சங்க இலக்கிய மொழிபெயர்ப்புச் சிக்கல்கள்

mozhipeyarppil sikkalgal1சீனப் பழமொழி ஒன்று சொல்கிறது: “மொழிபெயர்ப்புச் செய்வது என்பது, இன்னொருவனுக்குச் செரிப்பதற்காக நீ உணவை மெல்லுவது போல”. ஆனால் வேறு வழியில்லை. தமிழ் மொழியின் சிறப்பை உலகினர் நன்றாக உணரவேண்டுமானால், குறைந்தபட்சம், ஆங்கிலேயர்களுக்குச் சீரணமாக வேண்டியேனும் நாம் நன்றாக மெல்லத்தான் வேண்டும். வடநாட்டினர் உணர வேண்டுமென்றாலோ, இந்தியில் நாம் மென்றாக வேண்டும். ஆனால் இது என்ன எளிதான காரியமா?

செவ்விலக்கியக் கவிதைகளை மொழிபெயர்க்கும்போது பல நிலைகளில் இடர்ப்பாடுகள் நேரிடவே செய்கின்றன. பலசமயங்களில் மூலமொழிக்கவிதையின் ஒலியமைப்பே மொழிபெயர்ப்புக்கு இடைஞ்சலாக இருக்கிறது. சான்றாக,

குறுகுறு நடந்து சிறுகை நீட்டி

இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்

நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்

மயக்குறு மக்களை

எனவரும் பகுதியை எவ்விதம் அப்படியே அதன் ஒலிநயம் குன்றாது பிறமொழி எதிலேனும் பெயர்க்கமுடியும்? இக்கவிதையின் வடிவம் அதன் பொருளுடன் எவ்வளவு இசைந்துள்ளது என்பதை மேம்போக்காகப் படித்தாலும் உணரமுடியும். அதனால்தான் வடிவத்தையும் பொருளையும் பிரிப்பது இயலாது என்றனர். வடிவச் சிறப்பே கவிதைச் சிறப்பு ஆதலின் ராபர்ட் ஃப்ராஸ்ட் “கவிதையை மொழி பெயர்க்கவே முடியாது” என்று கூறினார் போலும்!

‘கவிதையைக் கவிதையாகவே மொழி பெயர்க்க வேண்டும்’ என்பதுதான் யாவரின் கருத்துமே. ஆனால் மூலமொழியைப் போலவே இலக்குமொழியில், சிறந்த புலமை வாய்த்திருந்தால் அன்றிக் கவிதையாக மொழிபெயர்க்க வாய்ப்பில்லை. கவிதை என்பது செய்யுள் வடிவத்தை மட்டும் குறிப்பதன்று. கவிதைக்குரிய அழகு, ஜீவன் அதில் இருக்கவேண்டும். ஆனால் அழகாக, கவிதையாக மொழிபெயர்க்க வேண்டும் என்றால், பெரும்பாலும் மொழிபெயர்ப்பு தவறாகிப் போகிறது.

சங்கக் கவிதைகளை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கும்போது ஏற்படும் சிக்கல்களைப், பின்வருமாறு வகைப்படுத்தலாம்:

1. வாக்கியச் சிக்கல்கள் (Syntactic Problems)

2. நடையியற் சிக்கல்கள் (Sytlistic Problems)

3. கலாச்சாரச் சிக்கல்கள் (Cultural Problems)

4. அர்த்தவியல் சிக்கல்கள் (Semantic Problems)

அவரவர் நோக்கைப் பொறுத்து, இவை ஒவ்வொரு தலைப்புக்குள்ளும் பலவேறு உட்பிரிவுகளைக் காணமுடியும். குறிப்பாகக் கலாச்சாரச் சிக்கல்கள் என்பதற்குள் இலக்கிய மரபு சார்ந்த சிக்கல்கள் முதன்மையான இடம் பெறுகின்றன.

