சார்பான நூல்களைக் கற்பித்தன. எனினும் பொதுவாக நோக்குமிடத்துக் கல்வியும் புலமையும் ஒடுங்கிவந்தன. இக்காலம் ஏறத்தாழ கி.பி.1300 முதல் 1800 வரை எனலாம்.
கி.பி. பதினான்காம் நூற்றாண்டில் முதன்முதலாக இஸ்லாமிய அரசு மதுரையில் ஏற்பட்டது. பின்னர் விஜயநகரப் பேரரசின் தென்மண்டலமாயிற்று மதுரை. விஜயநகரப் பேரரசு தலைக் கோட்டைப் போரில் க்ஷீணமடைந்தபோது விசுவநாத நாயக்கரால் ஏற்படுத்தப்பட்ட 72 பாளையப்பட்டுகள் தன்னாட்சி பெற்று ஆளத்தொடங்கின.
ஏறத்தாழ கி.பி.1600 முதலாக ஐரோப்பியர்கள் நுழையலானார்கள். சோழர் காலம்வரை தன்னாட்சியுடன் நிலவிய ஊர் மன்றங்கள் நிலங்களை உடைமையாக வைத்திருந்தன. இவற்றிற்கு கணபோகம் என்று பெயர். தனிப்பட்டோர் வைத்திருந்த நிலங்கள் ஏகபோகம் எனப்பட்டன. நாயக்கர் காலத்தில் கணபோக நிலங்கள் தெலுங்கு கன்னடப்படைத் தலைவர்களுக்கும் தனியார்களுக்கும் மானியமாக அளிக்கப்பட்டன. அதுவரை சதுர்வேதி மங்கலங்களாக இருந்தவை நாயக்க மங்கலங்கள் ஆயி.ன நாயக்கர்கள் கொண்டுவந்த ஆயக்காரர் முறை மக்களை நலிவடையச் செய்தது. தெலுங்கு பேசும் தலைவர்கள்-முன்பின் அறியாதவர்கள்-அவர்களுக்கு வரிவசூல் மட்டுமே நோக்கமாக இருந்தது. புராதன ஜனநாயகப் பண்பு மறைந்தது. நிலவுடைமை அமைப்பின் கேடு கெட்ட அம்சங்கள் மட்டுமே நிலை பெற்றன. இதனைத்தான் பிற்கால நிலவுடைமை முறை என்கிறோம்.
விஜயநகரப் பேரரசுக்காலத்திலிருந்து தெலுங்கு பிராமணர்கள் தமிழகத்தில் குடியேற்றப்பட்டு சாதி முறையும் சாதிக்கடமையும் வலியுறுத்தப்பட்டதால் சாதிக்கட்டுப்பாடு அதிகரித்தது; இந்துமதம் இறுதிவடிவம் பெற்றது. மதம் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வக் கருவி ஆயிற்று. தஞ்சாவூர் மராட்டியர்கள் சமஸ்கிருதப்புலவர்களை மட்டுமே ஆதரித்து வந்தனர்.
இந்நிலையில் தமிழ்க்கல்வி எங்ஙனம் சிறப்பெய்த முடியும்? இதில் புராணங்களும் தல புராணங்களும் மட்டுமே மிகுதியாகப் பாடப்பட்டதில் வியப்பில்லை. அவ்வாறே சிற்றிலக்கியங்களும் தோன்றின. வரம்பு கடந்த கற்பனையில் தோன்றியவை தல புராணங்கள். இடைக்காலத்துத் தமிழ்ப் புலவர்கள், கற்பனை உணர்வில் மட்டுமே பிறந்த இவற்றைத்தான் இலக்கியங்களாகக் கருதியிருக்கிறார்கள். யமகம், திரிபு, அந்தாதி போன்ற புதிய யாப்பு வடிவங்களையும் இவற்றில் காண்கிறோம். சமஸ்கிருத மொழி வரலாறு தொடர்பான புராணப் புனைகதைகளை நம்பி மேலாதிக்கத்துக்கு அடிபணிந்திருந்தவர்கள் இவர்கள். இருபதாம் நூற்றாண்டில் பாரதி தோன்றி சமகாலத்தன்மையில் பார்வையைச் செலுத்தும் வரை இவ்வகைப் புலமை இலக்கியத்திற்குச் செல்வாக்கு இருக்கவே செய்தது.