வாக்கியச் சிக்கல்கள்

வாக்கியச் சிக்கல்களில் முதலில் வருபவை, வேற்றுமை உருபுகள் குறித்த சிக்கல்கள். பலசமயங்களில் வேற்றுமை உருபுகள் மறைந்து காணப்படுகின்றன. சிலசமயங்களில் அவற்றின் பொருள் மாறிவிடுகிறது (வேற்றுமை மயக்கம்). ஏ, உம் போன்ற இடைச் சொற்களும் பலசமயங்களில் மறைந்துவருகின்றன. உருபன்களை மொழிபெயர்க்கும்போது இம்மாதிரிச் சிக்கல்கள் ஏற்பட்டுவிடுகின்றன. சான்றாக,

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி

கணமேனும் காத்தல் அரிது.

இந்தத் திருக்குறளில், வேற்றுமை உருபுகள் மறைந்துவருவது இருவேறு அர்த்தங்கள் தோன்றக் காரணமாகிவிடுகிறது. “குண மென்னும் குன்றேறி நின்றார் (உடைய) வெகுளியைப் (பிறர்) கண மேனும் காத்தல் அரிது’ என்று பொருள் கொள்ள வேண்டுமா, அல்லது “குணமென்னும் குன்றேறி நின்றார், பிறர் வெகுளி(யை) ஒரு கணமும் காத்தல் அரிது’ என்பதா?

மூலப்பனுவலில் சில சொற்கள் மறைந்தும் வரலாம். அல்லது விடுபட்டிருக்கலாம். அல்லது அதில் பொருள்மயக்கமோ இருண்மையோ காணப்படலாம். அல்லது வெவ்வேறு சூழல்களில் பொருத்துவதால் வெவ்வேறு அர்த்தங்கள் அதில் தோன்றலாம். மிகஎளிய தொடரமைப்புகளும் மொழிபெயர்ப்பில் இடர்ப்பாட்டைத் தரக்கூடியவை. ஆனால் கவித்துவத்திற்குக் காரணமாக இருக்கக் கூடியவையும் அவைதான். உதாரணமாக, “மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம்’ என்கிறார் திருவள்ளுவர். குழந்தைகளுடைய மெய்யைத் தீண்டுதல் நம் உடலுக்கு இன்பமா, அல்லது குழந்தைகள் நம் மெய்யைத் தீண்டுதல் அவர்களுடைய உடலுக்கு இன்பமா, அல்லது இரண்டுமா? இதில் ஏதாவது ஓர் அர்த்தத்தை மட்டுமே நாம் மொழிபெயர்ப்பில் கொண்டுவர முடியும் என்பதே மொழி பெயர்ப்பின் அடிப்படைச் சிக்கலாகிறது.

ஒரே சொல்லுக்கு வெவ்வேறு இலக்கண அமைவு இருப்பதனால், மொழிபெயர்ப்பில் சிக்கல்கள் தோன்றுவது கவிதைகளில் இயல்பு. சான்றாக, மீண்டும் ஒரு திருக்குறளையே காணலாம்.

பயனில் சொல் பாராட்டுவானை மகன் எனல்,

மக்கட் பதடி எனல்

இதில் ‘எனல்’ என்பது ஒரே அமைப்பைக் கொண்டிருந்தாலும் ஒன்றில் உடன்பாட்டுப் பொருளையும், இன்னொன்றில் எதிர்மறைப் பொருளையும் கொண்டிருக்கிறது. மேலும் இடப்பெயர்கள் பொருந்தாமை, வாக்கியங்கள் பல்வேறு விலகல் தன்மைகளோடு அமைந்திருக்கும் முறை, வாக்கியங்களை முறைமாற்றி அமைத்துக் கையாளுதல், வெவ்வேறு வகையாக வார்த்தைகளை அமைக்கும் தன்மை போன்றவற்றால், மொழிபெயர்ப்புச் செய்யும் போது பலவகை இடர்ப்பாடுகள் தோன்றுகின்றன. இவை ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு உதாரணம் தந்து விளக்க வேண்டுமென்றாலும் ஒரு நூலே எழுதவேண்டும். ஆகவே ஒரு சில உதாரணங்களை நோக்குவதோடு நம் தேடலை நிறுத்திக் கொள்ளலாம்.

சான்றாக, வாக்கியச் சிக்கல்கள் என்பதில், சொற்கள் அல்லது தொடர்கள் விடுபட்டோ மறைந்தோ வருவதனால், மொழிபெயர்ப்பில் சிக்கல் நேரிடலாம் (Problem due to the ellipsis of certain words in the source text) என்று முன்பே குறிப்பிட்டோம். இதற்கு ஓர் உதாரணத்தைத் திருக்குறளிலிருந்து காணலாம்.

அறத்தாறு இது என வேண்டா சிவிகை

பொறுத்தானோடு ஊர்ந்தானிடை.

இதில் முதல்வாக்கியம், ‘அறத்தாறு இது என வேண்டா’ என்பது. இது முற்றுப்பெற்று விடுகிறது. அடுத்த வாக்கியம், ‘சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தானிடை’ என்பது, சில சொற்கள் மறைந்து குறைவாக்கியமாக உள்ளது. எனவே இதனை அர்த்தம் கொள்பவரே பூர்த்தி செய்ய வேண்டும். அவரவர் பூர்த்தி செய்யும் முறையை வைத்து அதன் அர்த்தம் உருவாகிறது, அதற்கேற்ப மொழிபெயர்ப்பும் அமைகிறது.

நடையியல் சிக்கல்கள்

mozhipeyarppu2இரண்டாவதாக நடையியல் சிக்கல்கள் என்பதிலும் பல துணை வகைகளை நாம் நமது மொழிபெயர்ப்பு நோக்கிற்கேற்பக் காண முடியும். மொழியியல் நோக்கிலான விலகல்கள், முன்னணிப் படுத்தல்கள், உருவகங்கள்-குறியீடுகள் போன்றவற்றைக் கையாளல் தான் ஒரு பனுவலுக்கு இலக்கியத் தன்மையை அளிக்கிறது. ஆனால் இவற்றை அப்படியே மொழிபெயர்ப்பது சமகால மொழி பெயர்ப்புக்கே கடினமான ஒன்று. செவ்வியல் நூல்கள் என்றால், இவற்றினால் ஏற்படும் சிக்கல்கள் ஏராளம்.

சான்றாக, எட்டுத்தொகைப் பாக்கள் யாவுமே, ஒரு வருணனைப் பகுதி + ஓர் உணர்ச்சி வெளிப்பாட்டுப் பகுதி என்னும் அமைப்பினைக் கொண்டிருப்பதைக் காணலாம். முதல், கருப்பொருள்களின் வருணனையைக் கொண்டதாக முதற்பகுதியும், உரிப்பொருளை மட்டும் கொண்டதாக இரண்டாம் பகுதியும் அமைகின்றன. இவற்றை மொழிபெயர்ப்பில் வேறுபடுத்திக் காட்டுவது அவசியம்.

வாக்கியக் கிளவிகளை முதன்மைப்படுத்திக் காட்டுவதும் செயப்பாட்டு வினைப்பகுதிகளை மொழிபெயர்ப்பதும், இறுதிக் குவிமையப் பகுதிகளையும் இறுதிப் பொருண்மையையும் மொழி பெயர்ப்பதும் என்று இவற்றைக் குறிப்பிடுவார்கள்) மிகக் கடினமானவை.

இவை பொதுவான அமைப்புச் சார்ந்த நடையியற் பிரச்சினைகள் என்றால், உலகப் பொதுவான உவமை, உருவகம் போன்ற அணிகளை மொழிபெயர்ப்பதிலும் சிக்கல்கள் உண்டு. இலக்கணை, மனிதப்படுத்தல் போன்றவையும், அவ்வக் கலாச்சாரத்திற்கே உரிய உருவகங்களும் குறியீடுகளும் மேலும் சிக்கல்களைத் தரவல்லவை. பலசமயங்களில் சிலேடைகள், இரட்டை அர்த்த வாக்கியங்கள், குறிப்பு முரண்கள், உயர்வு நவிற்சிகள் போன்ற வற்றை மொழிபெயர்க்கவே இயலாது. ஒரு வாக்கியமே தன் அமைப்பில் முன்னணிப்படுத்தலைக் கொண்டிருக்கலாம். இரட்டைக் கிளவிகள் போன்றவையும் சிக்கலேற்படுததுபவை. ஏவல் வினை, வியங்கோள் வினை போன்ற அமைப்புகளாலும் மொழி பெயர்ப்பு இடர்ப்பாடுகள் நிகழ்கின்றன.