இருவகைச் சிற்றிலக்கியங்கள் தமிழில் உள்ளன. இரண்டு வகைகளுமே பாடாண்திணை என்ற ஒரேஒருவகையில் அடங்குவன என்றாலும், முதல்வகை, இலக்கியப் பாங்கானது. இதில் அதுவரை தமிழில் இருந்த கவிதைப்போக்கிற்கு முற்றிலும் மாறுபட்ட போக்கினைக் காண்கிறோம். முத்தொள்ளாயிரம், கலிங்கத்துப்பரணி, நளவெண்பா போன்ற யாவும் இதில் அடங்கும். இவற்றில் தமிழ்க்கவிதையின் வளத்தைச் சந்திக்கலாம். சிலசமயங்களில் தரை நமக்குத் தட்டுப்படுவதில்லை என்று சொல்லுமளவுக்குக் கற்பனை சிறகுமுளைத்துப் பறக்கிறது இவற்றில். என்றாலும் தமிழ்வளத்திற்கு இவை முக்கியமானவை.
யதார்த்தமான கற்பனைக்கு மாறுபட்ட போக்குக் கொண்டவை இரண்டாவது வகைச் சிற்றி லக்கியங்கள். இவை மன்னர்களையும் ஜமீன்தார்களையும் உள்ளூர்க் கோவில்களிலுள்ள இறைவனையும் மையப்படுத்திப்பாடும் போக்கில் எழுந்தவை. பரணி, தூது, உலா, கோவை, பிள்ளைத் தமிழ், பள்ளு, குறவஞ்சி என்று எத்தனையோ வகைப் புதிய பிரபந்தங்கள். இடையிடையே சீறாப்புராணம் போன்ற இஸ்லாமியக் காப்பிய நூல்களும் தேம்பாவணி, சதுரகராதி, பரமார்த்த குருகதை போன்ற கிறித்துவ நூல்களும் தோன்றின. இவற்றிற்குள்ளும் வரலாறு சமூகம் போன்றவற்றின் இயக்கத்தைக் குறைந்த அளவிலேனும் காணமுடியும். என்றாலும் பள்ளு போன்ற மிகக்குறைந்த சில இலக்கியங்களைத் தவிர, பிற வகைகள் சமூகம் சார்ந்த உள்ளடக்கம் அற்றவையாகவே உள்ளன.
தமிழ் இலக்கியத்தை இப்புலவர்கள் வளப்படுத்தினார்கள் என்பதைவிட தமிழ் இலக்கியம் ஏதோ ஒருவகையில் சாகாமல் காத்துவந்த பாதுகாவலர்களாகப் பணியாற்றினார்கள் என்று தான் கூறமுடியும். கவிதையில் இலக்கணத்தின் மேலாதிக்கத்தை ஏற்றவர்கள் இவர்கள். இன்னொரு புறம், இவர்கள் பாடிய காதல், உலா, உலாமடல், கோவை போன்றவை ஜமீன்தார்களின் சிற்றின்பப் போக்கிற்கு ஏற்பவே அமைந்தன. இம்மாதிரிப் பிரபந்தங்களின் காமப்போக்கு குறிப்பிடத்தக்கது.
இக்காலத்தில் ஏற்பட்ட இன்னொருவகையான இலக்கியப் போக்கும் நோக்கத்தக்கது. இது ஓர் எதிர்ப்புப் போக்கு. ஔவையார், காளமேகம், இராமச்சந்திரக் கவிராயர், இரட்டைப் புலவர் கள் என எத்தனையோ கவிஞர்கள் தனிக்கவிதைகளை இயற்றியுள்ளனர். இவை கவர்ச்சி மிக்கவை. கடவுளர்களையும் இக்கவிஞர்கள் கேலி செய்துள்ளனர். வள்ளல்களைப் பாராட் டியதுபோலவே குறைகண்டும் பாடியுள்ளனர். வறுமையையும் செம்மையென ஏற்று மிக அழகாகப் பாடியவர்கள் இவர்கள். அதுபோலவே பள்ளு நொண்டிநாடகம் போன்றவற்றில் இடம் பெறும் ஆண்டைகளைப் பற்றிய வசைக் குறிப்புகளும் நோக்கத் தக்கவை.