கலாச்சாரச் சிக்கல்கள்

இலக்கிய மரபு சார்ந்த சிக்கல்கள் பல மொழிபெயர்ப்பில் எழுகின்றன. அவரவர் இலக்கிய மரபிற்கேற்ப உருவான பல சொற்கள் இலக்கியத்தில் உண்டு. அவற்றைப் பிற கலாச்சாரங்களில் காண்பது இயலாது. தோழி, தலைவி, தலைவன், பாங்கன் போன்ற சொற்களை எப்படி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க முடியும்? தோழி என்பதற்குப் பல சொற்களை ஆங்கிலத்தில் நாம் காணமுடியுமேனும் அவற்றில் ஒன்றேனும் தமிழ் அர்த்தத்தைத் தருகிறதா என்பது சந்தேகமே. பலர் எளிதாக maid என்று மொழி பெயர்த்து விடுகின்றனர். மெய்ட் என்றால் பணிப்பெண். தோழி, தலைவிக்குப் பணிப்பெண் அல்ல. உள்ளுறை, இறைச்சி, நோக்கு போன்ற சொற்களை எவ்விதம் ஆங்கிலத்தில் பெயர்ப்பது என்பதும் இலக்கிய மரபு சார்ந்த சிக்கல்களே. இவற்றையெல்லாம் ஒப் பிட்டுத்தான் காட்ட முடியுமே தவிர அப்படியே மொழிபெயர்ப்பது என்பது இயலாது. சான்றாக, உள்ளுறை உவமத்தை ஆங்கிலத்தின் allegory போன்றது எனலாம். தலைவியை ஒரு நகரத்துக்கு உவமிக்கும் சங்கப்பாக்களில் வரும் நீண்ட உருவகங்களை epic simile போன்றவை எனலாம். இவற்றை அப்படியப்படியே மொழி பெயர்ப்பது கடினம்.

சமூகப் பண்பாடு சார்ந்த கருத்தியல்கள் அவ்வப் பண்பாடுகளில் புதைந்து கிடக்கின்றன. “ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே’ என்னும் சங்கப்பாட்டு யாவரும் நன்கறிந்தது. இதனை ‘ஒரு தாய் இட்ட கடமைகளின் பட்டியல்’ என்று தலைப்பிடுகிறார் இராமானுஜன். இந்தப் பாட்டைப் படித்தபோதெல்லாம் வெறும் பட்டியலாக என்றைக்குமே எனக்குத் தோன்றியதில்லை. பட்டியல் என்பதற்கும் மேலாக இதில் ஒரு கலாச்சாரப் பார்வை, சமூகப் பார்வை இருக்கிறது. இதில் வரும் “நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே’ என்பதும் ஆழ்ந்த பண்பாட்டுப் பொருள் கொண்டது. அதனை to bestow lands to the lad என்று தட்டையாக மொழிபெயர்க்க முடியுமா என்பதும் சந்தேகமே. இதற்குத் “தண்ணடை நல்கல் வேந்தற்குக் கடனே’ என்ற மாற்றுவடிவமும் இருக்கிறது. இந்த இரு வடிவங்களில் எதைக் கொள்வது என்பதும் மொழிபெயர்ப்புச் சிக்கலே ஆகும். இராமானுஜன் இந்த மாற்றுவடிவத்தை அறிந்திருப்பதாகத் தெரியவில்லை.

அர்த்தவியல் சிக்கல்கள்

நான்காவதான அர்த்தவியல் சிக்கல்கள் என்பது ஒரு சொல்லுக்கு எப்படி அர்த்தம் கொள்கிறோம் என்பதைப் பொறுத்து எழுவது. இலக்கிய ரீதியாக, சூழலைப் பொறுத்து, ஒரு சொல்லுக்குப் பல அர்த்தங்கள் இருப்பதால் மொழிபெயர்ப்பு கடினமாகலாம். அல்லது இயல்பாகவே பலபொருள் ஒரு சொல்லாகவும் ஒன்று அமைந்திருக்கலாம். அல்லது ஒரு குறித்த சிறப்பர்த்தத்தை அது பெற்றிருக்கலாம். எந்தச் சொல்லுக்கும் இரண்டாம் நிலை அர்த்தங்கள், உள்ளர்த்தங்கள் என்பவை உண்டு. ஒரு சொல்லை அதன் வேர்ச்சொல்லிலிருந்து எழும் அர்த்தத்திலேயே மூலப்பிரதி பயன்படுத்த, காலப்போக்கில் மாறிய அர்த்தத்தைக் கொண்டு மொழி பெயர்ப்பு நிகழ்ந்துவிடலாம். இவை மாதிரியான யாவும் அர்த்த வியல் சிக்கல்களைத் தோற்றுவிக்கின்றன. உதாரணமாக ஒன்றைப் பார்ப்போம். இதனை Problem due to specialized meaning of the word என்று கொள்ளலாம். பழஞ்செவ்விலக்கியப் பிரதிகளை மொழி பெயர்ப்பதில் உள்ள முக்கியச் சிக்கல்களில் ஒன்று இது. சான்றாக, ஐங்குறுநூற்றின் இந்தக் கவிதையை நோக்குவோம். (89)

அம்ம வாழி பாண எவ்வைக்கு

எவன் பெரிது அளிக்கும் என்ப பழனத்து

வண்டு தாது ஊதும் ஊரன்

பெண்டென விரும்பின்று அவள் தன் பண்பே.

இதில் இடர்ப்பாடு உள்ள சொல் எவ்வை. எம் + ஐ என்று இதைப்பிரிக்க வேண்டும். ஆனால் அது எம்மை என்றாகாது, அதே வடிவத்தில் வேறு சொல் இருப்பதனால். மகரம் கெட்டு எவ்வை என்றாகிறது. இங்கு மனத்தில் வைக்க வேண்டிய முக்கிய விஷயம், ‘ஐ’ என்பது மூத்தவளைக் குறிக்கும், ‘கை’ என்பது இளையவளைக் குறிக்கும். உதாரணமாக, பழைய இலக்கியங்களில் ‘தவ்வை’ என்பது, இலக்குமிக்கு மூத்தவளாகிய மூதேவியைக் குறிக்கிறது. கை என்பது சிறிய என்ற அர்த்தத்தைக் குறிக்கும் என்பது கைக்கிளை போன்ற சொற்களாலும் வெளிப்படும். எங்கை-எனக்கு இளையவள், உங்கை-உனக்கு இளையவள் (உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று-மணிவாசகர்) தங்கை-வேறொருவருக்கு இளையவள். (யாய், ஞாய், தாய் என்பதையும், எந்தை, நுந்தை, தந்தை என்பதையும் போன்ற வடிவங்கள் இவை), எனவே எவ்வை என்பது எனக்கு மூத்தவள், ‘அக்கா’ என்று இக்கால வழக்கில் பொருள்படும். இந்த மரபு தெரிந்திருந்ததனால்தான், உரையாசிரியரும் இதைக் கூறுபவள் அக்கா என்று தனக்கு மூத்தவளான தலைவனின் மனைவியைக் குறிப்பிடுவதாகக் கொண்டுள்ளார். ஜோதிமுத்துவும் இதை நன்குணர்ந்தே தம் மொழிபெயர்ப்பை அமைத்துள்ளார்,

Look here, minstrel ! People say

that the chieftain of the region-

where the bees suck the honey from the flowers

of the open fields – is very loving to our elder sister.

Do you know why? It is the quality of her nature

That endears to him as his wife.

மிகச் சிறந்த மொழிபெயர்ப்பு என்று இதைச் சொல்ல முடியாவிட்டாலும், சரியான மொழிபெயர்ப்பு என்பதில் ஐயமில்லை. ஆனால் கமில் சுவலபில் போன்ற பெரிய அறிஞர்களுக்கும் ‘ஐ’ என்பதற்கும் ‘கை’ என்பதற்கும் உள்ள வேறுபாடு புரியாததால், உரையாசிரியரையும், ஜோதிமுத்துவையும் குறை சொல்கிறார் சுவலபில்.