சங்ககாலத்தை அடுத்துப் பதினெண்கீழ்க்கணக்குநூல்கள் தோன்றியதுபோலவே, பிற்காலத்திலும் அறநூல்கள் தோன்றியுள்ளன. ஆனால் இந்தப் பிற்காலத்து நீதி நூல்களுக்கு அடிப் படைக் காரணம், வர்க்க முரண்பாடுகள் இறுகி, சாதிக்கட்டுப்பாடுகளும் இறுக்கமடைந்து, சமுதாயத்துக்குப் பெரும்தளையாக மாறியமைதான். ஆத்திசூடி, கொன்றைவேந்தன், அறநெறிச் சாரம், நல்வழி எனப் பல அறநூல்கள் தோன்றியுள்ளன. இவற்றில் சிறந்தது, இரண்டு சீர்களில் ஓர் அற நெறியைச் சொல்வது ஆத்திசூடி. இதனை பாரதியார் உட்படப் பிற்காலக் கவிஞர்கள் எத்தனையோ பேர் போற்றியுள்ளனர். இவற்றைப்போலவே அறநெறியை உட்கொண்டதாகச் சதக இலக்கியம் என்பதும் தோன்றியுள்ளது. இது தெலுங்கில் காணப்படும் ஒரு முக்கிய இலக்கிய வகை.
நாயக்கர், ஐரோப்பியர் ஆட்சிமுறையில் உழைப்பவனுக்கு உத்திரவாதம் இல்லை. பழைய ஊராட்சி முறை முற்றிலும் அழிந்ததால், உணவுரிமை என்பதும் இல்லை. உணவுரிமை மறைந்து கூலி என்ற புதிய சொல் இலக்கியங்களில் இடம்பெறுவதைப் பார்க்கிறோம். புதிய அமைப்பில் ஏற்பட்ட ஜமீன்தார்கள் தெலுங்குச் சார்பினர் ஆதலின் தமிழ் விவசாயிகளைக் கடன்வாங்கும்படி செய்து சந்ததி சந்ததியாகக் கொத்தடிமைகள் ஆக்கினர். இது பிற்கால நிலவுடைமை முறையின் நேரடி விளைவு. இதற்குப் பின் கி.பி. 1600 முதலாக ஐரோப்பியர் வருகை நிகழ்கிறது.
ஆனால் ஐரோப்பியர்களின் ஆட்சி கி.பி.1800 முதலாகவே நன்கு ஏற்பட்டது. அச்சு எந்திரம் இக்காலத்தில்தான் பிரபலம் அடைந்தது. 1812இல் திருக்குறள் முதல் அச்சுப்பதிப்பு நிகழ்ந்தது. இதற்குப் பின் இக்காலத் தமிழ் இலக்கியத்தின் தோற்றத்திற்கான அறிகுறிகள் தென்படு கின்றன. எனவே இங்கு இந்த எல்லையோடு நிறுத்திக்கொள்வோம்.
இறுதியாக ஒன்றைச் சொல்லலாம். இவ்வளவு இடர்ப்பாட்டுக்கிடையிலும் எவ்வாறோ தமிழும் அதன் இலக்கியமும் பிழைத்திருந்தன என்பதுதான் வியப்பு. “தன்னியல்பு கெடாது காலகதியோடு ஒத்துச் செல்வதுதான் தமிழ்ப்பண்பாட்டின் இயற்கை” என்று வையாபுரிப் பிள்ளை பாராட்டுகின்றார். தமிழின் இடைக்கால வரலாற்றைப் புரிந்துகொண்ட நாம், அது உண்மைதான் என்பதை இன்னும் தெளிவாகவே அறிகிறோம்.

இலக்கியம்