But the term evvai never means ‘elder sister’. (hence it cannot refer to the wife); it means ‘our younger sister’. இவ்வாறு கூறி, பரத்தை, தலைவியின் மனைவியைத் தங்கை என்று கூறுவதில்லை, எனவே, இது மனைவி கூற்றாகத்தான் இருக்கவேண்டும் என்கிறார், அதற்குத்தகத் தவறாகவே மொழிபெயர்க்கவும் செய்கிறார்.

Listen, may you prosper O minstrel !

They say: why does he, the man of the place

Where bees collect pollen

from cultivated fields,

love so much our younger sister?

Her quality as woman/wife

made (her) desirable.

 

mozhipeyarppil sikkalgal2இதே சிக்கல், ஏ, கே. இராமானுஜனுக்கும் ஏற்படவே செய்கிறது. அவரது நற். 172ஆம் பாட்டின் மொழிபெயர்ப்பு இதைக் காட்டுகிறது.

விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி

மறந்தனம் துறந்த காழ்முளை அகைய

நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்த்தது

நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகுமென்று

அன்னை கூறினள் புன்னையது நலனே

அம்ம நாணுதும் நும்மொடு நகையே

… … நிறைபடு நீழல் பிறவுமார் உளவே. (நற். 172)

முதல் ஐந்து அடிகளும் அன்னை தலைவிக்குக் கூறியவை என்பதை ஆறாவது அடியில் வரும் “அன்னை கூறினள்’ என்ற தொடர் காட்டுகிறது. ஆகவே இப்பாட்டின் பொருள், “தலைவியின் அன்னை சிறுபருவத்தில் விளையாடும்போது விளையாட்டாக நட்ட புன்னை விதை, மரமாகிறது. பிறகுதான் அவள் மணம் புரிந்து தலைவியைப் பெற்றாள். ஆகவே அது தலைவிக்கு அக்கா முறையாகிறது.’ “நும்மினும் சிறந்தது நுவ்வை’ என்ற தொடர் இதைத் தெளிவாகவே காட்டுகிறது. தங்கையாக இருப்பின் ‘நுங்கை’ என்ற சொல்லைக் கவிஞர் ஆண்டிருப்பார். இராமாநுஜன் வலிந்து முதல் நான்கு அடிகளைத் தலைவி கூறியதாகக் கொண்டு, தலைவி நட்ட புன்னை ஆகையால் அது அவளுக்குத் தங்கை முறையாகும் என்று கூறியதாகப் பொருள் கொண்டு மொழிபெயர்க்கிறார்.

and when we nursed it tenderly….

Mother said, “It qualifies as a sister to you, it’s much better than you”

praising the laurel tree.

sister என்ற பொதுச்சொல் இங்கு ஆளப்பட்டாலும், தலைவி வளர்த்ததால் அது அவளுக்குத் தங்கையே ஆகிறது. அன்னை வளர்த்ததாகக் கொண்டால்தான் அது அவளுக்கு அக்கா முறையாகும். இராமாநுஜனின் அடுத்த தொடரே (It’s much better than you) என்பது தலைவிக்கு அக்கா முறையாகவே கொண்டிருக்க வேண்டும் என்பதைக் குறிப்பாகக் காட்டுகிறது. ஆனால் அதை அவர் கவனிக்கவில்லை.

இவை யாவற்றிற்கும் மேலாகக் கவித்தன்மையோடு எவ்விதம் ஒரு மொழிபெயர்ப்பினைச் செய்வது என்பது இருக்கிறது. சான்றாக, பேராசிரியர் சோ. ந. கந்தசாமியின் ஆங்கிலப் புலமை சிறப்பானது. அவர் ஐங்குறுநூற்றினை மொழி பெயர்ப்புச் செய்துள்ளார். அவருடைய மொழிபெயர்ப்பின் துல்லியத்தை எவரும் குறைகூற இயலாது. சான்றாக, ஐங்குறுநூற்றின் 70ஆவதான

பழனப் பன்மீன் அருந்த நாரை

கழனி மருதின் சென்னிச் சேக்கும்

மாநீர்ப் பொய்கை யாணர் ஊர

து£யர் நறியர் நின் பெண்டிர்

பேஎய் அனையம் யாம் சேய் பயந்தனமே

என்னும் பாட்டின் மொழிபெயர்ப்பு இது-

O Chief of the delta with big lake and fresh income,

Where in the reservoir the heron pecked many fishes

And roosted on the top branch of the marutam tree;

Your harlots are pure and fragrant,

Lo, we are like fiends since we begot a son.

‘மாநீர்ப் பொய்கை யாணர் ஊர’ என்பதற்கு ‘O Chief of the delta with big lake and fresh income’ என்பதே சரிவரப்பொருந்தவில்லை, கவிதைத் தன்மையை இந்த ஒரே வாக்கியமே முற்றிலும் கெடுத்துவிடுகிறது. Where in the reservoir the heron pecked many fishes என்பதும் அவ்வாறே, கடைசி இரு அடிகள் பரவாயில்லை. இது விசுவாசமான மொழிபெயர்ப்பு என்று சொல்லலாம். ஆனால் இதே பாட்டை ம. லெ. தங்கப்பா இவ்விதமாக மொழிபெயர்த்திருக்கிறார்:

The herons have come

to settle on the marudu trees

overlooking the fields.

A banquet of fish from fields,

mirrored in the pond’s blue waters,

awaits them.

And you hail from that land, my husband.

The new women you are feasting on

are clean and fresh.

Only I appear like a ghost to you

now that I have borne you a child.

இந்த மொழிபெயர்ப்பிலும் குறை இல்லாமல் இல்லை. மிகுதிப்படுத்தல் என்னும் குற்றம் இதில் காணப்படுகிறது என்றாலும், இது கவிதையாக அமைந்துள்ளது. ஒரு வேடிக்கையான பழமொழியை இந்த இரு மொழிபெயர்ப்புகளும் நினைவூட்டுகின்றன. “மொழி பெயர்ப்பு என்பது ஒரு பெண் போல. உண்மை (விசுவாசம்) இருந்தால் அழகிருப்பதில்லை. அழகிருந்தால் உண்மை இருப்பதில்லை.” கந்தசாமியின் மொழிபெயர்ப்பு விசுவாசமாக இருக்கிறது, அழகாக இல்லை. தங்கப்பாவின் மொழிபெயர்ப்பு அழகாக, கவிதையாக இருக்கிறது, ஆனால் விசுவாசம் குறைந்துபோகிறது.

இறுதியாக, ஏ. கே. இராமானுஜன் எடுத்துக்காட்டிய கதை ஒன்றைச் சொல்லி இக்கட்டுரையை முடிக்கலாம். ஒரு சீன அரசனுக்கு, மலையைக் குடைந்து ஒருபுறமிருந்து மறுபுறத்திற்குப் பாதையமைக்க வேண்டியிருக்கிறது. இதைச் செய்வதற்கு எளிதான வழியென்ன என்று அமைச்சனைக் கேட்கிறான். அமைச்சன், “ஒரே நேர்க்கோட்டில், மலையின் இரண்டு பக்கங்களிலிருந்தும் நடுப்பகுதியை நோக்கித் தோண்டிக்கொண்டே முன்னேறுவதுதான் சிறந்த வழி” என்கிறான். “அவை இரண்டும் சந்திக்கும்போது ஒரு நல்ல பாதை உருவாகிவிடும்.” அரசன் கேட்கிறான், “ஒருவேளை இந்த இரண்டும் சந்திக்கவில்லை என்றால்?” “ஒன்றிற்கு பதில் இரண்டு பாதைகள் நமக்குக் கிடைக்கும்” என்கிறான் அமைச்சன். “மொழிபெயர்ப்பும் அப்படித்தான்” என்கிறார் இராமானுஜன்.

திறனாய்வு